தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

12/05/2013

மனம் நிம்மதி இல்லாமல்

ரமண மகரிஷி என்று நினைக்கிறேன். வேறு யார் சொல்லி இருந்தாலும் இப்போதைக்கு ரமண மகரிஷி என்றே வைத்துக் கொள்வோம். ஒரு முறை ரமண மகரிஷி ஆற்றில் குளிக்கச் செல்கிறார். அப்போது கரையோரம் உள்ள ஒரு தேள் அவரை கொட்டி விடுகிறது. அவர் அந்த தேளை எடுத்து ஆற்றில் விடுகிறார். அது மீண்டும் வந்து அவரைக் கொட்டுகிறது. அவர் மீண்டும் ஆற்றில் விடுகிறார். அது மீண்டும்..... இதை அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் ரமண மகரிஷியைப் பார்த்து கேட்கிறார்:

" ஏன் சாமி, அதுதான் திரும்ப திரும்ப உங்களைக் கொட்டுகிறது. பின் ஏன் அதைக் கொல்லாமல் அதை பிடித்து பிடித்து ஆற்றில் விடுகிறீர்கள்?"

ரமண மகரிஷி இப்படி பதில் சொன்னாறாம்,

" கொட்டுவது அதன் குணம். பிறருக்கு உதவுவது என் குணம். அது அதனுடைய செயலில் உறுதியாக இருக்கும் போது, நான் மட்டும் ஏன் என்னை மாற்றிக் கொள்ள வேண்டும்?"

இப்போது விசயத்திற்கு வருவோம். நான் எப்படி எழுதுகிறேனோ அதே போல் தான் என் வாழ்க்கையும். எழுதுவதில் என்னை உத்தமனாக காட்டிக்கொண்டு வாழ்க்கையை வேறு மாதிரி வாழ்பவன் அல்ல நான். சிறு வயதிலிருந்தே பிறருக்கு உதவும் குணம் படைத்தவன் நான். அந்த அந்த வயதில் முடிந்த அனைத்து உதவிகளையும் அனைவருக்கும் செய்திருக்கிறேன். என்னுடன் பழகியவர்களுக்கு இது நன்றாகத் தெரியும். உதவுவதற்கு நேரம் காலம் பார்க்காதவன் நான். எந்த நேரத்தில் என் வீட்டு கதவைத் தட்டினாலும் உடனெ என்ன ஏது என்று கேட்காமலே உதவுபவன். ஆனால் எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் உதவிகளை செய்பவன் நான்.

உண்மையான காரணத்திற்காக பணம் இல்லை என்று என்னிடம் கேட்டவர்களுக்கு பண உதவி செய்திருக்கிறேன். . பல பேருக்கு வேலை வாங்கி கொடுத்து இருக்கிறேன். என் நண்பர்கள் அனைவரும் நல்ல உடல் நலத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காக ப நான் எங்காவது வெளியூர் செல்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். அங்கு சென்றவுடன், நண்பர்கள் குடும்பங்களுக்கு ஏதாவது தேவை என்றால், பல வேலைகளுக்கு நடுவே அவர்கள் கேட்ட பொருட்களை வாங்கி அவர்கள் வீட்டிற்கே சென்று கொடுப்பேன். இந்தியத் தொழிலாளிகள் எங்கள் நிறுவனத்தில் வேலை பார்த்தார்கள். யாருக்கு என்ன பிரச்சனை என்றாலும் முதலில் எல்லோரும் என்னிடம் தான் வருவார்கள். அத்தனை பேருக்கும் உதவி இருக்கிறேன். இப்படி பல உதவிகள். இது தான் நான்.

ஏன் இந்த தற்பெருமை பதிவு. காரணம் இருக்கிறது. எதையும் நான் சும்மா பொழுது போக்கிற்காக எழுதுவது இல்லை. என்னுடைய பதிவுகள் எல்லாம் அடுத்தவர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவட்டுமே என்றுதான் எழுதுகிறேன். என் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் போல் யாருக்கேனும் ஏதேனும் நடந்தால், என்னுடைய அனுபவங்களை வைத்து அவர்களால் சரியான முடிவு நிச்சயம் எடுக்க முடியும் என்றே எழுதுகிறேன். இவ்வளவு அடுத்தவர்களுக்கு உதவும் என்னை ஒரு சிறு செயலால் ஒருவர் என்னை அவமானப் படுத்தி விட்டார். படிப்பவர்களுக்கு இது ஒரு சாதாரண விசயமாத்தான் தெரியும். அனுபவித்த எனக்குத்தான் இதன் வலி தெரியும்.

நான் வாழ்க்கையில் ஒரு குறிக்கோளுடன் வாழும் மனிதன். ஒரு ஆர்கனைஸ்டு பெர்சன். அவருக்கும் பல உதவிகள் செய்திருக்கிறேன். அவர்கள் வீட்டிற்கு தேவையானதை வாங்கி அவர்கள் வீட்டிற்கே சென்று கொடுத்துள்ளேன். பல முறை பல உதவிகள் செய்திருக்கிறேன். அப்படிப்பட்டவர் வேறு ஊறுக்கு சென்றிருந்த போது, நான் தெரியாத்தனமாக, அவரிடம் ஒரு பொருள் வாங்கி வரச் சொன்னேன். அதன் எடை ஒரு 25 கிராம் இருக்கலாம். தங்கம் இல்லை. அவர் அதை வாங்கி வந்தார். மற்றவர்களுக்கு நான் ஏதேனும் வாங்கி வந்தால் அவர்கள் வீட்டுக்கே சென்று கொடுப்பேன். எனக்காக யாரேனும் ஏதாவது வாங்கி வந்தாலும் நானே சென்று வாங்கிக்கொள்வேன். அதே போல் அந்த நபரிடமும் வந்து வாங்கிக் கொள்வதாக சொல்லி இருந்தேன்.

