தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................
சுவாமி ஐயப்பன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுவாமி ஐயப்பன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

12/05/2011

சுவாமி ஐயப்பன் - 4

சபரிமலை யாத்திரை
ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருந்து சபரிமலை யாத்திரை செல்வார்கள். ஒரு காலத்தில், சபரிமலை ஐயப்பனை தரிசிக்க செல்ல எருமேலியிலிருந்து செல்லும் காட்டுப்பாதை மட்டுமே பயன்பட்டதாக கூறுவர்.
இந்தப்பாதையில் சென்று ஐயப்பனை தரிசிப்பதே முறையானதாகும். எருமேலியில் ஆரம்பித்து சபரிமலை வரையில் 56 கி.மீ., தூரம் உள்ள இந்த பாதை தான் பெருவழிப்பாதை என அழைக்கப்படுகிறது. இந்த பெருவழிப்பாதை வழியாகச் சென்றால் உடலும், உள்ளமும் தூய்மையடையும். பந்தளராஜா, ஐயப்பனைக் காணச் சென்ற வழியும் இதுவே.
இந்தப் பாதை வழியே ஐயப்பனைத் தரிசிப்பதே சிறந்தது என பக்தர்கள் நினைக்கின்றனர்.
எருமேலி:
சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் எல்லோரும் ஒன்று கூடும் இடம் இது. இங்கு பந்தள மன்னன் ராஜசேகர பாண்டியனால் கட்டப்பட்ட தர்மசாஸ்தா கோயில் உள்ளது. வேட்டைக்குச் செல்ல அம்பும், வில்லும் ஏந்தி நிற்கின்ற உருவில் தர்மசாஸ்தா காட்சியளிக்கிறார்.
வாபர் கோயில்:
எருமேலியில் பேட்டை சாஸ்தா கோயில் எதிரில் ஐயப்பனின் முஸ்லிம் நண்பரான வாபரின் பள்ளி வாசல் உள்ளது. ஐயப்ப பக்தர்கள் வாபர் பள்ளி வாசலுக்கு சென்று வணங்கி அங்கு தரப்படும் விபூதி பிரசாதம் பெற்றுக் கொள்ளலாம்.
பேட்டைதுள்ளல்:
ஐயப்பன், எருமைத்தலை அரக்கி மகிஷியை கொன்ற தலம் இது. எருமைக்கொல்லி எனப்பட்ட இத்தலம், " எருமேலி' என மருவியது. இது மணிகண்டன் மகிஷியை வதம் செய்து அவள் பூதவுடல் மீது நர்த்தனம் செய்ததன் நினைவாக பக்தர்களால் நடத்தப்படும் ஓர் சடங்கு தான் பேட்டை துள்ளல் எனப்படுகிறது. உடல் மீது வண்ணப்பொடிகளை பூசிக் கொண்டு, இலை, தழைகளை கட்டிக் கொண்டு மரத்தினாலான சரக்கோலுடன் மேளதாளத்துடன் சுவாமி திந்தக்கதோம், ஐயப்ப திந்தக்கதோம் என ஆடிப்பாடிக் கொண்டு வாபர் சன்னதியை வலம்வந்து பின் பேட்டை சாஸ்தா கோயிலிலிருந்து தர்மசாஸ்தாவின் சன்னதி வந்தடைந்து தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி வழிபட்டு விட்டு பெருவழிப்பாதையாத்திரையை தொடர வேண்டும்.
பேரூர்தோடு:
பெருவழிப்பாதையில் முதலில் வரும் இடம் பேரூர்த்தோடு. இது ஓர் சிறிய ஆறு ஆகும். எருமேலியிலிருந்து சுமார் 2 மைல் கிழக்கே இருக்கிறது. பக்தர்கள் இந்த ஆற்றில் நீராடி, சிறிது இளைப்பாறி சுவாமியை வழிபட்டுத் தங்கள் பயணத்தை தொடரலாம்.


காளையை கட்டிய மரம் :
காடு, மலை ஏறி, இறங்கி மேலும் சுமார் 6 மைல் நடந்து, அழகிய வனத்தில் காளைகட்டி என்ற இடத்தை சென்றடையலாம். மகிஷியை கொன்ற தன் மகன் மணிகண்டனை வாழ்த்துவதற்காக வந்த சிவன், தனது வாகனமான காளையைக் கட்டிய இடம் என்று கருதப்படுவதால், இப்பெயர் ஏற்பட்டது.
இங்கே சிவாலயம் ஒன்று இருக்கிறது. காளைகட்டியிலிருந்து கிழக்கே சுமார் ஒன்றரை மைல் நடந்து அழுதாநதிக் கரையை சென்றடையலாம். மணிகண்டனால் தூக்கி எறியப் பட்ட மகிஷியின் உடல் இந்த நதிக்கரையில் விழுந்ததாக புராணங்கள் கூறுகின்றன.
இயற்கை அழகும், நெடிய மரங்களும் அவைகளை அணைத்து நிற்கும் பசுங்கொடிகளும், பள்ளத்தாக்கில் ஓடிவரும் அழுதாநதியும் பார்க்க பரவசமடையச் செய்யும்.


அழுதாநதி:
மணிகண்டன் அம்பு மகிஷிமேல் பட்டதும் அவளோட தீய குணம் மாறி நல்ல எண்ணம் வந்தது. அதனால் தன்னை மன்னிக்கும்படி வேண்டி மனம் விட்டு அழுதாள். அந்தக் கண்ணீர்தான் அழுதா நதியாகப் பெருகி ஓடுகிறதாம்.


அழுதையாற்று நீரில் நீராடி, ஒவ்வொருவரும் ஒரு சிறிய கல்லை எடுத்துக் கொள்ள வேண்டும். அங்கிருந்து சுமார் 2 மைல் நடந்து அழுதைமேடு என்ற குன்றில் ஏறினால் இஞ்சிப்பாறைக்கோட்டை என்னுமிடத்தை அடையலாம். பின்னர், கல்லிடும் குன்று என்ற இடம் வருகிறது.
மகிஷியை வதம் செய்த ஐயப்பன், அவளது உடலை இங்கு புதைத்துவிட்டு, கனமான கற்களை வை த்துச் சென்றாராம். இதன் அடிப்படையில் அழுதா நதியில் எடுத்து வந்த கற்களை பக்தர்கள் இவ்விடத்தில் போட்டுச் செல்கிறார்கள். இந்த இடத்தில் கல்லைப் போடும் பக்தர்கள், தங்கள் பாவம் நிவர்த்தியாக வேண்டும் என்று வேண்டிக்கொள்வர். மகிஷி பாவத்தின் சின்னம். புதைந்து கிடக்கும் பாவச்சின்னம் மீண்டும் எழுந்து விடக்கூடாது என்பதால், கல்லைப் போட்டு எழவிடாமல் செய்கின்றனர்.
காவலர் ஐயப்பன் :
அழுதாமலை உச்சியில், "இஞ்சிப்பாறைக்கோட்டை' இருக்கிறது. இங்குள்ள கோயிலில் "தேவன் வியாக்ரபாதன்' என்ற பெயரில் ஐயப்பசுவாமி அருளுகிறார். "வியாக்ரம்' என்றால் "புலி'. ஐயப்பன் புலிகளை தன் கட்டுக்குள் வைத்துக் கொண்டு, தன்னைக் காணச்செல்லும் பக்தர்களைப் பாதுகாக்கும் காவலராக விளங்குகிறார். ஆன்மிக ரீதியாக, இதை வேறு மாதிரியாக பொருள் காணலாம். மனிதன், இந்த உலக இன்பத்தை பெரிதென நினைக்கிறான். மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை ஆகிய இன்பங்களை அடைய ஆசை கொண்டு, பாதகங்களைச் செய்யக் கூட தயாராகி விடுகிறான். இந்த பாதகங்களே மனதை ஆட்டிப்படைக்கும் புலிகளுக்கு ஒப்பிடப்படுகிறது. இந்த கொடிய புலிகளை கட்டிப்போட்டு விட்டால் மனதில் நல்ல சிந்தனைகள் மட்டுமே தங்கும். பக்தி மார்க்கத்திற்குள் மனிதன் வருவான். இந்த ஐயப்பனை வணங்கி விட்டு நடந்தால், முக்குழி என்ற இடம் வரும். இங்கு மாரியம்மன் அருள் செய்கிறாள். அம்பிகையை வணங்கி விட்டு தொடர்ந்து நடந்தால் கரியிலம்தோட்டை அடையலாம். இவ்விடத்தில் மலைப்பாதை சமதளமாக இருக்கும். இங்கு பக்தர்கள் தங்கிச் செல்ல வசதியுள்ளது. அங்கு உணவருந்தி சிறிது ஓய்வெடுத்துப் பின் புதுச்சேரி என்ற ஆற்றை கடக்க வேண்டும்.


கரிமலை: கரியிலம்தோட்டை அடுத்து கரிமலை அடிவாரத்தை அடையலாம். இந்த மலையில் ஏறும்போது தங்கள் பிரம்மச்சரிய விரதத்தின் சக்தியை உணரலாம். இதை விட கடினமான மலை உலகில் இல்லையோ என்று எண்ணுமளவுக்கு பெரும் ஏற்றத்தில் பக்தர்கள் ஏறுகிறார்கள்.


