தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

12/12/2010

ரவீந்திரநாத் தாகூர்




1941-ல் தமது 80-வது வயதில் காலமான ரவீந்திரநாத் தாகூர் தலைசிறந்த மகாகவி மட்டுமல்ல; சிறுகதை, நாவல், நாடகம், கட்டுரை ஆகியவற்றையும் திறம்படப் படைத்துள்ளார். இவர் உருவாக்கிய ரவீந்திர சங்கீதம் பிரசித்தமானது. தவிர, அவர் கைதேர்ந்த வண்ண ஓவியரும்கூட. கடைசி பதினேழு ஆண்டுகாலத்தில் அவர் தீட்டிய 3,000 நவீன பாணி ஓவியங்களும், வரைந்த கோட்டுச் சித்திரங்களும் கொல்கத்தா விஸ்வபாரதி அரங்கில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

1861 மே 7-ம் தேதி கொல்கத்தாவில் ஒரு செல்வந்த நிலச்சுவான்தாரின் கடைசி மகனாகப் பிறந்தவர் தாகூர். வீட்டிலேயே அறிவியல், கணிதம், இசை, ஓவியம், வடமொழி, வங்காளி, ஆங்கிலம் ஆகிய பல கலைகளைக் கற்றறிந்தார். எட்டாம் வயதில் கவிதை புனையத்தொடங்கினார். பதினைந்தாம் வயதில் அவர் எழுதிய சிறுகதை, வங்க சிறுகதைத் தொகுப்பு நூலில் வெளியாயிற்று.


வழக்கறிஞர் பட்டம் பெறுவதற்கு இங்கிலாந்து சென்ற அவர் அந்தப் படிப்புப் பிடிக்காமல் இரண்டே ஆண்டில் இந்தியா திரும்பினார். 1883-ல் திருமணம். ஆனால் 1902-ல் மனைவி மரணம். மறுமணம் செய்துகொள்ளவில்லை.


1901-ல் சாந்திநிகேதனில் ஓர் ஆசிரமப் பள்ளியை நிறுவினார். அதுவே பிற்காலத்தில் விஸ்வபாரதி பல்கலைக்கழகமாகப் பரிணமித்தது.


அவர் வங்க மொழியில் இயற்றிய ""கீதாஞ்சலி'' கவிதைத் தொகுப்பின் ஆங்கில மொழிபெயர்ப்பு 1913-ல் வெளியானது. அதற்காக இலக்கிய நோபல் பரிசு அதே ஆண்டில் வழங்கப்பட்டது.

ரவீந்திரநாத் தாகூரும் மகாத்மா காந்தியும் 20-ம் நூற்றாண்டின் தலைசிறந்த சிந்தனையாளர்களாகக் கருதப்படுகின்றனர். பல விமர்சகர்கள் அவ்விருவரையும் ஒப்பிட்டுப் பல்வேறு கோணங்களில் எழுதியுள்ளனர்.


1941 ஆகஸ்ட் 7 அன்று தாகூர் காலமானார். காந்திஜியின் தனிநபர் சத்தியாக்கிரகத்தில் ஈடுபடவிருந்த ஜவாஹர்லால் நேரு கைது செய்யப்பட்டு அப்போது சிறையில் இருந்தார். தாகூர் மறைவு பற்றித் தமது அன்றைய சிறை டயரியில் நேரு இவ்வாறு எழுதினார்:


"காந்திஜியும் தாகூரும்" ஒருவருக்கொருவர் முழுதும் மாறுபட்டவர்களாக இருப்பினும், நம் நாட்டில் தோன்றிய மகத்தான மனித வரிசையில் அவ்விருவருமே இந்தியாவின் ஆன்மாவைப் பிரதிபலிக்கின்றனர். ஏதோ குறிப்பிட்ட சீரிய பண்பு பொருந்தியவர்கள் என்றில்லாமல் இன்றளவில் உலகிலுள்ள சிறப்புமிக்க மாமனிதர்களின் பொதுத் தோற்றத்தில் காந்தியும் தாகூரும் தலைசிறந்தவர்கள் என்பதே எனது கணிப்பு. அவ்விருவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புப் பெற்றது நான் பெற்ற பெரும் பேறு''.
காந்திஜி தார்மிகம் செறிந்த அரசியல்வாதி. ஆனால், தாகூர் அரசியலிலிருந்து விலகியே நின்றார் என்று சொல்வாருண்டு. அது அவ்வளவு சரியல்ல. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தாகூர் நேரடியாகப் பங்குகொண்டதில்லை என்றபோதிலும், 1905-ல் வைஸ்ராய் கர்ஸன் பிரபு வங்கத்தை இரு தனி மாகாணங்களாகப் பிரிவினை செய்ததை எதிர்த்து வங்க மக்கள் திரண்டெழுந்து அவ்வெழுச்சி தேசிய இயக்கமாக உருவெடுத்தபோது அப்போராட்டத்தில் ரவீந்திரநாத் தாகூர் தீவிரமாகக் கலந்துகொண்டார்.
1913-ல் நோபல் பரிசு வழங்கப்பட்டதை அடுத்து, பிரிட்டிஷ் உயர் அரசாங்கம் 1915-ல் தாகூருக்கு "ஸர்' பட்டம் அளித்துக் கௌரவித்தது. 1919 ஏப்ரல் 13 அன்று அமிர்தசரஸ் ஜாலியன் வாலாபாக் மைதானத்தில் கூடியிருந்த அப்பாவி மக்களின் மீது ஆங்கிலேய ராணுவ ஜெனரல் டயர் உத்தரவின் பேரில் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நிகழ்ந்து நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

நாட்டைப் பதறச் செய்த அந்தப் படுகொலையைக் கடுமையாகச் சாடிய தாகூர், தமக்கு முன்னர் அளிக்கப்பட்ட "ஸர்' பட்டத்தை உடனடியாகத் துறந்தார். ஆனால் அச்சமயம் ஜாலியன் வாலாபாக் படுகொலையைக் கண்டித்து மகாத்மா காந்தி எவ்வித அறிக்கையும் வெளியிடவில்லை; 1915-ல் தமக்கு பிரிட்டிஷ் அரசாங்கத்தால் அளிக்கப்பட்ட கெய்ஸர் -இ - ஹிந்த் தங்கப் பதக்கத்தையும் துறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பிரிட்டிஷ் அரசாட்சிக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கத்தை 1920 ஆகஸ்ட் முதல் தேதி காந்திஜி தொடங்கி வைத்தபோதுதான் தமக்கு முன்பு அளிக்கப்பட்டிருந்த கெய்ஸர் - இ - ஹிந்த் பதக்கத்தையும், தென்னாப்பிரிக்காவில் போயர் யுத்தம் மற்றும் ஜூலு புரட்சியின் போது புரிந்த ராணுவ மருத்துவ சேவைகளுக்காகவும் அளிக்கப்பட்ட பதக்கங்களையும் காந்திஜி துறந்தார்.
காந்திஜியின் மீது குருதேவ் தாகூர் தனிப்பட்ட முறையில் பெருமதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார். இந்தியாவுக்கு அரசியல் ரீதியாகத் தலைமை தாங்கி மக்களை வழிநடத்திச் செல்ல காந்திஜி ஒருவர் மட்டுமே முற்றிலும் தகுதி வாய்ந்தவர். தம்மால் அது இயலாது என்று தாகூர் நன்கு அறிந்திருந்தார். 1916-ம் ஆண்டிலேயே காந்திஜியை "மகாத்மா' என்று குறிப்பிட்டு, அந்தப் பட்டத்தைப் பிரபலப்படுத்தியவரும் ரவீந்திரநாத் தாகூர்தான்.


இவ்வாறாயினும், இவ்விரு மாமனிதருக்கிடையே ஆழ்ந்த கருத்து வேறுபாடுகள் இருந்து வந்தன. அவற்றைப் பற்றி தாகூர் வெளிப்படையாகவே கண்டனம் எழுப்பினார். சுதந்திரப் போராட்டத்தில் வரம்புகடந்த தேசிய ஆர்வத்துக்கும், குறுகிய தேச பக்திக்கும் முக்கியத்துவம் அளிப்பதை தாகூர் ஏற்கவில்லை.


விஞ்ஞானி சந்திர போஸின் மனைவி அபலா போஸýக்குத் தாகூர் 1908-ம் ஆண்டில் எழுதிய கடிதத்தில், ""குறுகிய தேசிய மனப்பான்மை அல்லது நாட்டுப்பற்று நமது ஆன்மிக உயர்வின் புகலிடமாக இருக்க மாட்டாது. மானிட வர்க்கம் முழுவதுமே நமது அடைக்கலம் ஆகும். வைரத்துக்கான விலையைக் கொடுத்து வெறும் கண்ணாடிக் கற்களை நான் வாங்கத் தயாரில்லை. மானிட வர்க்கத்துக்கு எதிராகக் குறுகிய தேசபக்தி ஜெயகோஷம் போடுவதை நான் ஒருக்காலும் ஏற்க மாட்டேன்'' என்று கூறியுள்ளார். பின்னர் ஒத்துழையாமை இயக்கத்தின்போது தேசியம் என்று கூக்குரலிட்டுப் பாமர மக்களை ஆட்டுமந்தைபோல் தலைவர்கள் இட்டுச் செல்வதையும் கடுமையாகச் சாடினார்.


கைராட்டையின் பெருமையையும் நூல் நூற்பதன் அவசியத்தையும் காந்திஜி திரும்பத் திரும்ப வலியுறுத்திக் கூறி வருவதை தாகூர் கண்டித்தார். ""மாடர்ன் ரிவ்யூ'' (செப்டம்பர் 1928) இதழில் ""சர்க்கா வழிபாடு'' என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் தாகூர் இவ்வாறு சாடினார்:

""கைராட்டையை அதன் குறிப்பிட்ட தகுதிக்கு மேல் உயர்த்திப் பிடிப்பதை எனது பகுத்தறிவும் மனசாட்சியும் ஏற்கவில்லை. சர்க்காவுக்கு அளவுக்கு மீறி முக்கியத்துவம் கொடுப்பதால் இந்திய மறுமலர்ச்சிக்குப் புரிய வேண்டிய அதிமுக்கிய பணிகளில் கவனம் செலுத்த இயலாமற் போய்விடும். செக்குமாடுபோல் சர்க்காவை ஒரே மந்த கதியில் சுழற்றிக் கொண்டிருப்பது சாவு போன்ற வெறுமையே ஆகும்; அது புத்தி மழுங்கச் செய்யும் காரியம் என்பதே எனது துணிபு.''


இந்தக் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்து ""கவியும் சர்க்காவும்'' என்ற தலைப்பில் காந்திஜி தமது ""யங் இந்தியா'' (5-11-1925) வாராந்திரியில் எழுதிய கட்டுரையின் சாராம்ச வாசகம் இதுதான்:


""மகாகவியின் கண்டன விமர்சனம் கவிதா ரூபமாய் மிகைப்படுத்தி வர்ணிப்பது என்ற வகையில் அவரது உரிமையாம். அதனை நான் எதிர்ப்பதற்கில்லை. ஆயினும், ஒரே மாதிரியான கைராட்டையின் சுழற்சி, சாவு போன்ற வெறுமைக்கு ஒப்பானது அல்லவே அல்ல. பார்க்கப் போனால் சூரியனும் கிரகங்களும் ஒரேமாதிரியான இயந்திரகதியில்தான் இயங்குகின்றன. பாதை தவறினால் அதோ கதிதான்...


தினந்தோறும் அரைமணி நேரமேனும் ஓர் யக்ஞமாக அனைவரும் நூல் நூற்க வேண்டும் என்றுதான் கூறி வருகிறேன்; நாள் முழுதும் அல்ல. கிராமப்புறங்களில் மக்கள் வேலையின்றி சோம்பித் திரிவதை அகற்றி, ஏழைகளின் பொருளாதாரத்துக்கு ஓரளவு வருவாய் ஈட்டித்தரும் சாதனமே கைராட்டை. கிராமாந்திரங்களில் சர்க்கா நிலைபெற்றால், பொருளாதாரம், சுற்றுச்சூழல், சுகாதாரம், கால்நடை பராமரிப்பு எல்லாமே மேம்படும்'' என்றெல்லாம் காந்திஜி வாதித்தார்.


இத்தகைய கருத்து மோதல்களுக்கிடையேயும் காந்திஜியும் தாகூரும் ஒருவருக்கொருவர் பெருமதிப்புடன் கடைசிவரை நேசம் பாராட்டி வந்தனர்.


""மனிதாபிமானி காந்தி'' என்ற தலைப்பில் தாகூர் 1938-ல் எழுதிய கட்டுரையில் காந்திஜியைக் கீழ்க்கண்டவாறு புகழ்ந்துள்ளார்.


""காந்திஜி அரசியல்வாதி. சிறந்த நிர்வாகி. மக்களின் பெருந்தலைவர். தார்மிக சீர்திருத்தவாதி என்ற சிறப்புகள் ஒருபுறமிருக்க, இவற்றுக்கெல்லாம் மேலாக இவைசார்ந்த அன்னாரது நடவடிக்கைகள் எதுவுமே மானிட வர்க்கத்தின்பால் அவர் கொண்டுள்ள அன்பையும் அருளிரக்கத்தையும் கட்டுப்படுத்தவில்லை. மாறாக, அப் பேரன்பு அவரது அனைத்துச் செயல்பாடுகளுக்கும் உத்வேகம் அளிக்கிறது.''


ரவீந்திரநாத் தமது பிற்கால வாழ்வை சாந்திநிகேதன் பள்ளியையும் விஸ்வபாரதி அமைப்பையும் மேம்படுத்துவதன் பொருட்டே அர்ப்பணித்தார்.


1941 ஆகஸ்ட் 7 அன்று தாகூர் மறைந்ததையொட்டி மகாத்மா காந்தி வெளியிட்ட இரங்கல் செய்தியில், ""ரவீந்திரநாத் தாகூரின் மரணத்தில் நாம் இந்தச் சகாப்தத்தின் மிகச்சிறந்த கவியை மட்டும் இழக்கவில்லை; அபரிமித மனிதாபிமானியையும், ஆர்வமிக்க தேசியவாதியையும் இழந்துவிட்டோம்.


அவரது சக்திமிக்க தனித்தன்மை, தடம் பதிக்காத பொது நடவடிக்கை ஏதுமில்லை. சாந்திநிகேதனத்திலும் ஸ்ரீநிகேதத்திலும் நம் நாடு முழுவதற்கும், ஏன், இவ்வையகம் முழுவதற்கும் ஓர் மரபுரிமைச் செல்வத்தை அளித்துச் செல்கிறார்'', என்று அஞ்சலி செலுத்தினார்.


தாகூர் 1911-ல் புனைந்த ""ஜன கண மன...'' பாடல் இந்தியா சுதந்திரம் பெற்றபின் இந்திய தேசிய கீதமாக ஏற்கப்பட்டது மிகப் பொருத்தமே ஆகும். 1972-ல் கிழக்குப் பாகிஸ்தான் பங்களாதேஷ் என்ற தனிநாடாகப் பிரிந்த பின் தாகூர் முன்பு எழுதிய ""அமர் சோனா பங்களா...'' என்ற பாடல் அந்நாட்டின் தேசிய கீதமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. உலகின் இரு தனித்தனி நாடுகள் ஒரே கவியின் பாடலைத் தங்கள் தேசிய கீதமாக வரித்தது மகாகவி தாகூரின் பெருமைக்கு ஓர் எடுத்துக்காட்டு.

12/11/2010

எப்படி மாறும் அரசியல்

               அரசியல்னா சாக்கடை அதை சுத்தம் செய்ய முடியாது. இதுதான் பெரும்பாலானவர்கள் சொல்லும் கருத்து.
             நமக்கு எல்லாம் காமராசர் மாதிரி தலைவர் வேணும் . எப்படி ? அம்மாவுக்கு மின்விசிறி, போர்வை வேணும்னா , ரெண்டும் எதுக்கு ஒரே நேரத்துல? ஒண்ணுதான் வாங்கி தர முடியும்னு சொல்ற மாதிரி ஒரு தலைவர். தன்னலமே இல்லாம உழைக்கும் ஒரு தலைவர்.(எங்கோ படித்தது)


ஆனா நாம  எப்படி இருப்போம். ஒருத்தன விட காசு இன்னோருத்தவன் கொடுத்தா அங்க வேலைக்கு(வோட்டும்) போவோம். ஒரு ஃப்ளாட் , கார், 29 இன்ச் கலர் டீவி , வித விதமா செல் போன் இதெல்லாம் நமக்கு வேணும். அது மட்டும் இல்லாம வீக் எண்ட்ல வீட்ல ஒரு நாள் நல்ல தூக்கம், ஒரு நாள் ஷாப்பிங்னு இருக்கனும். சுயநலத்தின் மொத்த உருவமா நாம இருப்போம். ஆனா நமக்காக உழைக்க ஒரு தியாகி நமக்கு வேணும். என்னங்கடா விளையாடறீங்களா? நண்பரே


படிக்காதவனுக்கு இலவச பொருட்களை கொடுத்து அரசியல் கட்சிகள் ஏமாத்துதுனு வாய் கிழிய பேசுவோம் . பழியெல்லாம் எழுத படிக்க தெரியாதவன் பேர்ல போட்டுடுவோம். தமிழ் நாட்டோட Literacy rate 73%. அப்ப எழுத படிக்க தெரிஞ்சவனெல்லாம் ஒழுங்கா ஓட்டு போட்டாலே நிச்சயம் நிலைமை மாறும்.


ஆனா எலக்ஷனப்ப ஓட்டு போட சொல்லி லீவ் கொடுத்தா வீட்ல உக்கார்ந்து ஜாலியா டீவி பார்ப்போம் இல்லைனா சொந்த வேலைகளை பார்ப்போம் . கேட்டா , வாக்காளர் அடையாள அட்டை இல்லை , ரொம்ப நேரம் லைன்ல நிக்கனும்னு நொண்டி சாக்கு சொல்லுவோம். லைசன்ஸ் எடுக்க எடுக்கற முயற்சியிலயோ இல்லை பாஸ்போர்ட் வாங்க எடுக்கற முயற்சியிலையோ பாதிக்கூட முயற்சி செய்ய மாட்டோம். திருப்பதில ஒரு நாள்கூட க்யூல நிப்போம். அதே எலக்ஷன்ல ஓட்டு போட நிக்க மாட்டோம்.. கேட்டா நான் ஒருத்தவன் போடற ஓட்டால பெருசா என்னத்த ஆகிட போகுதுனு ஒரு சப்ப காரணம் சொல்லுவோம் .


வீட்ல உக்கார்ந்து நொண்டி நியாயம் பேசிட்டு அரசியல்வாதி நல்லவனா இருக்கனும், படிக்காத மக்களுக்கு விழிப்புணர்ச்சி வரணும் இப்படி கண்டத பேசுவோம். ஆனா அதே நேரம் தெருவுல நம்ம வீட்டுக்கு முன்னாடி இருக்கற குப்பையை கூட கொண்டு போய் ஒரு குப்பை தொட்டில போட மாட்டோம்.


வாங்கற எந்த பொருளுக்கும் பில் போட்டு வாங்க மாட்டோம். பில் போட்டா ஒரு ரூபாய், ரெண்டு ரூபாய் அதிகமாகும்னு கடைக்காரன் சொன்னா சரி வேண்டாம்னு சொல்லிடுவோம். இல்லைனா பில் போட 5 நிமிஷமாகும்னு சொன்னா வேணாம்னு சொல்லிடுவோம். நம்ம பண்ற சின்ன சின்ன தப்பெல்லாம் நமக்கு தப்பாவே தெரியாது. அதை பத்தி நாம ஒரு நிமிஷம் கூட கவலைப்பட மாட்டோம் .


எத்தனை பேர் நியாயமா வரி கட்டறோம்? எப்படி எல்லாம் அரசாங்கத்தை ஏமாத்த முடியுமோ அப்படியெல்லாம் ஏமாத்துவோம் . வாங்கற போருள் எதுக்கும் பில் வாங்காம கடைக்காரன் ஏமாத்தவும் உறுதுணையா இருப்போம் . இப்படி இருக்கற நாம கருணாநிதி சுயநலவாதி , ஜெயலலிதா சர்வாதிகாரினு வாய்கிழிய பேசுவோம்.


ரோட்ல கிடக்கற ஒரு வாழைப்பழ தோலைக்கூட எடுத்து குப்பைத்தோட்டில போடாத அளவுக்கு சமூக அக்கறை கொண்ட நமக்கு, ஒரு ரூபாய், ரெண்டு ரூபாய்க்காக (ஒரு நிமிடம், இரண்டு நிமிடத்திற்காக ) நேர்மையை இழக்கும் நமக்காக, தலைவர்கள் என்ன வானத்துல இருந்தா வருவாங்க?


அவுங்க அவுங்க தன்னால முடிஞ்ச அளவுக்கு பிரச்சனையில்லாத அளவுக்கு ஏமாத்தறோம். அவ்வளவுதான்.


படிச்சவன் எல்லாம் சாலைவிதிகளை கடைபிடித்தால், குப்பைகளை சரியான இடத்தில் போட்டால் அதை விரைவில் அனைவரும் பின்பற்ற ஆரம்பித்துவிடுவார்கள். வீட்ல உக்கார்ந்து கேவலமான டீவி சீரியல் பாக்கற நேரத்துல, அரட்டை அரங்கம், டாப் டென் பாக்கற நேரத்துல ஒரு தெருவுல இருக்கவங்க எல்லாம் சேர்ந்தா அந்தா தெருவையே சுத்தப்படுத்திடலாம்.


அதுமட்டுமில்லாம அரசாங்கம் தான் செய்யனும்னு இல்லாம தெருல இருக்கற பசங்களுக்கோ இல்லை டியூசன் போய் படிக்க வசதியில்லாத பசங்களுக்கோ பாடம் சொல்லி கொடுக்கலாம், தெருவுல செடி நடலாம். இன்னும் எவ்வளவோ பண்ணலாம் . எல்லாரும் ஒரு நாளைக்கு ஒரு ஒரு மணி நேரம் வெட்டி நியாயம் பேசறத நிறுத்திட்டு வேலை செஞ்சா கண்டிப்பா எல்லாத்தையும் மாத்தலாம். அது இல்லாம நமக்காக உழைக்க ஒரு தலைவன் வருவான், அவன் வாழ்க்கையை தியாகம் பண்ணுவானு, வானத்தையே பாத்துட்டு இருந்தா ஒரு மண்ணும் நடக்காது .


நாடுனா தலைவன் இல்லப்பா, மக்கள் தான் ... மக்கள்னா வேற யாரும் இல்லை . நாமதான் ...
இது எனக்கும் தான் .....

குறிப்பு : என் நண்பர் ஒருவர் எப்போ பேசினாலும் ,நாட்டில இது சரியில்லை என பேசி தான் சரியானவான் தான் என வாதிடுவார் அவரை போல் பல பேரின் எண்ணத்துக்கு என பதிவு.....

12/10/2010

அத்வானி

      என்னுடைய பள்ளிக்காலத்தில் எனக்கு  தெரிந்த அரசியல் 
தலைவர்களில் முக்கியமான மனிதர் .




                  நான் ரெண்டு மூன்று வாரங்கள் சென்றிருப்பேன். பிறகு, இன்னொரு கோஷ்டியுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாட சென்றுவிட்டேன். அத்வானியும் என்னைப் மாதிரித்தான் போல. கொஞ்சம் வித்தியாசம். கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தவரை, ஷாகாவுக்கு அவரது கல்லூரி நண்பர் அழைத்து செல்ல, அதன் பின் ஆர்.எஸ்.எஸ்., அரசியல், பாரதிய ஜனதா, பாபர் மசூதி, துணை பிரதமர், பிரதமர் வேட்பாளர் என்று எங்கெங்கோ சென்று, இன்றும் தினமும் பேப்பரில் அவர் பெயர் அடிப்பட்டுக்கொண்டிருக்கிறது. கர்நாடகா ஆட்சி போன்ற தீவிர பிரச்சினைக்களுக்கு அவர் உதவி, பாஜகவுக்கு இன்னமும் தேவைப்பட்டுக் கொண்டிருக்கிறது. நான் அதை பேப்பரில் படித்து கொண்டிருக்கிறேன். அத்வானி பற்றி புத்தகங்களில் படித்துக்
கொண்டிருக்கிறேன்.


ஆர். முத்துக்குமாரின் ’அத்வானி’ புத்தகத்தில் இருந்து அத்வானி பற்றி நிறைய தெரியாத தகவல்கள் தெரிந்து கொண்டேன். இப்போதைய பாகிஸ்தானில் அப்போது பிறந்தார் என்று தெரியும். ஆர்.எஸ்.எஸ். பேக்கிரவுண்ட் தெரியும். பிறகு பாஜக கட்சியில், ஆட்சியில் அவருடைய பங்கை பற்றி அவ்வப்போது செய்திதாள்களில் படித்திருக்கிறேன். ஆர்.எஸ்.எஸ் டூ பாரதிய ஜனசங்கம், பாரதிய ஜனசங்கம் டூ ஜனதா மோர்ச்சா டூ ஜனதா, ஜனதா டூ பாரதிய ஜனதா என்கிற அவரது அரசியல் பாதையை, இந்த புத்தகத்தில் தான் விளக்கமாக படித்து  வருகிறேன்.


நான் சிறுவயதில் இருந்தே ஆர்.எஸ்.எஸ். சம்பந்தப்பட்ட விசயங்களை தெரிய முயற்சித்தேன்  . அதனால் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை ஒரளவுக்கு தொடர்ந்து கவனித்து வருகிறேன். நான் எதுவாக இருந்தாலும், அதில் உள்ள நல்ல விஷயங்கள், பாஸிட்டிவ் சமாச்சாரங்களைத்தான் முதலில் கவனிப்பேன்.


ஆர்.எஸ்.எஸ். இல் அப்படி நான் கண்ட சில நல்ல விஷயங்கள். விளையாட்டிற்கு கொடுக்கும் முக்கியத்துவம். தேசப்பக்தி. எதிலும் ஒரு ஒழுங்கு. இதில் தேசப்பக்தி என்பது தான் பிரச்சினைக்குரியது. அதற்கு முன் ஒழுங்கைப் பற்றி நினைவுக்கு வரும் நிகழ்ச்சி. அவர்கள் நடத்திய ஒரு விநாயகர் சதுர்த்தி பூஜையில் கலந்துக்கொள்ள சென்றிருந்தேன். அரங்கத்திற்கு வெளியே காலணிகளை கழற்றிவிட்டு செல்ல வேண்டும். அந்த காலணிகளை அவர்கள் வரிசையாக அடுக்கி வைத்திருந்த அழகை பார்த்து அசந்துவிட்டேன். நீள நீளமாக, நிறைய இடங்களை எடுத்துக்கொண்டு எந்த குழப்பமும் இன்றி அருமையாக இருந்தது. அவ்ளோத்தான், ஒழுங்கு பற்றி.

இதன் முக்கியக் கொள்கை கலாச்சார தேசியவாதம் எனப்படுகிற முழு மனிதப்பற்றைக் கொண்டு உயிரான, தனித்துவம் மற்றும் நன்னெறிகளைக் கொண்ட பாரம்பரிய இந்தியாவிற்கு புத்துயிர் அளிப்பது. தேசத்துக்கு சேவை செய்வதை அன்னை இந்தியாவுக்கு (பாரத மாதா) சேவை செய்வதாகக் கொண்டு இந்தியாவை தன் தாய் நாடாக நினைத்து அதை பாதுகாப்பது.



தேசப்பக்தி. இதில் என்ன பிரச்சினை என்றால், இந்தியா என்பது ஹிந்துக்களுக்கான தேசம் என்ற கருத்து. தேசத்தின் மீதான பக்தி என்பது முழுக்க முழுக்க ஹிந்துத்துவா மீதான பக்தியாகும்போது, பிரச்சினை கிளம்புகிறது. மற்ற மதத்தினரின் மேல் வன்மம் காட்டும்போது, அவர்களிடம் இருக்கும் பாஸிட்டிவ் எல்லாம் நெகடிவ் ஆகிவிடுகிறது.


ஹீரோ ஆகவேண்டிய அத்வானி வில்லனாகுவதும் இதனால் தான். ஸ்வயம் சேவக் என்கிற கான்செப்ட்டே அருமையானது.


”சுயமான ஊக்கத்துடன், சுயமான விருப்பத்துடன் தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொண்டு தன்னலத்தைத் தியாகம் செய்கின்ற உணர்ச்சியைப் பெற்றவனே ஸ்வயம் சேவக். அவன் தேசியப்பார்வை கொண்டவன். தேச முன்னேற்றமே அவனுடைய லட்சியம். இனி என்னுடைய வாழ்க்கை தேசத்துக்குத் தொண்டு செய்வதற்காகவே எஞ்சியுள்ளது என்று நினைப்பவன்.”


இதைத்தான் லட்சியமாகக் கொண்டு செழிப்பான குடும்பத்தில் பிறந்த அத்வானி, கரடுமுரடான பாதையை தேர்ந்தெடுத்தார். இயக்கத்திற்கு உறுதுணையாக அரசியல் பாதையை எடுக்கும்போதும் பிரச்சினையில்லை. இந்திராவின் அராஜகத்திற்கு எதிராக போராடியபோதும் பிரச்சினையில்லை. ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற, ஹிந்து ஓட்டுக்களை ஒரு சேர கவர, அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகளில் தான் பிரச்சினைகள். அது அவருக்கு வெற்றிகளை கொண்டுவந்தாலும், மனிதாபிமானத்தை வெகுதூரம் விரட்டிவிட்டது.


ஹிந்து ஓட்டுக்களைக் அப்படி சிந்தாமல் சிதறாமல் எடுக்க, அவர் போட்ட கணக்குத்தான் பாபர் மசூதி பிரச்சினை. புத்தகத்தின் ஆரம்பத்திலேயே, அயோத்தி சம்பவத்தை லைவ்வாக எழுத்தில் கொண்டு வந்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் ஆசிரியர். இதற்காக அத்வானி நடத்திய ரதயாத்திரை, கரசேவை போன்றவை அடுத்த வந்த தேர்தல்களில், பிரமாதமான ஓட்டு சதவிகிதத்தை பெற்று தந்தது. இங்கு குற்றவாளி ஒருவர் மட்டுமில்லை. மத ரீதீயாக அத்தனை சதவிகித மக்கள் ஆதரவு கரம் நீட்டியிருக்கிறார்கள். மதவாதிகளுக்கு இவர் முகத்தையும், மிதவாதிகளுக்கு வாஜ்பாய் முகத்தையும் காட்டி ஆட்சியை பிடித்தது தான் உச்சம். அதற்கு பிறகு இறங்கு முகம் தான்.


அதிகாரத்திற்கு வருவதற்கு முன்புவரை இரும்பு மனிதராக காணப்பட்டவர், ஆட்சிக்கு பிறகு பலவீனமானவராகவே காட்சியளிக்கிறார். இதற்கு காரணம், பல விஷயங்களில் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாததே. முக்கியமாக, தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள். கந்தஹார் விமான கடத்தல், நாடாளுமன்ற தீவிரவாத தாக்குதல்... எக்ஸ்ட்ரா... எக்ஸ்ட்ரா... ஆட்சியில் இல்லாதபோது, தீவிரவாதிகளின் மிரட்டலுக்கு சலனப்பட கூடாது என்றவர் அத்வானி. ஆனால், அவரே உள்துறை அமைச்சராக இருந்தபோது, தாலிபான் தீவிரவாதிகளின் மிரட்டலுக்கு அடிபணிந்து சிறையில் இருந்த தீவிரவாதிகளை விடுவிக்கவேண்டி வந்தது.


இப்படி ஸ்வயம் சேவக் முதல் உள்துறை அமைச்சர், துணை பிரதமர், பிரதமர் வேட்பாளர் என அத்வானியின் பலமுகங்களை எடுத்து காட்டியிருக்கிறார் ஆசிரியர் ஆர்.முத்துக்குமார். இவர் ஏற்கனவே இந்திரா பற்றிய புத்தகம் எழுதியிருப்பதாலோ என்னவோ, இந்திரா பற்றிய அத்தியாயங்களை மிகவும் விரிவாக எழுதியிருக்கிறார். இதனால், படத்தின் நடுவே சில ரீல்களில் காணாமல் போகும் ஹீரோவை போலாகிறார் அத்வானி. அத்வானி திருமணம் செய்துக்கொள்வதற்கு மறுப்பு தெரிவித்ததாக ஒரு அத்தியாயம் முடிந்திருந்தது. ஆனால், அதற்கு பிறகு அவர் திருமணம் செய்துகொண்டது பற்றி எதுவும் சொல்லவில்லை. அத்வானியுடன் பிரச்சாரங்களில் பங்குபெறும் அவர் குடும்ப உறுப்பினர்கள் பற்றியும் எதுவும் சொல்லப்படவில்லை.


இந்த புத்தகம் எனக்கு அத்வானி என்கிற அரசியல் தலைவரின் வரலாறு என்பதாக மட்டுமில்லாமல், ஜனநாயக இந்தியாவின் முக்கிய அத்தியாயங்களை புரட்டிப்பார்க்கும் வாய்ப்பை அளிக்கும் புத்தகமாகவும் இருந்தது. குறிப்பாக, எமர்ஜென்சி, மதவெறி அரசியல். தவிர, இந்திரா காந்தி, சஞ்சய் காந்தி, வி.பி.சிங், சரண் சிங் என வேறு பல அரசியல்வாதிகளின் குணாதிசயங்கள் (அப்படி குறிப்பிடத்தக்க வகையில் கவர்ந்தது - அத்வானியை துணிச்சலாக கைது செய்த லாலுவின் ஹீரோயிசம்). சுதந்திர இந்தியாவின் முக்கிய கட்சியும், காங்கிரஸை தவிர நிலையான ஆட்சியை கொடுத்த ஒரே கட்சியுமான பாரதிய ஜனதாவின் வளர்ச்சியை புரிந்துக்கொள்ளவும் உதவும் புத்தகம் இது. இன்னும் அதை விரிவாக படித்து உங்களுடன் இந்து சமுதாயத்தை பற்றியும் மற்றொரு பதிவில் ....

நன்றி : ஆர் .முத்துக்குமார் ஆசிரியர்

12/09/2010

உயிரில் கலந்து வைத்தேன்.......

காகிதத்தில் எழுதிவைத்தால்
கரையான் அரித்து விடும்.
உடம்பில் குத்தி வைத்தால்
மண்ணோடு மறைந்து விடும்.
கல்வெட்டில் பதித்து வைத்தால்
காலம் அழித்து விடும்.
நட்சத்திரங்கள் ஒன்று சேர்த்து
வானில் கூட எழுதி வைப்பேன்...
பாவம்!


அற்ப ஆயுள் தான் அவற்றிற்கும்.
அது சரி,
காட்சிப் பொருளா நீ?


கண்ட இடத்தில் எழுதி வைக்க!
அதனால் தான் அன்பே,
உன்னை
என் உயிரில் கலந்து வைத்தேன்

12/08/2010

சூரியன் vs இலை

                  

               வலையுலகில் கடந்த சில நாட்களாக தி.மு.கவிற்கு எதிரான பதிவுகள் தொடர்ந்து பதிவிடப்படுகிறது ஏன் இந்த வலைத்தளத்தில் கூட சென்ற  பதிவுகளை தி.மு.க அரசுக்கு எதிராக பதிவிட்டு இருந்தேன். ஆனால் இது போன்ற பதிவுகள் எல்லாம் அ.தி.மு.க வுக்கு ஆதரவாக மாறுகின்றது என்று நினைக்கும்போது வேதனையாக உள்ளது. இப்போதிருக்கும் நிலையில் தி.மு.க அரசு அகற்றப்படவேடிய, புரம்த்தள்ளப்பட வேண்டிய ஒரு அரசுதான் ஆனால் அந்த இடத்தில் அ.தி.மு.கவை அமரவைக்கவேண்டும் என்றால் அதற்க்கு தி.மு.க வே பரவாயில்லை என்றுதான் தோன்றுகிறது காரணம் கடந்த காலத்தில்
அ.தி.மு.க வின் ஆட்சியில் நடந்த சாதனைகள் தான்.


       தமிழர்களுக்குள் இருக்கும் ஒரு கெட்ட பழக்கம் மறதி , நம் சிறுவயதில் நடந்த சம்பவங்களை எல்லாம் ஞாபகம் வைத்திருப்போம் ஆனால் ஆட்சியாளர்கள் செய்த தவறுகளை ஐந்தாண்டுகளில் மறந்து விடுகிறோம். இந்த மறதியால் நாம் எந்த ஆட்சியாளர்கள் வேண்டாம் என்று விரட்டியடித்தொமோ அவர்களே மீண்டும் ஆளும்கட்ச்சியால் உருவாகும் எதிர்ப்பலைகளை பயன்படுத்தி ஆட்சியில் அமர்ந்து விடுகின்றனர். இந்த முறையாவது அது நடந்து விடக்கூடாது என்பதுதான் எனது ஆசை. சரி அ.தி.மு.க ஆட்சியில் அப்படி என்னதான் நடந்தது, நீங்கள் மறந்ததை நினைவூட்டுகிறேன் பாருங்கள்.


அ.தி.மு.க ஆட்சிகாலத்தில் நடந்தவை:


☼ தனது ஆட்சி காலத்தில் தொண்டன் முதல் அமைச்சர் வரை யாராக இருந்தாலும் தன் காலில் விழவேண்டும்(வயதில் தன்னைவிட முதிர்ந்தவராக இருந்தாலும்). புதிதாக பதவி ஏற்ற சட்டமன்ற சபாநாயகர் சட்டமன்ற வளாகத்திலேயே தன் காலில் விழ வைத்து சட்டசபையின் கவுரவத்தை கெடுத்தது.


☼ ஒரே கையெழுத்தில் ஒன்றரை லட்சம் அரசு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியது.

☼ சாலைப்பணியாளர்களை  டிஸ்மிஸ் செய்தது.


☼ அரசுபணியாளர்களை இரவில் வீடு புகுந்து கைது செய்தது.

☼பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்டது.

☼வாஸ்த்துப்படி புது சட்டசபையை ராணி மேரி கல்லூரியை இடித்ததுதான் கட்ட வேண்டும் என்று முடிவு செய்தது. அதற்க்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவிகளை கைது செய்தது.

☼கண்ணகி சிலையை அகற்றியபோது தமிழர்களிடம் எதிர்ப்பு கிளம்பியும் அதற்க்கு செவி சாய்க்காதது.

☼தனக்கு பிடிக்காதவர்கள் மேல் பொய்வழக்கு,பொடா  , கஞ்சா வழக்கு போட்டது.

☼பொதுநல பணித்துரையினரை டிஸ்மிஸ் செய்தது.


☼ கிறிஸ்த்தவர்களுக்கு எதிராக மதமாற்ற தடை சட்டம்.


☼ வேலைநிறுத்தத்தில் ஈடுப்பட்டிருந்த அரசு ஊழியர்களை பேச்சு வார்த்தைக்கு அழைக்காமல் அதே வேலைக்கு தற்காலிமாக ஊழியர்களை(ஓட்டுனர்களை) நியமித்து தனியார் நிறுவனம் போல் ஊழியர்களை மிரட்டியது.


☼ பலநூறு கோடிகளில் இதுவரை உலகமே கண்டிராத வகையில் தன் வளர்ப்பு மகனுக்கு ஆடம்பர திருமணம் செய்தது.


☼ கிலோ கணக்கில் தங்கம்,வெள்ளி நகைகள்(தங்கத்தாரகை), சொத்துகுவிப்பு வழக்கு நிலுவையில் உள்ளது.


☼கள்ள சாராயத்தை கட்டுப்படுத்த முடியாமல் ஐரோப்பிய நாடுகள் பாணியில் அரசு சார்பில் குறைந்த விலைக்கு மதுபானம் அறிமுகம் செய்தது.இதில் புதிதாக இளைஞர்கள் கவரப்படுவார்கள் என்று சற்றும் கவலைப்படாதது( எனது பள்ளிகாலத்தில் என்னுடன் படித்த நண்பர்கள் குறைந்த விலைக்கு கிடைப்பதால் அடிக்கடி இந்தமதுபானத்தை குடித்துதான் பலக்கப்பட்டார்கள்)


☼ டான்சி அரசு நிலங்களை தன் பெயரில் குறைந்த விலைக்கு வளைத்து போட்டது. உச்சநீதிமன்றம் எதிர்ப்பு தெரிவித்தபின் தன்னுடைய கையெழுத்தையே தன்னுடையது இல்லை என்று போய் சொன்னது. மாட்டிக்கொண்ட பின் டான்சி நிலங்களை மீண்டும் அரசிடமே ஒப்படைத்தது.


☼நெசவாளர்களுக்கு கஞ்சித்தொட்டி, விவசாயிகளுக்கு எலிக்கறி ( ஆனால் இது எதிர்க்கட்சியினரின் சதி என கூறப்பட்டது)


☼இன்று தமிழக அரசே மதுபான கடைகளை நம்பி தான் உள்ளது. இதற்க்கு காரணம் இவர்கள் ஆட்சியில் எடுக்கப்பட்ட முட்டாள்தனமான முடிவுதான்(சாராய கடைகள் அரசே எடுத்து நடத்தியது).


☼ மூன்று கல்லூரி மாணவிகளை எரித்தது எல்லோருக்கும் தெரிந்ததே ஆனால் குற்றவாளிகளுக்கு அ.தி.மு.க சார்பில் மேல் முறையீடு செய்தது.


☼ சென்னை மேயர் பதவி அ.தி.மு.க வசம் வந்தபின் எந்த ஒரு மக்கள் நலப்பனியையும் செய்யவிடாமல் தடுத்தது. (கராத்தே தியகரஜனே இதை தன் வாயால் சொல்லிதான் அ.தி.மு.க வை விட்டு வெளியேறினார்).


☼ தேர்தலை கணக்கில்கொண்டு மழையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் தருகிறேன் என்று அரசு பணத்தை செலவழித்தது. பாதிக்கப்பட்டவர்களை விட பாதிக்கப்படாத அ.தி.மு.க வினர் தான் இந்த பணத்தை கொள்ளையடித்தனர். ஏன் என் நண்பரே  1000 ரூபாய் வாங்கி விட்டு 2000 ரூபாய் வாங்கியதாக சொன்னார் . இந்த முட்டாள்தனம்தான் இன்று இலவச அரசு தொலைக்கட்சியாக மாறியுள்ளது.


☼ தமிழக இளைஞர்களை பற்றி கடுகளவும் நினைக்காமல் TNPSC தேர்வை நடத்தாமல் இருந்தது. இளைஞர்கள் அ.தி.மு.க ஆட்சியில் வேலைக்கிடைக்காமல் கண் பிதுங்கி நின்றது தான் கொடுமையிலும் கொடுமை.


☼இது நாள் வரை எந்த ஒரு கூட்டணி கட்சியினருடனும் அனுசரித்து போக தெரியாதது(உதாரணம்:மூன்றாவது அணி).


☼பதவிக்காக இந்திய அரசியலையே கவிழ்த்தது.


இன்னும் அடுக்கிகொண்டே போகலாம் ஆனால் எனக்கும் கொஞ்சம் மறதி மறந்து விட்டேன். இதையெல்லாம் விட எனக்கு அ.தி.மு.க ஆட்சியில் பிடிக்காதது திமிர், ஆணவம்தான். யார் என்ன சொன்னாலும் எனக்கு கவலை இல்லை என்று நடந்து கொள்வது. ஏதோ பணக்கார வர்கத்தை சேர்ந்த தனியார் கம்பனி நிர்வாகி போல் அரசு ஊழியர்கள் மிரட்டி பணிய வைத்தது.


எனது நண்பரின் தங்கை  பத்தாம்வகுப்பு தேர்வு எழுதிய பொது அந்த நேரத்தில் தேர்வு எழுதிய என்னுடைய நண்பர் பயந்த ஒரு விஷயம் அப்போதிருந்த ஒரு புரளிதான். ஆம் அது என்ன புரளி என்றால் படித்து எல்லோரும் பாஸ் ஆகிவிட்டால் வேலைகேட்பார்கள் என்று மாணவர்களை முடிந்த வரை fail பண்ண சொல்லிட்டாங்க மேலிடத்தில் இருந்த என்பதுதான். அதற்க்கு காரணம் அந்த நேரத்தில் அரசு ஊழியர்கள் லட்சக்கணக்கில் வீட்டுக்கு அனுப்பப்பட்டு இருந்தனர்,போதாகுறைக்கு புதிதாக வேலைக்கு ஆள்செர்ப்பதையும் நிறுத்தி வைத்திருந்தார் இப்போதைய எதிர்கட்சி தலைவர். இந்த காரணத்தால் அவள் 
 சுமாராக எழுதியிருந்த கணக்கு பாடத்தின் ரிசல்ட் வரும் வரை பயந்துபோய்தான் இருந்தனர்  அந்தளவுக்கு இவர் அரசு வேலையில் இருந்த முதியவர்(கட்டாய் ஓய்வு) முதல் பள்ளி சிறுவர்கள் வரை தமிழக மக்களை பயமுறுத்தி வைத்திருந்தார்.


தி.மு.க ஆட்ச்சியில் நடக்கும் ஊழல்களும் கொள்ளைகளும் தான் நம்மை வெறுக்க செய்துள்ளது ஆனால் எனக்கு தி.மு.க வில் பிடித்த ஒரு விஷயம் என்றால் மக்களை எந்த விதத்திலும் மிரட்டாதது உதாரணம் சில மாதங்களுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்த மாற்று திறனாளிகளை நேரில் சென்று பார்த்து ப்ரட்சனைக்கு தீர்வு கண்டது தான் ஆனால் அ.தி.மு.க ஆட்சியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை கூட நடத்தாமல் கைது செய்தது முற்றிலும் தவறான ஒன்று. அதே போல் முன்னாள் முதல்வர் என்று கூட பார்க்காமல் வீடு புகுந்து நள்ளிரவில் கைது செய்த அந்த பலி வாங்கும் குணம் ஆனால் இப்போதைய தி.மு.க அதற்க்கு எந்த ஒரு பதிலடியும் கொடுக்காமல் முத்துகருப்பனுக்கு பதவி உயர்வு கொடுத்தது எனக்குள் ஆச்சர்யத்தை கொடுத்தது.


நான் நடுநிலையாக தான் இதை சொல்கிறேன் தவறாக புரிந்து கொண்டால் நான் பொறுப்பல்ல . இதுதான். தி.மு.க வா இல்லை அ.தி.மு.க வா என்று என்னிடம் கேட்டால் நான் தி.மு.க வைத்தான் சொல்வேன். காரணம் இரண்டும் ஊழல் கட்சிதான். ஆனால் மக்கள் நலனில் சிறிதளவாவது கருணை உள்ள கட்சி என்றால் அது நடுநிலையானவர்கள் கண்டிப்பாக தி.மு.க வை தான் கூறுவார்கள்.


☼108 ஆம்புலன்ஸ்.
☼காப்பிடு திட்டம்.
☼வேலை இல்லா திண்டாட்டத்தை ஒழித்தது.
☼ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்.
☼இலவச தொலைக்காட்ச்சி
☼கண்க்ரிட் வீடு திட்டம்.
☼திருமண உதவிதொகை திட்டம், கர்ப்பிணி உதவிதொகை, முதியவர் உதவித்தொகை திட்டம் போன்றவற்றை உயர்த்தியது.
☼ விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்தது.


இப்படி பல மக்கள் நலத்திட்டத்துக்காக வரவேற்கலாம் ஆனால் இதிலும் ஊழல் இருப்பதாக குற்றம் இருப்பதால் வெறுக்கத்தான் செய்கிறது. ஆனால் அ.தி.மு.க ஆட்சியில் பயம் இருந்ததே தவிர இது போன்ற மக்கள் நல திட்டம் என்று ஒன்று கூட சொல்லிக்கொள்ளும் படி இல்லை என்பது தான் உண்மை. இதற்காகத்தான் இந்த பதிவில் சொல்கிறேன் நாம் தி.மு.க ஆட்சி வேண்டாம் என்று ஒடுக்க நினைத்தால் அதற்க்கு மாற்று கட்சி அ.தி.மு.க கிடையாது. இனி வரப்போகும் நாட்களில் ஏதேனும் ஒரு மாற்றம் நிகழ்ந்தால் தமிழகம் தப்பிக்கலாம்.


நான் எதிர்ப்பார்க்கும் மாற்றம்:


☼அ.தி.மு.க தலைவரால் தி.மு.க வில் குற்றம் சாட்டப்படாதவர் என்றால் அது மு.க.ஸ்டாலின் தான் ஆம் இது வரை எந்த ஒரு ஊழலிலும் எதிர்க்கட்சி தலைவரால் குற்றம் சாட்டப்படாதவர். இவருடைய செயல்பாடு
அ.தி.மு.க வினரையே திருப்தி பட செய்தது என்றால் அது உண்மைதான். ஆனால் இவர் தி.மு.க வில் இருந்துகொண்டு மக்களுக்கு நல்லதை இனி செய்யமுடியும் என்பதில் சந்தேகமே இவர் தி.மு.க வை தன் அண்ணனிடம் ஒப்படைத்து புது கட்சி தொடங்கினால் எனது ஓட்டு இவருக்குதான். இது இப்போதைக்கு நடக்காது. எனது ஆசை அவ்வளவுதான்.


முடிவு:
இப்போதிருக்கும் அரசியல்வாதிகளில் முதலமைச்சருக்கான தகுதி உடையவர்கள் என்றால் அது மு.க.ஸ்டாலின் மட்டும்தான் நான் கூறுவேன். நடுநிலையோடு யோசித்து உங்கள் முடிவை சொல்லுங்கள் . மற்ற கூட்டம் எல்லாம் கொள்ளை அடிக்கும், முதல் அமைச்சர் பதவியில் உட்கார தகுதி இல்லாதவர்களே.


இன்னும் எத்தனை காலத்துக்குதான் எம்.ஜி.ஆர் காக ஓட்டு போட்டேன், அண்ணாவுக்காக ஓட்டு போட்டேன், காமராஜருக்காக ஓட்டு போட்டேன் என்று போட போகிறீர்கள். இனி வரும் காலங்களிலாவது உங்கள் பிள்ளைகளுக்காக ஓட்டு போடுங்கள்,அவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஓட்டு போடுங்கள.

12/07/2010

புரூஸ் லீ

              
     புரூஸ் லீ என்று பிரபலமாக அறியப்பட்ட புரூஸ் ஜுன் ஃபேன் லீ (நவம்பர் 27, 1940 - ஜூலை 20 1973) அமெரிக்காவில் பிறந்த குங்ஃபூ விங் சுன் என்ற தற்காப்புக்கலை நிபுணரும் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகரும் ஆவார். ஜீட் குன் டோ என்ற உள்ளொளித் தற்காப்புக்
கலையைத் தோற்றுவித்தவர். இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான தற்பாதுகாப்புக்கலை நிபுணர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். இவரது திரைப்படங்கள் காரணமாக மேற்கு நாடுகளில் சீனத் தற்பாதுகாப்புக்கலை தொடர்பில் அதீத ஆர்வம் ஏற்படமை குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கை


      தற்காப்பு கலைக்கு உலக அங்கீகாரம் வாங்கிக் கொடுத்தவர் புரூஸ் லீ. இளைஞர்களின் ஆதர்ஷ நாயகன். உடம்பை எங்ஙனம் பேணுவது என உலகுக்கு கற்றுக் கொடுத்த ஆசான். தனது 33-வது வயதிலேயே புரூஸ் லீ மரணத்தை தழுவியது பெரும் இழப்பு.


புரூஸ் லீ சண்டையிடும் வேகம் பிரமிக்கத்தக்கது. இவரது கைகளும் கால்களும் எதிரியை தாக்கும் வேகத்துக்கு அன்றைய திரையுலகத் தொழில்நுட்பத்தால் ஈடு கொடுக்க முடியவில்லை. பொதுவாக ஒரு வினாடிக்கு 24 கட்டங்கள் என்பதே கணக்கு. புரூஸ் லீயின் வேகத்துக்கு ஈடுகொடுக்க ஒரு வினாடிக்கு 34 கட்டங்களாக மாற்றியமைத்தனர்.


1940 27, நவம்பர் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவின் சைனா டவுன் பகுதியில் உள்ள ஜாக்சன் ஸ்ட்ரீட் மருத்துவமனையில் புரூஸ் லீ பிறந்தார். இவரது தந்தை லீ ஹோய்-சுவென், ஒரு நடிகர். தாய் கிரேஸ் ஒரு கத்தோலிகர்.


புரூஸ் லீக்கு பெற்றோர்கள் 'லீ ஜுன்பேன்' என பெயர் வைத்தனர். சீன மொழியில் இதற்கு உலக பாதுகாவலர் என்று பொருள். இந்த பெயர் அமெரிக்க நர்ஸின் வாயில் நுழையவில்லை 'ஜுன் பேன்' சிரமமாக இருந்ததால் அந்த நர்ஸ் புரூஸ் என செல்லமாக கூப்பிட, அதுவே பிற்காலத்தில் அவரது பெயராக நிலைபெற்றது.


புரூஸ் லீக்கு மூன்று மாதம் ஆனபோது அவரது குடும்பம் ஹாங்காங் வந்தது. 12 வயதுவரை லா செல் கல்லூரியில் மேல்நிலைக் கல்வி பயின்றார் புரூஸ் லீ. பிறகு புனித பிரான்சிஸ் சேவியர் கல்லூரியில் அவரது படிப்பு தொடர்ந்தது.


1959-ம் ஆண்டு தனது பதினெட்டாம் வயதில் ஹாங்காங் கேங்ஸ்டர் ஒருவரின் மகனை தாக்கினார் புரூஸ் லீ. இந்த சம்பவத்தால் பயந்து போன அவரது தந்தை, புரூஸ் லீயை சான் பிரான்சிஸ்கோ அனுப்பி வைத்தார்.


இந்த காலகட்டத்தில் புரூஸ் லீயின் புகழ் தற்காப்பு கலை வட்டாரத்தில் பரவ ஆரம்பித்தது. சான் பிரான்ஸ்கோவிலும், சியாட்டிலிலும் படிப்பை தொடர்ந்தவர் பிறகு வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பிலாஸபி பிரிவில் சேர்ந்தார். அங்கு தான் இவர் தனது மனைவி லிண்டா எமரியைச் சந்தித்தார்.


நடிகராக


         புரூஸ் லீயின் நடிப்பு வாழ்க்கை அவரது சிறு வயதிலேயே தொடங்கியது. அவரது தந்தை ஒரு நடிகர் என்பதால் தனது 18-வயதிற்குள் இருபது படங்களில் நடித்தார். அமெரிக்காவில் இருந்தபோது 'பேட்மேன்' படத்தின் தயாரிப்பாளர் வில்லியம் டோசியர் பார்வையில் பட்டது இவரது திரை வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்தியது.


அவர் அமெரிக்காவில் இருந்தபோது ’தி கிரீன் ஹார்னட்’ , 'அயர்ன் சைடு’ , 'ஹியர் கம் த பிரைடுசு’ ஆகிய தொலைக்காட்சி தொடர்களில் நடித்தார். அமெரிக்காவிலிருந்து ஹாங்காங் திரும்பிய புரூஸ் லீயுடன் கோல்டன் ஹார்வெஸ்ட் கம்பெனி தயாரிப்பாளர் ரேமண்ட் செள ஒப்பந்தம் செய்து கொண்டார். இவரது தயாரிப்பில் புரூஸ் லீ நடித்து வெளிவந்த முதல்படம் பிக்பாஸ். 1971-ல் வெளிவந்த இப்படத்திற்கு முன்பே ஹாங்காங் முழுவதும் பிரபலமாகியிருந்தார் புரூஸ் லீ. பாக்சிங் சாம்பியனாகவும்,'கிரவுன் காலனி சா சா’ சாம்பினாகவும் அறியப்பட்டிருந்த நேரத்தில் இப்படம் வெளியானது.


கடத்தல் முதலாளிகளுக்கும் அப்பாவி தொழிலாளிக்களுக்கும் இடையே நடக்கும் போராட்டமே 'பிக் பாஸ்' படத்தின் கதை. புரூஸ் லீயின் அதிவேக சண்டைகளும், கண்களில் அவர் காட்டிய வெறியும் படத்தை மிகப்பெரிய அளவில் வெற்றி பெற செய்தது. ஆசியாவில் 12 மில்லியன் டாலர்களை இப்படம் வசூலித்தது.


இதையடுத்து 1972-ல் 'பிஸ்ட் ஆஃப் பியூரி' படம் வெளியானது. தனது மாஸ்டரை கொன்றவர்களை புரூஸ் லீ பழிவாங்கும் கதை. நரம்புகள் புடைக்க எதிரியை ஒரே குத்தில் அவர் வீழ்த்தி ஆக்ரோஷமாக கூச்சலிடும் காட்சி ரசிகர்களின் ரத்த ஓட்டத்தை எகிறச் செய்தது. முப்பதுக்கும் மேற்பட்ட ஸ்டூடண்டுகளுடன் சண்டையிடும் காட்சி இதன் பிரதானம். 15 மில்லியன் டாலர்களை இப்படம் குவித்தது.


