தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

10/15/2010

எஜமான் நீங்களா ? பணமா?



”பொருளல்லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்லை பொருள்” (751)

 ”ஒரு பொருளாக மதிக்கத் தகாதவரையும் மதிப்புடையவராகச் செய்வதாகிய பொருளை விட சிறப்புடைய பொருள் வேறு இல்லை” என்கிறார் திருவள்ளுவர். 
           மதிக்கத் தகாதவரையும் மதிக்க வைக்கும் அளவு பணம் சக்தி படைத்திருப்பது திருவள்ளுவர் காலத்திலேயே இருந்திருக்கிறது. அறநெறி, வாய்மை, நற்குணங்கள் போன்றவற்றிற்கு பிரதான இடம் தந்து வந்த அந்தக் காலத்திலேயே பணத்திற்கு அந்த அளவு மதிப்பு என்றால் இந்தக் காலத்தில் அதன் மகத்துவத்தைச் சொல்ல வேண்டியதேயில்லை.
          பணமும் அதிகாரத்தைப் போல ஒரு போதை  என்றே சொல்ல வேண்டும். எங்கு போய் சேர்கிறதோ அங்கே பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் சக்தி அதற்கு உண்டு. அந்த மாற்றங்கள் நல்லதாக இருப்பதை விட மோசமானதாக இருப்பது தான் அதிகம். அதை உணர பணம் வந்து சேரும் முன் மற்றும் பணம் வந்து சேர்ந்த பின் என்ற இருநிலைகளையும்  நோக்கினால் போதும். நடை, உடை, பாவனை, பேச்சு எல்லாமே பெரும்பாலானோரிடம் மாறி விடுவதைக் காணலாம். சிலர் சட்டைப் பையில் சிறிது பணம் இருந்தால் போதும் நடையில் ஒரு துள்ளலும், பேச்சில் ஒரு பெரிய மனிதத் தனமும் கூடுதலாக சேர்வதை நாம் அடிக்கடி பார்க்கலாம். அந்தப் பணம் தீர்ந்து போனவுடன் அவர்கள் இயல்பு நிலைக்குத் திரும்பி விடுவார்கள்.
        பணம் யாரையும் எப்படியும் மாற்ற வைக்கும் என்பதற்கு ,ஒரு கதை உண்டு. சம்பகா என்ற ஊரில் சுத்திரகர்ணா என்கிற முனிவர் வாழ்ந்து வந்தார். அவர் சாப்பிட்டு பிச்சை பாத்திரத்தில் மீதம் வைத்த உணவை அவருடைய வீட்டில் இருந்த எலி உண்ணும். அது அந்த உணவை உண்டு விட்டு சும்மா இருப்பதில்லை. துள்ளித் துள்ளி குதித்து சேட்டைகள் செய்து ஆட்டமாடும் பழக்கத்தையும் வைத்திருந்தது.
            சுத்திரகர்ணா யாருடனாவது பேசும் போது அந்த எலி அவர் இருக்கும் இடத்திற்கு வந்து அதிகமாக சேட்டை செய்யும் என்பதால் அவர் அடுத்தவரிடம் பேசும் போது அது தன் அருகே வந்து குதிக்காமல் இருக்க வேண்டி அடிக்கடி ஒரு பிரம்பால் தரையைத் தட்டிக் கொண்டே இருப்பார்.
           ஒரு முறை அவருடைய நண்பர் வினகர்ணா என்பவர் அவரிடம் பேசிக் கொண்டிருந்த போதும் சுத்திரகர்ணா பிரம்பால் தரையைத் தட்டிக் கொண்டே இருக்க அவர் அதற்குக் காரணம் கேட்டார்.
         சுத்திரகர்ணா சொன்னார். “தவறாக நினைக்க வேண்டாம். இந்த எலி தினமும் நான் மீதம் வைத்த உணவைத் தின்று விட்டு என் முன்னேயே துள்ளிக் குதித்து சேட்டைகள் செய்கிறது. என்னை சரியாகப் பேசக் கூட விடுவதில்லை. அதை அடக்கத்தான் அவ்வப்போது இப்படி பிரம்பால் தரையைத் தட்டுகிறேன்.”
             வினகர்ணா மிகவும் அறிவுக் கூர்மை வாய்ந்தவர். எதுவும் காரணம் இல்லாமல் நடப்பதில்லை என்பதை உணர்ந்தவர். அவர் அந்த எலி துள்ளிக் குதிக்கும் இடத்தை உற்றுப் பார்த்து விட்டு அந்த இடத்தை தோண்டிப் பார்க்கச் சொன்னார்.
          சுத்திரகர்ணாவுக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனாலும் நண்பர் வற்புறுத்தவே அப்படியே செய்தார். தோண்டிய போது அந்த இடத்தில் ஒரு புதையல் புதைத்து வைக்கப்பட்டு இருந்ததைக் கண்டார். அந்தப் புதையலுக்கு அருகில் ஒரு பொந்தை உருவாக்கி அந்த எலி அதில் வசித்து வந்திருக்கிறது. பெருமளவு செல்வத்தின் அருகே வசிப்பதால் தான் அந்த எலி அந்த ஆட்டம் ஆடுகிறது என்பதை வினகர்ணா விளக்கினார். செல்வத்தின் அருகே வசிக்கும் எலியே அந்த ஆட்டம் போடும் போது செல்வத்தைப் பெற்ற மனிதனிடம் ஏற்படும் மாற்றங்கள் பற்றி சொல்ல வேண்டியதேயில்லை.
