தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

1/26/2013

திருப்பூர் புத்தக கண்காட்சி


திருப்பூர்  புத்தக கண்காட்சி வளாகத்திலிருந்து ....





பட்டியல் தயாரித்து வந்து புத்தகங்களை தேடி வாங்கும் பழக்கத்தை, புத்தக சந்தையில் காண முடிகிறது. வெளியூரில்  வசிப்போர் குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி, முகாமிட்டு புத்தகங்களை வாங்கி செல்கின்றனர்.
புத்தக கண்காட்சி அரங்கில்,  லட்சத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில், சுமார் ஒரு லட்சம்  புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன. கண்காட்சிக்கு, தினமும், பல ஆயிரம் பேர் வருகின்றனர். இதில், 50 சதவீதத்துக்கும் குறைவானவர்களே புத்தகங்களை தேடுவதாக, புத்தக விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.
அதிலும், திட்டமிட்டு புத்தகங்களை தேடுவோர் எண்ணிக்கை மிகவும் குறைவு. தேடுவோரில், புத்தகங்களுக்கான பட்டியலை தயாரித்து எடுத்து வந்து, குறிப்பிட்ட புத்தகங்களை வாங்கிச் சென்றவர்களை காண முடிந்தது.
இப்படி பட்டியல் தயாரித்து வந்தவர்களில் ஒருவர்,  இளங்கோவன். அவரிடம் கேட்ட போது, "நான் வேடிக்கை பார்க்க இங்கு வரவில்லை. பொழுது போக்கவும் வரவில்லை. எனக்கு, சில புத்தகங்கள் தேவைப்படுகின்றன. அவற்றைப் பற்றி முன்பே தெரிந்து பட்டியல் வைத்துள்ளேன். கடந்த ஆண்டு முழுவதும் இந்த பட்டியலை தயாரித்தேன்" என்றார்.
மேலும், "இதை வைத்துக்கொண்டு புத்தகத்தை தேடுகிறேன். அதில் கிடைத்தவற்றை வாங்கிக் கொள்கிறேன். இந்த தேடலுடன் புதிய புத்தகங்கள் ஏதாவது வந்துள்ளதா என்பதையும் கவனிக்கிறேன். இந்த ஆண்டு முதல், இந்த நடைமுறையை பின்பற்றி வருகிறேன். இது சுலபமாக இருக்கிறது" என்றார்.
இவர் போல் இல்லாமல், திட்டமிடாமல் வந்து, விரும்பிய புத்தகத்தை வாங்க முடியாமல் செல்பவர்களும் உண்டு. புத்தகங்களைத் தேடி வந்து, வெறுங்கையுடன் திரும்பி சென்றவர்  ஜான்சன். இவர் கூறுகையில், "மிகுந்த ஆர்வத்துடன் புத்தகங்களை தேடி வந்தேன்.
நவீன அறிவியல் சார்ந்த புத்தகங்களை படிப்பதில், எனக்கு விருப்பம் உண்டு. ஆனால், இந்த தலைப்பில் எந்த வகையான புத்தகங்கள் வந்துள்ளன என்பது குறித்து, எனக்கு பெரிய அளவில் தெரியாது. அவற்றை தேடி கண்டு பிடிப்பதிலும் சிரமம் உள்ளது" என்றார்.
மேலும், "புத்தக அட்டையில் உள்ள கருத்து அடிப்படையில், புத்தகங்களை தேர்வு செய்வதால் ஏமாற்றம்தான் மிஞ்சும் என்ற அனுபவம் எனக்கு உள்ளது. இந்த அடிப்படையில், நான் தேடி வந்தவற்றை கண்டுபிடிப்பதில் உள்ள சிரமங்களால், ஏமாற்றமாக உள்ளது" என்றார்.
நவீன விவசாயம், ஜோதிடம், சமையல் போன்ற புத்தகங்களை வாங்கியவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்ததை காண முடிந்தது. விவசாயம் சார்ந்த புத்தகங்களை வாங்கி கொண்டிருந்த அய்யப்பனிடம் கேட்ட போது, "பொதுவாக, எல்லா புத்தகங்களையும் வாசிக்கும் பழக்கம் எனக்கு உண்டு. இப்போது ஆரோக்கிய உணவு சார்ந்த சிந்தனை அதிகரித்து வருகிறது. நஞ்சு கலந்த உணவை சாப்பிடுவதால் தான் நோய்கள் அதிகரித்து வருவதாக கூறுகின்றனர்" என்றார். மேலும், "இது ஒரு வித பயத்தை ஏற்படுத்துகிறது. இதனால், உயிர் வேளாண்மை பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என்ற நோக்கில் இது போன்ற புத்தகங்களைத் தேடுகிறேன்.
 நான் எந்த செயலையும் நடைமுறைப்படுத்த முடியாது என்பது எனக்கு தெரிகிறது. ஆனால், நஞ்சில்லா வேளாண்மை பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள ஆர்வப்பட்டு இவற்றை வாங்குகிறேன்" என்றார்.
வெளிமாநிலங்களில் வசிக்கும் பலர், புத்தகங்களைத் தேடி சந்தைக்கு வந்திருந்தனர். பாபு கூறுகையில், "புத்தகங்கள் வாங்குவதற்கு என, குறிப்பிட்ட தொகையை நான் மாதம் தோறும் சேமிக்கிறேன். அந்த தொகையை மூலம், நான் விரும்பும் புத்தகங்களை வாங்கிக் கொள்கிறேன்.
நான் சமூகவியல் தொடர்பான கல்லூரி ஆசிரியராக பணியாற்றுவதால், அது சார்ந்த அறிவை வளர்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது. கல்லூரி நூலகத்தில் இது தொடர்பான புத்தகங்கள் வந்தாலும், வளர்ச்சி சார்ந்து உலகின் பல்வேறு மூலைகளிலும் நடக்கும் மாற்றங்களை தெரிந்து கொள்ளும் வகையிலான புத்தகங்களைத் தேடி இங்கு வருகிறேன்" என்றார்.


