தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

1/31/2011

உயிரை எடுக்கும் போலி ஓட்டுனர்கள்

            
   உயிரை பறிக்கும் எமதர்மன் கையில் பாசக்கயிற்றுடன் எருமை மாட்டின் மீது வருவதாக கூறுவது உண்மையோ இல்லையோ, போலி ஓட்டுனர் உரிமங்களுடன் தமிழக சாலைகளில் 'டிரைவர்கள்' ரூபத்தில் எமன்கள் பவனி வருவது சர்வ நிச்சயமாக இருப்பதை உறுதிபடுத்தியுள்ளது புள்ளிவிவரம்

பொதுவாகவே ஓட்டுனர் உரிமங்கள் பெற விரும்புவர்களில்,90 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் அதற்கென உள்ள தனியார் ஓட்டுனர் பயிற்சி பள்ளி மற்றும் ஏஜென்சி மூலமாகத்தான் பெறுகிறார்கள்.


ஓரளவு ஓட்டக்கற்றுக்கொண்டவர்கள் போக்குவரத்து வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று அதற்கென உள்ள தேர்வில் கலந்துகொண்டு உரிமங்களை பெறுகிறார்கள்.


ஆனால் இப்படி உரிமங்களை பெறுபவர்கள் அனைவருமே, அவர்கள் எந்த வாகனம் ஓட்டுவதற்கு உரிமம் கோரி பெற்றார்களோ, அதனை ஓட்டுவதற்குரிய முழு தகுதியையும் பெற்றுள்ளார்களா? என்றால் இல்லை என்றே கூறவேண்டும்.


பணம் அல்லது செல்வாக்கை பயன்படுத்தி ஏஜெண்டுகள் மூலம் பெற்றுவிடுகிறார்கள். இதில் அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் முக்கிய புள்ளிகள் என்றால் அதிகாரிகளே அவர்களுக்கு வீட்டிற்க்கே வந்துகூட உரிமங்களை வழங்கி விடுகிறார்கள்.

இப்படி வாங்கப்படும் உரிமங்களை வைத்துக்கொண்டு சாலைகளில் வாகனங்களை ஓட்டினால் நிலைமை என்னவாக இருக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை.

இது ஒருபுறம் இருக்க,தமிழகம் முழுவதும் லாரி,பேருந்து போன்ற கனரக வாகனங்களை பெற்றவர்களில் கால்வாசி பேர், அதாவது நான்கில் ஒரு பங்கினர், வாகனங்களை ஓட்டுவதற்குரிய முழு தகுதிகள் இல்லாதவர்களாகவும், போலி ஓட்டுனர் உரிமங்களுடனேயே இவர்கள் சாலைகளில் வலம் வருவதாகவும் மாநில அரசின் சாலை போக்குவரத்து பயிற்சி நிறுவனம்,ஆங்காங்கே நடத்திய திடீர் சோதனைகளில் தெரியவந்துள்ளது....

1/30/2011

மகாத்மா நினைவஞ்சலி....
தந்தையா, தாத்தாவா, அண்ணலா, மகாத்மாவா?தனிமனிதச் சுதந்திரத்தின் மகானே ?


அத்தனையும் ஒன்றான அற்புத மனிதரே


அகிம்சையே காட்டிய அறிஞரே


மொத்த உலகத்தின் முதன்மைச் சிந்தனையே


முயற்சிக்கே பணிந்த முழுமையின் எளிமையே.


இத்தனை பெருமையும் இணைந்த இமயமே


தேசத் தந்தையாம் 'காந்தி' மகாத்மா!


சத்தியமே சோதித்த சோதனைச் சத்தியம


சமத்துவம் நடத்திய சமதர்ம உத்தமம


கத்தியும் ரத்தமும் காணாத போர்க்களம


கருணையும் உரிமையும் வற்றாத நடுநிலைக்களம


பித்தர்களும் போற்றிடும் அறிவியல் நிறைகுடம


பெண்மையைப் போற்றிடும் அன்பின் உறைவிடம


சுத்தமும் சுகமும் அகமும் புறமுமாம்


சுதந்திரம் என்பதே பிறரையே மதிப்பதாம்


எத்தனை புகழிலும் நழுவாத ஒழுக்கமாம


எண்ணம் அனைத்திலும் நேர்வழியாம்


புத்தனைப் போலவே வாழ்ந்ததும் உதாரணம


புரிந்துகொள்ள ஏதுவாய் மனித உலகம்


இத்தனை பெருமையும் இணைந்த இமயம


தேசத் தந்தையாம் 'காந்தி' மகாத்மா!


உண்ணலில் உத்தமராய் ; ஊட்டலில் அகிம்சையாம


உலகமதம் அனைத்தையும் ஒன்றுகண்ட ஞானியாம
அகிலத்திற்கே அருமைப் புதல்வனை; அண்ணல்காந்தியை


            அன்னைபாரதம் இழந்த கொடுரமான நாள்.....

 இன்று : காந்தி நினைவு தினம் ....

1/29/2011

என்னவளே...

மேகங்கள் வந்து செல்லும் பாதையை வானம் அறியாததா?

அலைகள் வந்து செல்லும் பாதையை கடல் அறியாததா?
வண்டுகள் வந்து செல்லும் பாதையை பூக்கள் அறியாததா?
இயற்கையின் அசைவுகள் இப்படியிருக்க.....

நீ செல்லும் பாதையை நான் அறியாமல் இருப்பேனா?
இதை அறிந்தும் அறியாதவளாய் - நீ
எனக்குத் தந்த புனைப் பெயரோ
                    "அக்கறையில்லாதவன்" என்று

 : என்னவளுக்கு நன்றி…

குறிப்பு : இதை சென்ற வார ஆனந்த விகடனுக்கு எழுதி அனுப்பியிருந்தேன்... ஆனால் வரவில்லை...

1/28/2011

டிரை-வாலி பல்கலைக் கழக மோசடியில் பாதித்த இந்திய மாணவர்கள்

            
           அமெரிக்கா போன்ற  அயல் நாட்டு பல்கலைக் கழகங்களுக்குச் சென்று தாங்கள் விரும்பிய கல்வியை படிக்க  செல்லும் இந்திய மாணவர்கள் சந்திக்கும் எதிர்பாரா அவலத்திற்கு மோசமான உதாரணமாக வெளியாகியுள்ளதுதான் டிரை-வாலி பல்கலைக் கழக மோசடி விசா விவகாரமாகும்.
              கலி்ஃபோர்னிய மாகாண தலைநகரான சான் பிரான்சிஸ்கோவிலுள்ள டிரை-வாலி பல்கலைக் கழகமே, எஃப் -1 என்கிற கல்விக்கான விசாவை மோசடி வழியில் பெற்றுத் தர உதவியுள்ளது என்பதுதான் பிரச்சனையின் சிகரமாகும். அந்த பல்கலையை அமெரிக்க அரசு இழுத்து மூடி விட்டதால், அதில் படிக்கச் சென்ற 1,500 இந்திய மாணவர்களின் - இவர்களில் பெரும்பாலோர் ஆந்திராவில் இருந்து சென்றவர்கள் - அவர்கள்  நிலை கேள்விக்குறியாகியுள்ளது.
வெளி  நாடுகளுக்கு பணியாற்றச் செல்லும் தொழில் திறன் பெற்ற தொழிலாளர்களாகட்டும், உரிய கல்வித் தகுதியுடைய மாணவர்களாகட்டும், அவர்களாகவே விசா முதலியவற்றைப் பெற்றுக்கொண்டு சென்று பணியாற்றிடும், கல்வி கற்றிடும் நிலை உள்ளது. இவர்களுக்கு உதவுவதாகக் கூறி பயண முகவர்கள் தான் முன்வருகிறார்கள். அவர்கள் இடையில் புகுந்து செய்யும் குழப்படியால் மலேசியாவிலும், துபாய் உள்ளிட்ட மத்திய கிழக்காசிய நாடுகளிலும் சட்டச் சிக்கலில் மாட்டிக்கொண்ட தொழிலாளர்கள் பல்லாயிரம். இப்போது மாணவர்களும் அப்படிப்பட்ட சட்டச் சிக்கல்களில் மாட்டிக்கொள்ளும் அவல நிலை உருவாகியுள்ளது.


டிரை-வாலி பல்கலையில் படிக்கச் சென்ற மாணவர்கள் பல இலட்சங்களைக் கொடுத்து விசா பெற்று சென்றது மட்டுமன்றி, அதன் பிறகு அங்கு பணியாற்றிக் கொண்டே (அப்படி ஒரு வாழ்நிலைக் கட்டாயம் உள்ளதால்) படிக்க முற்பட்டு, முறை தவறிய வழியில் பணி அனுமதியும் (Work Permit) பெற்று பல நகரங்களில் சென்று பணியாற்றியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு முகவரி வழங்கிய முறைகேட்டையும் அந்த பல்கலை   கழகம்  செய்துள்ளது.


இப்போது அந்தப் பல்கலை மூடப்பட்டுவிட்டதால், அங்கு படித்துக் கொண்டிருந்த 1,500 இந்திய மாணவர்களின் நிலை கேள்விக்குறியாகிவிட்ட நிலையில், அது பற்றி அங்குள்ள இந்திய துணைத் தூதரகத்திடம் அறிக்கை பெற்று அளிக்குமாறு அயலுறவு அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்தியத் தூதரக அறிக்கை பெற்று, அதன் அடிப்படையில் அமெரிக்க அரசுடன் பேசி இந்திய அயலுறவு அமைச்சகத்தால் என்ன சாதிக்க முடியும் என்பது ஐயத்திற்கிடமானதே. ஏற்கனவே விசா கட்டணங்களை அமெரிக்க அரசு தாறுமாறாக உயர்த்தியது குறித்து பேசி முடிவு காண்போம் என்று கூறியது இந்திய அரசு. ஒபாமா கூட இந்தியா வந்தார், ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. இப்படிப்பட்ட நிலை இந்த பல்கலை விவகாரத்திலும் நடக்கலாம்.


