தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

12/31/2011

எனது பார்வையில் 2011


வருட கடைசியில் அந்த வருடத்தை திரும்பி பார்ப்பது சுவையான அனுபவம் தான்... சரி 2011 சும்மா விரிவா பார்க்காவிட்டாலும் என்ன என்பதை பார்ப்போம்...

உலகம்...
• ஜப்பானில் நிகழ்ந்த மிகப்பெரிய பூகம்பம் அதை தொடர்ந்து ஏற்பட்ட ஆழிப்பேரலை(சுனாமி) பல்லாயிரகணக்கான உயிர்களை பலிக்கொண்டது, பல கோடி சொத்துக்களும் சேதமடைந்தன.

• இளவரசர் சார்லஸ் திருமணம் லண்டனில் ராணி எலிசபத் முன்னிலையில் ஆடம்பரமாக(கோலாகலமாக) நடைப்பெற்றது.

• ஒசாமா-பின்-லேடனை கொன்றுவிட்டதாக அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்தது (ஒசாமா பின் லேடன் தேடுதல் வேட்டையை வெள்ளை மாளிகையில் இருந்து நேரடியாக கண்காணிக்கும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மற்றும் உயர் அதிகாரிகள்)

• உலகின் 7-வது பில்லியனாவது குழந்தை( world's seven billionth baby) உத்திரபிரதேச மாநிலத்தில் பிறந்த்தது.

• ஈராக்கிலிருந்து அமெரிக்க ராணுவப்படைகள் முற்றிலுமாக வாபஸ் பெறப்படுவதாக அமெரிக்கா அறிவித்தது.

• வளைகுடா நாடுகளில் ஏற்பட்ட கிளர்ச்சி அதை தொடர்ந்து லிபியா அதிபர் கடாபி அக்டோபர் 20 ஆம் தேதி போராட்டக்காரர்களால் கொல்லப்பட்டார்.

இந்தியா...
• ஊழலுக்கு எதிரான அன்னா ஹசாரே வின் கிளர்ச்சி.

• சிக்கிம் மாநிலத்தில் மிகப்பெரிய பூகம்பம் ஏற்பட்டது, சேதமதிப்பு 1 லட்சம் கோடி என கணக்கிடப்பட்டது.

• கொல்கத்தாவில் அம்ரி என்ற மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தினால் 90க்கும் மேற்பட்டவர்கள் தீயில் கருகி பலியானார்கள்.

• மேற்கு வங்காளம் பிரகாஷ் நகர் கிராமத்தில் வழிதவறி சுற்றி திரிந்த சிறுத்தைப்புலி ஒன்று பல பொதுமக்களையும் மூன்று வனத்துறை காவலர்களையும் கடித்துக்கொதறியது, நீண்ட போராட்டத்துக்குப்பின் பிடிப்பட்டது.

• டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட அணி உலகக்கோப்பையை கைப்பற்றி உலக சாம்பியன் ஆனது.

• உலகின் முதன்மை கார் பந்தயமான பார்முலா - 1 கார் பந்தயம் முதன்முதலாக இந்தியாவின் தலைநகர் டெல்லியில் நடைப்பெற்றது.

• மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் சேவாக் தனது அதிரடி ஆட்டம் மூலம் இரட்டை சதமடித்தார். ஒரு நாள் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை நிகழ்த்தி அனைவரின் பாராட்டுதலையும் பெற்றார்.

தமிழகம்...
• 2ஜி வழக்கில் கருணாநிதியின் மகள் கனிமொழி கைதானார்.

• 2011 தமிழக சட்டசபை தேர்தலில் அருதிப்பெருன்பானமையுடன் அ.இ.அ.தி.மு.க ஆட்சிபீடம் ஏறியது.

• சென்னை அருகே பழவேற்காடு ஏரியில் படகு கவிழ்ந்ததில் சுற்றுலா பயணிகள் 22 பேர் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர். (அதில் ஒரே குடும்பத்தை சார்ந்தவர்கள் 20 பேர் என்பது மிகவும் பரிதாபத்திற்குரியது)

• முல்லை பெரியாறு அனை விவகாரம் தமிழகம்-கேரளம் இடையே பெரும் அச்சத்தையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

சோகம்..
• இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மன்சூர் அலிகான் பட்டோடி உடல்நல குறைவால் மரணமடைந்தார்.

• ஆப்பிள் நிறுவனத்தின் தலைச்சிறந்த நிர்வாகி ஸ்டீவ் ஜாப் மரணமடைந்தார்.

சினிமா...
• போனவருடத்தில் வெளியான படங்களில் எனக்கு ரொம்பவும் பிடித்த படம் குறைவாகவே உண்டு (ஏழாம் அறிவு ,எங்கேயும் எப்போதும் ,போராளி  ) 

நான் :
இந்த வருடம் நிறைய பிரச்சனைகளைசந்தித்த ஆண்டு...நிறைய காழ்ப்புனர்ச்சி சண்டைகள், சச்சரவுகள்... நிறைய பேர் யோக்கிய வேஷம் போட்டு வெளுத்து வாங்கினார்கள். நானும் சீண்டப்பட்டேன். முதலில் கோபபட்டு, உடலாலும் ,உள்ளதாலும் மிகவும் காயமடைந்த ஆண்டு


வலைப்பூ

பதிவுலகில் நான் காலடி எடுத்து வைத்து இரண்டாண்டு முடிவடைந்தது  ,இது வரை 403  பதிவுகள் எழுதி இருக்கின்றேன்... இத்தனைக்கும் மற்றவர்களை காட்டிலும் எனக்கு அனுபவம் குறைவாக இருந்தது.. வரும் வருடம் அப்படி இல்லை.. என்னையும் செழிமை படுத்தி நல்ல பதிவுகளுடன் உங்களை அடுத்த வருடம் சந்திப்போம்

என்னோடு தொடர்ந்து பயணப்பட்டு வரும் நண்பர்களுக்கு என் நன்றிகள்..
அட்வான்ஸ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.. குட் பை 2011..


என்றும் அன்புடன்
கோவைராமநாதன்


12/24/2011

கிறிஸ்துமஸ் மரம் -படித்ததில் புதியது


ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. 2010 ஆண்டுகளுக்கு முன் பிறந்து வாழ்ந்த புனிதர் இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாள்தான் இவ்வாறு கொண்டாடப்படுகிறது.
 இன்று, உலகம்பூராவும் பரவலாக நூறு கோடி மக்களுக்கு மேல் கிறிஸ்துமஸ் பண்டிகையை வண்ணமயமாக, கேளிக்கைகள், உறவினர், நண்பர்களுடனும் விருந்துகளுடனும் உற்சாகமாகக் கொண்டாடுகிறார்கள் என்பது செய்தியாகும்.
 இந்நாளில் ஒளிரும் நட்சத்திரங்களை வீட்டின் முன்பு தொங்கவிட்டும், பல வகை வண்ண விளக்குகளால் வீடுகள், கடைகள், அலுவலகங்களை அலங்கரித்தும் பிரியமானவர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகள் அனுப்பியும், பரிசு வழங்கியும் சுவை மிகுந்த கேக்குகள், பலகாரங்கள் வழங்கியும் அறுசுவை உணவுகளை உண்டும் ஆனந்தமாகக் கொண்டாடுவார்கள்.
 இவ்வாறு வீடுகளில் அழகுற அமைக்கப்படும் கிறிஸ்துமஸ் மரங்களை, கிறிஸ்தவர்கள் வழக்கமான முக்கியத்துவத்துடன் கிறிஸ்துமஸ் விழாவின் ஓர் அங்கமாக வடிவமைத்து மகிழ்கிறார்கள். இந்த அளவு முக்கியத்துவம் பெற்ற கிறிஸ்துமஸ் விழாவில், இந்த மாதிரி மரத்தை அலங்கரித்து வைக்கும் பழக்கத்தை முதன்முதலில் மார்டின் லூதர் ஆரம்பித்து வைத்தார்.
 அது குறித்த ஒரு பழங்கதை உண்டு. சுமார் 1, 500 ஆண்டுகளுக்கு முன் ஓர் அருமையான கிறிஸ்துமஸ் மாலை நேரத்தில், ஜெர்மனியின் பனி மூடிய ஒரு காட்டுப் பகுதியில் மரங்களினூடே மார்டின் லூதர் நடந்து கொண்டிருந்தபோது, என்றும் பசுமை மாறாதிருக்கும் அழகிய செடிகள் அவரைத் தடுத்து நிறுத்தின. அவற்றின் பசுமைக் கிளைகள், பனித்துளிகளால் மூடப்பட்டு, சந்திர ஒளியில் அழகாகப் பிரகாசித்ததைக் கண்டு, அதில் மனம் பறி கொடுத்து நின்றார்.
 அவர் வீட்டுக்குச் சென்றதும், அவர் கண்ட அழகை வீட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஒரு சிறிய தேவதாரு மரத்தை வீட்டுக்குள் வைத்து, அதில் மெழுகுவர்த்திகளை ஒளிரவிட்டு அலங்கரித்தார். இயேசுவின் பிறந்தநாளில், அவர் பிறப்பைக் கொண்டாடுவதற்கான அர்ப்பணிப்பாக அந்த மரத்தை அவர் எண்ணினார். சில ஆண்டுகளில் கிறிஸ்துமஸ் தினத்தன்று மரங்களை அலங்கரித்து வைக்கும் பழக்கம் ஜெர்மனி முழுவதும் பரவியது.
                                                                கிறிஸ்துமஸ் மரம் விற்பனை
 கிறிஸ்துமஸ் மர விற்பனை 1851-ல் ஆரம்பமானது. கேட்ஸ்கில் மார்க்கார் என்ற விவசாயி இரண்டு எருதுகள் பூட்டிய வண்டியில் பசுமையான மரங்களை நியூயார்க் நகருக்குக் கொண்டு சென்று விற்பனை செய்தார். 1900-வாக்கில் அமெரிக்காவில் ஐந்து குடும்பங்களில் ஒரு குடும்பம் கிறிஸ்துமஸ் மரத்தை வாங்கினார்கள். அதிலிருந்து 20 ஆண்டுகளுக்குப் பின்னால் இந்த வழக்கம் கிட்டத்தட்ட உலகம் முழுவதும் பரவியது.
 1930-ல் நர்சரி செடிகள் தயாரிப்பாளர்கள் அவர்கள் தயாரித்த பசுஞ்செடிகளை வீட்டு அலங்காரங்களுக்கும், பூங்காக்களுக்கும் மற்ற வகைகளுக்கும் விற்பதில் மந்த நிலை ஏற்பட்டது. அந்த நேரத்தில் கிறிஸ்துமஸ் மரங்களின் தேவைகள் அதிகமானதால், அவர்கள் தங்கள் பண்ணைகளைக் கிறிஸ்துமஸ் மரங்களுக்கான பண்ணைகளாக மாற்றி, செடிகள், வளர்ந்த மரங்களை கிறிஸ்துமஸ் மரங்களுக்காக வெட்டி விற்பனை செய்தார்கள். இவ்வாறுதான் கிறிஸ்துமஸ் மரப்பண்ணைகள் பிறப்பெடுத்தன.
 பண்ணைகளில் சீரான நல்ல மரங்கள் சாகுபடி செய்யப்பட்டன. ஏனென்றால் ஏற்கெனவே இருந்த பண்படுத்தப்படாத சீரற்ற மரங்களைவிட அவை அதிக விலைக்கு விற்றன. என்றும் பசுமையாயிருக்கும் ஆறு வகையான பைன், பைர் மரங்களைப் போன்ற ஊசியிலை மரங்கள், கிறிஸ்துமஸ் மர வியாபாரத்தில் முக்கியமாக 90 சதவீதம் இடத்தைப் பிடித்தன. இதில் முதல் இடத்தைப் பிடித்த ஸ்காட்ச் பைன் மரங்கள் 40 சதவீதம் சந்தையைப் பிடித்திருந்தன.
 டக்ளஸ் பைர் மரங்கள் 35 சதவீதம் சந்தையைப் பிடித்ததென கணக்கிடப்பட்டன. இவைகளுக்கு அடுத்ததாக, அதிகம் விற்பனையான மரங்கள், நோபிள்பைர், ஒயிட் பைன், பால் சப்பையர் மற்றும் ஒயிட்சப்ரூஸ் ஆகிய மரங்கள் ஆகும்.
 ஒவ்வொரு ஆண்டும் உத்தேசமாக 35 முதல் 40 கோடி இயற்கை கிறிஸ்துமஸ் மரங்கள் வட அமெரிக்காவிலும், 60 முதல் 65 கோடி மரங்கள் ஐரோப்பாவிலும் உற்பத்தியாகின்றன. 20 கோடி மரங்கள் ஜெர்மனியில் மட்டும் உற்பத்தி செய்யப்பட்டன. ஒவ்வொரு ஆண்டும் மிக அதிகமான கிறிஸ்துமஸ் மரங்கள் ஜப்பான், சீனா, ஹாங்காங், பிலிப்பைன்ஸ், மெக்ஸிகோ நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.
 கிறிஸ்துமஸ் மரப்பண்ணைகளில் கிறிஸ்துமஸ் மரங்களுக்காக என ஒதுக்கப்பட்ட 6 அல்லது 7 அடி உயரம் வரை வளர, 13 அல்லது 15 ஆண்டுகள் ஆகின்றன. இந்த வளர்ச்சி விகிதம் உலகின் தேவைகளை ஈடுகட்டும் விதமாக இல்லை.
 சமீபத்திய ஆண்டுகளில் உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் மரங்களின் தேவை மற்றும் மக்களின் விருப்பம் கூடிக்கொண்டே போகிறது. இது பல்வேறு வகையான செயற்கை கிறிஸ்துமஸ் மரங்களின் உற்பத்திக்கு வழிகோலியது. செயற்கை கிறிஸ்துமஸ் மரங்களின் அதிக உற்பத்தி மற்றும் விற்பனை இயற்கை கிறிஸ்துமஸ் மரங்களின் விற்பனையை பாதித்தது.
 அதிக அளவாக பிவிசி பிளாஸ்டிக்குகளில் தயாராகும் செயற்கை கிறிஸ்துமஸ் மரங்கள், கையாளவும், சுலபமாக எடுத்துச் செல்லவும் வசதியான பாதுகாப்புக்கும், மறுஉபயோகத்திற்கும் வசதியாக இருந்தன. இயற்கை மரங்களைவிட செயற்கை மரங்களுக்கான செலவுகள் குறைவாகவும் இருந்தன.
 பிரிலிட், பைர், ஆப்டிக் ஆகிய இயற்கை மரங்கள், செடிகளைப் போலவும், இயற்கையான பிற மரங்களைப் போலவும், பல்வேறு வகைகளிலும் செயற்கை கிறிஸ்துமஸ் மரங்கள் இன்று இருக்கின்றன. உலகிலேயே சைனாவிலுள்ள பியர்ன் ஆற்றின் டெல்டா பகுதிகளில் மிக அதிக அளவு செயற்கை கிறிஸ்துமஸ் மரங்கள் இன்று உற்பத்தி செய்யப்படுகின்றன. இவைகளுக்கான கிராக்கி ஆண்டுக்கு ஆண்டு அதிகமாகிக்கொண்டே இருக்கிறது.
 கிறிஸ்துமஸ் மரங்கள் இயற்கையானதாகவோ, செயற்கையானதாகவோ எதுவாக இருந்தாலும் அவைகளின் பழமையான பின்னணியோடும் கிறிஸ்தவர்களின் உணர்வுகளோடு கலந்ததாகவும், பக்திபூர்வமாக ஈர்ப்பதாகவும், இன்றும் உலகம் முழுவதும் ஒவ்வொரு கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்களில் மிக முக்கிய அங்கமாக, கிறிஸ்துமஸ் மரங்கள் இடம் பெறுகின்றன.  

அனைவருக்கும் இனிய  கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்


12/23/2011

மார்கழி

          மார்கழி வந்து விட்டது. திருப்பாவையும், திருவெம்பாவையும் பாடி இறைவனை பூமாலையுடன், பாமாலையும் சேர்த்து சாற்றி வேண்டினால் வாழ்வில் எல்லா நலங்களும் பெறலாம். மனங்குளிர் மார்கழி என்று சொல்வது போல் உடம்பும் மனமும் குளிரக் குளிர குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும் என்பார்கள். குளிர்ந்த நீரில் குளித்தால் குளிர் போய் விடும் ஆனால் வெந்நீரில் குளித்தால் குளிர் தெரியும். என் அம்மா குளிர்ந்த நீரில் தான் குளிப்பார்கள். எங்களுக்கு எல்லாம் வெந்நீர் போட்டு கொடுப்பார்கள். குளித்து, கோலம் போட்டு, காலை கோவிலுக்குப் போய் இறைவனைக் கும்பிட்டு அங்கு தரும் வெண்பொங்கல் பிரசாதம் வாங்கிச் சாப்பிட்டு வீட்டுக்கு  கொஞ்சம் எடுத்து வருவேன்.அடியார்கள் பஜனை பாடிக்கொண்டு தெருவில் வருவார்கள். பாடத் தெரியாதவர்களையும் பாட வைக்கும் பஜனைப் பாடல்.இப்படி இளமைக் கால மார்கழி மாதம் அருமையானது. இப்போதும் காலையில் அருகில் இருக்கும் கோவிலுக்குப் போகிறேன்.

        மார்கழி என்றால் இசைப்பிரியர்களுக்கு நல்ல விருந்து கிடைக்கும். இசையால் பாடகர்கள் வேள்வி செய்வார்கள்.மனித வாழ்வில் இசை நிறைய அற்புதங்களை செய்கிறது.
        இசை வெறும் பொழுதுபோக்காக மட்டும் இல்லாமல் மனிதனின் உடலில் காணும் வலிகளை நீக்குவதற்கும், உடலுக்கும் உள்ளத்துக்கும் உற்சாகம் அளிப்பதற்கும் உதவியாக இருக்கும்.இசை,செவிக்கு விருந்து -உடலுக்கு மருந்து. மனோவியாதிக்கும் மருந்து. மனோவியாதி உள்ளவர்களை இசையால் குணப்படுத்தலாம். இப்படி இசையின் பெருமையை சொல்லிக் கொண்டு போகலாம்.

        மார்கழி மாதம் பஜனை பாடல்களை கையைத் தட்டி பாடும் போது குளிர் நம்மை விட்டு போய் விடும். இரத்த ஓட்டம் நன்கு நடை பெறும்.உடலுக்கும் மனதிற்கும் உற்சாகம் ஏற்படும். அண்மையில் காலமான சிவானந்த விஜயலட்சுமி அவர்கள் தன் சொற்பொழிவைத் தொடங்கும் முன் ஒரு பாட்டு பாடுவார்கள். ’கோவிந்த கோவிந்த ராதா முகுந்தா எனப் பாட்டு பாடுவார்கள் அதில் ”பாடக்கிடைத்த வாய் ஒன்று,தாளம் போடக்கிடைத்த கை ரெண்டு,”இரு கையாலே தாளங்கள் போடு;” ஐந்து புலன்கள் செய்யும் வேலைகளை சொல்லி, இந்த பிறவியில் பாட வாய் கிடைத்திருக்கும்போது, பாடாமல் இருக்கலாமா என அர்த்தம் தோன்றும் பாடலைப் பாடுவார்கள். அந்த பாட்டு முழுமையாய் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்  அந்த பாடல் வலைத்தளத்தில் தேடியும் கிடைக்க வில்லை.

பால் தினகரன் அவர்கள் ’ காலையில் நீ எழுந்து கடவுளைத் துதி நன்று, காலதாமதம் நன்றன்று, என் மனமே!’ என்று பாடுவார்.

எல்லா மதமும் காலையில் இறைவனைத் துதிப்பது நன்று என்று சொல்கிறது. பள்ளி வாசலில் 4.30க்கு பாங்கின் ஒலி இறைவனைத் தொழ வாருங்கள் என அழைக்கிறது. ஐயப்ப பகதர்கள் காலையில் இந்த மார்கழிக் குளிரிலும் பச்சைதண்ணீரில் குளித்து ஐயப்பனை வேண்டிப் பாடுவார்கள். எல்லாக் கோவில்களிலும் காலை வழிபாடு மிகவும் சிறப்பாய் நடைபெறும்.

மார்கழியில் இசை விழா சிறப்பாய் நடைபெறும். தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு மார்கழி மகா உற்சவம் நடத்துகிறார்கள். வானொலியும் இசை விருந்து அளிக்கிறது.
இசை, நிறைய நன்மைகள் செய்யும் அதில் சில : வயலின் இசை,தந்தி வாத்தியங்கள் தலை முடியை நன்கு வளர செய்யும். வயிற்று நோய் போக்கும். வயிற்று நோய் உள்ளவர்கள் அவர்களுக்கு பிடித்த ஒரு குறிப்பிட்ட இசையை மூன்று வேளை சாப்பாட்டுக்கு பின் கேட்க வேண்டும். அப்போது வயிற்று வலி போய் விடும் என்பார்கள்.

வீணை இசை கேட்டால் நல்ல தூக்கம் வரும்.வீணை இசை உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது. மென்மையான பாட்டுக்கள் மனதை மயக்கும்.

நீலாம்பரிராகம்- நல்ல தூக்கம் வரும். ஸ்ரீ ராகம், நல்ல ஜீரணசக்தி தரும். துவிஜாவந்தி-நரம்பு தளர்ச்சி குணமாகும். சாமாராகம்- மன உளைச்சல் போகும். பைரவி, காம்போதி, கல்யாணி, வாசந்தி, சிவரஞ்சினி, கோசலம், அனுமத்தோடி, புராணிசாராகம், எல்லாம் பிணிதீர்க்கும் ராகங்கள்.

மார்கழிமாதம், கோலங்களுக்குச் சிறப்பு. வீடுகள் தோறும் வண்ணக் கோலங்கள் போட்டு, பசுஞ்சாணத்தில் பிள்ளையார் பிடித்துவைத்து, ஒற்றைப் படையில் பூ வைத்து(1,3,5,7,9,11) பின் காலை 11.30க்கு அதை எடுத்துத் தட்டி வைத்து விடுவார்கள் , அதில் பால் காய்ச்சுவார்கள் அல்லது பொங்கல் வைப்பார்கள்  கிராமம்  பக்கம்.

கோலங்களைப் பற்றிக் கூறும் இன்னும் சில பாடல்கள்:

நாலாயிரதிவ்ய பிரபந்தத்தில் ஆண்டாள், கோலத்தை அழிக்கும் கண்ணனைப் பற்றி இப்படிக் கூறுகிறார்:

//வெள்ளைநுண்மணல் கொண்டுசிற்றில்
விசித்திரப்பட, வீதிவாய்த்
தெள்ளிநாங்களி ழைத்தகோல
மழித்தியாகிலும், உன்றன்மேல்
உள்ளமோடி யுருகலல்லால்
உரோடமொன்று மிலோங்கண்டாய்,
கள்ளமாதவா. கேசவா.உன்
முகத்தனகண்க ளல்லவே.//


’குடும்ப விளக்கில்’ கோலமிடும் பெண்ணைப் பற்றி பாரதிதாசன் இப்படிக் கூறுகிறார்:

//சின்ன மூக்குத் திருகொடு தொங்கும்
பொன்னாற் செய்த பொடிமுத் தைப்போல்
துளிஒளி விளக்கின் தூண்டு கோலைச்
செங்காந் தள்நிகர் மங்கை விரலால்
பெரிது செய்து விரிமலர்க் கையில்
ஏந்தி, அன்னம் வாய்ந்த நடையடு,
முல்லை அரும்பு முத்தாய்ப் பிறக்கும்,
கொல்லை யடைந்து குளிர்புதுப் புனலை
மொண்டாள்; மொண்டு, முகத்தைத் துலக்கி
உண்டநீர் முத்தாய் உதிர்த்துப் பின்னும்
சேந்துநீர் செங்கை ஏந்தித் தெருக்கதவு
சார்ந்ததாழ் திறந்து, தகடுபோற் குறடு
கூட்டி, மெருகு தீட்டிக் கழுவி,
அரிசிமாக் கோலம் அமைத்தனள்; அவளுக்குப்
பரிசில் நீட்டினான் பகலவன் பொன்னொளி!//


கண்ணதாசன், ‘நீ’ என்ற திரைப்படப்பாடலில்,

//வெள்ளிக்கிழமை விடியும் வேளை வாசலில் கோலமிட்டேன்
வாசலில் கோலமிட்டேன்
வள்ளி கணவன் பேரை சொல்லி கூந்தலில் பூ முடித்தேன்
ஆ.. கூந்தலில் பூ முடித்தேன்
வெள்ளிக்கிழமை விடியும் வேளை வாசலில் கோலமிட்டேன்
வாசலில் கோலமிட்டேன்
வள்ளி கணவன் பேரை சொல்லி கூந்தலில் பூ முடித்தேன்

மஞ்சள் கொஞ்சிடும் மங்கள முகத்தில்
குங்குமம் விளங்கட்டுமே -கோவில்
குங்குமம் விளங்கட்டுமே
கைவளையாடலும் காலடி ஓசையும்
வருகையை முழங்கட்டுமே -பாவை
வருகையை முழங்கட்டுமே

வெள்ளிக்கிழமை விடியும் வேளை வாசலில் கோலமிட்டேன்
வாசலில் கோலமிட்டேன்
வள்ளி கணவன் பேரை சொல்லி கூந்தலில் பூ முடித்தேன்

மார்கழி திங்களை மூடிய பனித்திரை
காற்றினில் விலகட்டுமே -காலை
காற்றினில் விலகட்டுமே
வாடையில் வாடிய மேனியை மூடிய
மன்னவன் விழிக்கட்டுமே – காதல்
மன்னவன் விழிக்கட்டுமே

வெள்ளிக்கிழமை விடியும் வேளை வாசலில் கோலமிட்டேன்
வாசலில் கோலமிட்டேன்//

என்று கோலமிடும் பெண்ணின் உணர்வுகளை அழகாக வெளிப்படுத்துகிறார்.

இந்த மார்கழி மாதத்தில், பக்தியோடு இறைவனை வணங்கியும்,இசையைக் கேட்டு மகிழ்ந்தும்,கோலங்கள் இட்டுக் கொண்டாடியும் மகிழ்வோம். 

தொடரும் ......

12/21/2011

மணி அடிப்பது ஏன்

பூஜை ஆரம்பிப்பதற்கு முன்னால் மணி அடித்தால், அந்த மணி சப்தம் கேட்டதும் வீட்டிலுள்ள துர் தேவதைகள் போன்றவை வெளியே ஓடிவிடும். துர்தேவதை, பேய், பிசாசு போன்றவைகளுக்கு மணி சப்தம் கேட்டால் பயம்; எனவே, ஓடி விடும். அதனால், மணியடித்து அவைகளை விரட்டி விட்டு பூஜையை ஆரம்பிப்பர். ஒவ்வொரு நாளும் ஏன் இப்படி அடிக்க வேண்டும் என்றால், ஓடிப்போன துர்தேவதைகள் இருட்டிய பின் மீண்டும் வந்து விடும். மறுநாள், மறுபடியும் மணியடித்து விரட்ட வேண்டும். அவை இருந்தால் இருந்துவிட்டுப் போகட்டுமே என்றால், அவை இருக்குமிடத்தில் தேவதைகள் வரமாட்டார்கள்! அதனால், மணியடித்துதான் தினமும் பூஜையை ஆரம்பிப்பது வழக்கம். கிராமங்களில் கூட இந்த துர்தேவதைகள் சுற்றிக் கொண்டே இருக்கும். ஆலயங்களில் காலை, மாலை மணியடிக்கும் போது, இந்த சப்தம் கேட்டதும் அந்த துர்தேவதைகள் ஓடி விடும். மறுபடியும் எப்போது திரும்பி வரும் என்று யாரும் சொல்லவில்லை. இருந்தாலும், அவை வந்து விடும் என்று மட்டும் சொல்கின்றனர்.


மற்ற மாதங்களை விட மார்கழி மாதத்துக்கு சிறப்பு அதிகம். அந்த மாதம் முழுவதும் பகவானுக்கு உகந்த நாட்கள். அதனால், மார்கழி மாதத்தில் எல்லாரும் விடியற் காலையில் எழுந்து நீராடி, நெற்றிக்கிட்டு, தெய்வ பூஜையில் ஈடுபடுவர்; ஆலயங்களுக்குச் செல்வர். இம்மாதத்தில் தெய்வ வழிபாடு மும்முரமாக இருக்கும். கிராமங்கள் என்றில்லாமல் நகரங்களிலும் இப்படி நடக்கிறது. கிராமங்களில் மார்கழி மாதம் முழுவதும் பிரதி தினம் விடியற் காலையில் ஒவ்வொரு தெருவாக சங்கு ஊதிக் கொண்டும், மணியடித்துக் கொண்டும் வருவர். அதற்கென்று மணியடிப்பவர், சங்கு ஊதுகிறவர் உண்டு. அவர்கள் அதை தினமும் செய்வர். இதனால், கிராமத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் துர்தேவதைகள் ஓடிவிடும். கிராமம் நோய் நொடி இல்லாமல் சுபிட்சமாக இருக்கும் என்று சொல்வர். 

நன்றி : சுவாமி ஸ்ரீ ராமானந்த குரு ...

12/20/2011

யாரும் இருக்கிறார்களா என தேடிப்பாருங்கள்.

காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால் இனி வாழ்வு முழுவதும் காதலிக்காமல், திருமணம் முடிக்காமல் இருக்க முடியுமா?

எப்படியும் இன்னும் சில மாதங்கள் அல்லது வருடங்கள் கழித்து செய்ய இருக்கும் காரியத்தை இப்போதே செய்யலாமே.

மீண்டும் பார்வை நிலைக்குப் போங்கள். மனசுக்குப் பிடித்த வேறு நபர் யாரும் இருக்கிறார்களா என தேடிப்பாருங்கள். புதியவற்றைத் தேடத் தொடங்கினால் பழைய துன்பங்கள் கண்டிப்பாக காணாமல் போய்விடும்.

காதல் தோல்விக்காக சிலர் தற்கொலை செய்கிறார்களே என்ன செய்வது?

இவ்வுலக வாழ்வு என்பது ஓர் இனிய வரம். இந்த அழகான பூமி, அழகான மாந்தர், அற்புத வாழ்க்கை எல்லாம் கிடைப்பது சாதாரண விஷயமல்ல. இதனை முழுவதுமாய் அனுபவித்து வாழவேண்டும்.

சிறப்பாய் வாழ்வதற்கு ஆயிரம் வழிகள் உண்டு. அதில் ஒன்றுதான் காதல். காதல் இல்லை என்றதும் உலக வாழ்வே வேஸ்ட் என தன்னைத்தானே அழித்துக்கொள்பவர்கள் மடையர்கள், முட்டாள்கள்.

வேறு என்ன சொல்வது? வாழ்வை ரசிக்கத் தெரியாததால் அவர்களால் காதலையும் ரசித்து ஜெயிக்க முடியவில்லை என்பதுதான் உண்மை.

காதலில் வெற்றியடைந்தவர்கள் அடுத்ததாக திருமணம், குழந்தை, படிப்பு என எதிர்காலத்தை யோசித்து காதலை பெரும்பாலும் தொலைத்துவிடுவார்கள்.

ஆனால் காதலில் தோற்றவர்கள் அதனை வாழ்நாள் முழுவதும் மறப்பதே இல்லை. மனதிற்குள் ஒரு தாஜ்மகால் கட்டி அங்கே தோற்கப்பட்ட காதலை பூஜித்து வருவார்கள்.

ஒரு வகையில் காதலில் தோல்வி என்பதும் சுகமான அனுபவமே. நீங்கள் விரும்பிய ஒரு நபர் கிடைத்துவிட்டால் அவர் மீதிருந்த ஆசை, ஆர்வம், அன்பு எல்லாமே குறைந்துபோய்விடலாம்.

உங்களுக்குத் தெரியாமல் அவரிடம் சில அதிர்ச்சிகரமான விஷயங்கள் இருக்கலாம். இவை எதுவுமே இல்லாமல் உங்கள் மனதில் பரிசுத்தமாக இருக்கக்கூடியது காதல் தோல்வி.

காதலில் தோல்வியடைந்தவர்கள் மீண்டும் எப்போது காதலிக்கத் தொடங்குவது என சிலர் கேட்பார்கள். காதல் என்பது சுவாசம் மாரிரி, ஒரு நொடியும் சும்மா இருக்கக்கூடாது. அதனால் ஒரு காதல் முடிந்துவிட்டால், உடனடியாக அடுத்த காதலை தொடரலாம். அல்லது உங்கள் மனம் சமாதானமான பின் தொடரலாம்.

12/18/2011

ஒ மனமே!!!யோசித்துப்பார்க்கையில்அது உண்மை என்று தான்


தோணுகிறது


எப்போதும் வேண்டும் என்று கூறும் ஒன்று


எப்போதும் வேண்டாம் என்று கூறும் ஒன்று


பரவாயில்லை,


பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று கூறும் ஒன்று


ஆக மூன்று மனதுகள்


சரிதானே ?


