தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

10/22/2010

மனித உறவுகள் என்பது


       

ஒரு மிகப்பெரிய புரிதல் வேண்டியிருக்கிறது நட்புகளையும் உறவுகளையும் கை கோர்த்து வாழ்க்கையின் வழியே செல்வதற்கு ஏனெனில் பலதரப்பட்ட குணாதிசயங்கள் கொண்ட ஒரு மனிதன் கூடி வாழவேண்டும் என்ற ஒரு அடைப்பிற்குள் அடைப்பட்டு வாழ்வது அத்தியாவசியமாகிறது

சமுதாயமும் வாழ்வும் செழிக்க, அரசும், இன்ன பிற தன்னார்வு தொண்டு நிறுவனங்களும் எத்தனை போராடினாலும் அதற்கான பலன் என்பது மில்லி மீட்டரில்தான் இருக்கிறது. ஏன் இப்படி? எத்தனையோ ஊடகங்கள் உலக பிரச்சினை முதல் உள்ளூர் குப்புசாமி பிரச்சினை வரை எல்லாவற்றையும் படம் போட்டு மக்கள் முன் காட்டுகின்றன. தங்களை நியாயத்தின் காவலர்கள் என்று காட்டிக் கொண்டும் சட்டாம் பிள்ளையாக தவறுகளை அதிரடியாக சுட்டிக்காட்டும் இவர்கள்.....சொல்யூசன் என்று சொல்லக்கூடிய தீர்வுகளை கொடுப்பதில்லை.

பிரச்சினைகளைப் பற்றி பேசுவதிலும் அது பற்றி காரசாரமாய் விவாதிப்பதிலும் தம்மை விளம்பரப்படுத்தி கொள்வதில் தான் முனைப்புகள் இருக்கிறதன்றி....மனிதர்களின் பிரச்சினைகளின் மூலத்தை அறிந்து, அதற்கு பயன் தரும் வகையில் கருத்துக்கள் எப்போதும் பகிரப்படுவதில்லை. இப்படி செய்வது இன்னும் ஆபத்தானது. அது மனித உணர்வுகளை, அக்கிரமங்களுக்கு எதிராக கிளர்ந்தெழச் செய்யும், உணர்வு பொங்க பேசச் செய்யும். ஆனால் அறிவினை பகிராது...எதிர்காலத்தில் சந்ததியினருக்கு நன்மைகள் தராது.....


மனிதவளம் மேம்பட வேண்டும். மனிதவளம் மேம்பட, உறவுகளில் புரிதல் வேண்டும். உறவுகளில் புரிதல் இருந்தால் அன்பாய் மிளிரும் இந்த உலகம். அடிப்படையில் அன்பு இருந்தால் கருணையில் விட்டுக்கொடுப்பதும், சக மனிதரை மதித்து நடப்பதும் தானாய் நடக்கும். அப்போது சட்டாம்பிள்ளைகள் நமக்கு தேவையில்லை. ஒரு விசயத்தை கருத்தில் தெளிவாய் கொள்ள வேண்டும்....மிகைப்பட்ட பிரச்சினைகள் உருவாக்கப்படுவதில் பெரும்பங்கு தம்மை சட்டாபிள்ளையாக காட்டிக் கொள்ள முனையும் மனிதர்களாலேயே உருவாக்கப்படுகிறது....


ஏதோ ஒரு கருத்தினை தொட்டுவிட்டு செல்ல முனைந்திருக்கும் இந்த கட்டுரையை மிகைப்பட்டவர்களிடம் கொண்டு சேர்ப்பதில் நானும்   பெருமிதம் கொள்கிறேன் .

நன்றி : கழுகு

10/21/2010

சத்ரபதி சிவாஜி


      நட்புக்கரம் நீட்டி வரவைழத்த ஒளரங்கசீப், நயவஞ்சகமாகத் தன்னையும் தன் மகைனயும் கைதுசெய்து சிறையில் அடைப்பான் என்று கொஞ்சமும் எதிர்பார்த்திராத மராட்டிய மாவீர‌ன் சிவாஜி, அடிபட்ட புலி போல ஆக்ரா சிறையில் உறுமிக்கொண்டு இருந்தார். மகன் சம்பாஜியிடம், ‘‘ஒவ்வொரு வியாழனும் ஏராளமான பழங்கள் வைத்து பூஜித்து, அதைத் தானம் செய்வது வழக்கம் என்று  சிறை அதிகாரிகளிடம் 
சொல்லி, அதற்கான ஏற்பாடுகளைச் செய்’’ என்றார்.

‘‘தந்தையே! நாம் பெரும் ஆபத்தில் இருக்கிறோம். இப்போது எதற்காக பூஜை?’’ என்று மகன் கேட்க, ‘‘மகனே! நீ அச்சத்தின் பிடியில் அகப்பட்டுவிட்டாய் என நினைக்கிறேன். அச்சப்பட்டவர்கள் வெற்றி பெற்றதாகச் சரித்திரம் கிடையாது. நான் இங்கிருந்து தப்பிக்கத்தான் வழி சொல்கிறேன்’’ என்றார் சிவாஜி.
‘‘முகலாயர்களிடம் இருந்து தப்புவதா... அது முடியுமா?’’ என மீண்டும் மகன் சந்தேக‌த்துடன் கேள்வி எழுப்ப, ‘‘துணிந்தவனுக்குத் தோல்வியில்லை’’ என்றார் சிவாஜி உறுதியோடு!

அதன்பின், சிறைகுப் பழக்கூடைகள் வருவதும் போவதும் வழக்கமாயிற்று. அந்தக் கூடைக்குள் அமர்ந்துதான் சிவாஜியும் சம்பாஜியும் ஒருநாள் தப்பித்தார்கள்.

பூனேவுக்கு அருகே, 1630-ல் சிவானி கோட்டையில் பிறந்தார் சிவாஜி. தந்தை ஷாஜி, பூனே சுல்தானின் படைப்பிரிவில் மேஜராகப் பணியாற்றி வந்ததால், தாய் ஜீஜாபாய் மற்றும் தளபதி ஷாயாஜியின் மேற்பார்வையில் வளர்ந்தார் சிவாஜி. சிறு வயதிலேயே குதிரை ஏற்றம், வாட் போர், வில் வித்தை, குஸ்தி போன்ற வீர‌ தீர விளையாட்டுகளில் அதிக ஆர்வம் காட்டினார். இந்துக்கைள அடக்கி ஆண்ட முகலாய ஆட்சியின் மீது அவருக்கு இயல்பாகேவ வெறுப்பு இருந்தது. தாய் ஜஜீ போய் சொன்ன வீர‌ க் கதைகளும், சுவாமி ராமதாசரின் ஆசீர்வாதமும், இந்து சாம்ராஜ்யம் நிறுவ சிவாஜிக்கு ஆர்வமும் ஊக்கமும் தந்தன.
‘‘மாபெரும் படை கொண்ட முகலாயர்கைள என்னால் வெல்ல முடியுமா?’’ என்று சிவாஜி கேட்ட போது , அவரது தாயும், சுவாமி ராமதாசரும் ஒரு சேரச் சொன்ன பதில்... ‘துணிந்தவனுக்குத் தோல்வியில்லை’.

பூனாவுக்கு அருகே மலைகளில் வசித்து வந்த ‘மாவலி’ மக்களிடமிருந்து
இளைஞர்கைளத் திரட்டி, ‘கொரில்லா’ படை அமைத்தார் சிவாஜி. முகலாயர்களின் பிடியில் இருந்த ரோஹிதேசுவரர் ஆலயத்தையும், தேரான் கோட்டையையும் கைப்பற்றினார். சிவாஜியின் இந்த வெற்றி, இந்துக்களிடையே பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தேவ, ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அவரது படையில் இணைந்தார்கள். அதன்பின் குபா கோட்டை, இந்திரபுரி, ஜாவ்லி என கிட்டத்தட்ட முந்நூறு கோட்டைகள் சிவாஜி வசமாயின. ஒவ்வொரு முறையும் போருக்குப் புறப்படும் முன், தனது படையினரிடம், ‘‘தோல்வியில்லை, தோல்வியில்லை... துணிந்தவனுக்குத் தொல்வியில்லை’’ என்று உற்சாகக் குரல் கொடுப்பார் சிவாஜி.துணிந்து கிளம்பும் அந்தப் படை வெற்றி வாகை சூடி வரும்.

ஒருமுறை, சிவாஜியின் கோட்டை முன் பெரும் கடெலன முகலாயர் படை  நின்றது. போரைத் தவிர்க்க விரும்பினால்,  சிவாஜி நிராயுதபாணியாக தன்னிடம் பேச்சு வார்த்தை நடத்த   வரவேண்டும்  என அழைப்பு விடுத்தான் தளபதிஅப்சல்கான்.

தனிமையில் போக‌வண்டாம் என அனைவரும் தடுத்தபோதும்,

‘‘துணிந்தவனுக்குத் தோல்வியில்லை’’ எனப் புன்னைகத்தவாறு பகைவனைத்
தேடிப் புறப்பட்டார் சிவாஜி. ஆயுதமின்றித் தனிமையில் வந்த சிவாஜியைப் பார்த்துக் கேலியாகச் சிரித்தஅப்சல்கான், ‘‘உன்னிடம் சமாதானம் பேசவா இத்தனை படையுடன்வந்திருக்கிறேன்’’ என்றபடி சரேலென‌ தன்னுடைய வாளை உருவி, சிவாஜியின் மார்பில் செலுத்தினான். உள்ளே கவசம் அணிந்திருந்த சிவாஜி, கண் இமைக்கும் நேரத்தில் அப்சல் மீது பாய்ந்து, தன் கைகளில் மறைத்து வைத்திருந்த விஷம் தேய்த்த புலி நகங்களால் அவைனக் கீறிக் கொன்று போட்டார். தலைவன் இல்லாத படைகளைப் பந்தாடியது மராட்டிய சேனை. மாபெரும் வீர‌னாக, ‘சத்ரபதி’ என முடிசூடினார் சிவாஜி.

