இதுநாள் வரை மகாராஷ்ட்ரா ஊழல் அரசியல்வாதிகளின் கண்களில் விரலைவிட்டு ஆட்டி வந்த அண்ணா ஹசாரே, தற்போது டெல்லியில் மையம் கொண்டிருப்பதை பார்த்து மத்திய அரசு கிலி பிடித்து போய் உள்ளது.
ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா வரைவு குழுவில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மட்டுமல்லாது, குடிமக்கள் பிரதிநிதிகளையும் இடம்பெறச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லியில் இன்று தொடர்ந்து 3 ஆவது நாளாக உண்ணாவிரதம் இருந்து வரும் ஹசாரேவுக்கு நாடு முழுவதும் இருந்து ஆதரவு பெருகுகிறது.
அதிலும் ஸ்பெக்ட்ரம் ஊழலின் முடை நாற்றம் காரணமாக ஒட்டுமொத்த இந்தியாவும் அதிர்ந்துபோய் இருக்கும் இந்த தருணத்தில், ஹசாரே சரியான சமயத்தில் சாட்டையை சுழற்றி உள்ளார்.
சரி இப்படி பிரதமர் அலுவலகத்தையே மிரள வைத்திருக்கும் இந்த அண்ணா ஹசாரே யார்?
அண்ணா ஹசாரே என்றழைக்கப்படும் முனைவர் கிசான் பாபுராவ் ஹசாரே, 1938 ஆம் ஆண்டு ஜூன் 15 ஆம் தேதியன்று மகராஷ்ட்ரா மாநிலத்தில் பிறந்தவர்.
தன்னை ஒரு 'ஃபக்கிரி'என்றழைத்துக் கொள்ளும் அண்ணா ஹசாரேவின் ஆரம்பக் கால வாழ்க்கை துயரம் மிகுந்ததாகவே இருந்தது.
நான் ஏன் வாழ வேண்டும், ஏன் இந்த வாழ்க்கை என வெறுப்பின் உச்சத்தில் ஒருமுறை தற்கொலை செய்யும் முடிவில் இரண்டுப் பக்கத்துக்கு தான் ஏன் தற்கொலை செய்யப் போகின்றேன் என எழுதி வைத்து விட்டு தற்கொலைக்கு கூட முயன்றுள்ளார்.ஆனால் அம்முயற்சி கைக்கூடவில்லை.
பின்னர் ஒரு முறை டெல்லி ரயில் நிலையத்துக்கு சென்றிருந்தபோது அவர் படித்த சுவாமி விவேகானந்தரின் புத்தகம்தான் அவரது வாழ்க்கையை புரட்டிப்போட்டது.
போராடுவது அவருக்குப் புதிதல்ல.இந்திய இராணுவத்தில் 15 ஆண்டு காலம் எல்லையில் நின்றுப் போராடியவர் தான் அண்ணா ஹசாரே. 1962 ல் இந்தோ - சீன யுத்தத்தில் இளைஞர்கள் பங்கேற்கும் படி அரசு விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கி தம்மை இராணுவத்தில் இணைத்துக் கொண்டவர் அண்ணா ஹசாரே.
ஆனால் இராணுவத்தில் அவர் மனம் முழுமையாக ஈடுபடவில்லை. தமது வாழ்வின் நோக்கம் என்ன் என்பதே தெரியாமல் இருந்த நிலையில், தானாகவே தமது இராணுவப் பணிக்கு விடை சொல்லிவிட்டு மகாராஷ்ட்ராவில் உள்ள தமது சொந்த ஊரான ராலேகாவன் சித்திக்கு 1978 ஆம் ஆண்டு தனது 39 ஆவது வயதில் திரும்பினார். அப்போது தான் தமது கிராம மக்கள் தமது வாழ்க்கையை வாழவே துன்பப்படுகின்றார்கள் என்பதை பார்த்து மனம் பதைபதைத்தார்.
அவர்களின் வாழ்வை மாற்ற, துன்பத்தைத் துடைக்க உலகிலேயே முன்மாதிரியான மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றி பெரும் சாதனை புரிந்தார்.
அதனைத் தொடர்ந்து தமது கிராமத்து மக்களுக்காக அடிப்படை வசதிகளையும் அரசிடம் பெற்றுத்தர முயன்றார். ஆனால் ஆரம்பத்தில் அது அவ்வளாவு எளிதாக இருக்கவில்லை. லஞ்சமும், ஊழலும் ஏழை எளியவர்களை துரத்தியது. அரசுக் கொடுக்கும் குறைந்தப் பட்ச உதவிகள் கூட மக்களுக்கு எட்டாக்கனியாக இருந்தது கண்டு வெகுண்டு எழுந்தார் ஹசாரே.
இப்போது தான் முதன் முறையாக லஞ்சத்துக்கு எதிரான போராட்டத்தை ஹசாரே தொடங்கினார். இந்த லஞ்சம் தான் கிராமப்புற இந்தியாவின் வளர்ச்சிக்கு முட்டுக் கட்டையாக இருந்தது என்பதை உணர்ந்த அவர் ஊழலுக்கு எதிரான மக்கள் போராட்டம் என்ற அமைப்பை நிறுவி போராட ஆரம்பித்தார். காந்திய வழிகளிலான அவரதுப் போராட்டம் உண்ணாவிரதம் இருப்பதும், அரசியல் வாதிகளை குறிவைப்பதுமாகவே இருந்தது.
மகாராஷ்ட்ராவில் அவரது போராட்டத்தைக் கண்டு மிரண்ட அப்போது ஆட்சியில் இருந்த சிவசேனா- பா.ஜனதா கூட்டணி அரசு, அவருக்கு கடும் நெருக்கடிகளை கொடுத்தன.
ஆனாலும் அசாரத அவரது போராட்டத்தின் உக்கிரம் தாங்க முடியாமல், 1995-1996 ஆம் ஆண்டுகளில் ஊழல் செய்த சிவசேனா - பா.ஜனதா அமைச்சர்களை பதவி இறங்க வைத்தார்.
அத்தோடு நிற்காமல் 2003 ஆம் ஆண்டு காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் அரசின் நான்கு அமைச்சர்கள் செய்த ஊழலுக்கு எதிராக மாநில அரசை வைத்தே விசாரணைக் குழு ஒன்றை ஏற்பாடு செய்ய வைத்தார்.
இவரைக் கண்டு சிவசேனா தலைவர் பால்தாக்கரே மற்றும் மகாராஷ்ட்ராவை சேர்ந்த மத்திய அமைச்சர் ஷரத் பவார் போன்ற தலைவர்களே மிரண்டுபோனதுண்டு.
அவ்வளவு ஏன் தற்போது லோபால் மசோதா வரைவு குழுவுக்கான மத்திய அமைச்சர்கள் குழுவில், மகாராஷ்ட்ராவில் ஏகப்பட்ட நிலங்களை குவித்து வைத்திருக்கும் ஷரத் பவார் இடம்பெறக் கூடாது என்று ஹசாரே தெரிவித்த எதிர்ப்பு காரணமாக, பவார் அமைச்சர் குழுவிலிருந்தே ஓட்டம்பிடித்துவிட்டார்.
ஊழலால் இந்திய மக்கள் அனைவருமே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஹசாரேவுக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு கரம் அவசியமான ஒன்று!
எனது கோவை மண்ணை சார்ந்தவர்கள் இன்று உண்ணாவிரதம் இருந்து தமிழகத்தையே திரும்பி பார்க்க வைக்கின்றனர்.
ஆக்கம் & எழுத்துடன் : கோவை ராமநாதன் நன்றி : ஆங்கில நாளிதழ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக