தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

8/31/2011

ரமலான் சிந்தனை





தாயார் பெயர் சுமைய்யா(ரழி) தந்தை பெயர் யாஸிர்(ரழி). யாஸிர்(ரழி) தன் தொலைந்து விட்ட சகோதரரைத் தேடியலைந்து மக்கா வந்து சேர்கிறார்.

மக்ஸுமி கோத்திரத்தில் அடிமைப் பெண்ணாயிருந்த சுமையா (ரழி) அவர்களை அபூஹுதைஃபா அவர்கள் யாஸிர்(ரழி) அவர்களுக்கு மனமுடித்து வைக்கிறார். இவர்களின் புதல்வரே அம்மார்(ரழி). இணைவைப்பாளர்களுக்கு இடையில் ஏகத்துவப் பிரச்சாரம் துவக்கப்படாத அந்நாளில் ஏகத்துவத்தின் மகிமையை உணர்ந்த யாஸிர்(ரழி) சுமைய்யா(ரழி) தம்பதியினர் இஸ்லாத்தில் இணைந்தனர். ஆரம்பத்தில் இஸ்லாத்தில் இணைந்தவர்களில் ஆறாவது நபர் சுமைய்யா(ரழி) ஆவார். குரைஷிகள் இஸ்லாத்தில் இணைந்தோரை துன்புறுத்தினர் அபூஜஹ்ல் போன்ற இணைவைப்பாளர்களில் முக்கியமானோர் மூதாதையர்களின் மூடப் பழக்க வழக்கங்களையும், இணைவைப்பையும் நியாயப்படுத்தி ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்ட ஏழைக் குடும்பத்தினரை அடிமைகளை கொடுமைப் படுத்தினர். அம்மாரின் குடும்பமும் இக்கொடுமைகளை சந்திப்பதில் விதிவிலக்கு பெறவில்லை. சித்தரவதையின் உச்ச கட்டமாக அம்மாரின் தாயார் சுமையா(ரழி) அபூஜஹலால் மர்மஸ்தானத்தில் ஈட்டியால் குத்திக் கொல்லப்பட்டு இஸ்லாத்தில் முதல் ஷஹீதான பெண் என்ற பெருமையடைந்தார். அது போலவே யாஸிர்(ரழி) அவர்களும். இணைவைப்பாளர்களால் இரக்கமின்றி கொல்லப்பட்டு ஷஹீதானார்கள்.

வீரத்தாயின் மகனான பெற்றோரின் தியாக மரணத்திற்குப் பின் அம்மார்(ரழி) ஏகத்துவக் கொள்கையை இதயத்தில் ஏந்தியவராக இணைவைப்பாளர்களின் எதிர்ப்பை மனத்துணிவுடன் சந்திக்கிறார். சுடு மணலில் ஆடையின்றி கிடத்தப்பட்ட அம்மார்(ரழி) ஈமானிய உறுதியுடன் திகழ்வதைக் கண்டு திடுக்குற்ற அபூஜஹ்ல் சித்ரவதைகளை அதிகரித்து இணைவைக்கும் படி கூறுகிறான். மறுக்கிறார் அம்மார்(ரழி). தண்ணீரில் தலையை முக்கி மூர்ச்சையாக்கின்றனர் இணைவைப்பாளர்களால் உயிர் போகும் அந்நிலையில் அம்மார்(ரழி) அவர்களை நபிகளாரின் ஏகத்துவக் கொள்கையை இகழ்ந்துரைக்க ஏவுகின்றனர். அவ்வாறே செய்கின்றார் அம்மார்(ரழி) அவர்கள். விட்டு விடுகின்றனர். அழுதவாறு நபிகளாரிடம் வந்த அம்மார்(ரழி) நான் இணைவைப்பு வார்த்தைகளை கூறிவிட்டேன் எனக் கூற அப்போது எவர் ஈமான் கொண்டபின் அல்லாஹ்வை நிராகரிக்கிறாரோ அவர் (மீது அல்லாஹ்வின் கோபம் இருக்கிறது) - அவருடைய உள்ளம் ஈமானைக் கொண்டு அமைதி கொண்டிருக்கும் நிலையில் யார் நிர்ப்பந்திக்கப்படுகிறாரோ அவரைத் தவிர - (எனவே அவர் மீது குற்றமில்லை) ஆனால் (நிர்ப்பந்தம் யாதும் இல்லாமல்) எவருடைய நெஞ்சம் கு.ப்ரைக்கொண்டு விரிவாகி இருக்கிறதோ - இத்தகையோர் மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாகும்; இன்னும் அவர்களுக்குக் கொடிய வேதனையும் உண்டு. (16:106) என்ற வசனம் இறங்கியது.

அம்மார்(ரழி) அவர்களை தீயிலிட்டு பொசுக்குவார்கள். அப்பொழுது நபி இப்ராகீம்(அலை) அவர்களுக்கு நெருப்பை குளிரச் செய்தது போல் இவருக்கும் குளிரச் செய் என நபி(ஸல்)துஆ செய்தார்கள் என்று அம்ரு இப்னு மைமூன்(ரழி) கூறுகின்றார்கள். அம்மாரின் ஈமானிய உறுதி இறைநம்பிக்கை அவரின் எலும்புகளுக்குள்ளும் ஊடுறுவியுள்ளது. யார் அம்மாருடன் பகை கொள்கிறாரோ அவர் அல்லாஹ்வுடன் பகை கொள்கிறார் என்ற நபி மொழியைச் செவியுற்ற காலித் பின் வலீத்(ரழி) அம்மார்(ரழி)அவர்களுடன் இருந்த மனப் பிணக்கை நீக்கி சமாதானம் செய்து கொண்டார்கள்.. சிறந்த போர் வீரரான அம்மார்(ரழி) அபூபக்கர்(ரழி)ஆட்சியில் நிகழ்ந்த யமாமா, பாரசீகப் போரில் கலந்து கொண்டார்கள். யமாமா போரில் அம்மார்(ரழி), முஸ்லீம்களே ஏன் சுவனத்தை விட்டும் வெருண்டோடுகிறீர்கள் என போர் வீரர்களுக்கு உற்சாக மூட்டினார். அப்போரில் அம்மார்(ரழி)அவர்களின் ஒரு காது துண்டிக்கப்பட்டது. அப்படியும் அயராது போரிட்டார்.

உமர்(ரழி) ஆட்சி காலத்தில் கூஃபாவின் ஆளுனராக நியமிக்கப்பட்ட அம்மார்(ரழி) அவர்களை ஒருவன் ஒற்றைச் செவியன் எனக் கூறினான். அவனை அம்மார்(ரழி)அவர்கள் தண்டிக்கவில்லை. ஹுதைபத்துல் யமான்(ரழி) அவர்களிடம் அவருடைய மரணவேளையில் யாரைப் பின்பற்றுவது என மக்கள் கேட்டதற்கு அம்மார்(ரழி) அவர்களை பின்பற்றுங்கள். எங்கு உண்மை உள்ளதோ அங்கு அம்மார்(ரழி) இருப்பார் எனக் கூறினார்கள். ஹிஜ்ரத்க்கு பின் மதீனாவில் பள்ளி கட்டும் பணியில் அம்மார்(ரழி) இருமடங்கு சுமை சுமந்து வருவார்கள். புழுதி படிந்த அவர்களது மேனியையும் முகத்தையும் நபி(ஸல்)அவர்கள் தம் திருக்கரங்களால் துடைத்திருக்கிறார்கள். (புகாரி)


அம்மார்(ரழி) அவர்கள் அக்கிரமக்காரர்களால் கொல்லப்படுவார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். ஒருமுறை சுவர் இடிந்து விழுந்து மூர்ச்சையான அம்மார்(ரழி) அவர்களைக் குறித்து நபித்தோழர்கள் அவர் இறந்து விட்டதாக எண்ண மீண்டும் நபி(ஸல்) அவர்கள் சுமையாவின் மகனை அக்கிரமக் காரர்கள் கொலை செய்யப் போகின்றனர் எனக் கூறினார்கள். ஹிஜ்ரி 37 ல் அலி(ரழி) அவர்களுக்கும் முஆவியா(ரழி) அவர்களுக்கும்மிடையே நிகழ்ந்த ஸிப்பீன் போரில் அலி(ரழி)அவர்கள் படையில் பங்கெடுத்திருந்த அம்மார்(ரழி)அவர்கள் தனது 93 வது வயதில் அப்போரில் கொல்லப்படுகிறார்கள். இரத்தம் தோய்ந்த துணியுடன் கபனிடப் பட்டார்கள். அம்மாரை கான சுவனம் ஆசைப்படுகிறது-திர்மிதியில் காணப்படும் நபி மொழி.


படிப்பினை:
உங்களில் (அல்லாஹ்வின் பாதையில் உறுதியாகப்) போர் புரிபவர்கள் யார் என்றும், (அக்காலை) பொறுமையைக் கடைப்பிடிப்பவர்கள் யார் என்றும் அல்லாஹ் (பரிசோதித்து) அறியாமல் நீங்கள் சுவனபதியில் நுழைந்து விடலாம் என்று எண்ணிக் கொண்டு இருக்கின்றீர்களா? 3:142 வசனத்திற்கு ஒப்ப வாழ்ந்த அம்மார்(ரழி) அவர்களின் வாழ்விலிருந்து நாம் பெறும் படிப்பினை ஈமானிய உறுதியே. ஈமான் கொண்டு இஸ்லாத்தை ஏற்றது முதல் இஸ்லாம் மேலோங்கவேண்டும். சத்தியம் வெல்ல வேண்டும் என்ற ஒரே குறிக்கோளில் தம் உடலாலும், உள்ளத்தாலும் போராடி தமது 93 வது வயதிலும் வாளேந்திப் போர் புரிந்து தம் உயிரையும் அல்லாஹ்விற்காகத் துறந்த தியாகச் செம்மல் அம்மார்(ரழி) அவர்களைப் போன்றே நாமும், நம் உடல், பொருள், ஆவி அனைத்தையும் அல்லாஹ்விற்காகவே அர்பணிக்கக் கூடிய மக்களாக நம்மை ஆக்கியருள வல்ல நாயனிடமே பிரார்த்திப்போம்.

நன்றி : அதிரைநிருபர் குழு



8/24/2011

தையா… சித்திரையா? எது உண்மை



தமிழ்புத்தாண்டு பற்றிய குழப்பங்களுக்கு தீர்வு பெற இதைப் படியுங்கள். ஆரம்பமே மூலிகை வைத்தியன் மாதிரி இருக்கேனு நினைக்காதீங்க. நிஜமாவே சொல்றேன். படிங்க!!


சித்திரை 1 தான் தமிழ் புத்தாண்டு என நாம் கொண்டாடி வந்த ஆண்டுக் கணக்கு முறையைக் கவனத்தில் எடுத்துக் கொண்டால் அது சுழற்சி முறையில் இருக்கும். அறுபது ஆண்டுகள் மீண்டும் மீண்டும் வந்தபடியே இருக்கும். இந்த அறுபது ஆண்டுகளுக்கும் ‘பிரபவ’ முதல் ‘அட்சய’ என்று அறுபது பெயர்கள் இருக்கின்றன. இந்த அறுபது ஆண்டுகளின் பெயரில் ஒரு பெயர் கூடத் தமிழ்ப் பெயர் இல்லை!


இந்த அறுபது ஆண்டு சுழற்சி முறையைக் குறித்து முதலில் கவனிப்போம். இந்த முறை வடநாட்டு மன்னனான சாலிவாகனன் என்பவனால் கிறிஸ்துவுக்கு பின் 78ஆம் ஆண்டில் வடநாட்டில் ஏற்படுத்தப்பட்டது. கனிஷ்கன் என்ற வடநாட்டு அரசனால் இது ஏற்படுத்தப்பட்டது என்று கூறுவோரும் உண்டு. பின்னர் தென்னாட்டில் ஆரியர்களின் ஊடுருவலால், ஆட்சியால் இந்த ஆண்டு முறை படிப்படியாக பரப்பப்பட்டு நிலை நிறுத்தப்பட்டது.


எந்த ஓர் இனத்தவரின் ஆட்சி ஒரு நாட்டில் நிறுத்தப்படுகின்றதோ அந்த இனத்தவரின் பழக்க வழக்கங்கள், பண்பாடுகள், கலைகள் போன்றவை அந்த நாட்டினரின் பழக்க வழக்கங்களோடு கலந்து விடுவது இயல்பு. அந்த வகையில் இந்த சாலிவாகன முறை பின்னர் மெல்ல மெல்ல தமிழகத்தில் நடை முறைப் பழக்கத்திற்கு வந்து விட்டது. அறுபது ஆண்டு சுழற்சி முறை காரணமாக ஆரியர்களிடையே அறுபது வயது நிரம்பியவர்கள் ‘சஷ்டி பூர்த்தி’ என்ற அறுபதாண்டு விழாவைக் கொண்டாடும் வழக்கம் இருப்பதைக் கவனியுங்கள்.


மேலும் இந்த அறுபது ஆண்டுகளுக்கான விளக்கம் மிகுந்த ஆபாசம் நிறைந்ததாகும். அபிதான சிந்தாமணி என்ற நூலில் 1392ம் பக்கத்தில் கீழ்வருமாறு குறிப்பிடப்படுகின்றது.


ஒருமுறை நாரதமுனிவர், கடவுள் கிருஷ்ணனை “நீங்கள் அறுபதினாயிரம் கோபிகைகளுடன் கூடி இருக்கின்றீரே, எனக்கு ஒரு பெண்ணையாவது தரக்கூடாதா?” என்று கேட்டாராம். அதற்குக் கிருஷ்ணன், “நான் உடன் இல்லாமல் வீட்டில் தனியாய் இருக்கும் பெண்ணை நீ எடுத்துக்கொள்’ என்றாராம். இதற்கு நாரதர் உடன்பட்டு அறுபதாயிரம் வீடுகளிலும் சென்று பார்த்தார். ஆனால் எங்கும் கிருஷ்ணன் இல்லாத பெண்களைக் காண முடியாததால், நாரதர் மீண்டும் கிருஷ்ணனிடமே வந்து அவர் திருமேனியில் மோகம் கொண்டு அவரை நோக்கி “நான் உங்களிடமே பெண்ணாக இருந்து உறவு கொள்ள விரும்புகிறேன்” என்றார்.


கிருஷ்ணன் நாரதரை “யமுனையில் குளித்தால் பெண்ணாய் மாறுவாய்” எனச் சொல்ல, நாரதர் அவ்வாறே செய்து, ஓர் அழகுள்ள பெண்ணாக மாறினார். பின் கடவுள் கிருஷ்ணனுடன் அறுபது வருடம் கூடி, அறுபது மகன்களைப் பெற்றார். அவர்கள் ‘பிரபவ தொடங்கி அட்சய முடிய’ என பெயர் பெற்றார்கள். இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வருஷமாகும் வரம் பெற்றார்கள். இப்படிதான் சித்திரை1ல் ஆரம்பிக்கும் புத்தாண்டு வரலாறு செல்கிறது.


தமிழகத்தில் வானியலில் திறமையான அறிஞர்களை ‘அறிவர், கணி, கணியன்’ என அழைத்தார்கள். அரசனுடைய அவையில் பெரும் புத்தி படைத்த ‘கணி’கள் இருந்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகின்றது. ‘அறிவர்’கள் குறித்துத் தொல்காப்பியரும் குறிப்பிடுகின்றார்.


தமிழர்கள் காலத்தைக் கணித்ததைச் சுருக்கமாகப் பார்ப்போம்.


தமிழர்கள் இயற்கையை ஆதாரமாகக் கொண்டு காலத்தைப் பிரித்தார்கள். ஒரு நாளை கூட ஆறு சிறு பொழுதுகளாகத் தமிழர்கள் அன்றே பிரித்து வைத்தார்கள்.


‘வைகறை, காலை, நண்பகல், எற்பாடு, மாலை, யாமம்’ என்று அவற்றை அழைத்தார்கள். அது மட்டுமல்ல, அந்த ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பையும் அறுபது நாழிகைகளாகப் பகுத்துக் கணக்கிட்டார்கள். அதாவது ஒரு நாளில் ஆறு சிறுபொழுதுகள் உள்ளன. அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிவதற்கு அறுபது நாழிகைள் எடுக்கின்றன என்று தமிழர்கள் பண்டைக் காலத்தில் கணக்கிட்டார்கள். ஒரு நாழிகை என்பது தற்போதைய 24 நிமிடங்களைக் கொண்டதாகும்.


அதாவது பண்டைக் காலத் தமிழர்களது ஒரு நாட் பொழுதின் அறுபது நாழிகைகள் என்பன தற்போதைய கணக்கீடான 1440 நிமிடங்களோடு, அதாவது 24 மணிநேரத்தோடு அச்சாகப் பொருந்துகின்றது. தமிழர்கள் ஒரு நாள் பொழுதை, தற்போதைய நவீன காலத்தையும் விட, அன்றே மிக நுட்பமாகக் கணித்து வைத்திருந்தார்கள் என்பதே உண்மையுமாகும்.


பின்னாளில் வந்த ஆரியர்கள் ஓர் ஆண்டை நான்கு பருவங்களாக மட்டும்தான் வகுத்தார்கள். ஆனால் பண்டைக்காலத் தமிழர்களோ, தமக்குரிய ஆண்டை, அந்த ஆண்டுக்குரிய தமது வாழ்வை, ஆறு பருவங்களாக வகுத்திருந்தார்கள்.


1. இளவேனில் – ( தை-மாசி மாதங்களுக்குரியது)


2. முதுவேனில் – (பங்குனி – சித்திரை மாதங்களுக்குரியது)


3. கார் – (வைகாசி – ஆனி மாதங்களுக்குரியது)


4. கூதிர் – (ஆடி – ஆவணி மாதங்களுக்குரியது.)


5. முன்பனி – (புரட்டாசி – ஐப்பசி மாதங்களுக்குரியது)


6. பின்பனி – (கார்த்திகை – மார்கழி மாதங்களுக்குரியது)


காலத்தை, அறுபது நாழிகைகைளாகவும், ஆறு சிறு பொழுதுகளாகவும், ஆறு (seasons) பருவங்களாகவும் பகுத்த பண்டைத் தமிழன் தன்னுடைய புத்தாண்டு வாழ்வை இளவேனிற் காலத்தில்தான் தொடங்குகின்றான். இங்கே ஒரு மிக முக்கியமான விசயத்தை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்!


பண்பாட்டுப் பெருமை கொண்ட மற்றைய பல இனத்தவர்களும், தங்களுடைய புத்தாண்டு வாழ்வை, தங்களுடைய இளவேனிற் காலங்களில்தான் ஆரம்பிக்கின்றார்கள். தமிழர்கள் மட்டுமல்ல, சீனர்களும், ஜப்பானியர்களும், கொரியர்களும், மஞ்சூரியர்களும் என, பல கோடி இன மக்கள் – தொன்மையான பண்பாட்டு வாழ்வினைக் கொண்ட பெருமை வாய்ந்த மக்கள்- தங்களுடைய இளவேனிற் காலத்தையே தமது புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றார்கள்.


இடையில் தமிழர் மட்டும் மாறி விட்டோம்! இடையில் வந்த இடைச்செருகலால் வந்த வினை இது. நம் இளவேனில் காலம் தை மாதம்தான். அதனால்தான் தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு என்கிறோம் (500 க்கும் மேற்பட்ட தமிழறிஞர்களின் ஆராய்ச்சி முடிவும் இதுதான். இதன் அடிப்படையிலேயே தை மாதத்தை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்தார் அன்றைய முதல்வர் கருணாநிதி).


தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாய் அறிவித்த கருணாநிதியைப் பிடிக்காத பலர் சித்திரை முதல் நாளை தான் தமிழ் புத்தாண்டாகக் கொண்டாடுவேன் எனப் பிடிவாதமாக இருக்கிறார்கள்.


ஜெயலலிதா சித்திரை 1 அன்று புத்தாண்டு வாழ்த்து சொல்வதில் ஆச்சரியமில்லை. அந்த அம்மையாருக்கு இதெல்லாம் தெரிந்தால்தானே! நமக்கேனும் கொஞ்சம் சிந்திக்கும் திறன் வேண்டும். நமக்குப் பிடிக்காதவர் நம் உண்ணும் சோற்றை, “சோறு” எனச் சொன்னான் என்பதற்காக நம் சோறு மலம் ஆகி விடாது. நமக்குப் பிடிக்காதவர்கள் சொன்னாலும் உண்மை உண்மையே. குறைந்தபட்சம் கீழே பாரதிதாசன் சொல்வதையாவது கேளுங்கள்…


“நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு
அண்டிப்பிழைக்க வந்த ஆரியக் கூட்டம் கற்பித்ததே
அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழனுக்கு
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!”


-பாவேந்தர் பாரதிதாசன்.

குறிப்பு : நான் படித்தவை உங்களுடன் பகிரிந்து கொண்டேன் ...

8/23/2011

இன்றைய சிந்தனை

வணங்க ஆரம்பிக்கும் போதே வளர ஆரம்பிக்கிறோம் .

பணிவான சொற்கள் வாழ்க்கையில் பாதையை எளிமையாக்குகிறது

யார் மனதையும் வேதனைப்படுத்தாத வாழ்கையும் சாதனைதான் .

நல்லவர்களோடு நட்பு கொள்வதன மூலம் நாமும் அவர்களில் ஒருவராக முடியும் /

அறிவை தனியாக இருந்து உயர்த்திக்கொள்ளலாம் .ஆனால் குணத்தை மக்களோடு பழகித்தான் அமைத்து க்கொள்ளமுடியும்

8/22/2011

நாம் சும்மா இருப்போமா..???


சில அரசியல் கட்சிகள் இப்பொழுது போராட்டத்தில் இறங்கியுள்ளது.. என்னவென்று பார்த்தால், தூக்குத் தண்டனையை ரத்து செய்யவேண்டுமென்ற கோரிக்கையை, வைக்கிறார்கள். நல்ல விஷயம் தான் ஏன் எதற்காக, யாருக்காக இந்த கோரிக்கையை வைக்கிறார்கள் என்றும் பார்க்க வேண்டும்.

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொல்லப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் நிராகரித்தார், முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி 1991-ம் ஆண்டு மே மாதம் 21-ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் மனிதவெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்த படுகொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் மற்றும் நளினி ஆகியோருக்கு 1999-ல் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த மரண தண்டனையை உச்சநீதிமன்றமும் 2000-ம் ஆண்டில் உறுதிசெய்தது. எனினும் நளினியின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

இவைகள் அனைவரும் அறிந்த ஒன்றே, முருகன், சாந்தன், பேரறிவாளன் இவர்களுக்கெல்லாம் இப்பொழுது தூக்கு தண்டனை உறுதியாகிவிட்டது, இவர்களை எல்லாம் தூக்கில் போட கூடாதென்று , போராட்டங்கள் கிளம்பியுள்ளன ஏன் இவர்களையெல்லாம் தூக்கில் போட கூடாது..?? என்பது என் கேள்வியாகும், ஒரு நாட்டின் முக்கிய மனிதரை, பிரதம மந்திரி வேட்பாளாராக இருக்கும் போது கொலை செய்திருக்கிறார்கள், கொலை செய்ய உதவி செய்து இருக்கிறார்கள், இவர்களுக்கு கருணை காட்டினால் நாளை யார் வேண்டுமானாலும் வந்து நாட்டின் முக்கிய தலைவர்களை கொன்று விட்டு செல்வார்கள் அல்லவா..??

குறிப்பாக பேரறிவாளனை தூக்கில் இடக் கூடாது என்று போராட்டம்,செய்திருக்கிறார்கள், யார் இந்த பேரறிவாளன்..?? என்ன குற்றம் செய்தார் என்றால், பேட்டரி , மோட்டார் சைக்கிள், ஆகியவற்றைக் கொடுத்து படு கொலைக்கு உதவி செய்தது தான், இதெல்லாம் ஒரு குற்றமா என கேட்கலாம் இதுவும் ஒரு குற்றம் தான் அந்த படுகொலைக்கு குண்டு தயாரிக்க எந்த பொருள் வாங்கி கொடுத்தாலும் அவர்களும் அந்த கொலைக்கு உடந்தை தான்.

என் நண்பன் பிரதமரையோ, அல்லது நாட்டின் மிகப்பெரிய தலைவரையோ, கொலை செய்யப் போவது எனக்குத் தெரிகிறது என்றால், அதை நான் தடுக்க வேண்டும், அதை செய்யாமல் நான் மறைத்தால், நானும் அந்த கொலைக்கு உடந்தை தான். இது தான் நடந்து இருக்கிறது இந்த பேரறிவாளன் விஷயத்தில். பேரறிவாளனின் தாயாரே சொல்கிறார் நாங்கள் புலிகளின் ஆதரவாளர்கள் தான் என்று, அப்படி இருக்கும் பொழுது இவர்கள் ஏன் உதவி செய்து இருக்க கூடாது..??

விடுதலை புலிகள் செய்த மிகபெரிய தவறே ராஜிவ்காந்தியை கொலை செய்தது தான். இதுவே அவர்களின் தோல்விக்கு காரணம். நம்முடைய தந்தையை ஒருவன் கொலை செய்து விட்டாலே, நமக்கு கோவம் வந்து அவனை என்ன செய்கிறேன் என்று சபதம் எடுப்போம், ஒரு நாட்டையே ஆளும் அவர்களுக்கு எவ்வளவு கோபம் வரும் என நினைத்து பார்க்க வேண்டும்.

இப்பொழுது வந்து தூக்கில் போடக் கூடாதென்றால் எப்படி???

ஒரு கொலைக்கு இன்னொரு கொலை எப்படி பதிலாகும் என்னும் வாதங்களும், தூக்கு தண்டனை கொடுத்தால் எப்படி அவர் திருந்த வாய்ப்பு கிடைக்கும் மனிதாபிமானம்வேண்டும் என்பது எல்லாம் சரிதான்....! இதை ஒட்டு மொத்த இந்தியாவில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள அத்தனை கைதிகளுக்கும் கொண்டு வர நாம் போராடினால் அதில் ஒரு நியாயம் இருக்கிறது.

இந்திய இராணுவம் அங்கே போய் குற்றம் செய்தது, கற்பழித்தது, கொலைசெய்தது என்று வாதிடுபவர்கள் எல்லாம் விடுதலைப் புலிகள் இயக்கம் இப்படி கொலை செய்யாமல், குண்டு வைக்காமல் இருந்ததா என்று யோசித்து விட்டுப் பேசவும். நோக்கம் சரியானது என்றாலும் அவர்கள் சென்ற பாதையும் செய்த கொலைகளும் சரியானதுதான? எத்தனை பேரின் உயிர் போய் இருக்கிறது...? அவை எல்லாம் மனித உயிர்கள் இல்லையா?

இதே ஒரு பாகிஸ்தான்காரன் நம் நாட்டின் மிகப் பெரிய தலைவரையோ அல்லது பிரதமர் வேட்பாளரையோ கொன்று இருந்தால் நாம் சும்மா இருப்போமா..??? உடனே தூக்கில் போடவேண்டுமென்று போராடி இருப்போம் தமிழர் என்று சொல்லி ஒரு தவறை நியாப்படுத்த முடியுமா..? இப்படி மன்னித்து கொண்டே சென்றால் அடுத்து யார் வேண்டுமென்றாலும் வந்து பிரதமரையே கொலை செய்து விட்டு 20 ஆண்டு சிறையில் இருந்து விட்டு சென்று விடுவான்.. போராட்டம் நடத்துபவர்களே உங்கள் தமிழ் ஆர்வத்தை வேறு வழியில் காட்டுங்கள்...!

