தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

10/07/2010

ஆஸ்கார் ஒயிஸ்ட் &லூயிஸ் ப்ரெய்ல்


ஆஸ்கார் ஒயிஸ்ட் - எழுத்தாளர்

இவர் நீதி, நேர்மை, சத்தியம், புண்ணியம். ஒழுக்கம். நம்பிக்கை. நட்பு, காதல் என்று பிறர் புனிதப்படுத்தும் அத்தனை விஷயங்களையும் பக்கம் பக்கமாகக் கிண்டலடிப்பவர்.

சிறிதளவு நேர்மை இருப்பது ஆபத்தானது. அதிகபட்ச நேர்மையுடன் இருப்பது உயிருக்கே உலை வைத்துவிடும்.நல்ல அறிவுரையை யாராவது உங்களுக்கு வழங்கினால், அதை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று முழிக்க வேண்டாம். உடனே மற்றவர்களுக்கு கொடுத்துவிடுங்கள். நல்ல அறிவுரையை நாம் வைத்துக் கொள்ளக்கூடாது.
இது அவரின் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள சில வரிகள்.

ஆனால் தன்னையும் சேர்த்தே தான் கிண்டலடித்துக் கொள்வார். "நான் சொல்வதை மக்கள் ஏற்றுக் கொண்டுவிட்டால் உடனே எனக்குப் பயம் பிறந்துவிடும். ஒருவேளை நான் சொன்னது தவறானதாக இருக்குமோ? அதனால்தான் என் கருத்துகளுக்கு இத்தனை வரவேற்பு கொடுக்கிறார்களோ?'

நையாண்டியும் எகத்தாளமும் நிரம்பி வழிந்தாலும், ஒயில்டின் எழுத்துகள் நிச்சயம் எதிர்மறையானவை அல்ல. ஓர் உதாரணம். இழந்துபோன என் இளமையை மீட்க எதையம் செய்யத் தயாராக இருக்கிறேன். மூன்று விஷயங்களைத் தவிர காலை சீக்கிரம் படுக்கையில் இருந்து எழுந்திருப்பது, உடற்பயிற்சிகள் செய்வது, மதிக்கத்தக்க மணிதராக வாழ்வது.'

என்ன ஒரு வித்யாசமான புகழ் பெற்ற எழுத்தாளர்!

இவர் வாழ்க்கையும்  வித்தியாசமானது ...

பார்வை இழந்தால்-வாழ்கை ?

பார்வை இழந்தால் ,வாழ்கை என்னவாகும் ?

என்னென்ன சாதனைகள் செய்ய முடியும்?

உதாரணம் - லூயிஸ் ப்ரெய்ல்

இராணுவத்தில் தகவல் பரிமாற உதவும் சங்கேதக் குறியீடுகளை அடிப்படையாகக் கொண்டு ப்ரெய்ல் எழுத்து முறையை தன்னுடைய 15வுது வயதில் வடிவமைத்தார்.

இது ப்ரெய்ல் எழுத்து முறை -கணிதம் மற்றும் சங்கீதக் குறியீடுகளையும் உள்ளடக்கியது.

தன்னுடைய 20வது வயதில் பார்வையற்றோருக்கான முதல் புத்தகத்தை வெளியிட்டார்.
அவர் வாழ்நாளின் இறுதிவரை ப்ரெய்ல் கல்வி முறை நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஆனால் அவர் இறந்தபின் தான் அதன் சிறப்புகளை அறிந்த பிரான்ஸ் அரசு ப்ரெய்ல் கல்வி முறையை அங்கீகரித்தது.

இந்த விஞ்ஞான யுகத்துக்குப் பொருந்தும் வகையில் முன்னெப்போதும் விட ப்ரெய்ல் முறை மேம்படுத்தப்பட்டுள்ளது.எனவே பார்வையற்றோர்க்கான உயர் கல்விக்கும், அவர்களது சாதனைகளுக்கும் பிரகாசமான வாய்ப்பு உள்ளது.

மற்றவர்களைச் சந்தோஷப்படுத்தி, நாம சந்தோஷப்படுவது சின்ன சந்தோஷம். ஆனா மற்றவங்களோட சந்தோஷத்தையும் நம்ம சந்தோஷமா பெரிசா கொண்டாடும் போது கிடைப்பது பெரிய சந்தோஷம். சின்ன சந்தோஷத்தை வார்த்தைகள்ல சொல்லிவிடலாம். பெரிய சந்தோஷத்தை வார்த்தைகள்ல அடக்க முடியாது

10/06/2010

என்னுடைய மரணம்


நாளை நான் இறந்துவிடுவேன்..,
எனக்கு பிடித்த முற்றத்து மல்லியும்,
வேலியோரத்து செவ்வரளியும்
வழமைப் போல் பூக்கும்
இதை நானறிய மாட்டேன்....,

மரண ஓலம் வீட்டை நிறைக்கும்,
இன்னார் என்று அழைத்ததுப் போய்
"பொணத்தை எப்போ எடுப்பாங்களாம்"
உறவினர்களின் அன்பான விசாரிப்புகள் தொடரும்,
இதையும் நானறிய மாட்டேன்....,

மாமரத்து உச்சியினில் கூடுகட்டி வாழும்
தூக்கனாங்குருவியும்
ஒருகணம் எட்டிப்பார்த்துவிட்டு செல்லும்.
பின்பு, மறந்துவிடும்.
உறவுகள் அழும்,
ஒன்று, இரண்டு, மூன்று மாதங்கள்....,
முழுதாய் ஓட
என்னை மறந்து, என் முகமும்
மறந்துவிடும்.
கொஞ்சம் கொஞ்சமாய்
சுவற்றில் சித்திரமாய்
என் படமும் ஏறிவிடும்.
இதையும் நானறிய மாட்டேன்..,

ஓர் வருடம் ஆகி விட்டாலோ,
எல்லோரும் என்னை மறந்து விடுவர்.

ஆனாலும்,
எனக்காக எங்கோ தொலைதூரத்தில் ஆத்மார்த்தமாய்
இதயத்தின் வழியெல்லாம்
ஒன்றுசேர,
ஒரேயொரு ஜீவன் மட்டும்
எப்பவும் எனக்காக,
ஊமையாய் அழுதுகொண்டு இருக்குமா?


- கவிதையின் கரு மட்டும் தந்த  நண்பருக்கு நன்றி

10/05/2010

தமிழ் திருவள்ளுவனே....




நெஞ்சு நிமிர்த்தி ஒய்யார ஓங்காரமாய் அமர்ந்து
அதிகாரமாய் ஆயிரத்து முண்ணூற்று முப்பத்தி ஒன்று

நெரிகொண்டு சீர்கொண்டு வழிதடம் மாறாமல் வாழ
வீறு கொண்டு இரு வரி கொண்டு வாழ்வை வடித்தவனே

ஒவ்வொண்றிலும் ரெவ்வெண்டு வரி கொண்டு
அவ்வீரடியில் இவ்வுலகத்தை அடகியவனே

வரிசை மாறாமல் வடித்து வைத்தவனே

தப்பாமல் இம்முப்பால் குடிதவனுக்கு ஈடுக்கு
ஒப்பாமல் ஒருவரும் இல்லை

இப் பூகோள உலகத்திற்கு
நெறி மாறாமல் வாழ கற்று கொடுதவனே

கீதைக்கு முன்னால் நீ கூறி இருந்தால்
உனை அல்லவா வணங்கி இருப்பார்கள்
இறைவன் கூட உன் புகழ் கேட்டு
உன்னை போல் வேறொருவனை படைக்க மறுத்ததாக கேள்வி

அன்னைக்கும் அறிவுக்கும் பண்பிற்கும் பாசத்திற்கும்
தந்தைக்கும் தனயனுக்கும் ஆசைக்கும் மோகதிற்கும்
கற்றவனுக்கும் கல்லதவனுக்கும் அறியனையில் இருபவனுக்கும் ஆண்டியாய் உள்ளவனுக்கும்

என்று எத்துனை எல்லாம் உண்டோ
அத்த்னையிலும் உன் கால் தடங்கள் ...

இந்த அனுபவ படிப்பை பெறுவதற்கு ஆயிரம் ஆண்டுகள்
அவனியில் அவதரிதாயோ

இதை அறியாமல் இன்னும் உன்னை
பற்றி ஆராய்ச்சியில் ஆயிரம் பேர்

வள்ளுவனே

இவையனைத்தும் சிந்தித்து கற்றயோ
இல்லை உனை நிந்தித்து பெற்றாயொ ..

ஈரேலுலகமும் உன்னை மட்டும் தொழுதால் போதும்
பண்ணிய பாவங்கள் பறந்தோடிடும்

மூவிரெண்டு வார்த்தைகள் எழுதினாலே தன் பெயரை
தவறாமல் எழுதும் இவ்வுலகில் உனை போன்று ....

வள்ளுவா

உனை வைத்து அல்லவா என் தமிழ் மொழி
காலம் கனகெடுக்கிறது
இறைவன் ஆசி பெற்ற தெய்வ மகனே
என் தமிழ் திருவள்ளுவனே உனை வணங்குகிறோம்

10/04/2010

தொடரட்டும் தொடர் வெற்றி


         "வெற்றி என்பது ஒரு முடிவல்ல. அது ஒரு பயணம்" என்பார்கள். ஆகவே உங்கள் வாழ்நாள் முழுவதும் வசந்தமலர் பறிப்பதற்குத் தொடர்ந்து முயன்று கொண்டே இருங்கள். முயற்சிகள் வலிமை மிக்கதாகவும், அறிவுப்பூர்வமாகவும் அமைவதற்கு உங்களுடைய அறிவின் பலம் அதிகரித்துக்கொண்டே இருக்க வேண்டும். கற்பதை நிறுத்துவது என்பது நமது முன்னேற்றத்திற்கு முட்டுகட்டை போடுவதாகும்.

கற்பது வாழ்க்கையில் நடைமுறைப்படுத்துவதற்கே தவிர பட்டம் பெறுவதற்கு
மட்டும் அல்ல என்பதை முதலில் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதைத்தான் நேற்றைய பட்டதாரி இன்று படிப்பதை நிறுத்திக் கொண்டால் நாளை படிக்காதவன் ஆகிவிடுவான். (Graduates of yesterday; Stops learning yesterday will be uneducated tomorrow") என்று கூறுவார்கள்.

தினமொரு மணி

தினசரி குறைந்த பட்சம் ஒருமணி நேரமாவது படியுங்கள். கிடைப்பதை எல்லாம் படிக்காமல், தேர்ந்தெடுத்துப் படியுங்கள். உங்களுடைய வாழ்க்கைத் தேவைக்கேற்பவும், தொழிலுக்கு ஏற்பவும் தகுந்த நூல்களை தேர்வு செய்து படித்தால் தொடர் வெற்றியை உங்களால் பெற முடியும்.

படிக்கத் படிக்கத்தான் அறிவுப் பசி அதிகரிக்கும். புதிய கருத்துக்கள் மனதிற்கு உத்வேகத்தையும், நம்பிக்கையையும் கொடுக்க வல்லது. மேலும் அறிவு மனம் விரிய, விரிய தன்னம்பிக்கை வேர்கள் மனதில் ஆழமாகப் பதியும். ஆகவே தினமொரு மணி நேரமாவது உங்களுடைய அறிவுப் பசிக்குத் தீனி போடுவதை பழக்கமாகிக் கொள்ளுங்கள்.

கற்ற கருத்துக்களைக் குறிப்பெடுத்து வைத்துக்கொள்ளுங்கள்... ஓய்வு நேரத்தில் குறிப்பெடுத்துள்ள கருத்துக்களை எடுத்து மீண்டும் மனதில் பதியுங்கள். தன்னம்பிக்கையும், தெளிவும் தரும் கருத்துக்களே வாழ்க்கையின் வளமிக்க வழிகாட்டி என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நல்ல நூல்களே நல்ல நண்பர்கள், ஆகவே எப்பொழுதும் கைவசம் நல்ல நூலொன்றை வைத்திருங்கள். நடைமுறை வாழ்வில் காத்திருப்பது என்பது தவிர்க்க முடியாதவொன்றாகிவிட்டது. அதாவது பயணப்படும் வாகனத்திற்காக காத்திருப்பது, ஒருவரைச் சந்திக்கச் செல்லும்போது காத்திருப்பது மருத்துவமனையில் காத்திருப்பது போன்ற நேரங்களைப் பொன்னான நேரத்தை வீணாக்காமல் கைவசம் உள்ள நூலை எடுத்து படிக்கலாம். இவ்வாறு செய்வதால் வீணாகக் கரையும் நேரம் உபயோகமாகின்றது.

சிலர் படிப்பதற்கு நேரம் கிடைக்கில்லை என்று புலம்புவார்கள். அது சரியல்ல. மனமிருந்தால் நிச்சயம் வழியிருக்கும். ஆம், "காரணங்கள் சொல்பவர்கள் காரியங்கள் செய்வதில்லை, காரியங்கள் செய்பவர்கள் காரணங்கள் சொல்வதில்லை"

அறிவு - தேடல் தொடரட்டும்

உங்களுடைய இலட்சியத்தோடு தொடர்புடைய ஒரு வழிகாட்டியை முதலில் தேர்வு செய்யுங்கள். இதைத்தான் ஆங்கிலத்தில் "Role Model" என்பார்கள். அதாவது நீங்கள் எந்த துறையில் சாதனை படைக்க விரும்புகின்றீர்களோ அந்த துறையில் ஏற்கனவே சாதனை படைத்து முன்னேறி வரும் ஒருவரை உங்களுடைய வழிகாட்டியாகக் கொள்ளுங்கள். அவருடைய வழியைப் பின்பற்றி அவருடைய அனுபவத்தைப் பாடமாக்கி முன்னேற முயலுங்கள்.

சிறந்த வழிகாட்டியை தேர்வு செய்வதுதான் மிகவும் சிரம்மானது. ஏனென்றால் பெரும்பாலும் மனிதர்கள் தங்களுடைய முகமூடியைத்தான் வெளியுலகிற்கு காட்டுகின்றார்கள். அவர்களுடைய நிஜமுகத்தைக் காண்பது சற்றுக் கடினம் அதாவது முகமூடியில்லாத மனிதர்களைக் காண்பது அவ்வளவு எளிதல்ல. ஆகவே சரியான வழிகாட்டியைத்த தேர்வு செய்வதற்கு விழிப்போடு முயலுங்கள். நிச்சயம் முடியும்.

"பூக்கின்ற மலர்கள் எல்லாம் கனியாவதில்லை. எல்லா விதைகளும் முளைப்பதில்லை". அதுபோல எல்லா முயற்சிகளும் வெல்வதில்லை என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். நல்ல வழிகாட்டியைத் தேர்வுச் செய்யத் தொடர்ந்து முயற்சி செய்து வாருங்கள். இராமகிருஷ்ண பரமஹம்சரை நரேந்திரன் சந்திக்கவில்லை என்றால் நமக்கு ஒரு விவேகானந்தர் கிடைத்திருக்க மாட்டார். மகாகவி பாரதியை கனகசுப்புரத்தினம் சந்திக்கவில்லை என்றால் நமக்கு புரட்சிக்கவிஞர் பாரிதிதாசன் கிடைத்திருக்க மாட்டார். அவ்வளவு ஏன், பேராசிரியர் முனைவர். இல.செ. கந்தசாமி அவர்களை ஒரு கிராமத்து முதல் தலைமுறை மாணவனாகிய க.க. சாவடி முருகேசன் சந்திக்கவில்லை என்றால் இந்த கவிதாசன் உருவாகியிருக்கமாட்டார். ஆகவே நல்ல வழிகாட்டி கிடைக்கும் வரை உங்கள் தேடல் வேட்டையை நிறுத்தாதீர்கள். உங்களுடைய தொடர் முயற்சிக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

நியாயத்தின் பக்கம் நில்லுங்கள்

நம்மில் பெரும்பாலானோர், சமுதாயம் என்ன நினைக்குமே? மற்றவர்கள் என்ன சொல்வார்களோ என்று நினைத்து நினைத்தே எதையும் செய்யும் துணிவு இல்லமால் போய்விடுகிறோம். நீங்கள் செய்வது சரியா? தப்பா அல்லது நியாயமா? அநியாயமா? என்று எண்ணிப்பார்க்க வேண்டுமே தவிர, மற்றவர்களை மகிழ்விப்பதற்காக எந்தச் செயலையும் செய்யக் கற்றுக் கொள்ளக்கூடாது. ஆம், நீங்கள் எப்பொழுதும் நியாயத்தின் பக்கமே நிற்க வேண்டும்.

மத்திய உள்நாட்டு மந்திரியாக இருந்து விலகும்போது, இராஜாஜி பத்திரிக்கை மசோதாவைக் கொண்டு வந்துஅதைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றிச் சட்டமாக்கினார். இதனால் நாடெங்கும் உள்ள பத்திரிக்கைகள் அவரைத் தாக்கி எழுதின. இம்மாதிரி ஏன் செய்கிறீர்கள்? போகிற போக்கில் பத்திரிக்கைகளிடம் ஏன் கெட்ட பெயர் வாங்க வேண்டும்?" என்று பாராளுமன்றத்தில் சிலர் கேட்டனர். அதற்கு இராஜாஜி, "நான் ஒன்றைச் செய்யும்போது அதனால் நல்ல பெயர் வருமா கெட்ட பெயர் வருமா என்று யோசிப்பதில்லை.அந்தக் காரியம் சரியா, தவறா என்று தான் யோசிப்பேன். நீங்களும் அப்படியே செய்யுங்கள்" என்றார், 'பாப்புலாரிட்டி'யைப் பற்றிச் சிந்திக்காமல் ஒரு காரியம் நல்லதா - கெட்டதா என யோசித்து, நல்லதையே செய்யுங்கள். தேசத்துக்கு நன்மையான காரியங்களைச் செய்வதனால் கெட்ட பெயர் வந்தாலும் அதைப் பொருட்படுத்த வேண்டாம்" என்றார்.