ஆனால் கடுமையான மழை காரணமாக உடனே செல்ல முடியவில்லை. அப்படியே நாட்களை தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தேன். பிறகு இருமுறை அவர் வீட்டிற்கு சென்ற போது அவர் இல்லை. நேற்று முன் தினம் என் வாழ்க்கையில் ஒரு முக்கியமான நாள். அதற்காக அந்த பொருள் தேவைப்பட்டது. அதற்காக காலை 6.30 மணிக்கு அவருக்கு போன் செய்து, "அந்தப் பொருளை எடுத்து வந்து விடுங்கள். நான் அங்கே வாங்கிக் கொள்கிறேன்" என்றேன். அதற்கு அவர் சொன்ன பதில்தான் என்னை இந்தப் பதிவு எழுதத் தூண்டியது.

" வாட் நான்ஸன்ஸ். நீங்கதான் வாங்கி வரச் சொன்னீங்க. உங்களுக்குத் தேவையினா நீங்களே வந்து வீட்டுல வந்து வாங்கிக்கங்க. நான் என்ன நீ வைத்த வேலை ஆளா. அங்கே எல்லாம் எடுத்து வர முடியாது"

" நான் எல்லாம் உங்களுக்கு......"

" அது நீ. நான் அப்படி இல்லை" என்று சொல்லி போனை துண்டித்து விட்டார். காலையில் நல்ல நாளும் அதுவுமாக அவமானப் படுத்தப் பட்டேன். சொல்லால் அடிக்கப் பட்டேன். அந்த பொருளின் மதிப்பு 5000 ரூபாய் இருக்கலாம். அதன் எடை 25 கிராம் தான். ஒருவரால் அதை எடுத்து வர முடியாதா? அதை வாங்க நான் அவர்கள் வீட்டிற்குத்தான் செல்ல வேண்டுமா? நான் வந்து வாங்கிக்கொள்ள முடியாது என்று சொல்லி இருந்தால் கூட பரவாயில்லை அவர் பேசியதை சரி என்று ஒப்புக்கொள்வேன். மழைக் காரணத்தாலும், வேறு காரணங்களாலும் என்னால் செல்ல முடியவில்லை. அதுவும் இல்லாமல் அவர் எனக்காக தேடி வந்து கொடுக்க வேண்டியதில்லை. தினமும் ஒரு இடத்தில் இருவருமே சந்திக்க வேண்டிய சூழ் நிலை. அப்படி சந்திக்கும் போது கொடுத்தால் போதுமானது. ஆனால், ஏன் அப்படி அவர் செய்ய வில்லை? காரணம் ஈகோ. நான் என்ற இருமாப்பு. நான் எதற்கு அவ்னுக்கு எடுத்து வந்து கொடுக்க வேண்டும் என்ற குணம்???

யோசித்துக் கொண்டே  சென்றேன். என்னடா? ஆண்டவன் நம்மை இப்படி அவமானப் படும் சூழலுக்குத் தள்ளிவிட்டானே? என நினைத்தேன். ஆண்டவன் என்றைக்குமே என்னை கைவிட்டதில்லை. என்னை என்றுமே எந்த சமயத்திலும் எதிராளியிடம் தோற்குமாறு ஆண்டவன் செய்ததே இல்லை. யோசித்து பார்த்த போது அவர்கள் கடனாக எங்களிடம் வாங்கிய ஒரு பொருள் அவர்கள் வீட்டில் இருப்பது நினைவுக்கு வந்தது.

அவரை சந்திதவுடன், " நான் உங்கள் வீட்டில் வந்து அந்த பொருளை வாங்கிக் கொள்கிறேன். நீங்கள் எங்களிடம் வாங்கிய பொருளை எங்கள் வீட்டில் வந்து கொடுத்து விடுங்கள்" என்றேன்.

" அந்தப் பொருளையும் ஒரே பாக்கட்டில் வைத்துள்ளேன். நீங்கள் வீட்டிற்கு வந்தால் இரண்டையும் வாங்கிக் கொள்ளலாம்" என்றார்.

" இல்லை. இல்லை. நான் உங்கள் வீட்டில் வந்து வாங்கிக் கொள்கிறேன். உங்கள் பிரின்ஸிபில் படி நீங்கள் எங்களிடம் உபயோகப் படுத்த வாங்கிய அந்தப் பொருளை எங்கள் வீட்டில் வந்து கொடுத்து விடுங்கள்" என்றேன்.

" அப்படியானால் ஒன்று செய்கிறேன். உங்களிடம் வாங்கியதை உங்கள் வீட்டிற்கு வந்து கொடுத்து விடுகிறேன். உங்களுக்காக வாங்கிய பொருளை உங்களுக்கு கொடுக்க முடியாது. 5000 ரூபாய் எனக்கு நஷ்டமானாலும் பரவாயில்லை"

நீங்களே சொல்லுங்கள், இப்படிப்பட்ட சூழ்நிலையில் நான் எப்படி ரமண மகரிஷி போல் நடந்து கொள்ள முடியும்???

ஆனாலும் இவ்வாறு நடந்து கொண்டோமே என மனம் நிம்மதி இல்லாமல் தவிக்கிறது.

கருத்துகள் இல்லை: