தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

7/31/2010

ஒரு நண்பனின் நண்பர்கள் தின வாழ்த்து கவிதை


உனக்கான காத்திருப்பின் இடைவெளிகளில்
நழுவிப்போன சந்திப்புகளை மீண்டும்
மெல்ல சிறை செய்கிறது
நம் நட்பின் ஞாபகங்கள் .




என் மௌனம் பற்றி நீயும்
உன் மௌனம் பற்றி நானுமாய்
சில நேரங்களில் பதில்களற்ற
கேள்விகள் மட்டும்


நம் இருவரின் புன்னகையிலும்
அவ்வப்பொழுது தோன்றி
தொலைந்து போகிறது.


"தா" என்று கேட்காமல் கொடுத்தலில் தொடங்கி,
"வலி" என்று சொல்லுமுன் விழிகள் அழுது

உனக்காக நானும், எனக்காக நீயுமாய்
உறவாடிய நட்பின் இனிய கணங்களில்
மகிழ்ச்சியாய் கடந்துபோனது காயப்படாமல்
நமது உறவின் முதல் வருடமும் .

உன்னுடன் பேசாத கணங்களின் நிசப்தத்திலும்
மௌனத்தின் மொழி இவ்வளவு
தெளிவாகக் கேட்கும் என்பதை
உன் நட்பில் தான் உணர்ந்துகொண்டேன் .


பாதி ஓவியம் தீட்டி
களைத்துப் போன
தூரிகையின் பெரு மூச்சாய்
எப்பொழுதும் நமது மறு
சந்திப்பை பற்றிய உடன்படிக்கைகள் .

எல்லோருக்கும் இல்லை என்ற போதும்
எனக்கு மட்டுமான தேவைகளை
நான் கேட்காமல் வாரி இறைத்துவிடுகிறது
நமது நட்பில் பிறக்கும் வார்த்தைகள் .

சந்தோசத்திலும் ஒரு சோகம்
சோகத்ததிலும் ஒரு சந்தோசமென
அனைத்தையும் ஒன்றாய் ரசிக்க வைக்கிறது
நம் இருவருக்கும் இடையிலான
நட்பென்ற உறவு .


தாய்மடி இல்லையென்றபோதும்
உன் தோழமையின் அரவணைப்பில்
உறங்கிப்போகிறேன் பல இரவுகளில்
மெய்மறந்து சிறு குழந்தையாய் .


ஆயிரம் உள்ளங்கள் அருகில் இருந்தும்
ஏனோ தனிமையில் இருப்பதாய்
தவிக்கும் இந்த உள்ளம் .

உன் நட்பு மட்டும் உடன் இருந்தால்
இந்த உலகமே அருகில் இருப்பதாய்
உள்ளுக்குள் துள்ளும்
தினமும் என்னைப் பற்றி நீயும்
உன்னைப் பற்றி நானும்


நலம் விசாரித்து சிதறிச்செல்லும்
புன்னகையின் மிச்சங்களில்தான் இன்னும்
சிரித்துக்கொண்டு இருக்கின்றன

சாலையோரப் பூக்கள் .
ஒவ்வொரு இரவின் இடைவெளிகளிலும்
உன்னை மீண்டும் சந்திக்கப்போகும்
அந்த நிமிடங்கள் எண்ணியே பசியின்றி ,


தாகமின்றி உடையாத நீர்குமிழியாய்
இங்கும் அங்கும் நகர்ந்துகொண்டே இருக்கிறது
உன் நட்பின் நினைவுகள் .
மீண்டும் நம் நட்பைக்கொண்டாட
எதற்க்கு இந்த வருடம் என்னும்


நீண்ட இடைவெளி..??

வா தோழா இன்றே தொலைத்துவிடுவோம்
நமது நட்பிற்குள் இந்த வருடத்தை
நிரந்தரமாக.

காதல் கொண்ட உள்ளத்தின்
எதிர்பார்ப்புககளைவிட ஆயிரமாயிரம்
கற்பனைகள் நிரம்பி வழிகிறது
இந்த நட்புக் கொண்ட இதயத்தில் .
நானும் நீயும் சுவாசிக்கும்


ஒவ்வொரு கணமும் நம் அனுமதியின்றியே
நம் இதயங்கள் உள்ளுக்குள்
நம் நட்பை கொண்டாடிக்கொண்டே இருக்கட்டும்
இனி வரும் நாட்களில்...

எழுத்து & இடுக்கை :அ.ராமநாதன்

7/29/2010

அகவையும் ,அனுபவமும் ஒரு சிறுகதை

கதையின் நாயகர்கள் : சேகர் ,கார்த்திக்  (கோவை)
இக்கதையில் வரும் நபரும் ,கதையும் உண்மையே ,இது ஒரு உண்மை சம்பவம் .


சேகர் - வயது இருபது  : ATM- க்கு சென்ற போது தனக்கு முன்னால் ஒரு பெண் இருந்தாள்.அவள் பணம் எடுத்து வந்தவுடன் நான் உள்ளே ஏறியவனுக்கு  படிக்கட்டில் ஒரு புதையல் கிடைத்தது. யாரோ வங்கி அட்டையை படிக்கட்டில் தவற விட்டிருந்தார்கள். அப்படியே குனிந்து எடுத்தேன். அதை எடுத்தால்  முன் புறம் இருந்த நண்பர்கள், வேகமாக போக சொல்லி , என் பக்கம் வந்தனர்.


கையில் ATM , பணம் இரண்டையும் எடுத்துவிட்டு என் நண்பர்களிடம் சென்ற நான் , "ஏதுடா" என்றனர். விபரம் சொன்னேன். "டேய் நல்லா செலவு பண்ணலாம்டா" என்றான் சிவா . "அஞ்சப்பர் போகலாமா . இத எடுத்துக்கலாம்" என்றான் பாஸ்கர். "போங்கடா. இது நாம செலவு பண்ணக் கூடாது. அனேகமா இந்த ATM  -ல எனக்கு முன்னால இருந்தவளின் தான் இது . விசாரிச்சு கொடுத்துடுவோம்" என்றேன். பாவம் யார் Atm . பஸ் ஏறும் அவசரத்தில் ATM கீழே விட்டிருக்கலாம்.


சிவா  சட்டையை பிடித்தான். "அதெல்லாம் நீ கொடுக்கக்கூடாது"
என்றுகார்டை  பிடுங்கினான். பாஸ்கர் "என்னடா சண்டை போடுறிங்க" என்றார். நான் அவன்  பக்கமாக ஓடினேன். ஒரு முறை, அண்ணா பத்தாயிரம் ரூபாய் பணத்தை தொலைத்து விட்டு பட்ட பாடு உள்ளதே. பாவம் இந்த பெண் அம்மாதிரியான மனநிலையில் தானே இருப்பார். உடனே வங்கிக்கு தொடர்பு கொண்டபோது
சார். என்னிடம் இருந்த கார்டின் நிலவரத்தை சொல்லி ATM கிடந்துச்சு. .அதை பிளாக் பண்ணனும் என்றேன்.அவரும் அதை அருகில் உள்ள வங்கி கிளையில் கொடுக்க சொன்னார்


படிக்கிற பையனா இருந்தாலும் பொறுப்பா இருக்கார் தம்பி" என்று என் நலன் விரும்பிகள் தோளில் தட்டி கொடுத்தார். "ரெம்ப நன்றி தம்பி" என்றார்கள்.


வயது முப்பது கார்த்திக்  : மனசே சரியில்லாமல் இருந்தது. எது செய்தாலும் நட்டத்தில் முடிகிறது. வீட்டு பிரச்சனை வேறு. வேலையும் சரியில்லை. எல்லா பக்க சிக்கல்களும் மனிதனை கொல்கிறது. என்ன தான் செய்ய போகிறோமோ என்கிற சிந்தனையோடு நடந்து கொண்டு இருந்தேன் . மெயின் ரோட்டுக்கு
வந்த போது, ஒரு குப்பை மேட்டை நெருங்கிய போது, லாரி ஒன்று வரவே குப்பை மேட்டின் மீது ஒதுங்கினேன். குப்பை மேட்டை ஒட்டி பெண்கள் உபயோகப்படுத்தும் கைப்பை ஒன்று கிடந்தது. கைப்பை புத்தம் புதுசாக இருந்தது.


கைப்பையை உற்று பார்த்த போது, லேசாக திறந்திருந்த ஜிப் வழியே- ஏதோ தங்க நகைகள் போல் மினு மினுவென்று தெரிய, சபலத்தில் ஏதோ தோன்ற
கைப்பையை குனிந்து எடுத்து கொண்டு பறந்தேன். சற்று தூரம் போய் நடந்து - பையை திறந்து பார்த்தால்... மிக பெரிய அதிர்ச்சி. உள்ளே நகைகளும், பணமுமாய் இருந்தது. யாரோ வண்டியில் போகும் போது, தவற விட்டிருக்க வேண்டும் போலும். குப்பை மேட்டின் அருகே மிகப் பெரிய பள்ளம்
இருந்தது. பள்ளத்தில் ஏறி இறங்கும் போது, கைப்பை நழுவி இருக்கலாம்.
நழுவியதை கவனிக்காமல் இருந்து இருக்கலாம்.


கைப்பையின் வெளிப்புற பையை திறந்து பார்த்தேன். விசிட்டிங் கார்ட் இருந்தது. ஜிப்பை நன்றாக இழுத்து விட்டு நடக்க ஆரம்பிக்க. போலீஸ் ஸ்டேஷனில் கொண்டு போய் ஒப்படைப்பதா அல்லது விசிட்டிங் கார்டை பார்த்து நாமே, அந்த முகவரிக்கு சென்று கொடுத்து விடுவோமா. பார்ப்போம். அதோடு இன்னொரு எண்ணமும் மனதில் தோன்றியது. அது குறித்தும் யோசிக்கலாம். பார்ப்போம். யாராவது கல்யாணத்திற்கு நகைகள் வாங்கி கொண்டு போகிறார்களா என்ன. எல்லாம் புது புது நகைகளாக இருந்தன.


மனிதர்கள் ஒரு பக்கம் பணம் இல்லை, பணம் இல்லை... வாழ்வதே கடினமாக உள்ளது என்கிறார்கள். மறு பக்கம்- நகைகடைகளிலும், ஆடம்பர
பொருள்களுக்கான கடைகளிலும் கூட்டம் அலை மோதுகிறது. கஷ்டப்படுகிறவன்- கஷ்டப்பட்டு கொண்டு தான் இருக்கிறான். பணக்காரன் மேலும் பணக்காரன் ஆகிறான்.(இது நான் கற்று கொண்டது )  உலகம் சிலரை வாழ வைத்து, பலரை அழ வைப்பதாக உள்ளது. இப்போது தன் நிலையே அவ்விதமாக தான் உள்ளது.


சின்னதாய் ஒரு வேலையில் இருந்துள்ளேன். மொத்த  சாப்ட்டு ,தினசரி இரு நூறு செலவு பண்ண பண்ண வேண்டியுள்ளது. எல்லாம் படிக்க  வட்டிக்கு வாங்கிய பணம். வட்டிக்கு கட்டவில்லை வருமானம். ஏமாற்றி பிழைக்க
தெரியாதவன், வேலை  செய்யக்கூடாது. இது தான் அண்ணாச்சிகள் கற்று
கொடுத்த பாடம் - இந்த நேரத்தில் நாம் தான் பாவம், புண்ணியம் பார்க்கிறோம். நமக்கு யார் பார்க்கிறார்கள்.


மூளையில் ஏதோ உரைக்க, சட்டென்று நிற்க . அந்த கைப்பையில் இருந்த விசிட்டிங் கார்டை கிழித்து எறிந்தேன். எனது கைப்பையில் எல்லா நகை பணத்தை கொட்டிவிட்டு, அடுத்து வந்த குப்பை தொட்டியில், அந்த கைப்பையை வீசி எறிந்தேன். யார் எக்கேடு கெட்டு போனால் என்ன. வசதி இல்லாதவன் இவ்வளவு நகை வாங்குவானா. இல்லாதவன், கடன் அட்டை வைத்திருப்பானா, வாங்கிய பொருளை இவ்வளவு அலட்சியமாக கொண்டு போகிறவன், எவ்வளவு வசதியானவனாக இருப்பான்.


இப்போது எனக்கு நான் முக்கியம். கடவுள் கொடுத்ததாக வைத்து கொள்வோமே. சின்ன வயதில், கீழே கிடந்து எடுத்த பர்ஸை உரியவரிடம் சேர்த்த ஞாபகம் வந்தது.


இந்த சிறுகதை சில நாட்களுக்கு முன்னால், "இரு கதை கதாநர்யகர்களுக்கும் ,
ஒரே மாதிரியான சந்தர்ப்பம் கிடைக்கிறது. ஆனால் அவர்கள் இரண்டு பேரும்  வேறு முடிவெடுக்கிறார்கள். வேறு வேறு முடிவை எடுப்பதால் தான், அவரகளைபற்றி சிந்திக்கிறோம்.


மனிதர்களை சூழல் எப்படியெல்லாம் மாற்றுகிறது என்பது பற்றி எழுதியுள்ளேன். நீங்கள் என்ன சொல்கிறிர்கள்.........

சிந்தனை & எழுத்து  : அ.ராமநாதன்            நன்றி : சேகர் & கார்த்திக்

7/27/2010

கம்பனின் கொஞ்சி விளையாடும் தமிழ்

நாம் அவமானப்படுத்தப் படுகிறோம்..நம் எண்ணங்கள் சிரிக்கபடும் .
இந்நிலையில் நாம் என்ன செய்வோம்...ஒன்று நம்மை புரியாதவர்களிடமிருந்து பிரிவோம்..அல்லது..இவர்கள் எப்படிப் போனால் என்ன..நம்மை விரும்புபவர்களும் இருக்கிறார்களே..என மகிழ்வோம்..அல்லது..இவர்களிடமிடுந்து விலகி..இவர்கள் கண் காணா இடத்திற்கு செல்வோம்..


கவிச்சக்கரவர்த்தி கம்பனுக்கும் அப்படி ஒரு நிலை ஏற்பட்டது.சோழ மன்னனிடம் ஏற்பட்ட சிறு பிணக்கு காரணமாய்..அவனால் அவமானப் படுத்தப்பட்டு..அந்த நாட்டை விட்டே போக எண்ணிய கம்பன்..மன்னனைப் பார்த்து..கீழ் கண்ட பாடலைப் பாடுகிறான்..


மன்னவனும் நீயோ வளநாடும் உன்னதுவோ
உன்னையறிந் தோதமிழை ஓதினேன் - என்னை
விரைந்தேற்றுக் கொள்ளாத வேந்துண்டோ? உண்டோ
குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு

நீயும் ஒரு மன்னனா..இந்த நாடு உனக்கு சொந்தமா..நீ இருக்கிறாய் என்ற எண்ணத்திலா நான் தமிழ் பாடும் கவிஞன் ஆனேன்..கவிஞனான என்னை எந்த நாட்டிற்குச் சென்றாலும் அந்நாட்டு மன்னர்கள் விரும்பி வரவேற்பார்கள்..எப்படி..ஒரு குரங்கை..மரத்தின் சிறு கிளையும் தாங்குகிறதோ..அதுபோல மன்னர்கள் என்னை தாங்குவர்..என்கிறான்.


இதையே ஔவையார் மூதுரையில் இப்படிச் சொல்கிறார்


மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோற்குச்
சென்றஇடம் எல்லாம் சிறப்பு


ஒரு நாட்டு மன்னன், கல்வி அறிவு படைத்தவன்..இவர்களில் யார் சிறந்தவன் என்று பார்த்தால்..கற்றவனே சிறந்தவன்..ஒரு நாட்டு மன்னனுக்கு அவன் நாட்டில்தான் மதிப்பு, சிறப்பு..அந்நாட்டை விட்டு வெளியேறினால்..மன்னன் சாதாரணமானவன்.ஆனால்..கல்வி அறிவு படத்தவனுக்கு ,அவன் எந்த நாட்டில் இருந்தாலும், எந்த இடத்திற்குச் சென்றாலும் சிறப்புடையவனாகக் கருதப் படுவான்

இடுக்கை : அ.ராமநாதன்

7/20/2010

என் தமிழுக்கு இடம் -லண்டனில்

உலகத் தமிழர்களுக்கு இதோ ஒரு நற்செய்தி.
லண்டனின் பிரபலமான பத்து மொழிகளில் நமது அன்னைத் தமிழுக்கும் இடம் கிடைத்துள்ளது. இந்தப் பட்டியலில் இந்திக்கு இடமில்லை. மாறாக பெங்காலி, பஞ்சாபி ஆகியவை இடம் பிடித்துள்ளன.


இந்த தகவலை லண்டன் காவல்துறை வெளியிட்டுள்ளது. அங்கு அவசர தேவைக்காக காவல்துறைக்கு தொலைபேசி மூலம் அழைப்பவர்களில் தினசரி கிட்டத்தட்ட 8 ஆயிரம் பேரும், சாதாரண அழைப்புகளில் 12 ஆயிரம் பேரும் தமிழில் பேசுகிறார்களாம்.


ஆங்கிலம் அல்லாத பிற மொழிகள் வரிசையில் பிரபலமான மொழிகளாக பத்து மொழிகளை லண்டன்காவல்துறை வகைப்படுத்தி வெளியிட்டுள்ளது.


அந்த வகையில் லண்டன் மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் பத்து பிரபல மொழிகளாக தமிழ், பிரெஞ்சு, ரோமன், பஞ்சாபி, துருக்கி, பெங்காலி, ஸ்பானிஷ், சோமாலி, போலிஷ், போர்ச்சுகீஸ் ஆகிய மொழிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.


இந்த வரிசையில் இந்திக்கு இடம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


லண்டன் வாழ் பொதுமக்கள் தங்களது அவசரத் தேவைக்கு எந்த மொழியில் வேண்டுமானாலும் தொலைபேசி மூலம் அழைக்கலாம் என லண்டன் காவல்துறை சமீபத்தில்தான் அறிவித்திருந்தது. இதன் பிறகுதான் அதிக பிரபலமான மொழிகள் எவை என்பதை காவல்துறை உணர்ந்தது.


ஆங்கிலம் தவிர்த்த வேறு மொழிகளில் யாராவது பேசினால் உடனடியாக அதை மொழி பெயர்த்துச் சொல்லும் வசதியை லண்டன் காவல்துறை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.


லண்டன் காவல்துறைக்கான தொலைபேசி அழைப்புப் பிரிவு அதிகாரி ஹாரிங்டன் இதுகுறித்துக் கூறுகையில், ஆங்கிலம் உங்களது தாய் மொழியாக இல்லாவிட்டாலும் கூட பரவாயில்லை, நீங்கள் எந்த நேரத்திலும் எங்களை அழைக்கலாம். நீங்கள் பேசும் மொழியில் உடனுக்குடன் மொழிபெயர்த்துக் கூறும் வசதியை நாங்கள் வைத்திருக்கிறோம். சம்பந்தப்பட்ட மொழிக்குரிய மொழிபெயர்ப்பாளர் 24 மணி நேரம் தயாராக இருப்பார் என்றார்.


இங்கிலாந்தில் இப்படி வேற்று மொழிகளுக்கு மரியாதை தருகிறார்கள். ஆனால் நமது இந்தியாவில் நாடாளுமன்றத்தில், நமது தாய்மொழியில் ஒரு அமைச்சரால் பேச முடியாத அவல நிலை!

இடுக்கை :அ.ராமநாதன்

7/19/2010

கண்டிப்பாக படியுங்கள் மனிதம் இருந்தால்-5



பல்லாயிரம் பேரைக் கொன்றுக் குவித்த யூனியன் கார்பைடு நிறுவனத்தைக் கையகப் படுத்தியிருக்கும் இந்த டௌ கெமிக்கல்ஸ் யார்? என்ற வரலாற்றைப் பார்ப்போம்.


வியத்நாம் மீது நடத்திய ஆக்கிரமிப்புப் போரில் கம்யூனிஸ்ட் கொரில்லாப் படையை எதிர்கொள்ள இயலாமல் "ஏஜந்த் ஆரஞ்சு" என்ற கொடிய ரசாயனத்தை 210லட்சம் காலன் அளவுக்கு விமானப்படை மூலம் காடுகளில் பொழிந்தது அமெரிக்க இராணுவம். இந்த ஏஜண்ட் ஆரஞ்சுடன் டையாக்ஸின் என்ற கொடிய நஞ்சையும் கலந்து அமெரிக்க இராணுவத்திற்கு வழங்கிய நிறுவனங்களுள் முக்கியமானது இந்த டௌ கெமிக்கல்ஸ்.


48 லட்சம் வியத்நாம் மக்கள் பாதிக்கப் பட்டனர். 5 லட்சம் குழந்தைகள் ஊணத்துடன் பிறந்தன. அதோடில்லாமல் இதை தெளித்த அமெரிக்க சிப்பாய்களும் கடுமையான நோய்க்கு ஆளாயினர். 1984ம் ஆண்டு இவர்களுக்கு 18கோடி டாலர் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. அதே நேரத்தில் இந்த ஏஜெண்ட் ஆரஞ்சு மூலம் பாதிக்கப் பட்ட மக்கள் அமெரிக்க நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கை எதிர்த்து நிவாரணம் தர முடியாது என மறுத்துக் கொண்டிருக்கிறது இந்த டௌ.


ஜெல்லியைப் போல கொழகொழப்பானதும் தோலில் பட்டவுடன் தீயாய் எரியக் கூடியதுமான நாபாம் குண்டுகளும் இந்த டௌ கெமிக்கல்ஸின் தயாரிப்புதான்.


வியத்நாமில் இந்த குண்டுகளை வீசிய அமெரிக்க இராணுவ அதிகாரி "இந்த டௌ கெமிக்கல்ஸ் பசங்க கில்லாடிங்க முதல்ல அந்த குண்டுல பாலைஸ்டரின் கலந்து அனுப்பினாங்க. ஆனா அவனுங்க(வியத்நாம் மக்கள்) தண்ணில குதிச்சித் தப்பிச்சிட்டானுங்க. அப்பறம் பாஸ்பரஸ் கலந்து அனிப்பி விட்டாங்க. த்ண்ணிலயும் இது எரியும். ஒரு சொட்டுப் பட்டா எலும்பு வரைக்கும் போயி சாவு நிச்சயம்." என டௌ கெமிக்கல்ஸை சிலாகித்து பேசியிருக்கிறார்.


முதல் உலகப் போரின் போதே விசவாயுக் குண்டுக்குத் தேவையான இரசாயணப் பொருட்களை டௌ தயாரித்து விற்றது. டௌ கெமிக்கல்ஸின் ஜெர்மன் கூட்டாளியான ஐ,ஜி. பார்பென் நிறுவனம் ஆஸ்விட்ஸ் கொலைக்கூட்டத்துக்குத் தேவையான ஹைட்ரஜன் சயனைடு என்ற விசவாயுவைத் தயாரித்து ஹிட்லருக்கு கொடுத்தது. "போபால் மக்களின் உடலில் கண்டு பிடிக்கப் பட்டதும் இந்த ஹைட்ரஜன் சயனைடு தான் என்பது குறிப்பிடத் தக்கது."


இதனைத் தயாரித்தக் குற்றத்துக்காகஓட்டோ அம்புரோஸ் என்ற அதிகாரி 8 ஆண்டுகள் சிறை வைக்கப் பட்டான். தண்டனைக் காலம் முடிந்ததும் தன் நிறுவனத்தில் பணியாற்ற அவனை அழைத்ஹ்டுக் கொண்டது இந்த டௌ.


இன்று உலகெங்கும் தடை செய்யப் பட்டிருக்கும் டி.டி.டி எனும் பூச்சிக் கொல்லி மருந்தை "மனிதர்களுக்கு எவ்விதத்திலும் தீங்கல்ல" என்று விளம்பரம் செய்து விற்பனை செய்தது டௌ.


டர்ஸ்பன் என்ற பெயரில் பயன் படுத்தப் ப்டும் வீட்டு உபயோக பூச்சிக் கொல்லி மருந்தும் டௌவின் தயாரிப்புதான். இது குழந்தைகளுக்கு நரம்பியல் நோய்கள், பார்வையிழப்பு, மனநோய், புற்றுநோய் ஏற்படுத்தும் என கண்டறியப் பட்டு 1999-ல் அமெரிக்காவில் தடை செய்யப் பட்டது.


1998-ல் இந்த மருந்தை அமெரிக்க மாணவர்களுக்கு பணம் கொடுத்து அவர்கள் மீது சோதனை செய்து "இது பாது காப்பானது" எனப் பொய்யாக விளம்பரம் செய்தது. இந்தக் குற்றத்திற்காக 2003-ம் ஆண்டு நியூயார்க் மாநில அரசுக்கு 2 மில்லியன் டாலர் அபராதம் கட்டியது.


ஆனால் இதே மருந்து பாதுகாப்பானது என விளம்பரம் செய்து இன்றும் இந்தியாவில் விற்பனை செய்யப் பட்டு வருகிறது.


1979-ல் அமெரிக்காவில் தடை செய்யப் பட்ட டி.பி.சி.பி என்ற அபாயகரமான பூச்சிக் கொல்லி மருந்தை நெமகான், ப்யூமோசோன் என்ற பெயர்களில் மத்திய அமெரிக்க நாடுகளில் விவசாயிகளுக்கு டௌ விற்பனை செய்தது. இதனால் பல்லாயிரம் பேருக்கு ஆண்மையிழப்பு ஏற்பட்டது. இதை எதிர்த்து வழக்குத் தொடுத்தவர்கள் மீது பொய்யான வழக்கு என கூறி மானநஷ்ட வழக்கைத் தொடுத்து 1700 கோடி டாலர் கேட்டது இந்த டௌ


ஆனால் ஜூலை 23, 1958 என்ற தேதியிட்ட டௌ கெமிக்கல்ஸின் ரகசிய ஆவணத்திலேயே "இந்த மருந்து விரை வீக்கத்தையும், ஆண்மைக்குறைவையும் ஏற்படுத்தும்" எனக் குறிப்பிடப்பட்டது அம்பலமாகியிருக்கிறது.


அபாயகரமான இரசாயண, அணுக் கழிவுகளை 136 இடங்களில் கொட்டி வைத்திருப்பதற்காக 40 கோடி டாலர் அபராதத் தொகையை அமெரிக்காவிடம் கடனாக வைத்திருக்கிறது இந்த டௌ.


1996-ல் டௌ கெமிக்கல்ஸ் இந்திய அதிகாரிகளுக்கு 2 லட்சம் டாலர் லஞ்சம் கொடுத்திருப்பதை அமெரிக்க அரசின் கடனீட்டு பரிமாற்றக் கழகம் கண்டு பிடித்தது. தடை செய்யப் பட்ட பூச்சிக் கொல்லிகளை இந்தியாவில் விற்பதற்காக இந்திய அதிகார்களுக்கு மீண்டும் லஞ்சம் கொடுத்த டௌ-க்கு பிப்-2007ல் 3,25,000 டாலர் அபராதம் விதித்தது அமெரிக்க கடனீட்டுக் கழகம்.


ஆனால் இந்தியாவில் லஞ்சம் பெற்ற அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் இந்திய அரசால் எடுக்கப் படவில்லை.


இந்த டௌ நிறுவனத்துக்கு காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிசேக் மனு சிங்விதான் வழக்குரைஞர்.




நன்றி: புதிய ஜனநாயகம்          இடுக்கை :அ.ராமநாதன்

7/18/2010

நரேந்திரனின் கனவை நினைவாக்க ....வாருங்கள் தோழர்களே....!

 

நீங்களும் அந்த 100 பேரில் ஒருவர் தான், வாருங்கள் முகம் தெரியா தோழர்களே....

இளமை சொட்டும் 100 இளைஞர்களை தாருங்கள் அழகான இந்தியாவை உருவாக்கி தருகிறேன்,என விவேகானந்தர் கூறியதை உண்மையாக்குவோம் வாருங்கள்.


இன்னும் எத்தனை நாளுக்கு தான் போர்க்களத்திற்கு வெளியே நின்று  வெறித்தனம்  பேசுவது?, போர்க்களத்தில் குதிப்போம், வெற்றியா?,தோல்வியா? என்பதை நாம் தான் உறுதி செய்ய வேண்டும்,வெளியில் நின்று வேய்க்கானம் பேசுபவன் நானல்ல, வேங்கையாய் போரிடும் போர்வாள் நானென்று நிரூபிப்போம் வாருங்கள் முகம் தெரியா என் தோழர்களே...

200 கோடி,300 கோடி என பல கோடிகளை தமிழுக்கு என, தனக்காக செலவு செய்யும் அரசியல்வாதியை பலி சொல்லிவிட்டு , எத்தனை நாளுக்கு தான் கையை கட்டிக்கொண்டு,வாயை பொத்திக்கொண்டு இருப்பது?..நாம் தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் ஒரு பட்டினிசாவு, வறுமையில் மரணம் எனும் அவலங்கள் நம் காதுகளுக்குள் மரண இடியாய் இறங்குகிறது ..

சரி என்ன செய்ய வேண்டும் நாங்கள்? என்ற கேள்வியோடு தொடருங்கள் என் தோழர்களே..இங்கே நாங்கள் எழுதிப்போடும் ஒவ்வொன்றும் கூலி வேலை செய்யும் கந்தனையோ, குப்பனையோ போய்சேராது என்று எனக்கு நன்றாக தெரியும், மாறாக நல்ல பணியில் இருக்கும் தனபால்,சதீஷ் ,சேகர் போன்ற தோழர்களை சென்றடையும் என்பதில் எனக்கு துளியும் சந்தேகம் இல்லை..


இந்த தோழர்களை அனைவருக்கும் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்கிற கருணை குணம் நிச்சயமாய் இருக்கும் என்று எனக்கு நன்றாக தெரியும், விழிப்புணர்வை பற்றி எழுதும்பொழுதே என்னை உற்சாக படுத்தியவர்கள் அனைவருக்கும், நிச்சயம் புதியதொரு நம் தேசத்தை மாற்ற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் என்பதில் ஐயமில்லை..(அவர்களுக்கு நான் நன்றி சொல்ல கடமைபட்டுள்ளேன் )

இப்படிப்பட்ட இளைஞர்கள் இருக்கும்பொழுது ஏன் பட்டினிச்சாவு நடக்கிறது?,நியாயமான கேள்வி தான்?..எங்கேயோ ஒரு விளம்பரம் உதவுங்கள் என்றும்,வங்கிக்கணக்கை காட்டி இதில் உங்கள் உதவியை செய்யுங்கள் என்றும் வருகிறது?..உதவி செய்ய தோன்றுகிறது,எப்படி நம்புவது, எப்படி அனுப்புவது என்ற ஏராளமான கேள்விகள் வேகத்தை குறைத்து விடுகின்றன,கடைசியில் அடுக்கடுக்கான சுய பிரச்சனைகளில் மறந்தே விடுகிறோம் ..இது தான் உண்மை நிலை, கருணை குணம் இருக்கிறது, உதவி செய்யும் மனப்பான்மை இருக்கிறது,ஆனால் இவைகள் அழிந்துவிடுகின்றன்...


போரிடும் திறமை இருக்கிறது, தணியாத தாகம் இருக்கிறது நமக்கான சரியான களமும், சரியான ஆயுதமும் தான் இல்லை.களத்தையும், ஆயுதத்தையும் நான் காட்டுகிறேன், நாம் ஒன்றாய் போரிடுவோம்..போர் உக்தியையும் உங்களுக்கு கூறுகிறேன்..


சமீபத்தில் என் அலுவலகம் அருகில் மதிக்கத்தக்க ஒரு பெரியவரும்,ஒரும் இளைஞனும் ஒரு விசிட்டிங் கார்டு ஒன்று என்னிடம் தந்தனர் , அதில் 24/7 இலவச இரத்த தானம் போன் செய்தால் போதும் என அச்சிடப்பட்டு அதன் எண்ணையும் ,பெயரையும் தந்துள்ளனர்.அதை பார்த்த எனக்கு பெருமையாகவும் ,தலைக்குனிவாகவும் இருந்தது .ஏனெனில் இதுவரை 6தடவைக்கு மேல் ரத்தம் வழங்கியுள்ள என்னால் எப்படி இதுமாதிரி யோசிக்க முடியவில்லை என்று அப்போது என் சிந்தனையில் வ்ந்தது இதுதான்

போரிட தயார் என்று துடிக்கும் இளைஞர்களை முதலில் ஓன்று சேர்ப்போம், ஒன்று சேர்ந்த இளைஞர்களுக்கு களத்தை காட்டுவோம் ..


ஒன்று சேர்த்த இளைஞர்கள் செய்ய வேண்டியது ரொம்ப எளிதான ஒன்று

ஒன்று சேர்ந்த இளைஞர்கள் என்ன பண்ணப்போகிறோம் என்றால் எங்காவது பட்டினியால் சாகும், வாழ பாதை தேடிக்கொண்டு இருக்கும் மனிதர்களை கண்டுபிடித்து குறித்து கொள்ள வேண்டும்,(குறித்து கொள்ள வேண்டும் என்றால் அலுவலகங்களுக்கு விடுமுறை எடுத்துகொண்டு போயி தேடணும்னு அவசியம் இல்லை தோழர்களே, நீங்கள் நடக்கும் பாதை, சாலையோரம்,ரயில் நிலையங்கள், அங்காடி கடையோரம் என்று உற்று நோக்கினால் போதும், அவர்களை பற்றிய விவரங்கள் அறிய வெறும் 5 நிமிடங்கள் போதுமானது).


எப்பொழுதும் ஒரு திட்டம் சரியாக அமைய வேண்டும் என்றால், நிச்சயம் இரண்டு முக்கியமானதை கவனிக்க வேண்டும்,
1).தேவைப்படுபவை
2).தடைகள் ஏற்படுத்துபவை


தேவைப்படுபவை


1).வலுவான அறிவு சார் மனிதர்கள்


2). சந்திக்கும் மனிதர்களிடம் எல்லாம் விழிப்புணர்வூட்டும் செய்திகள் பரிமாற்றம்
3).மாதம் ஒரு நாள் தான் உண்ணும் ஒர் வேளை உணவை ஒரு பசித்த ஏழைக்கு ஒதுக்கும் குணம்


தடைகள் ஏற்படுத்துபவை


1).நேரம் ஒதுக்க முடியாமை,


(குடும்பஸ்தர்கள்- மாதத்தில் 29 நாட்கள் உங்கள் குடும்பத்திற்கு ஒதுக்கலாம், ஒரே ஒரு நாள் மட்டும் விழிப்புணர்வுக்காக)

(காதலர்கள்- மாதத்தில் 29 நாட்கள் உங்கள் காதலிக்காக/காதலனுக்காக ஒதுக்கலாம், ஒரே ஒரு நாள் மட்டும் விழிப்புணர்வுக்காக)


(பணிபுரிபவர்கள் - மாதத்தில் 29 நாட்கள் உங்கள் பணிக்காக ஒதுக்கலாம், ஒரே ஒரு நாள் மட்டும் விழிப்புணர்வுக்காக)


(மாணவர்கள் - மாதத்தில் 29 நாட்கள் உங்கள் படிப்புக்காக ஒதுக்கலாம், ஒரே ஒரு நாள் மட்டும் விழிப்புணர்வுக்காக)

2).கருத்து வேறுபாடு


(இங்கே யாரும் தலைவனும் இல்லை, தொண்டனும் இல்லை, அனைவரும் ஒன்றே)


அது தாங்க நான் சொன்ன போர்க்களமும், போர்களும்....


ஆனால் ஒன்று மட்டும் நன்றாய் தெரியும், நாம் ஒன்று சேர்ந்தால் ஒரு பட்டினிச்சாவையும், ஒரு வறுமைச்சாவையும் தடுக்க முடியும் மாதம் ஒரு முறை...

நீங்களும் அந்த 100 பேரில் ஒருவர் தான், வாருங்கள் முகம் தெரியா தோழர்களே,கண்முன் நடக்கும் சாவை கைகோர்த்து தடுப்போம்.... ....


குளிர் அறையில் அமர்ந்து இவர்களால் என்ன சாதிக்க முடியும் என்று நினைக்கும் மூடர்களின் முகத்தில் அறைந்து சொல்வோம் நாங்களும் விவேகானந்தர் கூறிய அந்த 100 பேரில் ஒருவன் என்று.....

இடுக்கை :கோவைராமநாதன் போர்க்(களம்)குணம்,      நன்றி : அந்த பெரியவர்

7/17/2010

கண்டிப்பாக படியுங்கள் மனிதம் இருந்தால்-4

வாரன் ஆண்டர்சன் நீதி மன்றத்தில் ஆஜராகாமல் புறக்கணித்து வந்ததால் யூனியன் கார்பைடின் பங்குகளை முடக்க தலைமைப் பெருநகர மன்றம் முடிவு செய்தது. இதையடுத்து சொத்துக்களைக் காப்பாற்றிக் கொள்ள அதன் பங்குகளை விற்று வரும் பணத்தில் போபால் மருத்துவமணைக் கட்டி அதில் தனது வழக்குரைஞர் சர் இயான் பெர்சிவல் தலைமையில் ஒரு டிரஸ்ட் அமைக்கப் படும் என அறிவித்தார் ஆண்டர்சன்.


ஆனால் இதை அந்நீதிமன்றம் ஏற்றுக் கொள்ள மறுத்து பங்குகளை முடக்கும் நடவடிக்கையை மேற்கொண்டது. இதை எதிர்த்து ம.பி உயர் நீதி மன்றத்தில் யூனியன் கார்பைடு வழக்குத் தொடுத்தது. ஆனால் இங்கும் அவர்களுக்கு எதிராகவேத் தீர்ப்பளிக்கப் பட்டது. அதன் பின் உச்ச நீதி மன்றத்தின் மூலம் தங்களுக்கு சாதகமானத் தீர்ப்பைப் பெற்றது யூனியன் கார்பைடு.


யூனியன் கார்பைடின் பங்குகள் விற்கப் பட்டு வந்த பணம் முழுதும் சிறுகசிறுக யூனியன் கார்பைடு உருவாக்கிய டிரஸ்டிடமே போய் சேர்ந்தது.


 பத்து ஆண்டு சிறை தண்டனை பெறும் வகையில் வழக்குத் தொடுக்கப் பட்டிருந்த இந்தியக் குற்றவாளிகள் 9 பேரும் உச்ச நீதி மன்றத்தை அனுகினர்.அதில் தீர்ப்பளித்த உச்ச நீதி மன்றம்


"சம்பவம் நடந்த அன்று நிர்வாகிகளா ஆலையை இயக்கினார்கள்? அன்று விபத்து நடக்கப் போவதை அவர்கள் என்ன அறிந்தா இருந்தார்கள்?" போன்ற மனிதமற்ற கேள்விகளுடன் அவ்வழக்கை சாதரண சாலை விபத்து போன்ற வழக்காக மாற்றினர். வெறும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே தண்டனைப் பெறும் வழக்க்காக அது மாற்றப் பட்டது


 இதன் பின் 2001-ம் ஆண்டு டௌ கெமிக்கல்ஸ் யூனியன் கார்பைடு கார்பரேஷனைக் கைப் பற்றியது. போபால் ஆலையையும், அதன் சுற்றியுள்ளப் பகுதிகளையும் சுத்தப் படுத்த டௌ கெமிக்கல்ஸுக்கு உத்தரவிட வேண்டும் என போராட்ட அமைப்பினரால் ம.பி உயர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடுக்கப் பட்டது. 2005-ம் ஆண்டு இந்திய அரசின் இரசாயணத் துறையும் இவ்வழக்கில் இணைந்து கொண்டு டௌ கெமிக்கல்ஸ் முதல் கட்டமாக 100கோடி ரூபாயை நீதி மன்றத்தில் கட்ட வேண்டும் என மனு செய்தது.


இந்திய அரசின் இரசாயணத் துறை இவ்வழக்கிலிருந்து விலகிக் கொண்டால் 1000 கோடி ரூ அளவிற்கு இந்திய பங்கு சந்தையில் முதலீடு செய்வதாக அமெரிக்கர்களால் பேரம் பேசப் பட்டது. அப்போது முதலீடு கழகத் தலைவரான ரத்தன் டாட்டா டௌ கெமிக்கல்ஸை இவ்வழக்கிலிருந்து விடுவித்தால் இந்திய முதலாளிகளே பணம் போட்டு சுத்தப் படுத்தும் பணிகளை செய்வதாக கூறினார்.


அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரம் இதற்கு ஆதரவுக் கடிதம் எழுதினார். அதன் பின் அர்ஜீன் சிங் தலைமையில் நடைபெற்று வந்த அமைச்சர்கள் குழுவைக் கலைத்து விட்டுப் புதிதாக அமைப்பதென்றும், நிவாரணப் பணிகளையும், சுத்தப் படுத்தும் பணிகளையும்மேற்பார்வையிடுவதென முடிவு செய்தனர். இதன் பொருள் டௌ கெமிக்கல்ஸை அப்பொறுப்புகளிலிருந்து கழட்டி விடுவது என்பதே.


 இந்த கொடூரக் கொலைகளுக்கு 25 வருடங்கள் கழித்து இந்தியக் குற்றவாளிகள் 7 பேருக்கு வெறும் 2 ஆண்டுகள் சிறை த்ண்டணை மட்டுமே விதிக்கப் பட்டது. அதே சமயம் அவர்களை ஒரு மணி நேரம் கூட சிறையிலடைக்காமல் 25,000 ரூ பெற்று பிணையிலும் விட்டு விட்டது இந்தத் தீர்ப்பு.


தீர்ப்புகள், தீர்வுகள் எல்லாம் முதலாளிகளுக்கு மட்டுமே சாதகமாகி போன நிலையில் பொது மக்களைப் பற்றியோ, மனிதம் பற்றியோக் க்வலைப் பட எந்த அரசியல் வியாதிகளும் முன் நிற்க வில்லை. மாறாக டௌ கெமிக்கல்ஸின் சொம்பு தூக்கிகளாக மாறிப் போயிருக்கிறார்கள்.


யார் இந்த டௌ கெமிக்கல்ஸ்? என்ற வரலாற்றை அடுத்தப் பதிவில் சொல்கிறேன்.


நன்றி: புதிய ஜனநாயகம்                          இடுக்கை :அ.ராமநாதன்

கண்டிப்பாக படியுங்கள் மனிதம் இருந்தால்-3



1984-ல் நடந்த இந்த கொடூரக் கொலைகள் குறித்த வழக்குகள் எவ்வாறு கையாளப் பட்டிருக்கின்றன எனப் பார்த்தால் அது ஆளும் வர்க்கத்திற்கு ஆதரவாக தான் சென்று முடிந்திருக்கிறது.


இந்த வாரன் ஆண்டர்சன் எனும் பண முதலையை நம் அரசியல் வியாதிகள் தப்பிக்க வைத்து வழியனுப்பி வைக்கும் போது அவ்ர் மீது பதியப் பட்டிருந்த வழக்குகள் ஆயுள் தண்டனை வரை அளிக்கக் கூடிய சதி, கொலைக் குற்றமாகாத மரணம் விளைவிக்கும் குற்றம் (Culpable homicide) உள்ளிட்ட 7 வழக்குகள். இவற்றுள் பிணையில் வெளி வர முடியாத வழக்குகளும் இருந்தன
ஆனால் மத்யபிரதேசப் போலீசார் ஆண்டர்சனுக்கு சட்ட விரோதமாக பிணை வழங்கி அரசியல் வியாதிகளின் உத்தரவில் அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்தனர். அந்த செயலை எதிர்த்து அப்போதே பாதிக்கப் பட்ட மக்கள் சார்பாக வழக்குகள் தொடுக்கப் பட்டன.


 இதன் பின் 1985ம் ஆண்டு மார்ச் 29ம் தேதி அப்போது ஆட்சியிலிருந்த காங்கிரசு அரசு இந்திய நாடாளு மன்றத்தில் "போபால் வாயுக் கசிவு பேரழிவு" சட்டத்தை நிறைவேற்றியது. இச்சட்டம் பாதிக்கப் படவர்கள் தனிப் பட்ட முறையில் வழக்குத் தொடுக்கவும், தங்களுக்கென ஒரு வழக்குரைஞரை வைத்துக் கொள்ளவும், நீதி பெறவும் இந்திய சாசனச் சட்டத்தில் உறுதி செய்யப் பட்டிருந்த உரிமைகளைத் தட்டிப் பறித்தது. மேலும் தங்கள் தரப்பு நியாயங்களை எடுத்துச் சொல்லும் வாய்ப்பு வழங்கப் பட வேண்டும் என்பதையும் மறுத்தது.


 இச் சட்டத்தை எதிர்த்து பாதிக்கப் பட்டவர்கள் நடத்திய வழக்கில் உச்ச நீதி மன்றம் "ஒரு பெரிய நல்ல காரியம் செய்யும் போது அதில் சிறிய தவறுகள் செய்வது அனுமதிக்கத் தக்கதுதான். சூழ்நிலைகளின் தேவையையொட்டி இயற்கை நீதிய மறுதலிக்கலாம். இந்திய அரசு பாதிக்கப் பட்டவர்களுக்கு தந்தையாக இருந்து இந்த சட்டத்தை நிறைவேற்றியிருக்கிறது" என தத்துவம் பேசி இந்த வழக்கைத் தள்ளுபடி செய்திருக்கிறது.


 பாதிக்கப் பட்ட மக்களால் அமெரிக்க நீதி மன்றங்களில் தொடுக்கப் பட்டிருந்த நட்ட ஈடு கோரும் வழக்குகள் இந்தியாவிற்கு மாற்றப் பட்டன. இதையடுத்து போபால் மாவட்ட நீதி மன்றம் யூனியன் கார்பைடு நிறுவனம் இடைக்கால நட்ட ஈடாக 350 கோடி வழங்க உத்தரவிட்டிருக்கிறது. ஆனால் இந்த விபத்துக்கு யார் பொறுப்பு எனத் தெரியாத நிலையில் நட்ட ஈடு தர முடியாது என்ற வாதத்தை முன்வைத்தது யூனியன் கார்பைடு.


இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதி மன்றம் பாதிக்கப் பட்டவர்களின் நலன் கருதி நிவாரணமாக 250 கோடி வழங்குங்கள் என கேட்டுக் கொண்டது. இதை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தது யூனியன் கார்பைடு.இதன் பின் பேசப் பட்ட பேரத்தில் 47 கோடி நட்ட ஈடாகக் கொடுக்க சம்மதித்தது அந்நிறுவனம். ஆனால் அது இடைக்கால நட்ட ஈடு அல்ல, ஆயுட்கால நட்ட ஈடாகப் பெற முடிவு செய்யப் பட்டது.


பாதிக்கப்பட்ட மக்களுக்காகப் போராடும் அமைப்புகள் இப் பேரத்தை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தன. இதை விசாரித்த நீதிமன்றம்


"இந்திய அரசு பாதிக்கப்பட்ட மக்களைக் கலந்து ஆலோசிக்காமல் நட்ட ஈடுத் தொகையை முடிவு செய்தது சரிதான். போபால் வாயுக்கசிவு பேரிடர் சட்டம் அரசுக்கு அந்த உரிமையை வழங்கியுள்ளது" எனத் தீர்ப்புக் கூறியது. மேலும் வருங்காலத்தில் நட்ட ஈடுத் தொகை போதவில்லை எனக் கோரிக்கைகள் எழுந்தால் இந்திய அரசே பரிசீலித்துக் கொடுக்கும் எனக் கூறி யூனியன் கார்பைடு சிவில் வழக்குகளிலிருந்து கழட்டி விடப் பட்டது.


பாதிக்கப் பட்ட மக்களின் கோபத்தைத் தணிப்பதற்காக, யூனியன் கார்பைடு மீது தொடுக்கப் பட்டிருந்த கிரிமினல் வழக்குகளை மீண்டும் நடத்த உச்ச நீதி மன்றம் அனுமதி அளித்தது.


இது போன்ற பல்வேறு நீதி மன்ற இழுத்தடிப்புகளுக்குப் பின் 1992 பிப்ரவர் 1ம் தேதி போபால் தலைமைப் பெருநகர நீதி மன்றம் வாரன் ஆண்டர்சனைத் தேடப் படும் குற்றவாளியாக அறிவித்தது.

பதிவின் நீளம் கருதி இதன் பின் இவ்வழக்குகளின் நிலையையும் இறுதித் தீர்ப்பையும் அடுத்தப் பதிவில் சொல்கிறேன்.
நன்றி: புதிய ஜனநாயகம்                              இடுக்கை :அ.ராமநாதன்

7/14/2010

அழகி


அலுவலக படிக்கட்டுகளில்
மேல் நாட்டு வாசனை திரவியத்தின்
மணம் கமிழ
என்னை கடந்து போன
ப்ரியாவை  விட
அழகாகவே இருக்கிறாள்
அதே அலுவலக
சமையல் அறையில்
வியர்வை வழிய
பாத்திரம் கழுவி கொண்டிருந்த
என் வயதை ஒத்த
அக்கா ஒருத்தி........

