அமெரிக்கா போன்ற அயல் நாட்டு பல்கலைக் கழகங்களுக்குச் சென்று தாங்கள் விரும்பிய கல்வியை படிக்க செல்லும் இந்திய மாணவர்கள் சந்திக்கும் எதிர்பாரா அவலத்திற்கு மோசமான உதாரணமாக வெளியாகியுள்ளதுதான் டிரை-வாலி பல்கலைக் கழக மோசடி விசா விவகாரமாகும்.
கலி்ஃபோர்னிய மாகாண தலைநகரான சான் பிரான்சிஸ்கோவிலுள்ள டிரை-வாலி பல்கலைக் கழகமே, எஃப் -1 என்கிற கல்விக்கான விசாவை மோசடி வழியில் பெற்றுத் தர உதவியுள்ளது என்பதுதான் பிரச்சனையின் சிகரமாகும். அந்த பல்கலையை அமெரிக்க அரசு இழுத்து மூடி விட்டதால், அதில் படிக்கச் சென்ற 1,500 இந்திய மாணவர்களின் - இவர்களில் பெரும்பாலோர் ஆந்திராவில் இருந்து சென்றவர்கள் - அவர்கள் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.
வெளி நாடுகளுக்கு பணியாற்றச் செல்லும் தொழில் திறன் பெற்ற தொழிலாளர்களாகட்டும், உரிய கல்வித் தகுதியுடைய மாணவர்களாகட்டும், அவர்களாகவே விசா முதலியவற்றைப் பெற்றுக்கொண்டு சென்று பணியாற்றிடும், கல்வி கற்றிடும் நிலை உள்ளது. இவர்களுக்கு உதவுவதாகக் கூறி பயண முகவர்கள் தான் முன்வருகிறார்கள். அவர்கள் இடையில் புகுந்து செய்யும் குழப்படியால் மலேசியாவிலும், துபாய் உள்ளிட்ட மத்திய கிழக்காசிய நாடுகளிலும் சட்டச் சிக்கலில் மாட்டிக்கொண்ட தொழிலாளர்கள் பல்லாயிரம். இப்போது மாணவர்களும் அப்படிப்பட்ட சட்டச் சிக்கல்களில் மாட்டிக்கொள்ளும் அவல நிலை உருவாகியுள்ளது.
டிரை-வாலி பல்கலையில் படிக்கச் சென்ற மாணவர்கள் பல இலட்சங்களைக் கொடுத்து விசா பெற்று சென்றது மட்டுமன்றி, அதன் பிறகு அங்கு பணியாற்றிக் கொண்டே (அப்படி ஒரு வாழ்நிலைக் கட்டாயம் உள்ளதால்) படிக்க முற்பட்டு, முறை தவறிய வழியில் பணி அனுமதியும் (Work Permit) பெற்று பல நகரங்களில் சென்று பணியாற்றியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு முகவரி வழங்கிய முறைகேட்டையும் அந்த பல்கலை கழகம் செய்துள்ளது.
இப்போது அந்தப் பல்கலை மூடப்பட்டுவிட்டதால், அங்கு படித்துக் கொண்டிருந்த 1,500 இந்திய மாணவர்களின் நிலை கேள்விக்குறியாகிவிட்ட நிலையில், அது பற்றி அங்குள்ள இந்திய துணைத் தூதரகத்திடம் அறிக்கை பெற்று அளிக்குமாறு அயலுறவு அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்தியத் தூதரக அறிக்கை பெற்று, அதன் அடிப்படையில் அமெரிக்க அரசுடன் பேசி இந்திய அயலுறவு அமைச்சகத்தால் என்ன சாதிக்க முடியும் என்பது ஐயத்திற்கிடமானதே. ஏற்கனவே விசா கட்டணங்களை அமெரிக்க அரசு தாறுமாறாக உயர்த்தியது குறித்து பேசி முடிவு காண்போம் என்று கூறியது இந்திய அரசு. ஒபாமா கூட இந்தியா வந்தார், ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. இப்படிப்பட்ட நிலை இந்த பல்கலை விவகாரத்திலும் நடக்கலாம்.
(இந்த ஒரு விவகாரம் மட்டுமல்ல, அமெரிக்காவின் அண்டை நாடான மெக்சிகோவில் இருந்து இரகசியமாக எல்லைத் தாண்டிச் சென்று அமெரிக்காவில் பணிபுரிவோரில் இந்தியர்களும் அதிகரித்து வருகிறார்கள் என்கிற செய்தி தெரிந்தது)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக