"வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன்! வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன்! தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன்! கோவை அ.ராமநாதன்
1/07/2011
எவ்வடிவில் தியானம் உருவம் பெற வேண்டும் -ரமணர்
தன் முயற்சியற்ற, விருப்பத்தேர்வற்ற தூய உணர்வே நமது உண்மையான இயல்பு. அந்த நிலைமை நாம் உணர்ந்து அவ்வனுபவத்தில் ஒன்றிவிடுவோமானால் அது சரியே. ஆயினும், ஒருவர் அந்நிலையை முயற்சி ஏதுமின்றி அடைவதற்கில்லை. அத்தகைய முயற்சியை முனைந்து மேற்கொள்வதே தியானம் எனப்படுவது.
ஜென்மாந்திர வாசனைகள் அனைத்தும் மனதை வெளிமுகமாய்ப் புறப் பொருள்கள் மீதே திருப்புகின்றன. அவ்வாறான எண்ணங்கள் யாவற்றையும் துறந்து, மனதை உள்முகமாகத் திருப்ப வேண்டும். இந்த அகமுக நாட்டத்திற்கு அநேகமாக எல்லோருக்குமே சுய முயற்சி தேவைப்படுகிறது. 'சிந்தையை அடக்கிச் சும்மா இரு' என்பதே சாதகர்களுக்கு எந்த ஒரு ஞானியின், எந்த ஒரு ஆன்மீக நூலின் போதனையாக அமைகிறது.
ஆனால் 'சும்மா இருத்தல்' அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. ஆகவேதான் அதற்கு முயற்சி அவசியப்படுகிறது. இந்த உச்ச ஆன்ம நிலையாம் மோன சாந்தியை முயற்சி ஏதுமின்றி எய்துவிட்ட யாரேனும் ஒருவரை நாம் காண முடிந்தாலும், அவர் போன ஜென்மத்தில் (முற்பிறவியில்) அதற்கான முயற்சி மேற்கொண்டதன் பயனே அது என்று நீங்கள் அனுமானிக்கலாம்.
முயற்சியற்ற, விருப்பத்தேர்வற்ற, பேரின்ப நிலையாம் தூய உணர்வைத் துய்க்க விடாமுயற்சி அவசியம். அந்த விடாமுயற்சியே 'தியானம்' ஆகும். அதற்கான தியானம் உங்களுக்குப் பிடித்தமான முறையில் அமையலாம். எவ்வகையான தியானம் எண்ண அலைகளையெல்லாம் ஓயச்செய்ய உடனடியாய் உதவுகிறது என்று பார்த்துத் தேர்ந்தெடுத்து அதனையே உமது தியான மார்க்கமாகக் கடைபிடிக்கலாம்.
'சிந்தையை அடக்கி சும்மாவிருக்கும்' திறமே ஜீவன்முக்தி. ஆயினும் இந்த உண்மையை எவ்வளவுதான் நீர் உமது மனத்திற்கு எடுத்துரைத்தாலும் சிந்தை சும்மா இருப்பதில்லை. ஏனெனில் மனம்தானே மனத்திற்கு அவ்வாறு கூறுகிறது! அந்த மனத்திற்கு அவ்வாறு அடங்கிவிடும் திறமோ அரிதினும் அரிது. மன நாசத்தையே சாத்திரங்கள் அனைத்தும் இயம்பியுள்ன. இதனையே சான்றோர்கள் திரும்பத் திரும்பத் கூறுவதை நாள்தோறும் கேட்கிறோம்.
நாம் குருவாக வரித்திருப்பவரும் இதையே கூறினாலும் மனத்தை அடக்கி நாம் சும்மா இருப்பதில்லை. மாயா உலகத்திலும், புலன்கள் உணர்த்தும் புறப் பொருட்கள் மீதும் மனத்தை மேய விட்டுவிடுகிறோம். இதன் காரணமாகவே முயற்சிகளற்ற பூரண சாந்தி நிலை எய்துவதற்கு நெஞ்சறிய, ஆன்மார்த்த அபார முயற்சி அவசியமாகிறது.
முயற்சி செய்யலாமல் உங்களால் வெறுமனே இருப்பது சாத்தியமே அல்ல. அவ்வாறு முயன்று மேன்மேலும் உள்ளாழ்ந்து ஆன்ம நிலைபேறு எய்தபின் முயற்சி ஏதும் செய்வதும் சாத்தியமே அல்ல.
1/06/2011
எண்ணும் எழுத்தும் கண்ணென தகும்....
எண்ணும் எழுத்தும் கண்ணென தகும்.
அதற்காக எண்களும் எழுத்துக்களும் எல்லாம் தர வல்ல சூத்திரம் ஆகுமா?
இந்திய தகவல் தொடர்பு நிறுவனத்தின் சென்னை தொலைபேசிகள் கவர்ச்சிகரமான எண்களை மின் ஏலத்தில் விற்பனை செய்யவுள்ளது. 94456 மற்றும் 94459 வரிசை எண்களை சென்னை தொலைபேசிகள் அறிமுகப்படுத்துவதை தொடர்ந்து இந்த ஏல அறிவிப்பு வந்துள்ளது.கவர்ச்சி எண்கள் மூன்று நிலைகளாக பிரிக்கப்பட்டு குறைந்த பட்ச ஏலத்தொகை முறையே 7000 ,5000 ,மற்றும் 3000 ,என அறிவிக்கப் பட்டுள்ளது,
கடந்த முறை 2009 டிசம்பர் மாதத்தில் இது போன்ற கவர்ச்சி எண்கள் ஏலம் விடப்பட்டதில் பி.எசு.என்.எல். ரூ 8 லட்சம் உருவாக்களை மக்களிடமிருந்து கொள்ளை அடித்துள்ளது. அதில் உச்சபட்ச கவர்ச்சிகரமான எண் ரூ.1.8 லக்கத்திற்கு விலைபோனதாம்.
என்ன ஒரு முட்டாள்தனம் பாரீர். மீள் விற்பனை மதிப்பு இல்லாத ஒரு பொருளுக்கு இலக்கக் கணக்கான உருவாக்களை அள்ளி இறைக்க மனிதரில் இத்தனை மூடர்களா.அலைபேசியில் நம்மை தொடர்புகொள்ள உதவும் ஒரு எண்ணுக்காக பல லக்க உருவாக்களை வாரி இறைக்க மக்கள் அணியப் படுத்தப்பட்டுள்ளனர். எந்த எண்ணைகொண்டு அழைத்தால் என்ன. நாம் எப்படி பிறரிடம் பேசி அணுக்கமாக நடந்து கொள்கிறோமோ அதற்கு தகுந்தவாறு நம் பேச்சின் விளைவு இருக்கும். முன்சினம் கொண்ட முட்டாள் ஒருவன் எத்தகைய கவர்ச்சிகரமான எண்ணை கொண்டிருந்தாலும் தனது முரட்டு பேச்சினால் மொத்த வேலையையும் கெடுத்துவிடுவான்.சாதுரியமும் சாமர்த்தியமும் உள்ள ஒருவன் வாயில் நுழையாத எண்ணை கொண்டிருந்தாலும் கனிவான பேச்சின் மூலம் வெற்றியடைவான்.
"பெயரியல் பேராசான்களும்" "எண்ணியல் வல்லுனர்களும் " நம் மக்களிடையே மூட நம்பிக்கை தீயை மூட்டி குளிர்காய்ந்து கொண்டிருப்பதன் மூலம் இத்தகைய கொள்ளைகளுக்கு வழியை திறந்துவிட்டுள்ளனர். அதுவும் அரசுத்துறை நிறுவனமான சென்னை தொலைபேசிகள் இந்த வேலையை வெட்கமின்றி செய்து வருகிறது.
நினைவில் நிறுத்துவதற்கு எளிதானவை என்று கவர்ச்சிகரமான எண்களை விலை கொடுத்து வாங்குவது நியாயப்படுத்தப்படுகிறது. இன்றைய
நவீன யுகத்தில் அனைத்து தொலைபேசி எண்களும் அலைபேசியிலோ நிலை தொலைபேசியிலோ பதிவு செய்யப்பட்டு அதன் வழிதான் அழைக்கப்படுகின்றன. இதில் நினைவு வைத்துகொள்வது என்பதெல்லாம் கேலிக்கூத்து.
ஒரு வினாடியின் நூற்றில் ஒரு பங்கு பின்தங்கியதால் பன்னாட்டு விளையாட்டு போட்டிகளின் ஓட்டப்பந்தயங்களில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை பறிகொடுத்த வீரர்கள் ஏராளம். (நமது பி.டி.உசா அப்படி தவறவிட்டது இன்றளவும் நமக்கு வருத்தத்தை தருகிறது) அவர்களது பெயரோ, தொலைபேசி எண்ணோ இந்த பேராசான்களின் அறிவுரை பெற்று மாற்றப்பட்டால் அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றிகிட்டி விடுமா? கடும் உழைப்பும் பயிற்சியுமே வெற்றியை பெற்றுத்தரும்.
பெயரும் எண்களும் ஒரு மனிதனின் வாழ்வில் எந்த மாற்றத்தையும் ஏற்ப்படுத்தமுடியாது. அவற்றை நம்பி மோசடி பேர்வழிகளின் பின்னால் போவது முட்டாள்தனம் என்பதை நம் இன சகோதரர்களுக்கு எடுத்து சொல்வோம்.......
1/05/2011
என் கனவே ....
பிரிவதில்லை காதல் என்றாய்
பின்னர் பிரிவை மட்டும்
ஏன் எனக்கு வலியாய் தந்தாய்?நிஐங்கள் அழிவதில்லை என்றாய்
என் நிஐ அன்பை இன்னும் ஏன்
உணர மறுக்கிறாய்?
கனவுகள் நிஐமாவதில்லை தான்..
ஆனால் நிஐங்களைவிட
கனவுகளையே நான்
அதிகம் விரும்புகிறேன் ஏன் தெரியுமா?
கனவில் தான் நீ என்னோடு
நீண்ட தூரம் பயணிக்கிறாய்
என்பதால்!
1/04/2011
நீங்கள் மாறுங்கள் உலகம் மாறும் ?
நிறைய பேர் உலகம் இப்படி இருக்கிறதே, மனிதர்கள் இப்படி இருக்கிறார்களே என்று புலம்புவார்கள். இவர்கள் எப்போதுதான் மாறுவார்களோ,இவர்கள் எப்படித்தான் திருந்துவார்களோ என்று கூறுவார்கள். ஆனால் உலகத்தை மாற்ற முயற்சிப்பதை விட, நம்மை மாற்றிக் கொள்ள முயற்சிப்பதுதான் சிறந்தது.
இதற்கு உதாரணமாக ஒரு கதையை உங்களுக்குக் கூற விரும்புகிறேன்.
ஒரு காலத்தில் மங்கலாபுரி என்ற நகரத்தை ஒரு மன்னன் ஆண்டு வந்தான். அவன், ஒரு நாள் வெகு தொலைவில் உள்ள பகுதிகளுக்கு சுற்றுலா சென்றான். அந்த நாட்களில் வாகனங்கள் ஏதும் இல்லாததால் பல இடங்களுக்கு நடந்தே செல்ல வேண்டியதாயிற்று.
தனது பயணத்தை முடித்துக் கொண்டு அரண்மனைக்கு வந்த மன்னன், தன் கால்களில் கடுமையான வலியை உணர்ந்தான். இதுதான் அவன் அதிகமான தூரம் நடந்து சென்ற முதல் பயணம் என்பதாலும், அவன் சென்று வந்த பகுதிகள் பல கரடுமுரடாக இருந்ததாலும் கால்வலியை அவனால் தாங்கவே முடியவில்லை.
இந்த நிலையில், மன்னன் ஒரு ஆணையிட்டான். அதாவது, "இந்த நகரம் முழுவதும் உள்ள அனைத்து சாலைகளையும் விலங்கின் தோலை கொண்டு பரப்பி விட வேண்டும்" என்பதாகும்.
இதனை நிறைவேற்றுவதற்கு ஏராளமான விலங்குகளை கொல்ல வேண்டி வரும், மேலும் இதற்கு ஏராளமான பணம் செலவாகும் என்பது எல்லோருக்கும் தெரியும்.
இதனை உணர்ந்த மன்னனின் பணியாளர் ஒருவர், மிகுந்த பணிவுடன் மன்னனிடம் சென்று, நீங்கள் கூறியபடி, நகரம் முழுவதையும் தோலால் பரப்பினால் ஏராளமான பொருட்செலவாகும். உங்கள் ஒருவருக்காக இப்படி நகரத்தையே மாற்றுவது தேவையில்லாத செலவினம். அதற்கு பதிலாக நீங்கள் மிகவும மிருதுவான ஒரு தோலைக் கொண்டு காலணி செய்து கொள்ளலாமே என்று ஆலோசனைக் கூறினான்.
ஆச்சரியத்தில் மூழ்கிய மன்னன், இறுதியாக தனது பணியாளரின் ஆலோசனையை ஏற்றுக் கொண்டு தனக்காக ஒரு காலணியை தயாரிக்க சொன்னான்.
இது வெறும் கதையல்ல. நம் வாழ்க்கைக்குத் தேவையான ஒரு தகவல். அதாவது, இந்த பூமியை மிகவும் மகிழ்ச்சியான உலகமாக நாம் மாற்றிக் கொள்ள முடியும், அதற்காக நாம் நம்மைத்தான் மாற்றிக் கொள்ள வேண்டுமேத் தவிர, இந்த உலகத்தை அல்ல என்பதுதான் அது.
என்ன நண்பர்களே கதை உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?
இதற்கு உதாரணமாக ஒரு கதையை உங்களுக்குக் கூற விரும்புகிறேன்.
ஒரு காலத்தில் மங்கலாபுரி என்ற நகரத்தை ஒரு மன்னன் ஆண்டு வந்தான். அவன், ஒரு நாள் வெகு தொலைவில் உள்ள பகுதிகளுக்கு சுற்றுலா சென்றான். அந்த நாட்களில் வாகனங்கள் ஏதும் இல்லாததால் பல இடங்களுக்கு நடந்தே செல்ல வேண்டியதாயிற்று.
தனது பயணத்தை முடித்துக் கொண்டு அரண்மனைக்கு வந்த மன்னன், தன் கால்களில் கடுமையான வலியை உணர்ந்தான். இதுதான் அவன் அதிகமான தூரம் நடந்து சென்ற முதல் பயணம் என்பதாலும், அவன் சென்று வந்த பகுதிகள் பல கரடுமுரடாக இருந்ததாலும் கால்வலியை அவனால் தாங்கவே முடியவில்லை.
இந்த நிலையில், மன்னன் ஒரு ஆணையிட்டான். அதாவது, "இந்த நகரம் முழுவதும் உள்ள அனைத்து சாலைகளையும் விலங்கின் தோலை கொண்டு பரப்பி விட வேண்டும்" என்பதாகும்.
இதனை நிறைவேற்றுவதற்கு ஏராளமான விலங்குகளை கொல்ல வேண்டி வரும், மேலும் இதற்கு ஏராளமான பணம் செலவாகும் என்பது எல்லோருக்கும் தெரியும்.
இதனை உணர்ந்த மன்னனின் பணியாளர் ஒருவர், மிகுந்த பணிவுடன் மன்னனிடம் சென்று, நீங்கள் கூறியபடி, நகரம் முழுவதையும் தோலால் பரப்பினால் ஏராளமான பொருட்செலவாகும். உங்கள் ஒருவருக்காக இப்படி நகரத்தையே மாற்றுவது தேவையில்லாத செலவினம். அதற்கு பதிலாக நீங்கள் மிகவும மிருதுவான ஒரு தோலைக் கொண்டு காலணி செய்து கொள்ளலாமே என்று ஆலோசனைக் கூறினான்.
ஆச்சரியத்தில் மூழ்கிய மன்னன், இறுதியாக தனது பணியாளரின் ஆலோசனையை ஏற்றுக் கொண்டு தனக்காக ஒரு காலணியை தயாரிக்க சொன்னான்.
இது வெறும் கதையல்ல. நம் வாழ்க்கைக்குத் தேவையான ஒரு தகவல். அதாவது, இந்த பூமியை மிகவும் மகிழ்ச்சியான உலகமாக நாம் மாற்றிக் கொள்ள முடியும், அதற்காக நாம் நம்மைத்தான் மாற்றிக் கொள்ள வேண்டுமேத் தவிர, இந்த உலகத்தை அல்ல என்பதுதான் அது.
என்ன நண்பர்களே கதை உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?
1/03/2011
பெருமைப்பட வேண்டிய தமிழர்
இதில் பெருமைக்குரிய விஷயம், இவர் ஒரு தமிழர் என்பதே. அப்படி என்னதான் சாதனைசெய்துவிட்டார் இந்தத் தமிழர்? திருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜில் (தற்போது என்.ஐ.டி.) மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்தவுடன் அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நியூக்ளியர் என்ஜினீயரிங் படித்து விட்டு, அதே பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டமும் பெற்றார் ஸ்ரீதர்.
மிகப் பெரிய புத்திசாலியாக இருந்த இவரை நாசா அமைப்பு உடனடியாக வேலைக்கு எடுத்துக் கொண்டது. அரிசோனா பல்கலைக் கழகத்தில் உள்ள ஸ்பேஸ் டெக்னாலஜீஸ் லேபரட்டரியின் இயக்குநராக அவரை நியமித்தது.
செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா? அதற்குத் தேவையான சாத்தியக்கூறுகளைக் கண்டுபிடிப்பது எப்படி? என்பது பற்றி ஆராய்ச்சி செய்வதே ஸ்ரீதரின் வேலை. முக்கியமாக செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் சுவாசிக்கத் தேவையான ஆக்ஸிஜனை தயார் செய்ய முடியுமா என்கிற ஆராய்ச்சியை மேற்கொண்டார். இந்த ஆராய்ச்சியில் மிகப் பெரிய வெற்றியும் பெற்றார். ஆனால் அமெரிக்க அரசாங்கமோ திடீரென அந்த ஆராய்ச்சியை ஓரங்கட்டிவிட்டது. என்றாலும் தான் கஷ்டப்பட்டு கண்டுபிடித்த விஷயத்தை ஸ்ரீதர் அப்படியே விட்டுவிடவில்லை. அந்த ஆராய்ச்சியை அப்படியே ரிவர்ஸில் செய்து பார்த்தார் ஸ்ரீதர். அதாவது, ஏதோஒன்றிலிருந்து ஆக்ஸிஜனை உருவாக்கி வெளியே எடுப்பதற்குப் பதிலாக அதை ஒரு இயந்திரத்துக்குள் அனுப்பி, அதனோடு இயற்கையாகக் கிடைக்கும் எரிசக்தியை சேர்த்தால் என்ன நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தார். அட, என்ன ஆச்சரியம்! மின்சாரம் தயாராகிவெளியே வந்தது.
