தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

8/22/2011

நாம் சும்மா இருப்போமா..???


சில அரசியல் கட்சிகள் இப்பொழுது போராட்டத்தில் இறங்கியுள்ளது.. என்னவென்று பார்த்தால், தூக்குத் தண்டனையை ரத்து செய்யவேண்டுமென்ற கோரிக்கையை, வைக்கிறார்கள். நல்ல விஷயம் தான் ஏன் எதற்காக, யாருக்காக இந்த கோரிக்கையை வைக்கிறார்கள் என்றும் பார்க்க வேண்டும்.

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொல்லப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் நிராகரித்தார், முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி 1991-ம் ஆண்டு மே மாதம் 21-ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் மனிதவெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்த படுகொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் மற்றும் நளினி ஆகியோருக்கு 1999-ல் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த மரண தண்டனையை உச்சநீதிமன்றமும் 2000-ம் ஆண்டில் உறுதிசெய்தது. எனினும் நளினியின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

இவைகள் அனைவரும் அறிந்த ஒன்றே, முருகன், சாந்தன், பேரறிவாளன் இவர்களுக்கெல்லாம் இப்பொழுது தூக்கு தண்டனை உறுதியாகிவிட்டது, இவர்களை எல்லாம் தூக்கில் போட கூடாதென்று , போராட்டங்கள் கிளம்பியுள்ளன ஏன் இவர்களையெல்லாம் தூக்கில் போட கூடாது..?? என்பது என் கேள்வியாகும், ஒரு நாட்டின் முக்கிய மனிதரை, பிரதம மந்திரி வேட்பாளாராக இருக்கும் போது கொலை செய்திருக்கிறார்கள், கொலை செய்ய உதவி செய்து இருக்கிறார்கள், இவர்களுக்கு கருணை காட்டினால் நாளை யார் வேண்டுமானாலும் வந்து நாட்டின் முக்கிய தலைவர்களை கொன்று விட்டு செல்வார்கள் அல்லவா..??

குறிப்பாக பேரறிவாளனை தூக்கில் இடக் கூடாது என்று போராட்டம்,செய்திருக்கிறார்கள், யார் இந்த பேரறிவாளன்..?? என்ன குற்றம் செய்தார் என்றால், பேட்டரி , மோட்டார் சைக்கிள், ஆகியவற்றைக் கொடுத்து படு கொலைக்கு உதவி செய்தது தான், இதெல்லாம் ஒரு குற்றமா என கேட்கலாம் இதுவும் ஒரு குற்றம் தான் அந்த படுகொலைக்கு குண்டு தயாரிக்க எந்த பொருள் வாங்கி கொடுத்தாலும் அவர்களும் அந்த கொலைக்கு உடந்தை தான்.

என் நண்பன் பிரதமரையோ, அல்லது நாட்டின் மிகப்பெரிய தலைவரையோ, கொலை செய்யப் போவது எனக்குத் தெரிகிறது என்றால், அதை நான் தடுக்க வேண்டும், அதை செய்யாமல் நான் மறைத்தால், நானும் அந்த கொலைக்கு உடந்தை தான். இது தான் நடந்து இருக்கிறது இந்த பேரறிவாளன் விஷயத்தில். பேரறிவாளனின் தாயாரே சொல்கிறார் நாங்கள் புலிகளின் ஆதரவாளர்கள் தான் என்று, அப்படி இருக்கும் பொழுது இவர்கள் ஏன் உதவி செய்து இருக்க கூடாது..??

விடுதலை புலிகள் செய்த மிகபெரிய தவறே ராஜிவ்காந்தியை கொலை செய்தது தான். இதுவே அவர்களின் தோல்விக்கு காரணம். நம்முடைய தந்தையை ஒருவன் கொலை செய்து விட்டாலே, நமக்கு கோவம் வந்து அவனை என்ன செய்கிறேன் என்று சபதம் எடுப்போம், ஒரு நாட்டையே ஆளும் அவர்களுக்கு எவ்வளவு கோபம் வரும் என நினைத்து பார்க்க வேண்டும்.

இப்பொழுது வந்து தூக்கில் போடக் கூடாதென்றால் எப்படி???

ஒரு கொலைக்கு இன்னொரு கொலை எப்படி பதிலாகும் என்னும் வாதங்களும், தூக்கு தண்டனை கொடுத்தால் எப்படி அவர் திருந்த வாய்ப்பு கிடைக்கும் மனிதாபிமானம்வேண்டும் என்பது எல்லாம் சரிதான்....! இதை ஒட்டு மொத்த இந்தியாவில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள அத்தனை கைதிகளுக்கும் கொண்டு வர நாம் போராடினால் அதில் ஒரு நியாயம் இருக்கிறது.

