தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................
என் தமிழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
என் தமிழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

10/18/2013

உன் நினைவோடே.......

அன்று உன் காதலால் என்னை
என் முதல் கவிதை எழுத வைத்தாய்,
இன்று உன் பிரிவால் என்னை முழு கவிஞன் ஆக்குகிறாய்.

உன்னைப்பற்றி நினைக்கக் கூடாது
நினைக்கக் கூடாது என
நினைத்து நினைத்தே,
உன் நினைவோடே வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

மனதின் வலியை வார்த்தைகளால்
வெளிப்படுத்த முடியுமா முடியாதா
என்கிற சோதனை முயற்சியாகத்தான்
உன் பிரிவை பற்றி எழுதிக்கொண்டிருக்கிறேன்.

என்னுடைய இந்த கவிதைகளெல்லாம் என் தமிழுக்கும்,
உன் நினைவிற்கும் பிறந்த குழந்தைகள் தானடி.

8/07/2013

அவள் யாரோ...நான் யாரோ..!

ன் காதலை
நீ வைத்துக் கொண்டு
ஏனடி என்னை
அலைக்கழிக்கிறாய்?

***

எப்படியாவது
சொல்லிவிடத்தான்
எப்போதும்
காத்துக் கிடக்கிறது
உன் மீதான காதல்..!

***

அவள் எப்போதும் இப்படித்தான்
என் கனவுகளில் உலா வருவாள்
கவிதைகளுக்கு எப்போதும் கரு கொடுப்பாள்
உறங்கிக் கொண்டிருக்கையில்
நினைவில்.. சில்மிஷங்கள் செய்து
தூக்கங்களை கலைத்தெறிவாள்..
ஓராயிரம் முறை கண்ணாடி பார்க்கையில்
என் பிம்பம் தாண்டி வந்து நின்று
புத்திக்குள் கல கலவென்று சிரிப்பாள்
ஆமாம்...
அவள் எப்போதும் இப்படித்தான்;
ஆனால்
அன்றாடம் காணும் எங்கள் தினசரிகளில்...
அவள் யாரோ...நான் யாரோ..!

7/25/2013

என் அருமை தமிழ் மொழியே!

நான் பிறந்தபோது நீ என் பக்கமில்லை...
பாதியில் வந்தாய்,
நன்கு பழகினோம்,
உன்னை நன்கு புரிந்து கொண்டேன்,
போகுமிடமெங்கும் கூட வந்தாய்,
என் தோல்விக்கு ஆறுதல் சொன்னாய்,
அடிபட்ட போது முதலில் வந்தாய்,
உன்னையே பேச வைத்தாய்,
உன்னிலயே நினைக்க வைத்தாய்,
என்னை கவிதை எழுத வைத்தாய்,
எப்போதுமே கூட இருந்தாய்,
ஆனால்,
நான் சாகும் போது
நீ என் கூட வந்துவிடாதே!
உன்னால் வாழ்ந்து கொண்டிருப்பவர்
இங்கு எத்தனை பேரோ....?!?!?
- என் அருமை தமிழ் மொழியே!

11/29/2012

தமிழில் பேசினால் மதிப்பதே இல்லை




யாம் பிறந்து விழுந்த பொழுதினில் எம்மில் இருந்து தெரித்து விழுந்த ஒலியாய் வெளிப்பட்ட தாயே.....என் தமிழே...! மானிடரின் சப்தங்கள் மட்டுமே மொழியாய் போன ஒரு உலகத்தில் எம்மின் உணர்வுகளை எல்லாம் வெளிக் கொணர சப்தமாய் வெளிப்பட்டு உன்னை மொழியென்றும் எம் தாயென்றும் தமிழென்றும் கொண்டோம்.

உலகம் மொழியறியா காலத்தில் கவிசெய்தோம் நாம். இயல், இசை, நாடகம் என்று உன்னில் எத்தனை எத்தனை வித்தைகள் செய்தோம். உணர்வுகளை சரியாக வெளிப்படுத்த எம்மிடம் சப்தம் இருந்ததால், சப்தமென்ற தமிழிருந்தால் வலியையும், சந்தோசத்தையும், துக்கத்தையும், சரியான பாகத்தில் எம்மால் வெளிக்கொணர இயன்றதால் மானிடரின் உணர்வு விளங்கும் தெளிந்த நிலையை எய்தினோம். ஒப்பற்ற ஒரு இனமாய் உலகுக்கு அறிமுகமானோம்!

காலங்கள் தோறும் மனிதர்கள் வந்தனர். உம்மை கற்றுத் தெளிந்து தம்மை புலவர் என்று தாமெ தம்மையே விளித்துக் கொண்டனர். உன்னைக் கொண்டு கவிசெய்தனர், புதினம் செய்தனர், பாடல் செய்தனர் இசை செய்தனர். உன்னைக்கொண்டு ஒரு வாழ்வு உம்மால் ஒரு வாழ்வு...என்று காலங்கள் தோறும் நீ வளர்த்திருக்கிறாய் மனிதர்களை. எத்துனை சுவை கொண்டவள் நீ....அடுக்குத் தொடராய், இரட்டைக் கிளவியாய், உணர்வுகளை பிரதிபலிக்கும் அணி இலக்கணமாய், வார்த்தைகளை அளவிடும் மாத்திரைகளாய்....எம்மவரின் வாழ்வில் எத்தனை எத்தனை பங்கு கொண்டாய்....

காலங்கள் தோறும் உன்னைக் கொண்டு இம்மனிதரின் வயிற்றுப்பசி அடங்கியது தாயே....! உன்னை சிறப்பாக்க, உம்மை வாழவைக்க உனக்கு விழா எடுக்க, செம்மொழியாய் நீ சிறந்தவள் என்று உலகிற்கு கட்டியம் கூறி அறிவிக்க மறந்து அரசியலாய், சுய நோக்காய்..பகட்டாய் உன்னை பகடி விளையாடி இருக்கிறார்கள் அம்மா...!

தச்சு வேலை செய்யும் கோவிந்தனுக்கும், கட்டிட வேலை செய்யும் மாரியம்மாவிற்கும், அதோ அடுத்த தெருவில் மாம்பழம் வியாபாரம் செய்கிறாளே...பொன்னம்மா பாட்டி இவர்கள் என்ன வேற்று கிரகவாசிகளா? இவர்களுக்கு தமிழின் செம்மையை யார் விளக்குவார்கள்...?

கம்பனின் சொல்லாடலை அவர்களின் தன்மைக்கேற்ப எப்படி விளங்குவார்கள்? அப்படியே விளக்கினாலும்...வெற்று வயிறும், வெறுமையான எதிர்காலமும் தமிழின் செம்மையை இவர்களின் செவிகளுக்குள் செல்ல அனுமதிக்குமா? தெருக்குத்தெரு தமிழ்ச்சுவையூட்டும் நிகழ்ச்சிகள் நடை பெற்றிருக்க வேண்டாமா? பாமரனுக்குப் புகட்டாமால் அறிஞர்களே பேசி சிரித்து, மகிழ்ந்து கொள்ள தமிழ் என்ன தனிப்பட்ட சொத்தா? உங்களின் ஆய்வுகளை எல்லாம் எதோ ஒரு பல்கலைகழகத்தில் நிகழ்த்தி அதன் மூலம் நம் மொழியின் வளத்தை நிறுவ முடிவுகள் எடுத்து அரசு நடைமுறை படுத்தியிருக்கலாமே.....? இதற்கு எதுக்கு கோடிகளில் செலவு....? மாறாக தமிழனின் வாழ்க்கை மிளிர அதை செலவு செய்திருக்கலாமோ.....?

அந்தோ பரிதாபம் எம்மொழிக்கான விழா...அதற்கு ஒரு பாடல்....இதிலேயே தெரிந்து விட்டது தமிழனின் தமிழ்ப்பற்று. எம்மண்ணின் மணத்தை பாடலிலும் பாடல் வரிகளிலும் கொணரவுமில்லை, பட்டி தொட்டி எங்கும் பாடல்கள் ஒலிக்கவுமில்லை. தமிழ் என்பது ஒலி வடிவம் கொண்ட, எழுத்து வடிவம் கொண்ட..இலக்கணத்தில் சிறந்த...தொன்மையான மொழி மட்டுமல்ல..அது நமது கலாச்சாரத்தில் ஊறிய, வாழ்வில் அங்கமான உயிரோடு கலந்த ஒரு விசயம்.

செம்மொழியின் பாடலும், தமிழனுக்கு சம்பந்தம் இல்லாதது அதில் பயன்படுத்திய வரிகள் வேண்டுமானால் தமிழோடு தொடர்புகொண்டிருக்கலாம் ஆனால் இசையும், இசைத்த கருவிகளும் தமிழோடு தொடர்பற்றது. ஒரு தாய் தன் குழந்தையை தாலட்டும் இசையில் நாம் எந்த சிரத்தையும் எடுக்காமல் தமிழ்த்தாய் வெளிப்பட்டு ஒரு வித உற்சாக அமுது படைப்பாள். ஏற்றம் இறைக்கும் உழவனும், நாற்று நடும் பெண்களுகம், ஆண்களும் இசைக்கும் பண்ணில் ஒளிந்து நின்று எட்டி எட்டிப் பார்த்து நம்மை மகிழ்விப்பாள் எம் தமிழ்த்தாய். அவளுக்கென்று ஒரு கலச்சாரம் உண்டு அந்த கலாச்சாரத்தை மேற்கித்திய இசையின் மூலம் அழிக்க நினைத்திருப்பது ஒரு கொடூரமான செயல்
யூனிகோட் என்னும் அச்செழுத்தினை இனி அனைவரும் பயன்படுத்தவேண்டும்....சரி....

வலைப்பூக்களில் தமிழ் மிளிர்கிறது .....சரி

உலகெமெங்கும் இருந்து தமிழறிகள்......கட்டுரைகளை சமர்ப்பித்தனர்......சரி..

மக்கள் கூட்டம் கரை புரண்டது........சரி

தமிழில் கையெழுத்திட அனைவரும் முன் வரவேண்டும்...சரி...

இனி தொடர்ந்து செம்மொழி மாநாடு நடக்கும்.....சரி....

தனியார் தொலைக்காட்சி நிகழ்சிகளில் இயன்ற வரை தமிழ் புகுத்தப் பட வேண்டும் என்றும் லேகியம் விற்கும் விற்பன்னர்களுக்கும், ராசிக்கல் விற்கும் வியாபாரிகளுக்கும், தொடர் நாடகம் என்னும் ஒரு மனோதத்துவ தாக்குதல் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கும் நேரம் ஒதுக்கும் இவர்கள்....அதிகபட்ச மக்கள் பார்க்கு நேரங்களில் செம்மொழியான எம் தாய்மொழியின் பெருமை சொல்ல நேரம் ஒதுக்க ஏதேனும் சட்டம் உள்ளதா?

எல்லா தமிழ் ஊடங்களும் தமிழின் சிறப்பினை கூற தனியே பக்கங்கள் ஒதுக்க வேண்டும் என்று கட்டளைகள் எதேனும் பிறப்பிக்கப்பட்டுள்ளதா? மக்கள் கூடும் இடங்களில் எல்லாம் மொழியின் வளமறியும் நிகழ்வுகள் ஏதேனும் உண்டா?

தமிழ் மொழி இல்லாத விண்ணப்ப படிவங்கள் எல்லாம் செல்லாது என்று அறிவிக்க முடியுமா?

தமிழரிடம் தமிழில் பேசுங்கள் என்று கண்டித்து சொல்லா ஏதேனும் வழிவகை உண்டா.....?

ஒரு அலுவல் விசயமாக வேறு அலுவலகத்திற்கு சென்ற நான் ...அங்கு நான் சந்திக்க வேண்டிய மனிதரும் தமிழர்தான் என்று அறிந்து ...தமிழா நீங்கள் என்று கேட்க யெஸ் என்று இறுக்கமாய் பதில் சொல்லி தொடர்ந்து ஆங்கிலத்தில் உரையாடிய போது உடையில்லாமல் நின்று பேசியது போல உணர்ந்தேன்.....

இன்னும் சில தமிழர்கள் நாம் தமிழில் பேசினால் மதிப்பதே இல்லை....ஆங்கிலத்தில் பேசினால் மரியாதை சரளமாக வரும்.....எதாவது வேலை ஆகவேண்டும் அல்லது புகார் கொடுக்க வேண்டும் என்றால் உரக்க ஆங்கிலத்தில் பேசினால் ...பயப்படுகிறார்களா இல்லையா....? மனோதத்துவ ரீதியாக மனதிலே ஒரு எண்ணம் எடுத்துக் கொண்டு ஆங்கிலத்தில் பேசினால் பயப்படும் நிலை மாற...ஏதாவது விளக்க வகுப்புகள் எடுக்கப் போகிறீர்களா....செம்மொழி விழா நடத்தியவர்கள்.....?

மொழிக்கான விழா எடுத்ததற்கு வாழ்த்துச் சொல்லும் அதே நேரத்தில் தமிழை மேம்படுத்தும் வேளையில்..........தமிழனை மேம்படுத்தவும் ஏதாவது செய்யுங்கள் பெரியவர்களே.....!

தமிழ்....பேச.....தமிழன் இருக்க வேண்டும்...முதலில் இல்லையெனில் ஆராய்ச்சி முடிவுகளையும் சிறப்புகளையும்....அருங்காட்சியகத்தில் வைக்க வேண்டிய நிலை வரும்...


போற்றுவார் போற்றட்டும்...

புழுதி வாரி தூற்றுவார் தூற்றட்டும்...!

தொடர்ந்து செல்வேன்....

ஏற்றதொரு கருத்தை...

எனதுள்ளம் ஏற்றதால்..

எடுத்துரைப்பேன்....எவர்வரினும்....

நில்லேன்....! அஞ்சேன்...!

9/17/2012

என் தமிழ் மொழி






"பிறந்தவுடன் நான் சொன்ன  "அம்மா" என்ற என் மொழி 


மழலையாய் நான் கற்ற மழலை மொழி 

அதுவே செம்மொழியான என் தமிழ் மொழி! 

பண்பை வளர்த்த பண்பாட்டு மொழி 

என் கவிதைகளை உருவாக்கிய  என் காதல்  மொழி 


செம்மொழியான என் தமிழ் மொழி! 

என் பகுத்தறிவை வளர்க்கும் பக்குவ மொழி 

உலகை ஆளப் பயணிக்கும் மொழி 

செம்மொழியான என் தமிழ் மொழி! 

நம் தமிழ் இதயங்களை இணைக்கும் இனிய மொழி 

இணையத்தில் வளரும் செம்மொழியாக இங்கே! 

இணைக தமிழ் இதயங்கள்! 

7/19/2012

கலம்பகம்-என் தமிழ்



தமிழ் இலக்கியத்தில், கலம்பகம் என்பது பலவகைச் செய்யுள்களால் ஆகியதும், பல பொருள்கள் பற்றியதுமான பிரபந்தவகை இலக்கியங்களில் ஒன்றாகும். கலம்பகம் என்பது கலப்பு, அகம் என்னும் இரு சொற்களின் இணைப்பால் உருவானது. பலவகைப் பாடல்கள் ஒருங்கிணைந்து உருவாவதால் இப் பிரபந்தவகைக்கு இப் பெயர் ஏற்பட்டது.

ஒருபோகும், வெண்பாவும், முதல் கலியுறுப்பாக முற்கூறப்பெற்றுப் புயவகுப்பு, மதங்கம், அம்மானை, காலம், சம்பிரதம், கார், தவம், குறம், மறம், பாண், களி, சித்து, இரங்கல், கைக்கிளை, தூது, வண்டு, தழை, ஊசல் என்னும் பதினெட்டுப் பொருட் கூற்று உறுப்புக்களும் இயைய, மடக்கு, மருட்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, ஆசிரிய விருத்தம், கலி விருத்தம், கலித்தாழிசை, வஞ்சி விருத்தம், வஞ்சித்துறை, வெண்துறை என்னும் இவற்றால், இடையே வெண்பா கலித்துறை விரவ அந்தாதித் தொடையால் பாடுவது கலம்பகம்.

கலம்பகத்திலே பாடப்படுபவரின் சமூகத் தகுதிக்கு ஏற்பப் பாடல்களின் எண்ணிக்கை அமையவேண்டும் எனத் தமிழ் யாப்பியல் நூல்கள் கூறுகின்றன. இது அதிகபட்சம் 100 பாடல்களிலிருந்து 50 பாடல்கள் வரை இருக்கலாம். எனினும் 100 க்கு அதிகமாகவும், 50 க்குக் குறைவாகவும் உள்ள பாடல்களைக் கொண்ட கலம்பகங்களும் உள்ளன.

கலம்பக இலக்கியங்கள் சில

•நந்திக் கலம்பகம்

•காசிக் கலம்பகம்

•மதுரைக் கலம்பகம்

•வீரகேரளம்புதூர் நவநீதகிருட்டிணன் கலம்பகம்

•திருக்கண்ணபுரக் கலம்பகம்

•தில்லைக் கலம்பகம்

•மறைசைக் கலம்பகம்

•அருணைக் கலம்பகம்

•கதிர்காமக் கலம்பகம்

•கச்சிக் கலம்பகம்

•வெங்கைக் கலம்பகம்

•புள்ளிருக்கு வேளூர்க் கலம்பகம்

•திருவாமாத்தூர்க் கலம்பகம்
 
குறிப்பு : தமிழை தொடர்ந்து படிப்பவர்களுக்கு கலம்பகத்தின் மொத்த தொகுப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

1/14/2012

என் தமிழ்




















உலகம் முழுவதும் தமிழர்கள் வாழுகிறார்கள் என்று நமக்குத் தெரியும். ஆனால் அவர்களின் சரியான எண்ணிக்கையை அந்த நாட்டு மக்களின் வழி பகிர்ந்து கொள்ளப்பட்ட தகவல் இது. மின் அஞ்சலில் வந்த பட்டியலை வலை பார்வையாளர்களுக்காக அப்படியே தருகிறேன்,


India: 63,000,000
Sri Lanka: 3,600,000
Malaysia: 1,500,000
Burma: 500,000
Canada: 300,000
Singapore: 250,000
United Kingdom: 150,000
Mauritius: 130,000
Rளூunion: 126,000
Italy: 100,000
United States: 100,000
Germany: 60,000
South Africa: 60,000 True figure 500,000
France: 60,000
Switzerland: 35,000
Australia: 30,000 True figure 100,000
Norway: 12,000
Denmark: 10,000
Sweden: 8,000


அனைவருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்

4/05/2011

கனாக்கண்டேன் தோழா

கனவது கண்டேன் நினைவதாக



நினைவது மெய்க்கக் கனாக்கண்டேன்!


நடப்பதெல்லாம் கனவதாக இருக்க


கனவது மெய்க்கக் கனாக்கண்டேன்!


கனவது கனவாய்ப் போவதால்


கனவது மெய்க்கக் கனாக்கண்டேன்!


இருப்பது விட்டு பறப்பதைப் பிடிக்க


இருப்பது மட்டும் மெய்க்கக் கனாக்கண்டேன்!


மக்களெல்லாம் உண்மை மக்களாக


நம்மினம் மனிதரென கனாக்கண்டேன்!


நீரது பிரியாது உறவது நிலையாது


உறவது நிலைக்கக் கனாக்கண்டேன்!


காதலெனக் கூறி காமம் விலக்கி


காதலர் வாழக் கனாக்கண்டேன்!


இல்லையென சொல்லி இருப்பது மறைத்து


மறைக்க ஒன்றுமில்லாதவர் இருக்கக் கனாக்கண்டேன்!


பெற்றோரென்பவர் பெற்றதால் கடைமை


பெறாத பெற்றோருக்கும் கடைமை அமையக் கனாக்கண்டேன்!


உண்மையென்பது பொய்யில் பிறக்க


பொய்யென்பது உண்மையில் மறையக் கனாக்கண்டேன்!


கல்லில் அரிசி கிடக்கக் கண்டு


அரிசியில் கல்லில்லாமல் விற்கக் கனாக்கண்டேன்!


கொழிக்கும் வர்க்கம் செழித்து வளர


உழைக்கும் வர்க்கம் செழிக்கக் கனாக்கண்டேன்!


கல்வியென்பது பணத்தில் விளைய


பணமது கல்விக்கடிமையாகக் கனாக்கண்டேன்!


கலைகள் யாவும் அழிவது கண்டு


வளருதல் வேண்டும் கலைகள் யாவுமெனக் கனாக்கண்டேன்!


மனிதனொருவன் கிழிந்த ஆடைக்குள்ளிருக்க


ஆடைகள் மனிதன்மேலணியக் கனாக்கண்டேன்!


கலங்கும் மனங்கள் பெருகுவது கண்டு


மனங்களெல்லாம் மகிழ வழிகானக் கனாக்கண்டேன்!


மிருகமென மனிதன் மாறாமிலிருக்க


மனிதனெப்படி மனிதனாகக் கனாக்கண்டேன்!


பசியில் வாடும் உள்ளம் கண்டு


உள்ளத்தில் நல்லெண்ணம் பிறக்கக் கனாக்கண்டேன்!


என்கனவது பொய்க்காதுவெனக் கருதி


எல்லோரும் வாழும் நிலையெதுவெனக் கனாக்கண்டேன


2/03/2011

நான் பெருமைபடுகிறேன்....



நான்
மனிதன் என்பதால் மட்டும் அல்ல .
இந்தியன் என்பதால் மட்டும் அல்ல .
தமிழன் என்பதால் மட்டும் அல்ல.
முதலாய் ......
மூச்சாய்......
உயிராய் ...
என் தமிழை உச்சரித்ததால் ....
நான் பெருமைபடுகிறேன் ....

1/09/2011







ஓங்கி அடித்தாலும்.சற்றே கண்விழித்துவிட்டு,
மறுபடியும் உறங்கிவிடுவார்...!
மொழி பற்றா அப்படியின்னா என்னனு கேட்பார்..!
தமிழனா?அவன் ஏன் சண்டை போடுறான் அங்கே என்பார்..!
இலங்கையா?அது நம்ம நாடு இல்லையே?என்பார்...!
வோட்டா?எப்போதும் மாதிரி நம்ம தலைவருக்குத்தான்..நமக்கு ஒன்னும் பிரச்னை இல்லையே என்பார்..!
புயலே அடித்துவிட்டு போயிருந்தாலும் லேசா காத்துதானே அடிச்சுது என்பார்..!
இப்படியெல்லாம் சொல்லும் இவர் யார்?
இவர்தான் தமிங்க்லிஷ் டமிளர்..

12/04/2010

வாழ்த்துகள் எனது தமிழனுக்கு (லண்டனில் இருப்பவர்களுக்கு )

         லண்டனில் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் இலங்கையின் எதிர்காலம் குறித்து ராஜபக்சே சிறப்புரை ஆற்ற இருந்தார்.
       அதற்காக லண்டன் சென்றவரை எதிர்த்து லண்டன் விமான நிலையத்திலேயே லண்டன் வாழ் தமிழர்கள் ஆயிரக் கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
        அவர் இருந்த ஓட்டலைச் சுற்றி தமிழ் ஆர்ப்பாட்டக்காரர்கள். மற்றும் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக் கழகம் முன்னும் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்.
          இந்நிலையில் பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு..
ராஜபக்சேயின் நிகழ்ச்சியை பல்கலைக் கழகம் ரத்து செய்தது.தவிர்த்து அவர் கைது செய்யப்பட வேண்டும் என இங்கிலாந்து பிரதமரிடம் அந்நாட்டு எம்.பி., க்கள் வலியுறுத்தி வந்ததும் குறிப்பிடத்தக்கது.
         இலங்கையில் போர் நடந்த போது அந் நாட்டு ராணுவத்தினர் தமிழ் பெண்கள் மீது நடத்திய பாலியல் கொடுமையை..அதன் வீடியோ காட்சிகளை அந்நாட்டு சேனல்4 என்ற தொலைக்காட்சி ஒளிபரப்பியது.அவை முழுமையான அளவு ஒளிபரப்பமுடியா அளவு கொடூரமாய் உள்ளது எனவும் தனியார் சேனல்  தெரிவித்துள்ளது.
          அந்த வீடியோவில் காணப்பட்ட பெண்கள் உடல்களில் ஒன்று விடுதலைப்புலிகளுக்காகப் பணியாற்றிய இசைப்பிரியா என்னும் பத்திரிகையாளப் பெண் என கண்டுபிடித்ததாகத் தெரிகிறது.
         லண்டன் தமிழர்களே..உங்களது தாயகமான இந்தியத் தமிழர்களிடையே காணமுடியாத ஒற்றுமையை உங்களிடம் கண்டு மனம் பூரிப்படைகிறது.


எங்களை எல்லாம் வெட்கபட்டு  தலைக்குனிய வைத்து விட்டீர்கள்.

உங்களது செயலுக்கு நான் எனது தமிழர்களின் சார்பில் வாழ்த்து சொல்ல கடமைபட்டுள்ளேன் .

11/28/2010

காளமேகம் (15 ஆம் நுற்றாண்டில் வாழ்ந்த ஒரு தமிழ்ப் புலவர்)

தமிழ்ப் புலவர்களின் வரிசையில் காளமேகம் ஒரு அற்புதமானவர்.
(நொடிப் பொழுதில் பாடல் எழுதுபவர்), சிலேடை கவி (ஒரே பாடல் இரு பொருள்), நிந்தா ஸ்துதி கவி (வசை பாடுவது போல் இருக்கும் ஆனால் உட்பொருள் போற்றுவது இருக்கும்) போன்ற கவி வகைகளில் சிறந்து விளங்கியவர்.
       தமிழிலக்கணத்தின் பலரும் தொட்டுப் பார்க்காத வகைகளை மிக அழகாகக் கையாண்டவர்.
வரதன் என இயற்பெயர் கொண்டவர்.
கோயில் உதவியாளராக இருந்தவர்.
மோகனாங்கி என்பவளிடம் அன்பு கொண்டு சைவ சமயம் சேர்ந்தவர்.
அம்பிகையின் அருளால் கவித்திறன் பெற்றவர். திருவானைக்கா உலா, மூவர் அம்மானை, சித்திர மடல், பரப்பிரம்ம விளக்கம் போன்ற பாடல் தொகுப்பை எழுதியவர்.


மற்றவர்கள் கொடுக்கும் குறிப்புகளுக்கேற்ப, வெண்பாக்களை நொடிப்பொழுதில் பாடி அசத்திக் காட்டுவார். இவரின் மிக அழகிய, நயமிக்க பாடல் சிலவற்றைக் காண்போம்.


தமிழின் "க' என்ற எழுத்து மட்டுமே கொண்ட பாடலை காளமேகத்தைப் பாடச்சொல்ல, காளமேகம் காண்பவர் ஆச்சர்யப்பட, பாடலை அருவியெனக் கொட்டுகிறார்.


காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை
கோக்குக்கூ காக்கைக்குக் கொக்கொக்க - கைக்கைக்குக்
காக்கைக்குக் கைக்கைக்கா கா.
(கூகை - ஆந்தை. காக்கையானது பகலில் கூகையை (ஆந்தையை) வெல்ல முடியும். கூகையானது இரவில் காக்கையை வெல்லமுடியும். கோ எனும் அரசன் பகைவரிடத்திலிருந்து தம் நாட்டை இரவில் ஆந்தையைப் போலவும், பகலில் காக்கையைப் போலவும் காக்கவேண்டும். எதிரியின் பலவீனமறிந்து, கொக்கு காத்திருப்பது போல தக்க நேரம் வரும் காத்திருந்து தாக்க வேண்டும். தகுதியற்ற காலம் எனில் தகுதியான அரசனுக்குக் கூட (கைக்கு ஐக்கு ஆகா) கையாலாகிவிடக்கூடும்).


அதே போல 'த' எனும் எழுத்து மட்டும் கொண்ட பாடலை ஒருவர் பாடச் சொல்கிறார்.
தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி
துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி
தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த
தெத்தாதோ தித்தித்த தாது?


தத்தி தாவி பூவிலிருக்கும் தாதுவாகிய மகரந்தத் தூளை திண்ணும் வண்டே, ஒரு பூவினுள் உள்ள தாதுவை உண்ட பின் மீண்டும் ஒரு பூவினுக்குள் சென்று தாதெடுத்து உண்ணுகிறாய், உனக்கு (எத்தாது) எந்தப் பூவிலுள்ள தேன் (இனித்தது) தித்தித்தது?)


பெருமாளும் நல்ல பெருமாள்! அவர்தம்
திருநாளும் நல்ல திருநாள்! - பெருமாள்
இருந்திடத்தில் சும்மா இராமையினால், ஐயோ!
பருந்துஎடுத்துப் போகிறதே பார்! ..

அப்பன் இரந்துஉண்ணி; ஆத்தாள் மலைநீலி;
ஒப்பரிய மாமன் உறிதிருடி; - சப்பைக்கால்
அண்ணன் பெருவயிறன்; ஆறுமுகத் தானுக்குஇங்கு
எண்ணும் பெருமை இவை..


வில்லால் அடிக்க செருப்பால் உதைக்க வெகுண்டுஒருவன்
கல்லால் எறியப் பிரம்பால் அடிக்கஇக் காசினியில் அல்ஆர்
பொழில்தில்லை அம்பல வாணற்குஓர் அன்னைபிதா இல்லாத
தாழ்வுஅல்ல வோஇங்ங னேஎளிது ஆனதுவே.


ஆலங் குடியானை ஆலாலம் உண்டானை
ஆலம் குடியான் என்று ஆர் சொன்னார்? - ஆலம்
குடியானே ஆயின் குவலயத்தோர் எல்லாம்
மடியாரோ மண்மீதிலே.


பூநக்கி ஆறுகால்; புள்இனத்துக்கு ஒன்பதுகால்;
ஆனைக்குக் கால்பதினேழ் ஆனதே; மானே! கேள்!
முண்டகத்தின் மீது முழுநீலம் பூத்ததுண்டு;
கண்டதுண்டு; கேட்டதில்லை காண்!


ஒன்றுஇரண்டு, மூன்றுநான்கு, ஐந்துஆறு, ஏழ்எட்டு
ஒன்பதுபத் துப்பதி னொன்று - பன்னிரண்டு
பதின் மூன்றுபதி னான்குபதி னைந்து
பதி னாறுபதி னேழ்பதி னெட்டு.
வாரிக் களத்துஅடிக்கும் வந்தபின்பு கோட்டைபுகும்
போரில் சிறந்து பொலிவுஆகும் - சீர்உற்ற
செக்கோல மேனித் திருமலைரா யன்வரையில்
வைக்கோலும் மால்யானை ஆம்.
ஆடிக் குடத்துஅடையும் ஆடும்போ தேஇரையும்
முடித் திறக்கின் முகம்காட்டும் - ஓடிமண்டை
பற்றில் பரபரஎனும் பாரில்பிண் ணாக்கும்உண்டாம்
உற்றிடும்பாம்பு என்எனவே ஓது.
சுருக்குஅவிழ்ந்த முன்குடுமிச் சோழியா! சோற்றுப்
பொருக்குஉலர்ந்த வாயா! புலையா! - திருக்குடந்தைக்
கோட்டானே! நாயே! குரங்கே! உனைஒருத்தி
போட்டாளே வேலையற்றுப் போய்!
ஆண்டி குயவா! அடா!உன்பெண் டாட்டிதனைத்
தோண்டிஒன்று கேட்டேன் துரத்தினாள் - வேண்டிஇரு
கைக்கரகம் கேட்டேன்நான் கால்அதனைத் தூக்கியே
சக்கரத்தைக் காட்டினாள் தான்!

நன்றி :பகுப்பு:தமிழ்ப் புலவர்கள்

11/09/2010

இலக்கு-இலக்கியம்

            இலக்கியம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தாதவர்கள்
இத் தமிழ்கூறும் நல்லுலகில் இல்லையென்றே சொல்லாம். ஆனால் இலக்கியம் என்ற வார்த்தை தொல்காப்பியர் பயன்படுத்தவில்லை. வள்ளுவன் அறிந்திருக்க வில்லை. இளங்கோவும் கம்பனும் பயன்படுத்தியிருக்கவில்லை.
             மணிவாசகர் தன் திருவாசகத்தில் முதல்முறையாக இலக்கியம் என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார்..

இலக்கு-இலக்கியம், இலக்கு-இலக்கணம், இலக்கு-குறி: குறிக்கோள். சிறந்த வாழ்க்கைக் குறிக்கோளான அறத்தை எடுத்துக் காட்டுவது இலக்கியம். சிறந்த மொழிக்கூறிகளான அமைப்பை எடுத்துக் கூறுவது " இலக்கணம்"


 செய்யுள் என்ற பெயராலே தொல்காப்பியனார் இலக்கியத்தைக் குறிப்பிடுகின்றார். நூல் என்ற பெயராலே இலக்கியம் குறிப்பிடப்பட்டிருந்தது வள்ளுவன் காலத்தில்.


ஆங்கிலத்தில் இலக்கியம் என்னும் பொருள் பயக்கும் literature எனும் சொல் கி.பி.1812ல் தான் பயன்பாட்டிற்கு வந்ததாக ஆக்ஸ்போர்டு அகராதி தெரிவிக்கிறது.

கவின்மிகு சொற்களைக் கொண்டு கற்பனை நயத்தோடு கலையழகும் புலப்படுமாறு படைக்கப் படுபவை எல்லாம் "இலக்கியம்" எனப் போற்றத்தக்கன என்றும் இலக்கியத்தை விளக்கலாம். என்பது தமிழறிஞர்கள் கூற்று.


வில்லியம் வோர்ட்ஸ்வர்த் கற்பனையை இருகூறாக்கி இரண்டு பெயர்களை தந்துள்ளார்.