இம்மலையிலுள்ள மண் கருப்பாக இருக்கும். எனவே இம்மலைக்கு "கருமலை' என்ற பெயர் இருந்து "கரிமலை' என்று மாறிவிட்டது. கரி என்றால் தமிழில் யானை என்று அர்த்தம். காட்டுயானைகள் நிறைந்த கடினமான மலைப்பகுதி என்றும் கூறுவர். மலை உச்சியில் கரிமலைநாதர் என்ற மூர்த்தியின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது.இங்கு சுவையான தண்ணீருடன் கூடிய சுனை உள்ளது. இதை ஐயப்பன் தனது அம்பினால் உண்டாக்கியதாக கூறப்படுகிறது. இந்த நீரை பக்தர்கள் குடித்து ஆசுவாசப்படுத்திக் கொள்வார்கள்.
கரிமலையில் மிகவும் கவனமாக நடக்க வேண்டும். ஏனெனில், ஒரு ஒற்றையடிப் பாதையே நம் கண்முன் தென்படும். ஒரு பக்கம் அதலபாதாளம், மறுபக்கம் உரசும் பாறைகள் என இருப்பதால் மிக கவனமாக ஏற வேண்டும். ஏற்றம் இருக்கும் அளவுக்கு இறக்கமும் பக்தர்களைச் சிரமப்படுத்தும். கால்கள் பின்னி தடுமாறும். ஆனாலும், ஐயப்பன் கருணையுடன் இந்த இடத்தைக் கடக்க அருள்செய்வார். மனதிற்குள் சரணம் சொல்லியபடியே பக்தர்கள் மலையேறுவார்கள். இம்மலையில் மூலிகைச் செடிகள் அதிகம் இருக்கிறது என்பதால், இதைக் கடந்தவுடனேயே தீராத நோய்களும் தீர்ந்து விடும் என்கிறார்கள்.
பெரியானை வட்டம் :
கரிமலையைக் கடந்து சமதளப்பகுதி வருகிறது. இவ்விடத்தை "பெரியானை வட்டம்' என்பர். யானைகள் அதிகமாக வசித்த பகுதி என்பதால் இப்பெயர் ஏற்பட்டது. இங்கே பம்பா நதி சிறு ஓடைபோல பாய்கிறது. இங்கிருந்தபடியே மகர ஜோதியை தரிசிக்கலாம் என்பதும் விசேஷத்தகவல். இங்கிருந்து ஒரு கி.மீ. தூரத்தில் "சிறியானை வட்டம்' என்ற பகுதி வருகிறது. இங்கு பம்பை நதி பரந்து ஓடுவதைக் காணலாம். இங்கிருந்து சிறிது தூரம் பயணம் செய்து பம்பா நதியை அடையலாம்.


பம்பா நதி:
எருமேலியிலிருந்து பெரும் பாதை வழியாக நடந்துவரும் பக்தர்களும் சாலக்காயம் வழியாக வரும் பக்தர்களும் பம்பா நதிக்கரையில் ஒன்று கூடுகின்றனர்.
கங்கையைப்போன்ற புண்ணிய நதி பம்பா. இந்த நதிக்கரையில் தான் ராமர் தனது தந்தை தசரதருக்கு "பிதுர் தர்ப்பணம்' செய்ததாக கூறுவர்.


இதனடிப்படையில் ஒரு சில பக்தர்கள் இந்த நதியின் முதல் பாலம் அருகே உள்ள திரிவேணி சங்கமத்தில் நீராடி, பிதுர் தர்ப்பணம் செய்கின்றனர். மற்ற பக்தர்கள் எல்லாம் இங்கு நீராடி நீண்டதூரம் நடந்து வந்த களைப்பைப் போக்கிக் கொள்கின்றனர்.
ஐயப்ப "சத்ய' :
தர்ம சாஸ்தா, மணிகண்டனாக பூவுலகில் அவதாரம் செய்த இடம் பம்பையாற்றின் கரை. அதனால் பக்தர்கள் இங்கு ஓர் இரவு தங்கி, ஆற்றில் பம்பாவிளக்கு ஏற்றி சுவாமியை வழிபடுகின்றனர். பின்னர், இருமுடியின் பின் முடியிலுள்ள சமையல் சாமான்களைக் கொண்டு சமைக்கின்றனர். அந்த உணவை ஐயப்பனுக்கு நைவேத்யம் செய்து, அதை பக்தர்களுக்கு விருந்தாக (சத்ய) கொடுத்து உபசரிக்கின்றனர். பக்தனை உபசரிப்பது பகவானையே (ஐயப்பன்) உபசரிப்பது போல என கருதுகின்றனர். ஐயப்பனே பக்தர்களின் வடிவில் சாப்பிடுவதாக ஐதீகம். இந்த பூஜையை "பம்பா சக்தி' என்றும், "சக்தி பூஜை' என்றும் சொல்வர். இங்கே மூட்டப்படும் அடுப்பின் சாம்பலை, பம்பா பஸ்மம் என்று பக்தர்கள் வீட்டுக்கு எடுத்து வருகிறார்கள்.


பம்பா கணபதி :
பின்னர் பம்பையாற்றின் கரையிலுள்ள பம்பா கணபதி, ராமர், அனுமன், சக்தி கோயில்களில் வழிபட்டு, பந்தள மன்னர் பரம்பரையில் வந்தவர்களுக்கு காணிக்கை செலுத்தி, அவர்களிடம் விபூதி வாங்கி நெற்றியில் அணிந்து நீலிமலை ஏற துவங்கலாம். பெண்கள் இப்பகுதியைத் தாண்டி மலையில் ஏற அனுமதிக்கப்படமாட்டார்கள்.




நீலிமலை:
இந்த மலையில் ஏறுவதும் கரிமலையில் ஏறுவது போல் மிகக்கடினம். கால் முட்டி, தரையில் உரசுமளவுக்கு மிகவும் சிரமப்பட்டு இந்த மலையை ஏற வேண்டும். இங்கு மலையேற மிக கடினமாக இருந்தாலும், ஐயப்பனை நெருங்கி விட்டோம் என்ற எண்ணமிருந்தால் சோர்வு தெரியாது. பக்தர்கள் களைப்பை போக்க பக்தர்கள் இங்கு மிக சப்தமாக சரண கோஷமிடுவர். நீலிமலையில் ஏற கருங்கல் படிகள் அமைக்கப்பட்டுள்ளன. நீலிமலையில் வசித்த மாதங்க மகரிஷி, தன் மகள் நீலியுடன் சிவனை நோக்கி தவம் செய்த தாகவும், அவளது பெயரில் இம்மலை விளங்குவதாகவும் கூறப்படுகிறது. இம்மலைப்பாதையின் துவக்கப் பகுதியில், வலது பக்கமாக ஒரு பாதை பிரிகிறது. இதை "சுப்பிரமணியர் பாதை' என்பர். இந்த வழியாகத்தான் ஐயப்பன் கோயிலுக்கு தேவையான சாமான்கள் கழுதை மூலமாக கொண்டு செல்லப்படுகிறது.


நீலிமலை ஏற்றத்தில் அப்பாச்சி மேடு, இப்பாச்சி குழி என்ற சமதளப்பகுதி வருகிறது. அப்பாச்சிமேட்டில் பச்சரிசி மாவு உருண்டையை கன்னிசுவாமிகள் வீசி எறிவார்கள். வனதேவதையை திருப்திப்படுத்த இந்த வழிபாடு நடத்தப்படுகிறது.


சபரிபீடம்:
நீலிமலையின் உச்சியில் சபரிபீடம் உள்ளது. இந்த பீடம் உள்ள பகுதியில் தான் "சபரிமலை' என்று பெயர் தோன்றக் காரணமான சபரி அன்னை வசித்தாள். இந்த மூதாட்டிக்கு ராமபிரானின் மீது மிகுந்த பக்தி உண்டு. பக்தன் பகவானைத் தேடி சென்றது விஷ்ணுவின் மற்ற அவதாரங்களில்...


ஆனால், பகவான் பக்தனைத் தேடி, தனக்குத்தானே 14 ஆண்டு காட்டுவாசம் என்ற தண்டனையை விதித்துக் கொண்டு வந்த அவதாரமே ராம அவதாரம்.
அவ்வகையில், ராமபிரான் வசிஷ்டரைக் குருவாகக் கொண்டு, விஸ்வாமித்திரருக்கு தொண்டு செய்து, இன்னும் காட்டிலுள்ள பல மகரிஷிகளையும் சந்தித்து ஆசி பெற்றார். அந்த ரிஷிகளுக்கும் மேலான பக்தியைக் கொண்டவள் சபரி அன்னை. இவள், இந்த மலையில் தங்கி ராமனின் தரிசனத்திற்காக காத்திருந்தாள். அவள் என்ன செய்தாள் தெரியுமா?


ராமனுக்காக காட்டில் கிடைக்கும் இலந்தைப்பழங்களைப் பொறுக்கினாள். அதை கடித்துப் பார்த்து, இனிப்பானவற்றை சேர்த்து வைத்தாள். இலந்தையை காய்ந்தாலும் தின்னலாம். ராமன் வந்ததும் அந்தப் பழங்களை காணிக்கையாக்கினாள்.எச்சில் பழமெனக் கருதாத பகவானும் சபரியின் அன்பை அந்தப் பழங்களைச் சாப்பிட்டதன் மூலம் ஏற்றார். அவளுக்கு மோட்சம் தந்தார். அந்த பரமபக்தை யின் பெயரே சபரிமலைக்கு நிலைத்து விட்டது. இங்கு தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி வழிபட வேண்டும். இங்கிருந்து சன்னிதானம் வரை சமதளமான பாதையில் ஆசுவாசமாக நடந்து செல்லலாம்.


யானைப்பாதை :
சபரிபீடத்தை அடுத்து சன்னிதானத்திற்கு செல்லும் பாதை இரண்டாகப்பிரிகிறது. இடது பக்கம் செல்லும் பாதை யானைப்பாதை எனப்படுகிறது. ஆனால், பக்தர்கள் வலது பக்கம் உள்ள சரங்குத்தி பாதை வழியாகத்தான் செல்கின்றனர்.
சரங்குத்தி:
இது கன்னி ஐயப்பன்மார்களுக்கு ஒரு புனிதமான இடமாகும். இங்கு கன்னிச்சாமிகள், எருமேலியில் பேட்டை துள்ளிவிட்டு கொண்டுவரும் மரத்திலான சரக்கோல்களை போட்டு வழிபடுகின்றனர். எந்த வருஷம் கன்னிச்சாமி யாருமே இங்கு வரவில்லையோ அப்போது உன்னைக் கல்யாணம் செய்துக்கறேன்னு மாளிகைபுரத்தம்மனுக்கு ஐயப்பன் வாக்குத் தந்திருக்காராம். அந்த அம்மன் இங்கே வந்துதான் சரங்களைப் பார்வையிடுவதாக கூறப்படுகிறது. இங்கிருந்து சிறிது தூரம் சென்றால் சுவாமி ஐயப்பனின் புனித சந்நிதானம் அடையலாம்.


பஸ்மக்குளம்
சபரிமலையில் பக்தர்கள் நீராடும் புண்ணிய தீர்த்தமான இக்குளம் ஐயப்பன் சன்னதியின் பின்புறம் உள்ளது. ஐயப்பன்மார்கள் இந்த தீர்த்தத்தில் குளித்து அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களைப் போக்கிக் கொண்டனர். தற்போது இந்த குளம் அசுத்தமாகிவிட்டால் பெரும்பாலும் குளிப்பதில்லை. இந்த குளத்திலிருந்து குழாய் மூலம் தண்ணீர் எடுக்கப்படுகிறது. அவற்றில் பக்தர்கள் நீராடுகிறார்கள்.


சன்னிதானம்:
சரங்குத்தி தாண்டியவுடன் தெரியும் ஐயப்பனின் தங்க கோயிலை தரிசித்தவுடனேயே, மனம் உற்சாகமாகிறது. ஐயப்பன் சன்னிதானம் நெருங்க நெருங்க "சாமியே சரணம் ஐயப்பா' என்று பக்தர்கள் முழங்கும் சரண கோஷம் விண்ணைப்பிளக்கிறது.


பொன்னு பதினெட்டாம் படி:
சன்னிதானத்தை அடைந்ததும் நாம் முதலில் தரிசிப்பது 18 படிகள். ஏகாக்ஷரத்தையும், அக்ஷ்டாக்ஷரத்தையும் பக்கத்தில் எழுதினால் 18 வரும். ஏகாக்ஷரம் என்பது ஹ்ரீம் என்கிற புவனேஸ்வரி மந்திரம். அக்ஷ்டாக்ஷரம் என்பது விஷ்ணுவினுடையது. சிவ சக்தியுடன் கலந்த விஷ்ணு சக்தியே இந்த பதினெட்டு படிகள் பதினெட்டு புராணங்களையும், பகவத் கீதையில் பதினெட்டு அத்தியாயங்களையும் குறிக்கிறது என்று முன்னோர்களால் சொல்லப்பட்டது. காவல் தெய்வங்கள் இருக்குமிடமெல்லாம் பதினெட்டுபடி அமைப்பது ஒரு வழக்கமாக இருந்து வருகிறது.
ஐயப்பன் சன்னிதானத்தில் உள்ள பதினெட்டுபடிகளும், ஐந்து பஞ்சேந்திரியங்கள், எட்டு ராகங்கள், மூன்று குணங்கள், ஞானம் ஒன்று. அஞ்ஞானம் ஒன்று என்ற பதினெட்டையும் தாண்டி வருகின்ற பக்தனுக்குத்தான் ஐயனை வழிபட தகுதி உண்டு. பற்றுதல் இல்லாமல் பகவானை பூஜித்தால் அவன் திருவருள் நமக்கு கிடைக்காது.
இந்த 18 படிகள் அனைத்தும் தங்கத்தகடுகளால் ஆனது. 18 படிகள் ஏறும் முன்பு இருபுறமும் உள்ள கடுத்தசுவாமி, கருப்பசுவாமி முதலிய மூர்த்திகளை வணங்கிவிட்டு வழியில் அனுபவித்த துன்பங்களை எல்லாம் மறந்து, தேங்காய் உடைத்து, சரண கோஷத்துடன் பதினெட்டுப்படிகளில் ஏற வேண்டும். நாம் செய்த பாவங்கள் விலகி, ஆணவம் அடங்கி ஐயப்பனின் தரிசனம் வேண்டும் என்ற அடிப்படையில் தான் படி ஏறும் முன் தேங்காய் உடைக்கப்படுகிறது. இங்குள்ள 18 படிகளும் விநாயகர், சிவன், பார்வதி, முருகன், பிரம்மா, விஷ்ணு, ரங்கநாதன், காளி, எமன், சூரியன், சந்திரன்,செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது என 18 தெய்வங்களாக விளங்குவதால், தலையில் இருமுடி வைத்திருப்பவர்கள் மட்டுமே 18 படி ஏறமுடியும்.
"தத்வமஸி':
பதினெட்டு படி ஏறியவுடன் பக்தர்களை வரவேற்பது கொடிமரம். சன்னிதான வாசலில் "தத்வமஸி' என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது "நீ எதை நாடி வந்தாயோ அது நீயாகவே உள்ளாய்' என்பது இதன் பொருள். ""ஏ மனிதனே! தெய்வத்தை தேடி நீ இவ்வளவு தூரம் சிரமப்பட்டு வந்திருக்க வேண்டியதில்லை.


காடு மேடுகளைக் கடந்திருக்க வேண்டியதில்லை. உனக்குள்ளேயே நான் இருக்கிறேன். நான், இங்கிருந்து உன்னை எப்படி பாதுகாக்கிறேனோ, அதுபோல் நீயும் உன்னைச் சார்ந்தவர்களை பாதுகாக்கும் வகையில் நடந்து கொள். அவர்களிடம் நல்லதைப் பேசு, நல்லதை செய், நன்மையே நாடு" என்பது இந்தச்சொல்லுக்குள் அடங்கியுள்ள தத்துவம்.
ஐயப்பன் உருவில் அத்வைதம்
இந்து மதத்தின் முப்பெரும் தத்துவங்கள் அத்வைதம். துவைதம், விசிஷ்டாத்வைதம் அத்வைதம் என்பது தானே பிரம்மம் என்பதாகும். விசிஷ்டாத்வைதம் என்பது ஜீவன் வேறு பிரம்மம் வேறு என்பதாகும். துவைதம் என்பது பிரம்மமும் ஜீவனும் வேறு என்றாலும் ஒரு நிலையில் அவைகள் ஒன்றுபடுகின்றன என்பது. இம்மூப்பெரும் தத்துவங்களின் ஓர் உருவமாகத் திகழ்பவர்கள் ஸ்ரீ ஐயப்ப பக்தர்கள். மாலை அணிந்து விரதம் தொடங்கிய நாளிலிருந்து அத்வைதத் தத்துவப்படி அஹம்பிரம்மாஸ்மி-தானே கடவுளாகத் திகழ்கிறார். அவரை அனைவரும் சுவாமி என்று அழைத்து சரணம் கூறுகின்றனர். அடுத்து விரதம் முடித்து சபரிமலை ஸ்ரீ ஐயப்ப தரிசனத்திற்கு செல்லும் நேரத்தில், ஜீவன் வேறு பிரம்மம் வேறு முயற்சித்தால் ஜீவன், பிரம்மனைக் காணலாம் என்று விசிஷ்டாத்தைத் தத்துவத்திற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார். ஸ்ரீ சுவாமி ஐயப்பனைக் கண்டு அவனருளில் சங்கமிக்கும் நேரத்தில் பிரம்மமும்-ஜீவனும் வேறென்றாலும் ஒரு நிலையில் அவைகள் ஒன்றுபடுகின்றன என்ற துவைத தத்துவத்திற்கு உதாரணமாய்த் திகழ்கிறோம். இப்படி அரத்தமுள்ள இந்து மதத்தின் முப்பெரும் தத்துவங்களின் ஒருருவாகத் திகழ்பவர்கள் தான் ஸ்ரீ ஐயப்ப பக்தர்கள்.
ஐயப்பன் மூலஸ்தானம் :
படியேறிய பக்தர்கள் கொடிமரம் தாண்டி கோயிலை வலம் வந்து ஹரிஹர புத்திரனாகிய தர்மசாஸ்தாவை கண்டு மனமாற வேண்டிக்கொள்ளலாம். ஐயப்பனை தரிசித்தாலே இந்தப்பிறவியின் பலனை அடைந்த சந்தோஷம் ஏற்படும்.
மூலஸ்தானத்தில் ஐயப்பன் ஆனந்த சொரூபனாய், கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக, கேட்டவரம் தரும் வள்ளலாக ஐயப்பன் அருள்பாலிக்கிறார். இவர் மூன்று விரலை மடக்கி, ஆட்காட்டி விரலால் பெருவிரலைத் தொட்டுக் கொண்டு "சின்முத்திரை' காட்டுகிறார். "சித்' என்றால் "அறிவு'. இந்த வார்த்தையே "சின்' என திரிந்துள்ளது. எது உண்மையான அறிவு என்பதை விளக்குவது சின்முத்திரை.
""மனிதா! நீ என்னை நாடி இத்தனை மேடுகளை கடந்து வந்தாயே! இதனால், நான் மகிழ மாட்டேன். என் மடங்கிய மூன்று விரல்கள் உன்னிடமுள்ள ஆணவம், கன்மம் (பொறாமை), மாயை(உலக வாழ்வும் இன்பமும் நிலைத்திருப்பது என்ற எண்ணம்) ஆகியவை. என் ஆட்காட்டி விரலே ஜீவாத்மாகிய நீ. என் கட்டை விரலே பரமாத்மாவாகிய நான். ஆம்...மானிடனே! இந்த மூன்று குணங்களையும், நீ விட்டு விட்டாயானால், என்னை நிஜமாகவே அடையலாம்,''என்கிறார்.
யோகபாதாசனத்தில், சற்று கண் திறந்த நிலையில் தியான கோலத்தில் உள்ள ஐயப்பனைக் கண்குளிரத் தரிசிக்கும் போது, இவரது காலில் சுற்றியுள்ள வஸ்திரம் ஒன்றை அவசியம் கவனிக்க வேண்டும். இதை "யோக பட்டம்' என்பர்.
நெய் அபிஷேகம் :
ஐயப்பன் தரிசனம் முடிந்தபின் கன்னிமூலை கணபதியையும் , நாகரையும் தரிசித்துவிட்டு திருமுற்றத்திலிருந்து இறங்க வேண்டும். குருசாமியுடன் இருமுடி கட்டுகளை பூஜித்து, பூஜைப் பொருட்கள் அடங்கிய முடியினை திறந்து நெய் தேங்காயை உடைக்க வேண்டும்.


அந்த நெய்யை ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்ய கொடுக்க வேண்டும். பின் அபிஷேகம் செய்த நெய்யையும், நெய தேங்காயின் ஒரு முடியையும் சுவாமியின் பிரசாதமாக வீட்டுக்கு எடுத்து செல்லலாம். இன்னொரு முடியை பதினெட்டுப்படிகளின் முன் உள்ள அங்கினிகுண்டத்தில் எறிந்து விட வேண்டும்.


நெய் தேங்காய் : தனிநெய்யையோ, தேங்காயையோ நிவேதனமாக்காது. நெய் தேங்காயை நிவேதனமாக்கியது ஏன்?
முக்கண் கொண்ட தேங்காய் சிவனை உருவகப்படுத்தும். பசு நெய் கோபாலனாகிய மகா விஷ்ணுவை உருவகப்படுத்தும்.
சிவன் விஷ்ணு இருவருடைய அருள் கதிரொளியின் கூட்டு சக்தியே சாஸ்தாவாகிய ஐயப்பனாதலால் நெய் தேங்காயும் சேர்த்து அவருக்கு நிவேதனப் பொருளாகின்றன.
இருமுடி : சபரிமலையை நோக்கி புறப்படும் போது இருமுடிக் கட்டி புறப்படுவார்கள்.
இவற்றுள் ஒரு முடியில் சுவாமிக்குரிய அபிஷேக நிவேதனப் பொருட்கள் இருக்கும். இன்னொன்றில் நம் தேவைக்குரிய உணவுப் பொருட்கள் இருக்கும். நாம் போகப் போக நம் உணவுப் பொருட்கள் குறைந்து கொண்டே போய் இறைவனின் சன்னதியருகே செல்லும்போது நம் உணவுப் பொருட்கள் அடங்கிய முடி குறைந்திருக்கும். சுவாமி முடி மட்டும் அப்படியே மிஞ்சியிருக்கும்.
இது ஒவ்வோர் ஆத்மாவும் இறைவனை அடையும் நிலையை உணர்த்துவது.
மானுடராய்ப் பிறந்த நாம் இறைவனைத் தேட ஆரம்பிக்கும் போது இறைவன் மீதுள்ள பக்தி ஒரு முடியாகவும் நம் உலக தேவைகள் ஆகிய லௌகீகம் ஒரு முடியாகவும் இருக்கிறது. இரண்டு அம்சங்களுடனேயே தான் நாம் இறைவனைத் தேடுகிறோம். அந்த தேடலில் மெய்ஞ் ஞானம் கிட்டக் கிட்ட நம் லௌகீகப்பற்று குறைந்து மறைந்து போகிறது. இறைப் பக்தி ஒன்றுதான் மிஞ்சுகிறது. அப்பொழுதான் இறைவனடியும் தரிசனமாகிறது.
மஞ்சமாதா :
ஐயப்பன் கோயிலுக்கு இடது பக்கம் மஞ்சமாதா தனிசன்னதியில் அருளுகிறாள். இங்கு மஞ்சள்பொடி தூவி, தேங்காய் உருட்டி வலம் வந்து கற்பூரம் ஏற்றி பூஜை செய்ய வேண்டும்.இங்குள்ள மணி மண்டபத்தில் தான் ஐயப்பனின் திருவாபரணப்பெட்டி வைக்கப்பட்டு பூஜை செய்யப்படும். இவளது சன்னதிக்கு அருகில் நாகர், நவக்கிரக சன்னதிகள் உள்ளன. இங்கு தான் கொடுகொட்டி பாடல் பாடுவது வழக்கம். ஜாதக ரீதியாக சனிதோஷம் உள்ளவர்கள் கொடுகொட்டி கலைஞர்களை பாடச்செய்து மஞ்சமாதாவை வணங்கிவருவர்.
ஜோதி தரிசனம்:
எப்போதும் தவக்கோலத்தில் அருளும் ஐயப்பன், ஆண்டுதோறும் மகரசங்கராந்தி நாளில் மட்டும் திருவாபரணம் அணிந்து முழு அலங்காரத்துடன் அருள்பாலிப்பார். அன்றைய தினம் மாலை 6 மணிக்கு மேல் சன்னிதானத்திற்கு எதிரில் உள்ள ஐயப்பனின் ஐந்தாவது மலையான காந்த மலையில் ஜோதி சொரூபமாக ஐயப்பன் காட்சிதருவார்.


ஐயப்பன் ஆபரணம் பூணுவது ஏன்?
சபரிமலையில் துறவு பூண்ட யோக நிலையில் ஐயப்பன் எழுந்தருளியிருக்கிறார்.
அப்படி இருந்தும் மகர விளக்கின் போது பந்தள மகா ராஜாவின் அரண்மனையிலிருந்து ஆபரணங்கள் வருவதும் அதை அணிவதும் அவர் காட்சித் தருவதும் சிறப்புப் பூஜை நிகழ்ச்சிகளாகும்.
துறவியான சுவாமி ஆபரணங்கள் பூண்டு காட்சி தருவதேன்?
அதற்கு ஓர் அபூர்வக் காரணம் உண்டு.
ஐயப்பன் தன் அவதார நோக்கத்தின் நிமித்தம் பந்தள நாட்டை விட்டு சபரிமலைக்குப் புறப்படும் போது எல்லாரிடமும் தனித்தனியாக விடை பெற்றுக் கொண்டு வந்தார். அவர்களுள் பந்தள நாட்டில் நமக்குக் குருவாக இருந்த குருவும் ஒருவர்.
அந்தக் குருவிடம் சுவாமி உங்களுக்கு நான் குருதட்சனையாக என்ன தர வேண்டும் என்று கேட்டார் ஐயப்பன்.
குரு நெகிழ்ந்து போய் பெருமானே நீர் எனக்கு இப் பிறவியில் மாணாச்சுர் என்று கூறும் பேறே எனக்கு குருதட்சனை என்றார். அவருடைய மனைவியோ ஊமையாகவும், குருடனாகவுமிருந்த தங்கள் குழந்தையைக் குணப்படுத்தித் தரவேண்டும் என்று வேண்டினார்.
குரு பத்தினியின் கோரிக்கைப்படி அந்த குழந்தை பிணிக்கு நீங்கச் செய்தார் ஐயப்பன்.
அப்பொழுது தம் முன் நிற்பது தெய்வம் என்று உணர்வைக் கடந்து நெகிழ்ச்சியுற்ற நிலையில் அய்யனே நீ தங்கமும் ரத்தினமும் ஜொலிக்க மகராஜனாய் இருக்க வேண்டும், என்று ஆசீர்வதித்து விட்டார் குரு.
எல்லாவற்றையும் கடந்த சுவாமிக்கு ஏன் சுவர்ண ரத்ன ஆபரணங்கள் என்ற உணர்வு அந்த குருவுக்கு அப்பொழுது தோன்றவில்லை.
எனினும் குருவின் ஆசி ஆசிதானே.
அது பொய்ந்து விடக் கூடாதே அதனால் தான் ஆண்டுக்கு ஒரு முறை (மகர விளக்கு விழாவின் போது தை 1-ம் தேதி முதல் தை 4-ம் தேதி வரை) சுவாமி பந்தள ராஜன் பரம்பரையினர் கொண்டு வரும் ஆயிரம் சவரனுக்கு மேற்பட்ட தங்க ரத்ன ஆபரணங்களை அணிந்து காட்சி தருகிறார் ஸ்ரீ ஐயப்பன்.
மகரஜோதியின் தத்துவம்
இறைவனுக்கென்று உருவ வழிபாடு பிற்காலத்தில் தான் இருக்க முடியும். ஏனெனில் மனிதன் தோன்றிய காலத்தில் உலோகங்கள் இருந்திருக்க வாய்ப்பில்லை. கற்களில் துவங்கிய சிற்பக்கலை படிப்படியாக வளர்ந்து, பிற்காலத்தில் ஐம்பொன் வரை சென்றது. எனவே மனிதன் துவக்க காலத்தில் ஒளியையே தெய்வகமாக வழிபட்டுள்ளான். சூரிய வழிபாடு தான் முதலில் தோன்றியது.
நம்மை மீறிய ஒரு சக்தி இருக்கிறது என மனிதன் பகுத்தறிந்த போது ஜோதி வடிவாக அவன் இறைவனைக் கண்டான். அதனால்தான் வள்ளலார் இறைவனை அருட்பெருஞ்ஜோதி என அழைத்தார்.
இறைவன் திருவண்ணாமலையில் ஜோதியாய் காட்சி அளிக்கிறார். கார்த்திகை அன்று ஏற்றப்படும் தீபம் ஆண்டு முழுவதும் எரிவது அதனால் தான். இதே போல் தான் ஐயப்பசுவாமியும் ஜோதி வடிவாக காட்சி அளிப்பது, பொன்னம்பல மேட்டில் மகரசாந்தியன்று அவர் ஆண்டுதோறம் இந்த கலிகாலத்திலும் ஜோதி வடிவாய் காட்சி அளிக்கிறார்.
பக்தர்கள் சன்னிதானத்தைச் சுற்றியுள்ள சன்னிதானம், பாண்டித்தாவாளம், புல்மேடு, சரங்குத்தி, நீலிமலை, மரக்கூடம், மலைஉச்சி, சாலக்கயம் மற்றும் அட்டதோடு ஆகிய 9 இடங்களில் இருந்து மகரஜோதியைக் காணலாம்.

12/04/2011

சுவாமி ஐயப்பன் - 3

நெய் கொண்டு செல்வது ஏன்?