கருத்துக்களை விதையுங்கள்

உங்களுடைய மனதில் கருத்து விதைகளைத் தூவிக் கொண்டே இருங்கள். அப்பொழுதுதான் தொடர்து வளர்ந்து கொண்டே இருக்க முடியும். மனதில் எப்பொழுதும் ஒரு தேடல் இருக்க வேண்டும். அவ்வாறு "நாம்தேடிக்கொண்டே இருக்காவிட்டால் நாம் தொலைந்து விடுவோம்" என்றும் கூறுவார்கள். அறிவு வங்கியில் கருத்துக்களை முதலீடு செய்வதற்கு நூல்கள் மிகவும் உதவியாக இருக்கும். மேலும் ஒருவன் படிக்கும் புத்தகங்களை வைத்து அவனைப் பற்றிச் சொல்லிவிட முடியும்" என்று சொல்வார்கள். ஆகவே பல்வேறு கருத்துக்களைப் படிப்பதே சிறந்த முறையாகும். படிக்கின்ற கருத்துக்களை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் அலசி ஆராய்ந்து உங்களுடைய இலட்சியத்திற்கு ஏற்புடைய மற்றும் அதற்கு வலிமை சேர்க்கும் கருத்துக்களை மட்டுமே உங்களுடைய மனதில் சேமித்து வையுங்கள். ஏனென்றால் கற்றது காலத்திற்கு உதவும். வெற்றி உங்களை தொடர தொடர்ந்து கற்றுக்கொண்டே இருங்கள். இதுதான் வெற்றியின் ரகசியம்.

10/03/2010

நீண்ட நாட்களாகிய தேடிய அறிவுத்தேடல்-2

நீண்ட நாட்களாகிய தேடிய அறிவுத்தேடல்-1 படிக்க


இன்று பெரிய வெற்றிடம்.
காரணம் இன உணர்வும் இல்லை. உணர்வு ஊட்ட வந்தவர்களும் உண்மையானவர்களாக இல்லை.

இனத்தின் பெயரால், மொழியின் பெயரால் இன்று வரையிலும் நமக்கு ஊட்டிக்கொண்டுருப்பவர்கள் ஒன்று ஊட்டியில் ஓய்வெடுக்கிறார்கள். இல்லையேல் குத்தீட்டி வரிகளால் குத்திக்கிழிக்கிறார்கள். ஒவ்வொரு தலைவரின் பங்களிப்பும் உண்மையாக இருக்கும்பட்சத்தில் உலகத்தில் இருக்கும் தமிழர்களின் பாதிப்பு இன்று வரையிலும் ஏன் ஓலமாய் நம் காதில் வந்து ஒலிக்கின்றது?
முன்னோர்களான மன்னராக இருக்கட்டும். ராஜாவா,நாயகனாக, குறுநில மன்னராக, பாளையக்காரராக, பட்டத்து ஜமீனாக இருக்கட்டும். அவர்களின் அத்தனை வீரமும் சுத்தமானது. தன்னுடைய ஆளுமையில் இருந்த மக்களுக்காக தன்னையே அர்பணித்தவர்கள்.

வீரம் என்பது அவர்களின் முரட்டுத்தனத்தின் குறியீட அல்ல. முட்டாள்காளாக வாழ்ந்து விவேகமற்ற செய்ல்களும் செய்தவர்கள் அல்ல. அவர்களின் ஆளுமை சுருங்கி இருந்ததே தவிர அவர்களின் எண்ணங்களில் இன்றைய தலைவர்கள் போல் எந்த சுருக்கமும் இல்லை.

அன்று வனத்தில் வாழ்க்கை அமைந்த முன்னோர்கள் நறுமணங்களையும் சுவாசித்து சுகமாகவும் வாழ்ந்தார்கள். சுகாதாரமாகவும் வாழ்ந்தார்கள்.
இன்று வனமும் அழிந்து கொண்டே வருகின்றது. மனமும் இருண்டு கொண்டே தொடர்கின்றது.

வனத்தை,தேயிலைத் தோட்டத்தை உருவாக்கியவர்கள் தேம்பி அழக்கூட தெம்பில்லாமல் முள் கம்பிகளுக்கு பின்னால் முகவரி இழந்து வாழ்க்கை எனபதை வாழ முடியாமல் இறப்பு வராதா? என்று ஏங்குகிறார்கள்.

ஆனால் முன்னோர்களாக வாழ்ந்த மூதாதையர்கள் விவேகம் என்று கருத்தில் கொண்டு நம் இனத்தை கதற விட்டது இல்லை. இனம் முக்கியம். அதைவிட வளர்த்து உணர வைக்க வேண்டிய இனமான உணர்வு முக்கியம்.

உணர்ந்து இருந்தால் உணர்த்திக் காட்டியவர்கள் இன்று இருந்து இருந்தால் ஐந்து லிட்டர் தண்ணீர் கிடைக்காமல் விக்கிக்கொண்டு ராணுவ வீரர்களிடம் தன்னை தொலைக்க வேண்டியதும் இல்லை.

அறிவைத் தேடு. அது தான் உன் நம்பிக்கை. வேண்டாம் இந்த மூட நம்பிக்கை என்றவர் தந்தையாய் மறைந்து விட்டார். படிடா. அது தான்டா சொத்து. உன் கர்மத்தை போக்கக்கூடியது அதுமட்டும் தான் என்றவர் கர்மவீரராக காட்சியாக சிலையாக நிற்கிறார்.

இதயத்தில் இடம் பெற்றவர்களும், இன்னலை தீர்க்க வந்து விட்டேன் என்றவர்களும் நடத்தும் ஊடகப்போரில் உங்களையும் என்னையும் எங்கே போய் தேடப்போகிறார்கள்?

