தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

1/26/2013

திருப்பூர் புத்தக கண்காட்சி


திருப்பூர்  புத்தக கண்காட்சி வளாகத்திலிருந்து ....





பட்டியல் தயாரித்து வந்து புத்தகங்களை தேடி வாங்கும் பழக்கத்தை, புத்தக சந்தையில் காண முடிகிறது. வெளியூரில்  வசிப்போர் குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி, முகாமிட்டு புத்தகங்களை வாங்கி செல்கின்றனர்.
புத்தக கண்காட்சி அரங்கில்,  லட்சத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில், சுமார் ஒரு லட்சம்  புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன. கண்காட்சிக்கு, தினமும், பல ஆயிரம் பேர் வருகின்றனர். இதில், 50 சதவீதத்துக்கும் குறைவானவர்களே புத்தகங்களை தேடுவதாக, புத்தக விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.
அதிலும், திட்டமிட்டு புத்தகங்களை தேடுவோர் எண்ணிக்கை மிகவும் குறைவு. தேடுவோரில், புத்தகங்களுக்கான பட்டியலை தயாரித்து எடுத்து வந்து, குறிப்பிட்ட புத்தகங்களை வாங்கிச் சென்றவர்களை காண முடிந்தது.
இப்படி பட்டியல் தயாரித்து வந்தவர்களில் ஒருவர்,  இளங்கோவன். அவரிடம் கேட்ட போது, "நான் வேடிக்கை பார்க்க இங்கு வரவில்லை. பொழுது போக்கவும் வரவில்லை. எனக்கு, சில புத்தகங்கள் தேவைப்படுகின்றன. அவற்றைப் பற்றி முன்பே தெரிந்து பட்டியல் வைத்துள்ளேன். கடந்த ஆண்டு முழுவதும் இந்த பட்டியலை தயாரித்தேன்" என்றார்.
மேலும், "இதை வைத்துக்கொண்டு புத்தகத்தை தேடுகிறேன். அதில் கிடைத்தவற்றை வாங்கிக் கொள்கிறேன். இந்த தேடலுடன் புதிய புத்தகங்கள் ஏதாவது வந்துள்ளதா என்பதையும் கவனிக்கிறேன். இந்த ஆண்டு முதல், இந்த நடைமுறையை பின்பற்றி வருகிறேன். இது சுலபமாக இருக்கிறது" என்றார்.
இவர் போல் இல்லாமல், திட்டமிடாமல் வந்து, விரும்பிய புத்தகத்தை வாங்க முடியாமல் செல்பவர்களும் உண்டு. புத்தகங்களைத் தேடி வந்து, வெறுங்கையுடன் திரும்பி சென்றவர்  ஜான்சன். இவர் கூறுகையில், "மிகுந்த ஆர்வத்துடன் புத்தகங்களை தேடி வந்தேன்.
நவீன அறிவியல் சார்ந்த புத்தகங்களை படிப்பதில், எனக்கு விருப்பம் உண்டு. ஆனால், இந்த தலைப்பில் எந்த வகையான புத்தகங்கள் வந்துள்ளன என்பது குறித்து, எனக்கு பெரிய அளவில் தெரியாது. அவற்றை தேடி கண்டு பிடிப்பதிலும் சிரமம் உள்ளது" என்றார்.
மேலும், "புத்தக அட்டையில் உள்ள கருத்து அடிப்படையில், புத்தகங்களை தேர்வு செய்வதால் ஏமாற்றம்தான் மிஞ்சும் என்ற அனுபவம் எனக்கு உள்ளது. இந்த அடிப்படையில், நான் தேடி வந்தவற்றை கண்டுபிடிப்பதில் உள்ள சிரமங்களால், ஏமாற்றமாக உள்ளது" என்றார்.
நவீன விவசாயம், ஜோதிடம், சமையல் போன்ற புத்தகங்களை வாங்கியவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்ததை காண முடிந்தது. விவசாயம் சார்ந்த புத்தகங்களை வாங்கி கொண்டிருந்த அய்யப்பனிடம் கேட்ட போது, "பொதுவாக, எல்லா புத்தகங்களையும் வாசிக்கும் பழக்கம் எனக்கு உண்டு. இப்போது ஆரோக்கிய உணவு சார்ந்த சிந்தனை அதிகரித்து வருகிறது. நஞ்சு கலந்த உணவை சாப்பிடுவதால் தான் நோய்கள் அதிகரித்து வருவதாக கூறுகின்றனர்" என்றார். மேலும், "இது ஒரு வித பயத்தை ஏற்படுத்துகிறது. இதனால், உயிர் வேளாண்மை பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என்ற நோக்கில் இது போன்ற புத்தகங்களைத் தேடுகிறேன்.
 நான் எந்த செயலையும் நடைமுறைப்படுத்த முடியாது என்பது எனக்கு தெரிகிறது. ஆனால், நஞ்சில்லா வேளாண்மை பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள ஆர்வப்பட்டு இவற்றை வாங்குகிறேன்" என்றார்.
வெளிமாநிலங்களில் வசிக்கும் பலர், புத்தகங்களைத் தேடி சந்தைக்கு வந்திருந்தனர். பாபு கூறுகையில், "புத்தகங்கள் வாங்குவதற்கு என, குறிப்பிட்ட தொகையை நான் மாதம் தோறும் சேமிக்கிறேன். அந்த தொகையை மூலம், நான் விரும்பும் புத்தகங்களை வாங்கிக் கொள்கிறேன்.
நான் சமூகவியல் தொடர்பான கல்லூரி ஆசிரியராக பணியாற்றுவதால், அது சார்ந்த அறிவை வளர்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது. கல்லூரி நூலகத்தில் இது தொடர்பான புத்தகங்கள் வந்தாலும், வளர்ச்சி சார்ந்து உலகின் பல்வேறு மூலைகளிலும் நடக்கும் மாற்றங்களை தெரிந்து கொள்ளும் வகையிலான புத்தகங்களைத் தேடி இங்கு வருகிறேன்" என்றார்.