ஐயப்பனுக்கு காணிக்கையாய் கொடுக்க நெய் கொண்டு செல்வது காலம் காலமாய் இருந்து வருகிறது. இந்த வழக்கம் ஏன் ஏற்பட்டது தெரியுமா? இருமுடியில் நெய்த்தேங்காய் சுமந்து செல்வதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகிறது.
முதல் காரணம்: பந்தளராஜன் மனைவிக்கு தலைவலி ஏற்படுகிறது. உடனே புலிப்பாலால் தலைவலி தீரும் என பொய்க்காரணம் காட்டி ஐயப்பனை காட்டுக்கு அனுப்புகின்றனர். வளர்ப்புத் தந்தையான பந்தள மன்னன் மிக வருத்தத்துடன் மகனை வழியனுப்பும் போது, காட்டில் உண்பதற்காக பல நாட்கள் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக நெய்யில் தயாரித்த சில உணவு வகைகளை ஒரு முடியாகக் கட்டினான். அதே சமயம், சிவபக்தனான பந்தள மன்னன், முக்கண்ணனான சிவனின் அம்சம்போல் ஒரு தேங்காயை மற்றொரு முடியில் வைத்துக் கொடுத்தான். அந்த இருமுடிகளையும் இணைத்து திருமுடிமேல் ஏந்திய சிறுவன் மணிகண்டன், புலிப்பால் கொண்டுவர காட்டுக்குச் சென்றான். இருமுடியை முதன்முதலில் தலையில் ஏற்றியது ஸ்ரீஐயப்பன் என்று புராணம் கூறுகிறது. இவ்வாறு ஐயப்பன் செய்தது போலவே, இருமுடியை தலையில் தாங்கி ஐயப்பனை வழிபடும் முறையாக அதுமாறி, நாளடைவில் நிலைத்தும்விட்டது.
இரண்டாவது காரணம்: ஐயப்பனின் வளர்ப்புத் தந்தை பந்தளமகாராஜா ராஜசேகரன் ஐயப்பனை விட்டு பிரிந்து செல்லும் காலம் வந்தது. ஐயப்பன் பிரியும் நேரத்தில் மணிகண்டா, நீ காட்டுக்குள் குடியிருக்கப் போவதாய் சொல்கிறாய். அங்கே மலைகளைக் கடந்து வரவேண்டும். அவை சாதாரண மலையல்ல. வயதான நான் உன்னைக் காண எப்படி வருவேன் என்றார். அதற்கு மணிகண்டன் உங்களுக்கு ஒரு கருடன் வழிகாட்டும். அந்த வழிகாட்டுதலின்படி நீங்கள் எனது இடத்திற்கு வந்து விடலாம் என அருள்பாலித்தார். அதன்படி ஆண்டுக்கு ஒருமுறை ஐயப்பனைக் காண பந்தளராஜா மலைக்குச் செல்வார்.மகனை வெறுங்கையோடா பார்க்கச் செல்ல முடியும். அவனுக்கு பிடித்தமானவற்றை எல்லாம் எடுத்துச் செல்ல வேண்டாமா? என்ன கொண்டு செல்வது என யோசித்தார். நெய் இலகுவில் கெட்டு போகாத ஒன்று.
எனவே நெய்யில் செய்த பலகாரங்களை கொண்டு செல்வார். மேலும் தனி நெய்யை தேங்காய்க்குள் ஊற்றி கொண்டு சென்றால் இன்னும் பல நாள் கெடாமல் இருக்கும். ஐயப்பனைக் காணப் செல்வதென்றால் எளிதான காரியமா? இன்று போல அன்று பஸ், ரயிலெல்லாம் கிடையாதே! எனவே பந்தளத்திலிருந்து நடந்தே மலை ஏறுவார். மலையை அடைய பல நாட்களாகும்.எனவே கெட்டுப் போகாத நெய்யை எடுத்துச் செல்லும் வழக்கம் உருவானது. இருமுடிகட்டில் முக்கியமானது நெய் தேங்காய்தான். அத்துடன் ஐயப்பன் அரண்மனையில் இருந்த போது அணிந்த நகைகளையும் எடுத்துச் சென்ற பழக்கம் நாளடைவில் உருவானது. அது இப்போது பெரும் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. அன்று கருடன் வழிகாட்டுவது விசேஷ அம்சம். வயதான அவர் மலை ஏற முடியாமல் ஐயோ அப்பா என்று சொல்லியபடியே பல இடங்களில் உட்கார்ந்தும் விடுவார். இந்தச் சொற்களே திரிந்து ஐயப்பன் என ஆனதாகவும் சொல்லப்படுவதுண்டு.


இருமுடி பொருள்கள்!


சபரிமலை யாத்திரைக்கு இருமுடி எடுத்துச் செல்பவர்களுக்கான குறிப்புகள்:
இருமுடிப்பையின் அளவு : அகலம் 1 1/4அடி. நீளம் 2 1/2 அடி. மையத்தில் 1 அடி அகலத்தில் வாய் இருக்க வேண்டும். இருபக்க ஓரங்களில் கயிறு இருக்க வேண்டும்.
சிறுபைகளின் அளவு: 1 அடி அகலமும் 1 1/4அடி நீளமும் கொண்டதாய் ஐந்து பைகள் இருக்க வேண்டும்.
முன்முடியில் வைத்துக் கொள்ள வேண்டிய பொருட்கள்: ஒரு பையில், வெற்றிலை, பாக்கு, காசு, நெய் தேங்காய் ஆகியவற்றை முதலில் வைக்க வேண்டும். பின், கற்பூரம், விபூதி, மஞ்சள் தூள்,சந்தனம், குங்குமம், பச்சரிசி, ஊதுபத்தி, அவல், பொரி, பன்னீர், தேன், கற்கண்டு, நல்லமிளகு, புகையிலை, ஜாக்கெட் துணி, காணிக்கை (அவர் அவர் விருப்பம் போல்) ஆகியவற்றை வைக்க வேண்டும். நெய் ஐயப்ப சுவாமியின் அபிஷேகத்திற்கு கொடுக்க வேண்டும். நெய் தேங்காயை உடைத்து நெய்யை அபிஷேகத்திற்கும், தேங்காயின் ஒரு மூடியை அங்கே எரியும் ஆழியிலும் சேர்த்து விட வேண்டும். ஒரு மூடியை பிரசாதமாகக் கருதி வீட்டுக்கு கொண்டு வரலாம். கற்கண்டை அதற்கான தனி உண்டியலில் போட்டு விடலாம். மாளிகைப்புறத்து அம்மனுக்கும், நாகருக்கும் மஞ்சள் தூளை சேர்க்க வேண்டும். கடுத்துவா சுவாமிக்கு (கடுத்த சுவாமி) அவல் பொரியும், வாவருக்கு நல்ல மிளகும், கருப்ப சுவாமிக்கு புகையிலையும் சமர்ப்பிக்க வேண்டும். காசை உண்டியிலில் போட்டு விடுங்கள். இருமுடியின் பின்பகுதியில் இரண்டு தேங்காய், பச்சரிசி வைத்துக் கொள்ளுங்கள். இதை ஏறுதேங்காய், இறங்கு தேங்காய் என்பர். ஒன்றை படி ஏறும் போதும், ஒன்றை வேறுபாதையில் இறங்கும் போதும் உடைப்பதுண்டு. கரிமலை மூர்த்திக்கும், விநாயகருக்கும் தேங்காய் உடைக்கும் பழக்கமும் உண்டு. இதற்குரிய காய்களை தனியாக ஜோல்னா பையில் வைத்துக் கொள்ளவும். இருமுடியை தலையில் வைக்கும் முன் ஒரு சால்வையை தலையில் போட்டு அதன்மேல் முடியை தூக்கி வைக்கவும்.
முத்திரை தேங்காய் பாடல்: ஒவ்வொரு நபராக ஸ்வாமியின் முன் அமர்ந்து குருஸ்வாமியின் உதவியுடன் ஒவ்வொரு முத்திரையிலும்
ஸ்வாமியே சரணம் ஐயப்பா
நெய்யபிஷேக ப்ரியனே சரணம் ஐயப்பா
பால் அபிஷேக ப்ரியனே சரணம் ஐயப்பா
ஸ்வாமியே ஐயப்பா ஐயப்பா ஸ்வாமியே
ஸ்வாமி சரணம் ஐயப்ப சரணம்
ஐயப்ப சரணம் ஸ்வாமி சரணம்
தேவன் சரணம் தேவி சரணம்
இருமுடிக்கட்டு சபரிமலைக்கு
சபரிமலைக்கு இருமுடிக்கட்டு
யாருடகட்டு ஸ்வாமியுடகட்டு
யாரைக்காண ஸ்வாமியைக் காண
நெய்யபிஷேகம் ஸ்வாமிக்கே
பாலபிஷேகம் ஸ்வாமிக்கே
கற்பூரதீபம் ஸ்வாமிக்கே
காணிப்பொன்னும் ஸ்வாமிக்கே
ஸ்வாமியே ஐயப்பா - என்று சரணம் சொல்லி முத்திரையில் நெய்யினை நிறைக்க வேண்டும்.
வழி தேவைக்கு...
வழிதேவைக்கு ஜோல்னா பையில் மறக்காமல் எடுத்து செல்ல வேண்டியவை: பேட்டரி லைட், டூத் பேஸ்ட், பிரஷ், திருநீறு, சந்தனம், குங்குமம், மாற்றுவேஷ்டி, கற்பூரம், சாம்பிராணி, மெழுகுவர்த்தி, சட்டை, துண்டு, மழைக்காக பிளாஸ்டிக் பேப்பர், சின்னகத்தி, டம்ளர், தண்ணீர் பாட்டில், ஸ்வெட்டர், மப்ளர், தீப்பெட்டி, திருவிளக்கு, திரிநூல், நெய். இருமுடி தாங்கி செல்லும்போதும், வழியில் உபயோகிக்கவும் ஒரு கம்பளம் ஒரு விரிப்பு அவசியம் எடுத்துச் செல்ல வேண்டும்.

12/03/2011

சுவாமி ஐயப்பன் - 2

ஐயப்பன் மந்திரங்கள் (தமிழ்)


நான், எனது என்று இல்லாத இடத்தில் ஆனந்த சித்தன் இறைவன் ஐயப்பன் பிரகாசிக்கிறார்


வரலாறு, மாலை அணியும் போது சொல்ல வேண்டிய மந்திரம்,


ஞானமுத்ராம் சாஸ்த்ரு முத்ராம் குரு முத்ராம் நமாம்யஹம்
வனமுத்ராம் சுத்த முத்ராம் ருத்ர முத்ராம் நமாம்யஹம்
சாந்த முத்ராம் சத்ய முத்ராம் வ்ருத முத்ராம் நமாம்யஹம்
சபர் யாச்ரச சத்யேன முத்ராம் பாது சதாபிமோ
குரு தக்ஷிணயா பூர்வம் தஸ்யா நுக்ரஹ காரிணே
சரணாகத முத்ராக்யம் த்வன் முத்ராம் தாரயாம் யஹம்
சின் முத்ராம் கேசரி முத்ராம் பத்ர முத்ராம் நமாம்யஹம்
சபர்யாசல முத்ராயை நமஸ்துப்யம் நமோ நம

ஐயப்பன் 108 சரணக் கோவை

ஓம் கன்னிமூல கணபதியே சரணம் ஐயப்பா
ஓம் காந்தமலை ஜோதியே சரணம் ஐயப்பா
ஓம் ஹரிஹர சுதனே சரணம் ஐயப்பா
ஓம் அன்னதானப் பிரபுவே சரணம் ஐயப்பா
ஓம் ஆறுமுகன் சோதரனே சரணம் ஐயப்பா
ஓம் ஆபத்தில் காப்போனே சரணம் ஐயப்பா
ஓம் இன்தமிழ்ச் சுவையே சரணம் ஐயப்பா
ஓம் இச்சை தவிர்ப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் ஈசனின் திருமகளே சரணம் ஐயப்பா
ஓம் உண்மைப் பரம்பொருளே சரணம் ஐயப்பா
ஓம் உலகாளும் காவலனே சரணம் ஐயப்பா
ஓம் ஊமைக்கருள் புரிந்தவனே சரணம் ஐயப்பா
ஓம் ஊழ்வினை அழிப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் எளியோர்க்கு அருள்பவனே சரணம் ஐயப்பா
ஓம் எங்கள் குல தெய்வமே சரணம் ஐயப்பா
ஓம் ஏழைப் பங்காளனே சரணம் ஐயப்பா
ஓம் ஏகாந்த மூர்த்தியே சரணம் ஐயப்பா
ஓம் ஐங்கரன் தம்பியே சரணம் ஐயப்பா
ஓம் ஐயமெல்லாம் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் ஒப்பில்லாத் திருமணியே சரணம் ஐயப்பா
ஓம் ஒளிரும் திருவிளக்கே சரணம் ஐயப்பா
ஓம் ஓங்காரப் பரம்பொருளே சரணம் ஐயப்பா
ஓம் ஓதும் மறைபொருளே சரணம் ஐயப்பா
ஓம் ஒளடதங்கள் அருள்பவனே சரணம் ஐயப்பா
ஓம் சௌபாக்கியம் அளிப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் கலியுக வரதனே சரணம் ஐயப்பா
ஓம் சபரிமலை சாஸ்தாவே சரணம் ஐயப்பா
ஓம் சிவன்மால் திருமகனே சரணம் ஐயப்பா
ஓம் சைவ வைணவ ஐக்கியமே சரணம் ஐயப்பா
ஓம் அச்சங்கோயில் அரசே சரணம் ஐயப்பா
ஓம் ஆரியங்காவு ஐயாவே சரணம் ஐயப்பா
ஓம் குளத்துப்புழை பாலனே சரணம் ஐயப்பா
ஓம் பொன்னம்பல வாசனே சரணம் ஐயப்பா
ஓம் வில்லாளி வீரனே சரணம் ஐயப்பா
ஓம் வீரமணிகண்டனே சரணம் ஐயப்பா
ஓம் உத்திரத்தில் உதித்தவனே சரணம் ஐயப்பா
ஓம் உத்தமனே சத்தியனே சரணம் ஐயப்பா
ஓம் பம்பையில் பிறந்தவனே சரணம் ஐயப்பா
ஓம் பந்தள மாமணியே சரணம் ஐயப்பா
ஓம் சகலகலை வல்லோனே சரணம் ஐயப்பா
ஓம் சாந்தம் நிறை மெய்ப்பொருளே சரணம் ஐயப்பா
ஓம் குருமகனின் குறை தீர்த்தவனே சரணம் ஐயப்பா
ஓம் குருதட்சினை அளித்தவனே சரணம் ஐயப்பா
ஓம் புலிப்பாலைக் கொணர்ந்தவனே சரணம் ஐயப்பா
ஓம் வன்புலி வாகனனே சரணம் ஐயப்பா
ஓம் தாயின் நோய் தீர்த்தவனே சரணம் ஐயப்பா
ஓம் குருவின் குருவே சரணம் ஐயப்பா
ஓம் வாபரின் தோழனே சரணம் ஐயப்பா
ஓம் துளசிமணி மார்பனே சரணம் ஐயப்பா
ஓம் தூயவுள்ளம் அளிப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் இரு முடிப்பிரியனே சரணம் ஐயப்பா
ஓம் எரிமேலி தர்மசாஸ்தாவே சரணம் ஐயப்பா
ஓம் நித்ய பிரம்மச்சாரியே சரணம் ஐயப்பா
ஓம் நீலவஸ்திர தாரியே சரணம் ஐயப்பா
ஓம் பேட்டை துள்ளும் பேரருளே சரணம் ஐயப்பா
ஓம் பெரும்ஆணவத்தை அழிப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் சாஸ்தாவின் நந்தவனமே சரணம் ஐயப்பா
ஓம் சாந்தி தரும் பேரருளே சரணம் ஐயப்பா
ஓம் பேரூர்த்தோடு தரிசனமே சரணம் ஐயப்பா
ஓம் சாஸ்தாவின் நந்தவனமே சரணம் ஐயப்பா
ஓம் சாந்தி தரும் பேரருளே சரணம் ஐயப்பா
ஓம் பேரூர்த்தோடு தரிசனமே சரணம் ஐயப்பா
ஓம் பேதமையை ஒழிப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் காளைகட்டி நிலையமே சரணம் ஐயப்பா
ஓம் அதிர்வேட்டுப் பிரியனே சரணம் ஐயப்பா
ஓம் அழுதைமலை ஏற்றமே சரணம் ஐயப்பா
ஓம் ஆனந்தமிகு பஜனை பிரியனே சரணம் ஐயப்பா
ஓம் கல்லிடும் குன்றமே சரணம் ஐயப்பா
ஓம் உடும்பாறைக் கோட்டையே சரணம் ஐயப்பா
ஓம் இஞ்சிப்பாறைக் கோட்டையே சரணம் ஐயப்பா
ஓம் கரியிலந் தோடே சரணம் ஐயப்பா
ஓம் கரிமலை ஏற்றமே சரணம் ஐயப்பா
ஓம் கரிமலை இறக்கமே சரணம் ஐயப்பா
ஓம் பெரியானை வட்டமே சரணம் ஐயப்பா
ஓம் சிறியானை வட்டமே சரணம் ஐயப்பா
ஓம் பம்பா நதித் தீர்த்தமே சரணம் ஐயப்பா
ஓம் பாவமெல்லாம் அழிப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் திரிவேணி சங்கமே சரணம் ஐயப்பா
ஓம் திருராமர் பாதமே சரணம் ஐயப்பா
ஓம் சக்தி பூஜை கொண்டவனே சரணம் ஐயப்பா
ஓம் சபரிக்கு அருள் செய்தவளே சரணம் ஐயப்பா
ஓம் தீபஜோதித் திருஒளியே சரணம் ஐயப்பா
ஓம் தீராத நோய் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் பம்பா விளக்கே சரணம் ஐயப்பா
ஓம் பலவினைகள் ஒழிப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் தென்புலத்தார் வழிபாடே சரணம் ஐயப்பா
ஓம் திருப்பம்பையின் புண்ணியமே சரணம் ஐயப்பா
ஓம் நீலிமலை ஏற்றமே சரணம் ஐயப்பா
ஓம் நிறைவுள்ளம் தருபவனே சரணம் ஐயப்பா
ஓம் அப்பாச்சி மேடே சரணம் ஐயப்பா
ஓம் இப்பாச்சி குழியே சரணம் ஐயப்பா
ஓம் சபரி பீடமே சரணம் ஐயப்பா
ஓம் சரங்குத்தி ஆலே சரணம் ஐயப்பா
ஓம் உரல்குழி தீர்த்தமே சரணம் ஐயப்பா
ஓம் கருப்பண்ணசாமியே சரணம் ஐயப்பா
ஓம் கடுத்த சாமியே சரணம் ஐயப்பா
ஓம் பதினெட்டாம் படியே சரணம் ஐயப்பா
ஓம் பகவானின் சந்நிதியே சரணம் ஐயப்பா
ஓம் பரவசப் பேருணர்வே சரணம் ஐயப்பா
ஓம் பசுவின் நெய்யபிஷேகமே சரணம் ஐயப்பா
ஓம் கற்பூரப் பிரியனே சரணம் ஐயப்பா
ஓம் நாகராசப் பிரபுவே சரணம் ஐயப்பா
ஓம் மாளிகைப் புரத்தம்மனே சரணம் ஐயப்பா
ஓம் மஞ்சமாதா திருவருளே சரணம் ஐயப்பா
ஓம் அக்கினி குண்டமே சரணம் ஐயப்பா
ஓம் அலங்காரப் பிரியனே சரணம் ஐயப்பா
ஓம் பஸ்மக் குளமே சரணம் ஐயப்பா
ஓம் சற்குரு நாதனே சரணம் ஐயப்பா
ஓம் மகர ஜோதியே சரணம் ஐயப்பா
ஓம் மங்கள மூர்த்தியே சரணம் ஐயப்பா

ஓம் ஐயப்பா! நாங்கள் தெரிந்தும் தெரியாமலும் அறிந்தும் அறியாமலும் செய்த சகல குற்றங்களையும் பொறுத்து காத்து ரட்சிக்க வேண்டும். ஓம் சத்தியமான பொன்னு பதினெட்டாம்படி மேல் வாழும் வில்லாளி வீரன் வீர மணிகண்டன் காசி, ராமேஸ்வரம், பாண்டி மலையாளம் அடக்கி ஆளும் ஓம்ஸ்ரீ ஹரி ஹரசுதன் ஆனந்த சித்தன் ஐயன் ஐயப்ப சாமியே சரணம் ஐயப்பா!

தொடரும்

12/02/2011

சுவாமி ஐயப்பன் - 1

ஐயப்பமார்களுக்கான முக்கிய குறிப்புகள்!


1. ஐயப்ப பக்தர்கள் விரதம் இருக்கும் சமயத்தில் உறுதியான கம்பியில் கட்டிய ஒரு மாலையே போதுமானது. துணை மாலை அவசியமே இல்லை.


2. முறையாக விரதம் இருந்தால் தங்களது மனசாட்சி அனுமதிக்கும் பட்சத்தில் மாலை போடாமல் 41 நாட்கள் விரதமிருந்து புறப்படும் நாளன்று மாலை போடுவதில் தவறேதும் இல்லை.


3. சென்ற தடவை உபயோகித்த மாலையை அது உறுதியாய் இருக்கும் பட்சத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம்.


4. சபரிமலை தரிசனம் செய்தபிறகு, வழியிலேயே மாலையைக் கழற்றாமல் வீட்டுக்குத் திரும்பிய பிறகு மாலையைக் கழற்றுவது முழுமையான, முறையான, உத்தமமான செயலாகும்.


5. மாலையை ஏதாவது ஒரு கோயிலில் கழற்ற இயலாத பட்சத்தில் அம்மாவைக் கொண்டு கழற்றலாம்.


6. மாலை போட்டுக் கொண்டே தகப்பனாருக்கு சிரார்த்தம் (திதி) செய்யலாம்.


7. மாலைபோட்டு விரதம் இருக்கும்போது, மனைவிக்குக் குழந்தை பிறப்பதென்பது சுபகாரியமே. மாலையைக் கழட்ட வேண்டாம். குழந்தை பிறந்து 6 நாட்கள் கழித்து, புண்ணியாதானம் முடிந்து குழந்தையைப் பார்க்கலாம். பிரசவ சமயத்தில் தாங்கள் உடன் இருக்கவேண்டும் என்ற நிர்ப்பந்தம் இருந்தாலும், குழந்தையை உடனே பார்க்கவேண்டும் என்ற கடமை உணர்வு இருக்கும் பட்சத்தில் மாலையைக் கழற்றலாம். மாலை போட்டிருக்கும் போது கருவுற்றிருப்பது சுபகாரியமே! எனவே, மாலை போடலாம்.


8. நாற்பத்தோரு நாட்கள் முறையாக விரதம் இருந்து பயணத்தை மேற்கொள்வதே, போற்றத்தக்க உத்தமமான செயலாகும்.


9. சபரிமலை பயணத்தில் மிதியடி அணிந்துகொள்வது என்பது தங்கள் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு தகுந்த முடிவு எடுக்கலாம். அணிவது தவறில்லை.


10. ஒருமுறை உபயோகித்த இருமுடிப்பையை மறுமுறை உபயோகிக்கலாம். அத்துடன் இன்னொருவர் உபயோகித்த இருமுடிப்பையை அது சுத்தமாக இருக்கும் பட்சத்தில் உபயோகிக்கலாம்.


11. முதல் வருடம் மலைக்குச் செல்லும் ஐயப்பமார்கள், கன்னிபூஜையை அவசியம் செய்யவேண்டும் என்கிறார்கள். வசதியில்லாத பட்சத்தில் கடன் வாங்கியாவது கன்னிபூஜையை செய்ய வேண்டும் என்பது அவசியம் இல்லை. ஐயப்பன் அத்தகைய ஆடம்பரத்தை விரும்புவதும் இல்லை. தங்களால் எப்போது எவ்வளவு முடியுமோ, எப்போது இயலுமோ, வீட்டிலேயே உணவைப் பொட்டலமாகக் கட்டிக்கொண்டு, சாலையோரத்தில் உள்ள மிகவும் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள், மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களால் இயன்றவரை அளிக்கலாம்.


12. தொழிற்சாலையில் வேலை செய்யும் போது கடமையைச் சரிவர செய்யும்பொருட்டு ஷு அணியலாம். இதில் குற்றம் ஏதும் இல்லை.


13. விரத காலத்தில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டாம். மற்றபடி சாதாரணமாக சிகைக்காய், சோப்பு உபயோகிப்பதில் தவறில்லை.


14. மாலை போட்டுக் கொண்டு விரதம் இருக்கும் சமயத்தில், வீட்டிலுள்ளவர்களுக்கு அம்மை கண்டிருந்தால் அதே வீட்டில் இருக்கும் பட்சத்தில் மாலையைக் கழட்டுவது உத்தமம்! ஆனால், தாங்கள் வெளியே எங்கும் தங்கியிருந்தால் மாலையைக் கழட்டவேண்டிய அவசியமில்லை.


சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்களின் கவனத்துக்கு:


1. ஐயப்ப விரதத்தில், மூட நம்பிக்கைகள் அவசியமில்லாதவை.


2. ஐயப்ப பூஜை என்ற பெயரில், ஒலிபெருக்கி வைத்து நள்ளிரவு வரை அடுத்தவர்களுக்கு இடையூறாக இருப்பது விரும்பத்தக்கதல்ல!


3. தங்களுக்கு இது எத்தனையாவது மலை என்று வினவுவதும், தான் இத்தனை தடவை மலைக்குச் சென்றிருக்கிறேன் என்று பெருமை அடித்துக்கொள்ள வேண்டாம்.


4. மாலை போடுதல், இருமுடி கட்டுதல் மிகவும் புனிதமான வைபவம் ஆகும். இதை வீடியோ, புகைப்படம் எடுப்பது உகந்த செயல்கள் அல்ல. இதை அவசியம் தவிர்க்க வேண்டும்.


5. இருமுடி கட்டும் நாளை ஒரு விழாவாக எண்ணி, உற்றார் உறவினர்களுக்கு அழைப்பு அனுப்பி அவர்களிடம் அன்பளிப்பாகப் பணம் பெறுதலும் ஐயப்ப பக்தி விதிமுறைக்குப் புறம்பானது. பக்தர்கள் காணிக்கையாகக் கொடுக்கும் பொருள்களை சன்னிதான உண்டியலில் அப்படியே சேர்ப்பதுதான் முறை.


6. இருமுடி தாங்குபவர்களுக்கு பூமாலை அணிவித்து, அடுத்த நிமிடமே அந்தப் பூக்கள் மற்றவர்கள் காலில் பட்டுச் சீரழிவது விரும்பத்தக்க செயல் அல்ல.


7. சபரிமலை யாத்திரையின்போது, கன்னி சாமிகள்தான் எல்லா வேலைகளையும் செய்யவேண்டும் என்று நிர்ப்பந்திப்பது தவறானது. பக்தியும் பணிவும் எல்லோருக்கும் பொதுவானது.


8. ஐயப்ப பக்தர்கள் வெளி ஸ்தலங்களுக்கு வழிபடச் செல்லும்போது, அங்குள்ள நடைமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் மதித்து நடத்தலும் அவசியமானது. உதாரணத்துக்குச் சொல்லவேண்டுமெனில், குருவாயூரப்பன் சன்னதியில் மிக சப்தமாக சரண கோஷம் சொல்லாமல், அமைதியாக வழிபடுதல்.


9. சபரிமலை யாத்திரை செல்லும் ஒவ்வொரு பக்தரும், ஒரு ஐந்து நிமிடமாவது பம்பை நதிக்கரையையோ அல்லது சன்னிதானத்தையோ சுத்தம் செய்வது மிகவும் போற்றத்தக்க செயலாகும்.


10. சபரிமலை யாத்திரையின்போது மிகவும் ஆடம்பரமான விருந்து உண்ணுதலைத் தவிர்த்தல் எல்லா வகையிலும் நல்லது.


11. சாப்பிட்ட இலைகளை, புனிதமான பம்பை நதியில் எறிந்து அந்தப் புண்ணிய நதியை அசுத்தப்படுத்துதல் மிகவும் தவறான செயலாகும். மாறாக, ஒரு குழி தோண்டி அவற்றைப் புதைக்கலாம்.


12. பம்பையில் விளக்கேற்றி வழிபடுதலை, மற்றவர்களுக்கு எந்தவிதமான இடையூறும் இல்லாமல், அமைதியாக, ஆடம்பரமின்றி தங்கும் தாவளத்திலேயே (இடத்திலேயே) கொண்டாடுதல் மிக சிறப்பான செயல்.


13. சன்னிதானத்தில், கற்பூர ஆழிப் பிரதட்சிணத்தை எந்தவித அசம்பாவிதத்துக்கும் உட்படுத்தாமல் அடக்கமாகச் செய்வது எல்லோருக்கும் நல்லது.


14. கண்ணாடி பாட்டில்களையும் உடைந்த தேங்காய் மூடிகளையும் கண்ட இடத்திலும் போட்டு, மற்ற ஐயப்பன்மார்களின் பாதத்தைப் புண்ணாக்கும் பாவத்தைச் செய்ய வேண்டாம்.


15. ஐயப்பன் வழிபாட்டை, ஆவேசத்துக்கும் ஆக்ரோஷத்துக்கும் ஆடம்பரத்துக்கும் உட்படுத்தாமல், அமைதியாகவும் சாத்விகமாகவும் மேற்கொண்டால் அனைவருக்கும் நன்மையே.




தொடரும்......

12/01/2011

சுவாமி ஐயப்பன்

இன்று முதல் சுவாமி ஐயப்பனை பற்றி படித்து தெரிந்து கொண்ட விஷயங்களை தொடர்பதிவாக பதிவு செய்கிறோம்...


கார்த்திகை மாதம் துவங்கியதும், இந்தியாவில் உள்ள ஐயப்ப பக்தர்கள் அனைவரும் ஐயப்ப பக்தியில் மூழ்கிப் போகின்றனர். இவர்கள் ஐயப்பனுக்காக மாலை அணிந்து பக்திச் செறிவுடன் ஐயப்பன் நாமத்தைச் சொல்லி விரதம் அனுசரிக்கிறார்கள். ஐயப்பன் கலியுக வரதன்; கலிகால தோஷத்தை அகற்ற ஐயப்பனைத் தரிசித்தால் போதும் என்கிற உணர்வு மேலிடுகிறது. ஆண்டுதோறும் இருமுடி ஏந்தி, சபரிமலைக்குப் புனித யாத்திரை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே போகிறது. கடுமையான முறையில் அனைத்து விதமான விரதங்களையும் கடைப் பிடிக்கும் மாலையிட்ட ஐயப்ப பக்தன், சுவாமி ஐயப்பனின் பரிபூரண அனுக்கிரகம் பெற்றிருப்பதால், பக்தனையே ஐயப்பனின் அவதாரமாக மற்றவர்கள் மதிக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.