1680-ம் ஆண்டு மரணமைடயும் வரையில், சிவாஜியைத் தோல்வி என்பது
நெருங்கவே இல்லை. காரணம், ‘துணிந்தவனுக்குத் தோல்வியில்லை’ என்கிற
அவரது தாரக மந்திரம்தான்.

10/20/2010

வணக்கம், ஹலோ சொல்லுங்க நண்பரே ...

              ரொம்ப நாளாகவே.... எனக்கு இந்த தொலை பேசிகளை குறிப்பாக கைபேசிகளை அதிலும் குறிப்பாக கார்பரேட் உலகம் என்று சொல்லக்கூடிய மிகப்பெரிய நகர்ப்புறங்களில் வாழும் மக்கள் அதை பயன் படுத்தும் விதம் பற்றி..ஒரு பதிவு எழுத வேண்டும் என்ற ஆவல்...அதன் விளைவுதான்.. இது.....

           கை பேசியில் ஒருவரை நாம் அழைக்கும் போது...இரண்டு அல்லது மூன்று ரிங்க் போனவுடன் உடனே நாம் நமது இணைப்பை துண்டிப்பது நல்லது ஏனென்றால் நாம் கூப்பிடுவது அவரது கைபேசியில் கண்டிப்பாய் அவருக்கு தெரியாமல் போக வாய்ப்பில்லை, எனவே அவர் நம்மை கண்டிப்பாய் திருப்பி அழைப்பார் அல்லவா? (உங்களிடம் இருந்து ஒளிந்து திரிபவர்களுக்கு இது செல்லாது). இதை விட்டு விட்டு எதிர் முனையில் இருப்பவர் என்ன அவசர வேலையில் இருந்தாலும் சரி எனது அழைப்பை எடுத்தே ஆக வேண்டும் என்று நினைப்பதும் அவர் எடுக்காததிற்கு நீங்கள் கோபம் கொள்வதும் சரிதானா?

                  அதுவும் ஒருவர் அலுவலகத்தில் இருந்தால்...அழைப்பை எடுக்க முடியாத சூழ் நிலைகள் எவ்வளவோ இருக்கின்றன.....அவர் திரும்ப அழைக்கும் வரை காத்திருங்கள். சரி இது தொலைபேசியில் அழைப்பவர்களுக்கு.....தொலை பேசியில் அழைக்கப்பட்டவர் என்ன செய்ய வேண்டும்....தமது கைபேசியில் வந்து எடுக்க தவறிப்போன அழைப்புகளுக்கு திரும்ப அழைத்து விபரம் கேட்டு அறியும் போது ....எடுக்க முடியாததற்கான காரணத்தையும் நண்பருக்கு விளக்கிச் சொல்லலாம்.

              உங்களின் அவசரமான பணிக்கிடையில் யாராவது தொடர்ந்து உங்களை அடைய முயற்சி செய்கிறார் என்றால்.... வெளியில் உள்ள உங்கள் நண்பருக்கு ஏதோ அவசரம் என்று புரிந்து கொண்டு அவரை உடனே அவரை தொடர்பு கொள்ளுங்கள் உங்களின் உதவி உங்கள் நண்பருக்கோ இல்லை உறவினர்க்கோ அவசரமாக தேவை என்று உணருங்கள்.

ஆக மொத்ததில் இது பொதுவாக எல்லோரும் விளங்க வேண்டிய விசயம் ஏதாவது ஒரு அவசரமின்றி என் நண்பரை நான் தொடர்ந்து அழைக்காதீர்கள் மேலும் சாதாரணமாக அரட்டை அடிக்க செய்த அழைப்பு என்றால் ஒன்று அல்லது இரண்டு ரிங்கோடு நிறுத்திக்கொள்ளுங்களேன். அலுவலகத்தில் இருக்கும் நேரம் மட்டுமல்ல....காலை நேரம் மற்றும் குடும்பத்தினரோடு இருக்கும் நேரம் என்றால் அத்யாவசியம் மற்றும் அவசர செய்திகள் பறிமாறிக்கொள்ளும் விதமாக அழைக்கலாம்.

          காலை 6:30 மணிக்கு பணிக்கு செல்லும் நேரத்தில்.... நண்பரை அவசர கதியில் தொலை பேசியில் அழைத்து " சும்மாதான் கால் பண்ணினேன்.....
அப்புறம் வேற என்ன செய்தி" என்று கேட்பது 10 கொலைகள் செய்வதற்கு சமம். மேலும் நீங்க போன் செய்து விட்டு....... மறுமுனையில் உள்ள நண்பரை.... " அப்புறம் ... நீங்கதான் சொல்லணும் என்று சொல்வது" உங்கள் நண்பரின் தலையில் வெந்நீரை கொட்டுவதற்கு சமம்.

