தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

12/31/2012முன்னேற்றங்களும் பின்னேற்றங்களும்


வாழ்வின் அடிப்படை தத்துவம்;


நாம் கடந்து வந்த

வாழ்க்கை புத்தகத்தில்,

வருடங்கள் மாதங்கள்

வாரங்கள் நாட்கள்

நிமிடங்கள் நொடிகளென

அனைத்து பக்கங்களை

புரட்டிப் பார்த்தால்,

நமக்கொன்று ஒன்று மட்டும் புரியும்

புத்தாண்டு என்பது

வருங்கால தேதிகளை மாற்றிவிடும்

ஒரு நாள்தான் என்று ;

கடந்து வந்த பாதைகள்

கடக்கவிருக்கும் பாதைகளில்

நமக்கு சந்திக்க போகும்

அனுபவங்கள் யாருக்கும் தெரியாது;

திசை திரும்பிவிட்ட

படகுமேலேரி பயணிக்கும் நம்மை

இந்த புத்தாண்டு

நம் கனவு கரையில் போய் சேர்க்கட்டும்;


மாற்றங்கள் அனைத்தும் பொதுவாயினும்

நம்மில் புதுப்புது மாற்றஙள் தோன்றி

நம் வாழ்வில் இன்பமும் அமைதியும்

என்றும் நிலைத்துவிட

இறைவனிடம் பிரார்த்தித்து

என் புத்தாண்டு வாழ்த்தினை சமர்ப்பிக்கிறேன்

12/30/2012

எனது பார்வையில் 2012

இந்த வருஷம் எப்படி ஓடியது என்று தனிப்பட்ட முறையில் என்னைக் கேட்டால்

மிகவும் மோசம்

ஒன்றே ஒன்று புதிதுபுதிதாகப் புத்தகங்கள் தேடித் தேடி படித்தேன். படிக்கிறேன்.

கம்பராமாயணத்தில் விசேஷ ஈர்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

கொஞ்சமாக நினைவுக் குதிரையை ஓட விட்டுப் பார்த்தும் இணையத்தைக் கொஞ்சம்

துழாவியும் பத்திரிகைத் துறை நண்பரொருவர் கொடுத்த நிகழ்வுப்பட்டியலையும்

தோராயமாக பார்த்துத் தயாரித்த -2012.

1. என் அண்ணன் வயதையொத்த அகிலேஷ் யாதவ் உத்தரப் பிரதேசத்தில் முதல்வராயிருக்கிறார்.

2. மட்டையினால் நாட்டுக்கு விளையாட்டுத் தொண்டாற்றிய சச்சின் டெண்டுல்கர் தேசத்துக்குச் சேவைபுரிய ராஜ்ஜிய சபா எம்பியாக்கப்பட்டார்.

3. நிதித்துறை மந்திரி பதவியிலிருந்து தப்பித்து பிரனாப் முகர்ஜி இந்தியாவின் பதினான்காவது ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்டார். ஆபத்தில்லாத ஃபாரின் டூர் பதவி என்று ப்ரதீபா ’பாட்டி’லால் அடையாளம் கொடுக்கப்பட்ட பொறுப்பான பதவி.

4.மீடியம் பட்ஜெட் சிறு கார் ஓட்டும் முதலாளிகளையும் நசுக்கும் முயற்சியாக டீசலை ஐந்து ரூபாய் வரை ஏற்றினார்கள். ஆறு சிலிண்டர்கள்தான் வருடத்திற்கு என்று கட்டை போட்டார்கள். ஒருவாரத்திற்கு டீசல் கிடைக்காமல் அனைவரையும் வீதிகளில் பேயாய் அலையவிட்டார்கள்.

5. தீபா கங்குலி சீதா பிராட்டியாராக நடித்த ராமாயணத்தில் சிரஞ்சீவி ஹனுமானாக நடித்த தாரா சிங் தனது 83 வயதில் உயிர் நீத்தார். அறுபது எழுபதுகளில் கன்னியரின் உள்ளங்களை கொள்ளை கொண்ட ராஜேஷ் கன்னாவும் இறந்தார்.

