தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

12/19/2013

கோபம் செல்லுபடியாகும்?

கோபம் எந்தப் புள்ளியில் ஆரம்பிக்கிறது? என்று தெரிந்துக் கொள்ள எனக்கு ரொம்ப நாளாக ஆசை. பல முறை முயற்சி செய்திருக்கிறேன். சமீபத்தில் அதை உணரவும் செய்தேன். நாம் யார் மேல் கோபத்தை காட்டுவோம் தெரியுமா? யார் மேல் கோபப் பட்டால் நம்மை திருப்பி அடிக்க மாட்டார்களோ, திரும்பி திட்டமாட்டார்களோ அவர்கள் மேல்தான் நாம் நம் கோபத்தைக் காட்டுவோம்.

5 வருடங்கள் முன்பு வரை நான் மிகுந்த கோபக்காரனாக இருந்தேன். ஒரு சிடு மூஞ்சியாக இருந்தேன் என்று கூட சொல்லலாம். அந்த அளவிற்கு கோபம் வரும். நான் கம்பனியில் (எந்த கம்பனி என்பது வேண்டாமே?) சேர்ந்த இரண்டாம் வருடம் என நினைக்கிறேன். எனக்கும் ஒரு பெரிய இயக்குனரின் மகனுக்கும் தகராறு வந்தது. அவர் என்னைவிட வயதில் சிறியவர். நன்றாக படித்தவர். அவருக்கும், என்னுடைய வேலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் அவர் ஒரு இயக்குனரின் மகன் என்பதாலும், அவருக்கு நான் மரியாதை சரியாக கொடுக்க வில்லை என்பதாலும் என்னை கொஞ்சம் வம்புக்கு இழுக்க ஆரம்பித்தார். மொத்தத்தில் நான் இருப்பது அவருக்கு பிடிக்கவில்லை. ஒரு நாள் அவர் என்னிடம் கோபமாக பேசிய போது ஒரு கணம் என்னையறியாமல் நானும் கண்டபடி அவரை திருப்பி திட்டிவிட்டேன். ஆபிஸே பார்க்கும் அளவிற்கு ஆகிவிட்டது. " நீ என்னதான் பெரிய இயக்குனரின் மகனாக இருந்தாலும், என்னுடைய இடத்திற்கு வந்து என்னை திட்டுவது சரியில்லை. அதனால் இந்த இடத்தை விட்டு போய் விடு" என்று சொல்லிவிட்டேன்.

அவர் போனவுடன், ஆபிஸில் அனைவரும் " நீ பெரிய தப்பு பண்ணிவிட்டாய். உன் வேலை போகப் போகிறது. ரெடியாக இரு" என என்னை பயமுறுத்தினார்கள். ஆனால், சில பேர், " நீ செய்தது சரி. இன்னும் நீ நன்றாக திட்டி இருக்க வேண்டும்" என என்னை உசுப்பேத்தினார்கள். அதே போல் அவருடைய அப்பா என்னைக் கூப்பிட்டு ," நீ யாரிடம் மோதுகிறாய் தெரியுமா? அவன் என் பையன். அவனுடைய மதிப்பு என்ன என்று தெரியுமா? அவன் எவ்வளவு பெரிய பணக்காரன் என்று தெரியுமா? அவனிடம் அடங்கி நடந்து கொள். இல்லை என்றால்........?????

நான் குழம்பி விட்டேன். வேலை நேரம் முடிந்ததும் ரூமிற்கு சென்றேன். தனியாக உட்கார்ந்து சிந்தித்தேன். "நான் செய்தது சரியா?" சரி என்றே மனம் கூறியது. ஆனால், "ஒரு வேளை அவர்கள் கூறுவது போல் வேலை போனால் என்ன செய்வது? அப்பா கஷ்டப்பட்டு படிக்க வைத்திருக்கிறார்கள். ஏற்கனவே நம்முடைய கோபத்தால் மூன்று கம்பனி வேலையை விட்டாயிற்று. இதுவும் போனால் என்ன செய்வது? ஏன் கோபம் வந்தது? அதை ஏன் என்னால் கட்டுபடுத்த முடியவில்லை. அவரும் நல்லவர் தானே. அவரிடம் கொஞ்சம் அனுசரித்து சென்றால்தான் என்ன? நாம் எந்த விதத்தில் குறைந்து விடப் போகிறோம்?" என பலவாறு சிந்தித்தவன் ஒரு முடிவுடன், அவர் வீட்டுக்குச் சென்றேன்.

நான் அன்று இரவு திடீரென அவர் வீட்டுக் கதவைத் தட்டினேன். திறந்தவுடன் என்னைப் பார்த்தவர் ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்து விட்டார். அவருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. "என்னடா இது. மதியம்தான் இவனுடன் சண்டை போட்டோம். இப்போது இங்கே நிற்கிறானே?" என அவருக்கு குழப்பம். ஆனால் நான் மன்னிப்பு கேட்பதற்காக அங்கே செல்லவில்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நான் முன்பே கூறியதுபோல் "யாரிடம் சண்டை என்றாலும் நேராக நான் எதிராளியின் இடத்திற்கே சென்றுவிடுவேன்". இது என் சுபாவம்.

உடனே அவர் என்னை உள்ளே கூப்பிட்டார். " என்ன இந்த நேரத்துல இங்க?" எனக் கேட்டார். உடனே நான் எதனால் அவருடன் கோபமாக பேச நேர்ந்தது என்று விளக்கினேன். உடனே அவர், " ஆமாம். நானும் அவ்வாறு உங்களிடம் நடந்து கொண்டிருக்கக் கூடாத்துதான்" என்றார். பிறகு சுமார் ஒரு மணி நேரம் பேசினோம். பின்பு அவருடன் அவர் வீட்டில் இரவு உணவு சாப்பிட்டு விட்டுத்தான் வீட்டிற்கு சென்றேன். அடுத்த நாங்கள் இருவரும் சேர்ந்தே அலுவலகம் போனோம். எல்லோரும் ஆச்சர்யமாகப் பார்த்தார்கள். எல்லோரும் என் வேலைப் போக போகிறது என்று நினைத்தார்கள். ஆனால், நடந்ததோ வேறு. அதன் பிறகு நானும் அவரும் மிக நெருங்கிய நண்பர்களாக இருந்தோம்.

இந்த அனுபவத்தை எதற்காக இங்கே கூறுகிறேன் என்றால் கோபப்படுவது உடம்பிற்கு நல்லதல்ல. அப்படியே கோபப்பட்டாலும், சிறிது நேரம் கழித்து கோபப்பட்டதற்கான காரணத்தைக் கண்டு பிடித்து அதை உடனே சரி செய்து கொள்வது நல்லது.

கடந்த 10 நாட்களாக கடும் மழை. வெள்ளம். பயங்கர போக்குவரத்து நெரிசல். தினமும் 9 நிமிடத்தில் கடந்த தூரத்தைக் கடக்க இப்போது 2 மணி நேரம் ஆகிறது. இரண்டு நாட்களுக்கு முன் மதிய சாப்பாட்டுக்காக வீட்டிற்கு சென்றேன். மழை சிறிது குறைந்திருந்தது. அதனால் போக்குவரத்து நெரிசல் இருக்காது என்று தப்புக் கணக்கு போட்டுவிட்டேன். கடுமையான நெரிசல். நடுவில் மாட்டிக்கொண்டேன். கோபம் வருமோ என்ற சூழ்நிலை. மனநிலையை சரி செய்வத்ற்காக பாடல்களை கேட்க முயற்சித்தேன். ஆபிஸுக்கு போன் செய்து என்னுடைய இன்னொரு நண்பர் இன்னும் மதிய உணவிற்கு கிளம்ப வில்லை என்றால், போக்குவரத்து நெரிசலைப் பற்றிச் சொல்லி அவரை வேறு வழியில் போகச் சொல்லலாம் என நினைத்து தொடர்பு கொண்டேன். ஆனால் அவர் ஏற்கனவே கிளம்பி விட்டதாகச் சொன்னார்கள். சரி, அவரும் நம் பின்னால் வந்து கொண்டிருப்பார் போல என நினைத்துக்கொண்டேன். நான் அலுவலகத்தை விட்டு கிளம்பி ஒரு மணி நேரம் ஆகியிருந்தது. நடு ரோட்டில் அசையமுடியாமல் இஞ்ச் இஞ்சாக கார் நகர்கிறது. அப்போது அடுத்த லேனில் நான் தொடர்பு கொண்ட நபர் லஞ்ச் முடித்து ஆபிஸுக்கு திரும்பச் செல்கிறார். போன் செய்து ' எப்படி சார், இவ்வளவு சீக்கிரம் போக முடிந்தது?". " நான் வேறு வழியில் சென்றேன்" என்றார். நான் அவர் கஷ்டப் படக்கூடாது என போன் செய்தேன். ஆனால், அந்த பண்பு அவருக்கு இல்லை. என்னை தொடர்பு கொண்டு மாற்று வழியில் போகுமாறு சொல்ல வில்லை. அப்போதும் கோபம் வருவது போல் இருந்ததை சமாளித்தேன். அதன் பிறகு எனக்கு இன்னும் ஒண்ணரை மணி நேரம் ஆனது.

சாதாரணமாக 10 நிமிடத்தில் செல்லக் கூடிய வீட்டிற்கு நான் போய்ச்சேர இரண்டு மணி நேரம் முப்பது நிமிடம் ஆனது. நல்ல மழை வேறு. நான் வீட்டில் நுழைந்தவுடன் உடனே சாப்பிட அமர்ந்தேன்.

" ஏன், என் கிட்ட கோபப் படறீங்க. ட்ராபிக்குனா நான் என்ன செய்யறது"

" எதுத்து பேசாத?"