                உங்கள் நண்பரும் அந்த விதம் தான் என்றால்..... நீங்கள் இருவரும் சேர்ந்து...அறிவியலின் அற்புதமான கண்டுபிடிப்பை கேவலமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள் என்று உணருங்கள். சில நண்பர்களுக்கு தொலைபேசியில் இன்று கூப்பிட்டால்....இரண்டு நாட்கள் கழித்து திரும்ப கூப்பிட்டு என்னடா....கால் பண்ணியிருந்தாயா... என்று கேட்பார்கள்...( நானும் இந்த ரகம்தான்.. .ரொம்ப கேவலமாக என்னையே திட்டிக் கொண்டு இப்போது தான் மாற ஆரம்பித்துள்ளேன்) இது ஒரு மிக அவசர கதியில் மாற்ற வேண்டிய ஒரு பழக்கம்.... நல்ல நேரத்தில் உங்களின் நண்பர் நலமாயிருந்தால் நல்லது...ஏதாவது ஒரு அவசர செய்தி அல்லது உங்களிடம் பேசினால் ஆறுதலாய் இருக்கும் என்று அவர் கூப்பிட்டு நீங்கள் திரும்ப அழைக்காமல் போன நேரத்தில்.. நண்பருக்கு ஏதாவது நிகழ்ந்திருந்தால்.....(கடவுளே...கற்பனை கூட பண்ணி பார்க்க முடியல...)

            தொலை பேசி....அறிவியலின் தலை சிறந்த தொழில் நுட்பம்.....அதை சரியாக பயன்படுத்தி....தொழிலை மட்டுமல்ல... உறவையும் மேம்படுத்தலாம்.....உன்னத மனிதர்களாய்....வாழலாம்......!

            என் கை பேசி இடை விடாமல் விட்டு விட்டு அடிக்கிறது......
டிரிங்க்.....டிரிங்க்......ட்ரிங்க்.....ட்ரிங்க்.....ட்ரி,ங்க்....ஐயோ எந்த நண்பரோ என்ன அவசரமோ....... உங்கள் அனைவரையும் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்...

வணக்கம்  , ஹலோ சொல்லுங்க  நண்பரே . 
 

10/19/2010

தமிழையே விரும்புவோம் ..........


         சமீபத்தில் ஒரு தோழி என்னிடம் கேட்டார் நீங்கள் ஏன் தமிழை  பற்றி மட்டும் எழுதுகிறீர்கள்...வாழ்வில் எவ்வளவோ நல்ல விசயங்கள் நிகழ்வுகள் இருக்கின்றனவே....ஏன் ஒரு நீங்கள் மட்டும் தான் தமிழரா ?  என்றும் கேட்டார். அவருடைய கேள்வியை மறு பரிசீலனை செய்யாமல் நானும் ஒத்துக்கொண்டேன்.

       அதாவது தமிழை  பற்றிதான் எழுதுவது என்ற எந்த ஒரு தீர்மானமும் எடுத்துக் கொண்டு எழுத உற்காருவதில்லை....அதே நேரத்தில் பதிவு எழுதவேண்டுமே என்று கடமைக்காகவும் எழுதுவதில்லை...ஏதாவது ஒரு தமிழை பற்றிய செய்தி நாம் படிக்கும் போது , நம்மை பாதித்து பதறவைக்கும் நேரத்தில் நமது எழுத்தை வெளிப்படுத்தும் ஒரு வடிகால் தான் பதிவுகள்! காயங்களுக்குத்தானே...மருந்து தேவை......கை குலுக்க ஓராயிரம் கைகள் இருந்தாலும்...கவலையை துடைப்பது என்னவோ சில கைகள் தானே....அவர்கள் எல்லாம் தமிழர்கள்தானே.....?
             மேலும்..... நல்ல சுகாதாரமான இடத்தை சுற்றி கோடி பேர் இருப்பார்கள்.... சாக்கடையை சுத்தம்செய்வது எல்லாரும் செய்யும் காரியமல்ல....தமிழை  பற்றி பேசுவது அதை மிகைப்படுத்துவதற்கு அல்ல....தமிழை நேசிப்பதற்காகத்தான் .....! சந்தோசங்களை மட்டும் பேசுவதும் எழுதுவதும்....உண்மையான சந்தோசமல்ல.....அது ஒரு ஓடி ஓளியும் முயற்சி....உண்மையை படித்ததில் , தெரிந்ததை எழுதுவது என் செயல்.

        ஏதாவது ஒரு சினிமா நடிகையின் அந்தரங்கத்தைப் பற்றி எழுதினால் நிறைய பேர் வந்து படிப்பார்கள்...சானியா மிர்சாவின் திருமணத்தைப் பற்றி...அக்கு வேறு ஆணிவேர் வரை அலசி ஆராய்ந்தால் கூட நிறைய பேர் படிப்பார்கள்.....ஆனால் அது ஆரோக்கியமான விசயமா? நல்ல கருத்துக்களை வித்துக்களை விதைக்கிறோமா? சிந்தித்து பாருங்கள்...அடுத்தவன் வீட்டு அந்தரங்கத்தை பற்றி விவரிக்கவும் விவாதிக்கவும் நாம் அனைவரும் நமது மூளைகளை நாய்க்குட்டி போல பழக்கி இருக்கிறோம். இந்த நிலை மாறவேண்டாமா?