புரூஸ் லீ கதை எழுதி இயக்கிய 'வே டு த டிராகன்' படம் 'பிஸ்ட் ஆவ் பியூரி' வெளியான அதே ஆண்டு வெளியானது. (இப்படத்தை 'ரிடர்ன் ஆவ் த டிராகன்' எனவும் கூறுவர்). இப்படம் உலகம் முழுவதும் புரூஸ் லீயின் புகழை கொண்டு சேர்த்தது. அவருடன் சேர்ந்து குங்பூ கலையும் புகழடைந்தது.


இந்த காலகட்டத்தில் புரூஸ் லீயின் குங்பூ ஹாலிவுட் சினிமாவில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியது. முக்கியமாக 'வே டு த டிராகன்' படத்தின் இறுதிக்காட்சியில், தான் அமெரிக்காவில் இருந்தபோது சந்தித்த கராத்தே மாஸ்டர் சக் நாரிஸை புரூஸ் லீ பயன்படுத்தினார்.


அமெரிக்க தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து புரூஸ் லீ உருவாக்கிய படம் 'என்டர் த டிராகன்'. ஹாலிவுட்டை மட்டுமின்றி உலகையே ஆட்கொண்டது இந்தப் படம். அன்றைய அமெரிக்க டாலர் மதிப்பில் இது வசூலித்தது (அமெரிக்காவில் மட்டும்) 850, 000 டாலர்கள்! இன்றைய மதிப்பில் இது பல மில்லியன்கள் பெறும். உலகம் முழுவதும் இப்படம் 200 மில்லியன் டாலர்களை வசூலித்து புரூஸ் லீயை தற்காப்பு கலையின் முடிசூடா மன்னனாக்கியது.


மரணம்


ஆனால், இந்த வெற்றியை அவரால் பார்க்க முடியவில்லை; 'என்டர் த ட்ராகன்' வெளியாவதற்கு மூன்று வாரங்கள் முன்பு 1973-ம் ஆண்டு ஜுலை 20 மரணத்தை தழுவினார் புரூஸ் லீ. அன்று இரவு தலைவலி என்று தூங்கச் சென்ற புரூஸ் லீக்கு தூக்க மாத்திரை ஒன்று கொடுக்கப்பட்டது. அதன் பின் அவர் எழவே இல்லை. 'கோமா' நிலைக்கு சென்றவர் ஹாங்காங் குயின் எலிசபெத் மருத்துவமனையில் நினைவு திரும்பாமலே காலமானார். இன்று வரை புரூஸ் லீயின் மரணம் மர்மமாகவே உள்ளது.


ஜீட் குன் டோ


கராத்தே கலையுடன் சில நுணுக்கங்களை சேர்த்து புரூஸ் லீ உருவாக்கிய புதிய தற்காப்பு கலை அவரது பெயரிலேயே 'புரூஸ் லீ குங்பூ' என அழைக்கப்பட்டது. இதனை தத்தவப் பாடத்துடன் சேர்த்து 'ஜே கேடி' எனும் புதிய பயிற்சியை அறிமுகப்படுத்தினார். இதனை பயிற்றுவிக்க பல பள்ளிகளையும் திறந்தார்.


உடற்பயிற்சி


புரூஸ் லீ உடம்பை பேணிய விதம் அலாதியானது. காலை ஏழு மணி முதல் ஒன்பது மணி வரை வயிறு மற்று தசைகளுக்கான பயிற்சி. பிறகு எடை பயிற்சி மற்றும் சைக்கிளிங். புரூஸ் லீ விரும்பி செய்த மற்றொரு பயிற்சி ஓடுவது. ஐந்து முதல் ஆறு மைல்கள் அதி வேகமாக ஓடிக்கொண்டே ஐந்து நிமிடத்துக்கொருமுறை வேகத்தை மாற்றிக் கொள்வது.


புரூஸ் லீ உடல் உறுதி சம்பந்தப்பட்ட நூற்றுக்கணக்கான புத்தகங்களை சேகரித்து வைத்திருந்தார். பிரத்யேகமா செய்த உணவுகளையே அவர் பெரும்பாலும் எடுத்துக் கொண்டார். ஒருவர் உள்ளங்கையை மூடி திறப்பதற்குள் அவரது கையை தாக்கும் அளவுக்கு வேகம் புரூஸ் லீயிடம் இருந்தது. ஒரு கையின் சுண்டுவிரல் மற்றும் கட்டை விரலை மட்டும் பயன்படுத்தி தண்டால் எடுக்கும் அளவுக்கு விரல்களை உறுதிப்படுத்தி வைத்திருந்தது இன்னொரு ஆச்சரியம்.


சிலை


திரையில் இத்தனை ஆக்ரோஜமாக இத்தனை உண்மையாக நிகழ்த்தி காட்டிவர்கள் புரூஸ் லீக்கு முன்பும் இல்லை பின்பும் இல்லை. அவருக்கு மரியாதை செய்யும் வகையில் ஹாங்காங் அரசு இரண்டு வருடங்களுக்கு முன்பு அவரது முழு உருவ வெண்கல சிலையை 46 லட்சம் செலவில் நிறுவியது. டைம்ஸ் பத்திரிகை சென்ற நூற்றாண்டின் சமூகத்தை பாதித்த சிறந்த 100 மனிதர்கள் பட்டியலில் புரூஸ் லீயையும் சேர்த்துள்ளது.

 நடித்துள்ள திரைப்படங்கள்


* என்டர் த டிராகன்
* த பிக் பாஸ்
* ரிட்டன் ஆவ் த டிராகன்
* ஃவிஸ்ட் ஆவ் ஃவியூரி
* வே ஆவ் த டிராகன்

12/06/2010

நண்பர்களின் பொன் மொழிகள் ....

 அவற்றில் ஒரு சிலவற்றை இங்கேப் பார்க்கலாம்….
           நட்பு என்பது நமது ஆரோக்கியம் போன்றது. அதை இழந்த பிறகுதான் அதன் அருமையை உணர்வோம். பு‌த்தக‌ங்க‌ள்தா‌ன் ந‌ம்முட‌ன் பேசு‌ம் மெளன ந‌ண்ப‌ர்க‌ள். எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.
  • உன் நண்பனுக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடு. ஆனால் ஒரு போதும் நண்பனை மட்டும் விட்டுக் கொடுத்து விடாதே.
  • வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன்.
  • உரிமை கொண்டாடும் உறவை விட, உறவைக் கொண்டாடும் நட்பே சிறந்தது.
  • உன் நண்பர்களைக் காட்டு.. உன்னைப் பற்றிச் சொல்கிறேன்.
  • பெருமை‌க்கார‌ன் கடவுளை இழ‌‌ப்பா‌ன், பொறாமை‌க்கார‌ன் ந‌ண்பனை இழ‌ப்பா‌ன், கோப‌க்கார‌ன் த‌ன்னையே இழ‌ப்பா‌ன்.
  • நமது நண்பர்கள் தான் நமது உண்மையான சொத்துக்கள்.
  • வேறு எதுவும் கிடைக்காவிட்டாலும் நீ எங்கிருந்தாலும் உன் நண்பன் உன்னை அடைவான்.
  • ஒவ்வொரு நண்பர்களும் புதிய உலகத்தின் வாயிற்கதவுகள்.
  • சிறந்த நண்பர்களாக நிறைய நாட்கள் பிடிக்கும்.
  • உன்னைப் பற்றி முழுதாக அறிந்திருந்தும் உன்னை விரும்புபவனே உன் நண்பன்.
  • ஒரு சில சமயம் உன் நண்பர்களை நீ தேர்ந்தெடுக்கிறாய். சில சமயங்களில் அவர்கள் உன்னைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.
  • நமது வாழ்க்கையில் பலர் கடந்து செல்கின்றனர். ஆனால் நண்பர்கள்தான் அழியாத சுவடுகளை ஏற்படுத்திவிடுகின்றனர்.
  • புதியவர்கள்தான் நண்பர்களாகின்றனர். ஆனால் அந்த காலம் வரு‌ம் வரை காத்திருக்க வேண்டும்.
  • புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள். பழைய நண்பர்களையும் தொடர்பில் வையுங்கள். புதியவர்கள் வெள்ளி என்றால், பழையவர்கள் தங்கம்.