(இந்த ஒரு விவகாரம் மட்டுமல்ல, அமெரிக்காவின் அண்டை நாடான மெக்சிகோவில் இருந்து இரகசியமாக எல்லைத் தாண்டிச் சென்று அமெரிக்காவில் பணிபுரிவோரில் இந்தியர்களும் அதிகரித்து வருகிறார்கள் என்கிற செய்தி தெரிந்தது)

1/26/2011

62 -வது குடியரசு தின வாழ்த்துகள் .....          நாம் இந்த நாட்டில் பிறக்க வேண்டும் என்று நினைப்பதில்லை, அது விதிக்கப்பட்டது என்று நினைத்து கொண்டாலும் சரி, தற்செயலானது என்று நினைத்து கொண்டாலும் சரி, உண்மை என்னவென்றால் நாம் பிறக்கும் போதே அந்த நாட்டின் கலாச்சாரமும், பண்பாடும் நம்மோடு சேர்ந்து ஊட்டப்படுகிறது, முன்னோர்களின் தியாகம் நம்மிடயே நாட்டு பற்றை வளர்க்கிறது!, வரலாறு மறக்கப்படும் போது நாட்டின் மேல் உள்ள பற்றும், ஆர்வமும் குறைந்து மூன்றாம் நிலம் போன்ற எண்ணம் ஏற்படுகிறது!


இந்தியாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் வியாபார விசயமாக ஜப்பான் செல்ல வேண்டியிருந்தது, ஒரு ரயிலில் அவர் பயணம் செய்து கொண்டிருந்த போது, எதிரில் அமர்ந்திருந்த பெரியவர் ஒருவர் தீடிரென்று எழுந்து இருக்கையில் கிழிந்திருந்த கிழிசலை தைக்க ஆரம்பித்தார், இந்தியரோ அவர் இங்கே தான் வேலை செய்கிறார் போலன்னு நினைச்சிட்டார், தைத்து முடிந்த அவர் மீண்டும் இருக்கையில் அமர்ந்து கோப்புகளை எடுத்து பார்க்க ஆரம்பித்தார், இந்தியருக்கோ ஆச்சர்யம், தைத்து கொண்டிருந்தவர் கோப்புகள் பார்த்து கொண்டிருக்கிறாரே என்று!


ஐயா யார் நீங்க? என்று கேட்டார்!, ஏழெட்டு முகவரி அட்டைகள் நிரம்பிய உறை ஒன்றை தருகிறார், அத்தனைக்கும் அவர் தான் நிறுவனரும் கூட, இந்தியருக்கோ ஆச்சர்யம், பின் ஏன் ஐயா நீங்கள் இதை தைத்தீர்கள் என கேட்கிறார், ஜப்பான்காரர் சொல்கிறார், ஐயா இது என் நாடு, இங்குள்ள பொருள்கள் எமது பொருள்கள் மாதிரி தான், அதை பத்திரமாகவும் நன்றாகவும் பார்த்து கொள்ள வேண்டியது ஒவ்வோரு ஜப்பானியனின் க்டமை என்றார், அது உண்மையோ, புனைக்கதையோ அது நமக்கு தேவையில்லை, ஆனால் அம்மாதிரி கதைகள் தான் இரண்டாம் உலகப்போரில் சாம்பலாய் போன ஜப்பானை மீண்டும் உயிர்பெறச் செய்தது!

சமூக அக்கறையில் யாருக்கும் நரம்புகள் புடைக்க வேண்டும், கழுத்தில் நரம்பு தெரிந்து ரத்தம் பீரிட வேண்டும், நம்மையும், நம் சுற்றுசூழலையும் அக்கறையுடன் கவனித்து கொண்டாலே போதும், மனிதர்களுக்கு உரிய அடிப்படை கடமைகளையும், கட்டுப்பாடுகளையும் மதிக்க தவறினால் நாம் மனித உருவில் திரியும் காந்திஜி  ,நேதாஜி , போல தான்!

               அனைவருக்கும் எனது குடியரசு தின வாழ்த்துகள் ...

                   வாழ்க பாரதம்!    வாழ்க பாரதம்!! வாழ்க பாரதம்!!!

1/25/2011

திருநங்கை யார் ?


          நான் பலமுறை அரவாணிகள் எனப்படும் திருநங்கைகளை கண்டதுண்டு. அவர்கள் என்னிடம் அடிக்காத குறையாக பிச்சை கேட்டதுண்டு. நான் அருவெறுப்புப் பட்டுக்கொண்டே கொடுத்ததும் உண்டு. இவர்கள் ஏன் கை ஒடிந்தவர்கள் போன்றோ, கால் ஒடிந்தவர்கள் போன்றோ அடக்கமாக, கெஞ்சிக் கதறி பிச்சை எடுப்பதில்லை? அரற்றி, மிரட்டி, உரசித் தேய்த்து பிச்சை(?) எடுக்கிறார்கள், அதாவது பிச்சையை பிடுங்குகிறார்கள்? யோசிக்கிறோமா??
இல்லை அல்லது தெரியவில்லை. அரவாணிகள் என்பவர்கள் இந்த சமூகத்தில் யார்? தெரியவில்லை. அவர்களின் பங்கு என்ன? தெரியவில்லை. அவர்களின் வாழ்க்கையில் நம் பங்கு என்ன? தெரியவில்லை. அவர்களை பெண்கள் பகுதியில் சேர்ப்பதா, அல்லது ஊனமுற்றோர் என (அதாவது உளவியல் மற்றும் உயிரியல் ரீதியாக) எடுத்துக்கொள்வதா? தெரியவேயில்லை.
அரவாணிகள் ஆணும் அல்லாத பெண்ணும் அல்லாத ஒரு பாலினம். சிலபேர் ஆண்களாக பிறந்து பெண்களாக ஆகிறார்கள். சிலர் நேர்மாறு. இதற்கு ஒரே காரணம் உரியியல் அல்லது மரபணு கோளாறு. இதற்கு யாரை குற்றம் சொல்வது? இயற்கையை அன்றி வேறு யாரையுமே சொல்ல முடியாது. ஆனால் குற்றவாளிகளாக சமூகத்தில் நிறுத்தப்படுபவர்கள் இயற்கையால் பாரபட்சம் பார்க்கப்பட்ட அரவாணிகள். தங்களின் மனநிலையோடு பருவ வயதில் ஒரு யுத்தமே நடத்தி தோற்று போன அப்பாவிகள். தன் குழந்தைக்கு கையில்லை, காலில்லை, வாயில்லை, கண்ணில்லை என்றால் தங்கள் கண் போல பாதுகாக்கும் பெற்றோர்கள் கூட, தங்கள் குழந்தைக்கு பாலினம் இல்லை என தெரியவந்தால் மிரண்டு போய் அரள்கிறார்கள். அந்த குழந்தையை குற்றவாளியாக்கி தண்டிக்கிறார்கள். சூழ்நிலை இப்படி இருக்கும் போது, சமூகத்தில் உடல் ஊனமுற்ற, வாழ தன்னம்பிக்கையில்லாமல் பிச்சையெடுக்கும் சிலரைப் போலவே 'இவர்களும்', அடங்கி ஒடுங்கி கெஞ்சிக் கதறி பிச்சையெடுக்க வேண்டும் என நாம் நினைப்பது எவ்வகையில் நியாயம்? இவர்களின் அரட்டல்களிலும், மிரட்டல்களிலும் ஒளிந்திருப்பது, தங்களுக்கு பாலின குறைபாடு ஒன்றை தவிர அனைத்து தகுதிகளும் இருந்தும் இந்த சமூகம் தங்களை பிச்சையெடுக்க வைத்துவிட்டதே என்ற கோபம் தான்.
இவர்கள் நம் சக மனிதர்கள். அன்பு, கோபம், அறிவு, நட்பு, கவுரவம், உழைப்பு, மொழிப்பற்று, இனப்பற்று, தேசப்பற்று என அத்தனையும் கொண்ட சாதாரண மனிதர்கள். ஆனால் இந்த சமூகத்தில் அவர்கள் அப்படி நடத்தப்படுகிறார்களா? ஒரு அரவாணிக்கு நம் அலுவலகத்தில் வேலைக்கு சிபாரிசு செய்ய, அல்லது நம் அடுமனையில் சமைக்கும் வேலை கொடுக்க, அல்லது ஒரு நண்பன் என சமூகத்தில் அறிமுகப்படுத்த நம்மில் எத்தனை பேருக்கு மனதில் துணிவும், தெம்பும் உண்டு??!!
இப்போது நான் முதலில் கேட்ட கேள்விகளை படித்துப் பாருங்கள். ஓரளவுக்கு விடை தெரியும். ஆனால் அவர்கள் என்னவிதமாக இந்த சமூகத்தில், அதாவது ஆணாகவா, பெண்ணாகவா, மூன்றாம் பாலினமாகவா அல்லது ஊனமுற்றவர்களாகவா அல்லது எப்படி நடத்தப்பட வேண்டுமென்பதை அவர்களே தீர்மானிக்கவேண்டும் என்பது என் கருத்து!!

1/19/2011

என்னவள் எனக்கு சொர்க்கம்தான்


 
உன்னுடன் என்ன என்ன  பேச வேண்டும் என
இரவு முழுவதும் யோசித்து வந்தேன்..


உன்னை பார்த்த  நொடியில் அத்தனையும்
மறந்து ஒன்றும் தெரியாதவனாய் நிற்கிறேன்..

உனக்காக நான் எழுதிய  காதல் கடிதம் கூட
என்னை பார்த்து சிரிக்கிறது.. இதையாவது
அவளிடம் கொடுப்பாயா என்று..

எனக்கு வரும் ஒவ்வொரு அழைப்பும்
நீயாக இருக்க கூடாதா என  என்னை விட
அதிகமாக ஏங்கியது  என் தொலைபேசி..


உன் குரல் அதுக்கும் பிடித்துள்ளது
பூமியிலும் தேவதைகள் இருக்கிறார்கள்
உன்னை கண்ட பின்தான் அறிந்தேன்...


என்னவளே..
தொலைபேசியில் நான் "ஹலோ" என்றதும்
சிறிது அமைதி காத்து பேசுகிறாயே..

அதுக்கு என்ன அர்த்தமடி..நீயும்
காதலிக்க கற்றுக்கொண்டாயோ..

தேவதையே...உன்னை காண
பேருந்து நிலையத்தில் நிற்கும்
ஒவ்வொரு நிமிடமும் எனக்கு சொர்க்கம்தான்..

1/17/2011

இறப்பு.....


பிறந்தவுடன் தவறாமல் பிறந்திருக்கும்  சகோதரன்
எப்பொழுதும் இருப்பான் எப்பொழுது போவான் (தெரியாது )   
தப்பாது  என சொல்ல யாராலும் இயலாது


வேண்டும்  என்பவருக்கு விளையாட்டு  காட்டுவான்
வேண்டாதவரை விரைந்து  இழுதுக்குவான்
கருணை மறந்து தாய் கருவிலும்(சிலரை) அழிப்பான்


முதியவர்களின் நண்பன், இளசுகளின் எதிரி
விபத்து, வியாதி, இயற்கை பல உருவம் காட்டுவான்
அனைவருக்கும்   சத்தியாமாக்கும் சாதனையாளன்


சாதிப் பிரிவினை சகதியிலே மறைத்து
இறுதியிலே ஒரு சாதி காட்டுவான்.
                             இவர்கள் பிணம் "

1/16/2011

வாழ்த்தி பாராட்டுங்கள் ....


            
          நாம் எல்லோருமே எப்போதும் மற்றவர்களது குறைகளைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருப்போம். அதில்தான் எல்லோருக்கும் ஆர்வமும் அதிகம்.
ஆனால் காதலுக்கும், திருமணத்திற்கும் இது பொருந்தாது. பொதுவாக காதலிக்கும்போது குறைகள் கூட நிறைகளாகத் தெரியும் என்பார்கள். அதுதான் திருமணத்திற்கு பின்பு பெரிய பிரச்சினைகளையும் கிளப்புகிறது. அதுவேறு கதை.

இங்கு நாம் சொல்ல வந்தது என்னவென்றால், ஒவ்வொரு பெண்ணும், தனது காதலனோ, கணவனோ தான் செய்யும் சிறந்த செயல்களுக்கு தன்னைப் பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்ப்பாள்.

பாராட்டுத்தான் அவர்களுக்கு உற்சாகத்தை அளிக்கும் டானிக். அவர்கள் செய்யும் ஒரு செயலோ, சமையலோ நன்றாக இல்லாத பட்சத்தில் நீங்கள் கூறும் குறைகளை விட 10 மடங்கு அதிகமாக ஒரு நல்ல செயலை செய்யும் போது பாராட்டிப் பாருங்கள்.

பெண்களுக்கு நீங்கள் கொடுக்கும் மதிப்புமிக்க பரிசுப் பொருளை விட, ஒரு அன்பான வார்த்தையும், பாராட்டும் பல்வேறு நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும்.

அதற்காக பெண்களின் அழகை மட்டும் பாராட்டிக் கொண்டே இருக்காதீர்கள். காதலன் தனது அழகை மட்டும் பாராட்டிக் கொண்டிருக்கும்பட்சத்தில், அவனிடம் எச்சரிக்கையாகிவிடுவார்கள் பெண்கள்.

இவன் நம் மனதைவிட, உடலையே அதிகம் விரும்புபவன் என்று முடிவு கட்டிவிடுவார்கள். அழகினைத் தவிரவும் பெண்களைப் பாராட்ட ஆயிரம் விஷயங்கள் உள்ளன.
     பாராட்ட வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால் போதாது. தனது காதலியின்/மனைவியின் நற்குணங்களை, அவர்களது திறமைகளை கண்டறிய வேண்டும். அப்போதுதான் அவற்றைப் பற்றி நீங்கள் பாராட்ட முடியும்.

மேலும், அவர்களது நண்பர்களிடமும், இவரைப் பற்றி ஓஹோ என்று புகழ்ந்து பாருங்கள். அவ்வளவுதான். உங்களுக்கு வாழும்போதே சொர்க்கம் தெரியும்.

ஆனால் பெரும்பாலும் ஆண்களுக்கு பாராட்டும் மனநிலை இருப்பதில்லை. ஒரு பெண் தனது கணவனைப் பற்றி எவ்வளவு குறை பேசினாலும், அவர் ஒரு நல்ல காரியத்தை செய்துவிட்டு வரும்போது அது பலருக்கும் தெரிந்துவிடும் மனைவி மூலமாக.

அவர்களது பாராட்டு, குறை சொல்வதை விட 100 மடங்கு உயர்வாக இருக்கும். அதுபோல ஆண்களும் பாராட்டவும், மனம் விட்டு பேசவும் வேண்டும்.

இதை ஒவ்வொரு ஆணும் கடைபிடித்தால் ஒவ்வொரு குடும்பத்திலும் நல்ல பலன் கிட்டும்.

              இது ரொம்ப பழசுதான் ,நீங்கள் படித்ததுதான் எனக்கு தெரிந்தவர் 
தனது குடும்பத்தை குறை கூறி வந்தார் இதை அவருக்கு சொல்ல வயதில்லை 
இதன் மூலம் தெரியபடுத்தி   கொள்ள விரும்பி போடப்பட்ட பதிவு ....


1/15/2011

தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் திருநாள் வாழ்த்துகள் ...தை  திருநாளாம்
தமிழர் திருநாள் - (ஜனவரி 15 )
பொங்கல் திருநாள்...


ஏர் பிடித்த  உழவனை
நிமிர செய்த திருநாளாம்
பொங்கல் திருநாள்...


உழைப்பிற்கு நன்றி சொல்ல
தமிழனுக்கு  திருநாளாம்
பொங்கல் திருநாள்...


உலகம்  போற்றும் செம்மொழி தமிழின்
வெற்றித் திருநாளாம்
பொங்கல் திருநாள்...


"நாட்டிற்கு உழவன் இல்லையேல்
வீட்டிற்கு ஏதடா சோறு"
சங்கத்தமிழ் நாட்டினிலே
பசுவைக் கொண்டாடும் திருநாளாம்
பொங்கல் திருநாள்...


நீ ... நான் ... நாம் தமிழனென்று
சொல்லும் ஒவ்வொருவரின் திருநாளாம்
பொங்கல் திருநாள்...


தமிழனின் கலாச் சாரத்தை
வெளிப்படுத்தி  உலகமெங்கும்
வாழும் தமிழர் அனைவரும்
பொங்கல் திருநாளைக்
கொண்டாடி மகிழ்வோம் !

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்....

1/14/2011

           சென்ற நாட்களில் எனது நண்பர் ஒருவர் நான் புதியதாக தொடங்கிய வலைப்பூவை பார்த்து பாராட்டி, நல்ல ஒரு கருத்தையும் அவரது பாணியில் 
தெரிவித்து இருந்தார் ,அதை ஒரு பதிவாக உங்களுக்கு ...
 
       ஊடகத்துறை இப்பொழுது மிகவும் பெரிய அளவில் வளர்ச்சியை பெற்றுவருகிறது .உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தருவதில் நீ நான் என்று போட்டிபோட்டு கொண்டு செய்திகளை தருகின்றன .இதனால் இன்று உலக நிகழ்வுகளைஉடனுக்கு உடன் தெரிந்து கொள்ள முடிகிறது .

நமது இந்திய நாட்டில் செயற்கைக்கோள் தொலைக்காட்சி சேவை மிகப்பெரிய அளவில் வளர்ந்து இருக்கிறது .தொலைக்காட்சி,இணையம்,வானொலி என்று பலவிதமான ஊடகங்களும் அடங்கும் .அதிலும் தொலைக்காட்சி என்று எடுத்து கொண்டால் எத்தனை எத்தனை தொலைக்காட்சிகள் உள்ளூர் தொலைக்காட்சி முதல் உலக அளவில் புகழ் பெற்ற ஸ்டார் ,பி.பி.சி வரை.

நமது இந்திய நாடு விவசாயத்தை அடிப்படையாக கொண்டநாடு.பெரும்பான்மையான மக்கள் விவசாயத்தை நம்பியே இருகிறார்கள்.எவ்வளவுதான் நாம் மென்பொருள் துறையிலும் ,மின்னணு துறையிலும் நாம்சிறந்து விளங்கினாலும் விவசாயம் தான் நம் நாட்டின் முதுகெலும்பு.ஆனால் இன்று அந்த முதுகெலும்பு ஒடிந்து கிடக்கிறது .நமது ஆட்சியாளர்களின் தவறான கொள்கைகள் தான் காரணம் .சிறப்பு பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் மண்ணை மாற்றானுக்கு வித்து மண்ணோடு உறவாடிய விவசாயி   வெறும் கையோடு நிற்க வைத்தது . மீதம் உள்ள நிலங்களை ரசாயன உரங்களை பயன் படுத்துங்கள் ,வீரிய விதைகளை பயன்படுத்துங்கள் ,பூச்சிக்கொல்லியை அடியுங்கள் என்று விவசாய்களிடம் சொல்லி மண்ணை மலடாக்கியது ,விவசாயி கடனாளி ஆக்கியது.

இந்த ரெண்டுக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா ?

சொல்கிறேன் .நம் தமிழ்நாட்டை எடுத்துகொள்ளுங்கள் நமது மாநிலம் பெரும்பான்மையாக விவசாய நிலங்களை கொண்டது அப்பொழுது நம் மக்களில் பெரும்பான்மையானோர் விவசாயம் செய்பவர்களே .தமிழுக்கு(தமிங்க்லிஷ் ) தொலைக்காட்சிகள் கிட்ட தட்ட இருபத்தைந்துக்கு மேல் இருக்கிறது .அதில் அரசியல் சார்பு சில தொலைக்காட்சிகள் இருந்தாலும் அவை கட்சி உ டைய தொலைக்காட்சிகள் இல்லை கட்சி தலைவர்கள் நடத்தும் தனியார் நிறுவனங்கள் மற்றவை மிகப்பெரிய ஊடக நிறுவங்களின் தொலைக்காட்சிகள் ஆகும் .
சரி இத்தனை தொலைக்காட்சிகளிலும் என்ன ஓளிபரப்பு செய்கிறார்கள் ,திரைப்படங்கள் ,பாடல்கள் ,நகைச்சுவை நிகழ்ச்சி ,நெடுந்தொடர்கள் ,சினிமா சார்ந்த நிகழ்ச்சிகள் போன்றவற்றை மட்டுமே திரும்ப திரும்ப காட்டுகிறார்கள் .
ஊடகம் என்றால் சினிமா மட்டும் தான் என்று ஒரு நிலையை இவர்கள் கொண்டு வந்து விட்டார்கள்.