           கடந்த 6 ஆம் தேதி....சட்டீஸ்காரில் மாவோயிஸ்ட்களின் கண்ணிவெடி தாக்குதலில் 75 ரிசர்வ் போலிசார்கள் பரிதாம்பாமாக உயிரிழுந்திருக்கிறார்கள். நம்மில் எத்தனை பேர்கள் இந்த செய்தியை முன்னிலைப்படுத்தி தீவிரவாத்தின் கொடுமையை மக்களுக்கு போகஸ் செய்து காட்டி இருக்கிறோம். பொழுது போவதற்காய் ஏதாவது செய்கிறோம் என்றாலும் அதில் ஒரு ஆழ்ந்த சிந்தனையை பரவவிட வேண்டாமா? நமது எழுத்துக்களை படிக்கிறவர்களை உங்களின் எண்ணோட்டம் புரட்டிப்போட வேண்டாம? சமூக பிரஞ்ஞை உள்ள ஒரு கலம்...அதை கவனமாய் கையாளவேண்டாமா.....

         மக்கள் படிக்கிறார்கள் விரும்புகிறார்கள் என்பதற்காக நமது எழுத்தின் ஓட்டத்தை மாற்றி.....கட்டுரைகளை கவர்ச்சிப்பொருளாய் ஆக்கலாமா? நடிகை நமீதாவின் ரகசிய காதல் காட்சிகள் என்று போட்டால் அதிக அளவில் அதை பார்க்க கூட்டம் வரும்...கூட்டம் வரும் என்பதால் நாம் பிரபல எழுத்தாளர் ஆகி விடுவோமா? நல்ல எழுத்தை இரண்டு பேர் படித்தால் போதும் அப்படி ஒரு கொள்கையோடு எழுத வந்துவிட்டால் நல்ல எழுத்துக்களை படிக்கும் வாசகர் கூட்டம் அதிகரிக்கும். அதை விட்டு விட்டு...பாம்பு வைத்து வித்தை காட்டும் மோடி மஸ்தான் போல கூட்டம் சேர்ப்பதில் எனக்கு விருப்பமில்லை....(அதனால் தான் என்னை பின் தொடர்பவர்களை வெளியிட விரும்பவில்லை )

          வலைப்பக்கங்கள் இலவசமாக கூகுள் வழங்குகிறது.....வாய்ப்பு தரப்படாத.... திறமையை வெளிக்காட்டமுடியாத....அத்தனை எழுத்தாளர்கள்...கவிஞர்கள்...சமூக பிரஞ்ஞை உள்ள சக்தி மிகுந்த அனைவரும்....ஒன்று கூடி தேரிழிப்போம்.... நல்ல ஒரு தமிழ் சமுதாயம் பிறக்க...விதையாய் இருப்போம்.....! நம்மால் முடிந்த அளவிற்கு.....வலுவான ஒரு சமுதாயத்தில்  தமிழை அங்கமாக்குவோம்!

"வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன்! வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன்! தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன்! 

குறிப்பு  : தோழிக்கு நான் சமூகம் மீது அக்கறை கொண்டவன்தான் , சமூகம் இல்லாமல் என் தமிழ் இல்லை மிக விரைவில் சமூக சிந்தனைகளை எனது பார்வையில் புதிய வலைப்பூவில் காண ஆவலுடன் இருக்கவும் அன்புடன் வேண்டும் உங்கள் தோழர் ........


    

10/18/2010

எப்பவோ எழுதியது ......


  புத்தகம் 

 நான் பிரச்சனையிலிருக்கும் போது தீர்வு சொல்லி
குழப்பத்திலிருக்கும்போது தெளிவடையச்செய்து
அழும்போது ஆறுதல் அளித்து
சோர்ந்தபோது தன்னம்பிக்கை அளித்து
தவறியபோது தத்துவ ஞானம் அளித்து
என் வாழ்க்கைப் பயணத்தின் வழிகாட்டியாக
இருந்த என் துணையை இழந்தேனே!
இழந்தது அழியக் கூடிய மனிதத் துணையை அல்ல!
உயிரினும் மேலான, என்றுமே
அழிவென்பதேயில்லாத அத்துணை
நண்பர்கள் கடன் வாங்கித் திருப்பிக் கொடுக்க
மறந்த என் புத்தகங்கள்தான்!!!!


ஆணால் என் வெற்றி 

முட்டுக் கட்டைகளை மூலதனமாக்கி
ஏமாற்றங்களை ஏணியாக்கி
சோதனைகளை சாதனையாக்கிய
வெற்றி விழாவில் பாராட்டுப் பத்திரம்
அந்த முட்டுக்கட்டைக்கு.
ஒரு பெண்ணின் வெற்றிக்குப்
பின்னாலும் ஒரு ஆண்
 

சிறந்தது


நதிகளில் சிறந்தது கங்கை ,
மலைகளில் சிறந்தது இமயம் , 
மலர்களில் சிறந்தது தாமரை , 
மணிகளில் சிறந்தது மாணிக்கம் ,
தெய்வங்களில் சிறந்தவர் முருகர் ,
யாத்திரைகளில் சிறந்தது கயிலை யாத்திரை.

10/17/2010

அன்றாட .............வெற்றி..........

இதை பற்றி நான் ஆங்கிலத்தில் படித்து உள்ளேன் ,அதை தமிழ் பதிவாக 
அளித்துள்ளேன் உங்களுக்காக .........

 
               நாம் அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ பேரைச் சந்திக்கிறோம். ஆனால் திட்டமிட்டு சில முக்கியமான நபரைச் சந்திக்க வேண்டியச் சூழலில், அதாவது, அலுவல் காரணமாகவோ, அல்லது, தொழில் சம்பந்தமான முக்கியமான நபரையோ யாராக இருந்தாலும், அந்த சந்திப்பு வெற்றிகரமாக அமைய வேண்டுமே என்ற தவிப்பு, ஏற்படுவது இயற்கையே. இதற்கு என்ன செய்ய வெண்டும்?
          நம்முடைய முதல் எண்ணப்பதிவை [ First Impression ] , சிறந்ததாக உருவாக்கிக் கொண்டால், நம்முடைய முக்கியத்துவம் கண்டிப்பாக உயரும். " முதல் கோணல், முற்றும் கோணல் " , என்பார்கள். முதல் பார்வையிலேயே ஒருவரை எளிதாக எடை போடக் கூடுமாதலால், அதனை ஆக்கப் பூர்வமானதாக்குவதில்தானே நம்முடைய வெற்றி அடங்கியிருக்கிறது?
        நாம் சந்திக்கும் நபரை முதலில்நேருக்கு நேர் கண்களைப் பார்த்துப் பேச வேண்டும். அதாவது, நம்முடைய உரையாடலுக்கான நேரத்தின், பாதி நேரத்திலாவது நேரடியாக கண்களைப் பார்த்துப் பேச வேண்டும். மிகவும் அதிகமாக உற்று நோக்குவதையும் தவிர்க்க வேண்டும். இல்லையென்றால், அது நாம் மிகுந்த சக்தியுடையவராக காட்டிக் கொள்வதான தோற்றத்தை அளிக்கும்.
            " புன்சிரிப்பு கோடி பெறும் ", நமக்கு அந்த நேரத்தில், சிரிக்கக் கூடிய மனநிலை இல்லாவிட்டாலும் கூட, சிறிதளவாக, பல்லைக் காட்டிச் சிரிப்பதால், உடன் உரையாடுபவர்களும், மறு புன்னகை வீசுவதோடு, அந்தச் சூழலின் மனநிலையின் இறுக்கம் தளர்வடையும்!
       அதிகமாக பகிர்ந்துக் கொள்வதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.அதாவது, ஆரம்பத்திலேயே, அதிகமான ' சுய புராணம் ' பாடுவதைத் தவிர்க்க வேண்டும். அது அவசிய மற்றதும்கூட. காரணம், ஒருவரும், நம்முடைய அறுவை பற்றியெல்லாம் அறிந்துக் கொள்வதில் ஆர்வம் காட்ட மாட்டார்கள்!
           சிறிது 'முகஸ்துதி' , செய்வதில் தவறில்லை. ஆனால் அது அதிகப்படியான போலிப் புகழ்ச்சியாக இல்லாத வண்ணம் பார்த்துக் கொள்ள வெண்டும்.
         இப்படித்தான் உரையாடலை ஆரம்பிக்க வேண்டும் என்று தயார் படுத்திக் கொண்டுச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.காரணம், தாமே அந்தச் சூழலை முழுவதும் ஆக்கிரமித்துக் கொண்டது போலவும், தன்னலத்துடன் பழகுவது போலவும் ஒரு தோற்றத்தை உருவாக்கி விடும்!
        உரையாடலின் இடையே ஓரிரு முறை அவரது பெயரை உச்சரிக்கலாம். அதற்காக, விற்பனையாளரைப் போல பல முறை உபயோகித்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.!
         மறு முனையில் இருப்பவர் பேசும் போது,மேசையின் மீது சாய்ந்து கொண்டோ, கைகளை கட்டிக் கொண்டோ, எந்த உணர்ச்சியும் காட்டாமல், உட்கார்ந்திருந்தால், நமக்கு, அந்த உரையாடலில் விருப்பம் இல்லையென்றோ, கோபமாக இருப்பதான தோற்றமோ கொடுத்து விடும்.
         10 நொடியில் தம்மைப் பற்றிய எண்ணத்தை மற்றவரால் கணிக்க முடியும் என்பதால், ஒவ்வொரு நொடியையும் கணக்கில் கொள்ள வெண்டும்.
            ஆக, ஆரம்பத்திலேயே, தம்மைப் பற்றி உயர்ந்த கணிப்பு ஏற்படுத்த;
முதலில் எளிதாக நெருங்கக் கூடியவராக இருத்தல் வேண்டும். 
கொஞ்சமாக சுயபுராணம் தேவை.
         முதல் சந்திப்பில் எது போன்ற தலைப்பில் அளவளாவல் வேண்டும் என்கிற விழிப்புணர்வு, மற்றும் நாம் வாழும் உலகம், நம் வாழ்க்கை மற்றும் நம்மைப் பற்றி ஆக்கப்பூர்வ உணர்வு கொண்டிருக்க வேண்டும்.
        ஆக்கப்பூர்வமான எண்ண அலைகள் ஒன்று கூடும் போதுதான், அந்தச் சந்திப்பின் நோக்கம் முழுமையாக நிறைவேறும் என்பதே நிதர்சனம்!