6. மனித இனத்தின் ஜெயண்ட் லீப்பாக சந்திரனில் முதன்முதலாகக் காலடி எடுத்து வைத்த நீல் ஆர்ம்ஸ்ட்ராங் பை பாஸ் சர்ஜரியில் ஏற்பட்ட குளறுபடிகளால் இறந்தார்.

7. சிதாரினால் பல உள்ளங்களில் ஜிப்ஸி கிதார் மீட்டிய பண்டிட் ரவி ஷங்கர் 92வது வயதில் மேலுலகம் சென்றார்.


8.ரொம்பவும் அபர செய்திகளாகப் பார்த்தாயிற்று, சுப செய்தியென்றால் நமக்கெல்லாம் அரட்டையடிப்பதற்கும் அவ்வப்போது சில சத்விஷயங்கள் தெரிந்துகொள்வதற்கும் உறவுப் பாலம் அமைத்துக் கொடுத்த மார்க் ஸூகெர்பெர்க் தனது நீண்ட நாள் காதலியைக் கல்யாணம் பண்ணிக்கொண்டார்.


9.பிரேஸில் நாட்டு இருபதுவயது பெண்ணொருத்தி $780,000 டாலருக்கு தனது கற்பை விற்று கலிகாலப் புரட்சி செய்தார்.

10. தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆஞ்சநேயர் விக்கிரஹம் வைத்துக்கொள்ளாமல் பராக் ஒபாமா இரண்டாவது முறையாக மீண்டும் அமெரிக்க ராஜ்ஜியத்தை ஆளும் வாய்ப்பைப் பெற்றார்.

11.ரிக்கி பாண்டிங்கும் சச்சினும் திராவிடும் ”ஆடியது போதும்” என்று இளைஞர்களுக்கு ஒதுங்கி நின்று ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்கள்.

12.யுவராஜ் சிங் அரிதினும் அரிதான ஜெர்ம் செல் கேன்சரை ஜெயித்து மீண்டும் விளையாட ஆரம்பித்துவிட்டார்.

13.பெட்டிங் கள்ளப் பணம் என்று ஆயிரமாயிரம் நொட்டைகள் இருந்தாலும் ஐபிஎல் ஜமாய்க்கிறது. ஷாரூக்கானின் கொக்கத்தா நைட் ரைடர்கள் 2012ம் வருடத்திய பட்டத்தை வென்றது
14. காவல் கோட்டத்திற்காக சு.வெங்கடேசனுக்கு சாகித்ய அகாதமி விருதும், ஜெயகாந்தனுக்கு ரஷிய நாட்டின் உயரிய நட்புறவு விருதும், அசோகமித்திரனுக்கு என்.டி.ஆர் விருதும் கிடைத்தது தமிழ் இலக்கியத்தில் ஏற்பட்ட சுப நிகழ்வுகள்.

15. ஒரு பதினைந்து வயது பையனை “ஒழுங்கா படியேம்ப்பா” என்று சொன்ன குற்றத்திற்காக உமா மஹேஸ்வரி என்கிற ஆசிரியை சென்னை பாரீஸில் கல்விக் கூடத்திலேயே குத்திக் கொலை செய்யப்பட்டார். வன்முறை வரவேற்பறைக்கு வந்ததன் விளைவு.

16. ஒன்பது வருடங்களுப்பிறகு மின் கட்டணத்தை 37% உயர்த்தி தமிழ்நாடு மின்சார வாரியம் மக்களை உயிரோடு கொளுத்தியது. ”கொடுத்தவனே பறித்துக்கொண்டாண்டி” என்று வரலாறு காணாத மின்வெட்டையும் அறிமுகப்படுத்தி ஏற்றிய கட்டணத்தை ஓரளவிற்கு சமன் செய்தது. மின்சாரமின்மையால் தனது சொந்த தொழிலையே மூட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளான ஒரு அபாக்கியசாலியை பேட்டி எடுத்துப் போட்டிருந்தது தினகரன்.

17.அன்று கண்ட மேனிக்கு அழிவில்லாத ஹேமமாலினிக்கு சர்வதேச பெரும்புள்ளி அவார்ட் லண்டனில் வழங்கப்பட்டது. இன்னும் பத்து வருடம் கழித்தும் இது போன்ற அவார்ட் வாங்குமளவிற்கு ஹேமமாலினி திகழ்வார் என்று பரவலாக நம்பப்படுகிறது.


18. மாருதி ஸுஸுகி நிறுவனத்தில் தொழிலாளர்களுக்கிடையே நடந்த கலவரத்தில் மனித வளத் துறை மேலாளர் ஒருவர் கொல்லப்பட்டார். வேலை வாங்கும் தகுதியில் இருப்பவர்களுக்கும் வேலை செய்வதாக பாவ்லா காட்டுபவர்களுக்குமிடையே நடக்கும் போராட்டத்தின் உச்சகட்டம் கொலை என்பது துர்பாக்கியமே. நியாயமான கோரிக்கையுள்ளவர்கள் தர்மமான முறையில் போராடுவார்கள்.


19.ஹிக்ஸ் போஸன் என்கிற கடவுள் துகள் கண்டுபிடிக்கப்பட்டது. கடவுளையே கண்ட மாதிரி அறிவியல் உலகம் கொண்டாடியது.

20. ஆகாஷ் எனும் டேப்லெட்டின் அட்வான்ஸ்டு வெர்ஷனை இந்திய அரசாங்கத்தின் சார்பில் ஜனாதிபதி நாட்டுக்கு அர்பணித்து புண்ணியம் கட்டிக்கொண்டார். முதல் லட்சம் டேப்கள் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கும் பல்கலைக்கழங்களில் படிப்பவர்களுக்கு மட்டும் என்று அறிவித்திருக்கிறார்கள். பார்ப்போம் உரியவர்களை சென்றடைகிறதா என்று.

21.திடீரென்று ஒருநாள் நித்யானந்தா மதுரை ஆதினமாக அதிரடியாகப் பதவியேற்றுக்கொண்டார். இருவரும் சிரித்துக்கொண்டே பேட்டியளித்தார்கள். பலர் செல்லாது என்று போராடினார்கள். முடிவில் மதுரை ஆதினமே நித்தியை ஆதினப் பொறுப்பிலிருந்து நீக்கினார்.

22. இரண்டாம் வகுப்புப் படித்துவந்த ஸ்ருதி என்கிற பள்ளி மாணவி பஸ்ஸிற்குள் இருந்த ஓட்டையில் விழுந்து நசுங்கிச் செத்ததும், மாணவனொருவன் நீச்சல் குளத்தில் பயிற்சியின் போது விழுந்து உயிரிழந்ததும் நிர்வாகத்தினரின் அலட்சிய மனோபாவத்தினை வெளிப்படுத்தியது.

23. கூடங்குளம் அணு மின்சாரத்தை எதிர்த்து இடிந்தகரையில் நூற்றுக்கணக்கானோர் போராட்டம் நடத்தினர். அணு உலை ஆபத்தானதல்ல என்று கூறி போராடியவர்களிடம் அவப்பெயர் சம்பாதித்துக்கொண்டார் அப்துல்கலாம்.

24.ஆங்காங்கே இயற்கைச் சீற்றங்கள் பெருமளவில் இருந்தது. சுமத்ராவில் பூமித்தகடுகள் இன்னமும் சீட் ஆகாமல் நடனமாடிக்கொண்டிருக்கிறது.


25. மாயன் இனத்தவர்கள் காலண்டர் வரைய கல்லில் இடமில்லாமல் போனதால் நிறைய பேர் 2012ல் உலகம் அழிந்துவிடும் என்று ஜல்லியடித்தார்கள். தன்னிடமிருந்த ஒரு லட்ச ரூபாயை ரோடில் சென்றவருக்குக் கொடுத்த ஒரு அநாமதேய அப்பாவியைப் பற்றிய செய்தி வந்தது. வாங்கியவர் திரும்பக் கொடுப்பாரா?

26.ஊழலுக்கெதிராக என்று சொல்லிக்கொண்டு ஆம் ஆத்மி என்கிற அகில இந்திய கட்சியை அண்ணா ஹசாரேவின் டீம் ஆளாக அறியப்பட்ட அர்விந்த கெஜ்ரிவால் தொடங்கினார். ஆம்! கட்சிப் பெயரிலேயே சர்ச்சை ஏற்பட்டது.

27.தமிழக மீனவர்களை சிங்களப் படையினர் கொல்வதும் மத்திய மாநில அரசுகள் வேடிக்கைப் பார்ப்பதும் தொடர்கிறது.

28. வழக்கம் போல இந்த வருடமும் தமிழில் நிறைய யதார்த்த திரைப்படங்களை எடுத்தார்கள். சாட்டை, வழக்கு எண் போன்ற படங்கள் வெற்றியடைந்தன.

29.தில்லியில் ஒரு மாணவியை பாலியல் வன்கலவியினால் சிதைத்தார்கள். உடனே பூதாகாரமாக நாட்டின் எல்லா மூலைகளிலிருந்தும் ரேப்புகள் ஊடகங்களில் வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டன. நடைபெற்ற இதுபோன்ற துக்கச்சம்பத்தினால் கொதித்தெழுந்த பொதுமக்கள் கருட புராணத்தை திருத்தியமைக்குமளவிற்கு அக்குற்றத்திற்கான தண்டனைகளை தங்களது கணினியின் கீபோர்ட் மூலமாக வழங்கினார்கள்.

30. தூக்கு போடும் வரை வெளியே மூச்சுக் காட்டாமல் கப்சிப்பென கஸாப் தூக்கிலடப்பட்டார். அவரது மரணதண்டனையைவிட அரசாங்கத்திற்கு அவரால் ஏற்பட்ட செலவினங்கள் அதிகமாகப் பேசப்பட்டது.

31. விலாடிமிர் புடின் மூன்றாவது முறையாக ரஷிய ஜனாதிபதியாகப் பதவியேற்றார்.

32. இளையராஜா இன்னமும் ஜோராக இசையமைக்கிறார்.

33.மற்றபடி எல்லாவருடமும் நடக்கும் அநியாயங்கள் அவலங்கள் அலட்சியங்கள் அவமானங்கள் அதிகார அடக்குமுறைகள் தாராளமாகவும் லோக க்ஷேமத்திற்கான காரியங்கள் விரல் விட்டு எண்ணும்படியாகவும் இந்த 2012லும் நடந்தது.

எல்லோருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். இந்த 2013ல் பரவலாக நல்ல காரியங்கள் உலகெங்கும் நடந்து எங்கும் சுபச்செய்திகள் பரவ வாழ்த்துகள்.

12/25/2012

உன்னை காதலிக்கிறேன் என்று!


நேற்றைய கனவும்


உன்னால்தான் நிரம்பி வழிந்தது,

வழக்கம் போல நெருக்கமாய்

தூரத்தில்தான் அமர்ந்திருந்தாய்,

வழக்கம் போல காதலை

மெளனத்திற்கு இரையாக

இருவருமே போட்டுக் கொண்டிருந்தோம்!


ஏதேனும் செய்திகளை

உன் விழிகள் எனக்குப் பகிருமா?

என்று உற்று நோக்கினேன்

அது காதலைத் தவிர

வேறொன்றும் பகிரேன் என்று

பிடிவாதம் பிடித்தது...!


என் மெளனத்துக்கு காரணத்தை

நீயும் மெளனத்தால் தேடியது

போலவே நானும் தேடியதில்

குடி கொண்டிருந்த நிசப்தத்தில்

பரவிக் கிடந்த அதிர்வுகளோடு

சப்தங்களை அதிகமாக்கிக்

கொண்டிருந்த நமது இதய துடிப்பும்

அன்னிய தேசத்து எல்லையை

கடந்து செல்லும் அவஸ்தையோடு

தொண்டையை கடக்கும்

அவ்வப்போது நாம் விழுங்கும் உமிழ்நீரும்

சேர்ந்தேதான் காதலை கனப்படுத்தின...!


நான் உன்னை காதலிக்கிறேன்

என்று சொல்லப்போவதில்லை

என்பதைப் போல...

நீயும் சொல்லப்போவது இல்லை

என்பதை உரக்க கட்டியம்

கூறிக் கொண்டிருந்த

மெளனத்தை உடைக்கும் முயற்சியில்

முதலில் எட்டிப் பார்த்த

உனது உதட்டோரப் புன்னகையில்

நான் உடைந்தேதான் போனேன்..!

ஏதாவது சொல் என்றேன்...

போகவா என்றாய்....!

கலைந்து போன கனவில்

நிஜத்தை தொலைத்த வெறுமையோடு

விடியப்போகும் பொய்மையில்

உன்னை சந்திக்கையில்....

இப்போதாவது உன் காதலைச் சொல்லேன்

என்று என் மெளனத்தால்

உன் மெளனம் மோதி

ஒரு கேள்வி கேட்கிறேன்...

நிஜத்தில் நீ மெளனித்தாலும்

பரவாயில்லை,

அடுத்த கனவிலாவது சொல்

நான் உன்னை காதலிக்கிறேன் என்று!

12/20/2012

கும்கிவிமர்சனம் என்பது தனிப்பட்ட பார்வையை பொதுப்பார்வையாக்க முயலும் ஒரு யுத்தி என்பதோடு மட்டுமில்லாமல் சினிமாவை தங்களின் உச்ச கட்ட தொழில்நுட்ப அறிவினை எல்லாம் பயன்படுத்தி பார்க்கும் களமாகவும் ஒரு சிலர் இங்கே நினைக்கிறார்கள்.


மேதாவிகள் உலகம் எப்போதும் உலக தரத்தில் இருக்கும் எல்லா விசயங்களையும் ஒப்பிட்டுப் பார்க்க நினைக்கிறது. துரத்தும் வாழ்க்கையின் ஏதோ ஒரு ஓய்வு தருணத்தில் சினிமாவை பார்க்கச் செல்லும் என்னைப் போன்ற சாமானியர்கள் சினிமாவை சினிமாவாக வாய் பிளந்து பார்த்து விட்டு அதை எடுக்க பிரயாசைப் பட்டிருக்கும் அந்த படக்குழுவினரின் உழைப்பை கண்டு வியக்கவும் செய்கிறோம். மிக மோசமாய் அரைத்த மாவையே அரைத்து பார்வையாளனை ஏமாற்றும் ஒரு சில படங்களைக் கண்டு நாம் அதிருப்தியுற்றாலும், தமிழ் சினிமாவில் வாழ்வியலையும் எதார்த்தத்தையும் பேசும் படங்களை சினிமாவோடு ஒன்றிப்போய் ரசிக்கும் நாங்கள்..., எங்களின் சூப்பர் ஹீரோக்கள் நிகழ்த்தும் அதிரடி சாகசஙகளையும் கை தட்டி விசிலடித்து ரசிப்பதிலும் யாதொரு குறையும் வைப்பதில்லை.

கொம்பன் என்னும் காட்டு யானை ஆதிக்காடு என்னும் ஊரில் இருக்கும் விளை நிலங்களில் அறுவடை செய்வதற்கு முன்பாக வந்து அட்டூழியம் செய்கிறது. மனிதர்களைக் கொன்று விடுகிறது. இந்தக் கொம்பனை விரட்ட காட்டு இலாகா துறை எந்த ஒரு உதவியும் செய்யாமல், தலைமுறை தலைமுறையாய் தங்களின் பழக்க வழக்கங்களை மாற்றாமல் வாழும் பழங்குடியினரை அந்த இடத்தை விட்டு வெளியேறி வேறு இடத்தில் சென்று தங்கிக் கொள்ளுங்கள் என்று நிர்ப்பந்தம் செய்ய, அதை நிராகரித்து விட்டு.. காட்டு யானை கொம்பனை விரட்ட ஒரு கும்கி யானை கொண்டு வர தீர்மானிக்கிறது அந்த ஆதிக்காடு என்னும் கிராமம்.

கும்கி யானைக்கு பதிலாக பொம்மனின் கோயில் யானை ஊருக்குள் சூழ்நிலையால் வந்து விட, பொம்மனுக்கும் ஊர் தலைவரின் மகளான அல்லிக்கும் மலரும் அழகான காதலைத்தான்... இயக்குனர் பிரபு சாலமன் கதையின் கருவாக்கி இருக்கிறார். கதைக்கான களம் அட்டகாசமானது, சமீபத்திய தமிழ் சினிமாவுக்கு மிக, மிக புதியது.

மீன் குஞ்சுக்கு நீச்சல் கற்றுக் கொடுக்க வேண்டியதில்லை என்றாலும் முட்டையிலிருந்து வெளியே வரும் மீன் குஞ்சு முதன் முதலாய் நீரில் அடித்து நீந்தி அங்கும் அங்கும் அனுபவமின்றி அலை பாய்கையில் என்ன ஒரு பதட்டம் இருக்குமோ, அதே பதட்டத்தை விக்ரம் பிரபு கொண்டிருப்பதை நம்மால் உணர முடிகிறது, மற்றபடி... சரியான பாதையில் அவர் பயணிக்கும் பட்சத்தில் எதிர்காலத்தில் அவருக்கான வாய்ப்புகள் பிரகாசமாய் இருக்கும் என்பதில் யாதொரு மாற்றமும் இல்லை.

காதலை மையப்படுத்தி வெளிவரும் திரைப்படங்களில் வரும் கதாநாயகிகளை அந்த திரைப்படத்தை பார்க்கும் அத்தனை பேரும் மானசீகமாக காதலிக்க வேண்டும் என்ற ஒரு நியதியை ஏற்படுத்துவது வெற்றிக்கரமான ஒரு இயக்குனரின் வேலை. இந்த வேலையை கனகச்சிதமாக நிறைவேற்றி இருக்கும் பிரபு சாலமன் சாருக்கு ஒரு " ஓ.. "போட்டே ஆகவேண்டும். கதாநாயகி லட்சுமி மேனனை வைத்துக் கொண்டு படத்தில் அவர் நடத்தி இருப்பது சர்வ நிச்சமயாய் ஒர் அல்லி தர்பார்தான்...!

ஆதிவாசிப் பெண்ணாய் வந்து அதுவும் முதல் படத்திலேயே (சுந்தர பாண்டியன் முன்னாடியே ரிலீஸ் ஆனது வேற விசயம்....) க்ளோசப் ஷாட்களில் எல்லாம் எல்லா விதமான முகபாவங்களையும் நேர்த்தியாய் கொண்டு வரும் லட்சுமி மேனன் அட்டகாசமான தேர்வு..! காதலுக்காய் கோயில் யானையை கும்பி யானையாக்க பொம்மன் பிராயசைப்படும் இடங்களில்....நமக்கே சீட்டில் இருந்து எழுந்து...." பார்கே.....பார்கே...மாணிக்கம் முன்னால போ..." என்று கத்தவேண்டும் என்று தோன்றுகிறது..! காட்டு யானை கொம்பனை கோயில் யானை மாணிக்கம் எப்படி விரட்டப் போகிறது....என்ற ஒரு டென்சனை நமக்குள் ஏற்படுத்தி விட்டு.. கூலாக காடு, மலை, அருவி, சுனை, விளை நிலங்கள் என்று பச்சை பசேலென்று திரைப்படம் நகர்ந்து கொண்டே இருக்கிறது... !

தம்பி ராமையா இந்தப்படத்தில் நகைச்சுவையில் பிரித்து மேய்ந்திருக்கிறார் (நல்ல கவனிங்க...பிரிச்சு மேஞ்சுருக்காரு...). ஆங்காங்கே விமர்சனம் எழுதிய சிலர் தம்பி ராமையாவை ஓவர் டோஸ் என்றெல்லாம் எழுதி இருந்தார்கள்...! அது எந்தமாதிரியான பார்வை என்று தெரியவில்லை...ஆனால்... கதையோடு பொருந்தி வரும் அவரின் பாத்திரமும் அவரின் நகைச்சுவைகளும் மிகப்பிரமாதம்...! இரட்டை அர்த்த வசனங்களை அதிகம் அவர் பேசாமல் சூழலை மையப்படுத்தியே பேசி நம்மை சிரிக்க வைப்பது அழகு.....

மாணிக்கத்திற்கு மதம் பிடித்து விடும் இடத்தில், யாருமே எதிர்பாராமல் கொம்பன் என்ட்ரி...ஆவது கிளாஸ்....!!! கொம்பன், தனது பாகனான பொம்மனை (விக்ரம் பிரபு) அடிப்பதை பொறுக்க முடியாத மாணிக்கம் சீறிப்பாய்ந்து கொம்பனை தாக்க....

இரண்டு யானைகளுக்கும் இடையே நடக்கும் சண்டையே படத்தின் க்ளைமாக்ஸாகிப் போகிறது. கிராபிக்ஸ் காட்சிகளில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம் என்று நிறைய தொழில் நுட்ப புலிகள் கடுமையாய் இயக்குனரை விமர்சித்திருக்கிறார்கள்...

இயன்ற வரையில் கிராபிக்ஸ் காட்சியில் யானைகளின் சண்டையை இயக்குனர் காட்ட முயன்றிருக்கிறார் என்றுதான் நான் சொல்வேன். ஒரு திரைப்படம் பார்க்கும் போது முழுக்க முழுக்க படக்குழுவினரடமே எல்லாவற்றையும் எதிர்பார்க்காமல் கொஞ்சம் நமது கற்பனைக்கும் இடம் கொடுத்து காட்சிகளை விவரித்துப் பார்க்க வேண்டும்....! நான் சொல்வது கொஞ்சம் முரணாகக் கூட உங்களுக்குத் தோன்றலாம்...!

திரையில் ஒரு கதை, களம், காட்சிகள், கதாநாயகி, கதாநாயகன் என்று காட்சிப்படுத்துவது இயக்குனரின் வேலையாகிறது என்றாலும் கும்கி மாதிரி திரைப்படங்களைப் பற்றி தனியே அமர்ந்து யோசித்து, கற்பனையில் ஊறி, ரசிக்க நிறைய விசயங்கள் இருக்கிறது. தகப்பனின் நம்பிக்கையை உடைக்க விரும்பாத அல்லியும், மதம் பிடித்தது உனக்கு இல்லை மாணிக்கம், எனக்குதான் என்று தனது மாமாவையும், நண்பனையும், மாணிக்கம் என்ற யானையையும் கடைசியில் இழந்து புலம்பும் இடத்தில் விக்ரம் பிரபு....நடிப்பில் பவுண்டரி அடித்திருக்கிறார். முதல் படம் என்றாலும் அவருக்கு பின்புலத்தில் அவரது குடும்பமே இருந்திருக்கிறது என்பது கதை தேர்வில் மட்டுமில்லாமல், இசையிலும், பாடல்களிலும் தெளிவாகவே தெரிகிறது.

