தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

2/12/2010

தற்கொலைக் கவிதைகள்

1.
தற்கொலைக்கு

விஷம் வாங்கிவர பயணிக்கின்றன
என் கால்கள்.
முட்டாள்தனமென்று புத்திசாலிகள்
தூற்றலாம்;

மக்கள்தொகையிலொன்று குறைந்ததென்று
எதிரிகள் மகிழலாம்.

ஒன்றிரண்டு கண்ணீர்த்துளிகள்
நான்கைந்து அழுகைகள்
சில உதடு பிதுக்கல்கள்

கண்ணீர் அஞ்சலி சுவரொட்டிகள்
கொஞ்சம் பிரிவுக் கவிதைகள்

இவை எதைப் பற்றிய பிரக்ஞையுமின்றி
நிகழலாம் இவனது
மரணம்.

விஷம் வாங்கிகொடுத்த
வேலைக்காரனென்று நசுக்கப்படலாம்
நானும்.

2.
தோல்விகளால் நிரம்பியவன்
வெற்றிகளால் நிரம்பியவனை
சந்தித்தான்

கொஞ்சம் மெளனம்
கொஞ்சம் வன்மம்
கொஞ்சம் பரிகாசம்
கொஞ்சம் நஞ்சு
இருவருக்கும் இடையே
மிதந்து கொண்டிருந்தது.

கடைசியாக,
அறிவுரைகளுடன் நகர்ந்தான்
வென்றவன்
தோல்வியுடன்.

படித்ததில் பிடித்தது

இருந்து என்ன

ஆகப் போகிறது

செத்துத் தொலைக்கலாம்

செத்து என்ன ஆகப் போகிறது

இருந்து தொலைக்கலாம்.

காதல் விதைகள்

ஒரு நாளில் எத்தனை முறை உன்னை நினைக்கிறேன் என்பதை ஒரு நாளில் எத்தனைமுறை சுவாசிக்கிறேன் என்பதைக்கொண்டே கண்டுபிடிக்கிறேன்.

இலையுதிர்காலத்தில்தான் உன் வருகை நிகழ்ந்தது. மழைகண்டவுடன் தலைதூக்கும் சிறுபுல்லாய் சிலிர்த்து எழுந்தது என் தேசம். என் நிரந்தர இளவரசி நீ.

ஜலதோஷம் பிடித்திருக்கிறது என்றாய் ஓர் இரவில். என்னைத்தவிர அதென்ன ஜலதோஷம் உனக்கு பிடித்திருக்கிறதென்று இரவெல்லாம் திட்டித்தீர்த்தேன். உன்னையே சிந்தித்தேன். நீ தேன்.

என் கவிதைகளை சுவாசிக்கும் உன்னிடம் எதையும் எதிர்பார்க்கவில்லை.இதழோர புன்னகையையும் எனக்கான நேசத்தையும் தவிர.

உன் கனவுகளை ஆட்கொள்கிறேன் என்றாய். உன் உறக்கம் கெடுத்த கனவை திட்டுவதா இல்லை கனவில் வருகின்ற என்னை திட்டுவதா என்கிற குழப்பத்தில் உறங்கிப்போகிறேன். சத்தமின்றி என் கனவில் கண்சிமிட்டி சிரிக்கிறாய் நீ.

சைக்கிளில் நீ பயணிக்கும்போதெல்லாம் துயரங்களால் நிரம்பித்திரிவேன். என் இளவரசி பயணிக்க வேண்டியது பல்லக்கில் அல்லவா?

யாருமற்ற கடற்கரை,அழகான அந்தி,ஒற்றை நிலா,பாதம்தொடும் அலை,அருகில் நீ. சொர்க்கத்தை விவரிக்க சொன்னால் இப்படித்தான் விவரிப்பேன்.

கோடையொன்றில் கொடைநாட்டில் கன்னம்தொடும் பனிக்காற்றின் நடுவில் செம்பருத்திப்பூ உன்னுடன் விரல்கோர்த்து நடக்கவேண்டும். கவிதைகளால் உன் இதயம் நிறைப்பேன் அக்கணம்.

காற்றை மொழி பெயர்த்தால் இசை. நேற்றை மொழிபெயர்த்தால் சரித்திரம். நம் காதலை மொழிபெயர்த்தால் நீ,நான்,நாம் மற்றும் வெண்ணிலா.

இத்தனை அழகான நேசத்தை சுமந்து திரிகிறேன். இத்தனை அழகான உன் நினைவுகளை சுமந்து திரிகிறேன்.நாடோடி என்கிறது உலகம். காதலோடி என்கிறது உள்மனம்.

தங்கமீன் இரண்டு ஒன்றாக நீந்துகிறது.ஊரெல்லாம் சொல்கிறது இதுபோல் அழகு வேறில்லையென்று. முட்டாள்கள் கறுப்புமீன்விழியாள் உன்னை பார்த்ததில்லை போலும்.

நாம் சந்திக்கும் முதல்பொழுதில் மழைக்குபின் மரங்களடியில் உன் விரல்கோர்த்து நடக்கும் தருணத்தை உனக்கு பரிசளிப்பேன்.

க’விதை’க்குள் விழுந்து விருட்சமென வளர்ந்து வனமாக அடர்ந்து கிளைத்து பூத்து நிற்கும் நந்தவனம் நீ.

[காதலர்களுக்கு Advance காதலர்தின நல்வாழ்த்துகள்]

2/06/2010

கலைக்காக(திரைப்படம் )

அடி


ஓவியப்பெண்ணே

உன்னையுமா

விட்டுவைக்கவில்லை

உலகம்

ஓவியத்தில்கூட

ஒளிவு மறைவு

வேண்டாமென்கிறது

ஒட்டுத்துணி

கலைக்காகத்தானே

என்று

கலைந்தெறிப்படுகிறது

கன்னியமான ஆடை

அசந்துபோய் பார்க்கிறது

அற்ப உலகம்

ஆதாம் ஏவாளின்

அந்தகால ”நிஜமாய்”

இந்தக்கால

கலையழகியை

ஆண்டவன் கொடுத்த

அற்புதபெண்ணழகு

கலைகளுக்காக

காவுகொள்ளபடுகிறது

கற்பும் மானமும்

காற்றில் பறக்க....

தோழி

வழக்கமாய்

கடற்கரை வளாகத்தில்

நாம் சென்று விட்டால்

எங்கிருந்தோ,

பூக்கூடையோடு வந்து

பேரம் பேசாமல்

முழம் போட்டு அளக்காமல்

கைநிறைய

மல்லிகைப்பூவைக்

கொடுத்துவிட்டு செல்வாளே

ஒரு பெரியம்மா...

அவளை நினைவு இருக்கிறதா...

சமீபத்தில் நான் மட்டும்

கடற்கரை மணலில்

நடந்தபோது

அவள் எதிபபட்டாள்...

என்னை அடையாளம் "கண்டு"

"பாப்பா எப்படி இருக்கு"

ஆவலோடு நலம் கெட்டாள்...

அவள் என்னை மாதிரியே

உன்னை மறக்கவில்லை...

நமக்கான நிகழ்வுகளை

அவள் மறக்கவில்லை...

அவள் மட்டுமல்ல

நானும்தான்...!

நாம் சென்ற

உணவு விடுதிகள்...

திரையரங்குகள்...

ஆலயங்கள்...

துணிக்கடைகள்...

நகைக்கடைகள்...

நண்பர்கள் வீடு...

அமர்ந்து பேசிய

ரயில்நிலையங்கள்...

இங்கெல்லாம் இப்போது

நான் மட்டும் செல்கிறேன்...

அந்தப் பூக்கடைப்

பெரியம்மாவைப்போல்...

என்னைப் பார்த்ததும்

உன்னை அடையாளம் சொல்லி...

எல்லோரும் உன்னை

விசாரிக்கிறார்கள்...

நீயும் தனியாக

செல்லும் போது

என்னைப் பற்றி

உன்னிடமும் இப்படித்தானே

நலம் கேட்பார்கள்

தோழி...

இதையெல்லாம்

சொல்லித் தொலைக்க

எனக்குக் கவிதை இருக்கிறது...

உனக்கு ?...
 
நன்றி :சினஹன்

காதல் ஓவியம்

கவி எல்லாம் நிஜமாகுமென்று

காலமெல்லாம் காத்திருந்தும்

காதல் தூரிகை கடைசியில்

வரைந்தது... கன்னங்களில்

கண்ணீர் துளிகளையே...
மச்சி நீயும்


பச்சை காட்டி

உச்சி குளிர

வைத்தாய் - இன்று

கொச்சைத் தமிழில்

பேச்சை மாற்றி

மூர்ச்சையாக்கி

விட்டாய்....