          ஆரம்பத்தில் இருந்தே பணத்தை அதிகமாகப் பெற்றிருப்பவர்களை விட சில திடீர் பணக்காரர்கள் பெரிதும் மாறுவதை நாம் அதிகம் மாறலாம். அடிமட்டத்தில் இருந்த நாட்களை அடியோடு மறந்து தங்களை முதன்மைப் படுத்துவதில் அவர்கள் காட்டுகிற ஆர்வம் அப்பப்பா. புதிதாகக் கிடைத்த செல்வத்தினால் வாங்கிய பொருள்களை அவர்கள் மற்றவர்கள் பார்வைக்குக் காட்டுவதிலும், பழைய நாட்களின் நண்பர்கள் உறவுகளை விட்டு விலகி புதிய பணக்கார நண்பர்கள், உறவினர்களைத் தேடிப் போவதிலும் அவர்கள் மிகுந்த ஆவலாக இருப்பதையும் பார்க்கலாம்.
          அப்படி மாற்றத்தை ஏற்படுத்த மிக முக்கிய காரணம் என்ன என்றால் பணத்திற்கு நமது சமூகத்தில் தரும் அபரிமிதமான இடம் என்றே சொல்ல வேண்டும். பணம் பத்தும் செய்வதையும், பாதாளம் வரை பாய்வதையும் கண்டு அதை மிக உயர்வாக நினைத்து பூஜிப்பதே காரணம்.
           பணம் மிக முக்கியமானது என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் பணம் மட்டுமே முக்கியமானது என்பது முட்டாள்தனம். பணம் வைத்திருப்பவர்கள் எல்லாம் மிக உயர்ந்தவர்கள், வெற்றியாளர்கள் என்று கொண்டாடுவதும், பணம் இல்லாதவர்கள் எல்லாம் தோல்வியாளர்கள், ஒன்றுக்கும் உதவாதவர்கள் என்று அலட்சியப்படுத்துவதும் வடிகட்டிய முட்டாள்தனம். வாழ்ந்த காலத்தில் வறுமையிலேயே வாடிய காரல்மார்க்ஸ், பாரதியார் போன்ற எத்தனையோ சிந்தனையாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள் எல்லாம் இன்றும் உலகத்தால் போற்றப்படுகிறார்கள். வரலாறு அவர்களை நினைவு வைத்திருக்கிறது. அதே நேரத்தில் அவர்கள் வாழ்ந்த காலத்தில் செல்வச்செழிப்பில் இருந்தவர்கள் எல்லாம் இருந்த சுவடு தெரியாமல் மறைந்து விட்டார்கள். இதில் யார் வெற்றியாளர்கள்?
            எனவே பணத்திற்கு அதற்கு உரிய இடத்தை விட அதிகப்படியான இடம் தருவதும், அது இருக்கிறது என்ற காரணத்தால் தலைகால் புரியாமல் நடந்து கொள்வதும் நகைப்புக்குரியதே. ஓரிடத்தில் நில்லாது இடம் மாறிச் செல்லும் தன்மையினால் அது செல்வம் என்று செந்தமிழில் அழகாக அழைக்கப்படுகிறது.
இருப்பதை இழப்பதற்கும், இழந்ததைப் பெறுவதற்கும் அதிக காலம் தேவையில்லை. இந்த பேருண்மை தினந்தோறும் நம் முன்னால் பலர் அனுபவங்கள் மூலம் பறையறிவிக்கப் பட்டாலும் பலரும் உணரத் தவறி விடுகிறார்கள்.
         ஒருவிதத்தில் பணமும், அதிகாரமும் ஒருவனை அடையாளம் காட்டும் அருமையான கருவிகள் என்றே சொல்ல வேண்டும். அவை சென்று சேரும் நபர்கள் நடந்து கொள்ளும் விதங்களிலேயே அவை அவர்களது உண்மையான தன்மைகள் இன்னதென்று தெளிவாகக் காட்டுகின்றன.
            பணம் உங்கள் கையில் இருக்கிறதா, இல்லை பணத்தின் பிடியில் நீங்கள் இருக்கிறீர்களா என்பதைப் பொறுத்தே அதன் பயன்படும் தன்மை நிர்ணயிக்கப் படுகிறது. பணம் உங்கள் கையில் இருக்கும் போது, பணத்தின் எஜமானனாக நீங்கள் இருக்கும் போது அது உங்களுக்கும், உங்களைச் சார்ந்தவர்களுக்கும் மிக நல்ல முறையில் பயன்படும். உங்கள் மனிதத் தன்மையை நீங்கள் தக்க வைத்துக் கொண்டு அதை சிறந்த முறையில் பயன்படுத்தி அனுபவிப்பீர்கள். ஆனால் அதன் பிடியில் இருக்கும் போது, உங்கள் எஜமானனாக மாற அதை நீங்கள் அனுமதிக்கும் போது நீங்கள் அடிமையாகவும், கோமாளியாகவும் மாறி விடுவீர்கள். அது நல்ல விதத்தில் பயன்படாமல் உங்களைப் பாடாய் படுத்தும். உங்களை நிர்ணயிப்பதே அது தான் என்கிற ஒரு போலி சித்தாந்தத்தில் மூழ்கி போதையில் இருப்பவர்கள் நடந்து கொள்பவர்கள் போல நடந்து கொள்ள ஆரம்பித்து விடுவீர்கள். உங்கள் நடவடிக்கைகளின் வேடிக்கைத் தன்மை உங்களைத் தவிர மற்ற அனைவருக்கும் தெளிவாகத் தெரியும். நீங்கள் அதன் பிடியில் இருந்து ஒரு வேளை நீங்கி மீண்டால் எத்தனையோ நல்ல விஷயங்களையும், நல்ல தன்மைகளையும் இழந்து விட்டிருப்பது அப்போது புரியும்.
           எனவே பணத்தை மதியுங்கள். அதற்கு உங்கள் வாழ்க்கையில் உரிய இடத்தைக் கொடுங்கள். அது உங்கள் நல்ல தன்மைகளை அழித்து விடாதபடி அதற்கு எஜமானனாக இருந்து முறைப்படி பயன்படுத்துங்கள். பணம் மேலும் வந்து சேரச் சேர அது உங்கள் எஜமானனாக மாற மட்டும் அனுமதிக்காதீர்கள். 