1/17/2013

சம்மதம் சொல்வதற்கில்லை

 

 

 என் முகம் நீ பார்த்ததில்லையே என்றேன்
உன் அகம் பார்த்திறுக்கின்றேனே என்றாய்.

என் குரல் நீ கேட்டதில்லையே என்றேன்.

உன் குணம் தெரிந்திருக்கின்றேனே என்றாய்.

என் நிறம் நீ அறிந்ததில்லையே என்றேன்

உன் நினைவிலேயே அலைகிறேனே என்றாய்.

இறு தியாய்


என் விருப்பத்தை நீ விரும்பவில்லையா என்றாய்

உன் செவி சேர்ந்திட மௌனமே கொண்டுள்ளேன் என்றேன்.

ஆனால்


இம்மௌனம் சம்மதம் சொல்வதற்கில்லை!

உன் காதல் பயணத்தை முடித்திடவே!

1/13/2013

பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

பழையன கழிதலும்

புதியன புகுதலும் நலமேயாம்

வாழையடி வாழையாய் வந்த

நல்லதோர் முதுமொழியாம்

தைமாதமதில் தைதிருநாள் பொங்கலதில்

விடியும் வேளை நாமெழுந்து நீராடி

நற்காலைப் பொழுதினிலே

பொங்கல் விழா தனிப்பெருந்

திருவிழாக்கோலம் பூணுகிறது.

தைப்பொங்கல் திருவிழா என்பது

ஒரு சமய விழா அல்ல!

தமிழரின் பண்பாட்டு விழா!

தமிழரின் தமிழ்ப் புத்தாண்டு

கொண்டாடும் நாள்!