அவர்கள் தொலைந்து போயே நாளாகிவிட்டது.

தமிழனின் வாழ்வியல் தடங்கள். தொடக்கம் முதல் இன்றைய முடக்கம் வரைக்கும்.


முற்றும்

10/02/2010

நீண்ட நாட்களாகிய தேடிய அறிவுத்தேடல்

இன்றும் என்றும் எந்தக் கொடுமையான சூழ்நிலையிலும் கொண்டு போய் தன்னை பொருத்திக்கொண்டாலும் தமிழன் என்பவனால் மற்றவர்களைக் காட்டிலும் பல மடங்கு தன்னுடைய ஆளுமை தன்மையை நிலை நாட்டி விட முடியும்.
முட்டி மோதி உள்ளே நுழைந்து வெளிக்காட்டிக் கொள்ள முடியும்.

முடியாத போதும் கூட முயற்சியில் சாதிக்க அத்தனை விசயங்களையும் ஆர்வத்துடன் கற்றுக்கொள்வதும் உண்டு. கலக்கம் என்பது தமிழன் வாழ்வில் அடுத்தவர் உருவாக்குவது தானே அவனுக்கு அவனால் உருவாவது இல்லை.

கடல் கடந்து போய் தட்டு கழுவுவது முதல் கணிணி ஆளுமை வரைக்கும்.

உழைக்காமல் ஊடகத்தின் முன் ஊத்தப்பல் நாற்றத்தோடு பத்து மணி நேரம் அமர்ந்து இருக்கவும் முடியும். உடனே முடிக்க வேண்டிய காரியம் இது என்றவுடன் ஓடிப்போய் ஒன்றிவிடுவதும் உண்டு. உழைக்க தயங்காத இனம் தமிழினம்.

கடல் கடந்து சென்றவர்கள் இன்று வரைக்கும் எதற்கும் கண்கலங்குவது இல்லை. காரணம் அவர்களே தெரியாத அத்தனை உழைப்பும் , ஆளுமையும் அங்கு தான் இனம் கண்டு கொள்கிறார்கள்.

வெள்ளிக்கிழமை மதியம் என்றால் அடுத்த நாற்பது மணி நேரமும் உழைத்தோம் என்று ஓய்வு எடுக்க கும்மாளம் போட கிளம்புவர்கள் மத்தியில் அந்த நாற்பது மணி நேரத்தையும் தனது குடும்பத்துக்காக உழைப்பின் மூலம் தூக்கம் மறந்து குடும்பத்து தொல்லைகளை தூர விரட்டுபவர்களை எவ்வாறு சொல்வீர்கள்?

ஆனால் தொடக்கத்தில் தமிழனத்தின் முன்னோர்கள் வீரத்தின் மூலம் தன்னுடைய ஆளுமையை, ஆண்மையை நிலைநாட்டினார்கள். இன்று தமிழனம் தன்னுடைய தனி மனித உழைப்பின் மூலம் நிலை நாட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.

இன்று திடீர் தலைவர்களின் அக்கப்போர் அறிக்கைகளும், திடுக்கிடக்கூடிய வார்த்தை அலங்காரங்களும் எதை உணர்த்திக்கொண்டு இருக்கிறது?

அன்று மன்னர்களும், ஆளுமை புரிந்தவர்களின் மேதா விலாசங்கள் எதையும் இன்று வரையிலும் சரியாக புரிந்து கொள்ளப் படாவிட்டாலும் தமிழன் என்பவன் தன்னுடைய தகுதியை புரிந்தவன். தலையில் உள்ள அறிவை உண்ர்ந்தவன்.

காலம் போட்ட அவசர கோலத்தில் இன்று வீரமென்ற சொல்லை விவேகம் என்ற சொல்லுக்குள் அடக்கி சகிப்புத்தன்மையாக மாற்றிவிட்டுள்ளது. கத்தி, வாளை தூக்க முடியாதவர்கள் இன்று புத்தியை மட்டும் சுமந்து கொண்டு கடல் கடந்து சென்று கொண்டுருக்கிறார்கள்.

சோழ அரசன் (கிமு 5ம் நூற்றாண்டு) கரிகாற்பெருவளத்தான் வட இந்திய மன்னர்கள் அத்தனை பேரையும் வென்று வரிசையாக வென்ற நாடுகளையும் தன்னுடைய ஆளுமைகக்குள் கொண்டு வந்தவன். இறுதியாக இமயத்தில் தமிழர் சின்னத்தை பொறித்து கண்ட வெற்றிகளை சிலப்பதிகாரம், பட்டினப்பாலை, கலிங்கத்துப்பரணி போன்ற இலக்கியங்கள் விரிவாக எடுத்துரைக்கின்றன. இவர் தான் உலகத்தின் முதல் அணையை உருவாக்கி கல்லணையை காவிரிக்குக் குறுக்கே கட்டியவர்.

பூலித்தேவன் (18ம் நூற்றாண்டு) வெள்ளையருக்கு கப்பம் கட்ட மறுத்து எதிர்த்து நின்ற போது அவனை அழித்தே தீருவதென்று வெள்ளை அதிகாரி ஹெரான், பெரும்படைகளுடன் வந்தான். அவனுடன் மற்ற தளபதிகள், கும்பனி படைகள் (நம்மவர்கள்), தளபதி கான்சாகிப் என்கிற மருதநாயகம், நவாப் முகமதலியின் படைகள், தலைவன் மகபூல்கான் போன்ற கூட்டணி படைகளும் ஒன்று சேர்ந்து முற்றுகையிட்டது.

ஒற்றுமை என்பது மற்ற இனத்தை விட நம்மவர்களின் பெரிய குறைபாடு என்பதை அன்று முதல் இன்று வரையிலும் நாம் உணர்ந்து கொண்டு தானே இருக்கிறோம்?