10/14/2010

ஒரு தமிழ்ப் பாடகன் -சிங்கப்பூர் ரயிலில் .

      இந்த பதிவு ஒரு தமிழனின் பெருமையை மீண்டும் தலை நிமிர செய்த ஒன்று, பொதுவாக வீடியோ பதிவுகளை போட விரும்புவதில்லை ,ஏதோ இதை போட விரும்பி உங்களுக்காக ........ 
           சிங்கப்பூர், சிங்கை துரிதக் கடவு ரயில் (Mass Rapid Transit or MRT ) யில் சிங்கப்பூர் இந்தியர் ஒருவர் மிக சந்தோசமாக பாடுகிறார். வெவ்வேறு தருணங்களில் இவர் பயணம் செய்யும்போது இவர் இசையோடு பாடியதை நமது வாசகர் இதை  பதிவு செய்துள்ளார்.

 
 
     

10/13/2010

தெரிந்து கொள்வோம் - நவராத்திரி

 நவராத்திரி

         ஒரு மனிதனிற்கு உடல்வலிமை, பராக்கிரம், மனோதிடம், புத்திபலம், தீர்க்காயுள், ஞானம, தேவைகளிற்கு பணம் போன்ற அனைத்து அம்சமும் நிறைந்திருந்தால் தான் அவன் சிறந்த வெற்றியாளனாக திகழ முடியும். அதாவது வீரம், செல்வம், கல்வி ஆகியவை அனைத்தும் நிறைந்திருக்க வேண்டும். இவற்றை பெறுவதற்காகவே நவராத்திரி விரதம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. வாழ்க்கையின் எல்லா தேவைகளையும் அடைய பணம் வேண்டும். இதற்காக மகாலட்சுமி தேவியை வணங்குகிறோம். பெற்ற zபணத்தை பாதுகாக்க வீரம் வேண்டும் அதற்காக துர்க்கா தேவியை வழிபடுகிறோம். பெற்று பாதுகாக்கப்பட்ட பணத்தை நல்வழியில் பயனள்ள காரியங்னளிற்கு பயன் படுத்த அறிவு அதாவது கல்வியறிவு வேண்டும். அதற்கு சரசுவதித் தாயை வணங்குகிறோம். இப்படியாக காரண காரியங்களுடன் இந்த விரத முறை அமைந்துள்ளது. நவ என்ற சொல்லிற்கு ஒன்பது, புதியது என்ற இரண்டு அர்த்தங்கள் உள்ளன. இங்கு ஒன்பது ராத்திரிகள் என்பதே நவராத்திரி எனபபபடுகிறது. ஒன்பது ராத்திரிகள் சக்தியை நோன்பு நோற்று வழிபட்டு 10ம் நாள் நோன்பை நிறைவு செய்ய வேண்டும். உத்தராயண காலமான தை முதல் ஆனி வரையிலான காலத்தின் நடுவில் வருவது வசந்த ருது -- சித்திரை, தட்சிணாயண காலமான ஆடி முதல் மார்கழி வரையிலான காலத்தின் நடுப்பகுதியான சரத் ருது -- புரட்டாசி. இவ்விரு பருவ காலங்களும் எமனின் கோரைப்பற்களைக் குறிக்கின்றன. இக்காலங்கள் பொதுவாக மனிதரிற்கு தீமை விளைவிக்கும் காலங்களாகும். இதனால் தான் இக் காலங்களில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நடத்தப்படுவதில்லை. இந்த ஒன்பது நாட்களும் முப்பெரும் தேவியரான மலைமகள் (துர்க்கை), அலைமகள் (மகாலட்சுமி), கலைமகள் (சரசுவதி) ஆகியோரிற்கு மும்மூன்று நாடகளாக வழிபடும் ஒரு முறையும் உள்ளது. மற்றும் ஒன்பது சக்தியிரை ஒன்பது நாட்கள் வழிபடும் முறையம் உள்ளது. ஈழம் போன்ற நாடுகளில் முதல் முறையே கடைப்பிடிக்கப்படுகிறது. பண்டைய காலத்தில் மன்னர்கள் மற்றும் படைவீரர்கள் ஒன்பது நாட்களும் தங்கள் ஆயுதங்களை (போர்க் கருவிகளை) பூசையில் வைத்து பத்தாம் நாள் விஜய தசமியன்று விழா எடுத்து தமது வெற்றிக்கு தமது ஆயுதங்களிற்கு சிறப்பு சக்தி கிடைக்க வேண்டும் என வழிபட்டு வந்தனர். இதற்கு சான்று கிருஷ்ண அவதாரத்தில் கம்சனின் படலத்தில் காணப்படுகிறது. நவராத்திரி கொலு வைக்கும் முறையையும், நவராத்திரி என்பது பெண் தெய்வங்களிற்கு மட்டுமே உரிய ஒரு வழிபாட்டு முறை போலவும், அது பெண்கள் மட்டுமே கடைப்பிடிக்கும் ஒரு விரத வழிபாட்டு முறை போலவும் ஒரு தவறான தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த நவராத்திரி விரதம் குறிப்பாக வெற்றிக்கனியை பறிக்க விரும்பும் ஆண், பெண், குழந்தைகள் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய விரதமாகும். ஆண்கள் இந்த விரதத்தினை அனுஸ்டிப்பதிற்கு சான்றாக ஏற்கனவே கூறியது போல கம்சன் சிறப்பாக ஆயுத பூசை செய்ததையும் தற்காலத்தில் தொழிலாளரகள் தங்கள் ஆயுதங்னளிற்கு ஆயுத பூசை அன்று சிறப்பு வழிபாடு செய்வதையும் காணலாம். மற்றும் விஜயதசமி அன்று பிள்ளைகளிற்கு ஏடு தொடங்கல் என்ற கல்வியின் ஆரம்ப நாளாக கடைப்பிடிப்பதையும் நாம் காணலாம்.


ஒன்பது தேவியரின் வழிபாட்டு முறையையும் இனிப்பார்ப்போம்

 நவராத்திரி கொலு
 


            நவராத்திரியின் சிறப்பு அம்சம் கொலு வைப்பதேயாகும். கொலு என்பது பல படிகளை கொண்ட மேடையில் பலவித பொம்மைகளை நேர்த்தியாக அலங்கரித்து வைப்பதேயாகும். ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணினால் செய்யப்பட்ட பொம்மைகளை சக்தியின் அம்சங்களாக எண்ணி நவராத்திரியில் பூசிப்பவர்களிற்கு சகல நலங்களையும் தருவேன் என்று அம்பிகையே கூறியிருக்கின்றா. இனி நவராத்திரி கொலு எப்படி அமைக்கவேண்டும் என்று பார்ப்போம். கொலுமேடை 9 படிகள் கொண்டதாக இருக்கவேண்டும்.




1. முதலாம் படி :-
           ஓரறிவு உயிர்களான புல், செடி, கொடி போன்ற தாவர வர்கங்களின் பொம்மைகள்.
2. இரண்டாம் படி:-
          ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகள்.
3. மூன்றாம் படி :-
          மூன்றறிவு உயிர்களான கறையான், எறும்பு போன்றவற்றின் பொம்மைகள்.
4. நாலாம்படி :-
          நான்கறிவு உயிர்களை விளக்கும் நண்டு,வண்டு போன்றவற்றின் பொம்மைகள்.
5. ஐந்தாம்படி :-
        ஐந்தறிவு உள்ள மிருகங்கள், பறவைகள் ஆகியவற்றின் பொம்மைகள
6. ஆறாம்படி :-
       ஆறறிவு மனிதர்கள் பொம்மைகள்.
7. ஏழாம்படி :-
        மனித நிலையிலிருந்து உயர் நிலையை அடைந்த சித்தர்கள், ரிசிகள், மகரிசிகள் (ரமணர், வள்ளலார்) போன்றோரின் பொம்மைகள்.
8. எட்டாம்படி :-
       தேவர்கள், அட்டதிக்பாலர்கள், நவக்கிரக அதிபதிகள் போன்ற தெய்வங்கள் தேவதைகள் போன்றோரின் பொம்மைகள்.
9. ஒன்பதாம்படி :-
        பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் அவர்களின் தேவியருடன் நடுநாயகமாக ஆதிசக்தி வைக்கவேண்டும்.

            மனிதன் படிப்படியாக உயர்ந்து தெய்வ நிலையை அடைய வேண்டும் என்பதற்காகவே இப்படி கொலு அமைப்பது வழக்கம்.


இந்த வருடம் நவராத்திரி விரதம் 08 – 10 – 2010 வெள்ளிக்கிழமை அன்று ஆரம்பமானது . அதற்கு முதல் நாளான 07 – 10 – 2010 வியாழக்கிழமை காலை 10.30 – 11.30 மணிக்குள்ளான நல்ல நேரத்தில் கொலு வைக்க சிறந்த நேரமாக கணக்கிடப்பட்டது . பின்னர் விஜயதசமியன்று 17 – 10 – 2010 பூசை முடித்த பின்னர் கொலு பொம்மைகளை படுக்க வைத்து விட வேண்டும். மறுநாள் காலையில் அதாவது 18 – 10 – 2010 அன்று காலையில் கொலுவை எடுத்து விடலாம்.


நவராத்திரி வழிபாட்டு முறை.