ஆம் சரிதான்


என்று கூறியது


நான்காவது மனது


12/11/2011

முல்லை பெரியாறு அணை


   சென்ற வார சபரிமலை கோவிலுக்கு சென்றிருந்த போது அங்கு குமுளி அருகில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த முதியவரிடம் முல்லை பெரியாறு அணை பற்றி காரசாரமாக பேசி கொண்டிருந்தோம்....அவர்களின் பிரதிப்பலிப்புடன் எனது எண்ணங்களை பதிவு செய்துள்ளேன்   
mullai_periyar_dam_622
   ரத்தமும், சதையும், வியர்வையும் கலந்த நிஜக் கதை. அது, முல்லைப் பெரியாறு அணையின் கதை. லண்டனில் இருந்து வந்த வெள்ளைக்காரத் துரை, நமக்காக எவ்வளவு கஷ்டப்பட்டு, ரத்தம் சிந்தி அந்த அணையை கட்டி முடித்தார். அணையை கட்டி முடிப்பதற்காக எத்தனை, எத்தனை பேர் உயிரை தியாகம் செய்திருக்கிறார்கள்; என்னென்ன சிரமங்களை சந்தித்திருக்கிறார்கள் என்ற அந்தக்கதை எனது வாழ்நாள் உள்ளவரை மறக்காது. அந்த அணையை உடைப்பதற்கு அல்ல... அதில் இருந்து ஒரே ஒரு செங்கல்லை உருவக் கூட, எங்கள் உயிர் இருக்கும் வரை அனுமதிக்கமாட்டேன்...!"
 உண்மையில், அது மிகவும் குளிர்ந்த நிலப்பரப்பு. ஆனால், சமீபகாலமாக அங்கு நிலைமை உச்சக்கட்ட கொதிநிலையில் இருக்கிறது. அனைவருக்கும் தெரிந்த அதே காரணம். நாற்காலியைப் பிடிக்கவும், தக்கவைத்துக் கொள்ளவும் அரசியல்வாதிகளால் கையாளப்படும் கடைநிலை உத்தி... இன, மத, மொழி பேதங்களை உயர்த்திப் பிடித்து உசுப்பேத்துவது. அங்கும் அதுதான் நடக்கிறது. "தமிழர்கள் ஒழிக; தமிழகம் ஒழிக" என்றுதான் தேசியக்கட்சிகளும், சர்வதேசக் கட்சிகளும் அங்கு கோஷங்கள் எழுப்பி கூட்டம் சேர்க்கின்றன.
இந்திய வரலாற்றில் இது புதிய உத்தி அல்ல. இதற்கு முன்பும் கூட ஒருமுறை இதேபோல மத, இனவாத உணர்வுகள் தூண்டப்பட்டு, மக்கள் பிரிக்கப்பட்டிருக்கிறார்கள். அது நடந்தது 1940ம் ஆண்டுகளில். அதற்குப் பிறகு, இத்தனை உணர்வுப்பூர்வமாக ஒரு தேசத்தின் மக்களுக்குள் விரோதத்தீயை மூட்டுகிற சம்பவம், அநேகமாக இப்போதுதான் முழு அளவில் அரங்கேறியிருக்கிறது. தீயைப் பற்ற வைக்கிறவர்கள் போதிய விபரமோ, பொது அறிவோ தெரியாத ஆட்கள் அல்ல. அரசியலில் ஐம்பது, அறுபது ஆண்டுகாலம் அனுபவம் பெற்றவர்கள்.
வர்க்கப் போராட்டங்களுக்காகவும், ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் உயர்ந்த கைகள், இல்லாத ஒரு நச்சுப் பொய்யை மக்கள் மனதில் அழுந்த விதைப்பதற்காக இப்போது உயர்ந்திருக்கின்றன. முல்லைப்பெரியாறு அணை ஒரு புவி ஈர்ப்பு விசை அணை (GRAVITY DAM). தேக்கப்படும் தண்ணீரின் அழுத்தம், அலைகள் மற்றும் அவர்களின் தொடர் குற்றச்சாட்டான நில அதிர்வுகளால் ஏற்படும் அழுத்தங்களையும், தனது எடையின் மூலமாக தாங்கக்கூடிய திறன் புவி ஈர்ப்பு விசை அணைகளுக்கு உண்டு. இது அறிவியல்.
ஆனால், நிலநடுக்கம் வந்தால், 30 லட்சம், 35 லட்சம், 40 லட்சம் (உண்மையில் எத்தனை லட்சம்?) மக்கள் மாண்டு போவார்கள் என திரும்பத் திரும்ப (பொய்) சொல்கிறார்கள் கேரளத்து அரசியல்வாதிகள். சொல்லட்டும் தப்பில்லை. ஆனால், எதையும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கவேண்டும். இது அறிவியலின் காலம். அறிவியல்பூர்வமாக நிரூபித்தால் மட்டுமே கடவுளைக் கூட ஏற்றுக்கொள்வேன் என்று கூறுகிறவர்கள் இருக்கிற காலம். அணை பலவீனமாக இருக்கிறது என்று கேரள அரசியல்வாதிகளால் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கமுடியுமா? இன்றல்ல... இன்னும் நூறு ஆண்டுகளுக்குப் பிறகு கூட நிரூபிக்கமுடியாது!
கேரளப் பொதுப்பணித்துறையில் அறிவும், ஞானமும் நிறைந்த பொறியாளர்கள் இருப்பார்கள் என்றே நாம் நம்புகிறோம். அதில் யாராவது ஒருவராவது இதுவரை அணை பலவீனமாக இருப்பதாக அறிவித்திருக்கிறார்களா? அச்சுதானந்தன், பிரேமச்சந்திரன், உம்மன்சாண்டி, ஜோசப் என ஒரு நான்கைந்து பேர்தான் மாற்றி, மாற்றி பேட்டி கொடுக்கிறார்கள். இவர்கள் யார்? ஒரு அணையின் பலம், பலவீனம், தொழில்நுட்ப நுணுக்கங்கள் பற்றி அறிந்து கொள்ளக்கூடிய அளவுக்கு இவர்களுக்கு அறிவு இருக்கிறதா? அன்றாட நடவடிக்கைகளைப் பார்க்கும்போது, இவர்களது அரசியல் அறிவு குறித்தே அடுக்கடுக்காய் சந்தேகங்கள் கிளம்புகிறது.
பேசி வைத்துக் கொண்டது போல இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அச்சுதானந்தனில் துவங்கி கேரள அரசியல்வாதிகள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் முல்லைப்பெரியாறு அணைக்கு கிளம்பி வந்து விடுகிறார்கள். அணைப்பகுதியில் இருக்கிற அரசு சுற்றுலா விடுதி மிகவும் அழகானது; நேர்த்தியானது. அங்கு உணவு வகைகள் மிகவும் ருசியாகவும், தரமாகவும் இருக்கும். சுற்றுலா விடுதியில் ஓய்வெடுத்து விட்டு, உணவையும் ஒரு கை பார்த்து விட்டு, கிளம்பிப் போகிறபோது, மீடியாக்களை பார்த்து, "அணை ரொம்பப் பலவீனமாக இருக்கிறது. எந்த நேரமும் இடிந்து விடலாம். நாங்கள் குமுளி எல்லையைத் தாண்டுகிற அளவுக்குக் கூட தாங்குமா என்பது சந்தேகம்!" என்று ஒரு பேட்டியும் கொடுத்து விட்டுப் போகிறார்கள்.
தமிழகத்தின் கட்டுப்பாட்டுக்கள் இருக்கிற ஒரு அணைக்குள் எந்த அனுமதியும் பெறாமல், அத்துமீறி நுழைய எப்படி இவர்களால் முடிகிறது? நீதியையும், நேர்மையையும், சட்டத்தையும் கட்டிக் காப்பாற்றவேண்டிய இவர்களே, அவற்றை காலில் போட்டு மிதிக்கிறபோது, இவர்களால் ஆளப்படுகிற மலையாள மக்களிடம், அந்தக் குணங்களை எப்படி நம்மால் எதிர்பார்க்க முடியும்? உண்மையில், ஒவ்வொரு முறையும் ஆய்வு, ஆய்வு என்ற பெயரில் அணைக்குள் வந்து போகும் இவர்களும், இவர்களைச் சார்ந்த கும்பல்களும் ஏன் அணையை பலவீனப்படுத்தும் செயலில் ஈடுபடக்கூடாது? அணையின் பலம், பலவீனம் குறித்து இவர்களால் அப்படி என்னதான் ஆய்வு செய்து விடமுடிகிறது?
அணையால் ஒரு ஆபத்தும் இல்லை என கேரள அரசின் அட்வகேட் ஜெனரல் தண்டபாணி, மத்திய நீர்வள கமிஷனின் முன்னாள் தலைவர் தாமஸ் இருவரும் தெள்ளத்தெளிவாக உயர்நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்கள். இருவருமே மலையாளிகள். ஆனால், விஷயம் தெரிந்தவர்கள். அதனால்தான், உண்மையைச் சொல்லியிருக்கிறார்கள். விஷயம் தெரியாதவர்கள், நிலநடுக்கப்பகுதி, மூன்றாம் அடுக்கில் அணை இருக்கிறது என்று கொளுத்திப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். முல்லைப்பெரியாறு அணை இருக்கிற இடம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த கேரள மாநிலமும் நிலநடுக்கப்பகுதி மூன்றாம் அடுக்கில்தான் (SEISMIC ZONE - 3) இருக்கிறது. மக்கள் பாதுகாப்புத்தான் முக்கியம் என்றால் சிறிதும், பெரிதுமாய் அங்கிருக்கிற 31 அணைகளையுமே இடிக்கவேண்டும்.
இந்தத் தருணத்தில், மலையாள மக்கள் புரிந்து கொள்ளவேண்டிய மிக முக்கியமான விஷயம் ஒன்று இருக்கிறது. உங்களது அரசியல்வாதிகள் வேட்டு வைக்க நினைப்பது முல்லைப்பெரியாறு அணைக்கு அல்ல. அது அவர்களால் மட்டுமல்ல.... அவர்களது தலைமுறைகளாலும் முடியாது. தமிழகத்தில் இருந்து வரும் அரிசி, பருப்பு, பால், மருந்து என அத்தனை அத்தியாவசியப் பொருட்களையும் வாங்கிப் பயன்படுத்திக் கொண்டு நிறைவாக இருக்கிற உங்களது நிம்மதியையும், தமிழகத்தின் ஒவ்வொரு மூலை, முடுக்குகளிலும் தொழில் செய்து பிழைக்கிற பல லட்சம் மலையாளிகளின் வாழ்க்கைக்கும் வேட்டு வைக்கிற முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள் உங்கள் அரசியல்வாதிகள்.
முல்லைப் பெரியாறு அணையை, வெறும் அரசியல் காரணங்களுக்காக கையில் எடுத்து அடாவடி செய்யும் கேரள அநாகரிகவாதிகளின் செயல்பாடுகளால், தமிழக மக்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கொதித்துப் போயிருக்கிறார்கள். சட்டசபையைக் கூட்டி, புதிய அணை கட்டியே தீருவோம் என கேரள அரசு தீர்மானம் நிறைவேற்றியதற்கு அடுத்த நாள், கம்பத்தைச் சுற்றியுள்ள கிராம மக்கள் தங்கள் தினசரி வாழ்க்கையை ஒதுக்கி வைத்து விட்டு 'பெரியாறு காப்போம்' கோஷங்களுடன் அணைக்கே கிளம்பி விட்டனர். முதல் நாள் 50 ஆயிரம் பேரும், அதற்கடுத்த நாள் ஒரு லட்சம் மக்களும் (சரிக்குச் சரியாக பெண்களும்) துப்பாக்கிகளுடன் நின்றிருந்த போலீஸ் பட்டாளங்களையும் மீறி குமுளியில் கேரள எல்லைக்கே சென்று முற்றுகையிட்டபோது... புலி வாலைப் பிடித்து விட்டோம் என நினைத்திருப்பார் சாண்டி.
தேனி மாவட்டம் மட்டுமல்ல... அதையும் கடந்து முல்லைப்பெரியாறு பிரச்னை திருப்பூர், கோவை, சென்னை, விழுப்புரம் என மாநிலம் முழுக்க சகல பகுதிகளிலும் சூட்டைக் கிளப்பியிருக்கிறது. "அணையைத் தொட்ட... நீ கெட்ட!" என்று போஸ்டர் அடித்து ஒட்டியபடி, சில சினிமா ரசிகர்களும் களத்தில் குதித்திருப்பது, போராட்டத்துக்கு சற்று மசாலா சேர்த்திருக்கிறது. எந்த அரசியல் தூண்டுதலும் இல்லாமல், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் கிளம்பியிருக்கிற உணர்வுப்பூர்வமான எதிர்ப்பலை, சேட்டன்மார்களை நிறையவே திகிலடைய வைத்திருக்கும்.
நிஜத்தில், இங்கிருக்கும் மலையாளிகளைத் தாக்கவேண்டும் என்பதோ, அவர்களது தொழிலை முடக்கவேண்டும் என்பதோ யாருக்கும் நோக்கமில்லை. அப்படி பேதம் பிரித்துப் பார்க்கிற எண்ணம் தமிழர்களுக்கு ஒருநாளும் இருந்ததில்லை. நம்மவர் கடையை விட நாயர் கடை குப்பைத்தொட்டியில் தேங்கும் டீ டம்ளர்களின் எண்ணிக்கை, எளிய உதாரணம். நகை வாங்குவதற்கு அவர்களது கடைகளுக்குப் போவார்கள். வாங்கிய நகையை வைக்கவேண்டுமென்றாலும், அவர்கள் நடத்துகிற அடகு கடைக்குத்தான் போகிறார்கள். கையில இருக்கு தங்கம்... கவலை எதுக்குடா சிங்கம்?’ போன்ற விளம்பரங்களே அதற்குச் சாட்சி.
தேனி மாவட்டம் மட்டுமல்ல... திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை என விரிந்து பரந்திருக்கிற தென் தமிழக நிலப்பரப்பு, பென்னிகுக் கட்டிய அணையால்தான் இன்னமும் பிழைத்துக் கிடக்கிறது. மின்சாரம் தயாரித்து காசு பார்க்கிற ஆசையில், தமிழக மக்கள் பிழைப்பில் மண்ணைப் போடுகிற செயலில் கேரளத்தவர்கள் இறங்குவார்களேயானால், என்னென்ன விபரீதங்கள் நடக்கும் என்பதற்கான முன்னோட்டங்கள் கடந்த சில நாட்களாக எல்லையிலும், இன்னும் பிற நகரங்களிலும் நடந்து கொண்டிருக்கின்றன. கேரளாவில் நடப்பது அரசியல்வாதிகளால் தூண்டிவிடப்பட்ட வன்முறைகள். ஆனால், இங்கு அப்படி அல்ல. எந்த அரசியல் பின்புலமும் இல்லாமல், மாநிலம் முழுவதும் பொதுமக்களே கொந்தளித்துக் கிளம்பியிருக்கிறார்கள்.
கேரள மக்கள் நடத்தும் வர்த்தக நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டன. ஒரு சில இடங்களில் லேசாக தாக்கவும் பட்டிருக்கின்றனவே தவிர, ஒரு இடத்தில் கூட கேரள மக்கள் தாக்கப்பட்டதில்லை. அவர்கள் மீது ஒரு துரும்பு கூட பட்டதாக தகவல் இல்லை. இது தமிழகத்தின் குணம். ஆனால், எல்லைக்கு அப்பால் நடந்திருப்பவை மிகப்பெரிய சோகம். மாலையணிந்து, விரதம் இருந்து, இருமுடி ஏந்திச் சென்ற தமிழக ஐயப்ப பக்தர்கள், ரத்தக்களறியாகத் திரும்பியிருக்கிறார்கள். கம்பம், கூடலூர் பகுதிகளில் இருந்து கேரள ஏலத்தோட்டங்களுக்குச் சென்ற ஆண், பெண் தொழிலாளர்கள், அங்குள்ள வெறியர்களால் சிறைபிடிக்கப்பட்டு, அனுபவித்த சித்ரவதைகள்.... வேண்டாம், கேரளத்தவர்கள் செய்வது போல, இங்கிருப்பவர்களின் உணர்வுகளை உசுப்பேற்றி வன்முறையை தூண்டுவது இந்தக்கட்டுரையின்நோக்கமல்ல.

முடிப்பதற்கு முன் ஒரு விஷயம்...!
தேனியில் இருந்து குச்சனூர் வழியாக கம்பம் நோக்கிச் செல்கிற பாதையில் இருக்கிற சின்னஞ்சிறிய, பச்சைப்பசேல் கிராமம் பாலாறுபட்டி. அந்தப் பச்சைப்பசேலுக்குக் காரணம், முல்லைப்பெரியாறு அணை. பென்னிகுக் என்ற பிரிட்டீஷ் பொறியாளரின் வடிவில் கடவுள் அவர்களுக்குக் கொடுத்த கொடை முல்லைப் பெரியாறு அணை. அந்த அணையை தந்த பென்னிகுக்கை அவர்கள் என்றென்றும் நினைவில் வைத்திருக்கிறார்கள்.
தை முதல் தேதியன்று பென்னிகுக் நினைவாக பொங்கல் வைத்து, அவரது உருவப்படத்துக்கு மரியாதை செலுத்துவதில் துவங்கி அறுவடை முடிந்ததும், பென்னிகுக் உருவப்படத்துக்கு முன் வைத்து வணங்குவது வரை, எந்தவிதத்திலும் இந்த மண்ணுடன் தொடர்பில்லாத அந்த பிரிட்டீஷ் பெரியவருக்கு நன்றிக்கடன் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்தக் கிராமங்களில் பிறக்கும் பெரும்பாலான குழந்தைகளுக்கு வைக்கிற முதல் பெயர், பென்னிக்குக் என்ற தகவல், அவர்களது ஈர மனதை யாருக்கும் எளிதில் புரிய வைக்கும்.
அணையை உடைக்கப் போவதாக கேரள அரசியல்வாதிகள் நாடகத்தைத் துவக்கிய அன்று, பாலாறுபட்டி மட்டுமல்ல... அதைச் சுற்றியிருக்கும் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் கொதித்து எழுந்தன. அன்றாட வேலைகளை ஓரங்கட்டி, ஒதுக்கி வைத்து விட்டு ஊர்கூடிப் பேசினார்கள். கடந்த வாரத்தில் பாலாறுபட்டி கிராமத்தில் மிகப்பெரிய ஒரு உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. போராட்ட அரங்கில் எந்தக்கட்சியின் சின்னமும் இல்லை. எந்தத்தலைவரின் படமும் இல்லை. ஒரே ஒரு ஆளுயரப்படம்... கர்னல் ஜான் பென்னிகுக் படம், மிகப்பெரிய மாலை அணிவிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. வயது வித்தியாசமின்றி, ஒட்டுமொத்த கிராம மக்களும் அமைதியான முறையில் நடந்த அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
வயிற்றுப்பிழைப்புக்கு வழி செய்கிற கூலிவேலையையும் ஒதுக்கி வைத்து விட்டு, உண்ணாவிரதப் பந்தலில் உட்கார்ந்திருந்த ஒரு எண்பது வயது பெண்மணியின், நெஞ்சுக்கூட்டுக்குள் இருந்து, உணர்வுப்பெருக்கில் வெளிவந்த வார்த்தைக் குவியல்களை இந்தக் கட்டுரையின் துவக்கத்தில் படித்திருப்பீர்கள். மீண்டும் ஒருமுறை அதை படித்துப் பாருங்கள்.... அந்த அணைக்கு ஒரு நாளும் ஆபத்தில்லை என உங்கள் உள்ளம் தெளிவு பெற்றிருக்கும்!
  {இது மலையாளிகளை குறை சொல்லப்பட்ட பதிவல்ல சில ஈனச் செயலில் இறங்கியுள்ள நபர்களுக்கு மட்டுமே இக்கண்டனம்}

நன்றி : வலைத்தள நண்பர்கள்