ஆனால் இவர்கள் அத்தனை வைத்திருந்த அத்தனை நவீன ரக ஆயுதங்கள், பெரும்படை பலம் என அத்தனையும் தன்னுடைய மன உறுதியால் தன்னுடைய சுத்தமான வீரத்தால் விரட்டி அடித்தான். கடைசியில் வெள்ளையர் நீ கப்பம் தரவேண்டாம். தருவதாக மட்டும் ஒத்துக்கொள். காரணம் நீ மறுப்பதாக தெரிந்தால் மற்ற அனைவரும் அதேபோல் மறுப்பார்கள் என்றார்.

இது வரலாற்று உண்மை. இப்போது புரியுமே குறைந்த வீரர்கள். நிறைந்த வீரம். கதறடித்த கட்டுறுதி.

காரணம் தமிழனின் வீரம் என்பது எவருடனும் ஓப்பிட முடியாது. எதையும் சாதிக்கும் மன உறுதி உடையது. மற்ற எந்த இனத்தையும் விட அதிகமாக இருந்தது தமிழினத்தில் மட்டுமே. வரலாற்று சான்றுகள் அத்தனையும் இவ்வாறு தான் நமக்கு இன்று வரையிலும் பாடமாக பட்டயமாக காட்சியளித்துக்கொண்டு இருக்கிறது.


ஒவ்வொரு காலத்திலும், ஒரு ராஜாவோ, ஒரு நாயகனோ நம் இனத்தை அந்த அளவிற்கு ஆளுமை செய்து இருக்கிறார்கள்.

இரண்டாம் உலகப்போரில் சிதறடிக்கப்பட் ஜப்பான் இன்று ஒரு வணிக வல்லரசாக உருவானது. இதை நாம் இன்று பார்த்துக்கொண்டு தானே இருக்கிறோம்?

கிரேக்கம், ரோமானியத்தை முன்னோடியாக வைத்து முன்னேறினார்கள். ஐரோப்பியர்கள் ஜப்பானியரை காட்டியே சீன இனம் உயர்ந்தது. அரேபியரைக் காட்டியே யூத இனம் உயர்ந்தது. ஆங்கிலேயர்களின் வளர்ச்சியைக் காட்டியயே ஜெர்மானிய இனம் வளர்ச்சி அடைந்தது.

ஆனால் இன்று தமிழனுக்கு என்று நாடும் இல்லை. தமிழனை டெல்லியில் நாடுவாரும் இல்லை.

நடுக்கடலில் உணவு ஏற்றிச் சென்ற கப்பலைப் போல, இலங்கையைத் தவிர வேறு எந்த நாட்டுக்கு வேண்டுமானாலும் நாங்கள் போகத்தயார் என்று நடுக்கடலில் அபயம் கேட்டுக்கொண்டுருப்பவர்களைப் போல நம் தமிழினத்தில் ஒலியும் காற்றில் தான் கரைந்து மறைந்து கொண்டு இருக்கிறது.

நாடு நல்ல சூழ்நிலையில் இருந்தாலும் நயவஞ்சகத்தால் நல்லதைத் தவிர அத்தனையும் செய்ய முடிகின்ற தலைவர்களால் தமிழினத்தின் வெற்றிடத்தை எதைக்கொண்டு நிரப்ப முடியும்?

தொடரும் .....

10/01/2010

எனது பார்வையில் -எந்திரன்


              எத்தனை வருட கனவு இது…! இப்படி ஒரு படம் இந்தியாவில், அதுவும் தமிழில் என்றைக்காவது சாத்தியமாகுமா? என்ற கேள்விக்குறியை ஆச்சர்யக் குறியாக்கியிருக்கிறார்கள் இருவர்… சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் ஷங்கர்!
              நாடு, இனம், மொழி, நடிக அரசியல் கடந்து, எந்திரன் ஒவ்வொரு சினிமா ரசிகனுக்கும் ஒரு அனுபவம்.