அனைவருக்கும் இனிய

பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

1/12/2013

தேசிய இளைஞர் தினம்



150 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் காலை 6 மணி 33 நிமடங்களுக்கு,

அன்றைய கல்கத்தாவில் உதயமான இளைஞர்களின் சூரியன் சுவாமி

விவேகானந்தரின் நினைவாக இந்த நாள் தேசிய இளைஞர்கள் தினமாக

கொண்டாடப் படுகிறது. இன்று அந்தச் சூரியன் மறைந்திருந்தாலும் அவர்

புகழின் வெளிச்சம் மங்கவில்லை. சுவாமி விவேகானந்தர் ஓர் ஒப்பற்ற

இளைய சக்தி. மதத்தைக் கொண்டு மனிதம் வளர்த்தவர் .

உலகத்தை இந்து மதம் நோக்கி இழுத்தவர். மதத்தை மனித வாழ்வுக்கு,

மனிதகுல முன்னேற்றத்திற்குப் பயன்படுத்தியவர். அவரின் கருத்துக்களும்,

கொள்கைகளும் எந்த ஒரு மனிதனையும் செயல் வீரனாக, தன்னம்பிக்கை

உள்ளவனாக மாற்றவல்லவை. ஒரு சிறந்த சீடனுக்கும், தலைவனுக்கும்

மிகச் சிறந்த உதாரணமாக திகழ்ந்தவர். மத உணர்வை தூண்டாமல், மத

கலவரத்தை உண்டாக்காமல் அனைவருக்காகவும் வாழ்ந்தவர். அவர்

ஒட்டுமொத்த இளைஞர்களின் பிரதிநிதியாகவே பார்க்கப் பட்டார்.

அனைத்து இளைஞர்களுக்கும் நல்வழிகாட்டியாகவே வாழ்ந்தார். நமக்கு

முன்பிருந்தவர்கள் செய்த ஓர் நற்செயல் அவர் பிறந்த தினத்தை தேசிய

இளைஞர் தினமாக கொண்டாடுவது. ஆனால் இன்று எத்தனை இடங்களில்

விவேகானந்தர் பிறந்த நாள் கொண்டாடப்படும் என்பது கேள்விக்குறியே.

இன்றுள்ள மதத் தலைவர்களானாலும் சரி அல்லது வேறு எந்தக்

கூட்டத்தின் தலைவர்களானாலும் சரி, இளைஞர்களை அவர் வழி

நடத்தாவிட்டாலும் அவருக்கு எதிரான வழியில் நடத்தாமல் இருந்தாலே

போதும், அதுவே அவருக்கு செய்யும் மரியாதைதான். ஒரு நல்ல சீடன்

தான் நல்ல தலைவனாக முடியும். நமக்கு தெய்வ நம்பிக்கையோ, மத

நம்பிக்கையோ இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவரின் வாழ்வியல்

சிந்தனைகளையும், தன்னம்பிக்கை கருத்துக்களையும் ஏற்றால் ஏற்றம்

உண்டு. நல்ல சீடனாக கற்றுக்கொண்டு, நல்ல தலைவனாக கற்றுக்

கொடுப்போம்.


தேசிய இளைஞர் தின நல் வாழ்த்துக்கள்

1/06/2013

பெண்ணிற்கு


இலக்கணம் வகுத்தவன்

அழுது கொண்டிருக்கிறான் !


பெண்ணையே

தெய்வமென போற்றியவன்

துடித்துக் கொண்டிருக்கிறான் !


பெண்ணையும்

அவளின் அங்கங்களையும்

விழி தராசுகளில் எடைபோட்டு

களவாடப் பார்க்கும்

கள்வர்களின் கைகளில்

எப்போது தீப்பிடிக்கும்?


நடந்தால்

சிரித்தால்

 குனிந்து எதையாவது

எடுத்தால் கூட

போக உணவு கிட்டிய மகிழ்ச்சியில்
ஓர் ஆணினம்.


இந்தியப் பெண்கள்

அறிவில் - அழகில்

வல்லவர்கள் தாம்!

ஆனால்...

நெறிதவறா சிற்பங்கள்!


ஒவ்வொரு பெற்றோரும்

பெண்ணைப் பிரசவித்து

கூடவே

ஒரு நெருப்பு வளையத்தையும்

இட்டே வளர்க்கின்றனர்...