முன்பு எல்லாம் இரவு நேரத்தில் குடும்பத்தில் அனைவரும் அமர்ந்து ஒன்று கூடி பேசி சிரிப்பார்கள் ஒன்று கூடி உணவு உண்பார்கள் ,ஆனால் இப்பொழுது நிலைமை என்ன குடும்ப உறுவுகளை காட்டுகிறோம் என்று சொல்லி குடும்ப உறவுகளை சிதைக்கும் தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள்.நாம் வாய்விட்டு சிரிப்பதற்கே  இன்று திரையில் வடிவேலும் ,விவேக்கும் வரவேண்டியதாக உள்ளது.இன்னும் சில நேரங்களில் மருத்துவம் சம்மந்த பட்ட நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி ஊடங்களுக்கு இது மட்டும் போதுமா? கோடிக்கனக்கானோர் கவனிக்கும் வெகுஜன ஊடகங்கள் மிக பெரிய சமூக அக்கறை இருக்கா வேண்டும் அல்லவா?

மக்களுக்கு உபயோகமாக எவ்வளவு தரமான நிகழ்ச்சிகளை அளிக்கவேண்டும் இவர்கள் .பகுத்தறிவு தலைவர்களின் ஆட்சி இது ஆனால் அவர்களின் தொலைக்காட்சியோ மானுக்கும் மயிலுக்கும் மல்லு கட்டி கொண்டு இருக்கிறது.

ஆடி கலைத்த நடிகைகளை கூட்டி குத்தாட்டம் போடுவதற்கு பதிலாக அழிந்து கொண்டு இருக்கும் நம் நாட்டு புற கலைகளை வளர்க்கும் நிகழ்ச்சிகளை தந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் .கோட்டு சூட்டு அணிந்தவர்களிடம் பேட்டி எடுக்கும் இவர்கள் கோவணம் கட்டியவனை நீங்கள் கவனித்ததுண்டா .விவசாயம் சார்ந்த நமது பகுதிக்கு விவசாயம் தொடர்பான நிகழ்ச்சிகளை இவர்கள் வழங்கியதுண்டா?

இல்லை இல்லை என்று தான் சொல்ல வேண்டும். கோடிகளில் லாபம் சம்பாதிக்கும் இவர்களுக்கு கோவணம் கட்டியவர்களை பற்றி சிந்திக்க நேரம் இருக்குமா ?

மக்களின் நேரத்தை வீணடிபதற்கு பதிலாக விவசாய்கள் பயன் பெரும் அளவுக்கு விவசாயம் சார்ந்த தொழில் வாய்புகள் மற்றும் விவசாயத்தின்  நிகழ்ச்சிகளை வழங்கினால் எத்தனை லட்சம் மக்கள் பயன் பெறுவார்கள்.விவசாயத்தை பற்றி இன்றைய தலைமுறைக்கு எந்தளவுக்கு தெரியும்.கடையில் காசுகொடுத்தால் பொருள் கிடைக்கும் என்று மட்டும் தான் தெரியும்.

மறைந்து கொண்டு இருக்கும் நமது பாரம்பரிய விவசாயத்தை மீட்டு எடுப்பதில் நம் ஆட்சி அவ ர்களுக்கு எவ்வளவு கடமை இருக்கிறதோ அதே அளவுக்கும் இந்த ஊடகங்களுக்கும் இருக்கிறது .இந்த வகையில் மக்கள் தொலைக்காட்சி மற்ற தொலைக்காட்சி அலைவரிசைகளில் மாறுபட்டு நமது கலாச்சாரம்,பண்பாடு ,விவசாயம் சார்ந்த நிகழ்ச்சி களை வழங்கு கிறது .இந்த பொறுப்புணர்வு மற்ற ஊடகங்களுக்கும் வரவேண்டும்.

1/13/2011

எப்படி இன்பமும் ,வேதனையும் - அன்னை

       உன்னால் துன்பத்தைத் துணிவோடு, பொறுமையோடு, இறைவனுடைய அருளில் அசைக்க முடியாத நம்பிக்கையோடு எதிர்கொள்ள முடியுமானால், துன்பம் வரும்போது அதைத் தவிர்க்க முயலாமல், எல்லாப் பொருள்களிலும் நடுப்பகுதியாக உள்ள ஒளிபொருந்திய உண்மையை, மாறாத களிப்பை, கண்டுபிடிக்க வேண்டும் என்னும் உறுதியுடனும் ஆர்வத்துடனும் அதனுட்புகுந்து, அந்த ஆனந்த அனுபவத்தைப் பெறுவாயானால், மனநிறைவைத்தரும், திருப்தியைத்தரும், பல ஆன்ம அனுபவங்களைவிட அது அதிக நேரான, குறுக்கு வழியாக இருக்கும்.

நான் புலனின்பத்தைப் பற்றிய பேசவில்லை. ஏனெனில், புலனின்பம் எப்பொழுதும் கிட்டத்தட்ட முற்றிலுமாக இந்த ஆழ்ந்த தெய்வீக ஆனந்தத்தைப் புறக்கணித்து அதைவிட்டு ஓடுகிறது.

புலனின்பம் ஏமாற்றுகிற, வக்கரித்த வேடம், அது நம்மை நமது இலட்சியத்திலிருந்து திசைதிருப்புகிறது. ஆகவே நிச்சயமாக நாம் அதை நாடக்கூடாது. புலனின்பம் நம்மை ஆவியாக்குகிறது, அது நம்மை ஏமாற்றுகிறது, வழிவிலகிப் போகச் செய்கிறது.

    வேதனை, அதைத் தாங்கிக்கொள்ளவும் நம்மை நசுக்குகிற அதை எதிர்த்து நிற்கவும், நம்மை ஒருமுனைப்படச் செய்கிறது. அதனால் அது நம்மை ஓர் ஆழ்ந்த உண்மைக்கு இழுத்து வருகிறது. வேதனை ஏற்படும்போதுதான் ஒருவன் அதிக எளிதாக உண்மையான பலத்தை மீண்டும் கண்டுபிடிக்கிறான், அவன் பலமடைகிறான்.

வேதனை ஏற்படும்போதுதான் ஒருவன் அதிக எளிதாக உண்மையான நம்பிக்கையை மீண்டும் கண்டுபிடிக்கிறான் - எல்லா வேதனையையும் கடந்த ஒன்றில், எல்லா வேதனைகளுக்கும் அப்பால் உள்ள ஒன்றில் நம்பிக்கை.

1/12/2011

சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள் ...


"திருவளர் வாழ்க்கை, கீர்த்தி, தீரம், நல்லறிவு, வீரம்
மருவுபல்கலையின் சோதி, வல்லமையென்பவெல்லாம்
வருவது ஞானத்தாலே வையக முழுதும் எங்கள்
பெருமைதான் நிலவி நிற்கப் பிறந்தது ஞானபாநு!"

சுவாமி விவேகாநந்தரின் வாக்கு!


            "உண்மையில் இருக்கும் ஒரே கடவுளை, நான் நம்புகிற ஒரே கடவுளை, எல்லா ஜீவர்களின் கூட்டுத் தொகையுமான கடவுளை வழிபடுவதற்காக நான் மீண்டும் மீண்டும் பிறந்து  ஆயிரமாயிரம் இன்னல்களை அனுபவிப்பேனாக!
        தீயோர்களாக நிற்கும் என் கடவுளை, துயரமுற்றோராக நிற்கும் என் கடவுளை, உலகம் எங்கும் ஏழைகளாக நிற்கும் என் கடவுளை, வழிபடுவதற்காக நான் திரும்பத் திரும்ப ஜனனமெடுப்பேனாக!"
           "கிழிந்த ஆடையைக் களைவது போல் இந்த உடலை எறிந்துவிட்டு வெளிக்கிளம்புவது நல்லதென எனக்குத் தோன்றக்கூடும். ஆனால் உடலுக்கு வெளியே சென்றாலும் நான் சேவை செய்வதை நிறுத்த மாட்டேன். எங்கெங்குமுள்ள மக்களை நான் ஆன்மீகத்தில் தூண்டிக் கொண்டே இருப்பேன். தான் ஆண்டவனோடு ஒன்றுபட்டிருப்பதாக உலகம் அறியும் வரை நான் சேவை செய்வேன்."


         சேவை செய்யும் கோடிக்கணக்கான சேவகர்களுக்கு வழிகாட்டியாய் விளங்கும் விவேகானந்தரின் பிறந்தநாளில் விவேகானந்தரின் வழியைப் பின்பற்றி நாட்டையும்,  மக்களையும் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


வந்தேமாதரம் !                 வந்தேமாதரம் !!                     வந்தேமாதரம் !!!

1/11/2011

எதுவும் தெரியாது ...தோற்றுப் பாருங்கள்
ஒருமுறை சந்தோசமாய்...
வெற்றிகள் வித்தியாசமாய்
தெரியாது!!!


கோபித்துப் பாருங்கள்
ஒருமுறை உங்களை....
பிறர் குற்றங்கள் வித்தியாசமாய்
தெரியாது!!!


சிரித்துப் பாருங்கள்
ஒருமுறை..துக்கத்தில்.
வலிகள் வித்தியாசமாய்
தெரியாது...

1/10/2011

கண் தானம் .....