ஆக்கக் கற்பனை
பொருளைக் கண்டதும் அதன் புறத்தோற்றம் முதலியவற்றில் ஈடுபடாமல் அதன் அகத்தை ஊடுருவி நோக்கியும் உட்கருத்தை அறிந்தும் அவற்றின் பயனாகத் தோன்றுவது அந்தக் கற்பனை.
நினைவுக் கற்பனை:
இதில் ஆக்க வேலை ஒன்றும் இல்லை. அதற்கு மாறாக நமது நினைவைத் தட்டி எழுப்புகிறது. நாம் என்றும் கான்கிற பொருளையே நினைவு படுத்துகிறது. ஆனால் படித்தவுடன் அப்பொருள்களின் நினைவு அதுவரை நாம் அனுபவியாத ஒரு புதிய ஆற்றலோடு மனதில் தோன்றுகிறது.


இதுதான் இலக்கியம் என்பதை விட என்னால் ரசிக்கும் படியாக எழுதப்படுவதெல்லாம் என்னைப் பொருத்தவரையில் இலக்கியம் என்ற அளவிலேயே என் புரிதல்......
எனைக் கவர்ந்த சில இலக்கிய வரிகளை பகிர்ந்துள்ள ஆசைப்படுகின்றேன்.

நீரிடை உறங்கும் சங்கம், நிழலிடை உறங்கும் மேதி
தாரிடை உறங்கும் தண்டு தாமரை உறங்கும் செய்யாள்
                                                                        -கம்ப இராமாயணம்.
பஞ்சி ஒளிர் விஞ்சுகுளிர்
பல்லவம் அணுங்கச்
செஞ்செவிய கஞ்சம்நிமிர்
சீறடியாள் ஆகி
அஞ்சொலிள மஞ்ஞையென
அன்ன மென மின்னும்
வஞ்சியென நஞ்செமென
வஞ்ச மகள் வந்தாள்
                                                            சூர்ப்பணகை குறித்து கம்பன்........
"கொய்த மலரை கொடுங்கையிலணைத்து
மொய்குழலில் சூட்டுவான் முன் வந்து தையலாள்
பாதாரவிந்தத்தே சூட்டினான்: பாவை இடைக்கு
ஆதாரமிண்மையறிந்து"
                                                                  -புகழேந்தி புலவர்.
தண்டு லாவிய தாமரைப் பொய்கையில்
மொண்டு நீரை முததருகேந்தினாள்
கெண்டை கெண்டையெனக் கரையேறினாள்
கெண்டை காண்கிலள் நின்று தயங்கினாள்.


தன்னிளவு அவள் முகமோ
தாரகைகள் நகையோ
விண்ணீளம் கார்குலழோ
மேவும் எழிலெல்லாம் மெல்லியின் வாய்க் கள்வெறியோ
                                                                         -பாரதிதாசன.
பெருந்திணை பற்றி பாரதிதாசன்
இளமை ததும்ப
எழிலும் ததும்ப
காதல் ததும்ப
கண்ணீர் ததும்பி...........
என் மகள் கிழவனுடன் போனாள்.....

தொல்காப்பியர் சொல்வதுபோன்றும் இன்னும் பலர் சொல்வது போன்றும் அமைவது தான் இலக்கியம் என்றால் இன்றைய உலகில் பல நவீன இலக்கிய வியாதிகள் ஒழிந்து போயிருக்கும் என்பதே உண்மை....


முதல் போடுபவன் முதலாளி அல்ல முதலை ஆள்பவன் முதலாளி
எழுதுபவன் எழுத்தன் எழுத்தை ஆள்பவன் எழுத்தாளன்.
என்று எங்கோ படித்தது .

நன்றி : பி.ஏ பாட நூல்

11/08/2010

மாசுபடும் என் மொழி ?

மாசு........எங்கும்............எதிலும் மாசு.

உண்ணும் உணவில், குடிக்கும் நீரில், சுவாசிக்கும் காற்றில், இப்படி எங்கும் எதிலும்  மாசு...........


பேசும் மொழியையும் அது விட்டுவைக்கவில்லை...


இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் மொழி மாசுபடுவதை தவிர்க்க, எத்தனையோ தமிழறிஞர்கள் பெருந்தொண்டாற்றினார்கள். பட்டியலிட்டால் மாளாது.....ஆனாலும், மாசு நீட்சியை தவிர்க்கமுடியவில்லை.

தனித்தமிழ் இயக்கங்கண்ட, மறைமலை அடிகள் பெயரை, புகைவண்டி நிலையத்திற்கு பெயராக சூட்டுவதோடு நின்றுபோனது......... நமது மொழியார்வம்.

உயர்சாதி நாங்கள் என்ற வரட்டு ஆணவத்தின் மீதான காதலில், நம்மில் பலரும் வடமொழிச் சொற்களை பேச்சு வழக்கில் பயன்படுத்துகிறோம். அதை மாற்ற முயலும் முயற்சியாக சிலவற்றை இங்கே காண்போம்.


நடைமுறை வாழ்க்கையில் மாறிப்போன சில தமிழ் வார்த்தைகள்........
தமிழ் மொழி       வடமொழி                              தமிழ் மொழி        வடமொழி


சோறு                    சாதம்                                                    குழம்பு           சாம்பார்
சுவைநீர்               ரசம்                                                        வரிசை           பந்தி
நலமா?                 சவுக்கியமா?                                      மகிழ்ச்சி        சந்தோஷம்
அறிவாற்றல்     புத்திசாலித்தனம்                           விளக்கு         தீபம்
பூப்பலி                     பூஜை                                       குடமுழுக்கு     கும்பாபிஷேகம்
பிறவிப்பயன்     ஜென்ம சாபல்யம்                         வீடுபேறு     மோட்ஷம்
கணவன் மனைவி   பதியும், பாரியாளும்,            துறவறம்  சன்னியாசம்


இப்படிய எத்தனையோ.........?

அன்பிற்கு பிரியமும், குறும்புக்கு சேஷ்டையும்
அமைதிக்கு சாந்தியும், நாணத்திற்கு சங்கோஜமும்
நட்புக்கு சினேகமும் இழப்பிற்கு நஷ்டமும்
பகைக்கு விரோதமும் விருப்பத்திற்கு இஷ்டமும்
அறிவுக்கு புத்தியும். நினைவிற்கு ஞாபகமும்
நல்வாய்ப்பிற்கு அதிர்ஷ்டமும் கனவுக்குப் பதில் சொப்பணமும்

பரவலாக பயன்படுத்தப் படுகின்றன.

காற்று - வாயு இரவு - ராத்திரி
நிலா - சந்திரன் ஏனம் - பாத்திரம்
அறம் - தர்மம் வினை - கர்மா
வானம் - ஆகாயம் செய்யுள் - கவிதா

என்று தமிழாக்கம் செய்யும் அதிமேதாவிகளையும் நாம் காண்கின்றோம்.



தமிழராகிய நாம் இன்று முதல்,பைந்தமிழ் வார்த்தைகளை பயன்படுத்துவோம்.
மொழி மாசுக்கு கட்டுப்பாட்டுகள் விதிப்போம்.


" தலை போயினும் தயங்காது தமிழ்-போற்றிடத்துணிவாய்
தமிழே இனி எனதாருயிர் - தலை தூக்கிடு தோழா...."


வாழ்க நிரந்தரம், வாழ்க தமிழ் மொழி வாழிய வாழியவே
வானமளந்தானைத்தும் அளந்திடும் வண்மொழி வாழியவே
ஏழ்கடல் வைப்பினும், தன்மணம் வீசி, இசைகொண்டு வாழியவே
எங்கள் தமிழ் மொழி, எங்கள் தமிழ் மொழி, என்றென்றும் வாழியவே.

11/02/2010

கணினி வாசிக்கும் தமிழ் ....


        கணினியில் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்வதை வாசித்துக் காட்டும் மென்பொருள்களை நாம் அறிவோம். நம்மில் சிலர் அதனைப் பயன்படுத்தியிருக்கவும் கூடும்.


       கணினியில் தமிழில் தட்டச்சு செய்வதைக் கணினி தமிழிலேயே வாசித்துக் காட்டும்!. இதற்குரிய ஒரு மென்பொருளை (engine) பெங்களுரூவில் உள்ள இந்த அறிவியல் கழகத்தின் (Indian Institute of science) பேராசிரியர்.ஏ.ஜி.ராமகிருஷ்ணன் உருவாகியிருகிறார். இதன் வெள்ளோட்ட வடிவத்தை

http://mile.ee.iisc.ernet.in:8080/tts_demo

என்ற இணைய தளத்தில் பார்க்கலாம்.


நான் இதில் இரண்டுவித பிரதிகளை இட்டு சோதனை செய்து பார்த்தேன்:


1. பாரதியின் 'எடுத்த காரியம் யாவினும் வெற்றி' என்ற கவிதை
2. ஜெர்மனியில் நடைபெற உள்ள தமிழிணைய மாநாடு பற்றி நான் எழுதிய செய்திக் குறிப்பு
இந்தப் பொறி நன்றாகவே வேலை செய்கிறது. நீங்களும் சோதனை செய்து பார்க்கலாம். உங்கள் கருத்தை ramkiag@ee.iisc.ernet.in என்ற மின்னஞ்சல் மூலம் பேராசிரியருக்குத் தெரிவிக்கலாம்.

நன்றாக வேலை செய்கிறது எனினும் சிற்சில மேம்படுத்தல்கள் தேவை.


ஆங்கிலம் கலந்து எழுதினால் ஆங்கிலப் பகுதிக்ளை அது வாசிப்பதில்லை. எண்களில் அதற்குப் பிரசினைகள் இருக்கிறது.


பேராசிரியர் ஏ.ஜி.ஆர். கணினி/இணையத்தில் தமிழைச் செழுமைப்படுத்த உழைத்து வருபவர்களில் ஒருவர். உத்தமத்தின் தமிழிணைய மாநாடுகளில் கலந்து கொண்டு பங்களிப்பு செய்தவர்.


இது அவர் தமிழுக்கு அளித்துள்ள மிகப் பெரிய கொடை.


விழியிழந்தவர்களை மட்டுமல்ல, மொழி இழந்த ஒரு தலைமுறைக்கும் தமிழைக் கொண்டு செல்ல இது உதவும் என்பதால் இது இன்று அவசியம் தேவைப்படும் ஒரு தொழில்நுட்பம், அதை உங்களுக்கு தருவதில் நான் 
மகிழ்ச்சி அடைகிறேன்  .

இதை முன்பே நீங்கள் படித்து இருந்தாலும் ,இப்போது படித்திருந்தாலும் உங்கள் நண்பருக்கு தமிழின் பெருமையை உணர்த்தவும் ...

 

10/26/2010

நான் கண்ட 99 வகையான மலர்கள்...(குறிஞ்சி பாட்டிலிருந்து )

                 நமக்குத் தெரிந்தது எல்லாம் ரோஜப்பூ,மல்லிகைப் பூ.ஏன் எனில்  ஆண்கள், பெண்களுக்கு  இதைத்தான் வாங்கித்தருகிறார்கள்.அதையே தான் பெண்களும் விரும்புகிறார்கள்.நிலைமை இவ்வாறு இருக்கும் போது நாம் எப்படிச் சங்க காலத்தில் இருந்த மலர்களைப் பற்றி அறிந்திருக்க முடியும்..சங்க காலத்தில் இருந்த மலர்களைப் பற்றி நான் அறிய விரும்பினேன்.அதன் விளைவே இப்பதிவு..இதனை நீங்களும் அறிந்து கொள்ளுங்கள்…..

பத்துப் பாட்டு நூல்களுள் ஒன்று குறிஞ்சிப் பாட்டு. "ஆரிய அரசன் பிரகத்தனுக்கு தமிழ் அறிவித்தலின் பொருட்டு இப்பாட்டு கபிலரால் பாடப்பட்டது" .குறிஞ்சி நிலம் மலையும் மலை சார்ந்த இடமும் ஆகும்.இங்கு தலைவியும்,தோழியும் சுனையில் நீராடிவிட்டு மலர்களைக் கொய்கின்றனர்.அவ்வாறு பறிக்கப்படும் மலர்கள் குறிஞ்சி நிலத்தினைச் சார்ந்தவை மட்டுமல்ல.இங்கு கபிலர் அனைத்து நிலப்பூக்களையும் குறிப்பிடுகின்றார்.அவற்றில் குறிப்பிடத்தக்கது 99 வகையான மலர்கள் மட்டுமே.அவை கீழே தரப்பட்டுள்ளன...


கபிலர் கூறும் குறிஞ்சிப்பாட்டுச் செய்யுள்:


“ஒண்செங் காந்தள்,ஆம்பல்,அனிச்சம்,
  தண்கயக் குவளை,குறிஞ்சி,வெட்சி,
 செங்கொடு வேரி,தேமா,மணிச்சிகை,
 உரிதுநாறு,அவிழ்தொத்து உந்தூழ்,கூவிளம்,
 எரிபுரை,எறுழம்,சுள்ளி,கூவிரம்,
 வடவனம்,வாகை,வான்பூங் குடசம்,
எருவை,செருவிளை,மணிப்பூங் கருவிளை,
பயினி,வானி,பல்லிணர்க் குரவம்,
பசும்பிடி,வகுளம்,பல்லிணர்க் காயா,
விரிமலர் ஆவிரை,வேரல்,சூரல்,
குரீஇப் பூளை,குறுநறுங் கண்ணி,
குருகிலை,மருதம்,விரிபூங் கோங்கம்,
போங்கம்,திலகம்,தேங்கமழ் பாதிரி,
செருந்தி,அதிரல்,பெருந்தண் சண்பகம்,
கரந்தை,குளவி,கடிகமழ் கலிமாத்
தில்லை,பாலை,கல்இவர் முல்லை,
குல்லை,பிடவம்,சிருமா ரோடம்,
வாழை,வள்ளி,நீள்நறு நெய்தல்,
தாழை,தளவம்,முள்தாள் தாமரை,
ஞாழல்,மெளவல்,நறுந்தண் கொகுடி,
சேடல்,செம்மல், சிறுசெங் குரலி,
கோடல்,கைதை,கொங்குமுதிர் நறுவழை,
காஞ்சி,மணிக்குலைக் கள்கமழ் நெய்தல்,
 பாங்கர்,மராஅம்,பல்பூந் தணக்கம்,
ஈங்கை,இலவம்,தூங்குஇணர்க் கொன்றை,
அடும்பு,அமர் ஆத்தி,நெடுங்கொடி அவரை,
பகன்றை,பலாசம்,பல்பூம் பிண்டி,
வஞ்சி,பித்திகம்,சிந்து வாரம்,
தும்பை, துழாஅய்,சுடர்ப்பூந் தோன்றி,
நந்தி,நறவம்,நறும் புன்னாகம்,
பாரம்,பீரம்,பைங்குருக் கத்தி,
ஆரம்,காழ்வை,கடிஇரும் புன்னை,
நரந்தம்,நாகம்,நள்ளிருள் நாறி,
 மாஇருங் குருந்தும்,வேங்கையும் பிறவும்,
அரக்குவிரித் தன்ன பருஏர் அம் புழகுடன்,
மால்அங்கு உடைய மலிவனம் மறுகி”
இப்பாடலில் உள்ள பூக்கள்:


1. காந்தள் மலர்


2. ஆம்பல் மலர்

3. அனிச்சம் பூ


4. குவளை மலர்


5. குறிஞ்சிப் பூ

6. வெட்சிப் பூ

7. செங்கோடுவேரி மலர்


8. தேமாம் பூ

9. மணிச்சிகை(செம்மணிப்பூ)


10. உந்தூழ்(மூங்கில் பூ)


11. கூவிளம் பூ


12. எறுழம்பூ


13. சுள்ளி(மராமரப்பூ)


14. கூவிரம் பூ


15. வடவனம் பூ


16. வாகைப் பூ


17. குடசம்(வெட்பாலை)


18. எருவை(கோரைப்பூ)


19. செருவிளை(வெண்காக்கணம்)


20. கருவிளம் பூ


21. பயினிப் பூ


22. வானிப் பூ


23. குரவம் பூ


24. பசும்பிடி(பச்சிலைப்பூ)


25. வகுளம்(மகிழம்பூ)


26. காயா மலர்


27. ஆவிரைப் பூ


28. வேரல்(சிறுமூங்கில்பூ)


29. சூரல் மலர்


30. சிறுபூளைப் பூ


31. குறுநறுங்கண்ணி மலர்


32. குருகிலை(முருக்கிலை)


33. மருதம் பூ


34. கோங்கம் பூ


35. போங்கம் பூ


36. திலகம் பூ


37. பாதிரி மலர்


38. செருந்தி மலர்


39. அதிரல் பூ


40. சண்பகம் மலர்

41. கரந்தை மலர்


42. குளவி(காட்டு மல்லி)


43. மாம்பூ


44. தில்லைப்பூ


45. பாலைப்பூ


46. முல்லைப்பூ


47. கஞ்சங்குல்லை


48. பிடவம் பூ


49. செங்கருங்காலி மலர்


50. வாழைப் பூ


51. வள்ளிப் பூ


52. நெய்தல் மலர்


53. தாழைப் பூ


54. தளவம்(செம்முல்லைப் பூ)


55. தாமரை மலர்


56. ஞாழல் மலர்


57. மௌவல் பூ


58. கொகுடிப் பூ


59. சேடல்(பவளமல்லி பூ)


60. செம்மல்(சாதிப் பூ)


61. சிறுகெங்குரலி(கருந்தாமரைக் கொடிப்பூ)


62. கோடல்(வெண்காந்தள் மலர்)


63. கைதை(தாழம் பூ)


64. வழைப் பூ(சுரபுன்னை)


65. காஞ்சிப் பூ


66. கருங்குவளைப் பூ(மணிக்குலை)


67. பாங்கர் பூ




68. மரவம் பூ


69. தணக்கம் பூ


70. ஈங்கைப் பூ


71. இலவம் பூ


72. கொன்றைப் பூ


73. அடுப்பம் பூ


74. ஆத்திப் பூ


75. அவரைப் பூ


76. பகன்றைப் பூ


77. பலாசம் பூ


78. பிண்டி(அசோகம்பூ)


79. வஞ்சிப் பூ


80. பித்திகம்(பிச்சிப் பூ)


81. சிந்துவாரம்(கருநொச்சிப்பூ)


82. தும்பைப் பூ


83. துழாய்ப் பூ


84. தோன்றிப் பூ


85. நந்திப் பூ

86. நறவம்(நறைக் கொடிப்பூ)


87. புன்னாகம் பூ


88. பாரம்(பருத்திப்பூ)


89. பீரம்(பீர்கம்பூ)


90. குருக்கத்திப் பூ


91. ஆரம்(சந்தனப்பூ)


92. காழ்வைப் பூ


93. புன்னைப் பூ


94. நரந்தம்(நாரத்தம்பூ)

95. நாகப்பூ


96. நள்ளிருநாறி(இருள்வாசிப்பூ)


97. குருந்தம் பூ

98. வேங்கைப் பூ

99. புழகுப் பூ

10/19/2010

தமிழையே விரும்புவோம் ..........


         சமீபத்தில் ஒரு தோழி என்னிடம் கேட்டார் நீங்கள் ஏன் தமிழை  பற்றி மட்டும் எழுதுகிறீர்கள்...வாழ்வில் எவ்வளவோ நல்ல விசயங்கள் நிகழ்வுகள் இருக்கின்றனவே....ஏன் ஒரு நீங்கள் மட்டும் தான் தமிழரா ?  என்றும் கேட்டார். அவருடைய கேள்வியை மறு பரிசீலனை செய்யாமல் நானும் ஒத்துக்கொண்டேன்.

       அதாவது தமிழை  பற்றிதான் எழுதுவது என்ற எந்த ஒரு தீர்மானமும் எடுத்துக் கொண்டு எழுத உற்காருவதில்லை....அதே நேரத்தில் பதிவு எழுதவேண்டுமே என்று கடமைக்காகவும் எழுதுவதில்லை...ஏதாவது ஒரு தமிழை பற்றிய செய்தி நாம் படிக்கும் போது , நம்மை பாதித்து பதறவைக்கும் நேரத்தில் நமது எழுத்தை வெளிப்படுத்தும் ஒரு வடிகால் தான் பதிவுகள்! காயங்களுக்குத்தானே...மருந்து தேவை......கை குலுக்க ஓராயிரம் கைகள் இருந்தாலும்...கவலையை துடைப்பது என்னவோ சில கைகள் தானே....அவர்கள் எல்லாம் தமிழர்கள்தானே.....?
             மேலும்..... நல்ல சுகாதாரமான இடத்தை சுற்றி கோடி பேர் இருப்பார்கள்.... சாக்கடையை சுத்தம்செய்வது எல்லாரும் செய்யும் காரியமல்ல....தமிழை  பற்றி பேசுவது அதை மிகைப்படுத்துவதற்கு அல்ல....தமிழை நேசிப்பதற்காகத்தான் .....! சந்தோசங்களை மட்டும் பேசுவதும் எழுதுவதும்....உண்மையான சந்தோசமல்ல.....அது ஒரு ஓடி ஓளியும் முயற்சி....உண்மையை படித்ததில் , தெரிந்ததை எழுதுவது என் செயல்.

        ஏதாவது ஒரு சினிமா நடிகையின் அந்தரங்கத்தைப் பற்றி எழுதினால் நிறைய பேர் வந்து படிப்பார்கள்...சானியா மிர்சாவின் திருமணத்தைப் பற்றி...அக்கு வேறு ஆணிவேர் வரை அலசி ஆராய்ந்தால் கூட நிறைய பேர் படிப்பார்கள்.....ஆனால் அது ஆரோக்கியமான விசயமா? நல்ல கருத்துக்களை வித்துக்களை விதைக்கிறோமா? சிந்தித்து பாருங்கள்...அடுத்தவன் வீட்டு அந்தரங்கத்தை பற்றி விவரிக்கவும் விவாதிக்கவும் நாம் அனைவரும் நமது மூளைகளை நாய்க்குட்டி போல பழக்கி இருக்கிறோம். இந்த நிலை மாறவேண்டாமா?

           கடந்த 6 ஆம் தேதி....சட்டீஸ்காரில் மாவோயிஸ்ட்களின் கண்ணிவெடி தாக்குதலில் 75 ரிசர்வ் போலிசார்கள் பரிதாம்பாமாக உயிரிழுந்திருக்கிறார்கள். நம்மில் எத்தனை பேர்கள் இந்த செய்தியை முன்னிலைப்படுத்தி தீவிரவாத்தின் கொடுமையை மக்களுக்கு போகஸ் செய்து காட்டி இருக்கிறோம். பொழுது போவதற்காய் ஏதாவது செய்கிறோம் என்றாலும் அதில் ஒரு ஆழ்ந்த சிந்தனையை பரவவிட வேண்டாமா? நமது எழுத்துக்களை படிக்கிறவர்களை உங்களின் எண்ணோட்டம் புரட்டிப்போட வேண்டாம? சமூக பிரஞ்ஞை உள்ள ஒரு கலம்...அதை கவனமாய் கையாளவேண்டாமா.....

         மக்கள் படிக்கிறார்கள் விரும்புகிறார்கள் என்பதற்காக நமது எழுத்தின் ஓட்டத்தை மாற்றி.....கட்டுரைகளை கவர்ச்சிப்பொருளாய் ஆக்கலாமா? நடிகை நமீதாவின் ரகசிய காதல் காட்சிகள் என்று போட்டால் அதிக அளவில் அதை பார்க்க கூட்டம் வரும்...கூட்டம் வரும் என்பதால் நாம் பிரபல எழுத்தாளர் ஆகி விடுவோமா? நல்ல எழுத்தை இரண்டு பேர் படித்தால் போதும் அப்படி ஒரு கொள்கையோடு எழுத வந்துவிட்டால் நல்ல எழுத்துக்களை படிக்கும் வாசகர் கூட்டம் அதிகரிக்கும். அதை விட்டு விட்டு...பாம்பு வைத்து வித்தை காட்டும் மோடி மஸ்தான் போல கூட்டம் சேர்ப்பதில் எனக்கு விருப்பமில்லை....(அதனால் தான் என்னை பின் தொடர்பவர்களை வெளியிட விரும்பவில்லை )

          வலைப்பக்கங்கள் இலவசமாக கூகுள் வழங்குகிறது.....வாய்ப்பு தரப்படாத.... திறமையை வெளிக்காட்டமுடியாத....அத்தனை எழுத்தாளர்கள்...கவிஞர்கள்...சமூக பிரஞ்ஞை உள்ள சக்தி மிகுந்த அனைவரும்....ஒன்று கூடி தேரிழிப்போம்.... நல்ல ஒரு தமிழ் சமுதாயம் பிறக்க...விதையாய் இருப்போம்.....! நம்மால் முடிந்த அளவிற்கு.....வலுவான ஒரு சமுதாயத்தில்  தமிழை அங்கமாக்குவோம்!

"வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன்! வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன்! தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன்! 

குறிப்பு  : தோழிக்கு நான் சமூகம் மீது அக்கறை கொண்டவன்தான் , சமூகம் இல்லாமல் என் தமிழ் இல்லை மிக விரைவில் சமூக சிந்தனைகளை எனது பார்வையில் புதிய வலைப்பூவில் காண ஆவலுடன் இருக்கவும் அன்புடன் வேண்டும் உங்கள் தோழர் ........


    

9/16/2010

அனுபவம் அவசியம் தேவை -புத்திசாலி தமிழனுக்கு .