பாடல்களில் இமான்...பட்டையை கிளப்பி இருக்கிறார் என்று நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.. அல்போன்ஸ் குரலில் நீ எப்போ புள்ள சொல்லப் போற...என்று காதலியின் பின்னாலேயே காதலைச் சொல்ல ஏங்கித் திரியும் யுகபாரதியின் (யுகபாரதிதானே...?!) வரிகளுக்கு இமான் போட்டிருக்கும் ட்யூன் படம் பார்த்து முடிந்த பின்பும் மனதுக்குள் அழுது கொண்டேதான் இருக்கிறது.

இயக்குனருக்குள் பெரும் சோகம் ஏதோ ஒன்று இருக்க வேண்டும் அல்லது வாழ்க்கைப் பற்றிய நிலையாமையை அவர் தெளிவாய் விளங்கி இருக்க வேண்டும். முந்தைய படமான மைனாவிலும் ஒரு மாதிரியான சூழலில் தான் படத்தை முடித்திருப்பார். கும்கியிலும் கூட.. இந்தப் பக்கம் மாணிக்கம் யானை, கும்கி யானையை கொன்று விட்டு தனது எஜமானரைக் காப்பற்றிய திருப்தியில் இறந்து கிடக்க, தம்பி ராமையாவும், விக்ரம் பிரபுவின் நண்பராய் நடித்து இருப்பவரும் இறந்து கிடக்க...

தனது மகளின் காதலை புரிந்து கொண்டாலும் தனது பாரம்பரியம் கெட்டுப் போய்விடுமே என்பதால் இறுக்கமாய் உள்ளுக்குள் அழும் ஊர்த்தலைவரும், அப்பாவின் பேச்சையும் நம்பிக்கையையும் மீற முடியாமல் காதலை உள்ளுக்குள் தேக்கிக் கொண்டு கதறும் லட்சுமி மேனன் ஒரு புறமும்...

தன் மீது ஊர் வைத்திருக்கும் நம்பிக்கையை உடைத்து விடக்கூடது என்ற உணர்வில் தான் இழந்து போன உறவுகளுக்காக அழுது கொண்டு...விக்ரம் பிரபு அந்த கிராமத்தை விட்டும் நடக்க...

எ...பிலிம் பை பிரபு சாலமன் என்று படம் முடிந்து விடுகிறது. கதாநாயகியும் கதாநாயகனும் சேர்ந்திருக்க கூடாதா என்ற ஒரு ஏக்கத்தை நமக்கு கொடுக்க வேண்டும் என்ற டைரக்டரின் எண்ணம் இங்கே மெளனமாய் வெற்றி பெறுகிறது.

தமிழ் சினிமா இயக்குனர்களை வழக்கமான கதைகளை விட்டு நகர்ந்து வெவ்வேறு களம் நோக்கி சிறகடிக்க வைக்க கும்கி போன்ற திரைப்படங்கள் உதவக்கூடும்....!

நன்றி : நண்பரே

12/13/2012

அவள் என்னை காதலிக்கிறாளா..?

அந்த கவிதையின் இறுதியில்


சூசகமாய் காதலைச் சொல்லியிருந்த

வரிகளை அவள் வாசித்துவிட்டு

என்னை காதலிக்கத் துவங்கியிருக்கலாம்;

வெறுக்கத் துவங்கியிருக்கலாம்

மெளனமாக இருக்கலாம்,

கோபமாக இருக்கலாம்,

சிரித்திருக்கலாம்;

புரியாமலேயே விழித்திருக்கலாம்;

எதிர்பார்த்திராமல் அழுதிருக்கலாம்;

மீண்டும் வேறு கவிதைக்காக காத்திருக்கலாம்;

அல்லது....

அந்த வரிகளை சாதாரணமாக

கடந்தும் போயிருக்கலாம்...;

ஆனால்...

நான் அவளுக்காக இன்னொரு

கவிதையை எழுதி விட்டு

மீண்டும் இறுதி வரியில்

அவள் என்னை காதலிக்கிறாளா..?

என்று அறிய முயலும்...

அர்த்தத்தோடு முடிக்க

முயன்று கொண்டிருக்கிறேன்...!