தூக்கு தண்டனை வேண்டுமா வேண்டாமா? என்ற விவாதம் வேறு....அதை இந்தச் சந்தர்ப்பத்தில் ஒரு ஆயுதமாக உபயோகம் செய்து ராஜிவ் கொலையினை நியாயப்படுத்த நினைக்கும் அறிவுக்கூர்மைகள் எல்லாம் கண்டிப்பாய் மழுங்கடிக்கப்படவேண்டியவையே.


இந்த இரண்டினையும் ஒன்றுபடுத்தி போராட்டங்களுக்கு தமிழுணர்வு சாயம் கொடுப்பது இந்தியா என்ற தேசத்தின் ஒற்றுமைக்கு பெரும் குந்தகமாக எதிர்காலத்தில் அமையக்கூடும் என்ற அச்சத்தையும் இந்தக் கட்டுரை பொதுவில் வைக்கிறது.


தூக்கில் போடுவதும் போடாததும் அரசு எடுக்க வேண்டிய முடிவு....! இங்கே மனிதாபிமானம் பார்க்க வேண்டும் என்பதும் சரி ஆனால் இந்திய அரசால் யார் யாருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறதோ அப்போது எல்லாம் இது மாதிரி போராட்டங்கள் இருந்தால் நன்றாகத்தான் இருக்கும். தமிழன் என்ற ஒரு உணர்வு இயந்திரத்தை இயக்கி விட்டு அதன் மூலம் தீர்வுகளைச் சொல்வது ஒரு குறுகிய பார்வை என்பதை தண்டனை வேண்டாம் என்று கூறுபவர்கள் அறிவார்களா? என்ற கேள்வியோடு கட்டுரையை நிறைவு செய்கிறோம்

குறிப்பு : படித்ததில் பிடித்தது

8/18/2011

லாபம் எட்டும் தந்திரம்



முதலாளித்துவ நிறுவனங்களின் ஒரே நோக்கம் லாபம் சம்பாதிப்பதுதான்.அந்த நோக்கத்தில் வெற்றி பெறுவதற்காக எத்தகைய வழிமுறைகளையும் அந்த நிறுவனங்கள் கையாளும்.


பன்னாட்டு நிறுவனங்கள் ஊதியத்தை அள்ளிக் கொடுப்பதாக பீற்றுகிறார்கள். அவர்கள் சம்பாதிக்கும் லாபம் எவ்வளவாக இருக்கும் என்பது குறித்து யாருக்கும் கவலையில்லை. தங்கள் பொருள்களை விற்க விளம்பரத்திற்காக அவர்கள் செலவிடும் தொகை பிரமிப்பூட்டுகிறது.






இந்த விளம்பரச் செலவை அவர்கள் நுகர்வோர் தலையில்தான் கட்டுகிறார்கள் என்பது இன்னமும் பலருக்கு புரியவில்லை. தங்கள் பொருள்களை விற்க அவர்கள் எந்தவிதமான தந்திரங்களையும் தயக்கமின்றி நடைமுறைப்படுத்துவார்கள்.






சமீபகாலமாக சேகுவேராவை அவர்கள் தங்கள் விளம்பரங்களுக்குப் பயன்படுத்துகிறார்கள்.சேகுவேரா மாபெரும் புரட்சி வீரர். கியூபா புரட்சியில் அதிபர் காஸ்ட்ரோவுடன் இணைந்து செயல்பட்டவர். தனக்கு அளித்த அமைச்சர் பதவியை உதறிவிட்டு தென் அமெரிக்க நாடுகளில் புரட்சியை விதைக்க புறப்பட்டவர்.






பொலிவியாவின் காடுகளில் புரட்சிக் கூட்டத்தைத் தயார்படுத்தியவர். அமெரிக்காவின் கண்களில் ஊசியாக தைத்தவர். அவரை கொலை செய்ய அமெரிக்கா தனது உளவு நிறுவனமான சிஐஏவுக்கு உத்தரவிட்டது.பொலிவியாவில் அவரைக் கண்டுபிடித்த சிஐஏ மாறுகால் மாறு கை வாங்கி கொடூரமான முறையில் கொன்றது. அவரது உடலைக்கூட கியூபாவிடம் ஒப்படைக்க மறுத்துவிட்டது. அவர் புதைக்கப்பட்ட இடம்கூட தெரியவில்லை.






கடந்த ஆண்டு, சென்னையில் போர்டு இந்தியா கார் நிறுவனம் தனது புதிய கார்களை அறிமுகப்படுத்த செய்தியாளர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தது.
அப்போது அது நிருபர்களுக்கு கொடுத்த விபரக் குறிப்புகள் அடங்கிய அழகிய பைலில் விலையுயர்ந்த காகிதத்தில் சே குவேராவின் படமும் அச்சிடப்பட்டிருந்தது.

8/16/2011

எதை எழுதினாலும் படிக்கவா போறிங்க.




நான் பல நாள் வேலை பளு காரணமாக வலை பதிவுக்கு வரமால் 
இருந்துவிட்டேன். அப்போதிலிருந்து என் வலைபதிவுக்கு பதிவர்கள் வருவதே இல்லை. முற்றிலுமாக நின்றுபோயிற்று!




நானும் மீண்டும் எதையெதையோ எழுதிப்பார்க்கிறேன். பதிவர்கள் இந்தப் பக்கம் வருவதாக இல்லை. இப்படியே போனால் நான் இந்த வலைப் பதிவையே இழுத்து மூடிவிட்டு போகவேண்டியதுதான்.