நல்லது செய்தேனோ..
கெட்டது செய்தேனோ ..
என் நலம் வாழ
என்னென்ன செய்தேனோ??

ஞாபகம் இல்லை...நான்
இறந்தால் யார் அழுவார்
தெரியவில்லை...
மனித மனம் புரிந்து கொள்ள
தனியாய் ஒரு கலை இல்லை!!!
என் மறைவை நினைவில் கொள்ள...
எனக்காய் கண்ணீர் சிந்த..
கொடுத்து விட்டேன்
என் கண்களை
தானமாக!!!!

1/09/2011ஓங்கி அடித்தாலும்.சற்றே கண்விழித்துவிட்டு,
மறுபடியும் உறங்கிவிடுவார்...!
மொழி பற்றா அப்படியின்னா என்னனு கேட்பார்..!
தமிழனா?அவன் ஏன் சண்டை போடுறான் அங்கே என்பார்..!
இலங்கையா?அது நம்ம நாடு இல்லையே?என்பார்...!
வோட்டா?எப்போதும் மாதிரி நம்ம தலைவருக்குத்தான்..நமக்கு ஒன்னும் பிரச்னை இல்லையே என்பார்..!
புயலே அடித்துவிட்டு போயிருந்தாலும் லேசா காத்துதானே அடிச்சுது என்பார்..!
இப்படியெல்லாம் சொல்லும் இவர் யார்?
இவர்தான் தமிங்க்லிஷ் டமிளர்..

1/07/2011

எவ்வடிவில் தியானம் உருவம் பெற வேண்டும் -ரமணர்

       
          தன் முயற்சியற்ற, விருப்பத்தேர்வற்ற தூய உணர்வே நமது உண்மையான இயல்பு. அந்த நிலைமை நாம் உணர்ந்து அவ்வனுபவத்தில் ஒன்றிவிடுவோமானால் அது சரியே. ஆயினும், ஒருவர் அந்நிலையை முயற்சி ஏதுமின்றி அடைவதற்கில்லை. அத்தகைய முயற்சியை முனைந்து மேற்கொள்வதே தியானம் எனப்படுவது.


ஜென்மாந்திர வாசனைகள் அனைத்தும் மனதை வெளிமுகமாய்ப் புறப் பொருள்கள் மீதே திருப்புகின்றன. அவ்வாறான எண்ணங்கள் யாவற்றையும் துறந்து, மனதை உள்முகமாகத் திருப்ப வேண்டும். இந்த அகமுக நாட்டத்திற்கு அநேகமாக எல்லோருக்குமே சுய முயற்சி தேவைப்படுகிறது. 'சிந்தையை அடக்கிச் சும்மா இரு' என்பதே சாதகர்களுக்கு எந்த ஒரு ஞானியின், எந்த ஒரு ஆன்மீக நூலின் போதனையாக அமைகிறது.


ஆனால் 'சும்மா இருத்தல்' அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. ஆகவேதான் அதற்கு முயற்சி அவசியப்படுகிறது. இந்த உச்ச ஆன்ம நிலையாம் மோன சாந்தியை முயற்சி ஏதுமின்றி எய்துவிட்ட யாரேனும் ஒருவரை நாம் காண முடிந்தாலும், அவர் போன ஜென்மத்தில் (முற்பிறவியில்) அதற்கான முயற்சி மேற்கொண்டதன் பயனே அது என்று நீங்கள் அனுமானிக்கலாம்.


முயற்சியற்ற, விருப்பத்தேர்வற்ற, பேரின்ப நிலையாம் தூய உணர்வைத் துய்க்க விடாமுயற்சி அவசியம். அந்த விடாமுயற்சியே 'தியானம்' ஆகும். அதற்கான தியானம் உங்களுக்குப் பிடித்தமான முறையில் அமையலாம். எவ்வகையான தியானம் எண்ண அலைகளையெல்லாம் ஓயச்செய்ய உடனடியாய் உதவுகிறது என்று பார்த்துத் தேர்ந்தெடுத்து அதனையே உமது தியான மார்க்கமாகக் கடைபிடிக்கலாம்.


'சிந்தையை அடக்கி சும்மாவிருக்கும்' திறமே ஜீவன்முக்தி. ஆயினும் இந்த உண்மையை எவ்வளவுதான் நீர் உமது மனத்திற்கு எடுத்துரைத்தாலும் சிந்தை சும்மா இருப்பதில்லை. ஏனெனில் மனம்தானே மனத்திற்கு அவ்வாறு கூறுகிறது! அந்த மனத்திற்கு அவ்வாறு அடங்கிவிடும் திறமோ அரிதினும் அரிது. மன நாசத்தையே சாத்திரங்கள் அனைத்தும் இயம்பியுள்ன. இதனையே சான்றோர்கள் திரும்பத் திரும்பத் கூறுவதை நாள்தோறும் கேட்கிறோம்.


நாம் குருவாக வரித்திருப்பவரும் இதையே கூறினாலும் மனத்தை அடக்கி நாம் சும்மா இருப்பதில்லை. மாயா உலகத்திலும், புலன்கள் உணர்த்தும் புறப் பொருட்கள் மீதும் மனத்தை மேய விட்டுவிடுகிறோம். இதன் காரணமாகவே முயற்சிகளற்ற பூரண சாந்தி நிலை எய்துவதற்கு நெஞ்சறிய, ஆன்மார்த்த அபார முயற்சி அவசியமாகிறது.


முயற்சி செய்யலாமல் உங்களால் வெறுமனே இருப்பது சாத்தியமே அல்ல. அவ்வாறு முயன்று மேன்மேலும் உள்ளாழ்ந்து ஆன்ம நிலைபேறு எய்தபின் முயற்சி ஏதும் செய்வதும் சாத்தியமே அல்ல.

1/06/2011

எண்ணும் எழுத்தும் கண்ணென தகும்....


எண்ணும் எழுத்தும் கண்ணென தகும்.

அதற்காக எண்களும் எழுத்துக்களும் எல்லாம் தர வல்ல சூத்திரம் ஆகுமா?

       இந்திய தகவல் தொடர்பு நிறுவனத்தின் சென்னை தொலைபேசிகள் கவர்ச்சிகரமான எண்களை மின் ஏலத்தில் விற்பனை செய்யவுள்ளது. 94456 மற்றும் 94459 வரிசை எண்களை சென்னை தொலைபேசிகள் அறிமுகப்படுத்துவதை தொடர்ந்து இந்த ஏல அறிவிப்பு வந்துள்ளது.கவர்ச்சி எண்கள் மூன்று நிலைகளாக பிரிக்கப்பட்டு குறைந்த பட்ச ஏலத்தொகை முறையே 7000 ,5000 ,மற்றும் 3000 ,என அறிவிக்கப் பட்டுள்ளது,

கடந்த முறை 2009 டிசம்பர் மாதத்தில் இது போன்ற கவர்ச்சி எண்கள் ஏலம் விடப்பட்டதில் பி.எசு.என்.எல். ரூ 8 லட்சம் உருவாக்களை மக்களிடமிருந்து கொள்ளை அடித்துள்ளது. அதில் உச்சபட்ச கவர்ச்சிகரமான எண் ரூ.1.8 லக்கத்திற்கு விலைபோனதாம்.
என்ன ஒரு முட்டாள்தனம் பாரீர். மீள் விற்பனை மதிப்பு இல்லாத ஒரு பொருளுக்கு இலக்கக் கணக்கான உருவாக்களை அள்ளி இறைக்க மனிதரில் இத்தனை மூடர்களா.அலைபேசியில் நம்மை தொடர்புகொள்ள உதவும் ஒரு எண்ணுக்காக பல லக்க உருவாக்களை வாரி இறைக்க மக்கள் அணியப் படுத்தப்பட்டுள்ளனர். எந்த எண்ணைகொண்டு அழைத்தால் என்ன. நாம் எப்படி பிறரிடம் பேசி அணுக்கமாக நடந்து கொள்கிறோமோ அதற்கு தகுந்தவாறு நம் பேச்சின் விளைவு இருக்கும். முன்சினம் கொண்ட முட்டாள் ஒருவன் எத்தகைய கவர்ச்சிகரமான எண்ணை கொண்டிருந்தாலும் தனது முரட்டு பேச்சினால் மொத்த வேலையையும் கெடுத்துவிடுவான்.சாதுரியமும் சாமர்த்தியமும் உள்ள ஒருவன் வாயில் நுழையாத எண்ணை கொண்டிருந்தாலும் கனிவான பேச்சின் மூலம் வெற்றியடைவான்.

"பெயரியல் பேராசான்களும்" "எண்ணியல் வல்லுனர்களும் " நம் மக்களிடையே மூட நம்பிக்கை தீயை மூட்டி குளிர்காய்ந்து கொண்டிருப்பதன் மூலம் இத்தகைய கொள்ளைகளுக்கு வழியை திறந்துவிட்டுள்ளனர். அதுவும் அரசுத்துறை நிறுவனமான சென்னை தொலைபேசிகள் இந்த வேலையை வெட்கமின்றி செய்து வருகிறது.

நினைவில் நிறுத்துவதற்கு எளிதானவை என்று கவர்ச்சிகரமான எண்களை விலை கொடுத்து வாங்குவது நியாயப்படுத்தப்படுகிறது. இன்றைய
நவீன யுகத்தில் அனைத்து தொலைபேசி எண்களும் அலைபேசியிலோ நிலை தொலைபேசியிலோ பதிவு செய்யப்பட்டு அதன் வழிதான் அழைக்கப்படுகின்றன. இதில் நினைவு வைத்துகொள்வது என்பதெல்லாம் கேலிக்கூத்து.