பெண்ணினம்

அடிமை என்பது பழையது !

பெண்ணினம்

போர் வாள் என்பது புதியது !


ஓர் ஆணின்

வாழ்வை விடவும்
பெண்ணின் வாழ்வு

சுமை கூடியது

சுவையானது.

பெண்ணைப் பெறுவதனால்

இனிவரும் சந்ததி

விருத்தியடையும்

முக்தியடையும் என்பது உண்மை.


பெண்ணின்


வயிற்றிலிருந்து வந்து


பெண்ணையே குறிவைக்கும்

மானுடம் இனி சாகும்.


இது ஓர் ஆண் கருவுற்று

பிரசவித்தது போலுணர்ந்தால் மட்டுமே

பெண்ணின் மகத்துவம்

ஆண்மன அடியாழத்திற்குள்

செல்லும்.


பெண்ணின் கற்பு

சிதைக்கப்படுமாயின்

இனிவரும்

பூகம்பம் கூட அவனை
             விழுங்கிவிடும் என்பது திண்ணம்.

12/31/2012



























முன்னேற்றங்களும் பின்னேற்றங்களும்


வாழ்வின் அடிப்படை தத்துவம்;


நாம் கடந்து வந்த

வாழ்க்கை புத்தகத்தில்,

வருடங்கள் மாதங்கள்

வாரங்கள் நாட்கள்

நிமிடங்கள் நொடிகளென

அனைத்து பக்கங்களை

புரட்டிப் பார்த்தால்,

நமக்கொன்று ஒன்று மட்டும் புரியும்

புத்தாண்டு என்பது

வருங்கால தேதிகளை மாற்றிவிடும்

ஒரு நாள்தான் என்று ;

கடந்து வந்த பாதைகள்

கடக்கவிருக்கும் பாதைகளில்

நமக்கு சந்திக்க போகும்

அனுபவங்கள் யாருக்கும் தெரியாது;

திசை திரும்பிவிட்ட

படகுமேலேரி பயணிக்கும் நம்மை

இந்த புத்தாண்டு

நம் கனவு கரையில் போய் சேர்க்கட்டும்;


மாற்றங்கள் அனைத்தும் பொதுவாயினும்

நம்மில் புதுப்புது மாற்றஙள் தோன்றி

நம் வாழ்வில் இன்பமும் அமைதியும்

என்றும் நிலைத்துவிட

இறைவனிடம் பிரார்த்தித்து

என் புத்தாண்டு வாழ்த்தினை சமர்ப்பிக்கிறேன்

12/30/2012

எனது பார்வையில் 2012

இந்த வருஷம் எப்படி ஓடியது என்று தனிப்பட்ட முறையில் என்னைக் கேட்டால்

மிகவும் மோசம்

ஒன்றே ஒன்று புதிதுபுதிதாகப் புத்தகங்கள் தேடித் தேடி படித்தேன். படிக்கிறேன்.

கம்பராமாயணத்தில் விசேஷ ஈர்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

கொஞ்சமாக நினைவுக் குதிரையை ஓட விட்டுப் பார்த்தும் இணையத்தைக் கொஞ்சம்

துழாவியும் பத்திரிகைத் துறை நண்பரொருவர் கொடுத்த நிகழ்வுப்பட்டியலையும்

தோராயமாக பார்த்துத் தயாரித்த -2012.

1. என் அண்ணன் வயதையொத்த அகிலேஷ் யாதவ் உத்தரப் பிரதேசத்தில் முதல்வராயிருக்கிறார்.

2. மட்டையினால் நாட்டுக்கு விளையாட்டுத் தொண்டாற்றிய சச்சின் டெண்டுல்கர் தேசத்துக்குச் சேவைபுரிய ராஜ்ஜிய சபா எம்பியாக்கப்பட்டார்.

