தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

8/14/2015

மேன்மையான இந்தியாஇளைஞர்களின் கனவு


எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
    திண்ணிய ராகப் பெறின்”.-என்று வள்ளுவர் சொல்வது 
கனவு காண்பர்களைப்பார்த்துதான்.என்ன கனவு காண்கின்றோமோ அதற்கு உரிய ஆற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டும் அல்லது ஆற்றலுக்கு உரிய கனவைக்காணவேண்டும் இல்லையேல் புத்தர் சொன்னஆசையே துன்பதற்கு அடிப்படைஎன்பது உண்மையாகிவிடும்.
ஆற்றல் கொண்ட கனவுகள்  வரலாற்று நாயகர்களையும், ஆற்றல் அற்ற கனவுகள் தற்கொலைவாதிகளையும் உருவாக்கிவிடும்.
இளைஞர்களின்  கனவு ,வரலாற்று நாயகர்களாக நினைக்கும் கனவு. அது ஆற்றலோடு இணைக்கப்படும்போது  அது கனவல்ல வரலாறு.
ஒவ்வொரு நடுநிலை இந்தியரும் கனவு காணும் நமது இந்தியா இப்படியிருந்தால் நன்றாக இருக்குமே என்ற கனவின் எதிரொளியாக மேன்மையான இந்தியாவை உருவாக்கிட வேண்டுமென்பதே எனது நோக்கம்
தனி மனிதனின் பொருளாதார வசதிகள் பன் மடங்கு பெருகியிருக்கின்றன. நல்ல வீடு, நல்ல துணிகள், வாகன வசதி என்று ஒவ்வொருவரும் முன்னேறியிருக்கிறார்கள். ஜனத்தொகை இன்று பலமடங்கு பெருகியிருந்த போதிலும் அத்தனை பேருக்கும் வேலை வாய்ப்பு இருக்கிறது. எங்கு பார்த்தாலும் ஆள் தேவை என்ற அறிவிப்புப் பலகை தென்படுகிறது.
ஆடை உலகிலே நாட்டில் பெரும் புரட்சியே நிகழ்ந்திருக்கிறது என்று சொல்லலாம். பருத்தியிலிருந்து நூல் நூற்பதிலிருந்து ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியாவது வரை, நடந்துள்ள மாற்றங்கள் மிகவும் வியக்கத்தக்கதாகும்.
கல்வி, மருத்துவம், போக்குவரத்து, சாலைகள் ஆகியவைகளும் பன்மடங்கு முன்னேற்றமடைந்துள்ளன. தொலை தொடர்புத் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் அபரிமிதமானதாகும்.
இந்த மாற்றங்களெல்லாம் நாடு முன்னேறுவதைக் குறித்தாலும் சில எதிர்மறை சக்திகள் இந்தியா வல்லரசாகும் வாய்ப்பைத் தடுக்கின்றன..
அதில் முதலிடம் வகிப்பது இந்நாட்டின் அரசியல்.
இன்று இந்திய அரசியல் என்பது தேசியம் சார்ந்த ஒன்றில்லை, பிராந்தியக் கட்சிகளின் அரசியல் சார்ந்தது. ஈழப் பிரச்சினையின் குரல் வடக்கே ஒலிக்கவேயில்லை. காஷ்மீர் பிரச்சினை நமக்கு வெறும் செய்தி. இதுதான் இன்றைய அரசியல் நிலை. இப்படி உள்ள அரசியல் எப்படி ஒன்றிணைந்து செயல்பட முடியும் என்ற கேள்வி. அரசியல் மதிப்பிட அதன் இன்றைய பொருளாதாரச் சீர்கேடுகள், அகம், புறம் சார்ந்த பிரச்சினைகள் மட்டும் போதாது.
அடுத்தது. ஊழல்: இற்கு முன்னோடிகள் யாரென்று தனியாகச் சொல்லவேண்டிதில்லை

ஊழலின் ஆரம்பம் தனி மனித அதிகாரம், வெளிப்படையின்மை மற்றும் அதிகார துஷ்பிரயோகம்.

