தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................
சினிமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சினிமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

2/09/2013

விஸ்வரூபம்



நல்ல சினிமாவை உடனே பார்க்க வேண்டும், அது கொடுக்கும் அனுபவத்தில் மூழ்கி திளைக்க வேண்டும் என என்னும் ரசிகர் கூட்டம் தமிழ்நாட்டில் ரொம்பவே அதிகம்.

அவரின் இந்த புதிய படைப்பு  நிறைய சாதனைகள், கொஞ்சம் சர்ச்சைகள், சந்தேகங்கள் என கலந்து கட்டிய ஒரு பொட்டலமாய் நமக்கு  வழங்கபட்டிருக்கிறது. வெறும் வாயிற்கு அவல் கிடைத்தாலே சந்தோஷப்படுவான் ரசிகன்...  இது உலக தரத்தில் தயாரிக்கப்பட்ட செமத்தியான தீனி. முதல் காட்சியில் இருந்தே அதன் சுவையில் மூழ்க ஆரம்பித்து இறுதி வரைக்கும்  அதே ருசியுடன்  விருந்தை பரிமாறியிருக்கிறார் இயக்குனர் கமல். 

கொஞ்சம் ஹை லெவல் திருடன் போலீஸ் விளையாட்டு.   வில்லன்கள்  கூட்டத்தில் ஒரு உளவாளி கலந்து அவர்களின் சதி திட்டங்களை முறியடிக்கும் கதைதான். ஆனால் அல் கொய்தா, தாலிபான் தீவிரவாதிகள் , நியூயார்க்   என  அதற்க்கு ஹை டெக்  வடிவம் கொடுத்து... அந்த வடிவத்திற்கு உண்டான நியாயமான களங்களை காட்சிகளில்... கூர்மையான வசனங்களில் விவரித்திருப்பதுதான் கமலின் திறமை. 

கதக் நடன கலைஞனாக கமலின் நடிப்பு நிச்சயம் பிரமிப்பான விஷயம்தான்.. முக பாவங்கள்... வார்த்தை பிரயோகங்கள்.... உடல் மொழி.. நடை என எல்லாவற்றிலும் அந்த பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.  ஆனால்.... ஆப்கான் மற்றும் ரா அதிகாரி போர்ஷன்களில் பெரிய தனித்துவம்   என்பதையும் குறிப்பிட  வேண்டும்.    

மிக தரமான ஒளிப்பதிவு மற்றும்  ஒலிப்பதிவு ... சிறப்பான லொக்கேஷன்கள்...நேர்த்தியான  காட்சியமைப்புகள்...  மிக மெச்சூர்டான.. ரசிக்க வைக்கும் வசனங்கள்..  படம் பார்க்கும் போது  ஏன் எதற்கு எப்படி என பல  கேள்விகள் முளைத்துக்கொண்டே  இருக்கின்றன.  இருந்தாலும்   அதை எல்லாம் மறக்க செய்யும் ஒரு மெஸ்மரிஸம்....ஒரு மேஜிக்... படத்தில்   எங்கேயோ ஒளிந்து கொண்டு படம் முழுதும் வியாபித்திருக்கிறது.
என் சிறு மூளைக்கு  எட்டிய வரை.. கமல் இந்த படத்தை நேரடியாக ஆங்கிலத்தில் எடுத்திருக்கலாம். சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட சமரசம் செய்து கொள்ளாமல் இன்னமும் படத்தில் பர்பெக்ஷன் கொண்டு வந்திருக்கலாம். (உதாரணம்.. ஆப்கான் தீவரவாதிகள் தமிழ் பேசுவது...  நம்மூரில் அவர்கள் தமிழ் பேசினாலும்.... "இன்னாபா ஆப்கான்காரன் தமிழ் பேசுறான் என கிண்டலடிப்பார்கள்.. அவர்கள் உருது பேசினாலும்... "என்னப்பா, தமிழ் படத்திலே இப்படி இந்தி பேசுறாங்க" எனவும் நம் மக்கள் வாருவார்கள் ) அதே போல... இரண்டாம் பாகம் இருக்கிறது என்பதற்காய்... நிறைய விஷயங்களுக்கு பதிலே சொல்லாமல் படத்தை முடித்திருப்பதும் ஒரு ஏமாற்றம்      

உண்மையான இஸ்லாமியனும் , இஸ்லாம் மதமும் வன்முறையே ஆதரிப்பது இல்லை. அவர்கள் தாலிபான்கள், அல் கொய்தா அமைப்பினரின் ரத்தம் சிந்தும் போராட்டங்களை வெறுக்கவே செய்கின்றனர். இந்த படமும்   அல் கொய்தாவிற்க்கும் தாலிபான்களுக்கும் எதிரான படம்தான் . இஸ்லாத்திற்கு எதிரானது அல்ல. இஸ்லாம் மதம் பற்றியும்...இந்திய  இஸ்லாமியர் பற்றியும் எந்த கருத்துக்களோ... விமர்சனங்களோ இல்லை.   இதில் வில்லன்களாய் சித்திரிக்கபட்டிருப்பவர்கள் அல்  கொய்தா  அமைப்பினரே தவிர இஸ்லாமிய மதம் அல்ல. இந்த படம் சட்டபூர்வமாய்  பார்ப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டு, படம் பார்த்த பின்னர்,   வெகுஜனம், "இதற்காகவா இத்தனை ஆர்ப்பாட்டம்" என நிச்சயம்  நினைக்கும் .... போராட்டத்தை பற்றி மட்டுமல்ல.... படத்தை பற்றியும் கூட...   

எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும், டெக்னிக்கல் விஷயங்கள், தரமான மேகிங் போன்றவற்றுக்காய் விஸ்வரூபம் தமிழில் தவிர்க்க முடியாத ஒரு முக்கியமான படம் 

12/20/2012

கும்கி



விமர்சனம் என்பது தனிப்பட்ட பார்வையை பொதுப்பார்வையாக்க முயலும் ஒரு யுத்தி என்பதோடு மட்டுமில்லாமல் சினிமாவை தங்களின் உச்ச கட்ட தொழில்நுட்ப அறிவினை எல்லாம் பயன்படுத்தி பார்க்கும் களமாகவும் ஒரு சிலர் இங்கே நினைக்கிறார்கள்.


மேதாவிகள் உலகம் எப்போதும் உலக தரத்தில் இருக்கும் எல்லா விசயங்களையும் ஒப்பிட்டுப் பார்க்க நினைக்கிறது. துரத்தும் வாழ்க்கையின் ஏதோ ஒரு ஓய்வு தருணத்தில் சினிமாவை பார்க்கச் செல்லும் என்னைப் போன்ற சாமானியர்கள் சினிமாவை சினிமாவாக வாய் பிளந்து பார்த்து விட்டு அதை எடுக்க பிரயாசைப் பட்டிருக்கும் அந்த படக்குழுவினரின் உழைப்பை கண்டு வியக்கவும் செய்கிறோம். மிக மோசமாய் அரைத்த மாவையே அரைத்து பார்வையாளனை ஏமாற்றும் ஒரு சில படங்களைக் கண்டு நாம் அதிருப்தியுற்றாலும், தமிழ் சினிமாவில் வாழ்வியலையும் எதார்த்தத்தையும் பேசும் படங்களை சினிமாவோடு ஒன்றிப்போய் ரசிக்கும் நாங்கள்..., எங்களின் சூப்பர் ஹீரோக்கள் நிகழ்த்தும் அதிரடி சாகசஙகளையும் கை தட்டி விசிலடித்து ரசிப்பதிலும் யாதொரு குறையும் வைப்பதில்லை.

கொம்பன் என்னும் காட்டு யானை ஆதிக்காடு என்னும் ஊரில் இருக்கும் விளை நிலங்களில் அறுவடை செய்வதற்கு முன்பாக வந்து அட்டூழியம் செய்கிறது. மனிதர்களைக் கொன்று விடுகிறது. இந்தக் கொம்பனை விரட்ட காட்டு இலாகா துறை எந்த ஒரு உதவியும் செய்யாமல், தலைமுறை தலைமுறையாய் தங்களின் பழக்க வழக்கங்களை மாற்றாமல் வாழும் பழங்குடியினரை அந்த இடத்தை விட்டு வெளியேறி வேறு இடத்தில் சென்று தங்கிக் கொள்ளுங்கள் என்று நிர்ப்பந்தம் செய்ய, அதை நிராகரித்து விட்டு.. காட்டு யானை கொம்பனை விரட்ட ஒரு கும்கி யானை கொண்டு வர தீர்மானிக்கிறது அந்த ஆதிக்காடு என்னும் கிராமம்.

கும்கி யானைக்கு பதிலாக பொம்மனின் கோயில் யானை ஊருக்குள் சூழ்நிலையால் வந்து விட, பொம்மனுக்கும் ஊர் தலைவரின் மகளான அல்லிக்கும் மலரும் அழகான காதலைத்தான்... இயக்குனர் பிரபு சாலமன் கதையின் கருவாக்கி இருக்கிறார். கதைக்கான களம் அட்டகாசமானது, சமீபத்திய தமிழ் சினிமாவுக்கு மிக, மிக புதியது.

மீன் குஞ்சுக்கு நீச்சல் கற்றுக் கொடுக்க வேண்டியதில்லை என்றாலும் முட்டையிலிருந்து வெளியே வரும் மீன் குஞ்சு முதன் முதலாய் நீரில் அடித்து நீந்தி அங்கும் அங்கும் அனுபவமின்றி அலை பாய்கையில் என்ன ஒரு பதட்டம் இருக்குமோ, அதே பதட்டத்தை விக்ரம் பிரபு கொண்டிருப்பதை நம்மால் உணர முடிகிறது, மற்றபடி... சரியான பாதையில் அவர் பயணிக்கும் பட்சத்தில் எதிர்காலத்தில் அவருக்கான வாய்ப்புகள் பிரகாசமாய் இருக்கும் என்பதில் யாதொரு மாற்றமும் இல்லை.

காதலை மையப்படுத்தி வெளிவரும் திரைப்படங்களில் வரும் கதாநாயகிகளை அந்த திரைப்படத்தை பார்க்கும் அத்தனை பேரும் மானசீகமாக காதலிக்க வேண்டும் என்ற ஒரு நியதியை ஏற்படுத்துவது வெற்றிக்கரமான ஒரு இயக்குனரின் வேலை. இந்த வேலையை கனகச்சிதமாக நிறைவேற்றி இருக்கும் பிரபு சாலமன் சாருக்கு ஒரு " ஓ.. "போட்டே ஆகவேண்டும். கதாநாயகி லட்சுமி மேனனை வைத்துக் கொண்டு படத்தில் அவர் நடத்தி இருப்பது சர்வ நிச்சமயாய் ஒர் அல்லி தர்பார்தான்...!

ஆதிவாசிப் பெண்ணாய் வந்து அதுவும் முதல் படத்திலேயே (சுந்தர பாண்டியன் முன்னாடியே ரிலீஸ் ஆனது வேற விசயம்....) க்ளோசப் ஷாட்களில் எல்லாம் எல்லா விதமான முகபாவங்களையும் நேர்த்தியாய் கொண்டு வரும் லட்சுமி மேனன் அட்டகாசமான தேர்வு..! காதலுக்காய் கோயில் யானையை கும்பி யானையாக்க பொம்மன் பிராயசைப்படும் இடங்களில்....நமக்கே சீட்டில் இருந்து எழுந்து...." பார்கே.....பார்கே...மாணிக்கம் முன்னால போ..." என்று கத்தவேண்டும் என்று தோன்றுகிறது..! காட்டு யானை கொம்பனை கோயில் யானை மாணிக்கம் எப்படி விரட்டப் போகிறது....என்ற ஒரு டென்சனை நமக்குள் ஏற்படுத்தி விட்டு.. கூலாக காடு, மலை, அருவி, சுனை, விளை நிலங்கள் என்று பச்சை பசேலென்று திரைப்படம் நகர்ந்து கொண்டே இருக்கிறது... !

தம்பி ராமையா இந்தப்படத்தில் நகைச்சுவையில் பிரித்து மேய்ந்திருக்கிறார் (நல்ல கவனிங்க...பிரிச்சு மேஞ்சுருக்காரு...). ஆங்காங்கே விமர்சனம் எழுதிய சிலர் தம்பி ராமையாவை ஓவர் டோஸ் என்றெல்லாம் எழுதி இருந்தார்கள்...! அது எந்தமாதிரியான பார்வை என்று தெரியவில்லை...ஆனால்... கதையோடு பொருந்தி வரும் அவரின் பாத்திரமும் அவரின் நகைச்சுவைகளும் மிகப்பிரமாதம்...! இரட்டை அர்த்த வசனங்களை அதிகம் அவர் பேசாமல் சூழலை மையப்படுத்தியே பேசி நம்மை சிரிக்க வைப்பது அழகு.....

மாணிக்கத்திற்கு மதம் பிடித்து விடும் இடத்தில், யாருமே எதிர்பாராமல் கொம்பன் என்ட்ரி...ஆவது கிளாஸ்....!!! கொம்பன், தனது பாகனான பொம்மனை (விக்ரம் பிரபு) அடிப்பதை பொறுக்க முடியாத மாணிக்கம் சீறிப்பாய்ந்து கொம்பனை தாக்க....

இரண்டு யானைகளுக்கும் இடையே நடக்கும் சண்டையே படத்தின் க்ளைமாக்ஸாகிப் போகிறது. கிராபிக்ஸ் காட்சிகளில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம் என்று நிறைய தொழில் நுட்ப புலிகள் கடுமையாய் இயக்குனரை விமர்சித்திருக்கிறார்கள்...

இயன்ற வரையில் கிராபிக்ஸ் காட்சியில் யானைகளின் சண்டையை இயக்குனர் காட்ட முயன்றிருக்கிறார் என்றுதான் நான் சொல்வேன். ஒரு திரைப்படம் பார்க்கும் போது முழுக்க முழுக்க படக்குழுவினரடமே எல்லாவற்றையும் எதிர்பார்க்காமல் கொஞ்சம் நமது கற்பனைக்கும் இடம் கொடுத்து காட்சிகளை விவரித்துப் பார்க்க வேண்டும்....! நான் சொல்வது கொஞ்சம் முரணாகக் கூட உங்களுக்குத் தோன்றலாம்...!

திரையில் ஒரு கதை, களம், காட்சிகள், கதாநாயகி, கதாநாயகன் என்று காட்சிப்படுத்துவது இயக்குனரின் வேலையாகிறது என்றாலும் கும்கி மாதிரி திரைப்படங்களைப் பற்றி தனியே அமர்ந்து யோசித்து, கற்பனையில் ஊறி, ரசிக்க நிறைய விசயங்கள் இருக்கிறது. தகப்பனின் நம்பிக்கையை உடைக்க விரும்பாத அல்லியும், மதம் பிடித்தது உனக்கு இல்லை மாணிக்கம், எனக்குதான் என்று தனது மாமாவையும், நண்பனையும், மாணிக்கம் என்ற யானையையும் கடைசியில் இழந்து புலம்பும் இடத்தில் விக்ரம் பிரபு....நடிப்பில் பவுண்டரி அடித்திருக்கிறார். முதல் படம் என்றாலும் அவருக்கு பின்புலத்தில் அவரது குடும்பமே இருந்திருக்கிறது என்பது கதை தேர்வில் மட்டுமில்லாமல், இசையிலும், பாடல்களிலும் தெளிவாகவே தெரிகிறது.

பாடல்களில் இமான்...பட்டையை கிளப்பி இருக்கிறார் என்று நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.. அல்போன்ஸ் குரலில் நீ எப்போ புள்ள சொல்லப் போற...என்று காதலியின் பின்னாலேயே காதலைச் சொல்ல ஏங்கித் திரியும் யுகபாரதியின் (யுகபாரதிதானே...?!) வரிகளுக்கு இமான் போட்டிருக்கும் ட்யூன் படம் பார்த்து முடிந்த பின்பும் மனதுக்குள் அழுது கொண்டேதான் இருக்கிறது.

இயக்குனருக்குள் பெரும் சோகம் ஏதோ ஒன்று இருக்க வேண்டும் அல்லது வாழ்க்கைப் பற்றிய நிலையாமையை அவர் தெளிவாய் விளங்கி இருக்க வேண்டும். முந்தைய படமான மைனாவிலும் ஒரு மாதிரியான சூழலில் தான் படத்தை முடித்திருப்பார். கும்கியிலும் கூட.. இந்தப் பக்கம் மாணிக்கம் யானை, கும்கி யானையை கொன்று விட்டு தனது எஜமானரைக் காப்பற்றிய திருப்தியில் இறந்து கிடக்க, தம்பி ராமையாவும், விக்ரம் பிரபுவின் நண்பராய் நடித்து இருப்பவரும் இறந்து கிடக்க...

தனது மகளின் காதலை புரிந்து கொண்டாலும் தனது பாரம்பரியம் கெட்டுப் போய்விடுமே என்பதால் இறுக்கமாய் உள்ளுக்குள் அழும் ஊர்த்தலைவரும், அப்பாவின் பேச்சையும் நம்பிக்கையையும் மீற முடியாமல் காதலை உள்ளுக்குள் தேக்கிக் கொண்டு கதறும் லட்சுமி மேனன் ஒரு புறமும்...

தன் மீது ஊர் வைத்திருக்கும் நம்பிக்கையை உடைத்து விடக்கூடது என்ற உணர்வில் தான் இழந்து போன உறவுகளுக்காக அழுது கொண்டு...விக்ரம் பிரபு அந்த கிராமத்தை விட்டும் நடக்க...

எ...பிலிம் பை பிரபு சாலமன் என்று படம் முடிந்து விடுகிறது. கதாநாயகியும் கதாநாயகனும் சேர்ந்திருக்க கூடாதா என்ற ஒரு ஏக்கத்தை நமக்கு கொடுக்க வேண்டும் என்ற டைரக்டரின் எண்ணம் இங்கே மெளனமாய் வெற்றி பெறுகிறது.

தமிழ் சினிமா இயக்குனர்களை வழக்கமான கதைகளை விட்டு நகர்ந்து வெவ்வேறு களம் நோக்கி சிறகடிக்க வைக்க கும்கி போன்ற திரைப்படங்கள் உதவக்கூடும்....!

நன்றி : நண்பரே

9/29/2012

சுந்தர பாண்டியன் - சினிமா விமர்சனம்




நான் படம் பார்க்க போனதையே ஒரு படமா எடுக்கலாம் போல. இன்னைக்கு பாத்து என்னை

படம் பாக்க விடாம விதி இடைஞ்சல் செய்ய அதை தாண்டி வந்து சிறிது குறைபாடோட

படத்தை பார்த்தேன்.


படத்திற்குள் வருவோம். இந்தப் படமும் சுப்ரமணியபுரம், நாடோடிகள், போராளி வரிசையில்

நண்பர்களைப் பற்றியது தான். இந்த ஆண்டு இதுவரை காமெடி படங்கள் ஹிட்டாகி வந்த போது

நல்ல பரபரப்பான இந்தபடம் சிறந்த என்டர்டெயின்மண்ட் படமாக அமைந்துள்ளது. விளம்பரம்

குறைவு என்பது திரையரங்கிலேயே தெரிந்தது. (இப்போ பண்ணரங்கா)

எல்லோரையும் எல்லாத்தையும் பாசிட்டிவாகவே நினைக்கும், நண்பர்களுக்காக எதுவும் செய்யத்

துணிந்த ஹீரோவின் கதை இது. நண்பனின் காதலுக்காக ஹீரோயினிடம் தூது போகிறார்

சசிகுமார். போன இடத்தில் ஹீரோயின் சசியையே காதலிப்பதாக சொல்ல அவரும் ஏற்றுக்

கொள்கிறார்.

ஹீரோயினுக்காக சண்டை போடப் போய் விபத்தாக ஒரு கொலை நடந்து விடுகிறது.

கொலைப்பழி சசியின் மேல். காதல் விவகாரம் ஹீரோயின் வீட்டுக்கு தெரிந்து அவசர

அவசரமாக மற்றொருவருடன் திருமண ஏற்பாடு நடக்கிறது. இவ்வளவையும் சமாளித்து

ஹீரோவும் ஹீரோயினும் இணைந்தார்களா என்பதே படத்தின் தோராயமான கதை.

நண்பனின் காதலுக்கு ஜடியா கொடுத்து அதற்காக விதவிதமான முறையில் பேருந்தில் ஏறும்

போது தியேட்டர் கலகலக்கிறது.

ஹீரோயின் கும்கி படத்திற்கான ஆடியோ வெளியீட்டில் பார்த்த போது சுமாரான பெண்ணாகவே

தெரிந்தார். ஆனால் ஸ்கிரீன் பிரசன்ஸ் அருமையாக இருக்கிறது. அந்த அம்மை தழும்பை

இயல்பாக விட்டிருப்பதும் ரசிக்க வைக்கிறது. நல்ல எதிர்காலம் இருக்கிறது. பக்கத்து வீட்டு

பெண்ணைப் போன்ற அழகு தான் கவர்கிறது.

சூரி படத்தில் சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். இடைவேளைக்கு பிறகு திரைக்கதையின்

தேவை கருதி இவரின் பங்களிப்பு குறைவாகவே இருக்கிறது. ஆனால் முன்பாதியை குத்தகைக்கு

எடுத்து கலாய்க்கிறார்.

விஜய் சேதுபதி தனியாக பல படங்களில் கதாநாயகனாக நடித்து கொண்டிருக்கும் போது இதில்

எப்படி ஒரு சாதாரண கதாபாத்திரத்தில் நடித்தார் என்று ஆச்சரியமாக இருக்கிறது.

படத்தின் வெற்றி முக்கியமான விஷயங்களில் ஒன்று படத்தின் வசனம் தான். இறுதியில்

நண்பன் குத்தினால் சாகும் போது கூட காட்டி கொடுக்காதது தான் நட்பு, இது போல் பல.

பாடல்களில் ஏற்கனவே கேட்காததால் வரிகள் நினைவுக்கு வரவில்லை. ஆனால் படத்தில் வரும்

இரண்டு மாண்டேஜ் பாடல்கள் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது. இனிமேல் தான் ஹிட்டாகும்

என்று நினைக்கிறேன்.

சுப்ரமணியபுரத்திலிருந்து நண்பனின் துரோகம், நாடோடிகளில் இருந்து நண்பனின் நண்பன்

எனக்கும் நண்பனே என்ற கான்செப்ட், தூங்கா நகரத்திலிருந்து கிளைமாக்ஸ் என பல

படங்களிலிருந்து எடுக்கப்பட்டிருந்தாலும் பார்ப்பதற்கு வலிந்து திணித்தது போல் இல்லாமல்

இயல்பாக இருக்கிறது.

படம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

குடும்பத்துடன் பார்க்க வேண்டிய திரைப்படம்.  சில குறைகள் படத்தில் இருந்தாலும் அவற்றை

குறிப்பிட்டு சொல்வது எல்லாம் தேவையில்லாத ஒன்று.

11/01/2011

எனது பார்வையில் எழாம் அறிவு

      சென்ற இருநாட்களுக்கு முன்பு கோவையில் உள்ள KG திரையரங்கில் படம் பார்க்க சாதரண தமிழனாய் அமர்ந்து இருந்தேன் ,எனக்கு பிடித்த படங்களில் கண்டிப்பாக இருக்கும் என்பதை தெரிவித்து இந்த பதிவை தொடர்கிறேன்.



தமிழனின் வீரம் குறித்து அவர் பேசும் வசனங்களுக்கு தியேட்டர் அதிர்கிறது. 'ஒன்பது நாடுகள் சேர்ந்து ஒரு தமிழனை தாக்குறது வீரம் இல்ல. இலங்கையில் நடந்தது துரோகம். நிச்சயம் திருப்பி அடிக்கணும்' என்று சீறும் போது தமிழனின் டி.என்.ஏக்கள் அத்தனையும் தன்னை ரீசார்ஜ் செய்து கொள்ளும். இப்படி ஒரு கதைக்காகவும் வசனங்களுக்காகவும் கோடிகளை அள்ளி இறைத்த தயாரிப்பாளக்கும் மனசார பாராட்டுகள்

படத்தின் நிறை குறைகளை அலசிப் பார்ப்பதற்கு முன்… ஏழாம் அறிவு படத்தில்… பக்கத்து நாட்டுல என்ன நடந்தது, வீரம் வீரம் என்று சொல்லி என்ன செய்தோம்… கடைசியாக எல்லோரும் செத்தது தானே மிச்சம் என்று ஸ்ருதி சொல்ல… வீரத்துக்கும் துரோகத்துக்கும் வித்தியாசம் இருக்கு… ஒரு நாட்டோடு ஒன்பது நாடுகள் மோதுவது வீரமல்ல, துரோகம்! என்று சூர்யா பேசும் வசனம் இதயத்தில் இடியாய் பாய்கிறது. இந்த வசனத்தை தைரியமாக ்வோடுஉணர படத்தில் வைத்த இயக்குனர்க்கு பாரட்டுக்கள்
படத்திற்கு வருவோம்… தற்காப்புக் கலையான குங்ஃபூவில் சிறந்து விளங்குவது சீனா. இந்த கலையை சீன மக்களுக்கு கற்றுக் கொடுத்தவர் புத்த மதத்தை தழுவிய போதி தர்மர் என்பவர். இதில் ஆச்சரியம் என்ன என்றால் போதிதர்மர் ஒரு தமிழர்.
பாரம்பரிய கலைகளை நாம் மறந்துவிட்டோம்… ஆனால் ஒரு தமிழன் கற்றுக்கொடுத்த கலை அறிவை வைத்தே தமிழர்களுக்கு ஆப்பு வைக்க துணிந்து விட்டான் சீனாக்காரன்… இந்த சிக்கலை எப்படி சமாளிக்கபோகிறோம் என்ற கற்பனைக் கலவையே ஏழாம் அறிவு.
கி.பி 6ஆம் நூற்றாண்டில் துவங்குகிறது கதை. பல்லவர்கள் காலத்தில் தான் தென்னிந்தியாவில் புத்த மதமும் தழைத்தோங்கியது. தென் இந்தியாவின் மிகப்பெரிய சாம்ராஜ்யமான பல்லவ வம்சத்தை சேர்ந்தவர் ‘போதி தர்மர்’ (போதிதர்மராக அறிமுகமாகிறார் சூர்யா). அச்சமயத்தில் புத்த மதத்தை தழுவிய போதி தர்மர், மகாயான புத்த மதத்தையும் கலை, மருத்துவம், எதிரில் இருப்பவரை தன் வயப்படுத்தும் வர்மக்கலை போன்ற கலைகளை பரப்புவதற்காக சீனாவிற்கு பயணம் மேற்கொள்கிறார் போதி தர்மர்.
போதிதர்மர் சீனா சென்றிருந்த நேரம், சீனா பயங்கரமான தொற்று வியாதியால் பாதிக்கப்படுகிறது. அதில் இருந்து சீன மக்களை காப்பாற்றுகிறது போதிதர்மரின் மருத்துவம். இதனால் அப்பகுதி மக்களால் தெய்வமாகவே வணங்கப்படுகிறார் போதிதர்மர். அப்பகுதி மக்கள் எதிரிகளால் தாக்கப்படும் போதும் தன் வர்மக் கலைகளை பயன்படுத்தி மக்களை காப்பாற்றுகிறார்.
சாவூலின் குங்ஃபு என்ற தற்காப்பு கலையை சீன மக்களுக்கு கற்றுக்கொடுக்கிறார். கலை, மருத்துவம் என அனைத்திலும் சிறந்து விளங்கியவர் போதிதர்மர். அவர் மீண்டும் தன் தமிழகம் திரும்ப விருப்பப்பட்ட போதும், போதிர்மரின் உயிர் சீன மண்ணில் பிரிய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் விருப்பியதால் அவர்கள் கொடுத்த விஷம் கலந்த உணவை உண்டு அங்கேயே தன் உயிரை விடுகிறார் போதிதர்மர்.
பையோ வார் ( உயிர் போர் ) பற்றிய விஷயங்களை நம் தமிழ்படமான ‘ஈ’ படத்தில் பார்த்திருப்போம். ஏழாம் அறிவு படத்தில் இந்தியாவை தாக்க சீனா ரெட் என்கிற பையோ வார் பிளானில் இறங்குகிறது. அதன் தொடக்கமாக சீனாவை சேர்ந்த டோங்லி ( படத்தின் வில்லன் ) என்றவன் தமிழ்நாட்டுக்கு வருகிறான்.
அரவிந்த் ( சூர்யா ) சென்னையில் நடக்கும் பாம்பே சர்க்கஸ் கம்பனியில் வேலைபார்க்கும் சர்க்கஸ் கலைஞர். சர வெடியாக வெடிக்க இருந்த ‘ரிங்க ரிங்கா’ பாட்டு ஊசி வெடியாக மாறிவிட்டாலும்… அதில் சூர்யாவின் சாகசங்களும், அதைவிட மற்ற சர்க்கஸ் கலைஞர்களின் சாகசங்களும் பலே!
ரெட் ஆபரேஷனை தமிழகத்தில் தொடங்க டோங்லி வந்துவிடுகிறான். வந்ததும் அவனது முதல் வேலை, சுபாவை (ஸ்ருதிஹாசன்) கொலை செய்வதுதான். ஏன்?
மரபியல் பொறியாளராக சுபா (ஸ்ருதிஹாசன்). பல நோய்களுக்கு மருந்து கண்டுபிடித்தவர் போதிதர்மர். இப்போது உலகில் பல விளங்க முடியாத நோய்கள் வர தொடங்கிவிட்டது. போதிதர்மரின் டி.என்.ஏ.வை எடுத்து ஆராய்ச்சி செய்து, அதே விதமான டி.என்.ஏ-வை போதிதர்மரின் பரம்பரையில் யாருக்காவது இருக்கும். போதிதர்மரின் டி.என்.ஏ.வை இவருக்கு பொருத்தினால், போதிதர்மரின் கலை, மருத்துவ அறிவு மீண்டும் உலகத்துக்கு கிடைக்கும் என்பது தான் சுபாவின் ஆராய்ச்சி. (இந்த டி.என்.ஏ மேட்டர் Assassin’s Creed என்ற ஆங்கில படத்தில் இருந்து உருவப்பட்டதாகவே சொல்லப்படுகிறது…)
சுபாவின் ஆராய்ச்சி விஷயங்களை காசு வாங்கிக்கொண்டு சீனாவுக்கு தெரியப்படுத்துபவர் சுபாவின் பேராசிரியர் ரங்கராஜன்… இந்த சகுனி வேலையால் தான் வில்லன் டோங்லி தமிழ்நாட்டுக்கு வந்து புது வைரஸ் கிரிமியை பரப்பியதோடு… சுபாவை கொல்ல முயர்ச்சி செய்கிறான். போதிதர்மர் பரம்பரையில் வந்தவர் சர்க்கஸ் கலைஞராக இருக்கும் அரவிந்த். அரவிந்தை வைத்து அவருக்கும் தெரியாமலே ஆராய்ச்சியை தொடர்கிறார் சுபா.
சுபாவின் பழக்கத்தை காதலாக எடுத்துக்கொண்டு, அது இல்லை என்ற பின் ரெயில்வே ட்ராக்கில் யம்மா யம்மா சோகப்பாட்டுப் பாடி பின் ஆராய்ச்சியின் முக்கியத்துவம் தெரிந்து சுபாவுக்கு ஒத்துழைப்பு தருகிறார் அரவிந்த்.
போதிதர்மரின் திறமைகள் திருப்பவர… விளைவுகளை சந்திக்கிறான் வில்லன் டோங்லி!
படத்தின் முதல் பாதியில் பல பிரம்மாண்ட காட்சிகளோடு, நாம் அறியாத பல தகவல்களை சொன்னாலும்… பார்வையாளனுக்கும் படத்துக்கும் ஏதோ ஒருவித சம்பந்தம் இல்லாமலே போய்விடுகிறது.
முதல் பாதியில் பழையகால சீன கிராமத்தை காண்பிக்க உழைத்தவர்களுக்கு சபாஷ்! போதிதர்மரால் காப்பாற்றப்படும் சிறுமியின் சிரிப்பும் அதன் பின்னணி இசையும் இதம். சூர்யாவின் வர்மக்கலை வித்தைகளும் ஹீரோயிஸம் கலந்ததாகவே பிரம்மிப்பூட்டியது.
ஆனால் முதல் பாதியில் சூர்யாவுக்கும் ஸ்ருதிஹாசனுக்கும் இருக்கிற ரொமான்ஸ் காட்சிகள் எம்.ஜி.ஆர் காலத்து பழைய ஸ்டைல். அந்த யானை சவாரி ரொமான்ஸ் காட்சி புதுசு. காதல் தோல்வி என்று யம்மா யம்மா பாடலில் சூர்யா உருகி உருகி பாடுகிற அளவுக்கு அதற்கு முன்பு இருந்த காதல் காட்சிகள் உருக்கமானதாக அமையவில்லை என்பதே உண்மை.
முதல் பாதியிலும் க்ளைமாக்ஸ் காட்சி தவிர்த்தும் ஹிப்னாடிஸம் (நோக்கு வர்மம்– எதிரில்இருப்பவர்களை தன் வசம் வசீகரப்படுத்துவது) என்கிற கலையை வைத்துதான் சண்டை போடுகிறார் வில்லன். ஹிப்னாடிஸம் கலையை உணர்ந்தவர்களாகவே இருந்தாலும், அதை படமாக்கிய விதம் எதோ காமெடித்தனமாகவே இருக்கிறது.
இரண்டாம் பாதியில் லாரி முதல் கார், ஆட்டோ எல்லாம் ரவுண்டுகட்டி பறப்பது தயாரிப்பாளரின் பர்ஸை காலி செய்ததைத் தவிர பிரம்மாண்டம் எதுவும் இல்லை… வீடியோ கேம்ஸ் தான் நினைவுக்கு வருகிறது.
தமிழ் மொழியை குரங்கு என்று ஒருவர் சொல்லிவிட அவரை வார்த்தைகளால் விளாசும் காட்சிக்கு வந்த அபாரமான கைதட்டல், இன்னும் நாம் உணர்வுள்ள தமிழர்களாய் இருக்கிறோம் என்பதை நிரூபிக்கிறது. வெள்ளைக்காரன் இங்க வந்து நம்மை அடிமைப்படுத்தினான், இப்போ நாம அங்க போய் அடிமையாய் இருக்கிறோம் என்ற வசனங்கள் நச்! வசங்களோடு நில்லாமல் ஸ்ருதிஹாசனின் நடிப்புக்கும் கைதட்டல்! வில்லனிடம் போனில் கண்ணீர்விடும் காட்சியில் ஸ்ருதி பின்னிட்டார்.
வில்லன் நடிகர் ஜானி ட்ரி, பார்வையில் மிரட்டுகிறார். க்ளைமக்ஸ் காட்சியில் தான், நிமிர வைக்கிறார் இயக்குனர். பீட்டர் ஹென் அசாத்தியமான சண்டைக்காட்சியாகவே அதை உருவாக்கி இருக்கிறார். அடி ஒவ்வொன்னும் இடி மாதிரி விழுது.
ரவி கே.சந்திரனின் ஷாட்டும் ஆண்டனியின் கட்டும் இயக்குனர் சொன்ன சொல் கேட்டிருக்கிறது என்றே சொல்லலாம். இன்னும் என்ன தோழா… பாடலை வீணடிப்பார்கள் என்பது எதிர்பார்த்த விஷயம். நல்லவேளை படத்தின் பின்புலத்தில் வைத்து மகிழ்ச்சி. ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்கள் முன்னந்தி சாரல்…, யம்மா யம்மா…, அவருக்கே உரிய மெலடி ஸ்டைல். ஓரிரு பாடல்கள் அவர் படத்தின் பாடல்களை அவரே ரீமிக்ஸ் செய்தது போல ஒரு உணர்வு.
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் படங்கள், கருத்துக்களை கமர்ஷியல் கலவையோடு சொல்வது போலவே இருக்கும். இதில் கருத்துக்கள் நிறைய இருந்தாலும், கமர்ஷியல் கலவைகள் சரியில்லை.
எவ்வளவு எதிர்பார்த்தாலும் அதைவிட மேலே மேலே மேலே இருக்கும் என்று சொன்னார் இயக்குனர். உண்மையை நீங்களும் பார்த்து சொல்லுங்கள்….



4/27/2011

என் பார்வையில் ' கோ '



தமிழ் சினிமாவின் சமீபத்திய தியேட்டர் கூட்ட வறட்சியை போக்க வந்திருக்கும் முதல் கோடைக்காலப் படம் “கோ”. ஓளிப்பதிவாளர் இயக்குனர் கே.வி.ஆனந்தின் மூன்றாவது படம். முதல் படத்தில் டீசண்டாய் இருந்து கொண்டு கந்துவட்டி மேட்டர், இரண்டாவது படத்தில் கள்ளக்கடத்தல் பின்னணி. இதில் அரசியலும், பத்திரிக்கை போட்டோகிராபரின் வாழ்க்கையை ஒட்டிய பின்னணி. மூன்றிலும் ஒவ்வொரு கதை களன். முந்தைய படமான அயனின் வெற்றியும், ஹாரிஸின் என்னவோ ஏதோவும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த படம்.ஒரு தின இதழின் போட்டோகிராபரான ஜீவாவையும், அதன் ரிப்போர்டர்களான கார்த்திகா, பியாவை சுற்றி நடக்கும் கதை. இவர்களின் செய்லால் தமிழ் நாட்டின் ஆட்சியையே மாற்றி அமைக்க எப்படி முடிகிறது? என்பதை முடிந்த வரை சுறுசுறுப்பான திரைக்கதையில் சொல்ல நினைத்ததை வெற்றிகரமாக சொல்லி இருக்கின்ற்னர்.படத்தில் வரும் டைட்டிலை பார்க்கும்போது மிகவும் வித்தியாசமான கிரியேட்டிவிட்டி தெரிகிறது


படத்தின் முதல் காட்சியான பேங்க் கொள்ளைக்காட்சியில் பற்றிக் கொள்ளும் திரைக்கதை, மெல்ல சூடு பரவி, எதிர்கட்சி தலைவர் கோட்டாவிடம் பற்றி எரிய ஆரம்பித்து, ப்ரகாஷ்ராஜிடம் வந்து நின்று எரிய ஆரம்பித்து சட்டென அணைந்துவிடுகிறது. நடுவே கொஞ்சம் நேரம் என்ன ஏது என்று புரியாமல் அலைபாய்ந்துவிட்டு, அஜ்மல் கட்சி மீட்டிங்கில் வெடித்தெழுகிறது. அஜ்மல் கேரக்டரின் அதீத முக்யத்துவமும், ஜீவாவின் ந்டிப்பும் சபாஷ் சொல்ல வேண்டியவைதான்.
முக்கியமாய் பத்திரிக்கையாளர்களான சுபா, கே.வி.ஆனந்த் ஆகியோருக்கு ஒரு பத்திரிக்கை அலுவலகத்தின் பின்னணி நன்றாகவே தெரிந்திருக்கிறவே படம் வெற்றிக்கு பக்க பல்ம்.


ஜீவாவுக்கு மிக இயல்பாய் பொருந்துகிறது இந்த போட்டோகிராபர் கேரக்டர். சம்பவங்கள் நடக்கும் போது சடாலென கேமராவை தூக்கிக் கொண்டு ஒடும் பரபரப்பும், போட்டோ எடுக்கும் லாவகமும் படு இயல்பு. கார்த்திகாவிடம் இவருக்கு இருக்கும் நெருக்கத்திற்கும், பியாவிடம் இருக்கும் நெருக்கத்திற்குமிடையே இவரிடம் தெரியும் பாடி லேங்குவேஜ் ரசிக்க வைக்கிறது.
கார்த்திகாவின் கண்கள் பல பேரை தூக்கமிழக்க செய்யப் போகிறது. நல்ல வாளிப்பான உயரம். ஆனால் நடிப்பதற்கு பெரியதாய் ஏதும் வாய்ப்பில்லை என்றாலும், பியாவின் காதலுக்காக தன் காதலை கட்டுப்படுத்திக் கொள்ளும் காட்சிகளில் ரசனை.
பியா அவுட் ஸ்போக்கன் சென்னைப் பெண். பரபரவென காதலை கொட்டிக் கவிழ்த்து, மடிந்து போகிறார். இவரிடமிருக்கும் துள்ளல் இவர் போனதும் போய்விடுவது குறையே.
ரிச்சர்ட் எம் நாதனின் ஒளிப்பதிவு தரம். முக்கியமாய் அந்த ஓப்பனிங் சண்டை சேசிங் காட்சிகளும், ஹசிலி பிசிலி பாடல் காட்சிகளின் லொக்கேஷன்களும் இன்னமும் கண்ணில் நிற்கிறது. க்ளைமாக்ஸ் ஆக்‌ஷன் காட்சிகளில் அந்த மொட்டை மாடி ஜியாக்கிரபியும், அதை படமெடுத்த விதமும், விறுவிறுப்பு. அதற்கு இணையாய் ஆண்டனியின் எடிட்டிங்கையும் குறிப்பிட வேண்டும்.
ஹாரிஸின் பாடல்களில் மூன்று ஏற்கனவே ஹிட்லிஸ்டில் ஓடிக் கொண்டிருக்கிறது. முக்கியமாய் அந்த என்னவோ ஏதோ க்யூட் மெலடி. ஆனால் அந்த பாடலின் படமாக்கம் மிகவும் சொதப்பிவிட்டதாய் தான் தோன்றுகிறது. அந்த ஹசிலி பிஸிலியின் மெனக்கெட்டதை இந்த பாடலுக்கு மெனக்கெட்டிருக்கலாம். பின்னணியிசை வழக்கப்படி ஆங்காங்கே சுட்டுத் தெளித்திருக்கிறார்.


கதை திரைக்கதையை எழுத்தாளர்கள் சுபாவுடன் இணைந்து எழுதி, இயக்கியிருக்கிறார் கே.வி.ஆனந்த். பரபரவென ஓடும் படத்திற்கு பெரிய பலமே திரைக்கதைதான். . படம் பார்ப்பவர்களை திசை திருப்ப, எதிர்கட்சி தலைவர், முதலமைச்சர், அஜ்மல் என்று மூன்று பக்கமும் திரைக்கதை ஓடுவதால், விறுவிறுப்பு கூடுவதை தவிர்க்க முடியவில்லை. . நக நக பாடலில் ஜெயம்ரவி, ஹாரிஸ், சூர்யா, கார்த்தி, ஜீவா என்று நட்சத்திர பட்டாளங்களை ஆடவிட்டிருப்பது இண்ட்ரஸ்டிங். முக்கியமாய் அதில் கல்யாணராமன் கெட்டப் சிம்பு போல ஒரு கேரக்டரை உலவ விட்டிருப்பதில் ஏதேனும் உள்குத்திருக்குமோ என்று தோன்றுகிறது. இப்படத்தின் கதையை தெரிந்து கொண்டு ரெட் ஜெயண்ட் வாங்கி வெளியிட்டதை பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. அதே வேலையில் எலக்‌ஷனுக்கு பிறகு வெளியிட்டதில் இருக்கும் புத்திசாலித்தனத்தையும் பாராட்டத்தான் வேண்டும். இன்னொரு அயனை எதிர்பார்த்தவர்களுக்கு சரியான ப்டம் ,இளைஞர்களுக்கு சரியான பாடம் .

பெரியள்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்....

2/23/2011

ஆந்த்ரே நோஸ் (Entre Nos)



திரைப்படங்களில் பல உண்மைகள் பேசுகின்றன. கடந்து போன கதைகளை சொல்லுகின்றன. நம்பிக்கைகளை விதைக்கின்றன. வாழ்வின் விளிம்பிற்கு சென்ற மனிதர்கள் வெற்றி பெற்ற கதைகளை சில படங்கள் உண்மைக்கு அருகே இருந்து காட்டுகின்றன. அவ்வகை திரைப்படங்களாக 'The pursuit of happyness' போன்ற திரைப்படங்களில் கண்டிருக்கிறோம். அந்த திரைப் படங்களை நம்முடைய வாழ்வோடு ஒப்பிட்டு, நமது வாழ்கை அவர்களோடு மேலாக இருப்பதை உணர்ந்து ஆறுதல் பட்டுக் கொள்ளலாம். அவர்களின் தன்னம்பிக்கை கண்டு நமக்கும் நமது மேல் நம்பிக்கை பிறக்கலாம். அப்படிப்பட்ட ஒரு தன்னம்பிக்கை பெண்மணியின் கதையைத்தான் ஆந்த்ரே நோஸ் திரைப்படம் பேசுகிறது.











கொலம்பியாவின் பகோடா என்ற ஊரிலிருந்து நியூ யார்க் நகருக்கு வேலை தேடி வருகிறது ஒரு குடும்பம். கணவன், மரியானா என்ற மனைவி. அவர்களின் குழந்தைகள் காபி என்ற காப்ரியல் மற்றும் அண்ட்ரியா என்ற சிறுமி. வந்த இடத்தில் கணவன் வேறு ஒரு துணையை தேடிக் கொண்டு, தனக்கு மியாமி நகரில் வேலை கிடைத்திருப்பதாகவும், தான் அங்கு சென்று செட்டில் ஆனா பின்னர் வந்து குடும்பத்தை அழைத்து செல்வதாகவும் கூறி செல்கிறான். நம்பிக்கையுடன் அவனை வழி அனுப்பி வைக்கிறது. அவனது நண்பனின் மூலமாக, மரியானாவுக்கு அவள் கணவன் திரும்பி வரப்போவதில்லை என்ற உண்மை சொல்லப்பட அவள் உடைந்து போகிறாள்.


நமது ஊர் பப்ஸ் போல இருக்கும் எஸ்பனடா என்னும் பலகாரம் செய்து தெருவில் இறங்கி விற்கிறாள்.அதில் வருமானம் வரவில்லை.


















ஒருமுறை கோக் டின்களை சேகரிக்கும் ஒருவனை கண்டு அவன் பின்னாலேயே தன குழந்தைகளுடன் தொடரும் மரியன், ரீசைக்ளிங் செய்யப்படும் ஒரு காலி கோக் டின்னுக்கு ஐந்து சென்ட்கள் கிடைக்கும் என அறிந்து கொண்டு, மறுநாள், ஒரு கடையில் இருந்து ஸ்ட்ராலரை திருடும் அந்த குடும்பம், தினமும் காலி கோக் டின்களை குப்பைகளிலிருந்து பொறுக்க ஆரம்பிக்கிறது. அதே தினம், அவளது கணவன் மூன்று மாதமாக வாடகை தராததால், அந்த சைனீஸ் வீட்டுக்காரன், அவர்களை வீட்டில் இருந்து துரத்தி விட, அந்த குடும்பம் பார்க்குகளிலும், ரயில் மேம்பாலங்களிலும் தங்குகிறது. யாரோ சொன்ன ஒரு முகவரியை வைத்துகொண்டு, நியூ யார்க் நகரில் இந்தியர்கள் அதிகமாக வசிக்கும் பகுதியில் வாரத்துக்கு 150$ வாடகைக்கும் தங்குகிறார்கள். அப்போது தான் தான் கர்ப்பமாக இருப்பதை உணர்கிறாள் மரியான். இருக்கிற கஷ்டம் போதாமல் இது வேறயா என விக்கித்து நிற்கும் வேளையில் அந்த இந்திய பெண் அவள் கருவை கலைக்க உதவுகிறாள். நமது ஊரு கிழங்கோ அல்லது மருந்தோ.. எதோ ஒன்றை கஷாயமாக்கி தர, அதுவாகவே கரு கலைந்து விடும் என சொல்லி அவளை பார்த்துக் கொள்கிறாள்.






கருகலைப்பு தனது மதத்துக்கு விரோதம் என தெரிந்தும் ஆலயம் சென்று கடவுளிடம் மன்னிப்பு வேண்டி அழுகிறாள். கரு கலைகிறது. கொஞ்சம் கொஞ்சமாக அந்த குடும்பம் குப்பையில் கிடக்கும் காலி கோக் டின்களை பொறுக்கி முன்னேறுகிறது. அவளது ஒவ்வொரு கஷ்டத்திலும் அவளுக்கு துணையாக அவளது மகன் காப்ரியல் இருக்கிறான். எல்லாம் தெரிந்தும், எதுவும் தெரியாதமாதிரி காட்டிக் கொள்ளும் அவன், தன தாய் கஷ்டப்படும் போதெல்லாம், தனியனாக கோக் டின்கள் பொறுக்கி குடும்பம் காக்கிறான். படத்தின் முடிவில், இந்தப் படம் ஒரு உண்மை கதை என்றும், தற்போது மரியன், காப்ரியல் மற்றும் ஆண்ட்ரியா என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என கார்டு போடும்போது நம் மேனி சிலிர்ப்பது உண்மை.






மரியனாக நடித்திருக்கும் பாவ்லா மண்டோசா தான் படத்தின் பிரதான பாத்திரம். தனது இயலாமையும், தன்னம்பிக்கையும் ஒரு சேர தன முகத்தில் படம் நெடுக அற்புதமாக வெளிப்படுத்துகிறார். படத்தை க்ளோரியா லா மார்த்தே என்ற மற்றொரு பெண்ணோடு சேர்ந்து எழுதி இயக்கி இருப்பவரும் இவரே.






படத்தில் காப்ரியல்ஆக நடித்திருக்கும் அந்த சிறுவன் தான் இந்த படத்தின் கதாநாயகன். எல்லாம் தெரிந்தும், எதுவுமே தெரியாதது போல முகத்தில் உணர்ச்சிகளை அடக்கி கொண்டு, தன அம்மாவின் சிரமம் புரிந்து அவளது கஷ்டங்களில் தோள் கொடுத்து தன்னால் இயன்ற அனைத்து செல்லும் ஒரு கதாபாத்திரம், அனைத்து அன்னைகளுக்கும் ஒரு உதாரண மகனாக சிறந்த நடிப்பு.






இந்த திரைப்படம் உலகெங்கும் பலவித விருதுகளும் பாராட்டுகளையும் பெற்றிருக்கிறது.










இந்த திரைப்படம் வாங்கிய விருதுகள்.






படம் மெதுவாக நகர்ந்தாலும், ஒரு அற்புதமான நெகிழ்வையும், எப்படிப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டாலும் வாழ்வதற்கு ஆதாரங்கள் இந்த உலகத்தில் உண்டு என்பதை ஆணித்தரமாக உணர்திருக்கும் இப்படத்தின் திரைக்கதை இயக்கத்துக்கு சொந்தமான பெண்கள் க்ளோரியாவுக்கும் பாவ்லா மண்டோசாவுக்கும் ஆயிரம் நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்.






இந்த படத்தை கண்டிப்பாக உங்கள் குழந்தைகளுடன் பாருங்கள்.


11/05/2010

மைனா - தவிர்க்க முடியாத தமிழ் சினிமாக்களில் இதுவும் ஒன்று

           
இந்தப் படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவின் தரமான இயக்குனர்கள் பட்டியலில் பிரபு சாலமோனும் இணைந்திருக்கிறார். காதலனும் காதலியும் உயிருக்கு உயிராக காதலித்து கடைசியில் காதலுக்காக உயிரைவிடுகிற உருக்கமான காதல் கதை தான் என்றாலும், இதுவரை தமிழ் சினிமா பார்த்திராத கதைக் களம் மைனா.


மேக்கப் இல்லாத முகங்கள், புதுமையான லொகேஷன், வித்தியாசம் என்கிற வார்த்தைக்கு மரியாதை செய்கிற வகையில் ஒரு க்ளைமாக்ஸ் என மைனா தமிழ் சினிமாவின் புது முயற்சிகளில் முக்கியமான படைப்பாக விளங்குகிறது.

தீபாவளிக்கு முன் தினம்... போலிஸ் அதிகாரிகள் பாஸ்கர், ராமைய்யா இருவரும் தப்பி ஓடிய கைதி சுருளியை தேடி தேனி அருகில் மூணாறு மலை அடிவாரத்தில் இருக்கும் குரங்கணி மலைக் கிராமத்துக்கு போகிறார்கள். தப்பி ஓடிய சுருளி யாரு?


சுருளி சின்ன வயசுல பள்ளிக்கூடம் போகாமல் ரவுடித்தனம் செய்கிறார். தன் அம்மாவுடன் மைனா நடுத்தெருவில் அழுதுகொண்டிருக்க, அவர்களை கூட்டி வந்து அடைக்கலம் கொடுக்கிறார். மைனாவும் சுருளியும் காதல் பறவைகளாய் குரங்கணி மலையில் வளம் வருகிறார்கள். மைனாவுக்கு கல்யாண வயசு வருகிறது. மைனாவும் சுருளியும் காதலிக்கிற விஷயம் மைனாவின் அம்மாவிற்கு தெரியவர, மைனாவிற்கு வேறொரு மாப்பிளை பார்க்கிறார்.சுருளியும் பணியாரக் கடைக்காரி மைனாவின் அம்மாவும் முடியைப்பிடித்து சண்டைப் போடும் அளவற்கு பெரிய ரகளை நடக்கிறது.

இந்தப் பிரச்சனையில் சுருளி சிறையில் அடைக்கப்படுகிறார். மைனாவிற்கு கல்யாண வேலைகள் நடந்து கொண்டிருக்க, செய்தி அறிந்ததும் சுருளி சிறையில் இருந்து தப்பி வருகிறார். தலை தீபாவளி கூட கொண்டாடாத கடுப்பில் ஜெயில் அதிகாரி பாஸ்கரும், ராமையாவும் சுருளியைக் கண்டுபிடித்தே ஆகவேண்டும் என்ற நிலையில் குரங்கணி கிராமத்திற்கு போக மலை ஏறுகிறார்கள். ரத்திரியாகிவிட மலையில் வழி தெரியாமல் அலைந்து திரிந்து பல சிரமங்களுடன் ஒரு வழியாக அடுத்த நாள் காலை சுருளியை கைபற்றுகிறது போலிஸ். சுருளி போலிசுடன் வரும்போது மைனாவும் சுருளியுடன் வந்துவிடுகிறார். இன்னும் கொஞ்ச நேரத்தில் சுருளி ஜெயிலுக்கு போய்விடுவார், அப்போ மைனா? இந்த இடத்தில் இடைவேளை...

மீண்டும் மலையில் பாதை தெரியாமல் போய்விடுகிறார்கள், ஒரு கட்டத்தில் போலிஸ் அதிகாரிகள் பாஸ்கரையும் ராமையாவையும் பஸ் விபத்தில் இருந்து காப்பாற்றுகிறார் சுருளி. உயிரைக் காப்பாற்றிய அக்யூஸ்ட் சுருளி போலிசுக்கு கடவுளாக தெரிகிறார். சுருளி விடுதலையானதும் தானே கல்யாணம் செய்து வைப்பதாக சொல்கிறார் போலிஸ் பாஸ்கர். நிறைவான சந்தோஷத்தோடு தேனி வந்தடைய... ஒரு கொடுமையான க்ளைமாக்ஸ்! நீங்கள் எதிர்பார்ப்பது எதுவுவே கிளைமாக்ஸாக இருக்க முடியாது. அந்த அளவிற்கு சஸ்பென்ஸ்.


படம் பார்த்த ராத்திரி தூங்கவிடாத க்ளைமாக்ஸ்களில் இதுவும் ஒன்று. படத்தின் ஒரு காட்சிக் கூட காரணம் இல்லாமல் காட்டப் படவில்லை. படத்தில் வரும் கதாப்பாத்திரங்கள் அனைத்தும் ஒரு காரணத்தோடவே காட்டப்படுகிறது.

சுருளியாக வரும் வித்தார்த், மைனாவாக வரும் அமலா பால் என எல்லோரும் கதா பாத்திரமாகவே வாழ்ந்திருகிறார்கள். ராமைய்யாவாக வரும் தம்பி ராமைய்யாவிற்கு ஒரு தனி பாராட்டு. காமெடி, வில்லத்தனம், கண்ணீர் என எல்லாம் கலந்த குணச்சித்திரக் கதாபாத்திரத்தில் முத்திரைப் பதித்திருகிறார். போலிசாக வரும் சேது, புதுமுகமாக இருந்தாலும் நூறு படத்தில் நடித்தது மாதிரி நடிப்பில் அப்படி ஒரு முழுமை.


படத்தின் முக்கியமான ஒருவர்களில் டி.இமான் ஒருவர். டி.இமான் இசையமைத்த படங்களில் தி பெஸ்ட் என்று சொல்லும் அளவிற்கு தூள். இன்று முதல் முக்கியமான இசையமைப்பாளர்கள் பட்டியலில் டி.இமானும் ஒருவர். இவரின் மைனா இசை எல்லாருடைய நெஞ்சுக்குள்ள போகுது என்பதில்  சந்தேகமும் இல்லை.


மலையில் இருந்து பஸ் விழும் காட்சி! படத்தின் உச்சக்கட்ட காட்சி இதுதான். படத்தைப் பார்க்கும் நாமே மலையில் தொங்கும் ஒரு உணர்வு. ஒளிப்பதிவாளர் சுகுமாருக்கு இந்த ‘மைனா’ உலகத்தை காண்பித்ததற்காக ஒரு சபாஷ் சொல்லியே ஆகவேண்டும்.


சமீபமாய் தமிழ் சினிமாவில் இயக்குனர்கள் சொந்தப் படம் எடுத்தால் தான் நல்ல படைப்புகள் உருவாகும் நிலை உள்ளது. ஆனாலும் இந்தப் படத்தை வாங்கி விநியோகம் செய்திருக்கும் தயாரிப்பாளர்களை மறந்துவிட முடியாது. மைனாவை இன்னும் உயரப் பறக்கச் செய்திருக்கும் உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஏ.ஜி.எஸ். சகோதரர்களுக்கு ஒரு சல்யூட்.

இனி வரும் படங்களிலும் தன் தரத்தைத் தக்கவைத்துக் கொள்ள பிரபு சாலமோனுக்கு வாழ்த்துகள்.

10/01/2010

எனது பார்வையில் -எந்திரன்


              எத்தனை வருட கனவு இது…! இப்படி ஒரு படம் இந்தியாவில், அதுவும் தமிழில் என்றைக்காவது சாத்தியமாகுமா? என்ற கேள்விக்குறியை ஆச்சர்யக் குறியாக்கியிருக்கிறார்கள் இருவர்… சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் ஷங்கர்!
              நாடு, இனம், மொழி, நடிக அரசியல் கடந்து, எந்திரன் ஒவ்வொரு சினிமா ரசிகனுக்கும் ஒரு அனுபவம்.

                தொழில் நுட்பத்தில் இன்னமும் பெரிய அளவு நிபுணத்துவம் வளராத ஒரு நாட்டைச் சேர்ந்த கலைஞர்கள், இன்று செய்நேர்த்தியில் முன்னிலையில் இருக்கும் ஹாலிவுட்டுக்குச் சவால் விட்டுள்ளனர், எந்திரன் என்ற படத்தின் மூலம். இதை ஒரு ரஜினி ரசிகனின் மிகைப்படுத்தப்பட்ட கூற்றாக எடுத்துக் கொள்ளாமல், படம் பாருங்கள்… உண்மை புரியும்!
               இந்தப் படத்தை ஒரு முழுமையான, முதல் நாள் முதல் காட்சியை ஆரவாரத்தோடு பார்க்கும் ரஜினி ரசிகனின் மனநிலையில் பார்த்துவிட்டு, ஒரு எழுத்தாளன் என்ற  பார்வையோடே எழுதுகிறேன்.
               என்னைப் பொறுத்தவரை எந்திரன் வெறும் ரஜினி படமல்ல… ஒரு இனிய அனுபவம். எமது கலைஞர்களால் ஆகாதது ஒன்றுமே இல்லை என்ற பெருமை தந்த அந்த சிலிர்ப்பு இன்னும் கூட அடங்கவில்லை.
               வர்த்தகம், கலை என்ற பேதங்களுக்கு அப்பால், மக்களை மகிழ்விக்கும் நல்ல பொழுதுபோக்கு என்ற புதிய நீட்சியை இந்திய சினிமாவுக்குத் தந்திருக்கிறது எந்திரன். இனி அவதார் போன்ற ஹாலிவுட் பிரமாண்டங்களைப் பார்த்து திகைக்கவோ, பிரமிக்கவோ வேண்டிய அவசியமில்லை என்றே தோன்றுகிறது. இதுபோன்ற ஹாலிவுட் பிரமாண்டங்களை, ‘இனி நாங்களும் இதுக்குமேல எடுப்போம்ல’ என்ற மதர்ப்போடு பார்த்து ரசிக்க நம்மாலும் முடியும். அந்த நம்பிக்கையை இந்தியக் கலைஞர்களுக்கும் தந்த பெருமை இயக்குநர் ஷங்கரைச் சேர்கிறது!
              எந்திரன் படத்தின் கதையை இந்த விமர்சனத்தில் மட்டுமல்ல, வேறு எங்கும் கூடத் தேடாதீர்கள். காரணம், அதைப் படத்தில் பார்த்து அனுபவியுங்கள். தொழில்நுட்பம் வேண்டுமானால் ஹாலிவுட்டின் பாதிப்பு என்று எடுத்துக் கொள்ளலாமே தவிர, கதை, அதற்கான களம், கதை மாந்தர்களின் உறவுச் சூழல் எல்லாமே முற்றிலும் புதியது.
                நிஜ மனிதன் தன்னைப் போன்ற இயந்திர மனிதனைத் தந்து, அதற்கு தன்னைப் போல யோசிக்கும் திறனையும் கொடுத்துவிட்டால்… அதன் பின் விளைவுகள் எப்படி இருக்கும் என்ற சுஜாதா – ஷங்கர் கற்பனையின் அழகிய செல்லுலாய்ட் வடிவமே ரோபோ எனும் எந்திரன் (எத்தனை அர்த்தமுள்ள இனிய தமிழாக்கம்!)
                ஒவ்வொரு காட்சியிலும் மூன்று மகா கலைஞர்கள் பளிச்சிடுகிறார்கள். ரஜினி, ஷங்கர் மற்றும் ஒளிப்பதிவாளர் ரத்னவேலு. இவர்களின் உழைப்புக்கு ஒரு ‘சில்வர்லைன்’ கொடுத்திருக்கிறார் ஏ ஆர் ரஹ்மான் என்றால் மிகையல்ல!
                படத்தின் முதல் காட்சியில் டாக்டர் வசீகரனாக எந்த வித வழக்கமான மேனரிஸமும் இல்லாத இயல்பான ரஜினி… இந்திய சினிமாவுக்கே புதுசு. அடுத்தடுத்த இரு காட்சிகளிலும் இந்த இயல்பு நிலை தொடர, ‘என்னடா இது’ என யோசிக்கும்போதே ‘சிட்டி’ ரஜினியின் உருவில் அமர்க்களம் ஆரம்பம். மென்மையான, ஆரோக்கியமான நகைச்சுவை என்பதற்கு புதிய உதாரணம் சிட்டி பாத்திரப் படைப்பு. படம் பார்க்கும் ஒவ்வொருவர் குடும்பத்திலும் சிட்டியும் ஒரு பாத்திரமாகவே ஐக்கியமானாலும் ஆச்சர்யமில்லை.
                இந்தப் படத்தின் காதல் காட்சிகளில் ரஜினியின் இளமை துள்ளும் ஸ்டைலையும் ரொமான்ஸையும் பார்க்கும் இளம் நடிகர்களுக்கு மட்டுமல்ல, நடிகைகளுக்கும் தூக்கம் தொலையக்கூடும்!
                    ஒரு விஞ்ஞானி எப்படி இருப்பார், எப்படி நடப்பார், எப்படிப் பேசுவார், தன் கண்டுபிடிப்பு தான் நினைத்த மாதிரியெல்லாம் அசகாய சூரத்தனங்கள் செய்யும் போது எப்படி மகிழ்வார்… அதே கண்டுபிடிப்பை இந்த சமூகம் புறக்கணிக்கும் போது எப்படி வெதும்புவார்… இத்தனை உணர்வுகளையும் வெகு இயல்பாக, சற்றும் சினிமாத்தனமின்றி வெளிப்படுத்தியுள்ளார் ரஜினி.
                    இந்த இரு வேடங்களுக்கும் சிகரம், வில்லன் ரஜினி. யப்பா…. எங்கே இருந்தார் இந்த நடிப்பு ராட்சஸன் இத்தனை காலமாய்! வில்லத்தனத்தை எப்படி காட்டுவது எனத் தெரிந்து கொள்ள தனியாக ட்யூஷன் படிக்க வேண்டும் இவரிடம். இந்தப் பாத்திரம் குறித்து அதிகம் விவரிக்காமல் விடுவதுதான், படம் பார்க்கும் உங்களுக்குள் பல இன்ப அதிர்வுகளை உண்டாக்கும் என்பதால் இத்துடன் நிறுத்துகிறேன்.
                ஆனால் ஒரே ஒரு வரியில் சொன்னால்…. நடிப்பில் ரஜினியின் விஸ்வரூபம் இந்தப் படம். நவரசங்களையும் அநாயாசமாகத் தருவதில் ரஜினிக்கு முன்னும் பின்னும் ஒருவரையும் ஒப்பீட்டுக்காகக் கூட இனி தயவு செய்து சொல்லக் கூடாது. ரஜினி ரஜினிதான். ஒரு படைப்பாளியின் கற்பனையை அப்படியே பிரதிபலித்திருக்கும் உன்னதமான கலைஞன்!
               ஐஸ்வர்யா ராய்… இவர் எத்தனை கவர்ச்சியான உடைகளில் வந்தாலும், மனம் அவரை கண்ணியமாகவே பார்க்கிறது. ஐஸ்வர்யாவின் பலம் அதுதான். நடனம், நடிப்பு என அனைத்திலே டிஸ்டிங்ஷனுக்கும் மேலே ஸ்கோர் பண்ணுகிறார் ஐஸ்.
               ரஜினிக்கு எத்தனையோ நடிகைகள் ஜோடியாக நடித்திருக்கிறார்கள். ஆனால் 100 சதவீதம் பொருத்தமான ஜோடி என்றால் அது ஐஸ்வர்யாதான். இப்போதுதான் புரிகிறது, ரஜினி ஏன் தொடர்ந்து ஐஸ்வர்யாவை தனது படங்களின் கதாநாயகியாக்க முயற்சித்தார் என்று!
              ரஜினியின் உதவியாளர்களாக வரும் சந்தானம், கருணாஸ் இருவரும் தாங்கள் நடிகர்கள் என்பதையே மறந்து, ரஜினியின் நடிப்பில் மனதை இழந்துவிட்டிருப்பார்கள் போலிருக்கிறது. இந்த இரு காமெடியன்களையும் சிட்டி தூக்கிச் சாப்பிட்டுவிடுகிறது! அதே நேரம் இப்படியொரு படத்தில், அந்த இருவருக்கும் அதற்குமேல் வேலையும் இல்லை என்பதும் புரிகிறது.
               டேனி டெங்சோங்பாதான் படத்தில் வரும் கெட்டவர் (வில்லன் என்று சொல்ல முடியாது!) தனது வேலையை அத்தனை கச்சிதமாகச் செய்துள்ளார் டேனி. தமிழ் வில்லன்களை விட, இவரைத் தேர்வு செய்தது நல்ல பலனைத் தந்துள்ளது.
              ஒளிப்பதிவாளர் ரத்னவேலு இன்னொரு ஷங்கர் என்றுதான் சொல்ல வேண்டும். விஞ்ஞானி – ரோபோ சம்பந்தப்பட்ட காட்சிகள், வசீகரன் – ஐஸ் காதல் காட்சிகள், அதே ஐஸ்வர்யா ரோபோவுடன் இருக்கும் காட்சிகள்… இவற்றுக்கெல்லாம் தனித்தனி டோன்களை, சற்றும் உறுத்தாமல் தந்திருக்கும் நேர்த்தி ஹாலிவுட்டுக்கே சவால் எனலாம். கிளிமாஞ்சாரோ பாடலை அவர் படமாக்கியிருக்கும் விதம், ரசிகர்களுக்கு ஒரு விஷூவல் ட்ரீட்!
               சாபு சிரில் உழைப்பு கொஞ்சமல்ல. சற்றே கவனமிழந்திருந்தாலும், “டே இது செட்றா மாப்ளே” என்று ரசிகர்களே கலாய்த்துவிடும் அபாயம் நிறைய இடங்களில். அதைப் புரிந்து அபார முயற்சியெடுத்து அரங்குகளையும் ரோபோக்களையும் நிர்மாணித்திருக்கிறார்.
              இவரது கலைத்திறனும், ஹாலிவுட்டின் ஸ்டான் வின்ஸ்டன் ஸ்டுடியோஸ் கலைஞர்களின் ரோபோட்ரானிக்ஸ் உத்திகளும் அத்தனை லாவகமாக இழைந்து நிற்கின்றன படத்தில்.
              கிராபிக்ஸ் காட்சிகளுக்காக மெனக்கெட்டிருக்கும் விஷுவல் எஃபெக்ட்ஸ் குழுவினரை முதுகு வலிக்கத் தட்டிக் கொடுக்கலாம். எந்தக் காட்சி நிஜம், எது கிராபிக்ஸ் என்று யோசிக்கக் கூட அவகாசம் தரவில்லை இவர்கள். அதிலும் படத்தின் கடைசி நிமிடங்களில் கதிகலங்க வைக்கிறார்கள். ஹேட்ஸ் ஆஃப்!
              அப்புறம்… இந்தப் படத்தின் இன்னொரு நாயகனைப் பற்றி நிறையவே சொல்ல வேண்டும். அவர் ஏ ஆர் ரஹ்மான். பாடல்கள், பின்னணி இசை என கிடைத்த இடைவெளிகளிலெல்லாம் சிக்ஸர் அடித்திருக்கிறார் இசைப் புயல். அந்தக் கிளிமாஞ்சாரோ பாட்டு ஒரு ‘விஷுவல் மியூசிகல் ட்ரீட்’, என்றால், ‘அரிமா அரிமா’ நெஞ்சு நிமிர்த்தி ஆட வைக்கும் அட்டகாச மெட்டு. இடையில் காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை என்று வைரமுத்துவின் துணையுடன் மனதை மயிலிறகால் வருடுகிறார் ரஹ்மான். எத்தனை நாளாச்சு இந்த மாதிரி மெலடி கேட்டு என்ற ஏக்கமும் கூடவே பிறக்கிறது!
             படத்தில் குறைகளே இல்லையா… ரஜினி படம் என்பதால் இப்படி ஒரேயடியாகப் பாராட்டுகிறீர்களா? என்று கூட சில கேள்விகள் எழலாம். உண்மையிலேயே குறைகள் என்று சொல்ல பெரிதாக இதில் ஒன்றுமில்லை. மூன்று ஆண்டு கடும் உழைப்பு… அதெப்படி குறை சொல்லுமளவுக்கு இருக்கும் என்பதை யோசிக்க வேண்டாமா? ஷங்கர் தனது ‘கேரியர் பெஸ்ட்’ படம் இதுதான் என்று நெஞ்சு நிமிர்த்தி சொல்லிக் கொள்ளலாம். படமெங்கும் அவரது கடின உழைப்பு பளிச்சிடுகிறது.
             இது ரஜினி படமா… ஷங்கர் படமா? இந்தக் கேள்வி நிச்சயம் இன்னும் சில வாரங்களுக்காவது இணையத்தில் ஓடிக் கொண்டிருக்கும். (ரஜினி விமர்சகர்களுக்கும் பொழுதுபோக வேண்டாமா…)
               நிச்சயம் ரஜினி – ஷங்கரின் Perfect -தான் எந்திரன் என்பதே சரியாக இருக்கும். இந்தப் படத்தில் நடிக்க ரஜினியை விடப் பொருத்தமானவர் இல்லை… இயக்க ஷங்கரை விட தகுதியானவர் யாருமில்லை என்பதே சரியான கருத்தும் கூட.
             எந்திரன்… சர்வதேச சினிமாவுக்கு இந்தியா சார்பில் தமிழ்க் கலைஞர்கள் கம்பீரமாகத் தந்திருக்கும் இனிய பரிசு!

எந்திரன் குழுவுக்கு என் நண்பர்கள் சார்பாகவும்  வாழ்த்துகள்!

9/22/2010

தனித்துவமானவரா ரஜினி ?

            நண்பர் ஒருவர் "உங்களுக்கு ஏன் இவரைப்பற்றி கவலை ? " என்ற பதிவிலிட்ட பின்னூட்டலுக்கான பதிலை ஒரு பதிவாக எழுதுகிறேன். பலரும் ரஜினியை விமர்சிப்பதற்கு கையிலெடுக்கும் இன்னுமொரு விடயம் இதுவென்பதால் ஒரு ரஜினி விசுவாசியாக எனது விளக்கம்.
இதுதான் அவரது பின்னூட்டல்.
//Rajini should stop acting on public meeting(should not be like others).., It is accustomed to cinema fraternity to praise the politician when they are on power,for instance when Jaya was CM Rajini called her 'Thairia lakshmi' now he is in all praise for Karuna. All you Rajini fans should understand this. Only then rajini will be unique from others.//

நண்பர் அவர்களே.....
          கலைஞர் இருந்த மேடையில் வைத்து விஜயகாந்தின் வெற்றியை பாராட்டிய ரஜினியை, எல்லோருமே ஜெயலலிதாவுக்கு பயந்து வாயை பொத்திக்கொண்டிருந்த நேரம் அவரது அமைச்சர்கள் முன்னிலையிலேயே ஜெயலிதாவின் ஆட்சியை கடுமையாக விமர்சித்த ரஜினியை உங்களுக்கு தெரியாதா? 2004 ஆம் ஆண்டு எனது ஒட்டு அ.தி.மு.க விற்கு என ரஜினி கூறியதுகூட ராமதாசின் ரசிகர்கள் மீதான தாக்குதலின் எதிரொலிதான், அப்போதுகூட ரஜினி கலைஞரை விமர்சித்ததில்லை. ஜெயலிதாவை 'தைரியலக்ஸ்மி' என பாராட்டியது வீரப்பனை கொன்றதற்காக மட்டும்தான். அங்கு ஜெயலிதாவின் ஆட்சித்திறனை அவர் ஒரு தடவைகூட பாராட்டவில்லை. இதுவரை சினிமாவிலுமிருந்து வந்த எந்த முதல்வர்களும் செய்யாத துணைநடிகர்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தை இப்போது கலைஞர் ஆரம்பித்துள்ளதற்குரஜினி பாராட்டியதில் என்ன தவறு?ஒருவர் ஏதாவது தப்பு பண்ணும் போது திட்டினா, அப்புறமா அவர் என்னதான் நல்லது பண்ணாலும் திட்டிக்கிட்டே இருக்கணும் என்பது எந்த ஊரு நியாயம் சார். இதுவும் ரஜினியிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு தகுதியே அன்றி குறையில்லைக் கண்ணா .
                வீடு வழங்கும் திட்டத்தை கலைஞர் அறிவித்தபோதுகூட அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு இல்லாமல் சரியானவர்களுக்குத்தான் வீடு போய் சேரவேண்டும் என்பதை 'தாத்தா பேரன்' கதைமூலம் முகத்துக்கு முன்னாலேயே கூறியவர் ரஜினி. கலைஞரின் பாராட்டுவிழாவில் அஜித்தின் பேச்சுக்கு கலைஞரின் அருகிலிருந்தே எழுந்து கைதட்டியவர் ரஜினி. தன் குடும்பத்தின் எதிர்கால அரசியல் வாழ்க்கைக்கு பாதுகாப்பாகஇருக்கவேண்டும் என்பதால்தான் கலைஞர் ரஜினியை எப்போதும் தன பக்கத்தில் வைத்திருக்க விரும்புகிறார் . இதனால்தான் தான் சம்பந்தப்பட்ட எல்லா விழாக்களுக்கும் ரஜினியை அழைக்கிறார். போனவிடத்தில் திட்டிவிட்டா வரமுடியும்? எதிரியை கூட வையாத ரஜினி நண்பன் என்னும் பேரை சொல்லிக்கொண்டு திரிபவரை வைவாரா?
         தன்னைத்தவிர ரஜினி தன்கூட இருக்கும் அனைவரையுமே புகழ்ந்துதான் பேசுவது வழமை , இது நடிப்பல்ல நண்பரே நல்ல பண்பு. எதற்க்காக ரஜினி தன்னைதாழ்த்தி கமலை புகழவேண்டும்? சரி ரஜினி திட்டமிட்டு செய்கிறார் என்றே வைத்துக்கொள்வோம், ஏன் மற்ற யாருமே இதை செய்வதில்லை? காரணம் ஈகோ, ரஜினியிடம்அது இல்லை என்பதால்தான் நண்பர் 'கவிதைகாதலன்' குறிப்பிட்ட மாதிரி "நிச்சயம் ரஜினி என்ற ஒற்றை மனிதனைத்தவிர வேறு யாராலும் இந்த 150 கோடி ரூபாயை தோளில் தூக்கி சுமக்க முடியாது... ஆனால் அந்த மனிதனோ தனக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. எல்லாம் ஷங்கர், ரஹ்மான், ஐஸ்வர்யா என்கிறார்." என வியந்து பார்க்க முடிகிறது.
            ரஜினி அ.தி.மு,க விற்கு ஆதரவு தெரிவித்தது (ஒரு தடவை ) தவறென்றால் காங்கிரசும், பி.ஜே.பி யும் மாறிமாறி தி.மு.க வுடனும் அ.தி.மு.க வுடனும் கூட்டணி அமைப்பதை என்னவென்று சொல்வது?
         தி.க வுக்கு ஓட்டுப்போட சொன்ன அண்ணா மற்றும் கலைஞர் பின்னர் தி.கவிற்கு போட வேண்டாம் தி.மு.கா விற்கு ஓட்டுப்போடுங்கள் என்றனர்.
         தி.மு.க விற்கு குறிப்பாக கலைஞருக்கு ஒட்டு கேட்ட எம்.ஜி.ஆர் பின்னர் தி.மு.க ஊழல் கட்சி அ.தி.மு.க விற்கு வாக்கு போடுங்கள் என்றார்.
        அண்ணா, எம். ஜி ஆர் இருவருமே தமது தாய் கட்சிகளைவிடுத்து 'தனியாக கட்சி தொடக்கிய' பின்னர்தான் தாய் கழகங்களுக்கு ஓட்டுப்பட வேண்டாம் தங்களுக்கு ஓட்டுப்போடுங்கள் என்றனர், அங்கு சொந்த கட்சி என்ற சுயநலம் இருந்தது. ஆனால் ரஜினி அ.தி.மு.கவிற்கு ஓட்டுப்போட சொல்லியபோது ரஜினி என்ன அ.தி.மு.க தலைவரா? இல்லை உறுப்பினரா? ரஜினி அ.தி.மு.க வை ஆதரித்தது ராமதாசுடன் கலைஞர் வைத்த கூட்டணிக்காக, ரசிகர்களைத்தாக்கிய ராமதாசுக்காக.
          ரஜினி எப்போதுமே ஏனையவர்களிடமிருந்து வித்தியாசப்பட்டவர்தான், இல்லாவிட்டால் 60 வயதிலும் 35 வருடமாக ஒரு துறையில் யாருமே நெருங்க முடியாத சூரியனாக இருக்க முடியாது.
          நீங்கள் யாரை முன்னோடியாக நினைக்கிறீர்களோ அவர்களை ஏதாவதொரு கோணத்தில் விமர்சிக்க முடியும், ஆனால் அவர்களிடிமிருக்கும் பின்பற்ற வேண்டிய விடயங்களைத்தான் இளைஞன் பின்பற்றுகிறான். ரஜினியிடம் பின்பற்ற வேண்டிய விடயங்கள் மிக அதிகமாக இருப்பதால்த்தான் ரஜினி பல இளைஞர்களுக்கு இன்றும் தனித்துவமான வழிகாட்டியாக இருக்கிறார்.


7/12/2010

என் பார்வையில் மதராசபட்டினம்





சாதாரணமாக நான் எல்லா படங்களைப் பார்த்தாலும்..அவற்றை விமரிசித்து பதிவிடுவதில்லை.


சில..அருமையான..அற்புத..சிறந்த படைப்பாய் இருந்தால்..மனதில் மகிழ்ச்சி ஏற்படுவதுடன்..அதை மற்றவர்களுடன் பகிர்ந்துக் கொள்ளவேண்டும் என நினைப்பவன்.
அப்படி..உங்களுடன் நான் பகிர்ந்துக் கொள்ள நினைத்து எழுதிய கடைசி விமரிசனம் 'இராவணன் '
இப்போது..மற்றொரு சந்தர்ப்பம் வந்துள்ளது..ஆம்..நான் பார்த்த 'மதராசபட்டினம்'


ஆரம்பம் டைடானிக்..பின் சில நிகழ்ச்சிகள் லகான் ஆகியவற்றை நினைவூட்டினாலும்..படத்தில் சில குறைகள் இருந்தாலும்...மன நிறைவை ஏற்படுத்திய படம் இது.


லண்டனில் வசிக்கும் மூதாட்டி ஏமி..வாழ்வின் இறுதிக் கட்டத்தில் இருக்கும் போது..இந்திய சுதந்திரத்திற்கு முன் இந்தியாவில் தான் காதலித்த வாலிபன் பரிதியைத் தேடி வருகிறாள்.அவளது பார்வையில் படம் சொல்லப் படுகிறது Flash back உக்தியில்.


தமிழ்த்திரைக்கு இக்கதை புதிதல்ல என்றாலும்..கதைக் களம்...கலைஞர்கள் அனைவரின் உழைப்பு ஆகியவை இப்படத்தை வெற்றிப் படமாக ஆக்குகின்றன.தனியாக காமெடிக்கென தனி டிராக் இல்லாவிடினும்..எல்லாப் பாத்திரங்களும் ஆங்காங்கே பேசும் வசனங்கள் நமக்கு சிரிப்பை வரவழைக்கின்றன.


ஆர்யாவின் நடிப்பு சூப்பர்..பாத்திரத்தில் ஒன்றி விட்டார் எனலாம்..ஆத்திரப்படுவதும்,காதலை கண்களால் சொல்வதும், சண்டைக் காட்சிகளிலும், கிளைமாக்சிலும்....நகைச்சுவை இடங்களிலும் (வாத்தியார் வீட்டுக் கதவைத் தட்டி..நன்றி என்பதற்கு ஆங்கிலத்தில் என்ன எனக் கேட்கும் காட்சியில் ஆகட்டும்..ஏ.பி.சி.டி., கற்றுக் கொள்ளும் போதும் பிரமாதம்) அசத்தல் நடிப்பு.


கதாநாயகி ஏமி...ராவணனையும் பொறாமைப் படவைக்கும் அழகு..படம் பார்ப்பவர்களை எளிதில் கவர்ந்து விடுகிறார்..'மறந்து விட்டியா' என்று கேட்கும் காட்சி ஒன்றே எடுத்துக்காட்டுக்கு போதும்.


படத்தின் வெற்றிக்கு பெரும் பங்கு வகிப்பது ஆர்ட் டைரக்டர் செல்வகுமார்..1947 மதராசபட்டினம்..இவரது உழைப்பை பறைசாற்றுகிறது.கூவம் ஆறு,போட் சவாரி,சென்ட்ரல் ஸ்டேஷன்,கை ரிக்க்ஷா (கலைஞர் நினைவிற்கு வருகிறார்),டிராம்,வால்டேக்ஸ் சாலை,பாரிமுனை,செகண்ட் லைன் பீச்..ஹேட்ஸ் ஆஃப் டு ஹிம்..


ஒளிப்பதிவாளர் நிரவ்ஷாவின் திறமைக்கு கிளைமாக்ஸ் காட்சி ஒன்றே போதும்.இசை ஜி.வி.பிரகாஷ்குமார்...பாடல்கள் கேட்க வைக்கின்றன...தியேட்டரில் இருந்து எழ வைக்கவில்லை.எல்லாத் துறையிலும்..அனைத்து நபரும் உழைத்து வந்த படம் இது..இயக்குநர் விஜய் எவ்வளவு பாராட்டினாலும் தகும்..


படத்தில் குறை என்று சொன்னால்தானே விமர்சனம்..


இடைவேளை..கிட்டத்தட்ட 90 மணித்துளிகள் கழித்து வருவதால்...பக்கத்தில் படம் பார்ப்பவர்...இந்த படத்திற்கு இடைவேளையே கிடையாது எனக் குரல் கொடுத்தார்..உண்மை...முழுப் படம் பார்த்த ஆச்சரியம்  இடைவேளையில் தோன்றிவிடுகிறது. அதுவே படம் மெதுவாக நகர்வது போன்ற தோற்றத்தை ஏற்படுத்திவிடுகிறது.


லகானில் மழையே இல்லாமல் மேகங்கள் திரண்டுவருகையில்...டான்ஸும்..பாட்டும் இருந்தது..இங்கு அப்படி ஒரு நிலையில்லாதபோது..மழையைக் கண்டு அவ்வளவு மகிழ்ச்சி..ஆட்டம்...ம் ஹூம்..ஒட்டவில்லை.


எல்லாவற்றையும் திறமையாய் கையாண்ட செல்வகுமார்..இரு விஷயங்களில் கோட்டை விட்டுள்ளார்..சென்ட்ரல் ஸ்டேசன் முகப்பு கடிகாரம்..அப்போதெல்லாம்..இன்னும் பிரம்மான்டமாய் இருந்தது.பாரிமுனையில் பேருந்தை காட்டும் இவர்..அப்போதெல்லாம் பேருந்து இஞ்சின் வெளியே (இன்றைய லாரிகள் போல் இருக்கும்)இருக்கும்..அதையும் கோட்டைவிட்டு விட்டார் எனலாம்.
இவை சிறுகுறைகளே..மற்றபடி..
படம் அருமை..அனைவரும் பார்க்க வேண்டிய படம்..


தமிழ்த் திரையுலகில் திறமை மிக்க இயக்குநர்கள் உருவாகிவருவது..பெருமகிழ்ச்சியைக் கொடுக்கிறது

இடுக்கை :அ.ராமநாதன்

6/28/2010

ராவணன் - என் பார்வையில்



ராவணன் திரைப்படத்தின் முதல் காட்சியை நேற்று கே ஜி  திரையரங்கில் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது.

வழமையான முதல் நாள் படம் பார்க்கும் கூட்டம்.

பரபரவென ஆரம்பிக்கும் ஆரம்ப காட்சிகள்.. எதுவித ஆர்ப்பட்டமும் இல்லாமல் நாயகன் விக்ரமின் அறிமுகம்.ஐஸ்வர்யாவை அழகைக் காட்டும் காமரா முதல் காட்சியிலேயே மனதைப் பறிக்கிறது.


பெயரோட்டம் ஆரம்பிக்கும் போதே விக்ரம்,ஐஸ்வர்யா ராய் ஆகியோருக்கு பலத்த கரகோஷங்கள்.


ஆச்சரியமாக பின்னர் ப்ரியாமணி, ரஞ்சிதாவின் பெயர்கள் தோன்றியபோதும் விசில் ஆரவாரங்களும் கூட..
ரஞ்சிதாவின் பெயர் பார்த்ததுமே நித்தி,நித்தி என்ற கூச்சல்களும் கேட்டது ரஞ்சிதாவிடம் 'நிறைய' எதிர்பார்க்கிறார்கள் எனப் புரிய வைத்தது.

பின்னர் வழமைபோலவே ரஹ்மானுக்கும் மணிரத்னத்துக்கும் பெருவாரியான கரகோஷங்கள்.

வீரா பாடலுடன் எழுத்துக்கள் திரையில்..

வசனம் சுகாசினி.. அட..
அது தான் சில வசனங்களில் சுஹாசினியின் சித்தப்பா கமலும் எட்டிப் பார்க்கிறார்..
'உங்கள் கடவுள் அப்பழுக்கில்லாதவரா?அழகானவரா?'

மணியின் வழமையான,ஆஸ்தான ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இணைந்திருப்பது படத்துக்கு ஒரு தனியான உயர்ச்சியைக் கொடுக்கிறது.
ஈரமான,குளுமையான,அழகான,உயரமான இடங்களிலெல்லாம் நாம் உலவுவது போல ஒரு உணர்வை ஒளிப்பதிவு தருகிறது.
சந்தோஷ் சிவனுக்கே உரிய ட்ரேட் மார்க்கான முகில்களும்,பச்சைப் பசேல் பின்னணியும் படத்தின் முக்கிய அம்சங்களாகின்றன.

இசைப்புயல் ரஹ்மான் படத்தின் ஒவ்வொரு காட்சிகளிலும் உயிர்க்கிறார்;ஜொலிக்கிறார்.
மெல்லிய உணர்வுகளை மீட்டும் இசையாகட்டும்,அதிரடி இசையாகட்டும்.. ரஹ்மான் மின்னுகிறார்.
அதிலும் சண்டைக்காட்சிகளின் பின்னணியில் வரும் கலிங்கத்துப் பரணி அருமை.
எங்கேயாவது தேடி எடுத்து மீண்டும் கேட்கவேண்டும்.
படத்தின் இறுதியில் வரும் "நானே வருவேன்" இருக்கையிலிருந்து எழுந்து விடாமல் செய்தது. இன்னும் காதில் ரீங்கரிக்கிறது.
இந்த இரு பாடல்களையும் யாராவது தேடி எடுத்துத் தாங்களேன்.

மணிரத்னத்தின் படங்களில் அதிக சண்டைக் காட்சிகள் இடம் பெற்ற படமாக ராவணனையே கருதமுடியும் என நினைக்கிறேன். விக்ரமினாலும் ரஹ்மானாலும் அந்த சண்டைக் காட்சிகளெல்லாம் அனல் பறக்கின்றன. அலுப்படிக்கவும் இல்லை.

இனி நடிக,நடிகரைப் பற்றிப் பார்க்க முன், கதை....
நவீன ராமாயணமே..

அப்படியே எடுத்து தந்தால் ராவணனுக்கு பத்து தலை வேண்டுமே என்று சில,பல வசனங்கள்,சில உருவக எடுத்துக்காட்டுக்கள்,சம்பவங்கள்,சில பாத்திரங்களின் குணவியல்புகள் மூலமாக சித்தரிக்கிறார் இயக்குனர்.
அவற்றுள் சில அடடா போட வைத்தாலும், மேலும் சில சலிப்பூட்டுவதையும் தவிர்க்க முடியவில்லை.மணிரத்னம் படத்தில் என்பதால் மேலும் உறுத்துகிறது.

தன் தங்கையைப் பலியெடுத்த போலீஸ் அதிகாரியைப் பழிவாங்க அவரது அழகு மனைவியைக் கடத்தி செல்லும் தாழ் குடியைச் சேர்ந்த ஒரு முரடனுக்கும் போலீஸ் அதிகாரிக்கும் இடையிலான மோதலே திரைக்கதை.
இடையிலே அந்த முரடன் (தன் மக்களுக்கு அவன் கடவுள் போல) கடத்தி வந்த மாற்றான் மனைவி மீது காதல் கொள்கிறான்.மனைவியை மீட்கப் படையெடுத்து வரும் போலீஸ் அதிகாரிக்கும் வீரையாவுக்கும் இடையிலான மோதலில் இந்த ஒரு தலைக் காதலும் கலக்கிறது.

ராவணன் விக்ரம்.. மனிதர் நடிப்பில் ஒரு ராட்சசனே தான்.. பலத்திலும் உடல் கட்டுக் கோப்பிலும் கூட..சீதையாக ஐஸ்வர்யா ராய்.. என்ன ஒரு அழகு.. கொஞ்சமும் மாசு மறுவற்ற முகம்.. பேசும்,மிரளும்,காதலிக்க அழைக்கும் கண்கள்..
ராமனாக - மிடுக்குடன் ப்ரித்விராஜ். தமிழர் நோக்கில்,ராவணனை ஹீரோவாக்கியதால் ராமனின் நல்ல இயல்புகளைக் குறைத்து வில்லனாக மிகைப்படுத்தியிருக்கிறார்.


அப்படியே கும்பகர்ணன் போல பிரபு(உடல் பருமனும் துணை வந்துள்ளது),விபீஷனனாக முன்னா,சூர்ப்பனையாக முத்தழகு ப்ரியா மணி என்று பரவலாக மூலக் கதை ராமாயணத்தில் கை வைக்காமல் பாத்திரங்களைப் பொருத்தி உலாவிட்டுள்ளார் இயக்குனர்.

அனுமார் யார் என்று எல்லாம் எம்மை சிரமப்படுத்தவில்லை . கார்த்திக் தன் அறிமுகக் காட்சியிலேயே அங்கும் இங்கும் குரங்கு போலத் தாவியும் சேஷ்டைகள் செய்தும் அனுமன் யானே என்று காட்டி விடுகிறார்.
அதற்காக ஐஸ்வர்யாவைத் தேடி சென்று அனுமன் போலவே கணையாழி போல அடையாளம் கட்ட முற்படுவது எல்லாம் மணிரத்னத்தின் தரத்துக்கு சிறுபிள்ளைத் தனம் போல இருக்கிறது.

விக்ரம் - ஆவேச இராததன்.அக்ஷன் காட்சிகளில் யாராலும் அடிக்கமுடியாத ஆஜானுபாகுவாக மிரட்டுகிறார். முறுக்கேறிய கட்டான உடம்பும்,முறுக்கு மீசையும் உஷ்ணப் பார்வையுமாக வீரையாவாக வாழ்ந்திருக்கிறார்.
ஆவேசப்பட்டு 'கப கப' எனும் போதும் சரி, தாபம்,காதலோடு இங்கேயே இருந்துருங்களேன் என்று கெஞ்சும்போதும், கம்பீரமாக எதிரியை தப்பிக்க அனுப்பும் கண்ணியத்திலும் நடிப்பில் மின்னுகிறார்.
பாத்திரங்களாக இக்கால நடிகர்களில் வாழ்பவர் இவரும் சூர்யாவும் மட்டுமே.
அடுத்த கமல் என்று அடித்து சொல்கிறேன்.

ஐஸ்வர்யா - அழகு.உருகுகிறார்.உருக வைக்கிறார்.சில இடங்களில் ஏங்கவும் வைக்கிறார்.கள்வரே பாடலில் வாவ்.. என்னாமாய் உடலை வளைத்து நடனமாடுகிறார்.நடன அமைப்பு ஷோபனாவாம். அப்படியே ஷோபனா ஐஸ்வர்யாவுக்குள் புகுந்தது போல ஒரு தத்ரூபம்.கண்களால் பேசும் இடங்களும் அருமை.

"எப்போ வருவீங்க?எனக்கு உண்மையில் துணிச்சலில்லை" என்று தனியே புலம்புவதிலும் பின் கடவுள் சிலை முன்னாள் உருகுவதிலும் நெகிழ வைக்கிறார்.

ப்ருத்விராஜ் - கம்பீரமான ஒரு போலீஸ் அதிகாரி.அழகாக ஹிந்தி நடிகர்கள் போல இருக்கிறார். மணிரத்னப் பட வாய்ப்பு மேலும் பொலிவைத் தந்துள்ளது.விக்ரமின் கம்பீரம் இல்லாவிடினும் சில இடங்கிலாவது ஈடு கொடுக்கிறார்.வசன உச்சரிப்புக்களும் பார்வையினால் மாறுதல் காட்டுவதும் அருமை.
ஐஸ்வர்யாவுடன் நெருக்கமான காட்சிகளில் நடிக்கையில் அபிஷேக் பச்சனே எரிச்சல் பட்டிருப்பார்.
பிரபு - கம்பீரமான அண்ணன்.வெயிட்டான பாத்திரம்.தாங்குகிறார்.
கார்த்திக்- பிரபுவை விடக் கொஞ்சம் பெரிய பாத்திரம்.சிரிக்கவும் வைக்கிறார். அனுமார் என்பதால் சேஷ்டைகள் விடுகிறார். இவரை தமிழ் சினிமா கதாநாயகனாக இழந்துவிட்டதே என ஏங்கவும் வைக்கிறார்.

ப்ரியா மணி - கொஞ்ச நேரமே வந்தாலும் ஒரு மினி சூறாவளியாக வந்து போகிறார்.அவரது கட்டிக் குரலுக்கேற்ற ஒரு வீரப் பெண் பாத்திரம்.

அரவாணியாக வையாபுரியும்,போலீஸ் அதிகாரியாக 'ஓரம்போ' புகழ் ஜோன் விஜயும் ஏனைய குறிப்பிடத்தக்க பாத்திரங்கள்.
இயக்குனராக மணிரத்னத்தை முன்பு எல்லாத் திரைப்படங்களிலும் வியந்ததையும் ரசித்ததையும் இத்திரைப்படத்திலும் அவர் காப்பாற்றுகிறார்.

முதல் காட்சியில் கம்பீரமாகப் பெரிய படகில் விக்ரம் வந்து ஐஸ்வர்யாவைக் கடத்துவது..மலையிலிருந்து ஐஸ்வர்யா அதலபாதாலத்திளிருந்து குதிக்கும் பிரம்மாண்டம். (ஆனால் அதை மீண்டும் மீண்டும் ஸ்டன்டாகக் காட்டியது தேவையில்லைப் போல் இருந்தது)அந்தத் தெப்பக் காட்சி.. சுழலும் காமராவும் விக்ரமின் முகபாவங்களும் கவிதை.
கடைசிக் காட்சியில் விக்ரம்-ஐஸ்வர்யா உரையாடல்களும் இடையிடையே flashbackஆக வரும் தொங்குபாலக் காட்சிகளும்..

கலிங்கத்துப் பரணியை மிகப் பொருத்தமாக இரு இடங்களில் கையாள்வது class.
ஐஸ்வர்யாவின் ஆடைகளாலேயே கணவரையும் காதலரையும் காதல் பிரிவிலும் தவிப்பிலும் உணர்த்துவதும் கவிதையே.

அருமையான காட்டு சிறுக்கி பாடலை படத்தில் ஏனோ வைக்கவில்லை. அதற்குப் பதில் ஒரு அடர் குரலில் விருத்தமாக மட்டும் ஐஸ்வர்யா-விக்ரம் இடையிலான ஊடல் சண்டையாகக் காட்டுகிறார்.ராமர் மனைவி ராவணனோடு டூயட்டா என்று யாரும் கேட்டு விடக் கூடாது என்பதற்கா?

படம் முழுவதும் இருவருமே தொட்டுக் கொள்ளாமலே நடிப்பதும் ஒரு புதுமையே.
கடவுள் சிலையருகே விக்ரம் கொஞ்சம் தாபம்,கொஞ்சம் வேதனை,கொஞ்சம் கெஞ்சலோடு ஐஸ்வர்யாவிடம் கேட்கும் கேள்விகளும்,பின்னர் செய்யும் காதல் பிரகடனமும் மனசில் நிற்கின்றன..இங்கேயே பதிவிட்டால் உங்களுக்கு அந்த சிலிர்ப்புக் கிடைக்காது..பார்த்து உணருங்கள்..உருகுங்கள்.

ஆனால் படப்பிடிப்பு நடந்த இடங்களின் தேர்வு  மிக அருமை.சாதாரணர் நாம் எல்லாம் நினைத்தும் பார்க்க முடியா இடத் தேர்வுகள்.இந்த இடங்களின் குளுமையை அனுபவிக்கவும் காமராக் கோலங்களை ரசிக்கவும் மட்டும் மீண்டும் ஒருமுறை ராவணன் பார்க்கலாம் என்று இருக்கிறேன்.


இடுக்கை :அ.ராமநாதன்

5/03/2010

எனது பார்வையில் சுறா - விமர்சனம்

        விஜயின் ஐம்பதாவது படம். சன் பிக்சர்ஸ், என தமிழ் நாடே கோலாகலமாய் எதிர்பார்த்திருத்த படம். சுமார் 600  சென்டர்களில் வெளியிடப்பட்டிருக்கும் படம்.
     படம் முழுவதும் விஜய்யின் புகழ் பாடுவதையே குறிக்கோளாகக் கொண்டு கிடைக்கிற வாய்ப்பில் எல்லாம் சுறா,புறா, நல்லவன், சத்ரியன், சாணக்யன் என்றெல்லாம் துதி பாடுகிறார்கள். முதல் பாதி முழுவதும் இதே வேலை தான் பாடுகிற ஆட்கள் தான் வேறு. நடுவே லூசுத்தனமான காதல், பாட்டு என்று குறிப்பிட்ட இடைவேளையில் வந்து ஆடிவிட்டு போகிறார்கள். நடு நடுவே வடிவேலுவுடன், விஜய் சேர்ந்து கிச்சு, கிச்சு மூட்டி சிரிக்க வைக்க பார்க்கிறார்கள். வழக்கமான ஒரு வில்லன், அரசியல்வாதி, ஊரையே போட்டு உலையில் வைப்பவன், நம்ம விஜயிடம் மட்டும் வசனம் பேசியே மாய்கிறார். அவ்வப்போது, அவன் சாதாரண ஆள் இல்லைடா என்பது போன்ற சொம்படிக்கும் வசனங்களை பேசிவிட்டு, விஜய்க்கு வெற்றி வாய்ப்பை கொடுத்துவிட்டு செத்துப் போகிறார். ஸோ..
விஜய் கொஞ்சம் வெயிட் போட்டிருக்கிறார். சில பல ஷாட்டுகளில் அழகாக இருக்கிறார். நான் நடந்தால், தஞ்சாவூரு பாட்டிற்கு ஜிம்னாஸ்டிக் கலந்த ஒரு கெட்ட ஆட்டம் போட்டிருக்கிறார் மனுஷன். இது ஒன்று போதும் விஜய் ரசிகர்களுக்கு மனதை தேற்றிக் கொண்டாட.. அதிலும் நிஜமாகவே தஞ்சாவூரு பாட்டில் சுமார் ஒரு நிமிடத்துக்கு தொடர்ந்து ஒரே ஷாட்டில் அவர் போடும் ஆட்டம் தூள்.
       தமன்னா வழக்கமான பெரிய ஹீரோக்கள் படங்களில் வருவதை போல லூசுப் பெண்ணாக வந்து மூன்று பாட்டுக்கு ஆடிவிட்டு போகிறார். வடிவேலு- எஸ்.பி.ராஜ்குமார் காம்பினேஷனில் ஒரு காலத்தில் நிறைய காமெடிகள் பின்னி பெடலெடுத்துக் கொண்டிருந்தது. இப்போது சுத்தமாக ட்ரையின் ஆகிவிட்டது போலருக்கு. முடியல.
வில்லன் மகதீரா பட வில்லன். பாவம் அவரு என்ன செய்வாரு..? விஜய் படத்தில வில்லனுக்கு என்ன பெருசா வேலை இருந்திட முடியும்?. சத்ரியன், சாணக்யன் என்று பேசிய வசனத்துக்கெல்லாம் இவரும் அவ்வப்போது அதற்கான பொழிப்புறையை கொடுத்துவிட்டு சாகிறார்.
        ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவில் குறையொன்றுமில்லை.மணிசர்மாவின் பாடல்கள் ஏற்கனவே ஹிட்டான தெலுங்கு ட்யூனாக இருந்தாலும் தாளம் போட வைக்கிறது. டான்மாக்ஸின் எடிட்டிங் பாடல்களில் ஆண்டனியின் நினைவை ஊட்டுகிறது.
     கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கிறார். எஸ்.பி.ராஜ்குமார். எப்பாடு பட்டாவது கொஞ்சமாவது முனைந்து புத்திசாலித்தனமான, சுவாரஸ்யமான காட்சிகளை வைத்துவிடக்கூடாது அதெல்லாம் விஜய் படம் பாக்கிறவங்களுக்கு இது போதும் என்று முடிவு செய்து கொண்டு கங்கணம் கட்டிக் கொண்டு திரைக்கதை பண்ணியிருக்கிறார். இவர்களின் குறிக்கோள், விஜயின் அரசியல் பிரவேசங்களுக்கு சொம்படிக்க வேண்டும் என்பதை முடிவெடுத்து காட்சிகளை வைத்திருக்கிறார். அதிலும் முதல் பாதி ஸ்…பா.. முடியலை.. ரெண்டாவது பாதியில முடியல.. விஜய்யை வைத்து காமெடி செய்ய, சண்டை போட, ஆட்டம் ஆட, என்று பல விஷயஙக்ளுக்கு முயற்சி செய்திருக்கிறார் கொஞ்சம் கூட புதிதாய் ஏதும் செய்துவிடக்கூடாது என்ற முனைப்போடு. வாழ்த்துக்கள்.


இடுக்கை :ராமநாதன்.அ

4/20/2010

குர்பான் - என்ன சொல்ல வருகிறது?















குர்பான் என்ற இந்தி படத்தை சமீபத்தில் பார்க்க முடிந்தது. கமர்ஷீயல் என்று குறுகிய வட்டத்தில் சிக்காமல் வேறுபாதையில் பயணிக்கும் ஒரு இந்திப்படமாகவே எனக்குத்தோன்றுகிறது. பாம்பே, மிஷன்காஷ்மிர் போன்ற படங்களில் எடுத்துக்கொண்ட கதைக்களமாக இருந்தாலும் அதைவிட ஒருபடி மேல் இதன் கதைக்களம் கையாளப்பட்டிருக்கிறது.

சிறுபான்மை மதத்தில் ஒரு குழந்தை பிறக்கிறது என்றால் ஒரு தீவிரவாதி பிறந்துவிட்டான் என்று கிட்டத்தட்ட முத்திரை குத்தப்படும் நாடு இந்தியா என்றாகிவிட்டது. ஏதோ மற்ற மதங்களில் பிறக்கும் குழந்தைகள் எல்லாம் காந்தியும், புத்தனையும் போல. இதை ஏற்றுக்கொள்ள சிரமம் என்றாலும் குர்பான் போன்ற திரைப்படங்கள் இதையே வலியுறுத்துகிறது. இந்தப்படத்தில் அகிலஉலக நாட்டாமை, ஏகாதிபத்திய அமெரிக்காவிற்கு பாடம் கற்பிப்போம் என்று அதனை அவர்கள் நியாயப்படுத்த முயன்றிருப்பது மனிதத்திற்கு அப்பாற்பட்டது.

எந்த மதமும், எந்த கடவுளும், எந்த புனிதநூல்களும் அப்பாவிகளை கொல்வது நியாயம் என்று கற்பிப்பதில்லை. இதனை முடிவெடுக்க இந்த மனிதன் யார்? மனிதனால் உருவாக்கப்பட்ட மதத்தின் பெயரைச்சொல்லி ஒரு மனிதன் மற்றொரு மனிதனை கொல்லவது என்பது மிருகத்தனத்தின் உச்சம். அது எந்தமதமாக இருந்தாலும் சரி. குறிப்பிட்ட சிறுபான்மையினரே இதற்கு காரணம் என்று சொல்லி பட்டாசு வெடித்தாலும் அதற்கு அந்த அமைப்புத்தான் காரணம் என்று சுட்டிக்காட்டுவதும் சிறுபிள்ளைத்தனம்.

நாசிக் மாலேகானில் வெடித்த வெடிகுண்டுக்கு காரணம் ஒரு இந்து அமைப்பு. யாரை கைது செய்தார்கள். எந்த இந்து அமைப்பு காரணம் என்பது இன்னும் கண்கட்டுவித்தையாகவே இருக்கிறது.மதத்தின் பெயரைச்சொல்லி கொல்வது என்பதே தவறு. அது எந்தமதமாக இருந்தால் என்ன? ஏன் இந்த பாராபட்சம். குஜராத்தில் மோடி மட்டும் என்ன ஓலைப்பட்டாசா வெடிக்க வைத்தார்.

தீவிரவாத்தை ஒழிக்கிறோம் என்று ஆப்கானில் பச்சைக்குழந்தைகளை வரை கொன்று குவித்தது அமெரிக்கா. ஈராக்கில் அணுகுண்டை தேடுகிறேன் பேர்வழி ஓட்டுமொத்த படைகளையும் கொண்டுவந்து நிறுத்தி துப்பாக்கி முனையில் பெண்களும், குழந்தைகளையும் அதட்டுகிறது அமெரிக்கா. இதற்கு தண்டனையாக அமெரிக்காவில் பிறந்த குழந்தையையும், பெண்களையும், அப்பாவிகளையும் கொல்வது நியாயம் என்று எந்த புனிதநூலில் சொல்லப்பட்டிருக்கிறது. அதை நியாயப்படுத்துவது எந்தவிதத்தில் நியாயம்? அர்த்தமில்லாத விசயங்கள் அரங்கேறிக்கொண்டிருக்கிறது என்றாலும் அதை நியாயப்படுத்துவது போன்ற திரைப்படங்கள்தான் உண்மையில் தவிர்க்கப்படவேண்டியவை. அதில் ஒன்றுதான் இந்த குர்பான்.

குர்பான் - (அர்த்தமில்லாத)தியாகம்.

 ஒரு காமன் மேன் (அ.ராமநாதன்)

3/02/2010

எனது பார்வையில் விண்ணைத் தாண்டி வருவாயா

உனக்கு 22 வயது எனக்கு 23 வயது...

உனக்கு சினிமா எடுப்பது லட்சியம் எனக்கு சினிமா பார்ப்பதே பாவம்...

நீ இந்து பையன்... நான் கிருஸ்துவ பெண்

என்றெல்லாம் த்ரிஷா ஆயிரம் காரணங்கள் சொன்னாலும் அத்தனைக்கும் சிம்புவின் பதில், ஐ லவ் யூ என்பதாக இருக்கிறது! அந்தக் காதல் த்ரிஷாவுக்கும் தொற்றிக் கொள்கிறது. இருவர் காதலும் என்னவானது என்பதுதான் விண்ணைத்தாண்டி வருவாயா சொல்லும் கதை!

அந்தப் பக்கம் இந்தப் பக்கம் திரும்பாமல் துல்லியமாக நூல் பிடித்ததுபோல ஒரு காதல் கதையைச் சொல்லியிருக்கிறார் கௌதம் வாசுதேவ் மேனன். துணைக் கதைகளோ( ரீமேக்) உதிரி இழைகளோ எதுவும் இல்லாத சுத்தமான காதல் கதை. காதலின் சுகமும், பிரிவின் வலியும் நிதானமாகச் சொல்லப்படுகின்றன. சிம்பு தன் காதலை வளர்த்தெடுக்கும் விதமும் த்ரிஷா அதற்குச் சாதகமாக எதிர்வினையாற்றுவதற்கான சந்தர்ப்பங்களும் சுவாரஸ்யம்!

நீ என்னை ஃபாலோ செய்கிறாயா என்று த்ரிஷா கேட்கும் இடம், அருமை

‘உன் கண்ணாலேயே என்னை யாரும் பார்க்கலை போல இருக்கு’ என்பது போன்ற வசனங்களில் கௌதம் மேனனின் பேனாவில் காதல் வழிகிறது.

“எங்கிட்ட அப்படியென்ன உனக்கு பிடிச்சது?” என எப்போதோ கேட்ட த்ரிஷாவின் கேள்விக்கு அமெரிக்க எபிசோடில் கிடைக்கும் பதில் டைரக்டர் கெளதம்மேனனின் டச்.

சிம்பு சில்மிஷம் எதுவும் இல்லாத சிம்பு படம். . காதலில் உருகும் இளைஞனின் வேடத்தைக் கச்சிதமாகச் சித்தரிக்கிறார். காதலின் உற்சாகம், ஏமாற்றத்தால் வரும் ஆத்திரம், பிரிவின் வலி எல்லாமே அளவெடுத்தது போல இருக்கிறது. இப்படி டைரக்டரை நம்பி தன்னை ஒப்படைக்க சிம்பு முன்வந்தால் சிம்புவின் சினிமா கேரியர் ஜிவ்வென்று பறக்கும்.

த்ரிஷாவுக்கு இது முக்கியமான படம். இயல்பான அழகைத் தன்னைச் சுற்றிலும் படரவிட்டபடி அவர் நடந்து செல்லும் காட்சிகள், குறும்பான பார்வையிலும் சின்னச் சின்ன சிரிப்பிலும் நுட்பமான முக பாவ மாற்றங்களிலும் தன் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதம் ஆகியவை ரசிக்கும்படி உள்ளன, கிளைமாக்ஸில் சிம்பு பேசப் பேச உருகும் காட்சி என்று பல இடங்களில் நன்றாக நடித்திருக்கிறார். படம் முழுவதும் புடவைக்கடை மாடல்போல இவர் வருவது வித்தியாசமான அழகாகக் காட்சியளிக்கிறது. துளிக்கூட உடலைக் காட்டாமல் படம் முழுவதும் வசீகரிக்கிறார். த்ரிஷாவுக்கான நளினி ஸ்ரீராமின் ஆடை வடிவமைப்பு அற்புதம்.

பாடல்களால் நம்மைக் கட்டிப்போடுகிறார் இசைப்புயல். பாடல்களில் இருக்கும் மேற்கத்தியத்தனம் படத்தின் நிலையையே உயர்த்திச் செல்கிறது.

மனோஜ் அமெரிக்காவையும் கேரளாவையும் சென்னையின் சில இடங்களையும் அழகாகப் படம் பிடித்திருப்பதுடன் த்ரிஷாவை மிக அழகாகக் காட்டியிருக்கிறார்.


அதேபோல இரண்டாம் பாதியில் படம் மிக மெதுவாக நகர்கிறது. வெவ்வேறு இடங்களில் த்ரிஷாவும் சிம்புவும் சந்தித்துப் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். காதலின் வெவ்வேறு உணர்வு நிலைகள் பற்றிச் சலிக்கச் சலிக்கப் பக்கம் பக்கமாகப் பேசிக்கொண்டே போகிறார் மேனன். காதலை மென் தென்றலாக உணரவைப்பதற்காக ரொம்பவே மெனக்கெடுகிறார். ஆனால் திரும்பத் திரும்ப ஒரே விதமான காட்சிகள் வந்து அலுப்பூட்டுகின்றன.
எப்படியோ

விண்ணைத் தாண்டி வருவாயா ஒரு உலக காதல் படம்..

நமது ரசிகர்களின் பார்வையில் விண்ணைத் தாண்டி வருவாயா

விண்ணைத் தாண்டி வருவாயா ஒரு உலகப் படம்..

தமிழ் சினிமாவின் மொக்கை மசாலாக்கள் மத்தியில் ஒரு குறிஞ்சிப்பூ..

இந்தப் படம் பிடிக்காதவர்கள் c,d,e,f….z செண்டர்களில் வாழ்பவர்கள்..

இந்தப் படம் ஓடாவிட்டால் இனி அசலும், வேட்டைக்காரனும் தான் தமிழகத்தின் தலைவிதியாகும். ஜாக்கிரதை.

கெளதம் ஒரு கிளாஸிக் ஃபில்ம் மேக்கர். ஹாலிவுட் தரத்திற்கு இணையாக எடுத்திருக்கிறார்.

தாங்க்ஸ் பா.. ரொம்ப நாளைக்கு பிறகு நல்ல காதல் படம்…..