            போட்டிகள் நிறைந்த இன்றைய கால கட்டத்தில், ஒவ்வொரு சிறிய விசயத்திலும் விழிப்புணர்வுடன் செயல்பட்டால் மட்டுமே வெற்றி பெற முடியும்!! 

நன்றி .

10/16/2010

ஆனந்தம்


”எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா?” என்று பாடினார்  பாரதி. இப்படிப் பாடிய பாரதி செல்வச் செழிப்பில் வாழ்ந்தவரல்ல. வாழ்க்கையில் சிக்கல்களையும், பிரச்னைகளையும் பாராதவர்  அல்ல. சொல்லப் போனால் அவர்  வாழ்க்கையே பிரச்னைகளின் தொகுப்பு என்று சொல்லும்படி இருந்தது. ஆனாலும் பாரதி அழுது புலம்பி ஒரு வரி பாடியதில்லை. மாறாக எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா என்று வியந்து மகிழ்கிறானே எப்படி? அவன் கண்ட ஆனந்தம், அவன் கண்ட இன்பம் எங்கிருந்தது? எப்படி வந்தது?

          வீதியில் நின்று சற்று நேரம் வருவோர் போவோரைக் கவனியுங்கள். எத்தனை முகங்களில் ஆனந்தம் தெரிகிறது? விரையும் மனிதர்கள் முகத்தில் கரைக்க முடியாத கவலைகளும், சிந்தனைகளும் அல்லவா தெரிகிறது? இதில் பணக்காரன், ஏழை என்ற வித்தியாசம் ஏதும் தெரிவதில்லையே. இருப்பவன், இல்லாதவன் என்ற இரண்டு வகை மனிதர்களும் ஆனந்தத்தைத் தேடி அலைவது போலல்லவா இருக்கிறது? எங்கே அந்த ஆனந்தம் கிடைக்கும்?
        பதிலைத் தேடும் முன் முல்லா நஸ்ருதீன் கதை ஒன்றைப் பார்ப்போம். முல்லா நஸ்ருதீன் வெளிச்சமான இடத்தில் ஏதோ தேடிக் கொண்டு இருந்தார். அதைக் கண்ட அவர் நண்பர் ஒருவர் “என்ன தேடுகிறீர்கள்?” என்று கேட்டு உதவ முன் வந்தார்.
        ”ஒரு தங்க நாணயம் கை தவறி விழுந்து விட்டது” என்றார் முல்லா.
நண்பரும் சிறிது நேரம் முல்லாவுடன் சேர்ந்து தேடினார். தங்க நாணயம் கிடைக்கவில்லை. நண்பர் முல்லாவைக் கேட்டார். “சரியாக நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். இங்கே தான் நாணயத்தை நழுவ விட்டீர்களா?”
         முல்லா சற்று தொலைவில் உள்ள இருட்டான இடத்தைக் காண்பித்து விட்டு “அங்கு தான் விழுந்தது?” என்று சொன்னார்.
            நண்பருக்குக் கோபம் வந்து விட்டது. “அட முட்டாளே. அங்கே தொலைத்து விட்டு இங்கே வந்து தேடினால் அது எப்படிக் கிடைக்கும்?” என்று முல்லாவைத் திட்டினார்.
         பதிலுக்கு முல்லாவும் நன்பரைக் கோபித்துக் கொண்டார். “நீ தான் முட்டாள். இருட்டான இடத்தில் தேடினால் எதாவது கிடைக்குமா? எதையும் வெளிச்சத்தில் தேடினால் தானே கிடைக்கும்? அதனால் தான் வெளிச்சத்தில் தேடுகிறேன்”
         சிறிது நேரம் முல்லாவுடன் சேர்ந்து நாணயத்தைத் தேடியதை நினைத்து அந்த நண்பர் தலையில் அடித்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.
         முல்லாவின் முட்டாள்தனம் நமக்கு சிரிப்பை வரவழைக்கலாம். ஆனால் ஆனந்தத்தைத் தேடும் நம் கதையும் அப்படித்தானல்லவா இருக்கிறது. மனதில் தொலைத்த ஆனந்தத்தை அதைத் தவிர மற்ற இடங்களில் தேடி என்ன பயன்? உலகத்தையே சுற்றி வந்து தேடினாலும் அந்த ஆனந்தம் நமக்கு கிடைக்குமா?