இடுக்கை : அ.ராமநாதன்                      நாள் :17.06 .2010

கண்டிப்பாக படியுங்கள் மனிதம் இருந்தால் 2



சாதாரணமாக ஒரு அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டால் எப்படித் தப்பிக்க வேண்டும் எனப் பெயரளவிலாவது பயிற்சி அளிக்கப் படும். ஆனால் இந்த போபாலில் வசிக்கும் மக்களுக்கு நச்சு வாயு வெளியேற்றத்தை எப்படி எதிர் கொள்வது என்பதற்கான எந்தப் பயிற்சியும் அளிக்கப் படவில்லை.


இது போன்று நச்சு வாயுக்கள் வெளியேறும் போது முகத்தில் ஈரத் துணியைக் கடிக் கொண்டு தரையில் தவழ்ந்து வாயு வெளியேறும் திசைக்கு எதிர்த் திசையில் நகர்ந்தாலே போதும், மரணத்திலிருந்து காத்துக் கொள்ளலாம் என்கிற சிறிய பயிற்சியைக் கூட அளிப்பதில் ஈடுபாடு காட்டாத இந்தக் கொடியவர்களால் செய்வதறியாது இறந்து போனவை உயிர்கள் இல்லையா? அதற்கு பெயர் கொலை இல்லையா?


இந்த மெத்தில் ஐசோ சயனைடு வாயு காற்றை விட இரு மடங்கு அடர்த்தி கொண்டது. அப்படியென்றால் அதை சுவாசிப்பது எவ்வளவு சிரமமாக இருந்திருக்கும். அதோடில்லாமல் இந்த வாயுவிற்கு எந்த ஒரு வாசனையும் கிடையாது. இதை நுகர்ந்தவர்கள் மிளகாய்ப் பொடியை நுகர்ந்தது போன்ற எரிச்சலை உணர்ந்திருக்கிறார்கள்.


அந்த எரிச்சலால் கண்கள் பிதுங்கி வெளியே வந்து விடுவது போல் உணர்வு ஏற்பட்டிருக்கிறது. பின்னர் நுரையீரலில் நெருப்பைக் கொட்டியது போல் மக்கள் வலியில் துடிதுடித்தனர்.


பலர் செய்வதறியாது தப்பிக்கும் எண்ணம் மட்டும் கொண்டு வேகமாக ஓடியிருக்கின்றனர். எந்த அளவு வேகமாக ஓடினார்களோ அதற்கு ஏற்றார் போல் இந்த மெத்தில் ஐசோ சயனைடு வாயுவை அதிகமாக சுவாசித்து துடிதுடித்து இறந்தவர்கள் தான் இங்கு அதிகம். சாலையோரங்களில் குழந்தைகளுடன் குளிரில் நடுங்கியவாறு உறங்கிக் கொண்டிருந்தவர்கள் அப்படியே இறந்து போயினர்.


விஷம் தாக்கியக் குளத்தில் மீன்கள் மிதப்பது போல் போபால் முழுவதும் பிணக் குவியல்கள். ஆனால் காவல்த்துறையோ மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம். கதவுகளை அடைத்து உள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தி வீட்டோடு சமாதியாக்கியது. என்ன செய்ய வேண்டும்? எப்ப்படித் தப்பிக்க வேண்டும்? என்ற முறைகள் அங்கு யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.


காரணம் அரசோ, அல்லது யூனியன் கார்பைடு நிறுவனமோ இது குறித்துப் ப்யிற்சி அளிப்பதை ஒரு பொருட்டாகவேக் கருதவில்லை. இதை வெறும் அலட்சியத்தால் நிகழ்ந்த விபத்து என முதலாளிகளைக் காப்பாற்றி பொது மக்களின் உயிர்களைக் கேவலப் படுத்துவது எவ்வளவு கொடூரமான ஒரு செயல்?


மரணம் அவர்களை ஒன்றும் உடனே கவ்விக் கொள்ளவில்லை. இவ்வளவு சித்திரவதைகளுக்குப் பின்னர்தான் அவர்களின் உயிர் பிரிந்திருக்கிறது.


எந்தத் தவறும் செய்யாமல் மரண தண்டணையை விடக் கொடுமையான தண்டணையை அனுபவித்த இவர்களின் மரணத்திற்கு காரணமானவன் அமெரிக்காவில் சுக வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறான். இதை விபத்து என்று சொல்லி அவனையும் தப்பிக்க வைத்து வழக்குகளைத் திரும்பப் பெற்ற நம் அரசியல் வியாதிகளுக்கு மனிதம் என்பதேக் கிடையாதா?


ஒன்று மட்டும் நன்றாகப் புரிகிறது இந்தியா ஜனநாயக நாடுதான். ஆனால் பொதுமக்களுக்கு அல்ல. பணம் படைத்த முதலாளிகளுக்கு மட்டும்.


1984 முதல் இப்போது வழங்கப் பட்ட தீர்ப்பு வரை இந்த வழக்கு எப்படி கையாளப் பட்டிருக்கிறது? என்பதை அடுத்தப் பதிவில் சொல்கிறேன்.

இடுக்கை :அ.ராமநாதன்  

7/12/2010

கண்டிப்பாக படியுங்கள் மனிதம் இருந்தால்



1984-ம் ஆண்டு திசம்பர் 2ம் நாள். அப்போது நான் பிறக்க  29 நாட்கள் இருந்தது. ஒரு வேலை நான் போபாலில் பிறந்திருந்தால் அந்த நாளே என் வாழ்க்கை முடிந்து போயிருக்கும் என்னைப் போல் பிறந்த குழந்தைகளுடன் சேர்த்து 22,146 பேர் மரணமும் வெறும் விபத்தாகப் பார்க்கப் படுவது அபத்தமான ஒன்று.


இவையெல்லாம் முதலாளிகளின் இலாப வெறிக்கு நடத்தப் பட்ட படுகொலைகள். இவற்றை விபத்தாகப் பார்க்கும் எண்ணம் நம் மக்களிடம் பரவியிருப்பது கொடுமையான விடயம். விளம்பர ஊடகங்களை வைத்து மக்கள் உணர்வுகள் அனைத்தும் வெறும் செய்திகளாக மாற்றப் பட்டிருப்பது எவ்வளவு கொடூரமான செயல்?


தான் ஏன் இப்படி இறந்து போகிறோம்? என்பதைக் கூட உணர முடியாமல் நடு ரோட்டிலும், இரயில் நிலையங்களிலும் பிணமாகிப் போனவர்கள் விபத்தால் இறந்தவர்கள் என்று சொல்வது மனிதம் மறைக்கும் பாதக செயல். இந்த விபத்துக்கெல்லாம் முக்கியக் காரணம் கவன்க் குறைவோ அல்லது சாதாரண விபத்தோ அல்ல.


முதலாளிகளின் வெறி கொண்ட இலாப நோக்கு. இது மட்டுமேக் காரணம். போபால் ஆலையில் கார்பரில் என்ற பூச்சி மருந்து தயாரிக்கப் பட்டு "செவின்" எனப் பெயரிடப் பட்டு  விற்பனைக்கு வெளிவந்திருக்கிறது. இந்த மருந்தைத் தயாரிக்க மாற்று வழிகள் நிறைய இருந்தும் "மெத்தில் ஐசோ சயனைடு" என்ற நச்சுப் பொருளை விலை மலிவு என்ற ஒரே காரணத்தை மனதில் கொண்டு இலாப நோக்கில் பயன்படுத்தியது இந்த முதலாளிகளின் குற்றமா? அல்லது விபத்தா?


ஆனால் இந்த மருந்து விவசாயிகளிடம் ஆதரவு பெறவில்லை. அதைத் தொடர்ந்து 1980-களில் நிலவிய வறட்சியின் காரணமாகவும் இந்த மருந்து தோல்வியைத் தழுவியது. இதனால் இலாபக் குறைவைத் தடுக்க அந்த முதலாளிகளால் முடிவெடுக்கப் பட்டு அங்கு உள்ள எந்திரங்களின் பராமறிப்பு செலவுகள் நிறுத்தப் பட்டன.


மேலும் சம்பவம் நடந்த அன்று இந்த ஆலையில் இந்த "மெத்தில் ஐசோ சயனைடு" வாயுவை மூன்று பெரிய கலன்களில் சேமித்து வைத்திருந்திருக்கிறார்கள். இந்த நச்சுத் திரவம் குளிரூட்டப் பட்ட இடத்திலோ அல்லது உறை நிலையிலோ பாதுகாக்கப் பட வேண்டும். ஆனால் இந்த நிறுவனம் "காஸ்ட் கட்டிங்" (செலவைக் குறைத்து இலாபத்தை அதிகரிப்பது) என்று சொல்லி குளிர் காலம் என சொல்லி குளிர் சாதனத்தை அணைத்து வைத்திருந்திருக்கிறது.


ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை இந்த கலன்களின் அழுத்தம் சோதிக்கப் பட வேண்டும். ஆனால் இங்கு 8 மணி நேரத்திற்கு ஒரு முறை சோதிக்கப் பட்டிருக்கிறது. 10:12 மணிக்கு சோதனை செய்த போது சரியாக இருந்த அழுத்தம் 11.30 மணிக்கு குளிர் சாதனம் இயக்கப் படாததால் 0 டிகிரியில் இருக்க வேண்டிய வெப்ப நிலை 250 டிகிரியைத் தொட்டு வெடித்து சிதறி 22,146உயிர்களை கொன்று, 500000 க்கும் மேற்பட்டவர்களை முடமாக்கியதுடன் இன்றும் அங்கு பிறக்கும் குழந்தைகள் குறை பாடுகளுடன் பிறந்து வருகின்றனர்.


இவற்றையெல்லாம் விபத்து என சொல்லி மிகக் குறைந்த அளவு நஷ்ட ஈட்டை 25 வருடங்களுக்குப் பிறகு வழங்குவதற்கு உத்தரவிட்டிருக்கும் இந்திய அரசியலமைப்பை என்னவென்று சொல்வது? முதலாளிகளுக்கு கொடி பிடித்து மக்களை கொன்று குவிக்கும் பணி சிறப்பாக நடந்து வருவது என்ன கொடுமை?


இந்த மனித ஆழிப்பு நிகழ்வுகள் எல்லாம் வெறும் செய்தியாக பார்த்து தலைப்புடன் நிறுத்தி விட்டு சினிமா செய்திப் படித்துக் கொண்டிருந்தவன் தான் நான். புதிய ஜனநாயகம் புத்தகத்தில் இது பற்றிய செய்திகளைப் படித்ததும் அதிர்ந்து போனேன். அதை என் பதிவைப் படிப்பவர்களுக்காவது புரிய வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த போபால் தொடரைத் துவக்கியுள்ளேன். இன்னும் அங்கு நடந்துள்ள நடந்து கொண்டிருக்கும் முதலாளிகளின் அக்கிரம ஆட்டத்தை அடுத்தடுத்தப் பதிவுகளில் விவாதிக்க விரும்புகிறேன்.


வாருங்கள் விவாதிக்கலாம்.
நன்றி: புதிய ஜனநாயகம்          இடுக்கை :அ.ராமநாதன்

என் பார்வையில் மதராசபட்டினம்





சாதாரணமாக நான் எல்லா படங்களைப் பார்த்தாலும்..அவற்றை விமரிசித்து பதிவிடுவதில்லை.


சில..அருமையான..அற்புத..சிறந்த படைப்பாய் இருந்தால்..மனதில் மகிழ்ச்சி ஏற்படுவதுடன்..அதை மற்றவர்களுடன் பகிர்ந்துக் கொள்ளவேண்டும் என நினைப்பவன்.
அப்படி..உங்களுடன் நான் பகிர்ந்துக் கொள்ள நினைத்து எழுதிய கடைசி விமரிசனம் 'இராவணன் '
இப்போது..மற்றொரு சந்தர்ப்பம் வந்துள்ளது..ஆம்..நான் பார்த்த 'மதராசபட்டினம்'


ஆரம்பம் டைடானிக்..பின் சில நிகழ்ச்சிகள் லகான் ஆகியவற்றை நினைவூட்டினாலும்..படத்தில் சில குறைகள் இருந்தாலும்...மன நிறைவை ஏற்படுத்திய படம் இது.


லண்டனில் வசிக்கும் மூதாட்டி ஏமி..வாழ்வின் இறுதிக் கட்டத்தில் இருக்கும் போது..இந்திய சுதந்திரத்திற்கு முன் இந்தியாவில் தான் காதலித்த வாலிபன் பரிதியைத் தேடி வருகிறாள்.அவளது பார்வையில் படம் சொல்லப் படுகிறது Flash back உக்தியில்.


தமிழ்த்திரைக்கு இக்கதை புதிதல்ல என்றாலும்..கதைக் களம்...கலைஞர்கள் அனைவரின் உழைப்பு ஆகியவை இப்படத்தை வெற்றிப் படமாக ஆக்குகின்றன.தனியாக காமெடிக்கென தனி டிராக் இல்லாவிடினும்..எல்லாப் பாத்திரங்களும் ஆங்காங்கே பேசும் வசனங்கள் நமக்கு சிரிப்பை வரவழைக்கின்றன.


ஆர்யாவின் நடிப்பு சூப்பர்..பாத்திரத்தில் ஒன்றி விட்டார் எனலாம்..ஆத்திரப்படுவதும்,காதலை கண்களால் சொல்வதும், சண்டைக் காட்சிகளிலும், கிளைமாக்சிலும்....நகைச்சுவை இடங்களிலும் (வாத்தியார் வீட்டுக் கதவைத் தட்டி..நன்றி என்பதற்கு ஆங்கிலத்தில் என்ன எனக் கேட்கும் காட்சியில் ஆகட்டும்..ஏ.பி.சி.டி., கற்றுக் கொள்ளும் போதும் பிரமாதம்) அசத்தல் நடிப்பு.


கதாநாயகி ஏமி...ராவணனையும் பொறாமைப் படவைக்கும் அழகு..படம் பார்ப்பவர்களை எளிதில் கவர்ந்து விடுகிறார்..'மறந்து விட்டியா' என்று கேட்கும் காட்சி ஒன்றே எடுத்துக்காட்டுக்கு போதும்.


படத்தின் வெற்றிக்கு பெரும் பங்கு வகிப்பது ஆர்ட் டைரக்டர் செல்வகுமார்..1947 மதராசபட்டினம்..இவரது உழைப்பை பறைசாற்றுகிறது.கூவம் ஆறு,போட் சவாரி,சென்ட்ரல் ஸ்டேஷன்,கை ரிக்க்ஷா (கலைஞர் நினைவிற்கு வருகிறார்),டிராம்,வால்டேக்ஸ் சாலை,பாரிமுனை,செகண்ட் லைன் பீச்..ஹேட்ஸ் ஆஃப் டு ஹிம்..


ஒளிப்பதிவாளர் நிரவ்ஷாவின் திறமைக்கு கிளைமாக்ஸ் காட்சி ஒன்றே போதும்.இசை ஜி.வி.பிரகாஷ்குமார்...பாடல்கள் கேட்க வைக்கின்றன...தியேட்டரில் இருந்து எழ வைக்கவில்லை.எல்லாத் துறையிலும்..அனைத்து நபரும் உழைத்து வந்த படம் இது..இயக்குநர் விஜய் எவ்வளவு பாராட்டினாலும் தகும்..


படத்தில் குறை என்று சொன்னால்தானே விமர்சனம்..


இடைவேளை..கிட்டத்தட்ட 90 மணித்துளிகள் கழித்து வருவதால்...பக்கத்தில் படம் பார்ப்பவர்...இந்த படத்திற்கு இடைவேளையே கிடையாது எனக் குரல் கொடுத்தார்..உண்மை...முழுப் படம் பார்த்த ஆச்சரியம்  இடைவேளையில் தோன்றிவிடுகிறது. அதுவே படம் மெதுவாக நகர்வது போன்ற தோற்றத்தை ஏற்படுத்திவிடுகிறது.


லகானில் மழையே இல்லாமல் மேகங்கள் திரண்டுவருகையில்...டான்ஸும்..பாட்டும் இருந்தது..இங்கு அப்படி ஒரு நிலையில்லாதபோது..மழையைக் கண்டு அவ்வளவு மகிழ்ச்சி..ஆட்டம்...ம் ஹூம்..ஒட்டவில்லை.


எல்லாவற்றையும் திறமையாய் கையாண்ட செல்வகுமார்..இரு விஷயங்களில் கோட்டை விட்டுள்ளார்..சென்ட்ரல் ஸ்டேசன் முகப்பு கடிகாரம்..அப்போதெல்லாம்..இன்னும் பிரம்மான்டமாய் இருந்தது.பாரிமுனையில் பேருந்தை காட்டும் இவர்..அப்போதெல்லாம் பேருந்து இஞ்சின் வெளியே (இன்றைய லாரிகள் போல் இருக்கும்)இருக்கும்..அதையும் கோட்டைவிட்டு விட்டார் எனலாம்.
இவை சிறுகுறைகளே..மற்றபடி..
படம் அருமை..அனைவரும் பார்க்க வேண்டிய படம்..


தமிழ்த் திரையுலகில் திறமை மிக்க இயக்குநர்கள் உருவாகிவருவது..பெருமகிழ்ச்சியைக் கொடுக்கிறது

இடுக்கை :அ.ராமநாதன்

7/10/2010

இன்றைய சிந்தனை
நல்ல மனது இருப்பவருக்கு கடவுள் சந்தர்ப்பம் கொடுப்பதில்லை....
சந்தர்ப்பம் இருப்பவருக்கு கடவுள் நல்ல மனம் கொடுப்பதில்லை..........

எதிர்ப்பார்க்கும் காலமே எதிர் காலம்

எதிர்ப்பார்க்கும்  காலமே எதிர் காலம் -ஏட்டில் கற்றிருப்பாய்


உனை எதிர்கின்ற காலமே எதிர் காலம் - புதிய பொருள் உணர்வாய் !


வாழ்க்கையில் போராட்டம் - வாடிக்கை என்றிருப்பாய்


வாழ்க்கையே போராட்டம் -மெதுவாய் தான் நீ உணர்வாய்


வீழ்வாய் எழுவாய் பெருமை அடைவாய் மீண்டும்


வீழ்வாய் வீழ்வாய் வாழ்வில் பொறுமை இழப்பாய் !


வாழ்க்கை கடலில் உனக்காக சில புயல்கள் உருவாகும்


உனை வீழ்த்தி சிதைத்து பின் தானாக அது திசை மாறும்


ஜான் ஏறினாள் முழம் சறுக்கும் அது பழைய மொழி


முழம் சறுக்கி முட்டி உடையும் இது புதிய மொழி


கல்லெறிந்து காயம் செய்வான்


பழங்களை அள்ளி செல்வான்


நீர் ஊற்றி காத்து நிர்ப்பாய்


ஏமாற்றம் ஏந்தி நிர்ப்பாய்


நீ விழும் போது ஆறுதல் சொல்லி ஆறுதல் அடைவான்


எழுந்து நின்று நடந்து பார் உன் மேல் ஆத்திரம் அடைவான் !


உனை அடக்கி ஆள ஆயிரம் வழி அறிந்து வருவான்


உனை அக்றிணை போல் நடத்தி காட்ட யோசனை செய்வான்


முகமில்லா வெற்றிக்கு முகவரிகள் பல நூறு


முட்டி கால் உடையாம அதை அடைந்தது யார் நீ கூறு !


வெற்றி என்ன மணப்பெண்ணா அழகா அவளை கை பிடிக்க?


அடி வாங்கி விழுந்து எழுந்து போ திடமா அவளை நீ பிடிக்க !


வானவில் வெளுத்தாலும் உன் நிறத்தை நீ இழக்காதே


தோத்து போய் திரும்பி வந்தா மீண்டும் துரத்தி போக தவறாதே !


கடல் அலைகள் தூங்கினாலும் உன் கண்ணை மட்டும் மூடாதே


உனை வீழ்த்த சதி நடக்குது என்பதை நீ மறவாதே !


வெற்றி நுனி அடைந்த பின்னும் மனமே நீ அசராதே


தள்ளி விட ஒருவன் இருப்பான் நீயும் அதை மறுக்காதே !

சிந்தனை &இடுக்கை :அ.ராமநாதன்

இப்படியும் கவிதை எழுதுறாய்ங்கப்பா ?



ஏதோ கவிதை எழுதுவது காதல் பற்றியோ, இல்லை சமூக அவலங்களோ இல்லை சீர்திருத்தமோ இல்லை சொந்த சோகமோ இருக்கவேண்டும் என்பது கவிதையின் எழுதாத விதியோ என்று எண்ணிக் கொண்டிருந்த எனக்கு சமீபத்தில் படித்த கவிதை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. எதை வேண்டுமானாலும் வைத்துக் கவிதை எழுதலாம்.


இதைப் படித்து எனக்குள் நான் சிரித்ததைக் கண்டு என் நண்பர்  “ உங்களுக்கு என்ன ஆச்சு தானே சிரிக்கீற  ?” என்ற நக்கல் என் சிரிப்பை நிறுத்தவில்லை.


அந்தக் கவிதை இதுதான், இணையதளில்  படித்தது.


கால்விரல்களின் நகத்தை வெட்ட
காலை மடக்கி பாதம் தொட,
சாக்சும், ஷூ லேசும் கட்ட
கஐகர்ணம் போட வைக்கிறாயே!


ரேஷன் கடை க்யூவானாலும்
சினிமா டிக்கெட் எடுக்கும்
வரிசையிலும்
பேருந்து ஸ்டான்டிங்கில்
பயணிக்கும் போதும்
யோவ்! உனக்கு முன்னால
எவ்….. வளவு கேப் என பிறர்
முறைக்கப் காரணம் நீ தானே!


மல்லாந்து படுத்தால் மலை மாதிரியும்
பக்கவாட்டில் படுத்தால் அருகில்
பாப்பாவாகி
குப்புறப்படுக்க விடாமல்
கொடுமை செய்து
குலுங்கிச் சிரித்தால் பிறரையும்
குலுங்க வைக்கிறாயே!
இருப்பினும் உன்னால்
எனக்கு உதவிதான்,
இருக்கும் இடத்தில் உன்னை
டேபிளாகவும்,
இரு கைகளுக்கு ரெஸ்ட் ஸ்டாண்ட்
ஆகவும்,
ஹெல்மெட்டுக்கு நல்ல
ஷெல்பாகவும்….
ஐ லௌவ் யூ ஸோ மச் தொப்பை!.


எழுதியது யார் தெரியவில்லை?
யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்.

சுட்டது & இடுக்கை :அ.ராமநாதன்

7/09/2010

தோழி இருந்தாள்...

எனக்கொரு தோழி இருந்தாள்;
வாழ்வில் ஒரு விடியலாய்,
மனம் இறுக்கமான நேரங்களில் நெருக்கமாய்,
தொலைத்து விட்டேன் அவளை...


அவளுக்கென விருப்பு வெறுப்புகள் இருந்ததில்லை.
என் விருப்புகளே அவள் விருப்புகளாய்,
என் வெறுப்புகளும் அவள் விருப்புகளாய்,
தேடிக் கொண்டிருக்கிறேன் அவளை இன்னமும்...


இந்நாளின் அவள் புகைப்படம்,
மின்னஞ்சல் வழிவந்த உன் ப்ரியங்கள்,
உனக்கான என் தேடல்கள்,

பொக்கிஷமாய் அத்தனையும்; நீ பார்க்கவென.
காத்திருக்கிறேன் இளையரசி!
கட்டாயம் நீ கிடைப்பாய்.

இடுக்கை : அ.ராமநாதன்

7/04/2010

தெரியாத என் காதல் பயணம்



உலகில் எத்தனையோ பெண்
இருக்க அவள் மீது மட்டும்
எனக்கு ஏன் காதல் மலர்ந்தது


அன்று நான் அடைந்த இன்பத்திற்கு
அளவில்லை இன்று
அவள் பிரிவின் துன்பத்திக்கு
காரணம் புரியவில்லை

பின் மரணத்தை நேசித்தேன்
அவள் என்னுடன் பேச மறுத்த
இந்த நேரத்தில்


அந்த மரணமும் கூட
என்னை ஏற்க்க மறுக்கிறது
காரணம் என்ன


 தெரியவில்லை
விதியின் பயணமோ
முடியவில்லை


சிந்தனை & இடுக்கை :அ.ராமநாதன்

வாழ்வதுதான் வாழ்க்கை......!!!


பிறந்து விட்டோம்
வாழ்வதற்காகவே
வந்த பாதைகள் எல்லாம்
வேதனை முற்களால்
நிரம்பியிருக்கலாம்.
வலிகள் தொடரலாம்
வழி நெடுகே...!


வழியில்
இடருகள் வந்தால்
முட்டிமோதி தள்ளிவிட்டு
பயணத்தை தொடரும்
தொடரூந்து போல
தொடரலாம் நாம் போகும்
இடத்தை நோக்கி
மனதில் உறுதியாய்.....!


கண்ணீர் வரலாம்
கண்கள் உள்ள்வரை
கவலைகள் வரலாம்
காலங்கள் உள்ளவரை
கண்ணீரானாலும்
கவலைகளானாலும்
நிச்சயம்ஓர் நாள்
மறையலாம்.
நம்பிக்கையாய்
நடைபோட்டால்.....!


இப்பயணம்
எத்தனை போராட்டமானது
இவ்வழியால் போனவர்கள்
சொல்லலாம்...போய்ச்சேர்ந்தவர்கள்
யாவரும் இவ்வழியை கடந்தவர்களே
இவ்வலியை கடந்தவர்களே...!


இரவும் பகலும்
எம்மைத்தொடர்வது போல
இன்பமும் துன்பமும்
எம்மைத்தொடரலாம்
செல்லும் இடம் வரை.
புன்னகை ஒளியை வீசியவாரு
துன்ப இருளை
கடந்து செல்லலாம்
மழலை மனதோடு............!


நிழலுக்காய் ஏங்கும்
பாலைவன பயணியாய்
நிம்மதிக்காய் தவிக்கிறது எமதுள்ளங்கள்.
கிடைத்தவறறை பெற்றுக்கொள்ளுங்கள்.
நிச்சயம் ஓர்நாள் நிழலும் வரலாம்
நிம்மதியும் வரலாம்
பாலைவனம் பசுமையாகவும் மாறலாம்...!


வெற்றியின் சுவை
வென்றவனுக்கே தெரியும்
வாழ்க்கையின் சுவை
வாழ்ந்தவனுக்கே தெரியும்.
வழி நெடுகே தொடருங்கள்
வாழ்க்கை வாழ்வதற்கே......!

இடுக்கை :அ.ராமநாதன்

7/01/2010

கற்பனை (The Imagination & Creativity...)


            நாம் பெரும்பாலான நேரங்களில் எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க , ரூம் போட்டு யோசிச்சீங்களா? , ரொம்ப யோசிக்கிறீங்க இப்படி நிறைய பேசிட்டு இருக்கின்றோம் 
எப்படி யோசிக்கிறேன் என்பதைப்பற்றி பார்ப்போமா?

 இப்போ மேட்டருக்கு வருவோம்...

            நம்ம வாழ்க்கையும் நிறைய பக்கங்கள் நிறைந்து ஒரு முழுமையான வாழ்க்கையா அமைகிறது,சிலர் என்னுடைய இன்னொரு பக்கதை நீ பார்த்ததில்லையே என்று சொல்வதை கேட்டிருப்பீர்கள்,அதேதான் இப்போ நான் சொல்லவருவதும்.

        நான் கார்ல(என்னோடதில்ல) கொடைக்கானல் போயிட்டிருக்கேன்னு வச்சுக்கங்க கார் நல்லாத்தாங்க போயிட்டு இருக்கும் ஆனா என்னோட மனசு இருக்குல்ல அது என்னா நினைக்கும் தெரியுமா ? ஒரு வேளை இந்த கார் இப்படியே கவுந்துடுச்சுன்னான்னு ஆரம்பிச்சு நான் மலை அடிவாரத்தில் விழுந்து கிடப்பது மாதிரியும் எனக்கு காயமாகி மயக்கமடைந்து கிடக்கும்பொழுது சிலர் என்னுடைய பணம் நகைகளை எடுத்துகொண்டு ஓடுவது போலவும் இருக்கும் . அந்த நொடி நான் கொஞ்சம் சுதாரித்து கொண்டு நான் பயணம் செய்து கொண்டிருக்கும் கார் டிரைவரை கவனமாக காரை செலுத்துமாறும், என்னுடைய பணத்தை பாக்கெட்டில் தொட்டு பார்த்து கொள்வதுமாகவும், அந்த பணம் போனாலும் ஏடிஎம் கார்ட் இருக்கிறதா என்றும், விபத்து அவசர அழைப்பு எண் என்ன என்பதை மனதில் ஓடவிட்டவாறும் பயணம் செய்வது வழக்கம்.இப்போ இந்த விபரீத கற்பனை எனக்கு ஒரு எச்சரிக்கை உணர்வை தருகிறது...இது ஒரு நெகடிவ்இமேஜினேசனாக இருந்த பொழுதிலும் பெரிய ஆபத்தில் சிக்கினால் என்ன செய்வது என்பதற்க்கு முன்னெச்சரிக்கையாக இருக்கிறது...

             இதே போல ஒரு இளைஞன் ஒரு பெண்ணை காதலிக்கிறான் என்று வைத்துகொள்வோம் அந்த இளைஞன் ஒரு சாதியை சேர்ந்தவன் அவனுடைய காதலி வேறொரு சாதியை சேர்ந்தவள் எனவும் கொள்வோம் இப்போ இரண்டு பேரும் திருமணம் செய்வதற்க்கு முன்பாக அவர்கள் திருமணம் செய்த பின் அவர்கள் இருவர் குடும்பத்தில் என்ன என்ன பிரச்சினைகள் வரும் அல்லது இரு வீட்டார்களும் அடித்துகொள்வார்களா? அல்லது சிறிது காலம் கழித்து அக்காதலர்களுக்கு குழந்தை பிறந்த பின்னாவது இரு குடும்பமும் ஒன்றாக செர்ந்து கொள்வார்களா? இப்படி பல விதமாக கற்பனை செய்து பார்த்தால் அந்தந்த நிகழ்வுகளுக்கு ஏற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துகொள்வதற்க்கு முக்கிய நிகழ்வாக கற்பனை உதவுகிறது...

         சில நேரம் இந்த கற்பனை சக்தி நாம் செய்யும் தொழிலில், அந்த தொழிலை மேம்படுத்த என்ன என்ன செய்யலாம் இப்படி செய்தால் என்ன அப்படி செய்து பார்த்தால் என்ன என்று புதுமைகள் புகுத்துவதன் மூலம் கண்டிப்பாக தொழில் வெற்றி பெற முடியும் இது தொழில்துறையில் வெற்றி பெற்ற பலரின் கூற்று...


            நம்ம உலகத்திலே ரொம்பவும் ஃபாஸ்ட்டானது நம்ம கற்பனைதாங்க நம்ம நினைச்ச நேரத்தில் நிலாவுக்கு கூட போய்வரும் சக்தி கற்பனைக்கு இருக்கிறது...இந்தகற்பனைக்கு வானமே எல்லை என்று கூட சொல்லல்லாம்.....

இங்க ஒரு வீடியோ இருக்கு பாருங்க ....

http://www.youtube.com/watch?v=002AY4cb5uw&feature=player_embedded

         இது ஒரு சின்ன மார்க்கர் விளம்பரம்தான் அதை எப்படி எதோட பொருத்தி பர்த்திருக்கிறார் இந்த விளம்பர இயக்குனர் இதுதாங்க இமேஜினேசன்...இப்போ புரிஞ்சுச்சா? இல்லியா சரி விடுங்க இன்னும் சொல்றேன்...
     
            12B படம் எல்லாரும் பார்த்திருப்பீர்கள் இயக்குனர் ஜீவா அதில் ஷ்யாம் பஸ்ஸை பிடிச்சு ஏறிப்போனா என்ன என்ன எல்லாம் நடக்கும் பஸ்ஸை மிஸ் பண்ணா என்ன என்ன எல்லாம் நடக்கும் என்று சூப்பரா சொல்லியிருப்பார் அருமையான ட்ரெண்ட் செட்டர் திரைக்கதை அது ஆனா யாருமே அதுக்கடுத்து அதை முயற்சி செய்யவே இல்லை...அந்தப்படம் இந்த இமேஜினேசனுக்கு சிறந்த ஒரு படமா சொல்லலாம் ...

              இந்த படத்தைப்பாருங்க இது வெறும் கேலிச்சித்திரம் இல்லீங்க அடுத்த நொடி எதுவேண்டுமானாலும் நடக்கலாம் என்ற நம் உலகத்தில் இன்னும் சில நூறு வருடங்களுக்கு பிறகு ஒரு மனிதனுக்கு தேவையான உடல் பாகங்களை வாங்கி நம் உடலில் பொருத்திக்கொள்ளலாம் என்ற நிலைவரும் பொழுது பல உடல் பாகங்கள் அந்தந்த ப்ராண்ட் பெயர்களின் பிரிண்டோட வரலாம்ன்னு நச்சுன்னு சொல்ற படம்தான் இது . இதுதாங்க கிரியேட்டிவிட்டி....




இப்போ இங்க பார்க்கும் படத்தில் சிகரெட் ஸ்மோக் பண்ணுவது தனக்குத்தானே குழிவெட்டிக்கொள்வது போன்ற ஒரு மெச்சேஜ் சூப்பரா சொல்லியிருக்காங்க பாருங்க...
இதுவும் கிரியேட்டிவிட்டி தாங்க...


இப்போ புரிஞ்சுதா இமேஜினேசன் கிரியேட்டிவிட்டி ஏதோ எனக்கு தெரிஞ்சளவுக்கு சொல்லியிருக்கேன்...
சரி இமேஜினேசன் கிரியேட்டிவிட்டி பற்றி சொல்லியாச்சு அதை உங்களையும் எப்படி செய்ய வைக்கிறது நிறைய இருக்குங்க நிறைய டாபிக் யோசிச்சி எழுதணும்ன்னு மைண்ட்ல வச்சுருக்கேங்க ஆனா பாருங்க நேரம் கிடைக்குறது கஷ்டமா இருக்கு சரி நம்ம யோசிச்சா இப்படித்தான் இருக்கும்ன்னு எனக்கு தெரியும் அதையே உங்களை யோசிக்க வச்சு எழுத சொன்னா என்ன?

நிபந்தனைகள்

ஒருவர் இருவரை தொடரச்சொல்லி அழையுங்கள் கண்டிப்பாக இருவர் மட்டுமே ரொம்ப கூப்பிட்டீங்கன்னு வச்சுக்கங்க போரடிச்சுடும் ஆமா தலைப்பும் அதன் உட்கருவும் நீங்கதான் அவங்களுக்கு சொல்லணும்...ஆரம்பிங்க உங்க கிரியேட்டிவிட்டிய பட்டைய கிளப்புங்க .. கொஞ்ச நாளைக்கு பதிவுலகம் முழுவதும் கிரியேட்டிவ்  ராஜ்யமா அமையட்டும் வாழ்த்துகள் ...

புதியதாக எழுத வந்திருக்கும் பதிவர்களுக்கு ஒண்ணே ஒண்ணு சொல்லிக்கிறேன்.. தற்போதைய காலத்தில் பள்ளி மாணவராயிருந்தாலும் சரி வேலைக்கு செல்பவராக இருந்தாலும் சரி குடும்பத்தில் உறுப்பினராக இருந்தாலும் சரி பிளாக்கராக இருந்தாலும் சரி நீங்கள் மற்றவர்களிடமிருந்து வித்தியாசமானவராக காண்பிக்கும் கட்டாயத்தில் இருக்கிறீர்கள் இது தவிர்த்து `இல்லை, நான் எப்பொழுதும் போல்தான் இருப்பேன் என்பீர்களேயானால் எல்லா மட்டத்திலும் பின் தள்ளப்படுவீர்கள் ஒரு சில நேரங்களில் அடையாளம் தெரியாமல் போகவும் வாய்ப்புண்டு....

எழுத்து &சிந்தனை : அ.ராமநாதன்


























கண்டிப்பா இங்கு தொடர்பதிவெழுத அழைக்கப்பட்டிருக்கும் நண்பர்கள் அழைப்பை ஏற்று எழுதுவீர்கள் என்ற நம்பிக்கையில்...

















என் தமிழே..என் தாயே.....!


               யாம் பிறந்து விழுந்த பொழுதினில் எம்மில் இருந்து தெரித்து விழுந்த ஒலியாய் வெளிப்பட்ட தாயே.....என் தமிழே...! மானிடரின் சப்தங்கள் மட்டுமே மொழியாய் போன ஒரு உலகத்தில் எம்மின் உணர்வுகளை எல்லாம் வெளிக் கொணர சப்தமாய் வெளிப்பட்டு உன்னை மொழியென்றும் எம் தாயென்றும் தமிழென்றும் கொண்டோம்.


             உலகம் மொழியறியா காலத்தில் கவிசெய்தோம் நாம். இயல், இசை, நாடகம் என்று உன்னில் எத்தனை எத்தனை வித்தைகள் செய்தோம். உணர்வுகளை சரியாக வெளிப்படுத்த எம்மிடம் சப்தம் இருந்ததால், சப்தமென்ற தமிழிருந்தால் வலியையும், சந்தோசத்தையும், துக்கத்தையும், சரியான பாகத்தில் எம்மால் வெளிக்கொணர இயன்றதால் மானிடரின் உணர்வு விளங்கும் தெளிந்த நிலையை எய்தினோம். ஒப்பற்ற ஒரு இனமாய் உலகுக்கு அறிமுகமானோம்!


           காலங்கள் தோறும் மனிதர்கள் வந்தனர். உம்மை கற்றுத் தெளிந்து தம்மை புலவர் என்று தாமெ தம்மையே விளித்துக் கொண்டனர். உன்னைக் கொண்டு கவிசெய்தனர், புதினம் செய்தனர், பாடல் செய்தனர் இசை செய்தனர். உன்னைக்கொண்டு ஒரு வாழ்வு உம்மால் ஒரு வாழ்வு...என்று காலங்கள் தோறும் நீ வளர்த்திருக்கிறாய் மனிதர்களை. எத்துனை சுவை கொண்டவள் நீ....அடுக்குத் தொடராய், இரட்டைக் கிளவியாய், உணர்வுகளை பிரதிபலிக்கும் அணி இலக்கணமாய், வார்த்தைகளை அளவிடும் மாத்திரைகளாய்....எம்மவரின் வாழ்வில் எத்தனை எத்தனை பங்கு கொண்டாய்....


              காலங்கள் தோறும் உன்னைக் கொண்டு இம்மனிதரின் வயிற்றுப்பசி அடங்கியது தாயே....! உன்னை சிறப்பாக்க, உம்மை வாழவைக்க உனக்கு விழா எடுக்க, செம்மொழியாய் நீ சிறந்தவள் என்று உலகிற்கு கட்டியம் கூறி அறிவிக்க மறந்து அரசியலாய், சுய நோக்காய்..பகட்டாய் உன்னை பகடி விளையாடி இருக்கிறார்கள் அம்மா...!


           தச்சு வேலை செய்யும் கோவிந்தனுக்கும், கட்டிட வேலை செய்யும் மாரியம்மாவிற்கும், அதோ அடுத்த தெருவில் மாம்பழம் வியாபாரம் செய்கிறாளே...பொன்னம்மா பாட்டி இவர்கள் என்ன வேற்று கிரகவாசிகளா? இவர்களுக்கு தமிழின் செம்மையை யார் விளக்குவார்கள்...?


         கம்பனின் சொல்லாடலை அவர்களின் தன்மைக்கேற்ப எப்படி விளங்குவார்கள்? அப்படியே விளக்கினாலும்...வெற்று வயிறும், வெறுமையான எதிர்காலமும் தமிழின் செம்மையை இவர்களின் செவிகளுக்குள் செல்ல அனுமதிக்குமா? தெருக்குத்தெரு தமிழ்ச்சுவையூட்டும் நிகழ்ச்சிகள் நடை பெற்றிருக்க வேண்டாமா? பாமரனுக்குப் புகட்டாமால் அறிஞர்களே பேசி சிரித்து, மகிழ்ந்து கொள்ள தமிழ் என்ன தனிப்பட்ட சொத்தா? உங்களின் ஆய்வுகளை எல்லாம் எதோ ஒரு பல்கலைகழகத்தில் நிகழ்த்தி அதன் மூலம் நம் மொழியின் வளத்தை நிறுவ முடிவுகள் எடுத்து அரசு நடைமுறை படுத்தியிருக்கலாமே.....? இதற்கு எதுக்கு கோடிகளில் செலவு....? மாறாக தமிழனின் வாழ்க்கை மிளிர அதை செலவு செய்திருக்கலாமோ.....?


              அந்தோ பரிதாபம் எம்மொழிக்கான விழா...அதற்கு ஒரு பாடல்....இதிலேயே தெரிந்து விட்டது தமிழனின் தமிழ்ப்பற்று. எம்மண்ணின் மணத்தை பாடலிலும் பாடல் வரிகளிலும் கொணரவுமில்லை, பட்டி தொட்டி எங்கும் பாடல்கள் ஒலிக்கவுமில்லை. தமிழ் என்பது ஒலி வடிவம் கொண்ட, எழுத்து வடிவம் கொண்ட..இலக்கணத்தில் சிறந்த...தொன்மையான மொழி மட்டுமல்ல..அது நமது கலாச்சாரத்தில் ஊறிய, வாழ்வில் அங்கமான உயிரோடு கலந்த ஒரு விசயம்.

             செம்மொழியின் பாடலும், தமிழனுக்கு சம்பந்தம் இல்லாதது அதில் பயன்படுத்திய வரிகள் வேண்டுமானால் தமிழோடு தொடர்புகொண்டிருக்கலாம் ஆனால் இசையும், இசைத்த கருவிகளும் தமிழோடு தொடர்பற்றது. ஒரு தாய் தன் குழந்தையை தாலட்டும் இசையில் நாம் எந்த சிரத்தையும் எடுக்காமல் தமிழ்த்தாய் வெளிப்பட்டு ஒரு வித உற்சாக அமுது படைப்பாள். ஏற்றம் இறைக்கும் உழவனும், நாற்று நடும் பெண்களும், ஆண்களும் இசைக்கும் பண்ணில் ஒளிந்து நின்று எட்டி எட்டிப் பார்த்து நம்மை மகிழ்விப்பாள் எம் தமிழ்த்தாய். அவளுக்கென்று ஒரு கலச்சாரம் உண்டு அந்த கலாச்சாரத்தை மேற்கித்திய இசையின் மூலம் அழிக்க நினைத்திருப்பது ஒரு கொடூரமான செயல் (இதன் இசையமைப்பாளர் எனது அபிமானமானவர்தான் அவரின் மீது குற்றம் சொல்கிறேன் என்று விசயத்தை திசை திருப்பி எங்கோ சென்றுவிட வேண்டாம். செம்மொழிப் பாடல் தமிழின் கலாச்சார வெளிப்பாடு அல்ல என்பதே என் எண்ணம்!)


யூனிகோட் என்னும் அச்செழுத்தினை இனி அனைவரும் பயன்படுத்தவேண்டும்....சரி....


வலைப்பூக்களில் தமிழ் மிளிர்கிறது .....சரி


உலகெமெங்கும் இருந்து தமிழறிகள்......கட்டுரைகளை சமர்ப்பித்தனர்......சரி..


மக்கள் கூட்டம் கரை புரண்டது........சரி


தமிழில் கையெழுத்திட அனைவரும் முன் வரவேண்டும்...சரி...


இனி தொடர்ந்து செம்மொழி மாநாடு நடக்கும்.....சரி....


          தனியார் தொலைக்காட்சி நிகழ்சிகளில் இயன்ற வரை தமிழ் புகுத்தப் பட வேண்டும் என்றும்  ராசிக்கல் விற்கும் வியாபாரிகளுக்கும், தொடர் நாடகம் என்னும் ஒரு மனோதத்துவ தாக்குதல் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கும் நேரம் ஒதுக்கும் இவர்கள்....அதிகபட்ச மக்கள் பார்க்கு நேரங்களில் செம்மொழியான எம் தாய்மொழியின் பெருமை சொல்ல நேரம் ஒதுக்க ஏதேனும் சட்டம் உள்ளதா?


எல்லா தமிழ் ஊடங்களும் தமிழின் சிறப்பினை கூற தனியே பக்கங்கள் ஒதுக்க வேண்டும் என்று கட்டளைகள் எதேனும் பிறப்பிக்கப்பட்டுள்ளதா? மக்கள் கூடும் இடங்களில் எல்லாம் மொழியின் வளமறியும் நிகழ்வுகள் ஏதேனும் உண்டா?


தமிழ் மொழி இல்லாத விண்ணப்ப படிவங்கள் எல்லாம் செல்லாது என்று அறிவிக்க முடியுமா?


சென்னையை வலம் வந்து பாருங்கள்....பேருந்தில் ஏறினாலும் சரி, மீன் வாங்க கடைத்தெருக்களுக்குச் சென்றாலும் சரி, இல்லை திரை அரங்குகளுக்குச் சென்றாலும் சரி...தமிழின் ஊடே எத்தனை எத்தனை ஆங்கில வார்த்தைகள். அலுவல் மொழி ஆங்கிலமாய் இருக்கும் பட்சத்தில் தமிழில் உரையாடுவதும், எழுதுவதும் பழக்கத்தின் அடிப்படையில் சிறிது கடினம் என்றாலும் இயன்றவரை மக்களை முயலச் செய்ய...


தமிழரிடம் தமிழில் பேசுங்கள் என்று கண்டித்து சொல்லா ஏதேனும் வழிவகை உண்டா.....?


ஒரு அலுவல் விசயமாக வேறு அலுவலகத்திற்கு சென்ற நான் ...அங்கு நான் சந்திக்க வேண்டிய மனிதரும் தமிழர்தான் என்று அறிந்து ...தமிழா நீங்கள் என்று கேட்க (இது நடந்தது chennai ) யெஸ் என்று இறுக்கமாய் பதில் சொல்லி தொடர்ந்து ஆங்கிலத்தில் உரையாடிய போது உடையில்லாமல் நின்று பேசியது போல உணர்ந்தேன்.....


இன்னும் சில தமிழர்கள் நாம் தமிழில் பேசினால் மதிப்பதே இல்லை....ஆங்கிலத்தில் பேசினால் மரியாதை சரளமாக வரும்.....எதாவது வேலை ஆகவேண்டும் அல்லது புகார் கொடுக்க வேண்டும் என்றால் உரக்க ஆங்கிலத்தில் பேசினால் ...பயப்படுகிறார்களா இல்லையா....? மனோதத்துவ ரீதியாக மனதிலே ஒரு எண்ணம் எடுத்துக் கொண்டு ஆங்கிலத்தில் பேசினால் பயப்படும் நிலை மாற...ஏதாவது விளக்க வகுப்புகள் எடுக்கப் போகிறீர்களா....செம்மொழி விழா நடத்தியவர்கள்.....?


மொழிக்கான விழா எடுத்ததற்கு வாழ்த்துச் சொல்லும் அதே நேரத்தில் தமிழை மேம்படுத்தும் வேளையில்..........தமிழனை மேம்படுத்தவும் ஏதாவது செய்யுங்கள் பெரியவர்களே.....!


தமிழ்....பேச.....தமிழன் இருக்க வேண்டும்...முதலில் இல்லையெனில் ஆராய்ச்சி முடிவுகளையும் சிறப்புகளையும்....அருங்காட்சியகத்தில் வைக்க வேண்டிய நிலை வரும்...


போற்றுவார் போற்றட்டும்...
புழுதி வாரி தூற்றுவார் தூற்றட்டும்...!
தொடர்ந்து செல்வேன்....
ஏற்றதொரு கருத்தை...
எனதுள்ளம் ஏற்றதால்..
எடுத்துரைப்பேன்....எவர்வரினும்....
நில்லேன்....! அஞ்சேன்...!

பின் குறிப்பு :இன்று உலகின் ஒவ்வொரு மூலைமுடுக்கிலும் தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.ஆனால் உலகளாவிய ரீதியில் தமிழ் மொழியின் ஆதிக்கம் குறைந்து வருவது கண்கூடு.எனவே எம் உயிரினும் மேலான எம் தாய் மொழியை கட்டிக்காப்பது எமக்கு தலையாய பொறுப்பு. எனவே தழிழர்களாகிய நாம் அனைவரும் தமிழ்ர்களிடம் தமிழில் கதைப்போம், எமது இளம் சந்ததியினருக்கும் தமிழ் பற்றை ஊட்டுவோம். கோவை அ.ராமநாதன்








எழுத்து &சிந்தனை : சுர்யாதேவா                    இடுக்கை :அ.ராமநாதன்