1. முதலாம் நாள் :-
           சக்தித்தாயை முதல்நாளில் சாமுண்டியாக கருதி வழிபடவேண்டும். தெத்துப்பல் திருவாயும், முண்டமாலையும் அணிந்தவள். முண்டன் என்ற அசுரனை சம்ஹாரம் செய்த சக்தி அவள். இதனால் சாமுண்டா எனவும் அழைப்பர். இவள் மிகவும் கோபக்காரி. நீதியைக்காக்கவே இவள் கோபமாக உள்ளாள். மற்றும் இவளது கோபம் தவறு செய்தவர்களை திருத்தி நல்வழிபடுத்தவே ஆகும்.
         மதுரை மீனாட்சி அம்மனை முதல் நாளில் அண்டசராசரங்களைக் காக்கும ராஜராஜேஸ்வரி அம்மனாக அலங்கரிப்பர்.
முதல்நாள் நைவேத்தியம் :-சர்க்கரைப் பொங்கல்.

2. இரண்டாம் நாள் :-
         இரண்டாம் நாளில் அன்னையை வராஹி தேவியாக கருதி வழிபட வேண்டும். வராஹ(பன்றி) முகமும் தெத்துபற்களும் உடையவள். சூலமும் உலக்கையும் ஆயுதங்கள் ஆகும். பெரிய சக்கரத்தை தாங்கியிருப்பவள். தனது தெத்து பற்களால் பூமியை தூக்கியிருப்பவள். இவளிற்கு மங்கள மய நாராயணி, தண்டினி, பகளாமுகி போன்ற திருநாமங்களும் உண்டு. இவள் அன்னையின் சேனாதிபதி ஆவாள். ஏவல், பில்லி சூனியம், எதிரிகள் தொல்லையிலிருந்து விடுபட இவளின் அருளைப் பெறுவது அவசியம்.
         மதுரை மீனாட்சி அம்மன் இன்று விறகு விற்ற லீலையில் காட்சி அளிப்பாள். அதாவது சுந்தரர் விற்ற விறகை மீனாட்சி அம்மன் தலையில் ஏற்றும் படலம் நடக்கும். குடும்ப பாரத்தை கணவனுடன் சேர்ந்து மனைவியும் சுமக்க வேண்டும் என்ற தத்துவத்தினை வலியுறுத்துவதாக நாம் கருதலாம்.
இரண்டாம் நாள் நைவேத்தியம் :- தயிர்ச்சாதம்.

3. மூன்றாம் நாள் :-
         மூன்றாம் நாளில் சக்தித்தாயை இந்திராணியாக வழிபடவேண்டும். இவளை மாஹேந்தரி, சாம்ராஜ தாயினி என்றும் அழைப்பர். இவள் இந்திரனின் சக்தி ஆவாள். கிரீடம் தரித்து வஜ்ராயுதம் ஏந்தியவள். ஆயிரம் கண்ணுடையவள். யானை வாகனம் கொண்டவள். விருத்திராசுரனை அழித்தவள். தேவலோகத்தை பரிபாலனம் செயபவளும் இவளேயாகும். பெரிய பெரிய பதவிகளை அடையவிரும்புபவர்களிற்கு இவளின் அருட்பார்வை வேண்டும். மற்றும் வேலையில்லாதவரிற்கு வேலை கிடைக்க, பதவியில் உள்ளவரிற்கு பதவியுயர்வு, சம்பள உயர்வு கிடைக்க அருள் புரிபவளும் இவளேயாகும்.
          இன்று மீனாட்சி அம்மன் கல் யானைக்கு கரும்பு கொடுத்த அலங்காரத்தில் காணப்படுவார்.
மூன்றாம் நாள் நைவேத்தியம் :- வெண்பொங்கல்.

4. நான்காம் நாள் :-
         சக்தித்தாயை இன்று வைஷ்ணவி தேவியாக வழிபடவேண்டும். சங்கு, சக்கரம், கதை, வில் ஆகியவற்றை கொண்டிருப்பவள். தீயவற்றை சம்ஹரிப்பவள். இவளின் வாகனம் கருடன்.
         இன்று மதுரை மீனாட்சி அம்மன் திருமண கோலத்தில் காட்சியளிப்பார்கள்.
நான்காம் நாள் நைவேத்தியம் :- எலுமிச்சை சாதம்.

5. ஐந்தாம் நாள் :-
          ஐந்தாம் நாளில் அன்னையை மகேஸ்வரி தேவியாக வழிபட வேண்டும். அன்னை மகேஸ்வரனின் சக்தியாவாள். திரிசூலம், பிறைச்சந்திரன், பாம்பு தரித்து இடப வாகனத்தில் எழுந்தருளியிருப்பவள். அளக்கமுடியாத பெரும் சரீரம் உடையவள். சர்வ மங்களம் தருபவள். தர்மத்தின் திருவுருவம். கடின உழைப்பாளிகள் உழைப்பின் முழுப்பலனை பெற அன்னையின் அருள் அவசியம் வேண்டும்.
         இன்று மதுரை மீனாட்சி அம்மன் நாரைக்கு மோட்சம் கொடுத்த அலங்காரத்தில் காட்சியளிப்பார்கள்.
ஐந்தாம் நாள் நைவேத்தியம் :- புளியோதரை.

6. ஆறாம் நாள் :-
         இன்று அன்னையை கவுமாரி தேவியாக வழிபடவேண்டும். மயில் வாகனமும் சேவல் கொடியும் உடையவள். தேவசேனாதிபதியான முருகனின் வீரத்திற்கு ஆதாரமானவள். ஓங்கார சொரூபமானவள். சகல பாவங்களையும் விலக்கிடுபவள். வீரத்தை தருபவள்.
        இன்று மதுரை மீனாட்சி அம்மன் பாணணிற்கு அங்கம் வெட்டிய அலங்காரத்தில்  அருள்புரிவார்கள்.
ஐந்தாம் நாள் நைவேத்தியம் :- தேங்காய்ச்சாதம்.

7. ஏழாம் நாள் :-
        ஏழாம்நாள் அன்னையை மகாலட்சுமியாக வழிபடவேண்டும். கையில் ஜெபமாலை, கோடரி, கதை, அம்பு வில், கத்தி, கேடயம், சூலம், பாசம்,தண்டாயுதம், சக்தி ஆயுதம், வஜ்ராயுதம், சங்கு, சக்கரம், மணி, மதுக்கலயம், தாமரை, கமண்டலம் ஆகியவற்றைக் கொண்டிருப்பவள். விஷ்ணு பத்தினியாவாள். பவளம் போன்ற சிவந்த நிறத்தையுடையவள். தாமரை ஆசனத்தில் அமர்ந்து சகல ஐசவரியங்களையும் தருபவள் அன்னையாகும்.
       இன்று மதுரை மீனாட்சி அம்மன் சிவசக்தி கோலத்தில் மக்களிற்கு அருள்பாலிப்பார்கள்.
ஏழாம் நாள் நைவேத்தியம் :- கல்க்கண்டுச் சாதம்.

8. எட்டாம் நாள் :-
       இன்று அன்னையை நரசிம்ஹி ஆக வழிபடவேண்டும். மனித உடலும், சிம்ம தலையும் உடையவள். கூரிய நகங்களுடன் சங்கு, சக்கர தாரிணியாக சிம்ம வாகனத்தில் காட்சி தருபவள். சத்ருக்கள் தொல்லையில் இருந்து விடுபட அன்னையின் அருள்வேண்டும்.
       இன்று மதுரை மீனாட்சி அம்மன் மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் காட்சியளிப்பார்கள்.
எட்டாம் நாள் நைவேத்தியம் :- சர்க்கரைப் பொங்கல்.

9. ஒன்பதாம் நாள் :-
         இன்று அன்னையை ப்ராஹ்மி ஆக வழிபடவேண்டும். அன்ன வாகனத்தில் இருப்பவள். வாக்கிற்கு அதிபதியாவாள். ஞானசொரூபமானவள். கல்விச்செல்வம் பெற அன்னையின் அருள் அவசியமாகும்.
ஒன்பதாம் நாள் நைவேத்தியம் :- அக்கர வடசல்.

மேன்மைகொள் !  சைவ நீதி விளங்குக உலகமெலாம்!!
இந்துவாக வாழ்வோம் !!! இந்து தர்மம் காப்போம்!!!.

வாழ்க வளமுடன் 

10/12/2010

வாழ்ந்து பார்க்கலாம் வாங்க .....


மனிதனாக பிறந்துவிட்டோம்
வாழ வேண்டும்
முடியும் வரை
வாழ்க்கைப்பயணம்...
கொட்டிக்கிடக்கிறது இன்பங்கள்
ஆங்காங்கே அள்ளிக்கொள்வது
நம் கையில் நம் மனதில்...
திறந்தே கிடக்கிறது உலகம்
திறக்க மறுப்பதென்னவோ
நம் மனதுகள்தான்
திறந்தே கிடக்கட்டும் அது...
துன்பங்கள் துயரங்கள்
கூடவே வரலாம்
நம் நிழல் போல
கடந்துசெல்லுங்கள்
காத்திருக்கலாம் ஓர் வசந்த காலம்....
நேசியுங்கள் மனிதர்களை
பறிமாறுங்கள் புன்னகைகளை
பூக்கள் பூக்கலாம்
உங்கள் தோட்டத்திலும்...
உலகத்தை ரசியுங்கள்
குழந்தை மனதோடு வேண்டாம்
கொள்ளை ஆசைகள்...
வாழ்ந்து பார்ப்போம்
வாருங்கள்...!

10/11/2010

முயற்சி + தனித்திறமை =சாதனையாளன்


முயற்சி
          குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான், ஏன் மற்ற உயிரினங்களிடமிருந்து; சிங்கத்திலிருந்து, நாயிடமிருந்து, நரியிடமிருந்து, குதிரையிடமிருந்து பிறக்கவில்லை...
குரங்குதான் அடுத்த கட்டத்திற்கு மாறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டது.நின்றது, நடந்தது, குதித்தது, மரம் ஏறியது, நிமிர்ந்தது. பரிமாணம் பெற்றது.

முயற்சி செய்ததால் ஒரு விலங்கு இனம், பரிமாண வளர்ச்சி பெற்று மனிதனாக மாற முடிந்தது. எனில் ஏன் மனிதனால் தெய்வமாக மாறமுடியாது.

அறிந்துக் கொள்ளுதலும், புரிந்துக் கொள்ளுதலும் முழுமைப்பெற, முயற்சி செய்தால் நிச்சயம் இது நிகழும்.
முயற்சி என்பது சுவாசம் போல் எப்போதும் இருக்க வேண்டும். முயற்சி நின்று போகும் போது ஒருவன் உயிர் இழந்தவனாகிறான்.
தோற்றுப்போனவனை பாராட்டுங்கள். முயற்சி செய்யாதவனை விட , தோற்றவன் நூறு மடங்கு சிறந்தவன்.
நின்று கொண்டிருக்கும் நீரில் தான் அழுக்குகள் சேரும். நீரோட்டம் என்பது நதிக்கு உயிரோட்டம். முயற்சி என்பது வாழ்க்கைக்கு உயிரோட்டம்.

"நின்ற இடத்தில் நிற்க வேண்டுமா? ஓடிக்கொண்டே இரு " என்பது ஒரு பழமொழி.
மனிதன் தெய்வமாக முயற்சிக்காவிட்டால் கூட
பரவாயில்லை, மீண்டும் மிருகமாக மாறாமல் இருந்தாலே போதும். 
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...

 தனித்திறமை 
              இந்த உலகில் தனித்திறமை உள்ளவர்கள் மட்டுமே ஜெயிக்க இயலும்.
தனித்திறமை என்பது தன்னைப் புரிந்துக் கொள்ளுதல், அனைவரிடமும் உள்ள சிறப்பு பண்புகளை (Plus Points) உற்று நோக்கி; அதனை தனக்கு சொந்தமாக்கிக் கொள்ளுதல், தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை ஒருவாறு யூகித்தல், வார்த்தைகளின் முக்கியத்துவத்தை உணர்தல், இவையனைத்திறகும் மேலாக நம்பிக்கை.

படி எங்கிருக்கிறது என்று தெரியாத போதும்
முதல்அடி எடுத்துவைப்பதற்குப் பெயர் தான் நம்பிக்கை!

நம்பிக்கையை பாதுகாப்பாக வைத்துக் கொண்டால், இன்று நம்மை எள்ளி நகைக்கும் இவ்வுலகம் நிச்சயம் திரும்பிப் பார்க்கும்.

இவ்வுலகில் ஏசுநாதரைப் போல் வாழ்வது என்றால் நம்மை பாதாளத்தில் தள்ளி விடுவார்கள். எனவே தேவைப்பட்டால் மறுகன்னத்தில் மட்டுமல்ல, இரு கன்னத்திலும் திருப்பி அறைய வேண்டும். "ரௌத்திரம் பழகு" என்பது பாரதியின் வார்த்தைகள். நல்லவனாக வாழுதல் தவறல்ல. நல்லவனாக மட்டும் வாழ்தல் என்பது இன்றைய சூழலில் " பிழைக்கத் தெரியாதவன்" என்ற பட்டத்தை பெறுவதற்கு மட்டுமே உதவும்.

நமது சுற்று வட்டாரம் எப்படிப்பட்டது, நண்பர்களைத் தேர்ந்தெடுக்கும் திறம், என்பவையும் முக்கியம். இவை சமுதாயத்தால்மதிக்கப்படக்கூடியநிலையை உருவாக்கும்.

வாழ்க்கையின்இறுக்கம் தாண்டி, நல்ல விஷயங்களை ரசிக்கும் மனதையும் பெற்று விட்டால் இனி எல்லாம் சுகமே.... 
 

10/10/2010

பதிவுலகம் ஒரு சவாலானது


எழுதுவது மிகக் கடினமான விஷயம்.. வாசிப்பது அதனினும் கடினமான விஷயமாக இருக்கிறது.. இன்றைய வேகமான சூழலில்.! தமிழக காங்கிரஸின் தொண்டர்கள் தலைவர்கள் விகிதம் போல பதிவுலகில் படிப்பவர்களை விட எழுதுபவர்கள்தான் அதிகம் உள்ளனர். நாம் மட்டும் எழுதி மற்றெல்லோரும் படித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

பத்திரிகை, இதழ்களில் எழுதும் வாய்ப்பு என்பது நன்றாக எழுதும் திறன் மிக்கவர்களுக்கோ அல்லது செல்வாக்குப் படைத்தவர்களுக்கோ கிடைக்கும் ஒன்றாக இருக்கிறது. அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்துவிட்டாலே அவர் கவிஞர் அல்லது எழுத்தாளர் என்ற அடைமொழிக்குரியவர்களாகிவிடுகின்றனர். ஆயிரமாயிரம் பிரதிகளில் படைப்புகள் அச்சாகி, அதை விலை கொடுத்து வாங்கும் வாசகர் கரங்களை அவர்களின் படைப்புகள் சென்றடைந்துவிடுகின்றன. மறுகேள்விக்கு இடமில்லாமல் அந்த படைப்பு வாசகர்களால் பெரும்பாலும் வாசிக்கப்பட்டுவிடுகிறது. பின்விளைவுகளையும், நீடித்த வெற்றியையும் பற்றி நாம் இப்போது பேச வரவில்லை. முதலில் படைப்புகளை வாசகர்களை படிக்க வைத்தால்தானே பின்னர் வெற்றியைப் பற்றி பேசமுடியும்.?

முதலில் எழுத்தாளர்களுக்கான, பத்திரிகைக்களுக்கான வாசகர் வட்டம் மிகப்பெரிது இன்றைய சூழலில். ஆனால் அதனுடன் ஒப்பிடுகையில் வலையுலகத்தின் வாசகர் எண்ணிக்கை மிகக்குறைவானதாகவே இருக்கிறது. பத்திரிகைகளைப் போல எந்த சிரமமும் இல்லாமல் யாரது படைப்புகளும் களம்காண எந்தத் தடையுமில்லை. நூலகத்தில் குவிந்துகிடக்கும் புத்தகங்களைப் போல ஒவ்வொரு வலைப்பூவும் ஒரு குட்டிப்புத்தகமாய் வலையுலகில் குவிந்துகிடக்கிறது. பத்திரிக்கை உலகத்தோடு ஒப்பிடுகையில் நினைத்தும் பார்க்க இயலாத போட்டி இங்கே. ஒவ்வொரு மனிதனிடமும் பிறருடன் பகிர்ந்து கொள்வதற்கான விஷயங்கள் கொட்டிக் கிடக்கின்றன. இந்த குறைந்த வாசகர் கூட்டத்தில், மிகுந்த போட்டிக்கிடையே எப்படி படைப்புகளை வாசகர்களை படிக்கச்செய்வது.?

செய்தி, சிந்தனை, சம்பவங்கள், நகைச்சுவை என விஷயம் எதுவாக இருப்பினும் உள்ளடக்கம், படைப்பின் அளவு, தலைப்பின் வசீகரம், வாசகரை தொடர்ந்து வாசிக்கச்செய்யும் நடை, புதுமை என எழுத்தாளர்களுக்குக்கூட இல்லாத அளவு ஒவ்வொரு விஷயமும் பதிவர்களுக்கு மிகுந்த சவால் நிறைந்த்தாக உள்ளது..

நல்ல தரமான உள்ளடக்கம், வசீகரமான நடை, அழகான தலைப்பு அத்தனை இருந்தும் படைப்பின் நீளம் மலைக்கவைப்பதாய் இருந்தால் (ஒரு பத்திரிகைச் சிறுகதையின் நான்கில் ஒருபங்கு) பதிவு பெரும்பாலும் தவிர்க்கப்படுகிறது. பிறவற்றில் சிறப்பாக இருந்து ஒரு நல்ல வசீகரமான தலைப்பு இல்லாமல் போனாலும் படைப்பு தோல்வியைத் தழுவுகிறது. ஒவ்வொரு படைப்பும் ஒவ்வொரு விஷயத்திலும் சிறப்பானதாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. இப்படி ஒவ்வொரு கூறுகளையும் சிந்தித்துச் செயலாற்றி கிடைத்த வெற்றியைத் தக்கவைக்கும் நிலையிலேயே பதிவர்கள் இருக்கின்றார்கள்.. பத்திரிகையுலகத்தை விடவும் மிகுந்த சவால்கள் நிறைந்த இந்த பதிவுலகத்தில்.!

10/09/2010

மனித இனம் அழிந்தால்! -கற்பனையே


பொதுவாக எல்லோருக்கும் தோன்றும் எண்ணம்தான் இது. மதவாதிகள் கூட அடிக்கடி உலகம் அழியப்போகிறது.. என்று கூறி தேதிகளும் குறித்து விடுவார்கள்.

அப்படி மனிதர்கள் முழுதும் அழிந்துவிட்டால்( நீங்களும் நானும் மட்டும் மிச்சம் என்று வைத்துக்கொள்ளுங்களேன்..)
என்ன நடக்கும்?
1.மனிதர்கள் மறைந்த இரண்டாம் நாளிலிருந்து சாக்கடை முழுவதும் வெள்ளம் ஓடும். மழை பெய்யும். நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கும். அணைக்கட்டுகள் உடையும்.
2.கொசுக்கள்,பூச்சிகள் எண்ணிக்கை பெருகும்.
3.மனிதப்பேன் அழிந்துபோகும்..
4.மின்சாரம் நின்று உலகம் இருளில் மூழ்கும்.
5.ஒரு வாரத்தில் அணு உலை வெடிக்கும்.
6.நான்காமாண்டு சாலையெல்லாம் புல்பூண்டு முளைத்திருக்கும். அவினாசி சாலையில்கூட
7.கோயம்புத்தூர், மதுரையெல்லாம் அடர்ந்த பசுமைக்காடாக மாறியிருக்கும். சென்னை சவுக்கும் முட்புதர்களும் நிரம்பிய அதிசயக்காடாக இருக்கும்!!!
8.ஐந்தாம் ஆண்டு நகரங்கள் தீக்கிரையாகியிருக்கும்.
9.100 வது ஆண்டு கட்டிடங்கள் முழுவதும் தரைமட்டமாகிவிடும்.
10.வீட்டுவிலங்குகள் காட்டு விலங்குகளால் தின்னப்பட்டுவிடும்.
11.மனிதனால் ஏற்பட்ட உலக வெப்பமாதல் குறையும். 15000 ஆண்டில் உலகில் பனிசூழ ஆரம்பிக்கும். நீண்ட பனிக்காலம் உலகை பீடிக்கும்.
12.மனிதனின் இடத்தை பபூன் போன்ற வாலில்லாக்குரங்குகள் பிடிக்கும். அவற்றின் எண்ணிக்கை பெருகும். அவற்றிடையே மீண்டும் மனிதன் போல புத்திக்கூர்மையுடைய இனம் தோன்றும். அந்த இனம் உலகை ஆளலாம்.
அது விஞ்ஞானத்தில் முன்னேறி மின்சாரம், செல்போன் கண்டுபிடிக்கப்பட்டவுடன் சாவகாசமாக நீங்களும் நானும் பிறப்போம்!!!!!!!!!!..