       எது கிடைத்தால் நீ ஆனந்தமாய் இருப்பாய் என்று உங்கள் மனதைக் கேளுங்கள். இது கிடைத்தால் ஆனந்தமாய் இருப்பேன் என்று மனம் சொல்லும். அதை எப்பாடுபட்டாவது கொடுத்துப் பாருங்கள். மனம் இனியெல்லாம் சுகமே என்று ஆனந்தமாய் இருக்கிறதா என்று சோதித்துப் பாருங்கள். மனம் ஓரிரு நாட்கள் மகிழ்ச்சியாய் இருக்கலாம். மூன்றாவது நாள் மனம் தானாக ஆனந்தத்தை இழக்கும். காரணம் மனதிற்கு புதுத் தேவை ஒன்று பிறந்திருக்கும். அது மட்டும் கிடைத்து விட்டால் ஆனந்தமாய் இருக்க முடியும் என்று மனம் சொல்லும்.
         அது வேண்டும் இது வேண்டும் என்று இந்த மனக்குரங்கு பாடாய் படுத்த ஒவ்வொரு தேவையாகப் பூர்த்தி செய்யக் கிளம்பும் மனிதன் தொடுவானத்தைத் தொட்டு விட முடியும் என்கிற நினைப்பில் ஓடும் வேலையைத் தான் செய்கிறான். எத்தனை வேகத்தில் ஓடினாலும் தொடுவானம் தொலைவிலேயே நிற்பது போல ஆனந்தம் அடைய முடியாத இலக்காகவே இருக்கிறது.
             மில்டன் என்ற ஆங்கில மகாகவி பாடுவான். “மனம் இருந்த இடத்தில் இருந்து கொண்டே சொர்க்கத்தை நரகமாகவும், நரகத்தை சொர்க்கமாகவும் மாற்றும் வல்லமை பெற்றது”. மனதிற்கு அந்த ரசாயன வித்தை தெரியும். ஆனந்தம் அடையவும் தெரியும். அழுது புலம்பவும் தெரியும். ஒரே விதமான சூழ்நிலையிலும் இந்த இரண்டில் எதையும் தேர்ந்தெடுக்கும் ரசாயன வித்தை தெரியும்.
             அந்த ரசாயன வித்தை அறிந்ததால் தானே பாரதியால் வறுமையிலும், ஆங்கிலேயரின் அடக்குமுறைத் தாக்குதலிலும், சிறையிலும், பல பக்கங்களில் இருந்தும் வந்த பிரச்னைகளிலும் கூட எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா என்று பாட முடிந்தது.
       பின் ஏன் இந்த மனம் ஆனந்தமாய் இருக்க மறுக்கிறது? காரணம் அந்த மனதை சரியான படி வழிநடத்த நாம் மறந்து விடுவது தான். தவறான செய்திகளை மனதிற்குத் தந்து, தவறான நம்பிக்கைகளை மனதில் ஏற்படுத்தி மனம் சோகப்படும் போது அது நியாயம் தான் என்று நாம் நியாயப்படுத்தி மனதை தவறாகவே பழக்கப்படுத்தியிருக்கிறோம்.
        ஊரைச் சுற்றினால் தான் ஆனந்தம், மதுவில் மூழ்கினால் தான் ஆனந்தம், பொருள்களை வாங்கிக் குவித்தால் தான் ஆனந்தம், அடுத்தவன் பொறாமைப்படும் படி வாழ்ந்தால் தான் ஆனந்தம், உன்னை மிஞ்ச ஆளில்லை என்று பலர் புகழ்ந்தால் தான் ஆனந்தம் என்றெல்லாம் தவறான கருத்துகளை மனதில் பதிய வைத்து விட்டால் பின் மனிதன் ஆனந்தமடைவது சாத்தியம் இல்லை.
           பொய்யை அஸ்திவாரமாகக் கொண்டு எதை அடைந்தாலும் அது நிலைத்து நிற்காது. மேலே சொன்ன தவறான, பொய்யான அனுமானங்களைக் கொண்டு அடையும் மகிழ்ச்சிகளும் அதனாலேயே வந்த வேகத்தில் காணாமல் போகிறது.
          பிரச்னையே இல்லாத வாழ்க்கை ஆனந்தமல்ல. பிரச்னையைத் தீர்க்க முடிவது தான் ஆனந்தம். தடங்கலே இல்லாத வாழ்க்கை ஆனந்தமல்ல. தடங்கலைத் தாண்டி முன்னேறுவது தான் ஆனந்தம். எதிலும் ஒரு நன்மையைப் பார்ப்பதும், எதிலும் ஒரு பாடத்தைப் படிப்பதும் ஆனந்தம் தரும்.
            ஒரு விஷயத்தை எப்படியும் பார்க்கலாம். ரோஜாவில் முள் என்றும் பார்க்கலாம். முள்ளில் ரோஜா என்றும் பார்க்கலாம். பாதி தம்ளர் காலியாக இருக்கிறது என்றும் சொல்லலாம். பாதி தம்ளர் நிறைந்திருக்கிறது என்றும் சொல்லலாம். இந்த இரண்டு விதங்களில் எப்படிப் பார்த்தாலும், எப்படிச் சொன்னாலும் அது உண்மையே என்றாலும் நல்ல தன்மையை கோடிட்டுக் காணும் கலையை உங்கள் மனதிற்குக் கற்றுத் தந்தால் என்றும் எதிலும் ஆனந்தமே.