                தொழில் நுட்பத்தில் இன்னமும் பெரிய அளவு நிபுணத்துவம் வளராத ஒரு நாட்டைச் சேர்ந்த கலைஞர்கள், இன்று செய்நேர்த்தியில் முன்னிலையில் இருக்கும் ஹாலிவுட்டுக்குச் சவால் விட்டுள்ளனர், எந்திரன் என்ற படத்தின் மூலம். இதை ஒரு ரஜினி ரசிகனின் மிகைப்படுத்தப்பட்ட கூற்றாக எடுத்துக் கொள்ளாமல், படம் பாருங்கள்… உண்மை புரியும்!
               இந்தப் படத்தை ஒரு முழுமையான, முதல் நாள் முதல் காட்சியை ஆரவாரத்தோடு பார்க்கும் ரஜினி ரசிகனின் மனநிலையில் பார்த்துவிட்டு, ஒரு எழுத்தாளன் என்ற  பார்வையோடே எழுதுகிறேன்.
               என்னைப் பொறுத்தவரை எந்திரன் வெறும் ரஜினி படமல்ல… ஒரு இனிய அனுபவம். எமது கலைஞர்களால் ஆகாதது ஒன்றுமே இல்லை என்ற பெருமை தந்த அந்த சிலிர்ப்பு இன்னும் கூட அடங்கவில்லை.
               வர்த்தகம், கலை என்ற பேதங்களுக்கு அப்பால், மக்களை மகிழ்விக்கும் நல்ல பொழுதுபோக்கு என்ற புதிய நீட்சியை இந்திய சினிமாவுக்குத் தந்திருக்கிறது எந்திரன். இனி அவதார் போன்ற ஹாலிவுட் பிரமாண்டங்களைப் பார்த்து திகைக்கவோ, பிரமிக்கவோ வேண்டிய அவசியமில்லை என்றே தோன்றுகிறது. இதுபோன்ற ஹாலிவுட் பிரமாண்டங்களை, ‘இனி நாங்களும் இதுக்குமேல எடுப்போம்ல’ என்ற மதர்ப்போடு பார்த்து ரசிக்க நம்மாலும் முடியும். அந்த நம்பிக்கையை இந்தியக் கலைஞர்களுக்கும் தந்த பெருமை இயக்குநர் ஷங்கரைச் சேர்கிறது!
              எந்திரன் படத்தின் கதையை இந்த விமர்சனத்தில் மட்டுமல்ல, வேறு எங்கும் கூடத் தேடாதீர்கள். காரணம், அதைப் படத்தில் பார்த்து அனுபவியுங்கள். தொழில்நுட்பம் வேண்டுமானால் ஹாலிவுட்டின் பாதிப்பு என்று எடுத்துக் கொள்ளலாமே தவிர, கதை, அதற்கான களம், கதை மாந்தர்களின் உறவுச் சூழல் எல்லாமே முற்றிலும் புதியது.
                நிஜ மனிதன் தன்னைப் போன்ற இயந்திர மனிதனைத் தந்து, அதற்கு தன்னைப் போல யோசிக்கும் திறனையும் கொடுத்துவிட்டால்… அதன் பின் விளைவுகள் எப்படி இருக்கும் என்ற சுஜாதா – ஷங்கர் கற்பனையின் அழகிய செல்லுலாய்ட் வடிவமே ரோபோ எனும் எந்திரன் (எத்தனை அர்த்தமுள்ள இனிய தமிழாக்கம்!)
                ஒவ்வொரு காட்சியிலும் மூன்று மகா கலைஞர்கள் பளிச்சிடுகிறார்கள். ரஜினி, ஷங்கர் மற்றும் ஒளிப்பதிவாளர் ரத்னவேலு. இவர்களின் உழைப்புக்கு ஒரு ‘சில்வர்லைன்’ கொடுத்திருக்கிறார் ஏ ஆர் ரஹ்மான் என்றால் மிகையல்ல!
                படத்தின் முதல் காட்சியில் டாக்டர் வசீகரனாக எந்த வித வழக்கமான மேனரிஸமும் இல்லாத இயல்பான ரஜினி… இந்திய சினிமாவுக்கே புதுசு. அடுத்தடுத்த இரு காட்சிகளிலும் இந்த இயல்பு நிலை தொடர, ‘என்னடா இது’ என யோசிக்கும்போதே ‘சிட்டி’ ரஜினியின் உருவில் அமர்க்களம் ஆரம்பம். மென்மையான, ஆரோக்கியமான நகைச்சுவை என்பதற்கு புதிய உதாரணம் சிட்டி பாத்திரப் படைப்பு. படம் பார்க்கும் ஒவ்வொருவர் குடும்பத்திலும் சிட்டியும் ஒரு பாத்திரமாகவே ஐக்கியமானாலும் ஆச்சர்யமில்லை.
                இந்தப் படத்தின் காதல் காட்சிகளில் ரஜினியின் இளமை துள்ளும் ஸ்டைலையும் ரொமான்ஸையும் பார்க்கும் இளம் நடிகர்களுக்கு மட்டுமல்ல, நடிகைகளுக்கும் தூக்கம் தொலையக்கூடும்!
                    ஒரு விஞ்ஞானி எப்படி இருப்பார், எப்படி நடப்பார், எப்படிப் பேசுவார், தன் கண்டுபிடிப்பு தான் நினைத்த மாதிரியெல்லாம் அசகாய சூரத்தனங்கள் செய்யும் போது எப்படி மகிழ்வார்… அதே கண்டுபிடிப்பை இந்த சமூகம் புறக்கணிக்கும் போது எப்படி வெதும்புவார்… இத்தனை உணர்வுகளையும் வெகு இயல்பாக, சற்றும் சினிமாத்தனமின்றி வெளிப்படுத்தியுள்ளார் ரஜினி.
                    இந்த இரு வேடங்களுக்கும் சிகரம், வில்லன் ரஜினி. யப்பா…. எங்கே இருந்தார் இந்த நடிப்பு ராட்சஸன் இத்தனை காலமாய்! வில்லத்தனத்தை எப்படி காட்டுவது எனத் தெரிந்து கொள்ள தனியாக ட்யூஷன் படிக்க வேண்டும் இவரிடம். இந்தப் பாத்திரம் குறித்து அதிகம் விவரிக்காமல் விடுவதுதான், படம் பார்க்கும் உங்களுக்குள் பல இன்ப அதிர்வுகளை உண்டாக்கும் என்பதால் இத்துடன் நிறுத்துகிறேன்.
                ஆனால் ஒரே ஒரு வரியில் சொன்னால்…. நடிப்பில் ரஜினியின் விஸ்வரூபம் இந்தப் படம். நவரசங்களையும் அநாயாசமாகத் தருவதில் ரஜினிக்கு முன்னும் பின்னும் ஒருவரையும் ஒப்பீட்டுக்காகக் கூட இனி தயவு செய்து சொல்லக் கூடாது. ரஜினி ரஜினிதான். ஒரு படைப்பாளியின் கற்பனையை அப்படியே பிரதிபலித்திருக்கும் உன்னதமான கலைஞன்!
               ஐஸ்வர்யா ராய்… இவர் எத்தனை கவர்ச்சியான உடைகளில் வந்தாலும், மனம் அவரை கண்ணியமாகவே பார்க்கிறது. ஐஸ்வர்யாவின் பலம் அதுதான். நடனம், நடிப்பு என அனைத்திலே டிஸ்டிங்ஷனுக்கும் மேலே ஸ்கோர் பண்ணுகிறார் ஐஸ்.
               ரஜினிக்கு எத்தனையோ நடிகைகள் ஜோடியாக நடித்திருக்கிறார்கள். ஆனால் 100 சதவீதம் பொருத்தமான ஜோடி என்றால் அது ஐஸ்வர்யாதான். இப்போதுதான் புரிகிறது, ரஜினி ஏன் தொடர்ந்து ஐஸ்வர்யாவை தனது படங்களின் கதாநாயகியாக்க முயற்சித்தார் என்று!
              ரஜினியின் உதவியாளர்களாக வரும் சந்தானம், கருணாஸ் இருவரும் தாங்கள் நடிகர்கள் என்பதையே மறந்து, ரஜினியின் நடிப்பில் மனதை இழந்துவிட்டிருப்பார்கள் போலிருக்கிறது. இந்த இரு காமெடியன்களையும் சிட்டி தூக்கிச் சாப்பிட்டுவிடுகிறது! அதே நேரம் இப்படியொரு படத்தில், அந்த இருவருக்கும் அதற்குமேல் வேலையும் இல்லை என்பதும் புரிகிறது.
               டேனி டெங்சோங்பாதான் படத்தில் வரும் கெட்டவர் (வில்லன் என்று சொல்ல முடியாது!) தனது வேலையை அத்தனை கச்சிதமாகச் செய்துள்ளார் டேனி. தமிழ் வில்லன்களை விட, இவரைத் தேர்வு செய்தது நல்ல பலனைத் தந்துள்ளது.
              ஒளிப்பதிவாளர் ரத்னவேலு இன்னொரு ஷங்கர் என்றுதான் சொல்ல வேண்டும். விஞ்ஞானி – ரோபோ சம்பந்தப்பட்ட காட்சிகள், வசீகரன் – ஐஸ் காதல் காட்சிகள், அதே ஐஸ்வர்யா ரோபோவுடன் இருக்கும் காட்சிகள்… இவற்றுக்கெல்லாம் தனித்தனி டோன்களை, சற்றும் உறுத்தாமல் தந்திருக்கும் நேர்த்தி ஹாலிவுட்டுக்கே சவால் எனலாம். கிளிமாஞ்சாரோ பாடலை அவர் படமாக்கியிருக்கும் விதம், ரசிகர்களுக்கு ஒரு விஷூவல் ட்ரீட்!
               சாபு சிரில் உழைப்பு கொஞ்சமல்ல. சற்றே கவனமிழந்திருந்தாலும், “டே இது செட்றா மாப்ளே” என்று ரசிகர்களே கலாய்த்துவிடும் அபாயம் நிறைய இடங்களில். அதைப் புரிந்து அபார முயற்சியெடுத்து அரங்குகளையும் ரோபோக்களையும் நிர்மாணித்திருக்கிறார்.
              இவரது கலைத்திறனும், ஹாலிவுட்டின் ஸ்டான் வின்ஸ்டன் ஸ்டுடியோஸ் கலைஞர்களின் ரோபோட்ரானிக்ஸ் உத்திகளும் அத்தனை லாவகமாக இழைந்து நிற்கின்றன படத்தில்.
              கிராபிக்ஸ் காட்சிகளுக்காக மெனக்கெட்டிருக்கும் விஷுவல் எஃபெக்ட்ஸ் குழுவினரை முதுகு வலிக்கத் தட்டிக் கொடுக்கலாம். எந்தக் காட்சி நிஜம், எது கிராபிக்ஸ் என்று யோசிக்கக் கூட அவகாசம் தரவில்லை இவர்கள். அதிலும் படத்தின் கடைசி நிமிடங்களில் கதிகலங்க வைக்கிறார்கள். ஹேட்ஸ் ஆஃப்!
              அப்புறம்… இந்தப் படத்தின் இன்னொரு நாயகனைப் பற்றி நிறையவே சொல்ல வேண்டும். அவர் ஏ ஆர் ரஹ்மான். பாடல்கள், பின்னணி இசை என கிடைத்த இடைவெளிகளிலெல்லாம் சிக்ஸர் அடித்திருக்கிறார் இசைப் புயல். அந்தக் கிளிமாஞ்சாரோ பாட்டு ஒரு ‘விஷுவல் மியூசிகல் ட்ரீட்’, என்றால், ‘அரிமா அரிமா’ நெஞ்சு நிமிர்த்தி ஆட வைக்கும் அட்டகாச மெட்டு. இடையில் காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை என்று வைரமுத்துவின் துணையுடன் மனதை மயிலிறகால் வருடுகிறார் ரஹ்மான். எத்தனை நாளாச்சு இந்த மாதிரி மெலடி கேட்டு என்ற ஏக்கமும் கூடவே பிறக்கிறது!
             படத்தில் குறைகளே இல்லையா… ரஜினி படம் என்பதால் இப்படி ஒரேயடியாகப் பாராட்டுகிறீர்களா? என்று கூட சில கேள்விகள் எழலாம். உண்மையிலேயே குறைகள் என்று சொல்ல பெரிதாக இதில் ஒன்றுமில்லை. மூன்று ஆண்டு கடும் உழைப்பு… அதெப்படி குறை சொல்லுமளவுக்கு இருக்கும் என்பதை யோசிக்க வேண்டாமா? ஷங்கர் தனது ‘கேரியர் பெஸ்ட்’ படம் இதுதான் என்று நெஞ்சு நிமிர்த்தி சொல்லிக் கொள்ளலாம். படமெங்கும் அவரது கடின உழைப்பு பளிச்சிடுகிறது.
             இது ரஜினி படமா… ஷங்கர் படமா? இந்தக் கேள்வி நிச்சயம் இன்னும் சில வாரங்களுக்காவது இணையத்தில் ஓடிக் கொண்டிருக்கும். (ரஜினி விமர்சகர்களுக்கும் பொழுதுபோக வேண்டாமா…)
               நிச்சயம் ரஜினி – ஷங்கரின் Perfect -தான் எந்திரன் என்பதே சரியாக இருக்கும். இந்தப் படத்தில் நடிக்க ரஜினியை விடப் பொருத்தமானவர் இல்லை… இயக்க ஷங்கரை விட தகுதியானவர் யாருமில்லை என்பதே சரியான கருத்தும் கூட.
             எந்திரன்… சர்வதேச சினிமாவுக்கு இந்தியா சார்பில் தமிழ்க் கலைஞர்கள் கம்பீரமாகத் தந்திருக்கும் இனிய பரிசு!

எந்திரன் குழுவுக்கு என் நண்பர்கள் சார்பாகவும்  வாழ்த்துகள்!