3. நிதித்துறை மந்திரி பதவியிலிருந்து தப்பித்து பிரனாப் முகர்ஜி இந்தியாவின் பதினான்காவது ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்டார். ஆபத்தில்லாத ஃபாரின் டூர் பதவி என்று ப்ரதீபா ’பாட்டி’லால் அடையாளம் கொடுக்கப்பட்ட பொறுப்பான பதவி.

4.மீடியம் பட்ஜெட் சிறு கார் ஓட்டும் முதலாளிகளையும் நசுக்கும் முயற்சியாக டீசலை ஐந்து ரூபாய் வரை ஏற்றினார்கள். ஆறு சிலிண்டர்கள்தான் வருடத்திற்கு என்று கட்டை போட்டார்கள். ஒருவாரத்திற்கு டீசல் கிடைக்காமல் அனைவரையும் வீதிகளில் பேயாய் அலையவிட்டார்கள்.

5. தீபா கங்குலி சீதா பிராட்டியாராக நடித்த ராமாயணத்தில் சிரஞ்சீவி ஹனுமானாக நடித்த தாரா சிங் தனது 83 வயதில் உயிர் நீத்தார். அறுபது எழுபதுகளில் கன்னியரின் உள்ளங்களை கொள்ளை கொண்ட ராஜேஷ் கன்னாவும் இறந்தார்.

6. மனித இனத்தின் ஜெயண்ட் லீப்பாக சந்திரனில் முதன்முதலாகக் காலடி எடுத்து வைத்த நீல் ஆர்ம்ஸ்ட்ராங் பை பாஸ் சர்ஜரியில் ஏற்பட்ட குளறுபடிகளால் இறந்தார்.

7. சிதாரினால் பல உள்ளங்களில் ஜிப்ஸி கிதார் மீட்டிய பண்டிட் ரவி ஷங்கர் 92வது வயதில் மேலுலகம் சென்றார்.


8.ரொம்பவும் அபர செய்திகளாகப் பார்த்தாயிற்று, சுப செய்தியென்றால் நமக்கெல்லாம் அரட்டையடிப்பதற்கும் அவ்வப்போது சில சத்விஷயங்கள் தெரிந்துகொள்வதற்கும் உறவுப் பாலம் அமைத்துக் கொடுத்த மார்க் ஸூகெர்பெர்க் தனது நீண்ட நாள் காதலியைக் கல்யாணம் பண்ணிக்கொண்டார்.


9.பிரேஸில் நாட்டு இருபதுவயது பெண்ணொருத்தி $780,000 டாலருக்கு தனது கற்பை விற்று கலிகாலப் புரட்சி செய்தார்.

10. தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆஞ்சநேயர் விக்கிரஹம் வைத்துக்கொள்ளாமல் பராக் ஒபாமா இரண்டாவது முறையாக மீண்டும் அமெரிக்க ராஜ்ஜியத்தை ஆளும் வாய்ப்பைப் பெற்றார்.

11.ரிக்கி பாண்டிங்கும் சச்சினும் திராவிடும் ”ஆடியது போதும்” என்று இளைஞர்களுக்கு ஒதுங்கி நின்று ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்கள்.

12.யுவராஜ் சிங் அரிதினும் அரிதான ஜெர்ம் செல் கேன்சரை ஜெயித்து மீண்டும் விளையாட ஆரம்பித்துவிட்டார்.

13.பெட்டிங் கள்ளப் பணம் என்று ஆயிரமாயிரம் நொட்டைகள் இருந்தாலும் ஐபிஎல் ஜமாய்க்கிறது. ஷாரூக்கானின் கொக்கத்தா நைட் ரைடர்கள் 2012ம் வருடத்திய பட்டத்தை வென்றது
14. காவல் கோட்டத்திற்காக சு.வெங்கடேசனுக்கு சாகித்ய அகாதமி விருதும், ஜெயகாந்தனுக்கு ரஷிய நாட்டின் உயரிய நட்புறவு விருதும், அசோகமித்திரனுக்கு என்.டி.ஆர் விருதும் கிடைத்தது தமிழ் இலக்கியத்தில் ஏற்பட்ட சுப நிகழ்வுகள்.