ஒரு வினாடியின் நூற்றில் ஒரு பங்கு பின்தங்கியதால் பன்னாட்டு விளையாட்டு போட்டிகளின் ஓட்டப்பந்தயங்களில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை பறிகொடுத்த வீரர்கள் ஏராளம். (நமது பி.டி.உசா அப்படி தவறவிட்டது இன்றளவும் நமக்கு வருத்தத்தை தருகிறது) அவர்களது பெயரோ, தொலைபேசி எண்ணோ இந்த பேராசான்களின் அறிவுரை பெற்று மாற்றப்பட்டால் அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றிகிட்டி விடுமா? கடும் உழைப்பும் பயிற்சியுமே வெற்றியை பெற்றுத்தரும்.
பெயரும் எண்களும் ஒரு மனிதனின் வாழ்வில் எந்த மாற்றத்தையும் ஏற்ப்படுத்தமுடியாது. அவற்றை நம்பி மோசடி பேர்வழிகளின் பின்னால் போவது முட்டாள்தனம் என்பதை நம் இன சகோதரர்களுக்கு எடுத்து சொல்வோம்.......

1/05/2011

என் கனவே ....  பிரிவதில்லை காதல் என்றாய்
      பின்னர் பிரிவை மட்டும்
      ஏன் எனக்கு வலியாய் தந்தாய்?
நிஐங்கள் அழிவதில்லை என்றாய்
      என் நிஐ அன்பை இன்னும் ஏன்
      உணர மறுக்கிறாய்?
கனவுகள் நிஐமாவதில்லை தான்..
     ஆனால் நிஐங்களைவிட
     கனவுகளையே நான்
அதிகம் விரும்புகிறேன் ஏன் தெரியுமா?
     கனவில் தான் நீ என்னோடு
     நீண்ட தூரம் பயணிக்கிறாய்
        என்பதால்!

1/04/2011

நீங்கள் மாறுங்கள் உலகம் மாறும் ?

           ‌நிறைய பே‌ர் உலக‌ம் இ‌ப்படி இரு‌க்‌கிறதே, ம‌னித‌ர்க‌ள் இ‌ப்படி இரு‌க்‌கிறா‌ர்களே எ‌ன்று புல‌ம்புவா‌ர்க‌ள். இவ‌ர்க‌ள் எ‌ப்போதுதா‌ன் மாறுவா‌ர்களோ,இவ‌ர்க‌ள் எ‌ப்படி‌த்தா‌ன் ‌திரு‌ந்துவா‌ர்களோ எ‌ன்று கூறுவா‌ர்க‌ள். ஆனா‌ல் உல‌க‌த்தை மா‌ற்ற முய‌ற்‌சி‌ப்பதை ‌விட, ந‌ம்மை மா‌ற்‌றி‌க் கொ‌ள்ள மு‌ய‌‌ற்‌சி‌ப்பதுதா‌ன் ‌சிற‌ந்தது.


இத‌ற்கு உதாரணமாக ஒரு கதையை ‌உ‌ங்களு‌க்கு‌க் கூற ‌விரு‌ம்பு‌கிறே‌ன்.


ஒரு கால‌த்‌தி‌ல் ம‌ங்கலாபு‌ரி எ‌ன்ற நகர‌த்தை ஒரு ம‌ன்ன‌ன் ஆ‌ண்டு வ‌ந்தா‌ன். அவ‌ன், ஒரு நா‌ள் வெகு தொலை‌வி‌ல் உ‌ள்ள பகு‌திகளு‌க்கு சு‌ற்றுலா செ‌ன்றா‌ன். அ‌ந்த நா‌ட்க‌ளி‌ல் வாகன‌ங்க‌ள் ஏது‌ம் இ‌ல்லாததா‌ல் பல இட‌ங்களு‌க்கு நட‌ந்தே செ‌ல்ல வே‌ண்டியதா‌‌யி‌ற்று.


தனது பயண‌த்தை முடி‌த்து‌க் கொ‌ண்டு அர‌ண்மனை‌க்கு வ‌ந்த ‌ம‌ன்ன‌ன், த‌ன் கா‌ல்க‌ளி‌ல் கடுமையான வ‌லியை உண‌ர்‌ந்தா‌ன். இதுதா‌ன் அவ‌ன் அ‌திகமான தூர‌ம் நட‌ந்து செ‌ன்ற முத‌ல் பயணம் எ‌ன்பதாலு‌ம், அவ‌ன் செ‌ன்று வ‌ந்த பகு‌‌திக‌ள் பல கரடுமுரடாக இரு‌ந்ததா‌லு‌ம் கா‌ல்வ‌லியை அவனா‌ல் தா‌ங்கவே முடிய‌வி‌ல்லை.


இ‌ந்த ‌நிலை‌யி‌ல், ம‌ன்ன‌ன் ஒரு ஆணை‌யி‌ட்டா‌ன். அதாவது, "இ‌ந்த நகர‌ம் முழுவது‌ம் உ‌ள்ள அனை‌த்து சாலைகளையு‌ம் ‌வில‌ங்‌கி‌ன் தோலை‌ கொ‌ண்டு பர‌ப்‌பி ‌விட வே‌ண்டு‌ம்" எ‌ன்பதாகு‌ம்.


இ‌தனை ‌நிறைவே‌ற்றுவத‌ற்கு ஏராளமான ‌வில‌ங்குகளை கொ‌ல்ல வே‌ண்டி வரு‌ம், மேலு‌ம் இத‌ற்கு ஏராளமான பண‌ம் செலவாகு‌‌ம் எ‌ன்பது எ‌ல்லோரு‌க்கு‌ம் தெ‌ரியு‌ம்.

இதனை உண‌ர்‌ந்த ம‌ன்ன‌னி‌ன் ப‌ணியாள‌ர் ஒருவ‌ர், ‌மிகு‌ந்த ப‌ணிவுட‌ன் ம‌ன்ன‌னிட‌ம் செ‌ன்று, ‌நீ‌ங்க‌ள் கூ‌றியபடி, நகர‌ம் முழுவதையு‌ம் தோலா‌ல் பர‌ப்‌பினா‌ல் ஏராளமான பொரு‌ட்செலவாகு‌ம். உ‌ங்க‌ள் ஒருவரு‌க்காக இ‌ப்படி நகர‌த்தையே மா‌ற்றுவது தேவை‌யி‌ல்லாத செல‌வின‌ம். அத‌ற்கு ப‌திலாக ‌நீ‌ங்க‌ள் ‌‌மிகவும ‌‌மிருதுவான ஒரு தோலை‌க் கொ‌ண்டு கால‌ணி செ‌ய்து கொ‌ள்ளலாமே எ‌ன்று ஆலோசனை‌க் கூ‌றினா‌ன்.


ஆ‌ச்ச‌ரிய‌த்‌தி‌ல் மூ‌ழ்‌‌கிய ம‌ன்ன‌ன், இறு‌தியாக தனது ப‌ணியாள‌ரி‌ன் ஆலோசனையை ஏ‌ற்று‌க் கொ‌ண்டு தன‌க்காக ஒரு கால‌ணியை தயா‌ரி‌க்க சொ‌ன்னா‌ன்.


இது வெறு‌ம் கதைய‌ல்ல. ந‌ம் வா‌ழ்‌க்கை‌க்கு‌த் தேவையான ஒரு தகவ‌ல். அதாவது, இ‌ந்த பூ‌மியை ‌மிகவு‌ம் ம‌கி‌ழ்‌ச்‌சியான உலகமாக நா‌ம் மா‌ற்‌றி‌க் கொ‌ள்ள முடியு‌ம், அத‌ற்காக நா‌ம் ந‌‌ம்மை‌த்தா‌ன் மா‌ற்‌றி‌க் கொ‌ள்ள வே‌ண்டுமே‌த் த‌விர, இ‌ந்த உலக‌த்தை அ‌ல்ல எ‌ன்பதுதா‌ன் அது.


எ‌ன்ன நண்பர்களே  கதை உ‌ங்களு‌க்கு‌ப் ‌பிடி‌த்‌திரு‌க்‌கிறதா?

1/03/2011

பெருமைப்பட வேண்டிய தமிழர்


       கே.ஆர். ஸ்ரீதர் - இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர். இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது.


இதில் பெருமைக்குரிய விஷயம், இவர் ஒரு தமிழர் என்பதே. அப்படி என்னதான் சாதனைசெய்துவிட்டார் இந்தத் தமிழர்? திருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜில் (தற்போது என்.ஐ.டி.) மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்தவுடன் அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நியூக்ளியர் என்ஜினீயரிங் படித்து விட்டு, அதே பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டமும் பெற்றார் ஸ்ரீதர்.


மிகப் பெரிய புத்திசாலியாக இருந்த இவரை நாசா அமைப்பு உடனடியாக வேலைக்கு எடுத்துக் கொண்டது. அரிசோனா பல்கலைக் கழகத்தில் உள்ள ஸ்பேஸ் டெக்னாலஜீஸ் லேபரட்டரியின் இயக்குநராக அவரை நியமித்தது.
செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா? அதற்குத் தேவையான சாத்தியக்கூறுகளைக் கண்டுபிடிப்பது எப்படி? என்பது பற்றி ஆராய்ச்சி செய்வதே ஸ்ரீதரின் வேலை. முக்கியமாக செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் சுவாசிக்கத் தேவையான ஆக்ஸிஜனை தயார் செய்ய முடியுமா என்கிற ஆராய்ச்சியை மேற்கொண்டார். இந்த ஆராய்ச்சியில் மிகப் பெரிய வெற்றியும் பெற்றார். ஆனால் அமெரிக்க அரசாங்கமோ திடீரென அந்த ஆராய்ச்சியை ஓரங்கட்டிவிட்டது. என்றாலும் தான் கஷ்டப்பட்டு கண்டுபிடித்த விஷயத்தை ஸ்ரீதர் அப்படியே விட்டுவிடவில்லை. அந்த ஆராய்ச்சியை அப்படியே ரிவர்ஸில் செய்து பார்த்தார் ஸ்ரீதர். அதாவது, ஏதோஒன்றிலிருந்து ஆக்ஸிஜனை உருவாக்கி வெளியே எடுப்பதற்குப் பதிலாக அதை ஒரு இயந்திரத்துக்குள் அனுப்பி, அதனோடு இயற்கையாகக் கிடைக்கும் எரிசக்தியை சேர்த்தால் என்ன நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தார். அட, என்ன ஆச்சரியம்! மின்சாரம் தயாராகிவெளியே வந்தது.


இனி அவரவர்கள் அவரவருக்குத் தேவையான மின்சாரத்தை இந்த இயந்திரம் மூலம் தயார் செய்து கொள்ளலாம் என்கிற நிலையைஸ்ரீதர் உருவாக்கி இருக்கிறார். தான் கண்டுபிடித்த இந்தத் தொழில் நுட்பத்தை அமெரிக்காவில் செய்து காட்டிய போது அத்தனை விஞ்ஞானிகளும் அதிசயித்துப் போனார்கள். ஆனால் இந்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வர்த்தக ரீதியில் மின்சாரம் தயாரிக்க வேண்டுமெனில் அதற்கான இயந்திரங்களை உருவாக்க வேண்டும். இதற்கு பெரிய அளவில் பணம் வேண்டும். இப்படிப்பட்ட
தொழில்நுட்பத்தைப் உருவாக்கும் பிஸினஸ் பிளான்களுக்கு வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள்தான் பணத்தை முதலீடு செய்யும்.


ஸ்ரீதருக்கும் அப்படி ஒருவர் கிடைத்தார். அவர் பெயர், ஜான் டூயர். சிலிக்கன் பள்ளத்தாக்கில் பிரபலமாக இருக்கும் மிகப் பெரிய வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனமான கிளீனர் பெர்க்கின்ஸை சேர்ந்தவர் இந்த ஜான் டூயர். அமெரிக்காவில் மிகப் பெரும் வெற்றி கண்ட நெட்ஸ்கேப், அமேசான், கூகுள் போன்ற நிறுவனங்கள் இன்று பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கக் காரணம், ஜான் டூயர் ஆரம்பத்தில் போட்ட முதலீடுதான்.


கூகுள் நிறுவனத்தை ஆரம்பிக்க ஜான் டூயர் தொடக்கத்தில் போட்ட முதலீடு வெறும் 25 மில்லியன் டாலர்தான். ஆனால், ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை வர்த்தக ரீதியில் செயல்படுத்த ஜான் டூயர் போட்ட முதலீடு 100 மில்லியன் டாலர். இது மிகப்பெரும் தொகை. என்றாலும் துணிந்து முதலீடு செய்தார் ஜான். காரணம், ஸ்ரீதர் கண்டுபிடித்த தொழில்நுட்பம் சுற்றுச்சூழலுக்கு உகந்தது. பொதுவாக மின் உற்பத்தி செய்யும்போது சுற்றுச்சூழல் பிரச்னைகள் நிறையவே எழும். அது நீர் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி, அனல் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி. எனவே சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் பங்கம் வராத மின் உற்பத்தித்தொழில்நுட்பத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு இருக்கும் என்று நினைத்தார்அவர். தவிர, ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தைக் கொண்டு குறைவான செலவில் மின்சாரம் தயார் செய்ய முடியும். இந்த பாக்ஸிலிருந்து உருவாகும் மின்சாரம் குறைந்த தூரத்திலேயே பயன்படுவதால் மின் இழப்பு என்கிற பேச்சுக்கே இடமில்லை. இது மாதிரி பல நல்ல விஷயங்கள் ஸ்ரீதரின் கண்டுபிடிப்பில் இருப்பதைஉணர்ந்ததால் அவர் அவ்வளவு பெரிய தொகையை முதலீடு செய்தார். நல்லவேளையாக, ஜான் டூயரின் எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை. கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் கஷ்டப்பட்டு பலரும் உழைத்ததன் விளைவு இன்று 'ப்ளூம் பாக்ஸ்' என்கிற மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸ் தயார் செய்துள்ளார்.


சுமார் 10 முதல் 12 அடி உயரமுள்ள இரும்புப் பெட்டிதான் ஸ்ரீதர் உருவாக்கியுள்ள இயந்திரம். இதற்கு உள்ளே ஆக்ஸிஜனையும் இயற்கை எரிவாயுவையும் செலுத்தினால் அடுத்த நிமிடம் உங்களுக்குத் தேவையான மின்சாரம் தயார். இயற்கை எரிவாயுவுக்குப் பதிலாக மாட்டுச்சாண வாயுவையும் செலுத்தலாம். அல்லது சூரிய ஒளியைக் கூட பயன்படுத்தலாமாம். இந்த பாக்ஸ்களை கட்டடத்துக்குள்ளும் வைத்துக் கொள்ளலாம். வெட்ட வெளியிலும் வைத்துக் கொள்ளலாம் என்பது சிறப்பான விஷயம்.உலகம் முழுக்க 2.5 பில்லியன் மக்கள் மின் இணைப்புப் பெறாமல் இருக்கிறார்கள்ஆப்பிரிக்காவில் ஏதோ ஒரு காட்டில் இருக்கும் கிராம மக்களுக்கு மின்சாரம் கொடுத்தால், அதனால் அரசாங்கத்துக்கு எந்த லாபமும் இல்லை என்பதால் அவர்கள் மின் இணைப்புக் கொடுப்பதில்லை. கிராமத்தை விட்டு வந்தால் மட்டுமே பொருளாதார ரீதியில் முன்னேற முடியும் என்கிற நிலை அந்த கிராம மக்களுக்கு. ஆனால் இந்த 'ப்ளூம்பாக்ஸ்' மட்டும் இருந்தால் உலகத்தின் எந்த மூலையிலும் மின்சாரம் தயார் செய்யலாம்'' என்கிறார் ஸ்ரீதர்.


ஒரு 'ப்ளூம் பாக்ஸ்' உங்களிடம் இருந்தால் இரண்டு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். இதே பாக்ஸ் இந்தியாவில் இருந்தால் நான்கு முதல் ஆறு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். அமெரிக்க வீடுகளில் அதிக மின்சாரம் பயன்படுத்தப்படுவதேஅங்கு வீடுகளின் எண்ணிக்கை குறையக் காரணம்.இன்றைய தேதியில் அமெரிக்காவின் 20 பெரிய நிறுவனங்கள் ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன. கூகுள் நிறுவனம்தான் முதன் முதலாக இந்தத் தொழில்நுட்பத்தை வாங்குவதற்கான கான்ட்ராக்ட்டில் கையெழுத்திட்டது. 'ப்ளூ பாக்ஸ்' மூலம் கூகுள் உற்பத்தி செய்யும் 400 கிலோ வாட் மின்சாரமும் அதன்
ஒரு பிரிவுக்கே சரியாகப் போகிறது. வால் மார்ட் நிறுவனமும் 400 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸை வாங்கி இருக்கிறது. இப்போது Fedex, E bay, கோக்கா கோலா, அடோப் சிஸ்டம், சான் பிரான்சிஸ்கோ ஏர்போர்ட் போன்றபல நிறுவனங்களும் இந்த புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின்சாரம் தயார்செய்கின்றன.100 கிலோ வாட் மின்சாரம் தயார் செய்யும் ஒரு பாக்ஸின் விலை 7 முதல் 8 லட்சம் டாலர்! அட, அவ்வளவு பணம் கொடுத்து வாங்க வேண்டுமா? என நீங்கள் நினைக்கலாம். ஆனால் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் E bay நிறுவனம் கடந்த ஆண்டு ஸ்ரீதரிடமிருந்து ஐந்து பாக்ஸ்களை வாங்கியது. தனக்குத் தேவையான 500 கிலோ வாட் மின்சாரத்தை இந்த பாக்ஸின் மூலமே தயார் செய்துவிடுகிறது. இந்த பாக்ஸ்களை வாங்கிய ஒன்பதே மாதத்துக்குள் 1 லட்சம் டாலர் வரை மின் கட்டணத்தைசேமித்திருக்கிறதாம் E bay.


இன்னும் ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் அமெரிக்காவின் பல வீடுகளில் இந்த 'ப்ளூம் பாக்ஸ்' இருக்கும்.சாதாரண மனிதர்களும் இந்த பாக்ஸை வாங்கி பயன்படுத்துகிற அளவுக்கு அதன் விலை 3,000 டாலருக்குள் இருக்கும்'' என்கிறார் ஸ்ரீதர். அந்த அளவுக்கு விலை குறையுமா என்று கேட்டால், ஒரு காலத்தில் லட்சத்தில் விற்ற கம்ப்யூட்டர் இன்று ஆயிரங்களுக்குள் கிடைக்கிறதே என்கிறார்கள் ஸ்ரீதரின் ஆதரவாளர்கள். ஸ்ரீதரின் இந்த தொழில்நுட்பம் எதிர்காலத்தில் நிஜமாகும் பட்சத்தில் உலகம் முழுக்க மக்கள் அந்தத் தமிழரின் பெயரை உச்சரிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

நன்றி : திரு .ரவிக்குமார் -கோவை

1/02/2011

நண்பர்களின் உதவி ....


நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்!
         நான் உங்களிடம் கேட்கப் போவது பண உதவியோ, பொருளுதவியோ அல்ல. முற்றிலும் சமூகத்திற்கான உதவி. நான் சமூகத்தில்  நடந்த அநீதி குறித்து எழுத உள்ளேன்.  அதை நான் ஆரம்பத்ததின் நோக்கம் விளம்பரமோ ,
பிரபலமடையவோ அல்ல. சமூகத்தில் நடக்கும் அநீதிகள் அனைத்து மக்களுக்கும் புரிய வைக்கப் பட வேண்டும் என்பதற்காக மட்டுமே.
  சென்ற வருடம் எவ்வளவு ஊழல்,எத்தனை பேர் பலி,கடத்தல்  என்றால் யோசித்துப் பாருங்கள். இதை போன்ற சமூக பிரச்சினைகளை  பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இதைத் தவறவிடுவதில் எனக்குத் துளியும் விருப்பமில்லை.
        அதற்கான முயற்சியாய் இந்த ஒருவனின் குரல் என்ற  ஒரு புதிய வலைப்பூவை எனது  குரலாய் ஆரம்பித்து வைக்கிறேன். இங்கு தினமும் சமூகம் அதன் தொடர்புடைய பிரச்சினைகள் குறித்து தினம் ஒரு பதிவாய் அவர்கள் விருப்பப்படி வெளியிடலாம்.
         இந்த வலைப்பூவின் நோக்கம் நம்  சமுகம் போன்ற பிரச்சினைகள் குறித்து 
நம்மவர்கள்   மற்றும் வாசகர்கள் கலந்துரையாடி ஒரு புரிதலை ஏற்படுத்தி பொது மக்களிடைய  கொண்டு செல்ல வேண்டும் என்பதே. இங்கு சமூக பிரச்சினைக் குறித்து நண்பர்கள்  யார் வேண்டுமானாலும் பதிவுகளை எழுதலாம். நண்பர்கள் செய்ய வேண்டியதெல்லாம்

* உங்களுக்கு இந்த பிரச்சினை குறித்து குரல் கொடுக்கும் எண்ணம் இருந்தால் oruvaninkural@gmail.com  என்ற மின்னஞ்சலுக்கு உங்களின் கீழ்காணும் விபரங்களை அனுப்பி வையுங்கள்.
பெயர், தொடர்பு எண்(விருப்பமிருந்தால்), மின்னஞ்சல், வலைப்பூ முகவரி -(இவை எதுவும் வெளியிடப்படா)

* நீங்கள் உங்கள் சமுகத்தைப் பற்றி எழுதுங்கள். அதை oruvaninkural@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். அது உங்கள் பெயருடன் (அ) புனைப்பெயரில் இந்த தளத்தில் வெளியிடப் படும். உங்களுக்கு விருப்பமிருப்பின் அந்தப் பதிவை உங்கள் வலைப்பூவிலும் வெளியிட்டு இணைப்பு கொடுத்தால் உங்கள் நலன் விரும்பிகளிடம் கொண்டு சேர்க்க ஏதுவாக இருக்கும்.

* நீங்கள் முன்னரே சமூகம்  குறித்து எழுதியிருந்தாலும் அதை அனுப்பி வைக்கலாம். அதை இங்கு வெளியிட்டு அனைவர்க்கும் பயன்பட செய்யுங்கள்.

இந்த சமூகத்தில் நாம் ஒருங்கிணைந்து செயல் படுவோம். நாம் சினிமா, முரளிதரனின் 800 விக்கெட்டுகள் பற்றியெல்லாம் பதிவெழுதுகிறோம், அவைகளுக்கு வாக்களித்து ஆதரவு தெரிவிக்கிறோம். இது நமக்கான இடம். இங்கு நம் ஆதரவை ஒருமித்து வெளிப்படுத்துவோம்.

       நாம் அடிமையாகிக் கொண்டிருப்பதை அனைவருக்கும் புரிய வைப்போம்.
                  நம்மால் ஒரு சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியும்
                                    என்பதையும் எடுத்துரைப்போம் ..

சமூகம் குறித்த வலைப்பூ 

1/01/2011

என் பார்வையில் 2010

        
          வருட கடைசியில் அந்த வருடத்தை திரும்பி பார்ப்பது சுவையான அனுபவம் தான்... சரி 2010 சும்மா விரிவா பார்க்காவிட்டாலும்  என்ன என்பதை பார்ப்போம்...


உலகம்...
 •   விக்கிலிக்ஸ் இணையத்தால் அமெரிக்க இமேஜ் கிழித்து நார் நாராக தொங்கவிடப்பட்டது இந்த ஆண்டுதான்..
 • ஆங் சான் சூகி 15 ஆண்டுகால சிறைவாசத்துக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டு சுதந்திர காற்றை மியான்மரில் சுவாசித்தார்...
 • இலங்கை ராணுவ தளபதி பொன்சேகா கைது செய்யபட்டு சிறையில் அடைக்கபட்டார்...
இந்தியா...


 •  மிகப்பெரிய கேவலமான தீர்ப்புக்கு சாட்சி.. போபால் விஷவாயு தீர்ப்பு... அதே போல இன்னும் பெரும்பாண்மையான இந்திய மக்களால் கூர்ந்து கவனிக்கபட்ட தீர்ப்பு அயோத்தி தீர்ப்பு...
 • அதிபர் ஒபாமா இந்தியா வந்தார்..
 • அரசியலை பொறுத்தவரை ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை முன்னிட்டு நீண்ட நாட்கள் நாடளுமன்றம் முடங்கியது...
 • ஸ்பெக்ட்ரம் முறைகேட்டினால் ஒரு லட்டசத்து 70 ஆயிரம் கோடிகள் அரசுக்கு நஷ் டம் என்று தணிக்கைதுறை சொல்லியது..பிரச்சனை இந்தியா முழுவதும் பற்றிக்கொண்டது..
 • நீரா ராடியா டெலிபோன் பேச்சு மற்றும் சேன்ல் தொகுப்பாளர்கள் டேப் வெளிவந்து மானத்தை வாங்கியது...
 • காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஊழல்..
 • கிரிக்கெட்டில் லலித் மோடி ஊழல் என்று ஊழல் ஆண்டு 2010 என்றால் அது மிகையாகாது...
 • மங்களுர் விமான விபத்தும், இரண்டு ராக்கெட் கடலில் விழுந்ததும் பரபரப்பாய் பேசப்பட்டன...
தமிழகம்...
 • செம்மொழி மாநாடு...பிரம்மாண்டமாக நடத்தி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது . செம்மொழியான தமிழ் மொழியாம் பாடலுக்கு ஏஆர் ரகுமான் இசை கூடுதல் கவர்ச்சிக்கு வித்திட்டது...
 • தஞ்சை பெரிய கோவில் ஆயிரம் ஆண்டு நிறைவை கொண்டாடியது இந்த ஆண்டுதான்... அது எவ்வளவு பெரிய பெருமை.
 • புதிய தலைமை செயலகம் இந்த வருடம் துவங்கபட்டு மவுண்ட்ரோட்டில் கம்பீரமாக நிற்க்கின்றது.. இன்னும் திரைபடங்களில் இந்த புதிய சட்டமன்றம் காட்டப்படவில்லை என்று எண்ணுகின்றேன்.
 • கல்வி கட்டணத்துக்கு கடிவாளம் போடபட்ட ஆண்டு இந்தவருடம்தான்... இன்னும் அந்த சட்டம் சற்று இழுபறியாக இருப்பது வருத்தமே..
 • தென்மாவட்டங்களில் 23 நாட்களுக்கு மேல் தொடர்ந்த மழை மக்களை உண்டு இல்லை என்று செய்து விட்டது..
 • தமிழகத்தில் இந்த ஆண்டினை தமிழகத்தில் கடத்தல்கள் நிறைய நடந்தது என்று சொல்லாம்..நிறைய கடத்தல்கள் வெளிய தெரியாமல் முடி மறைக்கப்பட்டன.. நிறைய கடத்தல் கொலைகள் இந்த ஆண்டு.. கோவை பிள்ளைகள் கொலை தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களையும் சோகத்துக்கு உள்ளாக்கியது..
 • தமிழக சாலைவிபத்துகளில் இற்ந்தவர்களும்.. சென்னை மெரினாவில் குளிக்க வந்து கடலில் மூழ்கி இறந்தவர்கள் அதிகம்...
 • நித்யா,ரஞ்சிதா வீடியோ கிளிப்பிங் வெளியாகி பரபரப்பை கிளப்பியது...
சென்னை...
 • சென்னையில் பல பதிய மேம்பாலங்கள் பயண்பாட்டுக்கு வந்தன..
 • பல புதிய மால்கள் சென்னையில் உதயமாயின... உதாரணத்துக்கு எக்ஸ்பிரஸ்மால் ராயப்பேட்டையிலும்,ஸ்கைவால்க் அண்ணாநகர் அருகிலும் திறந்து வைக்கப்பட்டது....
 • அண்ணா நுற்றாண்டு நினைவு பெரிய நூலகம் திறந்துவைக்கபட்டது....
சோகம்..
 • நடிகர் முரளி இறந்ததும் சுவர்ணலதா இறந்ததும் நிறையபேருக்கு அதிர்ச்சி செய்தி...
சினிமா...
 • போனவருடத்தில் வெளியான படங்களில் எனக்கு ரொம்பவும் பிடித்த படம் நிறையவே உண்டு (களவானி ,மைனா ,எந்திரன் )
நான் :
இந்த வருடம் நிறைய பிரச்சனைகளைசந்தித்த ஆண்டு...நிறைய காழ்ப்புனர்ச்சி  சண்டைகள், சச்சரவுகள்... நிறைய பேர் யோக்கிய வேஷம் போட்டு வெளுத்து வாங்கினார்கள். நானும் சீண்டப்பட்டேன். முதலில் கோபபட்டு, பிறகு நண்பர்கள் சொன்னார்கள்... 4 பேர் சீண்டுவதுக்கு ஏன் பதில் சொல்லவேண்டும்? என்று என்னிடத்தில் கோபித்துக்கொண்டவர்கள் நிறைய... நாங்கள் இருக்கின்றோம் என்று என்னோடு இருந்தார்கள்.. என்னோடு நட்பு பாரட்டிய நண்பர்களுக்கு என் நன்றிகள்.ஆனால் நான் நண்பர்களையும் நம்பவில்லை.


வலைப்பூ


      பதிவுலகில் நான் காலடி எடுத்து வைத்த ஆண்டு ,இந்த வருடம் 297 பதிவுகள் எழுதி இருக்கின்றேன்... இத்தனைக்கும் மற்றவர்களை காட்டிலும் எனக்கு அனுபவம்
குறைவாக  இருந்தது.. வரும்  வருடம் அப்படி இல்லை.. என்னையும் செழிமை படுத்தி
நல்ல பதிவுகளுடன் உங்களை அடுத்த வருடம் சந்திப்போம் (அதாங்க நாளைக்கு )


என்னோடு தொடர்ந்து பயணப்பட்டு வரும் நண்பர்களுக்கு என் நன்றிகள்..
              அட்வான்ஸ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.. குட்பை 2010...


என்றும் அன்புடன்
கோவைராமநாதன்
குறிப்பு..


இந்த தளம்  பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்.


பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்....