அனுபவம் அனைவருக்கும்
அவசியம் தேவை ஏனெனில்
அது வாழ்க்கைக்கு அத்தியாவசியமான ஒன்று ;
அது வாழ்க்கை அர்த்தத்தை புரியவைக்கும்;
நிபுணர் ஆக்கும் ; பயத்தை போக்கும்;
பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் ;
முக்கியமாக பிரமிக்கத்தக்க வகையில்
உபயோகமாகி புத்திசாலி என பிரபலப்படுத்தும் .
சரித்திரத்தில் நல்ல அனுபவசாலிகள்
தங்களின் லட்சியங்களை
சிரமம் இல்லாமல் முழுதிருப்தியுடன்
நினைத்தபடி அடைந்துள்ளனர்
இதில் சந்தேகமேயில்லை .
அதனால் தான்
புத்திசாலி தமிழனுக்கு அனுபவம் 
அவசியம் தேவை எனவே ,
அனைத்துத்தமிழர்களும் கரம் சேர்த்து சபதம் ஏற்ப்போம் ;
அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவேம்
நிச்சயம் உயர்வோம் புத்திசாலிகளாக .

9/15/2010

திருக்குறள் திராவிட நூலென்பதால் தான் இப்படியா ?.


திருக்குறளின் பேரால் திராவிட மக்களின் பெருமையை,திராவிடரல்லாத மக்களுக்கு உணரச்செய்ய முடிகிறது ...
எவ்வளவோ ஆபாசமான நூல்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள பெருமையில் 100ல் 1 பங்கு பெருமைகூட நமது திருக்குறளுக்குக் கொடுப்பதில்லை ...
திருக்குறளுக்கு அத்தகைய பெருமையில்லாமல் போனதற்குக் காரணம் .இது ஓர் திராவிட நூல் என்பது தான் ...
இன்ன காரியங்களால் இன்ன வாஸ்துக்கு இன்ன குணம் ஏற்படும் என்று கூறுவதுதான் விஞ்ஞானம்
.விஞ்ஞானத்திற்கு ஏற்ற கருத்து தான் பிரத்யக்ஷ அனுபவத்திற்கும் பின்விளைவுக்கும் ஏற்றதாகஅமையக்கூடியது .தத்துவார்த்தம் கூறத்தேவையில்லாத கருத்துத்தான் விஞ்ஞானத்திற்கேற்ற கருத்தாகும் .
தத்துவார்த்தம் பேசுவதெல்லாம் பெரிதும் தம்முடைய சாமர்த்தியத்தைக்காட்டிக்
கொள்ளச் சிலர் செய்யும்பித்தலாட்டம் என்றுதான் நான்
கூறுவேன்.
திருக்குறளில் அத்தகைய த்த்துவார்த்தப் பித்தலாட்டத்திற்கு இடமேயில்லை...
அதில் கூறப்பட்டுள்ள கொள்கைகளை நாம் பொது நெறியாகக் கொள்வது அவசியம் ...
நமக்கு வேண்டிய முழு அறிவையும் கொடுக்கக்கூடியதாக ஒரு நூல் வேண்டுமானால் அது திருக்குறள் தான் என்பதை நீங்கள் தெளிவாக உணருங்கள் 
.உணர்வது மட்டும்மல்ல,நன்றாக மனத்தில் பதிய வையுங்கள் ...
திருக்குறள் நூல் ஒன்றே போதும் இந்நாட்டு மக்களுக்கெல்லாம் அறிவை உண்டாக்க ...
100 ரூபாய்க்கும் ,200 ரூபாய்க்கும் 'டெக்ஸ்ட்' புத்தகங்கள் வாங்கிப் படித்து
மடையர்களாவதைவிட 3 அணாவுக்கு திருக்குறள் வாங்கிப் படித்து அறிவாளியாவது மேல் என்றுதான் கூறுவேன் .திருக்குறள் ஒன்றே போதும் 
.உனக்கு அறிவு உண்டாக்க ;ஒழுக்கத்தைக்கற்பித்துக் கொடுக்க;உலகஞானம் மேற்பட.அப்படிப்பட்ட குறளைத்தான் நாம் இதுவரைஅலட்சியப்படுத்தி வந்திருக்கின்றோம்...அனைவரும் திருக்குறளைப்படித்து அறிவுள்ள
மக்களாகி இன்புற்று வாழவேண்டும் என்பது தான் எனது ஆசை...........
சென்னை  திருவள்ளுவர் கழகம் சார்பில் 14.3.48-ல் நடைபெற்ற 3வது
திருவள்ளுவர் மாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அருமைவாய்ந்த சொற்பொழிவிலிருந்து ... சில துளிகள் ... அவ்வளவே.

9/06/2010

அவசியமற்ற மொழி கலப்பு தமிழில்

         தமிழில் ஏராளமான வட மொழி சொற்கள் கலந்து மக்களிடையே புழக்கத்தில் இருந்து வருகின்றன.பல நூற்றாண்டு காலமாக தமிழ் மீது வட மொழி திணிப்பு நடந்தேறி வருவதால் தமிழ்ச்சொல் எது வடமொழிச்சொல் எது என பிரித்தறிவதே கடினமான ஒன்றாக உள்ளது.இதனால் சமத்கிருத சொற்களின்றி தமிழால் இயங்க முடியாது என்பது போன்று ஒரு பொய்த்தோற்றம் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது.ஆனால் உண்மை அதுவன்று.
      சொல்வளமும் இலக்கிய வளமும் மிக்க தமிழால் தனித்து இயங்க முடியும்.'சீரிளமை திறம்'மிகுந்த தமிழுக்கு ஊன்றுகோல் எதுவும் தேவையில்லை. .உண்மையில் தமிழ்,தெலுங்கு போன்ற மொழிகளின் துணையின்றி சமத்கிருதம்தான் இயங்க முடியாது.ஏனென்றால் அது பேச்சு வழக்கொழிந்து இறந்து பட்ட மொழி.ஆனால் நம் தாய்த்தமிழோ இன்றும் வாழும் மொழி.கோடிக்கணக்கான மக்களால் பேசப்படும் தமிழ் என்றும் அழியாது.தமிழ்த்தாயின் புதல்வர்கள் அதை அழியவும் விடமாட்டார்கள். வடமொழிச்சொற்கள் தமிழில் இருந்து அப்புறப்படுத்த பட வேண்டும் என்று நாம் கோருவது மொழி வெறியின் பாற்பட்டது என குற்றச்சாட்டு எழலாம்.
       இல்லை,நிச்சயமாக இல்லை.மொழிப்பற்று, இனத்தின் மீது கொண்ட பற்று காரணமாகவே நாம் இவ்வாறு கோருகிறோம்.மொழி என்பது வெறுமனே கருத்துக்களை பரிமாறி கொள்வதற்கான கருவி மட்டுமல்ல.அம்மொழி பேசும் மக்களின் வரலாற்று மற்றும் பண்பாட்டு பெட்டகம் அது.ஒரு இனம் எத்தகைய பண்பாடு,கலாச்சாரத்தை பின்பற்றுகிறது என்பது அவ்வினம் பேசும் மொழியை பொறுத்தே அமைகிறது.ஒரு மொழியின் மீது பிறிதொரு மொழியின் தாக்கம் என்பது தவிர்க்க முடியாத வகையில் பண்பாட்டு கலாச்சார விழுமியங்களையும் சேர்த்தே கொண்டு வருகிறது.அந்த அடிப்படையில் பார்க்கும்போது வடமொழியின் தாக்கம் தமிழ் சமூகத்திற்கு மிகுந்த தீங்கு இழைத்திருக்கிறது. ஜோஷ்யம், ஜாதகம்.அதிர்ஷ்டம்,துரதிர்ஷ்டம்,அஷ்டமி, நவமி,வாஸ்து இந்த சொற்களை பாருங்கள் அத்தனையும் வடமொழி.அத்தனையும் மூடநம்பிக்கைகள் எனவே வட மொழி என்பது அழுக்குகளை தமிழ் மீது அள்ளி இறைத்து சென்ற சூறைக்காற்று. இன்று நம் முன் உள்ள பணி அந்த அழுக்குகளை நீக்கி தாய்த்தமிழை தூய்மைப் படுத்துவதே.வட மொழி எதிர்ப்புக்கு தொல்காப்பியர் மறைமலை அடிகள் பேராசிரியர்.ம.நன்னன் என நீண்ட பாரம்பரியம் உண்டு.அந்த வரிசையில் நாமும் இணைவோம் பி.கு.ஜோஷ்யம் வாஸ்து இவையெல்லாம் அறிவியலின் பாற்பட்டது,அவற்றை பின்பற்றலாம் என்றொரு வாதம் எழலாம்.இல்லை,
அவை முற்றிலும் அறிவியலுக்கு முரணானது என்று நிறுவும் வகையில் தனிப்பதிவு ஒன்றை விரைவில் இடவிருக்கிறோம்.நன்றி மீண்டும் சந்திப்போம். .