ஏற்கனவே எனக்கு  இருந்த ஆங்கில அறிவு போச்சு  கணினி அறிவும் சொல்லவே வேண்டாம். எதுக்கு சுயவிமர்சனமெல்லாம். எனக்கு புலம்பரதே வேலையாப்போச்சு!


எதை எழுதினால் வந்து படிப்பீங்க. எதை எழுதினால் வந்து படிக்கமாட்டீங்க என்று எனக்கு சொல்லவும். அப்பத்தான் புரிந்து கொண்டு என்னால் மீண்டும் பதிவுபோட முடியும். அனைவருக்கும் வணக்கம்.

8/15/2011

சுதந்திர தினச் சிந்தனை.



விடியலை நோக்கி
நள்ளிரவில் சுதந்திரம் பெற்றொம்;
விடியலை நோக்கி செல்கின்றோம்;
வேகம் கொஞ்சம் குறைவுதான்;
தடைகளும் கொஞ்சம் அதிகம்தான்;
ஆனாலும் தளர்ச்சி கண்டதில்லை;
தயங்கி நிற்கவும் போவதில்லை;
பயணம் என்றும் தொடரும்;
விடியலை வென்றும் காண்போம்.


சுதந்திர தினச் சிந்தனை.


நாடு சுதந்திரம் பெற்று 64 ஆண்டுகள் நிறைவு பெற்று விட்டன; இன்னமும் கூட சுத்தமான குடிநீர் உட்பட அத்யாவசிய மற்றும் அடிப்படைத் தேவைகள் அதிக பட்ச மக்களுக்கு கிட்டாமல்தானிருக்கிறது.எங்கு நோக்கினும் ஊழல், வறுமை வேலையில்லாத் திண்டாட்டம் நிறைந்திருக்கிறது.


ஏனிந்த நிலை...?


நமக்கிருக்கும் அளவுக்கு மிஞ்சிய சகிப்புத் தன்மையே இதற்கெல்லாம் காரணம். ஆயிரக்கணக்கான கோடி ஊழல் என்று செய்தி கேட்கிறோம் ;பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் கூட கோடி கோடியாய கொள்ளையடிப்பதைப் பார்க்கிறோம்;கோடி கோடியாய் நமது வரிப்பணம் ஊழல் பேர்வழிகளின் பாக்கெட்டுகளுக்கு செல்கிறது;
ஆனால் நாமோ யார் வந்தாலும் இப்படித்தான் என்று நம்மை நாமே சமாதானம் செய்து கொண்டு ஊழலை சகித்துக் கொள்கிறோம்; ஊழல் இல்லாத இடம்தான் ஏது என்று ஊழலுக்கு வக்காலத்தும் வாங்குகிறோம்.
அரசியல்வாதி தன் குடும்பத்தினர் அனைவரையுமே பதவியில் அமர வைத்து நாட்டைச் சுரண்டுவதைப் பார்க்கிறோம்; விலைவாசிகள் விஷம்போல் ஏறுகின்றன;வறுமை தலை விரித்தாடுகிறது;அனைத்திலும் போலிகள்..கலப்படம்.
ஆனால், இவற்றையெல்லாம் மாற்ற முடியாது என்று நாம் சகித்துக் கொள்ள பழகிக் கொள்கிறோம்.
இப்படிப்பட்ட பொறுமையும் சகிப்புத் தன்மையுமே இந்த நிலைக்கு பிரதான காரணமாகும்.
அநீதிகளைக் கண்டு, முறைகேடுகளைக் கண்டு கோபம் கொள்ள வேண்டும்;இது நமது நாடு; இதன் ஒவ்வொரு வளர்ச்சியும் தாழ்ச்சியும் நம் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் பிரதிபலிக்கும்..

சுதந்திர தின உறுதி.


நம் நாடு உலகில் உயர்ந்தது என உறுதியாய் நம்புவோம்;
நாட்டைச் சுரண்டும் தீய சக்திகளை அடையாளம் கண்டு அப்புறப்படுத்துவோம்;
நாட்டின் வளர்ச்சிக்கு உழைப்போரை போற்றுவோம்.


8/03/2011

ஆடி மாதம்

ஆடி மாதம் தான் தக்ஷிணாயணத்தின் தொடக்கம். இது ஒரு புண்யகாலமாகக் கருதப்படுகிறது. பண்டிகைகள் பல நம்மைப் பரவசப்படுத்தும் மாதம் இந்த ஆடிமாதம்.

ஆடி மாதம் என்றாலே மல்லிகை மணமும் கூடவே வரும். அம்மன் கோயில்களில் பூக்களால் அலங்கார பூஷிணியாக அமர்ந்திருப்பாள்.

இந்த மாதத்தில் தான் சதுர்மாஸ்ய விரதம் தொடங்குகிறது. அதாவது சன்யாசி போன்ற பெரியவர்கள் ஒரு இடத்தில் அமர்ந்து பூஜை புனஸ்காரங்களைத் தொடருவர். இந்தக் காலத்தில்தான் பல ஊர்வன வகையைச் சேர்ந்த ஜீவராசிகள் மழை வெள்ளத்தைத் தாங்க முடியாமல் தங்கள் இருப்பிடத்திலிருந்து வெளிவரும். அப்போது நடந்தால் அவைகள் மிதிபட்டு, துன்பப்பட்டு இறக்க நேரிடும் என்பதால் சன்யாசிகள், சாதுக்கள் ஒரு இடத்தில் போய் அமர்ந்து நாலு மாதங்கள் அங்கேயே தங்கி இருப்பர். வியாசபூஜையும் நடக்கும். இது ஆடி பெளர்ணமியில் குரு பூர்ணிமா என்ற பெயரில் நடக்கும்.

மஹாராஷ்ட்ராவில் தத்தாத்ரேயருக்கும் சிறப்பு பூஜை உண்டு. தவிர ஸ்ரீமஹாவிஷ்ணு சயனக்கோலத்தில் இருந்துகொண்டு நம்மைக் காக்கிறார். இந்த மாதம் வரும் ஏகாதசி மிக விசேஷமானது, சயன ஏகாதசி என்றும் ஷாட ஏகாதசி என்றும் கூறுவார்கள்.

ஆடி மாதம் வரும் ஏகாதசியை மஹராஷ்ட்ரத்தில் ஆஷாட ஏகாதசி என்று மிகச் சிறப்பாகக் கொண்டாடுவார்கள். காவடி போல் தோளில் இருபக்கமும் பால் அல்லது தயிர் எடுத்துக்கொண்டு பண்டரிபுரம் சென்று பகவான் விட்டலைத் தரிசனம் செய்து விட்டு வருவார்கள். பண்டரிபுரம் வரை பொடி நடைதான். நடு நடுவே செல்வந்தர்கள் அவர்களுக்கு உணவுப் பந்தல் ஏற்பாடு செய்திருப்பார்கள்.

சிறுவர்களும் இதில் கூட்டம் கூட்டமாகப் போவார்கள். அவர்கள் வாயில் 'பாண்டுரங்க விட்டலா பண்டரிநாத விட்டலா' என்றும் 'விட்டல் விட்டல் ஜய ஜய விட்டல்' என்றும் விடாமல் நாமஜபம் வந்து கொண்டிருக்கும்.

விஷ்ணு கோயிலில் இந்த நேரம் தக்ஷிணாயண வாயிலைத் திறப்பார்கள். இது தெற்குப் பக்கம் இருக்கும். இது போல் உத்தராயண வாசலும் உண்டு, அதாவது அது வடக்குப் பக்க வாசல்.

இந்த மாதத்திலேதான் ஜீவ நதிகளுக்கு பூஜை செய்யப்படுகிறது. இதை ஜலப்பிரவாஹப்பூஜை என்று சொல்கிறார்கள். காவேரி அம்மனுக்கு மசக்கை என்று ஆடி பதினெட்டாம் பெருக்கைக் கொண்டாடுகிறார்கள்.

காலையில் காவிரி நதி தீரம் சென்று குளித்து, அம்மன் பூஜை செய்து பின் எல்லா சித்திரான்னங்களையும் படைப்பார்கள். எலுமிச்சைசாதம், புளியஞ்சாதம், தயிர் சாதம், வற்றல் வடகங்கள் என்று கொண்டு போய் அங்கு ஆற்று மணலின் அருகே அமர்ந்து குடும்பத்தினர் அனைவரும் உண்டு மகிழ்வார்கள்.

பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வதற்கு ஆடி அமாவாசை மிகச் சிறந்த நாள்.

ஆடி பதினெட்டாம் பெருக்கு அன்று உழவர்கள் நிலத்தில் விதைகள் விதைப்பார்கள்.

ஆடி மாதம் மாரியம்மனுக்கு மிகவும்விசேஷம் பொருந்திய நாள். ஆடி செவ்வாய் அன்றும் ஆடி வெள்ளி அன்றும் சிலர் ஞாயிறன்றும் அம்மனுக்குக் கூழ் ஊற்றுவார்கள். கிராமங்களில் எல்லை தேவதைகளுக்கும் இந்த உபசாரங்கள் நடக்கும். மஞ்சள், வேப்பிலை, குங்குமம் முக்கியப் பங்கு வகிக்கும்.

வைணவர்களுக்கு ஆடிப்பூரம் மிகவும் முக்கியமான நாள். அன்றுதான் ஆண்டாள் பிறந்த தினம். வரலட்சுமிவிரதமும் சில சமயம் ஆடியில் வந்து விடும்.

அன்னை காமாட்சியும் சிவனை நோக்கித் தவம் இருந்து பின் ஈசனை அடைந்த மாதம் இந்த ஆடி மாதம் தான். ஆடி மாதம் சிலர் தேவியை வாராஹியாக வழிபடுவர். இவள் நமக்கு தைரியத்தை வழங்கி சத்ருவை அடக்குகிறாள்.

பொன்னி அம்மன், பச்சை அம்மன், திரெளபதி அம்மன், பொம்மி, காத்தாயி, மதுரைவீரன், முனீஸ்வரன் என்ற தெய்வங்களையும் இந்த மாதம் கரகம், காவடி, தெருக்கூத்து போன்றவைகளுடன் வழிபடுகிறார்கள்.

திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவிலில் ஆடி தபசு விழா நடக்கிறது. அதாவது கோமதி அம்மன் தவம் இருக்க, புன்னைவனத்தில் சிவன் சங்கரநாராயணராக அவருக்கு் பெளர்ணமி அன்று காட்சி அளித்தார்.

தவிர சுதந்திரதினமும் இந்த மாதத்தில் தான் அநேகமாக வருகிறது. அத்துடன் அன்னையைப் பராசக்தியாகக் கண்ட, கண்ணனையும் தரிசனம் செய்த ஸ்ரீஅரவிந்தர் அவர்களின் பிறந்த தினமும், கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை அவர்களின் பிறந்த தினமும் ஆகஸ்ட் 15ல் வருகிறது. , ஷீரடியில் ஷீரடி பாபா உத்சவமும் பிரமாதமாக நடக்கும்.

இத்தனை உயர்வுகளைக் கொண்ட ஆடி மாதத்தைக் கண்டாலே உள்ளம் குளிர்ந்து போகிறது.