மாலை அணிந்து விரமிருந்து சபரிமலை செல்வோர் மேற்கொள்ள வேண்டிய விரத முறைகள் :

1. சபரிமலை செல்ல விரும்புபவர்கள் கார்த்திகை மாதம் முதல் நாளோ அல்லது 19ஆம் தேதிக்குள்ளோ ஒரு நாளில் மாலை அணிய வேண்டும். கார்த்திகை மாதம் முதல் நாள், மாலை அணிந்தால் நாள் பார்க்க வேண்டாம். அதற்குப் பின் அணிபவர்கள் நல்ல நாள் பார்த்து மாலை அணிய வேண்டும். எப்படி இருந்தாலும் குறைந்தது 41 நாட்கள் விரதமிருக்க வேண்டும்.
2. மாலை, துளசி மணி 108 கொண்டதாகவோ, உருத்திராட்ச மணி 54 உள்ளதாகவோ வாங்கி, அதில் ஐயப்பன் திருவுருவம் பதித்த டாலர் ஒன்றையும் இணைத்து அணிய வேண்டும்.
3. தாய் தந்தையின் நல்லாசியுடன், குருசாமி ஒருவரின் கையால் ஆலயத்தில் பூஜை செய்து மாலை அணிய வேண்டும். குருசாமி கிடைக்காவிட்டால் கோயில் சென்று, கடவுள் பாதத்தில் மாலையை வைத்து, அர்ச்சகரிடம் தட்சணை கொடுத்து, அர்ச்சனை செய்து ஐயப்பனையே குருவாக நினைத்து மாலையை தரிசித்துக் கொள்ளலாம். இது எதுவுமே முடியாவிட்டால் கடவுளின் பிரதிநிதியான தமது தாயிடம் ஆசிர்வாதம் வாங்கி அவர்களது கையால் மாலையை அணிந்து கொள்ளலாம்.
4. இவ்வாறு மாலை அணிந்த பின்பு கோபதாபம், குரோதம், விரோதம் கொள்ளக்கூடாது. அண்டை, அயலாருடன் விரோதம் மறந்து, சிநேகம் பாராட்டி, பணிவுடன் பழகவேண்டும். இயற்கையின் படைப்புகள் எல்லாவற்றையுமே இறைவனின் சொரூபமாகப் பார்க்க வேண்டும்.
5. காலையில் சூரிய உதயத்துக்கு முன்பும், மாலையிலும் குளிர்ந்த நீரில் நீராடி கோவில்களிலோ, வீடுகளிலோ ஐயப்பனை மனதார நினைத்து சரணங்கள் கூறி வணங்க வேண்டும்.
6. கருப்பு, நீலம், காவி, பச்சை நிற வேட்டி, சட்டை அணியவேண்டும்.
7. பிரம்மச்சரிய விரதத்தை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்.
8. மாலையை எக்காரணம் கொண்டும் கழற்றக்கூடாது.
9. ரத்த சம்பந்தமுள்ளவர்களின் மரணம் ஏற்பட்டால் குருசாமியிடம் சென்று மாலையை கழற்றிய பிறகே, துக்கத்தில் கலந்து கொள்ள வேண்டும்.
10. ஏதாவது ஒரு காரணத்தால் மாலையை கழற்ற நேர்ந்தால் அந்த ஆண்டு சபரிமலை செல்லக்கூடாது.
11. பெண்களின் சடங்கு வைபவத்துக்கோ, குழந்தை பிறந்த வீட்டிற்கோ செல்லக்கூடாது.
12. மது, மாமிசம், புகைபிடித்தலை விட்டுவிட வேண்டும்.
13. மாலை அணிந்த பக்தர்களின் வீட்டில் சாப்பிடலாம். மற்றவர்கள் வீட்டில் பால், பழம் சாப்பிடலாம்.
14. வீட்டுப்பெண்களுக்கு மாலை அணிந்த காலத்தில் மாதவிடாய் ஏற்பட்டால், ஏழுநாட்கள் கழித்த பின்னர் தான் அவர்கள் சமைத்த உணவை உண்ணவேண்டும்.
15. காலணிகள் பயன்படுத்தக்கூடாது.
16. கன்னிச் சாமிகள் தங்களின் வசதிக்கேற்ப வீடுகளில் பூஜைகள் நடத்தி ஐயப்பன்மார்களுக்கும் ஏழைகளுக்கும் அன்னதானம் செய்விக்கலாம்.
17. எதிர்ப்படும் ஐயப்ப பக்தர்களை ஐயப்பனாகவும், பெண்களை மாளிகைப் புறத்தம்பிகையாகவும் கருதிப் பழக வேண்டும்.
18. மற்றவர்களிடம் பேசும் பொழுது சாமி சரணம் எனத் தொடங்கி, விடைபெறும் பொழுது சாமி சரணம் எனக் கூற வேண்டும்.
19. இருமுடிக்கட்டு பூஜையை வீட்டிலோ, குருசாமி இடத்திலோ, கோவில்களிலோ வைத்து நடத்த வேண்டும்.
20. சபரிமலைப் பயணம் புறப்படுகையில் யாரிடமும் போய் வருகிறேன் எனக் கூறக்கூடாது.
21. பம்பை நதியில் நீராடும் பொழுது மறைந்த தமது முன்னோர்களை நினைத்து அவர்களுக்கு ஈமக்கடன்களைச் செய்து நீராட வேண்டும்.
22. யாத்திரை முடிந்து வீடு திரும்பியதும், ஐயப்பனின் அருள் பிரசாதக் கட்டினைத் தலையில் ஏந்திய படியே வீட்டு வாயில்படியில் விடலைத் தேங்காய் அடித்து வீட்டினுள் நுழைய வேண்டும்.
23. வீட்டில் பூஜை அறையில் பூஜை செய்து, கட்டினைப் பிரித்து, பிரசாதங்களை விநியோகம் செய்ய வேண்டும்.
24. யாத்திரை இனிய முறையில் நிறைவுற்றபின் குருநாதர் அல்லது தாயார் மூலம் மாலை கழற்றும் போது சொல்லும் மந்திரத்தை கூறி மாலையைக் கழற்றி,சந்தனத்தில் நனைத்து ஐயப்பன் திருவுருவப் படத்திற்கு முன்னால் வைத்து விட்டு தீபாராதனை காட்டி விரதம் முடிக்க வேண்டும்.

தெரிந்து கொள்ள வேண்டியவை:

1. மாலை போட்ட நாளிலிருந்து விரதத்தை முடிக்கும்வரை - முடிவெட்டுதல், சவரம் செய்துகொள்ளுதல் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.
2. மெத்தை, தலையணை போன்றவற்றை உபயோகிக்காமல், தரையில் ஜமுக்காளம் ஒன்றை விரித்துப் படுக்கவேண்டும்.
3. பேச்சைக் குறைத்து மவுனத்தைக் கடைப்பிடித்தலே உத்தமம்.
4. மற்றவர்களிடம் சாந்தமாகப் பழகவேண்டும். பிறர் மனம் புண்படும்படி பேசக் கூடாது.
5. விரத நாட்களில் பெண்களை - சகோதரிகளாகவும் தாயாராகவும் கருத வேண்டும்.
6. வீட்டிலிருக்கும் பெண்கள் மாதவிலக்கானால், அவர்கள் தனி அறையில் ஒதுக்குப்புறமாக பார்வையில் படாதபடி இருத்தல் வேண்டும். அப்படி வசதி இல்லாவிடில், மாலை அணிந்தவர்கள் வெளியில் எங்காவது தங்கியிருத்தல் நல்லது.
7. விரத சமயத்தில் மாலை அணிந்தவர்களுக்கு மிகவும் துன்பங்கள் ஏற்படும் என்பதும், சோதனைகளுக்கு உள்ளாவார்கள் என்பதும் தவறான கருத்துகளாகும்.
8. ஒருவேளை, அணிந்திருக்கின்ற ஒரே மாலை தவறுதலாக அறுந்துபோக நேரிட்டால், அதைச் செப்பனிட்டு அணிந்துகொள்ளலாம். இதில் தவறு ஏதுமில்லை. எந்தவிதமான தவறும் செய்யாமல் விரதத்தைக் கடைப்பிடிக்கும் பட்சத்தில், இப்படி மாலை அறுந்துவிட்டதே என்ற வீண் மன சஞ்சலமும் அடைய வேண்டியதில்லை.
9. மாலை போடும் சமயத்தில் எந்தவிதமான பயமோ, சந்தேகமோ, குற்ற உணர்ச்சியோ இருத்தல் கூடாது. அப்படி மனசஞ்சலம் ஏதாவது இருந்தால், மாலை போடுவதை தள்ளிப்போடுதல் நல்லது.
10. ஐயப்ப விரதத்தில் வீட்டிலிருக்கும் மனைவி மற்றும் பிற பெண்களின் தொண்டும் அப்பழுக்கற்ற பக்தியும், மிகவும் உயர்வானதும் போற்றத்தக்கதும் ஆகும்.
11. இருமுடி கட்டும் வைபவத்தை, தனது வீட்டிலேயே வைத்துக் கொள்ளுதல் நல்லது. வீடு சுபிட்சமாக இருக்கும். மங்கலமாகவும் இருக்கும்.
12. மாலையணிந்து சபரிமலைக்குச் செல்லும் நோக்கங்கள் மூன்று: தன்னையே புனிதப்படுத்தி சத்தியமான பதினெட்டாம் படியில் ஏறி பகவான் ஐயப்பனைத் தரிசித்தல்; தன் புலன்களை எல்லாவகையிலும் கட்டுப்படுத்தி நெறியான வாழ்க்கை வாழ்ந்து மனம், உடல் இவற்றைத் தூய்மைப்படுத்துதல், தான் சுத்தமாக இருப்பதோடு அல்லாமல், வீட்டையும் வீட்டில் உள்ளவர்களையும் சுத்தமாக இருக்கவைத்து அவர்களையும் பக்தி நெறிக்கு உட்படுத்துதல்.
13. மாலைக்கு மதிப்பளித்து ஒரு மண்டல காலம் விரத முறைகளை நெறியாகவும் முறையாகவும் கடைப்பிடித்து, தான் என்னும் அகங்காரத்தை விட்டொழித்து, இறைவனிடம் முழு நம்பிக்கை வைத்து, முழு சரணாகதி அடைந்து, ஒருமுகமாக வழிபட்டால், இறைவனின் அருட்கடாட்சம் குறைவில்லாமல் கிடைக்கும். படிகள் ஏற ஏற, அவர்கள் தன் வாழ்வில் உயர்ந்துகொண்டே இருப்பார்கள் என்பதும் சத்தியம்!

தொடரும்....