அடக்கி வைத்திருந்த கோபம் யாரிடமும் காட்ட முடியாமல் கடைசியில் வீட்டில். என் பழக்கப்படி மாலை எதிராளியின் இடத்திற்கே சென்று உடனே சமாதானப்படுத்த முடியவில்லை.

ஏனென்றால், இங்கே அந்த நேரத்து எதிராளியானவர் என்னில் பாதியானவர் அல்லவா?

அங்கே எப்படி கோபம் செல்லுபடியாகும்? அந்த ஒரு நிமிட கோபத்தை சரி செய்ய எனக்கு இரண்டு நாள் ஆனது..

12/05/2013

மனம் நிம்மதி இல்லாமல்

ரமண மகரிஷி என்று நினைக்கிறேன். வேறு யார் சொல்லி இருந்தாலும் இப்போதைக்கு ரமண மகரிஷி என்றே வைத்துக் கொள்வோம். ஒரு முறை ரமண மகரிஷி ஆற்றில் குளிக்கச் செல்கிறார். அப்போது கரையோரம் உள்ள ஒரு தேள் அவரை கொட்டி விடுகிறது. அவர் அந்த தேளை எடுத்து ஆற்றில் விடுகிறார். அது மீண்டும் வந்து அவரைக் கொட்டுகிறது. அவர் மீண்டும் ஆற்றில் விடுகிறார். அது மீண்டும்..... இதை அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் ரமண மகரிஷியைப் பார்த்து கேட்கிறார்:

" ஏன் சாமி, அதுதான் திரும்ப திரும்ப உங்களைக் கொட்டுகிறது. பின் ஏன் அதைக் கொல்லாமல் அதை பிடித்து பிடித்து ஆற்றில் விடுகிறீர்கள்?"

ரமண மகரிஷி இப்படி பதில் சொன்னாறாம்,

" கொட்டுவது அதன் குணம். பிறருக்கு உதவுவது என் குணம். அது அதனுடைய செயலில் உறுதியாக இருக்கும் போது, நான் மட்டும் ஏன் என்னை மாற்றிக் கொள்ள வேண்டும்?"

இப்போது விசயத்திற்கு வருவோம். நான் எப்படி எழுதுகிறேனோ அதே போல் தான் என் வாழ்க்கையும். எழுதுவதில் என்னை உத்தமனாக காட்டிக்கொண்டு வாழ்க்கையை வேறு மாதிரி வாழ்பவன் அல்ல நான். சிறு வயதிலிருந்தே பிறருக்கு உதவும் குணம் படைத்தவன் நான். அந்த அந்த வயதில் முடிந்த அனைத்து உதவிகளையும் அனைவருக்கும் செய்திருக்கிறேன். என்னுடன் பழகியவர்களுக்கு இது நன்றாகத் தெரியும். உதவுவதற்கு நேரம் காலம் பார்க்காதவன் நான். எந்த நேரத்தில் என் வீட்டு கதவைத் தட்டினாலும் உடனெ என்ன ஏது என்று கேட்காமலே உதவுபவன். ஆனால் எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் உதவிகளை செய்பவன் நான்.

உண்மையான காரணத்திற்காக பணம் இல்லை என்று என்னிடம் கேட்டவர்களுக்கு பண உதவி செய்திருக்கிறேன். . பல பேருக்கு வேலை வாங்கி கொடுத்து இருக்கிறேன். என் நண்பர்கள் அனைவரும் நல்ல உடல் நலத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காக ப நான் எங்காவது வெளியூர் செல்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். அங்கு சென்றவுடன், நண்பர்கள் குடும்பங்களுக்கு ஏதாவது தேவை என்றால், பல வேலைகளுக்கு நடுவே அவர்கள் கேட்ட பொருட்களை வாங்கி அவர்கள் வீட்டிற்கே சென்று கொடுப்பேன். இந்தியத் தொழிலாளிகள் எங்கள் நிறுவனத்தில் வேலை பார்த்தார்கள். யாருக்கு என்ன பிரச்சனை என்றாலும் முதலில் எல்லோரும் என்னிடம் தான் வருவார்கள். அத்தனை பேருக்கும் உதவி இருக்கிறேன். இப்படி பல உதவிகள். இது தான் நான்.

ஏன் இந்த தற்பெருமை பதிவு. காரணம் இருக்கிறது. எதையும் நான் சும்மா பொழுது போக்கிற்காக எழுதுவது இல்லை. என்னுடைய பதிவுகள் எல்லாம் அடுத்தவர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவட்டுமே என்றுதான் எழுதுகிறேன். என் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் போல் யாருக்கேனும் ஏதேனும் நடந்தால், என்னுடைய அனுபவங்களை வைத்து அவர்களால் சரியான முடிவு நிச்சயம் எடுக்க முடியும் என்றே எழுதுகிறேன். இவ்வளவு அடுத்தவர்களுக்கு உதவும் என்னை ஒரு சிறு செயலால் ஒருவர் என்னை அவமானப் படுத்தி விட்டார். படிப்பவர்களுக்கு இது ஒரு சாதாரண விசயமாத்தான் தெரியும். அனுபவித்த எனக்குத்தான் இதன் வலி தெரியும்.

நான் வாழ்க்கையில் ஒரு குறிக்கோளுடன் வாழும் மனிதன். ஒரு ஆர்கனைஸ்டு பெர்சன். அவருக்கும் பல உதவிகள் செய்திருக்கிறேன். அவர்கள் வீட்டிற்கு தேவையானதை வாங்கி அவர்கள் வீட்டிற்கே சென்று கொடுத்துள்ளேன். பல முறை பல உதவிகள் செய்திருக்கிறேன். அப்படிப்பட்டவர் வேறு ஊறுக்கு சென்றிருந்த போது, நான் தெரியாத்தனமாக, அவரிடம் ஒரு பொருள் வாங்கி வரச் சொன்னேன். அதன் எடை ஒரு 25 கிராம் இருக்கலாம். தங்கம் இல்லை. அவர் அதை வாங்கி வந்தார். மற்றவர்களுக்கு நான் ஏதேனும் வாங்கி வந்தால் அவர்கள் வீட்டுக்கே சென்று கொடுப்பேன். எனக்காக யாரேனும் ஏதாவது வாங்கி வந்தாலும் நானே சென்று வாங்கிக்கொள்வேன். அதே போல் அந்த நபரிடமும் வந்து வாங்கிக் கொள்வதாக சொல்லி இருந்தேன்.

ஆனால் கடுமையான மழை காரணமாக உடனே செல்ல முடியவில்லை. அப்படியே நாட்களை தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தேன். பிறகு இருமுறை அவர் வீட்டிற்கு சென்ற போது அவர் இல்லை. நேற்று முன் தினம் என் வாழ்க்கையில் ஒரு முக்கியமான நாள். அதற்காக அந்த பொருள் தேவைப்பட்டது. அதற்காக காலை 6.30 மணிக்கு அவருக்கு போன் செய்து, "அந்தப் பொருளை எடுத்து வந்து விடுங்கள். நான் அங்கே வாங்கிக் கொள்கிறேன்" என்றேன். அதற்கு அவர் சொன்ன பதில்தான் என்னை இந்தப் பதிவு எழுதத் தூண்டியது.

" வாட் நான்ஸன்ஸ். நீங்கதான் வாங்கி வரச் சொன்னீங்க. உங்களுக்குத் தேவையினா நீங்களே வந்து வீட்டுல வந்து வாங்கிக்கங்க. நான் என்ன நீ வைத்த வேலை ஆளா. அங்கே எல்லாம் எடுத்து வர முடியாது"

" நான் எல்லாம் உங்களுக்கு......"

" அது நீ. நான் அப்படி இல்லை" என்று சொல்லி போனை துண்டித்து விட்டார். காலையில் நல்ல நாளும் அதுவுமாக அவமானப் படுத்தப் பட்டேன். சொல்லால் அடிக்கப் பட்டேன். அந்த பொருளின் மதிப்பு 5000 ரூபாய் இருக்கலாம். அதன் எடை 25 கிராம் தான். ஒருவரால் அதை எடுத்து வர முடியாதா? அதை வாங்க நான் அவர்கள் வீட்டிற்குத்தான் செல்ல வேண்டுமா? நான் வந்து வாங்கிக்கொள்ள முடியாது என்று சொல்லி இருந்தால் கூட பரவாயில்லை அவர் பேசியதை சரி என்று ஒப்புக்கொள்வேன். மழைக் காரணத்தாலும், வேறு காரணங்களாலும் என்னால் செல்ல முடியவில்லை. அதுவும் இல்லாமல் அவர் எனக்காக தேடி வந்து கொடுக்க வேண்டியதில்லை. தினமும் ஒரு இடத்தில் இருவருமே சந்திக்க வேண்டிய சூழ் நிலை. அப்படி சந்திக்கும் போது கொடுத்தால் போதுமானது. ஆனால், ஏன் அப்படி அவர் செய்ய வில்லை? காரணம் ஈகோ. நான் என்ற இருமாப்பு. நான் எதற்கு அவ்னுக்கு எடுத்து வந்து கொடுக்க வேண்டும் என்ற குணம்???

யோசித்துக் கொண்டே  சென்றேன். என்னடா? ஆண்டவன் நம்மை இப்படி அவமானப் படும் சூழலுக்குத் தள்ளிவிட்டானே? என நினைத்தேன். ஆண்டவன் என்றைக்குமே என்னை கைவிட்டதில்லை. என்னை என்றுமே எந்த சமயத்திலும் எதிராளியிடம் தோற்குமாறு ஆண்டவன் செய்ததே இல்லை. யோசித்து பார்த்த போது அவர்கள் கடனாக எங்களிடம் வாங்கிய ஒரு பொருள் அவர்கள் வீட்டில் இருப்பது நினைவுக்கு வந்தது.

அவரை சந்திதவுடன், " நான் உங்கள் வீட்டில் வந்து அந்த பொருளை வாங்கிக் கொள்கிறேன். நீங்கள் எங்களிடம் வாங்கிய பொருளை எங்கள் வீட்டில் வந்து கொடுத்து விடுங்கள்" என்றேன்.

" அந்தப் பொருளையும் ஒரே பாக்கட்டில் வைத்துள்ளேன். நீங்கள் வீட்டிற்கு வந்தால் இரண்டையும் வாங்கிக் கொள்ளலாம்" என்றார்.

" இல்லை. இல்லை. நான் உங்கள் வீட்டில் வந்து வாங்கிக் கொள்கிறேன். உங்கள் பிரின்ஸிபில் படி நீங்கள் எங்களிடம் உபயோகப் படுத்த வாங்கிய அந்தப் பொருளை எங்கள் வீட்டில் வந்து கொடுத்து விடுங்கள்" என்றேன்.

" அப்படியானால் ஒன்று செய்கிறேன். உங்களிடம் வாங்கியதை உங்கள் வீட்டிற்கு வந்து கொடுத்து விடுகிறேன். உங்களுக்காக வாங்கிய பொருளை உங்களுக்கு கொடுக்க முடியாது. 5000 ரூபாய் எனக்கு நஷ்டமானாலும் பரவாயில்லை"

நீங்களே சொல்லுங்கள், இப்படிப்பட்ட சூழ்நிலையில் நான் எப்படி ரமண மகரிஷி போல் நடந்து கொள்ள முடியும்???

ஆனாலும் இவ்வாறு நடந்து கொண்டோமே என மனம் நிம்மதி இல்லாமல் தவிக்கிறது.

11/09/2013

சட்டியில் இருந்தால் தான் ஆப்பையில் வரும்.....

சட்டியில் இருந்தால் தான் ஆப்பையில் வரும் இவ்வாரு சொல்வது தவறு

சஷ்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும் இதுவே சரியான சொல்
குழந்தை செல்வம் இல்லாத பெண்கள் இன்று சஷ்டி அன்று எம்பெருமான் முருகனை வேண்டி சஷ்டி விரதம் இருந்தால் குழந்தை வரம் பெருவார்கள் இதை தான் மிக அழகாக சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்று நம் முன்னோர்கள் கூறி உள்ளார்கள்

இன்று கந்தசஷ்டியில் அனைவரும் விரதம் இருந்து எம்பெருமான் முருகனின் கந்தசஷ்டி கவசத்தை 36முறை படித்து தழிழ் தெய்வம் சுனாமி காத்த முருகனின் திருவருளை பெருவோம்

வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா சுனாமி காத்த திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா....................படித்ததில் பிடித்தது .........

11/02/2013

ஒருத்தனின் கருமாதிக் கடிதம்....

என்னைத் தொலைத்துவிட்டு போன
காதலியே நலமா.. கண்ணீர்
மழையில் உருகிக் கொண்டிருக்கும்
ஒருத்தனின் கருமாதிக் கடிதம்..

என்னை வேதனை பட வைத்தாய்..
காயம் பட்ட மனதுக்குள்
காதல் கசியச் செய்தாய்..

தொலைவிலிருந்தாலும் தொடர்ந்து
கேட்கச் செய்தாய்
உன் இதயத் துடிப்பை .. (எனக்கு மட்டும்..)

மனதுக்குள் என்னை சிறை வைத்தவளே
எனை மறக்க எப்படித் துணிந்தாய்..

நீ கண்ணீர் சிந்தினால்
உதிரம் சிந்தியது போல
சிதறிப் போனவனல்லவா நான்..

உன் முகம் சோர்ந்தால்
மூச்சு நின்றது போல
அலறியவனவல்லவா நான்..

இன்னும் புரியவில்லை
நீ என்னை பிரிந்த காரணம்..

நான் தொலைத்து விட்ட இதயத்துடன்
என்னையும் தொலைத்து விட்டு போனவளே
மறக்காமல் வந்து விடு என்
ம(ர)ணப் பத்தரிக்கைக்கு
மஞ்சள் தடவிக் கொடுக்க...

10/31/2013

தெரியுமா?நீலகண்ட பிரம்மச்சாரி என்கிற தேசபக்தர் பாரதியாரின் வீட்டுக்கு வந்திருந்தார். ‘பாரதி, சாப்பிட ஏதாவது இருக்கா?’ என்றார் கம்மிய குரலில். ‘ஓய் நீலகண்ட பிரம்மச்சாரி, என்ன ஆச்சு?’ என்று பதறினார் பாரதியார். ‘சாப்பிட்டு நாலு நாள் ஆச்சு’ என்று பதில் வந்தது. வீட்டில் இருந்த சாப்பாட்டை உடனே பரிமாறச் செய்து, நீலகண்ட பிரம்மச்சாரி கண்ணீருடன் உண்ணும்போது நெஞ்சு வெடிக்க பாரதி எழுதிய பாடல்தான் -
‘இனியொரு விதி செய்வோம் - அதை
எந்த நாளும் காப்போம்
தனி ஒருவனுக்கு உணவில்லையெனில்
ஜகத்தினை அழித்திடுவோம்.’
பசியை ‘அன்னை இட்ட அடிவயிற்றுத் தீ’ என்றார் பட்டினத்தார். பசியை இன்னும் உயர்த்தி, ‘அது தேவியின் வடிவம்’ என்கிறது, தேவி மகாத்மியம்.

‘எந்தத் தேவி எல்லா உயிர்களிலும்
பசியின் வடிவில் உறைகிறாளோ...
அவளுக்கு நமஸ்காரம்
அவளுக்கு நமஸ்காரம்
அவளுக்கே நமஸ்காரம்..’

10/18/2013

உன் நினைவோடே.......

அன்று உன் காதலால் என்னை
என் முதல் கவிதை எழுத வைத்தாய்,
இன்று உன் பிரிவால் என்னை முழு கவிஞன் ஆக்குகிறாய்.

உன்னைப்பற்றி நினைக்கக் கூடாது
நினைக்கக் கூடாது என
நினைத்து நினைத்தே,
உன் நினைவோடே வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

மனதின் வலியை வார்த்தைகளால்
வெளிப்படுத்த முடியுமா முடியாதா
என்கிற சோதனை முயற்சியாகத்தான்
உன் பிரிவை பற்றி எழுதிக்கொண்டிருக்கிறேன்.

என்னுடைய இந்த கவிதைகளெல்லாம் என் தமிழுக்கும்,
உன் நினைவிற்கும் பிறந்த குழந்தைகள் தானடி.

9/28/2013

மௌனம் களைவாயா!!!

உன் நிலை அறியாது
என் நேரமும் நகர மாறுகிறது...
நானாக அறிய வழியுமில்லை,
அதை அறிய முயலும்
என் நினைவையும்
அழிக்க முடியவில்லை...
என் இந்த நிலையை
நீ நன்கு உணர்ந்தும்
மௌனம் ஏன்???
உன் மௌன நிலையை
களைய உனக்கு
நேரமில்லையோ?
அல்லது
மனம்தான் இல்லையோ?
நான் சகஜநிலை அடைய
விரைவில் உன்
மௌனம் களைவாயா!!!

9/04/2013

எதுவும் அறியாதவனாய்

தமிழில் புதிய எழுத்துகளை
கண்டுபிடித்தால் சொல்லுங்கள்
அதில் தேடலாம்

என் காதலின் புனிதத்தை
சொல்லும் வார்த்தைகளை...

அவள் மேல் நான் அப்படி
ஒரு காதல் செய்தேன்.
ஆனால் இப்போது


எல்லாமும் முடிந்து போயிருந்தது
என் இதயம் வெற்றிடமாய் இருக்கிறது.


அதில் நான் வடித்த
கண்ணீர் துளிகள்
ஒரு கடலையே உருவாக்கியது


எந்த அளவுக்கு 'வழியவழிய'
காதலித்தேனோ
அந்த அளவுக்கு
'வலிக்க வலிக்க' ரணங்களையும்
கொடுத்து விட்டு போனாள் அவள் .


எல்லாமும் முடிந்து போயிருந்தது.
இப்போதும் கூட


தினமும் எங்கள் தெருவில் பார்க்கிறேன்
எதுவும் நடக்காதது போல
செல்கிறாள் அவள்
எதுவும் அறியாதவனாய் செல்கிறேன் நான்

8/29/2013

அழகு என்பது
பெண்பால் என்றால்,
ரசனை என்பது நிச்சயம் ஆண்பால் ஆகத் தான் இருக்கும்.
அழகாய் இருப்பதால் அவன் என்னை
ரசிக்கவில்லை.
அவன் ரசிப்பதால் தான்
நான் அழகாகவே
இருக்கிறேன்

8/07/2013

அவள் யாரோ...நான் யாரோ..!

ன் காதலை
நீ வைத்துக் கொண்டு
ஏனடி என்னை
அலைக்கழிக்கிறாய்?

***

எப்படியாவது
சொல்லிவிடத்தான்
எப்போதும்
காத்துக் கிடக்கிறது
உன் மீதான காதல்..!

***

அவள் எப்போதும் இப்படித்தான்
என் கனவுகளில் உலா வருவாள்
கவிதைகளுக்கு எப்போதும் கரு கொடுப்பாள்
உறங்கிக் கொண்டிருக்கையில்
நினைவில்.. சில்மிஷங்கள் செய்து
தூக்கங்களை கலைத்தெறிவாள்..
ஓராயிரம் முறை கண்ணாடி பார்க்கையில்
என் பிம்பம் தாண்டி வந்து நின்று
புத்திக்குள் கல கலவென்று சிரிப்பாள்
ஆமாம்...
அவள் எப்போதும் இப்படித்தான்;
ஆனால்
அன்றாடம் காணும் எங்கள் தினசரிகளில்...
அவள் யாரோ...நான் யாரோ..!

7/25/2013

என் அருமை தமிழ் மொழியே!

நான் பிறந்தபோது நீ என் பக்கமில்லை...
பாதியில் வந்தாய்,
நன்கு பழகினோம்,
உன்னை நன்கு புரிந்து கொண்டேன்,
போகுமிடமெங்கும் கூட வந்தாய்,
என் தோல்விக்கு ஆறுதல் சொன்னாய்,
அடிபட்ட போது முதலில் வந்தாய்,
உன்னையே பேச வைத்தாய்,
உன்னிலயே நினைக்க வைத்தாய்,
என்னை கவிதை எழுத வைத்தாய்,
எப்போதுமே கூட இருந்தாய்,
ஆனால்,
நான் சாகும் போது
நீ என் கூட வந்துவிடாதே!
உன்னால் வாழ்ந்து கொண்டிருப்பவர்
இங்கு எத்தனை பேரோ....?!?!?
- என் அருமை தமிழ் மொழியே!

5/23/2013

உங்கள் மனம்....

இங்கே நிம்மதி கிடைக்கும்

சின்ன விஷயங்களுக்குக்கூடப் பெரிதாய் அலட்டிக் கொள்ளும் பிரச்சினையிலிருந்து மீள மனவியல் நிபுணரை சந்திக்கச் சென்றார் ஒரு மனிதர்.


சிறிது நேரம் கண்களை மூடச் செய்துவிட்டு பெரிய கண்ணாடித் தடுப்புக்கு மறுபுறம் இருந்த பழத்தைக் காண்பித்து


“இது என்ன பழம்” என்றார்.


“சாத்துக்குடி” என்று பதில் வந்தது. கண்ணாடிச் சட்டத்தை அகற்றிவிட்டு


“இப்போது சொல்லுங்கள்” என்றதும் “எலுமிச்சை” என்றார்.


“இடையில் வைக்கப்பட்டிருக்கும் லென்ஸ்தான் உங்கள் மனம். எல்லாவற்றையும் பெரிதாக்கிக் காட்டுகிறது.


பிரச்சினைகளை அவற்றின் சரியான அளவிலேயே சந்தியுங்கள்” என்று அறிவுரை சொன்னார் மருத்துவர்

4/20/2013

முத்தம்முத்தம்
காதலின் ஆன்மா
அன்பின் அடையாளம்
ரசனையின் மிகைப்பாடு
உணர்வின் வெளிப்பாடு
முத்தம்
உதடுகள் குவியும்
நரம்புகள் புடைக்கும்
இதயங்கள் இணையும்
கவலைகள் மறக்கும்
முத்தம்
சிந்தையில்
எச்சம் அமிர்தமாகும்.
முத்தம்
உதடுகள்
சந்திக்கும் வைபவம்.
முத்தம்
மழையில் குளித்தாலும்
தாகம் தீர்க்காத உப்பு நீர்.
முத்தம்
கொடுக்கையில் பரவசம்
பெறுகையில் பேரின்பம்
முத்தம்
தடுத்துப் பார்க்காதீர்
கொடுத்துப் பாருங்கள்
உலகம் உங்கள் கையில்.

4/05/2013

ஆண் மகனே ...முப்பது வயதை கடந்து விட்டது

முன் நெற்றில் முடியும் கொட்டிவிட்டது

செல்லத் தொப்பையும் வந்து விட்டது.


கல்லூரிக் கனவுகளை கலைத்து விட்டு

கணிப்பொறியின் காதலனாய் காவல் பட்டோம். 

காசில்லா விட்டாலும் காதலுக்கு பஞ்சமில்லை

காதல் தோல்விகளும் கொஞ்சமில்லை.


ஓர் இலக்க குரோமொசோம் குளறுபடியால்

அடித்து வரப்பட்ட

ஆணாதிக்க வர்க்கத்தினர்.


இனிய இளமையை

இ.எம்.ஐ-லேயே இழந்து  விட்டு 

பணம் காய்க்கும் எந்திரமாக மாற்றப்பட்டோம்.
பொறுப்பற்ற பொறுக்கிகளா ஆண்கள்?


அப்பாவின் மருத்துவம்,

அம்மாவின் வளையல்,

என ஏதேனும் பொறுப்புகளை சுமக்கும் தியாகிகள்.


நண்பர்களுக்கு  இடையே

நட்பின் அடர்த்தி வேண்டுமானால், 

கூடக் குறைய இருக்கலாம். 

ஆனால்,

கடைசி காசு வரை 

நண்பர்களுக்காகச் செலவிடும் 

மனங்களுக்கு குறைவிருக்காது.


அன்பு நிறைந்த ஆணின் 

நல்மதிப்பை அளவிட 

புகையும், குடியும் மட்டுமே 

அளவுகோல்களாகக்கி விட வேண்டாம். 


ஆயிரம் சொல்லி விளக்கினாலும்
அப்பாவி  ஆண்களுக்கும் உண்டோ  கற்பு!

3/23/2013

தமிழர் வாழப் புறப்பட்டேன்!ஈழம் வேண்டி  புறப்பட்டேன்!
தமிழ் தேசம் அமைக்கப் புறப்பட்டேன்!
இளைஞர்களின்  கைகள் கோர்த்து  புறப்பட்டேன்!
நாடு களத்தில் ஆடப் புறப்பட்டேன்!

தமிழ்  கொடியோன் ,என் தமிழனை ,

பாலகனை கொன்ற ராஜ பக்சேவை
கூண்டில் ஏற்ற  புறப்பட்டேன்!

எட்டுத் திசையும் தமிழ்ச்சாதி
எருமைச் சாதி போலாகிக்
கெட்டுக் கிடந்த நிலைகண்டு
கேடு தொலைக்கப் புறப்பட்டேன்!

வீசு குண்டால் எறிந்தாலும்
வெட்டி உடலும் பிளந்தாலும்
ஆசைக் கொருநாள் போராடி
ஆவி துறக்கப் புறப்பட்டேன்!

வெந்த நெஞ்சில் எழுந்தகனல்
விழியில் சிவப்பு நிறந்தீட்ட
சிந்து பாடி வெங்கொடுமைச்
செருவில் ஆடப் புறப்பட்டேன்!

மானம் இழந்து தலைசாய்ந்து
மாற்றார்க் கடிமைத் தொழில்செய்து
கூனல் விழுந்த தமிழ்வாழ்வின்
கொடுமை தீர்க்கப் புறப்பட்டேன்!

கட்டு நொறுங்கக் கை வீசிக்
களத்தில் ஆடும் வேகத்தில்
கொட்டும் வியர்வைத் துளியோடு
குருதி கொடுக்கப் புறப்பட்டேன்!

வானை இடிக்கும் போர்ப்பறையின்
வைர முழக்கம் வழிகாட்ட
தானை எடுத்துப் புறப்பட்டேன்!
தமிழர் வாழப் புறப்பட்டேன்!

3/21/2013

வன்முறை கொல்வோம் ,வன்முறை கொல்வோம்முதியோர் குடியிருப்பு

மாணவி கற்பழிப்பு
 
சிறுவன் கழுத்தறுப்பு
 
வரதட்சணை பெண்-எரிப்பு

பாமரன் தீக்குளிப்பு
 
வீதியில் துகிலுரிப்பு
 
தண்டவாளம் தகர்த்தெடுப்பு
 
பாலங்கள் வெடிவைப்பு

நல்லோர் சிலையுடைப்பு
 
ஈழத்தில் படையெடுப்பு
 
பெண் சிசு கரு-அழிப்பு
 
ஆபாசப் படமெடுப்பு

ஊழலுக்கு வெண்- உடுப்பு
 
கள்ளக்காதல் அதிகரிப்பு
 
உறுப்புகள் அறுத்தெடுப்பு
 
சீ… என்னடா இந்த மனிதப்பிறப்பு

யாவரும் காதலிப்போம்…
 
யாவரையும் நேசிப்போம்…
 
வன்முறை கொல்வோம்…
 
மனிதம் வெல்வோம்…

3/02/2013

என்தாயைக் குறிக்க.

எதையெதையோ எழுதியவன்
என்னைப் படைத்த
தாய்க்கெனஒரு கவிதை 
எழுதமுனைந்தேன்.

எங்கெங்கோ படித்த
வார்த்தைக் கோர்வைகள்
அனைத்தும் என் கண் முன்னே 

உதிர்ந்திருக்கும்
ஒவ்வொரு எழுத்திலும் 
ஒவ்வொன்றும்  எழுத்தோவியங்கள்.

அனைத்தையும் சேர்த்து 
வார்த்தைகளாக்கினேன்.
எதுவும் பொருத்தமில்லாததாக 
தோன்றியது 
என் தாயைக் குறிக்க.

எனக்கென எரிதழல் சுமந்து
வண்ணநிழல் தந்தவளுக்கு
வார்த்தைச் சுழலிலும்
ஒருவாக்கியம் கிடைக்கவில்லை.

ஒருவேளை
ஆயுதஎழுத்தைப் போல
“தேவதை எழுத்து”
ஒன்று இருந்திருக்குமாயின்
பொருந்திப்போயிருக்கும்
என்தாயைக் குறிக்க.

2/28/2013

இது தான் காதலா

 

 


 

நான் பயணிக்கும் பேருந்தில் 

என் எதிர் இருக்கையில் 
அமர்ந்து 
என்னை  ரசித்தது 
அவள் கண்கள் ...

 

நான் பார்க்கும் போது 

அவளது  புன்னகைத்த 

புன் முறுவல் 

என் இதயத்தில்ஒரு

 விதமான பூரிப்பு (இது தான் காதலா)


2/18/2013

"500" - நன்றிகள் கோடி!!!


வேடிக்கையாகத்தான் எழுத ஆரம்பித்திருந்தேன்..பின்னர் அதுவே ஒரு வாடிக்கை ஆகிவிடும் என்பதறியாமல்!
சிறுவயதில் தம் மகற்கு ,சேமிப்பு பழக்கத்தை கற்று தருவதற்காக ,பெற்றோர்கள் வாங்கித்தரும் உண்டியலைப் போல்தான், என் தமையன் உருவாக்கி தந்தது இந்த வலைத்தளமும்..நீதான் கிறுக்குவியே..அதை இங்கே கிறுக்குடா ..உனக்குன்னு ஒரு பக்கம் இருக்கட்டும்,அதில் உமது எழுத்துகள் சேமிப்பாகட்டும் என்று சொல்லி…
உண்டியலில் ஒவ்வொரு நாளும் பத்து பைசா,ஐம்பது பைசா,ஒரு ரூபாய் என கையில் கிடைத்ததை கொண்டு ரொப்பி,பார்த்து பார்த்து சேமித்து,குலுக்கி பார்த்து மனமகிழ்ந்து,அதன் கனத்தினை கையில் நிறுத்திப் பார்த்து..ஆஹா..நிரம்பிக்கொண்டிருக்கிறது..என பெருமகிழ்வு கொண்டு,பின்னொருநாளில் ,உண்டியல் நிரம்பி இருக்கிறது ..உடைத்துப் பார்ப்போமென,உடைத்து எண்ணிலடங்கா சில்லறைகளை எண்ணிடும் வேளையில் ..நாமா சேர்த்தோம் இவ்வளவு பணத்தை.. என்று மனதில் வருமே ஓர் மட்டற்ற மகிழ்ச்சி.. அதே மகிழ்ச்சிதான் இன்று எம்மை ஆட்க்கொண்டிருக்கிறது..
ஒவ்வொருநாளும் ஒவ்வொன்றாய் கிறுக்கி..நாமா எழுதிவிட்டோம் 500 பதிவுகள் எனுமளுவுக்கு என்னை பிரமிக்க செய்கிறது ..பேரானந்தம் சூழ்கிறது.
நானும்,எழுதுகிறேன் என்பதில் தொடங்கி ,நல்லாத்தான் எழுதுறீங்க..தொடருங்க..என சொல்லிடும் பின்னூடங்களில் மனதை பறிகொடுத்து,வாழ்த்துக்கள் நண்பரே..வளர்க என அன்பர்கள் சொல்லிட கேட்டு,இன்னும் கொஞ்சம் இப்படி இருந்தா நல்லா இருக்கும் என எமை செதுக்கும் சிற்பிகளின் ஆலோசனை பெற்று,இது ரொம்ப மொக்கை என நிராகரிப்போரின் கருத்துகள் ஏற்று,கிறுக்கும் ஆர்வம் என்னில் ஓர் கிறக்கத்தை ஏற்ப்படுத்தி விட்டது.
கிறுக்கிகொண்டிருக்கிறேன்,கிறுக்கினேன்,கிறுக்கி கொண்டே இருப்பேன் எனுமளவுக்கு அன்பர்களின் ஆதரவு என்னை ஆழமாக்கி விட்டது.எழுதும் ஆர்வத்தை அதிகமாக்கி விட்டது.
அன்பர்கள் ஒவ்வொருவரின் பெயராக குறிப்பட்டு எழுதவேண்டுமென்று ஆசை கொண்டேன்…நேரமின்மையால்  எழுத இயலவில்லை..இருந்தாலும்..என்னை பதிவுலக வாழ்விற்கு அறிமுகம் தந்து  தொடர்ந்து பதிவிட எனக்குள் ஒருவித சிந்தனையை வளர்த்த என் அண்ணன் திரு வ.மு.முரளி அவர்களுக்கு என் இதயம்கனிந்த  நன்றி சொல்ல கடமைப் பட்டுள்ளேன்..இந்நன்நாளில்!
500 பதிவுகள் எழுதும் அளவிற்கு என் எழுத்திற்கு உரமிட்ட பதிவுலக நண்பர்களுக்கும்,என் குடும்பத்துக்கும் ,என் இறைவனுக்கும் மிக மிக கோடான கோடி நன்றிகள் ...........இத்துடன் இவர்களுக்கு இதை சமர்ப்பணம் செய்ய உள்ளேன் 

சமர்ப்பணம் என்ன‌ வேண்டி கிடக்கிறது.. இதை தட்டச்சு செய்யும் பொழுது உதிரும் இந்த ரெண்டு சொட்டு கண்ணீர் தான் அதை செய்து விட்டதே!

2/11/2013

இல்லைன்னு சொல்லிட்டேனே

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு. நல்ல மனிதனுக்கு ஒரு சொல்: இல்லை. இருந்தால் நான் உங்களுக்குக் கொடுக்கலாம், கொடுக்காமலே கூட இருக்கலாம்: பிரச்சனை அது இல்லை. இல்லை என்பதுதான் பிரச்னை.

நீங்கள் கடந்த காலத்தில் எனக்கு செய்த நன்மைகளுக்கு மிக்க நன்றி. இனி செய்யப்போகிறவற்றுக்கும் நன்றி. ஆனால் உங்களுக்கு என் பதில் `இல்லை'தான். நீங்கள் எனக்கு நிறைய நன்மைகள் செய்தவராக இருந்தவராக இருப்பின் உங்களுக்கு ஒரு பதில்: என்னடா இவன் நன்றி கெட்டவனாக இருக்கிறானே என்று நினைப்பதற்கு முன் நீங்கள் எனக்கு இத்தனை தீமைகள் செய்திருக்கிறீர்கள் என்று யோசித்துப் பாருங்கள். நினைவில் எதுவும் அகப்படவில்லை என்னிடம் கேளுங்கள்.

உலகில் யாரும் யாருக்கும் பெரிதாக நன்மைகள் அதிகம் செய்துவிட முடியாது. அதை முதலில் புரிந்துகொள்ளுங்கள். இவன் ஒரு தடவை இல்லை என்று சொல்லிவிட்டதால் இவன் நண்பன் என்று என்று முடிவு கட்டிவிடாதீர்கள். இல்லை என்று சொல்லுமுன்பே நான் உங்களுக்கு நண்பன் இல்லைதான்.

நீங்கள் யார், நான் யார் என்று யோசித்துப் பாருங்கள். நம்மைப் போல் இரண்டு பேர் நண்பர்களாக இருந்தால் உலகம் தாங்குமா? மூன்றாவது உலக நாடுகள் இதுவரை பட்டது போதாதா? நம்மால் வேறு இன்னும் படவேண்டுமா? உங்களோடு என்னைப் பார்த்தால் எனக்கு அசிங்கம். என்னோடு உங்களைப் பார்த்தால் உங்களுக்கு அசிங்கம்.

இல்லை என்று சொல்வதால் நான் உங்களை வெறுக்கிறேன் என்று அர்த்தமில்லை. மனதிற்குள் சபித்துக்கொண்டு கொடுப்பதை விட இல்லை என்று சொல்வதையே நீங்கள் விரும்புவீர்கள், . நான் அவ்வளவு மோசம் இல்லை. நான் அதுவரை போவதில்லை. என் எல்லை எனக்கத் தெரியும். பேலன்ஸ் தவறி உத்தமன் ஆகிவிடும் ரகம் இல்லை நான்.

உங்கள் தேவையைத் தற்காலிகமாக மறந்துவிட்டு இல்லை என்பதைப் பற்றி யோசித்துப் பாருங்கள். தேவை உங்களுக்குத்தானே தவிர எனக்கல்ல என்பதையும் உங்கள் பிரச்னைகள் என்னைத் துளி கூட பாதிப்பதில்லை என்பதையும் தயவு செய்து மறக்காதீர்கள்.

இல்லாதவன், இருப்பின் இன்மை என்கிற ஓல் பஜனை எல்லாம் என்னிடம் வேண்டாம். நான் என்ன சொன்னேன்? `இல்லை' என்றுதானே சொன்னேன்? அதற்குப் பிறகு எப்படி இல்லாதவன் பற்றியும் இருப்பின் இன்மை பற்றியும் பேச்சு வர முடியும்? இல்லை என்று சொன்னால் புரிந்துகொள்ள மண்டையில் மசாலா இல்லாதவர்கள் கேட்கவே தகுதி இல்லாதவர்கள். அவர்களுக்கு இல்லை என்ற பதிலே அதிகம். அவர்களிடம் இல்லை என்று சொல்லிக்கொண்டிருப்பதற்கு பதிலாக ஒரு அருப ஓவியத்தை வரைந்து காட்டலாம். அதற்கு `சுயத்தின் எச்சங்கள்' என்பது போன்றதொரு தலைப்பு வைக்கலாம். கேட்டவர்கள் மனம் நிறைந்து போகட்டும்.
நானும் உங்களைப் போன்ற டீசன்ட்டானவன்தான்.  நானும்தான் உங்களைப்போல 'லாஜிக் இடிக்கிறது' என்பதற்கு பதில் `தர்க்க இடிபாடுகளிடையே சிக்கி' என்று சொல்ல விரும்புகிறேன். நானும் கஷ்டப்பட்டு முன்னுக்கு வர முடியாதவன்தான். ஆனால் இதே போலொரு சூழ்நிலையில் நீங்கள் என்னிடம் `இல்லை' என்று சொன்னால் புரிந்து கொள்வேன். என்னவோ நீங்கள்தான் என்னிடம் கையேந்தி நிற்பது போல் நடந்து கொள்ள மாட்டேன்.

கடைசியாக ஒரு விஷயத்தை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அது முதலில் நான் உங்களுக்கு சொன்னதுதான்: இல்லை நான் சொல்வது புரிகிறதா? புரியவில்லை என்றால் அது என் பிரச்சனை இல்லை. இல்லை என்று நிறைய தடவை சொல்லிவிட்டேன். ஒரு விஷயத்தைப் பல தடவை சொன்னால் புரிந்துவிடாது என்பது எனக்குத் தெரியும். ஆனால் புரிந்து கொள்ள மிக எளிமையான ஒரு விஷயத்தைப் பல முறை சொன்னால் இன்னும் தெளிவாகவெல்லாம் புரிந்து விடாது என்பதும் எனக்குத் தெரியும். நான் திரும்பத் திரும்பச் சொல்லக் காரணம், நல்ல மாட்டுக்கு ஒரு சூடு, நல்ல மனிதனுக்கு ஒரு சொல். உங்களுக்கு ஒரு சொல் போதவில்லை. அதனால்தான் இவ்வளவும்.


பார்த்தீர்களா, என்னைத் தவிர உங்களுக்கு எத்தனை பேர் இருக்கிறார்கள்! அவர்களைக் கேட்காமல் என்னிடம் மட்டும் கேட்பது ஏன்? என்பால் உள்ள அன்பினாலா? என்பால் உள்ள அன்பைக் காட்ட உங்களுக்கு இதுதானா சமயம்? அதான் இல்லைன்னு சொல்லிட்டேனே, 

2/09/2013

விஸ்வரூபம்நல்ல சினிமாவை உடனே பார்க்க வேண்டும், அது கொடுக்கும் அனுபவத்தில் மூழ்கி திளைக்க வேண்டும் என என்னும் ரசிகர் கூட்டம் தமிழ்நாட்டில் ரொம்பவே அதிகம்.

அவரின் இந்த புதிய படைப்பு  நிறைய சாதனைகள், கொஞ்சம் சர்ச்சைகள், சந்தேகங்கள் என கலந்து கட்டிய ஒரு பொட்டலமாய் நமக்கு  வழங்கபட்டிருக்கிறது. வெறும் வாயிற்கு அவல் கிடைத்தாலே சந்தோஷப்படுவான் ரசிகன்...  இது உலக தரத்தில் தயாரிக்கப்பட்ட செமத்தியான தீனி. முதல் காட்சியில் இருந்தே அதன் சுவையில் மூழ்க ஆரம்பித்து இறுதி வரைக்கும்  அதே ருசியுடன்  விருந்தை பரிமாறியிருக்கிறார் இயக்குனர் கமல். 

கொஞ்சம் ஹை லெவல் திருடன் போலீஸ் விளையாட்டு.   வில்லன்கள்  கூட்டத்தில் ஒரு உளவாளி கலந்து அவர்களின் சதி திட்டங்களை முறியடிக்கும் கதைதான். ஆனால் அல் கொய்தா, தாலிபான் தீவிரவாதிகள் , நியூயார்க்   என  அதற்க்கு ஹை டெக்  வடிவம் கொடுத்து... அந்த வடிவத்திற்கு உண்டான நியாயமான களங்களை காட்சிகளில்... கூர்மையான வசனங்களில் விவரித்திருப்பதுதான் கமலின் திறமை. 

கதக் நடன கலைஞனாக கமலின் நடிப்பு நிச்சயம் பிரமிப்பான விஷயம்தான்.. முக பாவங்கள்... வார்த்தை பிரயோகங்கள்.... உடல் மொழி.. நடை என எல்லாவற்றிலும் அந்த பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.  ஆனால்.... ஆப்கான் மற்றும் ரா அதிகாரி போர்ஷன்களில் பெரிய தனித்துவம்   என்பதையும் குறிப்பிட  வேண்டும்.    

மிக தரமான ஒளிப்பதிவு மற்றும்  ஒலிப்பதிவு ... சிறப்பான லொக்கேஷன்கள்...நேர்த்தியான  காட்சியமைப்புகள்...  மிக மெச்சூர்டான.. ரசிக்க வைக்கும் வசனங்கள்..  படம் பார்க்கும் போது  ஏன் எதற்கு எப்படி என பல  கேள்விகள் முளைத்துக்கொண்டே  இருக்கின்றன.  இருந்தாலும்   அதை எல்லாம் மறக்க செய்யும் ஒரு மெஸ்மரிஸம்....ஒரு மேஜிக்... படத்தில்   எங்கேயோ ஒளிந்து கொண்டு படம் முழுதும் வியாபித்திருக்கிறது.
என் சிறு மூளைக்கு  எட்டிய வரை.. கமல் இந்த படத்தை நேரடியாக ஆங்கிலத்தில் எடுத்திருக்கலாம். சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட சமரசம் செய்து கொள்ளாமல் இன்னமும் படத்தில் பர்பெக்ஷன் கொண்டு வந்திருக்கலாம். (உதாரணம்.. ஆப்கான் தீவரவாதிகள் தமிழ் பேசுவது...  நம்மூரில் அவர்கள் தமிழ் பேசினாலும்.... "இன்னாபா ஆப்கான்காரன் தமிழ் பேசுறான் என கிண்டலடிப்பார்கள்.. அவர்கள் உருது பேசினாலும்... "என்னப்பா, தமிழ் படத்திலே இப்படி இந்தி பேசுறாங்க" எனவும் நம் மக்கள் வாருவார்கள் ) அதே போல... இரண்டாம் பாகம் இருக்கிறது என்பதற்காய்... நிறைய விஷயங்களுக்கு பதிலே சொல்லாமல் படத்தை முடித்திருப்பதும் ஒரு ஏமாற்றம்      

உண்மையான இஸ்லாமியனும் , இஸ்லாம் மதமும் வன்முறையே ஆதரிப்பது இல்லை. அவர்கள் தாலிபான்கள், அல் கொய்தா அமைப்பினரின் ரத்தம் சிந்தும் போராட்டங்களை வெறுக்கவே செய்கின்றனர். இந்த படமும்   அல் கொய்தாவிற்க்கும் தாலிபான்களுக்கும் எதிரான படம்தான் . இஸ்லாத்திற்கு எதிரானது அல்ல. இஸ்லாம் மதம் பற்றியும்...இந்திய  இஸ்லாமியர் பற்றியும் எந்த கருத்துக்களோ... விமர்சனங்களோ இல்லை.   இதில் வில்லன்களாய் சித்திரிக்கபட்டிருப்பவர்கள் அல்  கொய்தா  அமைப்பினரே தவிர இஸ்லாமிய மதம் அல்ல. இந்த படம் சட்டபூர்வமாய்  பார்ப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டு, படம் பார்த்த பின்னர்,   வெகுஜனம், "இதற்காகவா இத்தனை ஆர்ப்பாட்டம்" என நிச்சயம்  நினைக்கும் .... போராட்டத்தை பற்றி மட்டுமல்ல.... படத்தை பற்றியும் கூட...   

எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும், டெக்னிக்கல் விஷயங்கள், தரமான மேகிங் போன்றவற்றுக்காய் விஸ்வரூபம் தமிழில் தவிர்க்க முடியாத ஒரு முக்கியமான படம் 

2/08/2013

ஜனநாயகம் எவ்வாற வெற்றி பெற முடியும்
ஜனநாயகம் எப்போதுமே தனது வடிவத்தை மாற்றிக்கொண்டு வந்திருக்கிறது. இதுதான் எடுத்த எடுப்பில் நான் கூறவிருக்கும் கருத்தாகும். நாம் ஜனநாயகத்தைப் பற்றிப் பேசுகிறோம். ஆனால் ஜனநாயகம் எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. கிரேக்கர்கள் அத்தகைய ஜனநாயகத்தை பற்றிக் குறிப்பிட்டார்கள். ஆனால் சுண்ணாம்பு, பாலடைக் கட்டியிலிருந்து எவ்வாறு மாறுபடுகிறதோ அவ்வாறே அதீனிய ஜனநாயகம் மாறுபடுகிறது என்பதை எல்லோரும் அறிவர். அத்தகைய ஜனநாயகம் மக்களில் 50 சதவீதத்தை அடிமைகளாகக் கொண்டதாகும். இவ்வாறு அடிமைகளாக இருப்பவர்களுக்கு அரசாங்கத்தில் இடமில்லை. நமது ஜனநாயகம் அதீன ஜனநாயகத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது என்பதில் ஐயமில்லை.

உங்கள் கவனத்துக்கு நான்  கொண்டுவர விரும்பும் இரண்டாவது விஷயம் எந்த ஒரு நாட்டிலும் ஜனநாயகம் ஒரே மாதிரியாக இருப்பதில்லை என்பதாகும். இங்கிலாந்தின் வரலாற்றை எடுத்துக் கொள்ளுங்கள். 1688 ஆம் வருடப் புரட்சிக்கு முன்னர் இருந்த இங்கிலாந்தின் ஜனநாயகமும் 1688ஆம் வருடப் புரட்சிக்கு பின்னர் வந்த இங்கிலாந்தின் ஜனநாயகமும் ஒரே மாதிரியானது என்று எவரும் கூறமுடியாது. இதேபோல் முதலாவது சீர்திருத்த மசோதா சட்டமாக்கப்பட்ட போது 1688க்கும் 1832க்கும் இடையே நிலவிய பிரட்டிஷ் ஜனநாயகமும் 1832ஆம் வருடச் சட்டம் இயற்றப்பட்ட பிறகு நிலவிய ஜனநாயகமும் ஒரே மாதிரியானது என்று யாரும் கூற முடியாது. ஜனநாயகம் தனது வடிவத்தை மாற்றிக்கொண்டே இருக்கிறது.

உங்கள் கவனத்திற்கு நான் கொண்டுவர விரும்பும் மூன்றாவது விஷயம் ஒன்றுள்ளது. ஜனநாயகம் தனது வடிவத்தில் மாறிக் கொண்டிருப்பது மட்டுமின்றி, நோக்கங்களிலும் மாறிய வண்ணம் இருக்கிறது. பண்டைக்கால பிரிட்டிஷ் ஜனநாயகத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த ஜனநாயகத்தின் குறிக்கோள் என்னவாக இருந்தது? மன்னனைக் கட்டுப்படுத்த வேண்டும், மட்டுப்படுத்த வேண்டும், அவனுக்குள்ள தனி அதிகாரங்கள் என இப்போது அழைக்கப்படும் அதிகாரங்களை மன்னன் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும் என்பதே அதன் குறிக்கோளாக இருந்தது. சட்டம் இயற்றும் ஓர் அமைப்பாக நாடாளுமன்றம் இருந்தபோதிலும் "மன்னன் என்ற முறையில் சட்டங்கள் இயற்ற எனக்குத் தனி அதிகாரம் உண்டு. எனவே நான் இயற்றும் சட்டம் செல்லுபடியாகும்" என்று கூறுமளவிற்கு மன்னன் சென்றான். மன்னனின் இவ்வாறான தன் முனைப்பான அதிகாரம்தான் ஜனநாயகம் தோன்றுவதற்குக் கதவு திறந்துவிட்டது.

இன்று ஜனநாயகத்தின் குறிக்கோள் என்ன? மக்களுக்கு நல்வாழ்வு கிட்டச் செய்வதே குறிக்கோளாகும். ஜனநாயகத்தின் குறிக்கோளில் இது அடிப்படையான மாற்றத்தை ஏற்படுத்துகிறது.ஜனநாயகம் என்று கூறும்போது அதற்கு நாம் என்ன பொருள் கொள்கிறோம்? மேலே செல்வதற்கு முன்னர் இது குறித்து நமக்குத் தெள்ளத் தெளிவான புரிஉணர்வு வேண்டும். அரசியல் விஞ்ஞான எழுத்தாளர்கள், தத்துவ முனிவர்கள், சமூகவியலாளர்கள் முதலானோர் ஜனநாயகம் என்பதற்கு விளக்கம் தந்திருப்பது உங்களுக்குத் தெரியும். எனது கருத்தை விளக்குவதற்கு இவற்றில் இரண்டு இம்சங்களை மட்டுமே எடுத்துக்கூற விரும்புகிறேன்.

அரசியல் சாசனம் குறித்து வால்டர் பேகேஹாட் எழுதியுள்ள புகழ்பெற்ற நூலை உங்களில் எவராது படித்திருப்பீர்களா என்பது எனக்குத் தெரியாது. இது ஜனநாயகம் பற்றி ஒரு தெளிவான கருத்தினை வழங்க எடுத்துக்கொண்ட முதல் முயற்சியாகும்.  ஆபிரகாம் லிங்கன் ஜனநாயகத்துக்கு அளிக்கும் விளக்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள். தெற்கத்திய ராஜ்யங்களை வெற்றிகொண்ட பிறகு கெட்டிஸ்பர்கில் நிகழ்த்திய புகழ்பெற்ற சொற்பொழிவில் மக்களால் மக்களைக் கொண்டு நடைபெறும் மக்கள் அரசாங்கம் என்று ஜனநாயகத்துக்கு அவர் விளக்கம் தந்தார்.

ஜனநாயகம் என்பதற்கு மக்கள் என்ன பொருள் கொள்கிறார்கள் என்பதற்கு இன்னும் எத்தனையோ விளக்கங்கள் தரமுடியும். என்னைப் பொறுத்தவரையில் ஜனநாயகம் என்பதற்கு வேறுபட்ட முறையில் பொருள் கொள்கிறேன். "ஜனநாயகம் என்பது இரத்தம் சிந்தாமல் மக்களின் பொருளாதார, சமூக வாழ்க்கையில் புரட்சிகர மாற்றத்தைக் கொண்டுவரும் ஒரு வடிவம் என்பதுதான் ஜனநாயக‌த்து‌க்கு நா‌ன் அ‌ளி‌க்கு‌ம் ‌விள‌க்கமாகு‌ம். இ‌வ்வாறுதா‌ன் ஜனநாயகத்தை நான் காண்கிறேன். ஜனநாயகத்தை நடைமுறைப்படுத்துவோரால், மக்களின் சமூக, பொருளாதார வாழ்க்கையில் அடிப்படையான மாற்றங்களைக் கொண்டு வருவதை ஜனநாயகம் சாத்தியமாக்குமானால், இரத்தம் சிந்தும் முறையைப் பின்பற்றாமல் மக்களும் அந்த மாற்றங்களை ஏற்றுக்கொள்வார்களானால் அதுதான் ஜனநாயகம் என்று கூறுவேன். எது ஜனநாயகம் என்பதை நிர்ணயிப்பதற்கு இதுதான் உண்மையான தேர்வாய்வாகும் உரைகல்லாகும்.

இது கடுமையான சோதனையாக இருக்கவேண்டும். ஒரு பொருளின் தரத்தை தெரிந்துகொள்ள வேண்டுமானால் அதனைக் கடுமையான சோதனைக்கு உட்படுத்த வேண்டும். இத்தகைய ஜனநாயகம் எவ்வாற வெற்றி பெற முடியும்? ஜனநாயகம் எனும் இந்தப் பொருள் குறித்து எத்தனையோ பேர் எழுதி இருக்கின்றனர். ஆனால் ஜனநாயகத்தை வெற்றிபெறச் செய்வதற்கு எத்தகைய நிலைமைகள் தேவை என்பது குறித்து இவர்களில் எவரும் உருப்படியான யோசனைகள் எவற்றையும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் நாம் என்ன செய்ய வேண்டும்? வரலாற்றைப் படிக்க வேண்டும். உலகின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு காலகட்டம் எது என்பதைக் கண்டறிந்து நமது சொந்த முடிவுக்கு வரவேண்டும். 

2/01/2013

வாழவே பிறந்தேன்.

நான் ஏன்

பிறரைப் போல பேச வேண்டும்!

பிறரைப் போல ந(டி)டக்க வேண்டும்!

பிறரைப் போல சிந்திக்க வேண்டும்!

பிறர் போடும் தாளத்திற்கு ஆடுவதில்

எனக்கு உடன்பாடில்லை! - ஏனெனில்

எனக்கென்று தெளிந்த மனமுண்டு!

என் சிந்தனைத் திறனுமுண்டு!

’கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
 

அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து’. – குறள் 130

நான் நானாக  வாழவே

இப்பூமியில் பிறந்தேன்.

1/26/2013

திருப்பூர் புத்தக கண்காட்சி


திருப்பூர்  புத்தக கண்காட்சி வளாகத்திலிருந்து ....

பட்டியல் தயாரித்து வந்து புத்தகங்களை தேடி வாங்கும் பழக்கத்தை, புத்தக சந்தையில் காண முடிகிறது. வெளியூரில்  வசிப்போர் குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி, முகாமிட்டு புத்தகங்களை வாங்கி செல்கின்றனர்.
புத்தக கண்காட்சி அரங்கில்,  லட்சத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில், சுமார் ஒரு லட்சம்  புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன. கண்காட்சிக்கு, தினமும், பல ஆயிரம் பேர் வருகின்றனர். இதில், 50 சதவீதத்துக்கும் குறைவானவர்களே புத்தகங்களை தேடுவதாக, புத்தக விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.
அதிலும், திட்டமிட்டு புத்தகங்களை தேடுவோர் எண்ணிக்கை மிகவும் குறைவு. தேடுவோரில், புத்தகங்களுக்கான பட்டியலை தயாரித்து எடுத்து வந்து, குறிப்பிட்ட புத்தகங்களை வாங்கிச் சென்றவர்களை காண முடிந்தது.
இப்படி பட்டியல் தயாரித்து வந்தவர்களில் ஒருவர்,  இளங்கோவன். அவரிடம் கேட்ட போது, "நான் வேடிக்கை பார்க்க இங்கு வரவில்லை. பொழுது போக்கவும் வரவில்லை. எனக்கு, சில புத்தகங்கள் தேவைப்படுகின்றன. அவற்றைப் பற்றி முன்பே தெரிந்து பட்டியல் வைத்துள்ளேன். கடந்த ஆண்டு முழுவதும் இந்த பட்டியலை தயாரித்தேன்" என்றார்.
மேலும், "இதை வைத்துக்கொண்டு புத்தகத்தை தேடுகிறேன். அதில் கிடைத்தவற்றை வாங்கிக் கொள்கிறேன். இந்த தேடலுடன் புதிய புத்தகங்கள் ஏதாவது வந்துள்ளதா என்பதையும் கவனிக்கிறேன். இந்த ஆண்டு முதல், இந்த நடைமுறையை பின்பற்றி வருகிறேன். இது சுலபமாக இருக்கிறது" என்றார்.
இவர் போல் இல்லாமல், திட்டமிடாமல் வந்து, விரும்பிய புத்தகத்தை வாங்க முடியாமல் செல்பவர்களும் உண்டு. புத்தகங்களைத் தேடி வந்து, வெறுங்கையுடன் திரும்பி சென்றவர்  ஜான்சன். இவர் கூறுகையில், "மிகுந்த ஆர்வத்துடன் புத்தகங்களை தேடி வந்தேன்.
நவீன அறிவியல் சார்ந்த புத்தகங்களை படிப்பதில், எனக்கு விருப்பம் உண்டு. ஆனால், இந்த தலைப்பில் எந்த வகையான புத்தகங்கள் வந்துள்ளன என்பது குறித்து, எனக்கு பெரிய அளவில் தெரியாது. அவற்றை தேடி கண்டு பிடிப்பதிலும் சிரமம் உள்ளது" என்றார்.
மேலும், "புத்தக அட்டையில் உள்ள கருத்து அடிப்படையில், புத்தகங்களை தேர்வு செய்வதால் ஏமாற்றம்தான் மிஞ்சும் என்ற அனுபவம் எனக்கு உள்ளது. இந்த அடிப்படையில், நான் தேடி வந்தவற்றை கண்டுபிடிப்பதில் உள்ள சிரமங்களால், ஏமாற்றமாக உள்ளது" என்றார்.
நவீன விவசாயம், ஜோதிடம், சமையல் போன்ற புத்தகங்களை வாங்கியவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்ததை காண முடிந்தது. விவசாயம் சார்ந்த புத்தகங்களை வாங்கி கொண்டிருந்த அய்யப்பனிடம் கேட்ட போது, "பொதுவாக, எல்லா புத்தகங்களையும் வாசிக்கும் பழக்கம் எனக்கு உண்டு. இப்போது ஆரோக்கிய உணவு சார்ந்த சிந்தனை அதிகரித்து வருகிறது. நஞ்சு கலந்த உணவை சாப்பிடுவதால் தான் நோய்கள் அதிகரித்து வருவதாக கூறுகின்றனர்" என்றார். மேலும், "இது ஒரு வித பயத்தை ஏற்படுத்துகிறது. இதனால், உயிர் வேளாண்மை பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என்ற நோக்கில் இது போன்ற புத்தகங்களைத் தேடுகிறேன்.
 நான் எந்த செயலையும் நடைமுறைப்படுத்த முடியாது என்பது எனக்கு தெரிகிறது. ஆனால், நஞ்சில்லா வேளாண்மை பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள ஆர்வப்பட்டு இவற்றை வாங்குகிறேன்" என்றார்.
வெளிமாநிலங்களில் வசிக்கும் பலர், புத்தகங்களைத் தேடி சந்தைக்கு வந்திருந்தனர். பாபு கூறுகையில், "புத்தகங்கள் வாங்குவதற்கு என, குறிப்பிட்ட தொகையை நான் மாதம் தோறும் சேமிக்கிறேன். அந்த தொகையை மூலம், நான் விரும்பும் புத்தகங்களை வாங்கிக் கொள்கிறேன்.
நான் சமூகவியல் தொடர்பான கல்லூரி ஆசிரியராக பணியாற்றுவதால், அது சார்ந்த அறிவை வளர்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது. கல்லூரி நூலகத்தில் இது தொடர்பான புத்தகங்கள் வந்தாலும், வளர்ச்சி சார்ந்து உலகின் பல்வேறு மூலைகளிலும் நடக்கும் மாற்றங்களை தெரிந்து கொள்ளும் வகையிலான புத்தகங்களைத் தேடி இங்கு வருகிறேன்" என்றார்.


1/17/2013

சம்மதம் சொல்வதற்கில்லை

 

 

 என் முகம் நீ பார்த்ததில்லையே என்றேன்
உன் அகம் பார்த்திறுக்கின்றேனே என்றாய்.

என் குரல் நீ கேட்டதில்லையே என்றேன்.

உன் குணம் தெரிந்திருக்கின்றேனே என்றாய்.

என் நிறம் நீ அறிந்ததில்லையே என்றேன்

உன் நினைவிலேயே அலைகிறேனே என்றாய்.

இறு தியாய்


என் விருப்பத்தை நீ விரும்பவில்லையா என்றாய்

உன் செவி சேர்ந்திட மௌனமே கொண்டுள்ளேன் என்றேன்.

ஆனால்


இம்மௌனம் சம்மதம் சொல்வதற்கில்லை!

உன் காதல் பயணத்தை முடித்திடவே!

1/13/2013

பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

பழையன கழிதலும்

புதியன புகுதலும் நலமேயாம்

வாழையடி வாழையாய் வந்த

நல்லதோர் முதுமொழியாம்

தைமாதமதில் தைதிருநாள் பொங்கலதில்

விடியும் வேளை நாமெழுந்து நீராடி

நற்காலைப் பொழுதினிலே

பொங்கல் விழா தனிப்பெருந்

திருவிழாக்கோலம் பூணுகிறது.

தைப்பொங்கல் திருவிழா என்பது

ஒரு சமய விழா அல்ல!

தமிழரின் பண்பாட்டு விழா!

தமிழரின் தமிழ்ப் புத்தாண்டு

கொண்டாடும் நாள்!

அனைவருக்கும் இனிய

பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

1/12/2013

தேசிய இளைஞர் தினம்150 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் காலை 6 மணி 33 நிமடங்களுக்கு,

அன்றைய கல்கத்தாவில் உதயமான இளைஞர்களின் சூரியன் சுவாமி

விவேகானந்தரின் நினைவாக இந்த நாள் தேசிய இளைஞர்கள் தினமாக

கொண்டாடப் படுகிறது. இன்று அந்தச் சூரியன் மறைந்திருந்தாலும் அவர்

புகழின் வெளிச்சம் மங்கவில்லை. சுவாமி விவேகானந்தர் ஓர் ஒப்பற்ற

இளைய சக்தி. மதத்தைக் கொண்டு மனிதம் வளர்த்தவர் .

உலகத்தை இந்து மதம் நோக்கி இழுத்தவர். மதத்தை மனித வாழ்வுக்கு,

மனிதகுல முன்னேற்றத்திற்குப் பயன்படுத்தியவர். அவரின் கருத்துக்களும்,

கொள்கைகளும் எந்த ஒரு மனிதனையும் செயல் வீரனாக, தன்னம்பிக்கை

உள்ளவனாக மாற்றவல்லவை. ஒரு சிறந்த சீடனுக்கும், தலைவனுக்கும்

மிகச் சிறந்த உதாரணமாக திகழ்ந்தவர். மத உணர்வை தூண்டாமல், மத

கலவரத்தை உண்டாக்காமல் அனைவருக்காகவும் வாழ்ந்தவர். அவர்

ஒட்டுமொத்த இளைஞர்களின் பிரதிநிதியாகவே பார்க்கப் பட்டார்.

அனைத்து இளைஞர்களுக்கும் நல்வழிகாட்டியாகவே வாழ்ந்தார். நமக்கு

முன்பிருந்தவர்கள் செய்த ஓர் நற்செயல் அவர் பிறந்த தினத்தை தேசிய

இளைஞர் தினமாக கொண்டாடுவது. ஆனால் இன்று எத்தனை இடங்களில்

விவேகானந்தர் பிறந்த நாள் கொண்டாடப்படும் என்பது கேள்விக்குறியே.

இன்றுள்ள மதத் தலைவர்களானாலும் சரி அல்லது வேறு எந்தக்

கூட்டத்தின் தலைவர்களானாலும் சரி, இளைஞர்களை அவர் வழி

நடத்தாவிட்டாலும் அவருக்கு எதிரான வழியில் நடத்தாமல் இருந்தாலே

போதும், அதுவே அவருக்கு செய்யும் மரியாதைதான். ஒரு நல்ல சீடன்

தான் நல்ல தலைவனாக முடியும். நமக்கு தெய்வ நம்பிக்கையோ, மத

நம்பிக்கையோ இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவரின் வாழ்வியல்

சிந்தனைகளையும், தன்னம்பிக்கை கருத்துக்களையும் ஏற்றால் ஏற்றம்

உண்டு. நல்ல சீடனாக கற்றுக்கொண்டு, நல்ல தலைவனாக கற்றுக்

கொடுப்போம்.


தேசிய இளைஞர் தின நல் வாழ்த்துக்கள்

1/06/2013

பெண்ணிற்கு


இலக்கணம் வகுத்தவன்

அழுது கொண்டிருக்கிறான் !


பெண்ணையே

தெய்வமென போற்றியவன்

துடித்துக் கொண்டிருக்கிறான் !


பெண்ணையும்

அவளின் அங்கங்களையும்

விழி தராசுகளில் எடைபோட்டு

களவாடப் பார்க்கும்

கள்வர்களின் கைகளில்

எப்போது தீப்பிடிக்கும்?


நடந்தால்

சிரித்தால்

 குனிந்து எதையாவது

எடுத்தால் கூட

போக உணவு கிட்டிய மகிழ்ச்சியில்
ஓர் ஆணினம்.


இந்தியப் பெண்கள்

அறிவில் - அழகில்

வல்லவர்கள் தாம்!

ஆனால்...

நெறிதவறா சிற்பங்கள்!


ஒவ்வொரு பெற்றோரும்

பெண்ணைப் பிரசவித்து

கூடவே

ஒரு நெருப்பு வளையத்தையும்

இட்டே வளர்க்கின்றனர்...


பெண்ணினம்

அடிமை என்பது பழையது !

பெண்ணினம்

போர் வாள் என்பது புதியது !


ஓர் ஆணின்

வாழ்வை விடவும்
பெண்ணின் வாழ்வு

சுமை கூடியது

சுவையானது.

பெண்ணைப் பெறுவதனால்

இனிவரும் சந்ததி

விருத்தியடையும்

முக்தியடையும் என்பது உண்மை.


பெண்ணின்


வயிற்றிலிருந்து வந்து


பெண்ணையே குறிவைக்கும்

மானுடம் இனி சாகும்.


இது ஓர் ஆண் கருவுற்று

பிரசவித்தது போலுணர்ந்தால் மட்டுமே

பெண்ணின் மகத்துவம்

ஆண்மன அடியாழத்திற்குள்

செல்லும்.


பெண்ணின் கற்பு

சிதைக்கப்படுமாயின்

இனிவரும்

பூகம்பம் கூட அவனை
             விழுங்கிவிடும் என்பது திண்ணம்.