இனி அவரவர்கள் அவரவருக்குத் தேவையான மின்சாரத்தை இந்த இயந்திரம் மூலம் தயார் செய்து கொள்ளலாம் என்கிற நிலையைஸ்ரீதர் உருவாக்கி இருக்கிறார். தான் கண்டுபிடித்த இந்தத் தொழில் நுட்பத்தை அமெரிக்காவில் செய்து காட்டிய போது அத்தனை விஞ்ஞானிகளும் அதிசயித்துப் போனார்கள். ஆனால் இந்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வர்த்தக ரீதியில் மின்சாரம் தயாரிக்க வேண்டுமெனில் அதற்கான இயந்திரங்களை உருவாக்க வேண்டும். இதற்கு பெரிய அளவில் பணம் வேண்டும். இப்படிப்பட்ட
தொழில்நுட்பத்தைப் உருவாக்கும் பிஸினஸ் பிளான்களுக்கு வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள்தான் பணத்தை முதலீடு செய்யும்.
ஸ்ரீதருக்கும் அப்படி ஒருவர் கிடைத்தார். அவர் பெயர், ஜான் டூயர். சிலிக்கன் பள்ளத்தாக்கில் பிரபலமாக இருக்கும் மிகப் பெரிய வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனமான கிளீனர் பெர்க்கின்ஸை சேர்ந்தவர் இந்த ஜான் டூயர். அமெரிக்காவில் மிகப் பெரும் வெற்றி கண்ட நெட்ஸ்கேப், அமேசான், கூகுள் போன்ற நிறுவனங்கள் இன்று பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கக் காரணம், ஜான் டூயர் ஆரம்பத்தில் போட்ட முதலீடுதான்.
கூகுள் நிறுவனத்தை ஆரம்பிக்க ஜான் டூயர் தொடக்கத்தில் போட்ட முதலீடு வெறும் 25 மில்லியன் டாலர்தான். ஆனால், ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை வர்த்தக ரீதியில் செயல்படுத்த ஜான் டூயர் போட்ட முதலீடு 100 மில்லியன் டாலர். இது மிகப்பெரும் தொகை. என்றாலும் துணிந்து முதலீடு செய்தார் ஜான். காரணம், ஸ்ரீதர் கண்டுபிடித்த தொழில்நுட்பம் சுற்றுச்சூழலுக்கு உகந்தது. பொதுவாக மின் உற்பத்தி செய்யும்போது சுற்றுச்சூழல் பிரச்னைகள் நிறையவே எழும். அது நீர் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி, அனல் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி. எனவே சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் பங்கம் வராத மின் உற்பத்தித்தொழில்நுட்பத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு இருக்கும் என்று நினைத்தார்அவர். தவிர, ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தைக் கொண்டு குறைவான செலவில் மின்சாரம் தயார் செய்ய முடியும். இந்த பாக்ஸிலிருந்து உருவாகும் மின்சாரம் குறைந்த தூரத்திலேயே பயன்படுவதால் மின் இழப்பு என்கிற பேச்சுக்கே இடமில்லை. இது மாதிரி பல நல்ல விஷயங்கள் ஸ்ரீதரின் கண்டுபிடிப்பில் இருப்பதைஉணர்ந்ததால் அவர் அவ்வளவு பெரிய தொகையை முதலீடு செய்தார். நல்லவேளையாக, ஜான் டூயரின் எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை. கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் கஷ்டப்பட்டு பலரும் உழைத்ததன் விளைவு இன்று 'ப்ளூம் பாக்ஸ்' என்கிற மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸ் தயார் செய்துள்ளார்.
சுமார் 10 முதல் 12 அடி உயரமுள்ள இரும்புப் பெட்டிதான் ஸ்ரீதர் உருவாக்கியுள்ள இயந்திரம். இதற்கு உள்ளே ஆக்ஸிஜனையும் இயற்கை எரிவாயுவையும் செலுத்தினால் அடுத்த நிமிடம் உங்களுக்குத் தேவையான மின்சாரம் தயார். இயற்கை எரிவாயுவுக்குப் பதிலாக மாட்டுச்சாண வாயுவையும் செலுத்தலாம். அல்லது சூரிய ஒளியைக் கூட பயன்படுத்தலாமாம். இந்த பாக்ஸ்களை கட்டடத்துக்குள்ளும் வைத்துக் கொள்ளலாம். வெட்ட வெளியிலும் வைத்துக் கொள்ளலாம் என்பது சிறப்பான விஷயம்.உலகம் முழுக்க 2.5 பில்லியன் மக்கள் மின் இணைப்புப் பெறாமல் இருக்கிறார்கள்ஆப்பிரிக்காவில் ஏதோ ஒரு காட்டில் இருக்கும் கிராம மக்களுக்கு மின்சாரம் கொடுத்தால், அதனால் அரசாங்கத்துக்கு எந்த லாபமும் இல்லை என்பதால் அவர்கள் மின் இணைப்புக் கொடுப்பதில்லை. கிராமத்தை விட்டு வந்தால் மட்டுமே பொருளாதார ரீதியில் முன்னேற முடியும் என்கிற நிலை அந்த கிராம மக்களுக்கு. ஆனால் இந்த 'ப்ளூம்பாக்ஸ்' மட்டும் இருந்தால் உலகத்தின் எந்த மூலையிலும் மின்சாரம் தயார் செய்யலாம்'' என்கிறார் ஸ்ரீதர்.