தனி மனித அதிகாரத்தின் பிரதிபலன் ஆதிக்கம் செலுத்துதல், அடிமைபடுத்துதல், வளைந்து கொடுத்தல் அல்லது கைமாறு செய்தல்.
நாட்டை சட்டம் ஆளவேண்டும், தனி மனிதருக்கு எந்த அதிகாரமும் இருக்கக்கூடாது. சட்டம் இலகுவாகவும், அனைவருக்கும் சமமாகவும் இருக்க வேண்டும், ஒவ்வொரு வருடமும் மீளாய்வு செய்து செம்மைபடுத்த வேண்டும். நீதியை போராடி துன்பப்பட்டு பெறாமல் உரிமையாக பெறவேண்டும் செலவில்லாமல்.
பொதுமக்களுக்கு சேவை செய்பவர்களை அரசுத்துறை, அரசு சார்ந்த துறை மற்றும் தனியார் துறை என பிரித்து அரசுத்துறையின் உரிமை, கடமை, தகுதி, நெறிமுறைகளை பற்றிய எதிர்பார்ப்பை,

ஏற்கனவே குறிப்பிட்டப்படி ஊழலின் ஆரம்பமே தனி மனிதனின் அதிகாரத்தில் தான் ஆரம்பிக்கிறது. அரசுத்துறையில் தனி மனித ஆதிக்கம் (தானே அரசாங்கம், தான் சொல்வதே சட்டம், செய்வதே முடிவு) அதிகம் இருப்பதால் பொதுமக்களால் உரிமையை எளிதில் பெறமுடிவதில்லை.
துறையில் அதிகாரம் என்பது எந்த தனி மனிதனுக்கும் இருக்கக்கூடாது, அனைத்து செயல்பாடும் சட்ட வரைமுறையாக்கப்பட்டு, வெளிப்படைதன்மையுடன் இருக்க வேண்டும்.

எனது எதிர்பார்ப்பு: நாடு முன்னேற வேண்டுதெனில் அரசாங்கம் பொதுமக்களை மதித்து நேசிக்க வேண்டும், பொதுமக்களுடன் வெளிப்படையாக ஆலோசித்து திட்டமிடல், தரம், தகுதி மற்றும் காலம் நிர்ணயித்தல், செயல்படுத்துதல், பிரச்சனைகளுக்கான தீர்வை காலதாமதமின்றி நிறைவேற்றுதல். கடந்த ஆட்சியாளரின் அல்லது அதிகாரிகளின் பணிகளை கிடப்பில் போடாமல் செம்மைபடுத்துதல். ஒவ்வொரு செயல்திட்டத்திற்கும் பொதுமக்கள் தரும் அறிவுரைகளை ஆராய்ந்து அதில் தவறு இருந்தால் எழுத்துப்பூர்வமாக சுட்டிகாட்டி தாங்கள் பரிந்துரைக்கும் வழிமுறைகளின் நியாயங்களை பொதுமக்களுக்கு விளக்கி ஆலோசித்து இணைந்து செயல்பட வேண்டும். பொதுமக்களும் ஈடுபாட்டுடன் நாட்டை நேசிக்க வேண்டும். தங்கள் ஊரில் என்ன செயல்திட்;டங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன? எதிர்காலத்தில் நடைபெற போகிறது? அரசுத்துறையில் பணிபுரிபவர்களின் கடமைகள், நமது உரிமைகள் என்ன? போன்ற விழிப்புணர்வு இருக்க வேண்டும்

கடைசியாக மக்களின் ஒழுக்கம். இது சீர்கெட்டு வருவதை அன்றாடம் செய்தித்தாள்களில் படிக்கிறோம். இந்திய மக்களுக்கு என்று எந்த வித ஒழுக்க அடையாளங்களையும் என்று சுட்டிக்காட்ட முடியவில்லை.
இத்தகைய ஒழுக்கக்கேடுகள் காலம் காலமாகவே இருந்து வந்துள்ளன. இன்றும் ஊருக்கு ஊர் வீட்டுக்கு வீடு இவை பல இடங்களிலும் பரவித்தான் உள்ளன. மனிதர்களில் பெரும்பாலோர் மிருகங்களையும் விட கேடு கெட்டவர்களாகவே தான் உள்ளனர்.