1/17/2013

சம்மதம் சொல்வதற்கில்லை

 

 

 என் முகம் நீ பார்த்ததில்லையே என்றேன்
உன் அகம் பார்த்திறுக்கின்றேனே என்றாய்.

என் குரல் நீ கேட்டதில்லையே என்றேன்.

உன் குணம் தெரிந்திருக்கின்றேனே என்றாய்.

என் நிறம் நீ அறிந்ததில்லையே என்றேன்

உன் நினைவிலேயே அலைகிறேனே என்றாய்.

இறு தியாய்


என் விருப்பத்தை நீ விரும்பவில்லையா என்றாய்

உன் செவி சேர்ந்திட மௌனமே கொண்டுள்ளேன் என்றேன்.

ஆனால்


இம்மௌனம் சம்மதம் சொல்வதற்கில்லை!

உன் காதல் பயணத்தை முடித்திடவே!

1/13/2013

பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

பழையன கழிதலும்

புதியன புகுதலும் நலமேயாம்

வாழையடி வாழையாய் வந்த

நல்லதோர் முதுமொழியாம்

தைமாதமதில் தைதிருநாள் பொங்கலதில்

விடியும் வேளை நாமெழுந்து நீராடி

நற்காலைப் பொழுதினிலே

பொங்கல் விழா தனிப்பெருந்

திருவிழாக்கோலம் பூணுகிறது.

தைப்பொங்கல் திருவிழா என்பது

ஒரு சமய விழா அல்ல!

தமிழரின் பண்பாட்டு விழா!

தமிழரின் தமிழ்ப் புத்தாண்டு

கொண்டாடும் நாள்!

அனைவருக்கும் இனிய

பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

1/12/2013

தேசிய இளைஞர் தினம்



150 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் காலை 6 மணி 33 நிமடங்களுக்கு,

அன்றைய கல்கத்தாவில் உதயமான இளைஞர்களின் சூரியன் சுவாமி

விவேகானந்தரின் நினைவாக இந்த நாள் தேசிய இளைஞர்கள் தினமாக

கொண்டாடப் படுகிறது. இன்று அந்தச் சூரியன் மறைந்திருந்தாலும் அவர்

புகழின் வெளிச்சம் மங்கவில்லை. சுவாமி விவேகானந்தர் ஓர் ஒப்பற்ற

இளைய சக்தி. மதத்தைக் கொண்டு மனிதம் வளர்த்தவர் .

உலகத்தை இந்து மதம் நோக்கி இழுத்தவர். மதத்தை மனித வாழ்வுக்கு,

மனிதகுல முன்னேற்றத்திற்குப் பயன்படுத்தியவர். அவரின் கருத்துக்களும்,

கொள்கைகளும் எந்த ஒரு மனிதனையும் செயல் வீரனாக, தன்னம்பிக்கை

உள்ளவனாக மாற்றவல்லவை. ஒரு சிறந்த சீடனுக்கும், தலைவனுக்கும்

மிகச் சிறந்த உதாரணமாக திகழ்ந்தவர். மத உணர்வை தூண்டாமல், மத

கலவரத்தை உண்டாக்காமல் அனைவருக்காகவும் வாழ்ந்தவர். அவர்

ஒட்டுமொத்த இளைஞர்களின் பிரதிநிதியாகவே பார்க்கப் பட்டார்.

அனைத்து இளைஞர்களுக்கும் நல்வழிகாட்டியாகவே வாழ்ந்தார். நமக்கு

முன்பிருந்தவர்கள் செய்த ஓர் நற்செயல் அவர் பிறந்த தினத்தை தேசிய

இளைஞர் தினமாக கொண்டாடுவது. ஆனால் இன்று எத்தனை இடங்களில்

விவேகானந்தர் பிறந்த நாள் கொண்டாடப்படும் என்பது கேள்விக்குறியே.

இன்றுள்ள மதத் தலைவர்களானாலும் சரி அல்லது வேறு எந்தக்

கூட்டத்தின் தலைவர்களானாலும் சரி, இளைஞர்களை அவர் வழி

நடத்தாவிட்டாலும் அவருக்கு எதிரான வழியில் நடத்தாமல் இருந்தாலே

போதும், அதுவே அவருக்கு செய்யும் மரியாதைதான். ஒரு நல்ல சீடன்

தான் நல்ல தலைவனாக முடியும். நமக்கு தெய்வ நம்பிக்கையோ, மத

நம்பிக்கையோ இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவரின் வாழ்வியல்

சிந்தனைகளையும், தன்னம்பிக்கை கருத்துக்களையும் ஏற்றால் ஏற்றம்

உண்டு. நல்ல சீடனாக கற்றுக்கொண்டு, நல்ல தலைவனாக கற்றுக்

கொடுப்போம்.


தேசிய இளைஞர் தின நல் வாழ்த்துக்கள்

1/06/2013

பெண்ணிற்கு


இலக்கணம் வகுத்தவன்

அழுது கொண்டிருக்கிறான் !


பெண்ணையே

தெய்வமென போற்றியவன்

துடித்துக் கொண்டிருக்கிறான் !


பெண்ணையும்

அவளின் அங்கங்களையும்

விழி தராசுகளில் எடைபோட்டு

களவாடப் பார்க்கும்

கள்வர்களின் கைகளில்

எப்போது தீப்பிடிக்கும்?


நடந்தால்

சிரித்தால்

 குனிந்து எதையாவது

எடுத்தால் கூட

போக உணவு கிட்டிய மகிழ்ச்சியில்
ஓர் ஆணினம்.


இந்தியப் பெண்கள்

அறிவில் - அழகில்

வல்லவர்கள் தாம்!

ஆனால்...

நெறிதவறா சிற்பங்கள்!


ஒவ்வொரு பெற்றோரும்

பெண்ணைப் பிரசவித்து

கூடவே

ஒரு நெருப்பு வளையத்தையும்

இட்டே வளர்க்கின்றனர்...


பெண்ணினம்

அடிமை என்பது பழையது !

பெண்ணினம்

போர் வாள் என்பது புதியது !


ஓர் ஆணின்

வாழ்வை விடவும்
பெண்ணின் வாழ்வு

சுமை கூடியது

சுவையானது.

பெண்ணைப் பெறுவதனால்

இனிவரும் சந்ததி

விருத்தியடையும்

முக்தியடையும் என்பது உண்மை.


பெண்ணின்


வயிற்றிலிருந்து வந்து


பெண்ணையே குறிவைக்கும்

மானுடம் இனி சாகும்.


இது ஓர் ஆண் கருவுற்று

பிரசவித்தது போலுணர்ந்தால் மட்டுமே

பெண்ணின் மகத்துவம்

ஆண்மன அடியாழத்திற்குள்

செல்லும்.


பெண்ணின் கற்பு

சிதைக்கப்படுமாயின்

இனிவரும்

பூகம்பம் கூட அவனை
             விழுங்கிவிடும் என்பது திண்ணம்.