15. ஒரு பதினைந்து வயது பையனை “ஒழுங்கா படியேம்ப்பா” என்று சொன்ன குற்றத்திற்காக உமா மஹேஸ்வரி என்கிற ஆசிரியை சென்னை பாரீஸில் கல்விக் கூடத்திலேயே குத்திக் கொலை செய்யப்பட்டார். வன்முறை வரவேற்பறைக்கு வந்ததன் விளைவு.

16. ஒன்பது வருடங்களுப்பிறகு மின் கட்டணத்தை 37% உயர்த்தி தமிழ்நாடு மின்சார வாரியம் மக்களை உயிரோடு கொளுத்தியது. ”கொடுத்தவனே பறித்துக்கொண்டாண்டி” என்று வரலாறு காணாத மின்வெட்டையும் அறிமுகப்படுத்தி ஏற்றிய கட்டணத்தை ஓரளவிற்கு சமன் செய்தது. மின்சாரமின்மையால் தனது சொந்த தொழிலையே மூட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளான ஒரு அபாக்கியசாலியை பேட்டி எடுத்துப் போட்டிருந்தது தினகரன்.

17.அன்று கண்ட மேனிக்கு அழிவில்லாத ஹேமமாலினிக்கு சர்வதேச பெரும்புள்ளி அவார்ட் லண்டனில் வழங்கப்பட்டது. இன்னும் பத்து வருடம் கழித்தும் இது போன்ற அவார்ட் வாங்குமளவிற்கு ஹேமமாலினி திகழ்வார் என்று பரவலாக நம்பப்படுகிறது.


18. மாருதி ஸுஸுகி நிறுவனத்தில் தொழிலாளர்களுக்கிடையே நடந்த கலவரத்தில் மனித வளத் துறை மேலாளர் ஒருவர் கொல்லப்பட்டார். வேலை வாங்கும் தகுதியில் இருப்பவர்களுக்கும் வேலை செய்வதாக பாவ்லா காட்டுபவர்களுக்குமிடையே நடக்கும் போராட்டத்தின் உச்சகட்டம் கொலை என்பது துர்பாக்கியமே. நியாயமான கோரிக்கையுள்ளவர்கள் தர்மமான முறையில் போராடுவார்கள்.


19.ஹிக்ஸ் போஸன் என்கிற கடவுள் துகள் கண்டுபிடிக்கப்பட்டது. கடவுளையே கண்ட மாதிரி அறிவியல் உலகம் கொண்டாடியது.

20. ஆகாஷ் எனும் டேப்லெட்டின் அட்வான்ஸ்டு வெர்ஷனை இந்திய அரசாங்கத்தின் சார்பில் ஜனாதிபதி நாட்டுக்கு அர்பணித்து புண்ணியம் கட்டிக்கொண்டார். முதல் லட்சம் டேப்கள் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கும் பல்கலைக்கழங்களில் படிப்பவர்களுக்கு மட்டும் என்று அறிவித்திருக்கிறார்கள். பார்ப்போம் உரியவர்களை சென்றடைகிறதா என்று.

21.திடீரென்று ஒருநாள் நித்யானந்தா மதுரை ஆதினமாக அதிரடியாகப் பதவியேற்றுக்கொண்டார். இருவரும் சிரித்துக்கொண்டே பேட்டியளித்தார்கள். பலர் செல்லாது என்று போராடினார்கள். முடிவில் மதுரை ஆதினமே நித்தியை ஆதினப் பொறுப்பிலிருந்து நீக்கினார்.

22. இரண்டாம் வகுப்புப் படித்துவந்த ஸ்ருதி என்கிற பள்ளி மாணவி பஸ்ஸிற்குள் இருந்த ஓட்டையில் விழுந்து நசுங்கிச் செத்ததும், மாணவனொருவன் நீச்சல் குளத்தில் பயிற்சியின் போது விழுந்து உயிரிழந்ததும் நிர்வாகத்தினரின் அலட்சிய மனோபாவத்தினை வெளிப்படுத்தியது.