ஒரு 'ப்ளூம் பாக்ஸ்' உங்களிடம் இருந்தால் இரண்டு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். இதே பாக்ஸ் இந்தியாவில் இருந்தால் நான்கு முதல் ஆறு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். அமெரிக்க வீடுகளில் அதிக மின்சாரம் பயன்படுத்தப்படுவதேஅங்கு வீடுகளின் எண்ணிக்கை குறையக் காரணம்.இன்றைய தேதியில் அமெரிக்காவின் 20 பெரிய நிறுவனங்கள் ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன. கூகுள் நிறுவனம்தான் முதன் முதலாக இந்தத் தொழில்நுட்பத்தை வாங்குவதற்கான கான்ட்ராக்ட்டில் கையெழுத்திட்டது. 'ப்ளூ பாக்ஸ்' மூலம் கூகுள் உற்பத்தி செய்யும் 400 கிலோ வாட் மின்சாரமும் அதன்
ஒரு பிரிவுக்கே சரியாகப் போகிறது. வால் மார்ட் நிறுவனமும் 400 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸை வாங்கி இருக்கிறது. இப்போது Fedex, E bay, கோக்கா கோலா, அடோப் சிஸ்டம், சான் பிரான்சிஸ்கோ ஏர்போர்ட் போன்றபல நிறுவனங்களும் இந்த புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின்சாரம் தயார்செய்கின்றன.100 கிலோ வாட் மின்சாரம் தயார் செய்யும் ஒரு பாக்ஸின் விலை 7 முதல் 8 லட்சம் டாலர்! அட, அவ்வளவு பணம் கொடுத்து வாங்க வேண்டுமா? என நீங்கள் நினைக்கலாம். ஆனால் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் E bay நிறுவனம் கடந்த ஆண்டு ஸ்ரீதரிடமிருந்து ஐந்து பாக்ஸ்களை வாங்கியது. தனக்குத் தேவையான 500 கிலோ வாட் மின்சாரத்தை இந்த பாக்ஸின் மூலமே தயார் செய்துவிடுகிறது. இந்த பாக்ஸ்களை வாங்கிய ஒன்பதே மாதத்துக்குள் 1 லட்சம் டாலர் வரை மின் கட்டணத்தைசேமித்திருக்கிறதாம் E bay.
இன்னும் ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் அமெரிக்காவின் பல வீடுகளில் இந்த 'ப்ளூம் பாக்ஸ்' இருக்கும்.சாதாரண மனிதர்களும் இந்த பாக்ஸை வாங்கி பயன்படுத்துகிற அளவுக்கு அதன் விலை 3,000 டாலருக்குள் இருக்கும்'' என்கிறார் ஸ்ரீதர். அந்த அளவுக்கு விலை குறையுமா என்று கேட்டால், ஒரு காலத்தில் லட்சத்தில் விற்ற கம்ப்யூட்டர் இன்று ஆயிரங்களுக்குள் கிடைக்கிறதே என்கிறார்கள் ஸ்ரீதரின் ஆதரவாளர்கள். ஸ்ரீதரின் இந்த தொழில்நுட்பம் எதிர்காலத்தில் நிஜமாகும் பட்சத்தில் உலகம் முழுக்க மக்கள் அந்தத் தமிழரின் பெயரை உச்சரிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.
நன்றி : திரு .ரவிக்குமார் -கோவை
1/02/2011
நண்பர்களின் உதவி ....
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்!
நான் உங்களிடம் கேட்கப் போவது பண உதவியோ, பொருளுதவியோ அல்ல. முற்றிலும் சமூகத்திற்கான உதவி. நான் சமூகத்தில் நடந்த அநீதி குறித்து எழுத உள்ளேன். அதை நான் ஆரம்பத்ததின் நோக்கம் விளம்பரமோ ,
பிரபலமடையவோ அல்ல. சமூகத்தில் நடக்கும் அநீதிகள் அனைத்து மக்களுக்கும் புரிய வைக்கப் பட வேண்டும் என்பதற்காக மட்டுமே.
சென்ற வருடம் எவ்வளவு ஊழல்,எத்தனை பேர் பலி,கடத்தல் என்றால் யோசித்துப் பாருங்கள். இதை போன்ற சமூக பிரச்சினைகளை பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இதைத் தவறவிடுவதில் எனக்குத் துளியும் விருப்பமில்லை.
அதற்கான முயற்சியாய் இந்த ஒருவனின் குரல் என்ற ஒரு புதிய வலைப்பூவை எனது குரலாய் ஆரம்பித்து வைக்கிறேன். இங்கு தினமும் சமூகம் அதன் தொடர்புடைய பிரச்சினைகள் குறித்து தினம் ஒரு பதிவாய் அவர்கள் விருப்பப்படி வெளியிடலாம்.
இந்த வலைப்பூவின் நோக்கம் நம் சமுகம் போன்ற பிரச்சினைகள் குறித்து
நம்மவர்கள் மற்றும் வாசகர்கள் கலந்துரையாடி ஒரு புரிதலை ஏற்படுத்தி பொது மக்களிடைய கொண்டு செல்ல வேண்டும் என்பதே. இங்கு சமூக பிரச்சினைக் குறித்து நண்பர்கள் யார் வேண்டுமானாலும் பதிவுகளை எழுதலாம். நண்பர்கள் செய்ய வேண்டியதெல்லாம்
* உங்களுக்கு இந்த பிரச்சினை குறித்து குரல் கொடுக்கும் எண்ணம் இருந்தால் oruvaninkural@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு உங்களின் கீழ்காணும் விபரங்களை அனுப்பி வையுங்கள்.
பெயர், தொடர்பு எண்(விருப்பமிருந்தால்), மின்னஞ்சல், வலைப்பூ முகவரி -(இவை எதுவும் வெளியிடப்படா)
* நீங்கள் உங்கள் சமுகத்தைப் பற்றி எழுதுங்கள். அதை oruvaninkural@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். அது உங்கள் பெயருடன் (அ) புனைப்பெயரில் இந்த தளத்தில் வெளியிடப் படும். உங்களுக்கு விருப்பமிருப்பின் அந்தப் பதிவை உங்கள் வலைப்பூவிலும் வெளியிட்டு இணைப்பு கொடுத்தால் உங்கள் நலன் விரும்பிகளிடம் கொண்டு சேர்க்க ஏதுவாக இருக்கும்.
* நீங்கள் முன்னரே சமூகம் குறித்து எழுதியிருந்தாலும் அதை அனுப்பி வைக்கலாம். அதை இங்கு வெளியிட்டு அனைவர்க்கும் பயன்பட செய்யுங்கள்.
இந்த சமூகத்தில் நாம் ஒருங்கிணைந்து செயல் படுவோம். நாம் சினிமா, முரளிதரனின் 800 விக்கெட்டுகள் பற்றியெல்லாம் பதிவெழுதுகிறோம், அவைகளுக்கு வாக்களித்து ஆதரவு தெரிவிக்கிறோம். இது நமக்கான இடம். இங்கு நம் ஆதரவை ஒருமித்து வெளிப்படுத்துவோம்.
நாம் அடிமையாகிக் கொண்டிருப்பதை அனைவருக்கும் புரிய வைப்போம்.
நம்மால் ஒரு சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியும்
என்பதையும் எடுத்துரைப்போம் ..
சமூகம் குறித்த வலைப்பூ
1/01/2011
என் பார்வையில் 2010
வருட கடைசியில் அந்த வருடத்தை திரும்பி பார்ப்பது சுவையான அனுபவம் தான்... சரி 2010 சும்மா விரிவா பார்க்காவிட்டாலும் என்ன என்பதை பார்ப்போம்...
உலகம்...
- விக்கிலிக்ஸ் இணையத்தால் அமெரிக்க இமேஜ் கிழித்து நார் நாராக தொங்கவிடப்பட்டது இந்த ஆண்டுதான்..
- ஆங் சான் சூகி 15 ஆண்டுகால சிறைவாசத்துக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டு சுதந்திர காற்றை மியான்மரில் சுவாசித்தார்...
- இலங்கை ராணுவ தளபதி பொன்சேகா கைது செய்யபட்டு சிறையில் அடைக்கபட்டார்...
- மிகப்பெரிய கேவலமான தீர்ப்புக்கு சாட்சி.. போபால் விஷவாயு தீர்ப்பு... அதே போல இன்னும் பெரும்பாண்மையான இந்திய மக்களால் கூர்ந்து கவனிக்கபட்ட தீர்ப்பு அயோத்தி தீர்ப்பு...
- அதிபர் ஒபாமா இந்தியா வந்தார்..
- அரசியலை பொறுத்தவரை ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை முன்னிட்டு நீண்ட நாட்கள் நாடளுமன்றம் முடங்கியது...
- ஸ்பெக்ட்ரம் முறைகேட்டினால் ஒரு லட்டசத்து 70 ஆயிரம் கோடிகள் அரசுக்கு நஷ் டம் என்று தணிக்கைதுறை சொல்லியது..பிரச்சனை இந்தியா முழுவதும் பற்றிக்கொண்டது..
- நீரா ராடியா டெலிபோன் பேச்சு மற்றும் சேன்ல் தொகுப்பாளர்கள் டேப் வெளிவந்து மானத்தை வாங்கியது...
- காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஊழல்..
- கிரிக்கெட்டில் லலித் மோடி ஊழல் என்று ஊழல் ஆண்டு 2010 என்றால் அது மிகையாகாது...
- மங்களுர் விமான விபத்தும், இரண்டு ராக்கெட் கடலில் விழுந்ததும் பரபரப்பாய் பேசப்பட்டன...
- செம்மொழி மாநாடு...பிரம்மாண்டமாக நடத்தி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது . செம்மொழியான தமிழ் மொழியாம் பாடலுக்கு ஏஆர் ரகுமான் இசை கூடுதல் கவர்ச்சிக்கு வித்திட்டது...
- தஞ்சை பெரிய கோவில் ஆயிரம் ஆண்டு நிறைவை கொண்டாடியது இந்த ஆண்டுதான்... அது எவ்வளவு பெரிய பெருமை.
- புதிய தலைமை செயலகம் இந்த வருடம் துவங்கபட்டு மவுண்ட்ரோட்டில் கம்பீரமாக நிற்க்கின்றது.. இன்னும் திரைபடங்களில் இந்த புதிய சட்டமன்றம் காட்டப்படவில்லை என்று எண்ணுகின்றேன்.
- கல்வி கட்டணத்துக்கு கடிவாளம் போடபட்ட ஆண்டு இந்தவருடம்தான்... இன்னும் அந்த சட்டம் சற்று இழுபறியாக இருப்பது வருத்தமே..
- தென்மாவட்டங்களில் 23 நாட்களுக்கு மேல் தொடர்ந்த மழை மக்களை உண்டு இல்லை என்று செய்து விட்டது..
- தமிழகத்தில் இந்த ஆண்டினை தமிழகத்தில் கடத்தல்கள் நிறைய நடந்தது என்று சொல்லாம்..நிறைய கடத்தல்கள் வெளிய தெரியாமல் முடி மறைக்கப்பட்டன.. நிறைய கடத்தல் கொலைகள் இந்த ஆண்டு.. கோவை பிள்ளைகள் கொலை தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களையும் சோகத்துக்கு உள்ளாக்கியது..
- தமிழக சாலைவிபத்துகளில் இற்ந்தவர்களும்.. சென்னை மெரினாவில் குளிக்க வந்து கடலில் மூழ்கி இறந்தவர்கள் அதிகம்...
- நித்யா,ரஞ்சிதா வீடியோ கிளிப்பிங் வெளியாகி பரபரப்பை கிளப்பியது...
- சென்னையில் பல பதிய மேம்பாலங்கள் பயண்பாட்டுக்கு வந்தன..
- பல புதிய மால்கள் சென்னையில் உதயமாயின... உதாரணத்துக்கு எக்ஸ்பிரஸ்மால் ராயப்பேட்டையிலும்,ஸ்கைவால்க் அண்ணாநகர் அருகிலும் திறந்து வைக்கப்பட்டது....
- அண்ணா நுற்றாண்டு நினைவு பெரிய நூலகம் திறந்துவைக்கபட்டது....
- நடிகர் முரளி இறந்ததும் சுவர்ணலதா இறந்ததும் நிறையபேருக்கு அதிர்ச்சி செய்தி...
- போனவருடத்தில் வெளியான படங்களில் எனக்கு ரொம்பவும் பிடித்த படம் நிறையவே உண்டு (களவானி ,மைனா ,எந்திரன் )
இந்த வருடம் நிறைய பிரச்சனைகளைசந்தித்த ஆண்டு...நிறைய காழ்ப்புனர்ச்சி சண்டைகள், சச்சரவுகள்... நிறைய பேர் யோக்கிய வேஷம் போட்டு வெளுத்து வாங்கினார்கள். நானும் சீண்டப்பட்டேன். முதலில் கோபபட்டு, பிறகு நண்பர்கள் சொன்னார்கள்... 4 பேர் சீண்டுவதுக்கு ஏன் பதில் சொல்லவேண்டும்? என்று என்னிடத்தில் கோபித்துக்கொண்டவர்கள் நிறைய... நாங்கள் இருக்கின்றோம் என்று என்னோடு இருந்தார்கள்.. என்னோடு நட்பு பாரட்டிய நண்பர்களுக்கு என் நன்றிகள்.ஆனால் நான் நண்பர்களையும் நம்பவில்லை.
வலைப்பூ
பதிவுலகில் நான் காலடி எடுத்து வைத்த ஆண்டு ,இந்த வருடம் 297 பதிவுகள் எழுதி இருக்கின்றேன்... இத்தனைக்கும் மற்றவர்களை காட்டிலும் எனக்கு அனுபவம்
குறைவாக இருந்தது.. வரும் வருடம் அப்படி இல்லை.. என்னையும் செழிமை படுத்தி
நல்ல பதிவுகளுடன் உங்களை அடுத்த வருடம் சந்திப்போம் (அதாங்க நாளைக்கு )
என்னோடு தொடர்ந்து பயணப்பட்டு வரும் நண்பர்களுக்கு என் நன்றிகள்..
அட்வான்ஸ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.. குட்பை 2010...
என்றும் அன்புடன்
கோவைராமநாதன்
குறிப்பு..
இந்த தளம் பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்.
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்....
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)