இதைப்பற்றியெல்லாம் வாய் கிழியப்பேசலாம். நடைமுறைப்படுத்துவது சாத்தியமே இல்லாதது.

காலம் காலமாகத் தொடர்ந்து வரும் இவை பற்றியச் செய்திகள் பெரும்பாலும் மானத்திற்கு அஞ்சி ஆங்காங்கே மறைக்கப்பட்டு வந்தன. இப்போதும் பெரும்பாலான செய்திகள்.மறைக்கப்பட்டுத்தான் வருகின்றன
ஊடகங்களின் தொழில்நுட்ப வளர்ச்சியால், ஒவ்வொரு சிறிய ஒழுக்கக்கேடுகளும், இப்போதெல்லாம் பூதாகாரமாகக் காட்டப்பட்டு வருகின்றன.
தனி மனித ஒழுக்கம் முன்னேற்றமடையுமானால், நாடு தானே வல்லரசாக மாறும் மக்களின் ஒழுக்கமும், பகுத்தறிவுமே மிக பெரிய சவால். இரண்டும் இல்லாததால் தான் லஞ்சமும், ஊழலும் பெருகின. அதனால் தானே ஒழுக்கமற்றோர் அரசியலில் புகுந்து ஆட்டுவிக்கின்றனர். அரசியல் கேடு, ஊழல் ஆகியவற்றை ஒழிக்க வேண்டும் ஆனால் தனி மனித நல் ஒழுக்கத்தையும், பகுத்தறிவையும் பரப்ப வேண்டும்..
ஆனால், வளர்ச்சியின் பெயராலும், வலிமையின் பெயராலும் இதுவரை நமது அடையாளமாக இருந்த சகிப்புத்தன்மையையும், சகோதரத்துவத்தையும் இழந்துவிடக் கூடாது என்பதே நமது முக்கியமான கவலை.
உலகம் அணுவை நம்பலாம். நாம் அன்பை நம்புவோம். எச்சரிப்பதற்குப் பதிலாக அறிவுரை சொல்லுவோம். அதுதான் இந்தியாவின் தனித்துவமும், வலிமையுமாகும்
ஆனால், வளர்ச்சியின் பெயரால் இந்தியாவின் மதச்சார்பின்மை போன்ற பண்பாட்டு மேன்மை மிக்க தனித்த அடையாளங்களை விலையாகக் கொடுக்க முடியாது என்பதை மட்டும் இன்றைய ஆட்சியாளர்கள் தங்கள் மனதில் அழுத்தமாகப் பதித்துக் கொள்ள வேண்டும்.
இந்தியா என்றால் சமாதானத்தையும், சகோதரத்துவத்தையும் போற்றும் நாடு என்ற நமது அடையாளத்தை நிரந்தரமாக்குவோம்.
மேன்மையான இந்தியாவை உருவாக்க இளைஞனிடம் ஒருவிதமான கனவு ஒளிந்திருக்கிறது அதற்கு உறுதுணையாக இருப்போம்
மூன்று வண்ணங்கள்தான் இந்தியாவின் நிறமே தவிர அவற்றில் ஏதோ ஒன்று மட்டுமல்ல.
வாழ்க பாரதம் !          வளர்க இந்தியா !!   ஜெய்ஹிந்த் !!!



குறிப்பு :
அறம் கட்டளை நடத்திய  சுதந்திர தின விழா கட்டுரை போட்டிக்காக எழுதியது