இந்திய இராணுவம் அங்கே போய் குற்றம் செய்தது, கற்பழித்தது, கொலைசெய்தது என்று வாதிடுபவர்கள் எல்லாம் விடுதலைப் புலிகள் இயக்கம் இப்படி கொலை செய்யாமல், குண்டு வைக்காமல் இருந்ததா என்று யோசித்து விட்டுப் பேசவும். நோக்கம் சரியானது என்றாலும் அவர்கள் சென்ற பாதையும் செய்த கொலைகளும் சரியானதுதான? எத்தனை பேரின் உயிர் போய் இருக்கிறது...? அவை எல்லாம் மனித உயிர்கள் இல்லையா?

இதே ஒரு பாகிஸ்தான்காரன் நம் நாட்டின் மிகப் பெரிய தலைவரையோ அல்லது பிரதமர் வேட்பாளரையோ கொன்று இருந்தால் நாம் சும்மா இருப்போமா..??? உடனே தூக்கில் போடவேண்டுமென்று போராடி இருப்போம் தமிழர் என்று சொல்லி ஒரு தவறை நியாப்படுத்த முடியுமா..? இப்படி மன்னித்து கொண்டே சென்றால் அடுத்து யார் வேண்டுமென்றாலும் வந்து பிரதமரையே கொலை செய்து விட்டு 20 ஆண்டு சிறையில் இருந்து விட்டு சென்று விடுவான்.. போராட்டம் நடத்துபவர்களே உங்கள் தமிழ் ஆர்வத்தை வேறு வழியில் காட்டுங்கள்...!

தூக்கு தண்டனை வேண்டுமா வேண்டாமா? என்ற விவாதம் வேறு....அதை இந்தச் சந்தர்ப்பத்தில் ஒரு ஆயுதமாக உபயோகம் செய்து ராஜிவ் கொலையினை நியாயப்படுத்த நினைக்கும் அறிவுக்கூர்மைகள் எல்லாம் கண்டிப்பாய் மழுங்கடிக்கப்படவேண்டியவையே.


இந்த இரண்டினையும் ஒன்றுபடுத்தி போராட்டங்களுக்கு தமிழுணர்வு சாயம் கொடுப்பது இந்தியா என்ற தேசத்தின் ஒற்றுமைக்கு பெரும் குந்தகமாக எதிர்காலத்தில் அமையக்கூடும் என்ற அச்சத்தையும் இந்தக் கட்டுரை பொதுவில் வைக்கிறது.


தூக்கில் போடுவதும் போடாததும் அரசு எடுக்க வேண்டிய முடிவு....! இங்கே மனிதாபிமானம் பார்க்க வேண்டும் என்பதும் சரி ஆனால் இந்திய அரசால் யார் யாருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறதோ அப்போது எல்லாம் இது மாதிரி போராட்டங்கள் இருந்தால் நன்றாகத்தான் இருக்கும். தமிழன் என்ற ஒரு உணர்வு இயந்திரத்தை இயக்கி விட்டு அதன் மூலம் தீர்வுகளைச் சொல்வது ஒரு குறுகிய பார்வை என்பதை தண்டனை வேண்டாம் என்று கூறுபவர்கள் அறிவார்களா? என்ற கேள்வியோடு கட்டுரையை நிறைவு செய்கிறோம்

குறிப்பு : படித்ததில் பிடித்தது

8/18/2011

லாபம் எட்டும் தந்திரம்



முதலாளித்துவ நிறுவனங்களின் ஒரே நோக்கம் லாபம் சம்பாதிப்பதுதான்.அந்த நோக்கத்தில் வெற்றி பெறுவதற்காக எத்தகைய வழிமுறைகளையும் அந்த நிறுவனங்கள் கையாளும்.


பன்னாட்டு நிறுவனங்கள் ஊதியத்தை அள்ளிக் கொடுப்பதாக பீற்றுகிறார்கள். அவர்கள் சம்பாதிக்கும் லாபம் எவ்வளவாக இருக்கும் என்பது குறித்து யாருக்கும் கவலையில்லை. தங்கள் பொருள்களை விற்க விளம்பரத்திற்காக அவர்கள் செலவிடும் தொகை பிரமிப்பூட்டுகிறது.






இந்த விளம்பரச் செலவை அவர்கள் நுகர்வோர் தலையில்தான் கட்டுகிறார்கள் என்பது இன்னமும் பலருக்கு புரியவில்லை. தங்கள் பொருள்களை விற்க அவர்கள் எந்தவிதமான தந்திரங்களையும் தயக்கமின்றி நடைமுறைப்படுத்துவார்கள்.






சமீபகாலமாக சேகுவேராவை அவர்கள் தங்கள் விளம்பரங்களுக்குப் பயன்படுத்துகிறார்கள்.சேகுவேரா மாபெரும் புரட்சி வீரர். கியூபா புரட்சியில் அதிபர் காஸ்ட்ரோவுடன் இணைந்து செயல்பட்டவர். தனக்கு அளித்த அமைச்சர் பதவியை உதறிவிட்டு தென் அமெரிக்க நாடுகளில் புரட்சியை விதைக்க புறப்பட்டவர்.






பொலிவியாவின் காடுகளில் புரட்சிக் கூட்டத்தைத் தயார்படுத்தியவர். அமெரிக்காவின் கண்களில் ஊசியாக தைத்தவர். அவரை கொலை செய்ய அமெரிக்கா தனது உளவு நிறுவனமான சிஐஏவுக்கு உத்தரவிட்டது.பொலிவியாவில் அவரைக் கண்டுபிடித்த சிஐஏ மாறுகால் மாறு கை வாங்கி கொடூரமான முறையில் கொன்றது. அவரது உடலைக்கூட கியூபாவிடம் ஒப்படைக்க மறுத்துவிட்டது. அவர் புதைக்கப்பட்ட இடம்கூட தெரியவில்லை.






கடந்த ஆண்டு, சென்னையில் போர்டு இந்தியா கார் நிறுவனம் தனது புதிய கார்களை அறிமுகப்படுத்த செய்தியாளர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தது.
அப்போது அது நிருபர்களுக்கு கொடுத்த விபரக் குறிப்புகள் அடங்கிய அழகிய பைலில் விலையுயர்ந்த காகிதத்தில் சே குவேராவின் படமும் அச்சிடப்பட்டிருந்தது.

8/16/2011

எதை எழுதினாலும் படிக்கவா போறிங்க.




நான் பல நாள் வேலை பளு காரணமாக வலை பதிவுக்கு வரமால் 
இருந்துவிட்டேன். அப்போதிலிருந்து என் வலைபதிவுக்கு பதிவர்கள் வருவதே இல்லை. முற்றிலுமாக நின்றுபோயிற்று!




நானும் மீண்டும் எதையெதையோ எழுதிப்பார்க்கிறேன். பதிவர்கள் இந்தப் பக்கம் வருவதாக இல்லை. இப்படியே போனால் நான் இந்த வலைப் பதிவையே இழுத்து மூடிவிட்டு போகவேண்டியதுதான்.




ஏற்கனவே எனக்கு  இருந்த ஆங்கில அறிவு போச்சு  கணினி அறிவும் சொல்லவே வேண்டாம். எதுக்கு சுயவிமர்சனமெல்லாம். எனக்கு புலம்பரதே வேலையாப்போச்சு!


எதை எழுதினால் வந்து படிப்பீங்க. எதை எழுதினால் வந்து படிக்கமாட்டீங்க என்று எனக்கு சொல்லவும். அப்பத்தான் புரிந்து கொண்டு என்னால் மீண்டும் பதிவுபோட முடியும். அனைவருக்கும் வணக்கம்.

8/15/2011

சுதந்திர தினச் சிந்தனை.



விடியலை நோக்கி
நள்ளிரவில் சுதந்திரம் பெற்றொம்;
விடியலை நோக்கி செல்கின்றோம்;
வேகம் கொஞ்சம் குறைவுதான்;
தடைகளும் கொஞ்சம் அதிகம்தான்;
ஆனாலும் தளர்ச்சி கண்டதில்லை;
தயங்கி நிற்கவும் போவதில்லை;
பயணம் என்றும் தொடரும்;
விடியலை வென்றும் காண்போம்.


சுதந்திர தினச் சிந்தனை.


நாடு சுதந்திரம் பெற்று 64 ஆண்டுகள் நிறைவு பெற்று விட்டன; இன்னமும் கூட சுத்தமான குடிநீர் உட்பட அத்யாவசிய மற்றும் அடிப்படைத் தேவைகள் அதிக பட்ச மக்களுக்கு கிட்டாமல்தானிருக்கிறது.எங்கு நோக்கினும் ஊழல், வறுமை வேலையில்லாத் திண்டாட்டம் நிறைந்திருக்கிறது.


ஏனிந்த நிலை...?


நமக்கிருக்கும் அளவுக்கு மிஞ்சிய சகிப்புத் தன்மையே இதற்கெல்லாம் காரணம். ஆயிரக்கணக்கான கோடி ஊழல் என்று செய்தி கேட்கிறோம் ;பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் கூட கோடி கோடியாய கொள்ளையடிப்பதைப் பார்க்கிறோம்;கோடி கோடியாய் நமது வரிப்பணம் ஊழல் பேர்வழிகளின் பாக்கெட்டுகளுக்கு செல்கிறது;
ஆனால் நாமோ யார் வந்தாலும் இப்படித்தான் என்று நம்மை நாமே சமாதானம் செய்து கொண்டு ஊழலை சகித்துக் கொள்கிறோம்; ஊழல் இல்லாத இடம்தான் ஏது என்று ஊழலுக்கு வக்காலத்தும் வாங்குகிறோம்.
அரசியல்வாதி தன் குடும்பத்தினர் அனைவரையுமே பதவியில் அமர வைத்து நாட்டைச் சுரண்டுவதைப் பார்க்கிறோம்; விலைவாசிகள் விஷம்போல் ஏறுகின்றன;வறுமை தலை விரித்தாடுகிறது;அனைத்திலும் போலிகள்..கலப்படம்.
ஆனால், இவற்றையெல்லாம் மாற்ற முடியாது என்று நாம் சகித்துக் கொள்ள பழகிக் கொள்கிறோம்.
இப்படிப்பட்ட பொறுமையும் சகிப்புத் தன்மையுமே இந்த நிலைக்கு பிரதான காரணமாகும்.
அநீதிகளைக் கண்டு, முறைகேடுகளைக் கண்டு கோபம் கொள்ள வேண்டும்;இது நமது நாடு; இதன் ஒவ்வொரு வளர்ச்சியும் தாழ்ச்சியும் நம் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் பிரதிபலிக்கும்..

சுதந்திர தின உறுதி.


நம் நாடு உலகில் உயர்ந்தது என உறுதியாய் நம்புவோம்;
நாட்டைச் சுரண்டும் தீய சக்திகளை அடையாளம் கண்டு அப்புறப்படுத்துவோம்;
நாட்டின் வளர்ச்சிக்கு உழைப்போரை போற்றுவோம்.


8/03/2011

ஆடி மாதம்

ஆடி மாதம் தான் தக்ஷிணாயணத்தின் தொடக்கம். இது ஒரு புண்யகாலமாகக் கருதப்படுகிறது. பண்டிகைகள் பல நம்மைப் பரவசப்படுத்தும் மாதம் இந்த ஆடிமாதம்.

ஆடி மாதம் என்றாலே மல்லிகை மணமும் கூடவே வரும். அம்மன் கோயில்களில் பூக்களால் அலங்கார பூஷிணியாக அமர்ந்திருப்பாள்.

இந்த மாதத்தில் தான் சதுர்மாஸ்ய விரதம் தொடங்குகிறது. அதாவது சன்யாசி போன்ற பெரியவர்கள் ஒரு இடத்தில் அமர்ந்து பூஜை புனஸ்காரங்களைத் தொடருவர். இந்தக் காலத்தில்தான் பல ஊர்வன வகையைச் சேர்ந்த ஜீவராசிகள் மழை வெள்ளத்தைத் தாங்க முடியாமல் தங்கள் இருப்பிடத்திலிருந்து வெளிவரும். அப்போது நடந்தால் அவைகள் மிதிபட்டு, துன்பப்பட்டு இறக்க நேரிடும் என்பதால் சன்யாசிகள், சாதுக்கள் ஒரு இடத்தில் போய் அமர்ந்து நாலு மாதங்கள் அங்கேயே தங்கி இருப்பர். வியாசபூஜையும் நடக்கும். இது ஆடி பெளர்ணமியில் குரு பூர்ணிமா என்ற பெயரில் நடக்கும்.

மஹாராஷ்ட்ராவில் தத்தாத்ரேயருக்கும் சிறப்பு பூஜை உண்டு. தவிர ஸ்ரீமஹாவிஷ்ணு சயனக்கோலத்தில் இருந்துகொண்டு நம்மைக் காக்கிறார். இந்த மாதம் வரும் ஏகாதசி மிக விசேஷமானது, சயன ஏகாதசி என்றும் ஷாட ஏகாதசி என்றும் கூறுவார்கள்.

ஆடி மாதம் வரும் ஏகாதசியை மஹராஷ்ட்ரத்தில் ஆஷாட ஏகாதசி என்று மிகச் சிறப்பாகக் கொண்டாடுவார்கள். காவடி போல் தோளில் இருபக்கமும் பால் அல்லது தயிர் எடுத்துக்கொண்டு பண்டரிபுரம் சென்று பகவான் விட்டலைத் தரிசனம் செய்து விட்டு வருவார்கள். பண்டரிபுரம் வரை பொடி நடைதான். நடு நடுவே செல்வந்தர்கள் அவர்களுக்கு உணவுப் பந்தல் ஏற்பாடு செய்திருப்பார்கள்.

சிறுவர்களும் இதில் கூட்டம் கூட்டமாகப் போவார்கள். அவர்கள் வாயில் 'பாண்டுரங்க விட்டலா பண்டரிநாத விட்டலா' என்றும் 'விட்டல் விட்டல் ஜய ஜய விட்டல்' என்றும் விடாமல் நாமஜபம் வந்து கொண்டிருக்கும்.

விஷ்ணு கோயிலில் இந்த நேரம் தக்ஷிணாயண வாயிலைத் திறப்பார்கள். இது தெற்குப் பக்கம் இருக்கும். இது போல் உத்தராயண வாசலும் உண்டு, அதாவது அது வடக்குப் பக்க வாசல்.

இந்த மாதத்திலேதான் ஜீவ நதிகளுக்கு பூஜை செய்யப்படுகிறது. இதை ஜலப்பிரவாஹப்பூஜை என்று சொல்கிறார்கள். காவேரி அம்மனுக்கு மசக்கை என்று ஆடி பதினெட்டாம் பெருக்கைக் கொண்டாடுகிறார்கள்.

காலையில் காவிரி நதி தீரம் சென்று குளித்து, அம்மன் பூஜை செய்து பின் எல்லா சித்திரான்னங்களையும் படைப்பார்கள். எலுமிச்சைசாதம், புளியஞ்சாதம், தயிர் சாதம், வற்றல் வடகங்கள் என்று கொண்டு போய் அங்கு ஆற்று மணலின் அருகே அமர்ந்து குடும்பத்தினர் அனைவரும் உண்டு மகிழ்வார்கள்.

பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வதற்கு ஆடி அமாவாசை மிகச் சிறந்த நாள்.

ஆடி பதினெட்டாம் பெருக்கு அன்று உழவர்கள் நிலத்தில் விதைகள் விதைப்பார்கள்.

ஆடி மாதம் மாரியம்மனுக்கு மிகவும்விசேஷம் பொருந்திய நாள். ஆடி செவ்வாய் அன்றும் ஆடி வெள்ளி அன்றும் சிலர் ஞாயிறன்றும் அம்மனுக்குக் கூழ் ஊற்றுவார்கள். கிராமங்களில் எல்லை தேவதைகளுக்கும் இந்த உபசாரங்கள் நடக்கும். மஞ்சள், வேப்பிலை, குங்குமம் முக்கியப் பங்கு வகிக்கும்.

வைணவர்களுக்கு ஆடிப்பூரம் மிகவும் முக்கியமான நாள். அன்றுதான் ஆண்டாள் பிறந்த தினம். வரலட்சுமிவிரதமும் சில சமயம் ஆடியில் வந்து விடும்.

அன்னை காமாட்சியும் சிவனை நோக்கித் தவம் இருந்து பின் ஈசனை அடைந்த மாதம் இந்த ஆடி மாதம் தான். ஆடி மாதம் சிலர் தேவியை வாராஹியாக வழிபடுவர். இவள் நமக்கு தைரியத்தை வழங்கி சத்ருவை அடக்குகிறாள்.

பொன்னி அம்மன், பச்சை அம்மன், திரெளபதி அம்மன், பொம்மி, காத்தாயி, மதுரைவீரன், முனீஸ்வரன் என்ற தெய்வங்களையும் இந்த மாதம் கரகம், காவடி, தெருக்கூத்து போன்றவைகளுடன் வழிபடுகிறார்கள்.

திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவிலில் ஆடி தபசு விழா நடக்கிறது. அதாவது கோமதி அம்மன் தவம் இருக்க, புன்னைவனத்தில் சிவன் சங்கரநாராயணராக அவருக்கு் பெளர்ணமி அன்று காட்சி அளித்தார்.

தவிர சுதந்திரதினமும் இந்த மாதத்தில் தான் அநேகமாக வருகிறது. அத்துடன் அன்னையைப் பராசக்தியாகக் கண்ட, கண்ணனையும் தரிசனம் செய்த ஸ்ரீஅரவிந்தர் அவர்களின் பிறந்த தினமும், கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை அவர்களின் பிறந்த தினமும் ஆகஸ்ட் 15ல் வருகிறது. , ஷீரடியில் ஷீரடி பாபா உத்சவமும் பிரமாதமாக நடக்கும்.

இத்தனை உயர்வுகளைக் கொண்ட ஆடி மாதத்தைக் கண்டாலே உள்ளம் குளிர்ந்து போகிறது.

7/16/2011

எனக்கு மட்டும் ஏன் இப்படி?



எனக்கு மட்டும் ஏன் இப்படி? உங்களுக்கு என்றேனும் இப்படித் தோன்றியதுண்டா? இன்றைய பேச்சில் இந்த சுய பச்சாதாபத்தின் விளைவைப் பற்றி பேசப்போகிறோம்.






இந்த சுய பச்சாதாபம் ஒருவனை நிச்சயமாய் நொறுக்கிப் போடும். பொதுவாகவே இந்த சுய பச்சாதாபம் என்பது அண்டிக் கெடுக்கும் நட்பைப் போல.


அதுவும் கருணை பொழியும் பாசத்துடன் மிக அக்கறை கொண்ட நட்பைப் போல் நமக்குள் இருந்து நெஞ்சை வருடிவிட்டு நம்மை அழித்துவிடும்


செயலை இது சத்தமின்றி செய்துவிடும்.






நம்மை இது சிந்திக்கவே விடாது. நமது சூழலையும் ஆராய விடாது. ஆக நமது சூழலில் இருக்கும் சாதகமான காரணிகள் எவையும் கண்ணில் படாது மாறாக


பாதகமான காரணிகளாக நாம் கருதுபவைகள் மட்டுமே நம்மை அச்சுறுத்திக்கொண்டு பூதாகர வடிவெடுப்பதோடு மட்டுமல்லாது நாம் கொண்டுள்ள தன்னம்பிக்கையை


சுத்தமாய் உறிஞ்சி இழுத்து நம்மை செயலிழக்கவும் செய்துவிடும்.மேலும் நமக்குள் தாழ்வு மனப்பான்மையைத் தூண்டிவிடுவதோடு மட்டுமல்லாது உலகமே நமக்கு


எதிராக இருக்கிறது என்னும் நினைப்பையும் நம்முள் வளர்த்துவிடும்.





இந்த சுய பச்சதாபம் - self pity - என்பது நம்மை ஏறக்குறைய ஒரு பக்கவாதம் தாக்கியவரைப்போல நம்மை கிடத்தி நாம் எப்போதும் மற்றவரது


உதவியையே நாடி இருக்கும் படி செய்வதோடல்லாமல் மன ரீதியாக நாம் இப்படி இருப்பதும் மற்றவர்கள் நமக்கு உதவி புரிவதும்சரி என்று காரணம் கற்பிப்பதோடல்லாது


நமது இந்த நிலைக்கு காரணம் நம்மைச் சுற்றியுள்ளவர்கள்தானே தவிர நாம் அல்ல என்னும் மாயையினை உருவாக்கி மற்றவர்களை விரொதிகளைப்போல


நம்மை பார்க்கத் தூண்டி சமுதாயத்திற்கும் நமக்கும் இடையே பெரும் இடைவெளியை உருவாக்கிவிடும்.






இப்படி ஒருவரை தனிமைப்படுத்தும் இந்த சுய பச்சாதாபம் உள்ளிருந்து பெருகி வெறுப்புக் குவியலாய் சமயம் கிடைக்கும்போது வெடித்து வெளிப்படும். இந்த வெறுப்பு


தனக்கெதிராகவோ அல்லது தன்னைச் சுற்றி இருப்பவர்க்கு எதிராகவோ கிளம்பும்போது அது மிகப் பெரிய பின்விளைவுகளை விளைவிக்கும் .


எனவேதான் இதைக்குறித்து நாம் கவனம் செலுத்தவேண்டியது அவசியமாகிறது.






இத்தகைய சுயபச்சாத்தாபம் நிறைந்தவர்களை சாதரணமாக இருக்கும் மனிதர்களிடமிருந்து பிரித்துக் காட்ட நான் ஊடகங்களில் படித்தறிந்த ஒரு கதையை கீழே


சொல்லியிருக்கிறேன்.






ஒரு தனவந்தன் தனக்குப் பிறந்த இரு பிள்ளைகளிடமும் மிகுந்த வேறுபாட்டைக் கண்டான். அது, மூத்த பிள்ளை எப்போதும் மிகுந்த மகிழ்வுடனும், வாழ்வை


அனுபவிக்கும் தாகத்துடனும் இருக்க இளையவனோ எப்போதும் ஒருவித சோகத்துடனும், தன்னைக் குறித்து ஒரு சுய பச்சாத்தாபத்துடனும் இருந்ததோடு


மட்டுமல்லாது எல்லாச் சூழலிலும் தான் இரக்கமின்றி கொடுமைக்கு உள்ளாக்குவதைப்போல் மிகுந்த துயரத்துடனே வாழ்வைப் பார்த்தான்.






இதைக் கண்ட தனவந்தன் இவர்களது குணங்களை மாற்றும் எண்ணத்துடன் ஒருநாள் பிள்ளைகள் அறியாதவாறு மூத்த மகனது அறையை


குதிரைச்சாணக் குவியலாலும் இளைய மகனது அறையை விளையாட்டு பொம்மைகளாலும் நிரப்பிவிட்டு அடுத்த நாள் அவர்களது


நடவடிக்கைகளை கவனிக்க ஆரம்பித்தான்.






தனவந்தன், தனது இளைய பிள்ளை மகிழ்வுடன் பொம்மைகளுடன் விளையாடிக் கொண்டிருப்பான் எனவும் மூத்த பிள்ளை குதிரைச்சாணக் குவியலைக்


கண்டு மனம் வெறுத்து அதை சுத்தப் படுத்தும் வேலையில் இருப்பான் எனவும் நினைத்தான். ஆனால் நடந்ததோ இவனது எதிர்பார்ப்புகளுக்கு மாறாக இருந்தது.






இளைய பிள்ளை மிகுந்த வருத்தத்துடன் இருந்தான். இவனைக் கண்டதும், “ பாருங்கள் யாரோ எனது அறையில் பொம்மைகளை நிரப்பி வைத்திருக்கின்றனர்.


யார் இத்தனை பொம்மைகளுக்கும் சாவி கொடுத்து இயக்குவது? இவைகளுக்கு சாவி கொடுத்து இயக்கி மாளாது போலிருக்கிறதே.. யாருக்கும் என் மேல் இரக்கமே இல்லை..”


என்று சொல்லி அழுதானாம்.






மூத்த பிள்ளையோ இவனைக் கண்டதும் மிக்க மகிழ்வுடன், “ எத்துனை அதிசயம் பாருங்கள். என் அறை நிறைய குதிரைச்சாணம் இருக்கிறது. இதைப் பார்க்கும் போது


இங்கேதான் எங்கேயோ ஒரு குதிரைக் குட்டி இருப்பதாகத் தெரிகிறது. நான் எப்படியும் இன்று மாலைக்குள் அந்தக் குதிரைக் குட்டியைத் தேடிப்பிடித்து அதன் மீது சவாரி


செய்து விளையாடப் போகிறேன் ..” என்றானாம்.






இப்படித்தான் நமது பார்வைகள் நமது வாழ்வை மாற்றக்கூடிய சக்தி படைத்தவைகள். அப்படிப்பட்ட வல்லமை கொண்ட பார்வைகளையே திருகலாக்கி நமது வாழ்வைக்


கெடுக்க வல்லன நாம் கொள்ளும் சுய பச்சாத்தாபம். எனவே இத்தகைய வாழ்வைக் கெடுக்கும் மன நிலையை விட்டு வெளிவந்து நமது வாழ்வை வளம் பெறச்செய்ய


வல்ல ஒளியைக் காண்போம், சிறக்க வாழ்வோம்.



6/19/2011

வாழ்வின் கடுமையான காலங்கள் நமக்கு வாழக் கற்றுக் கொடுக்கின்றனவா?













வாழ்வின் கடுமையான காலங்கள் ஒருவரது மேம்படலுக்கு மிக மிகத் தேவையானதொன்றாகும். இந்தக் கடுமையான
காலங்கள் நமது அனுபவங்களை வளப்படுத்துவதோடு மட்டுமல்லாது நம் வாழ்வை மேம்படுத்தவும் நமக்கு வாய்ப்பளிக்கிறது.


ஆனால் நம்மில் பெரும்பாலோர் இந்த கடுமையான காலங்கள் சொல்லும் செய்திகளை புரிந்து கொள்ள முடியாமல்
இருப்பதாலேயே நம்மால் இந்த கடுமையான காலங்களை கடக்க முடிவதில்லை.


இந்த கடுமையான காலங்கள் நம்மில் இருக்கும் எதைக் குறித்தும் குறிவைக்கலாம். நமது ஆரோக்கியம், நமது செல்வம்,
நமது உறவுகள் இப்படி நம்மில் இருக்கும் எதைக் குறித்தும் சிக்கல்கள் எழலாம்.


சில நேரங்களில், மேற்சொன்ன வாழ்வின் அடிப்படைக்கான தேவைகளை / காரணிகளை பலமாகக் கொண்டவர்களது
வாழ்வில் இது குறித்து சிக்கல்கள் வர வழியில்லையென்றாலும் அவர்களது தன் முனைப்பு (ego) காரணமாக எழும் பேராசை,
பதவிப் பற்று மேலும் அவர்களது சமுதாய நிலையைப் பெருக்கிக் கொள்ளும் முயற்சி ஆகியவைகள் உருவாக்கும் சிக்கல்களும்
அவர்களுக்கு கடுமையான காலங்களை உண்டு பண்ணலாம்.


ஆனால் இரண்டாவதாக குறிப்பிட்ட இந்தக் கடுமையான காலங்கள் நமக்குள் நடக்கும் முரண்களைக் குறித்து மட்டுமே இருக்கும்.
இது நாம் நம்மை ஏற்றுக் கொள்ள அல்லது நம்மை மாற்றிக் கொள்ள வேண்டி நமது உள்ளத்தில் எழும் சிக்கல்களை மையமாகக்
கொண்டிருக்கும். இதுவும் கடுமையான காலங்கள் தான்.


மேற் சொன்னதுபோல அமையும் தன் முனைப்பு முரண்கள் - ego conflicts -  விளைவாக எழும் கடுமையான காலங்கள்
நாம் நம்மை மிகவும் புரிந்து கொள்ள உதவும். இந்த கடுமையான காலங்கள் தீர்க்கமான சிந்தனைகளால் மட்டுமே தீர்க்கப் படக்கூடியது.
நமது சிந்தனைத் தெளிவும், உள் நோக்குப் பார்வையும், நமது முரண்களையும், நம்மையும் குறித்த சிந்தனைகளும் அவைகளை
அறிந்து கொள்ள போதுமான நேரமும் உண்டானால் நமக்கு இந்த கடுமையான காலங்களை கடத்தல் எளிது. அது மட்டுமல்ல
இத்தகைய கடுமையான காலங்கள் நமக்கு நல்ல பக்குவத்தையும் உயிரின் மேம்படுதலையும் அளிக்க வல்லன.


இப்போது நான் முன்னதாக சொன்ன அடிப்படைக் காரணிகள் / தேவைகள் குறித்து விளையும் கடுமையான காலங்களைப் பற்றி பேசுவோம்.


பொருளாதாரச் சிக்கல்கள், தொழில் முறையில் மாற்றங்கள், தோல்விகள், ஆரோக்கியக் குறைபாடுகள் மற்றும் உறவுச் சிக்கல்கள் போன்றன
குறித்து எழும் கடுமையான காலங்கள் தானாகவே விலகிவிடக் கூடியன. ஆனாலும் இத்தகைய காலங்கள் நமக்கு சில
அறிவுறுத்தல்களைச் சொல்லிவிட்டுத்தான் செல்லும்.


இத்தகைய காலங்கள் நமக்கு பொருளாதாரத்தின் முக்கியத்துவத்தையோ, உறவுகளின் முக்கியத்துவத்தையோ அல்லது உறவுகளை
நாம் நிலை நிறுத்திக்கொள்ள விட்டுக் கொடுத்தலின் முக்கியத்துவத்தையோமற்றும் நமது நல்லொழுக்கத்திற்கும் சமுதாய நலனுக்கும்
இருக்கும் தொடர்பையோ அல்லது இவ்வுலகின் நிலையாமை குறித்த உணர்வையோ நமக்குள் அழுத்தமாக பதித்துவிட்டுத்தான் செல்லும்.


இதனாலேயே சிறுவயதுக் காலத்தில் கடுமையான காலங்களை சந்தித்தவர்களது வாழ்க்கை பிற்காலத்தில் பலரும் சிறக்க இருக்கிறது.
அப்படியல்லாது தமது வாழ்வின் பிற்காலத்தில் இத்தகைய கடுமையான காலங்களைச் சந்திக்கும் பக்குவப்படாதவர்களின் நிலை
பரிதாபத்திற்குறியதாகும். மிகச் சிலரே பிறருக்கு வரும் சோதனைக் காலங்களிலிருந்து படிப்பினைகளைப் பெற்றுக் கொள்கின்றனர்.




சிலருக்கு தம்முடன் இருக்கும் தீய நட்பும் மற்றும் போதை போன்ற தீய பழக்கங்களும் தங்களது தெளிவான சிந்தனையை தடுப்பதால்
இவைகளே கடுமையான காலங்களை உருவாக்கி அதிலிருந்து அவர்களை மீள வொட்டாது ஆழ்த்திவிடும். இவர்களது நிலை மிகப் பரிதாபமானதாகும்.


சில நேரங்களில் இந்தக் கடுமையான காலங்கள் தன்னைச் சுற்றியுள்ள சமுதாயத்திற்கே பொதுவானதாக அமைந்து விடுவதும் உண்டு.
எடுத்துக் காட்டாக போர்ச்சூழலில் சிக்கிவிடும் நாடும் அதன் மக்களும் ( உலகப்போர் மற்றும் இலங்கைப் போர்ச் சூழல்) மற்றும் மிகுந்த
வறுமையை ஒரு பொதுவான சூழலாகக் கொண்டுள்ள நாடும் அதன் மக்களும் ( மிக வறுமையில் உள்ள ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் இதர நாடுகள்).
இங்கு இந்தக் கடுமையான காலங்கள் ஒரு சமுதாயத்திற்கே செய்தி சொல்லுவதைப் பார்க்கலாம். இது அந்த சமுதாயத்திற்கு ஒரு சரியான
தலைவனைத் தேடியோ அல்லது ஒரு சரியான கூட்டு முயற்சியைத் தேடியோ இருக்கலாம்.


சரி. இத்தகைய கடுமையான காலங்களை கடப்பது எப்படி?


நம்பிக்கை. நம்பிக்கை ஒன்றேதான் வழி. There is always light at the end of the tunnel. வாழ்க்கைச் சக்கரம் சுழல பொறுமையுடனும்
நிதானத்துடனும் அறிவுக் கூர்மையுடனும் உள்நோக்குப் பார்வையுடனும் காத்திருப்பதுதான் மிகச் சிறந்த வழி. இத்தகைய சிந்தனையை பக்தி
மார்க்கம் தருவதால் சிலர் பக்தி மார்க்கத்தையும் இந்த கடுமையான காலங்களை கடக்க எளிதாய் பயன்படுத்துவர்.


தீய நண்பர்கள் மற்றும் போதை போன்ற தீய பழக்கங்களைக் கொண்டுள்ளவர்கள் இவைகளை விட்டாலன்றி தெளிவான சிந்தனையை
அடைய முடியாது. இவர்களுக்கு இவைகளின் பிடியிலிருந்து மீள்வது மட்டுமே இவர்களை மனிதர்களாக்கும்.


எனவே சரியான பார்வையில் கடுமையான காலங்களைக் கண்டு நிதானத்துடனும் அறிவுக் கூர்மையுடனும் அவைகளைக் கடந்து
அவைகளால் பெறும் படிப்பினைகளைக் கொண்டு வாழ்வை மேம்பட வாழ்வோம்.