23. கூடங்குளம் அணு மின்சாரத்தை எதிர்த்து இடிந்தகரையில் நூற்றுக்கணக்கானோர் போராட்டம் நடத்தினர். அணு உலை ஆபத்தானதல்ல என்று கூறி போராடியவர்களிடம் அவப்பெயர் சம்பாதித்துக்கொண்டார் அப்துல்கலாம்.

24.ஆங்காங்கே இயற்கைச் சீற்றங்கள் பெருமளவில் இருந்தது. சுமத்ராவில் பூமித்தகடுகள் இன்னமும் சீட் ஆகாமல் நடனமாடிக்கொண்டிருக்கிறது.


25. மாயன் இனத்தவர்கள் காலண்டர் வரைய கல்லில் இடமில்லாமல் போனதால் நிறைய பேர் 2012ல் உலகம் அழிந்துவிடும் என்று ஜல்லியடித்தார்கள். தன்னிடமிருந்த ஒரு லட்ச ரூபாயை ரோடில் சென்றவருக்குக் கொடுத்த ஒரு அநாமதேய அப்பாவியைப் பற்றிய செய்தி வந்தது. வாங்கியவர் திரும்பக் கொடுப்பாரா?

26.ஊழலுக்கெதிராக என்று சொல்லிக்கொண்டு ஆம் ஆத்மி என்கிற அகில இந்திய கட்சியை அண்ணா ஹசாரேவின் டீம் ஆளாக அறியப்பட்ட அர்விந்த கெஜ்ரிவால் தொடங்கினார். ஆம்! கட்சிப் பெயரிலேயே சர்ச்சை ஏற்பட்டது.

27.தமிழக மீனவர்களை சிங்களப் படையினர் கொல்வதும் மத்திய மாநில அரசுகள் வேடிக்கைப் பார்ப்பதும் தொடர்கிறது.

28. வழக்கம் போல இந்த வருடமும் தமிழில் நிறைய யதார்த்த திரைப்படங்களை எடுத்தார்கள். சாட்டை, வழக்கு எண் போன்ற படங்கள் வெற்றியடைந்தன.

29.தில்லியில் ஒரு மாணவியை பாலியல் வன்கலவியினால் சிதைத்தார்கள். உடனே பூதாகாரமாக நாட்டின் எல்லா மூலைகளிலிருந்தும் ரேப்புகள் ஊடகங்களில் வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டன. நடைபெற்ற இதுபோன்ற துக்கச்சம்பத்தினால் கொதித்தெழுந்த பொதுமக்கள் கருட புராணத்தை திருத்தியமைக்குமளவிற்கு அக்குற்றத்திற்கான தண்டனைகளை தங்களது கணினியின் கீபோர்ட் மூலமாக வழங்கினார்கள்.

30. தூக்கு போடும் வரை வெளியே மூச்சுக் காட்டாமல் கப்சிப்பென கஸாப் தூக்கிலடப்பட்டார். அவரது மரணதண்டனையைவிட அரசாங்கத்திற்கு அவரால் ஏற்பட்ட செலவினங்கள் அதிகமாகப் பேசப்பட்டது.

31. விலாடிமிர் புடின் மூன்றாவது முறையாக ரஷிய ஜனாதிபதியாகப் பதவியேற்றார்.

32. இளையராஜா இன்னமும் ஜோராக இசையமைக்கிறார்.

33.மற்றபடி எல்லாவருடமும் நடக்கும் அநியாயங்கள் அவலங்கள் அலட்சியங்கள் அவமானங்கள் அதிகார அடக்குமுறைகள் தாராளமாகவும் லோக க்ஷேமத்திற்கான காரியங்கள் விரல் விட்டு எண்ணும்படியாகவும் இந்த 2012லும் நடந்தது.

எல்லோருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். இந்த 2013ல் பரவலாக நல்ல காரியங்கள் உலகெங்கும் நடந்து எங்கும் சுபச்செய்திகள் பரவ வாழ்த்துகள்.