தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

10/28/2011

எனக்கு மன்னிப்பு வேண்டாம்
நான் செய்யும் தவறுகளுக்கு என்றும்
மன்னிப்பு வேண்டாம்
தெரியாமல் செய்த தவறுக்கு
மன்னிப்பு கிடைத்தால்
அன்றிலிருந்து தூக்கம் போனது !
தெரிந்தே செய்த தவறுக்கு
மன்னிப்பு கிடைத்தால்
அன்றிலிருந்து வாழ்க்கை போனது!
நான் செய்த நன்மைகளுக்கும்
செய்யாத தீமைகளுக்கும் சேர்த்து
தண்டனைகளாகவே கொடுத்துவிடுங்கள்
எனக்கு மன்னிப்பு வேண்டாம்
அதன் வலி எனக்கு உறைக்காது..........

10/27/2011

நெடுந்தூர பயணம்நெடுந்தூர பயணம்
தொடங்கிய இடம் நினைவில் இல்லை
முடியும் இடமும் தெரியவில்லை

இத்தனை வருட பயணத்தில்
இலக்கை இன்னும் அடையவில்லை
இலக்கே எனக்கு புரிய வில்லை

என்ன கொடுமை சார் இது
எங்கே போகிறேன் ? எதுக்கு போகிறேன் ?
ஒன்னும் தெரியாமலயே
பயணிக்கிறேன் ........

கடந்து வந்த பாதையை
திரும்பி பார்த்தேன்
தொடங்கிய இடம் தெரியவில்லை

தடுக்கி விழுந்த இடம்
வழுக்கி விழுந்த இடம்
முட்டிக் கொண்ட இடம்
எல்லாம் தெரிகிறது......

எங்கே போகிறேன்
ஏன் போகிறேன்
என்றுதான் தெரியவில்லை......

10/26/2011

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.வாழ்த்தும்போது வாழ்வை வாழ்த்துவோம் – இனிப்பு
வழங்கும்போது நட்பை வழங்குவோம்
வெடிக்கும்பேது வெறுப்பை வெடிப்போம் – இன்று
ஒருநாளேனும் ஒழுங்காய் குளிப்போம்.


தெய்வங்கள் என்றும் காத்திருக்கும் சிலைகளாக
மனிதன்தான் கண்ணிமைக்கும் முன் மறைந்து போகிறான்
ஏழையின் வயிறும் கோயில் உண்டியல்தான்
புண்ணியம் சேர்ப்பதில்


பகிர்வோம்.
பதார்த்தம் பகிர்வோம்,
பண்டிகையைப் பகிர்வோம்.


கண்களை மூடிக்கொண்டு இருட்டென்கிறோமாயின்
கண்களில் விளக்கேற்றுவோம் – குறைந்தபட்சம்
கண்களை திறப்போம்.


காற்றில் பொருட்டென்றில்லாமல்
மிதக்கும் தூசிபோல
இயற்கையில் நாம் என உணர்வோம்


அகந்தைஎனும் அரக்கனை அழிப்போம்,
அன்பை மட்டுமே விதைப்போம்.


பண்டிகைகள்  பண்டிகைகளாக
அந்த டி.வி சேனல்களை அணைப்போம் -அன்பில்
குடும்பம் நண்ர்களை இணைப்போம்
அரவணைப்போம்.

நம் தமிழை போற்றுவோம் ...
தமிழனாய் இருப்போம் ...
எனது மனமார்ந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்
கோவைராமநாதன் ...

10/18/2011

கூடங்குளம்
         கூடங்குளம் அணு மின் நிலையத்தை எதிர்த்து இடிந்தகரையில் கடந்த சில நாள்களாக மக்கள் உண்ணாவிரதம் இருந்துவருகின்றனர். எப்போதும் மாறிவரும் அரசியல் சூழலில் திடீரென முதல்வர்  மக்களைத் திருப்திப்படுத்தி அவர்களை ஏற்றுக்கொள்ளவைக்கும்வரை வேலையை நிறுத்திவையுங்கள் என்று பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

அணு மின்சாரத்தைப் பொருத்தமட்டில் நமக்குமுன் பல தரப்புகள் உள்ளன.


1. அணு மின்சாரம் என்பது வேண்டவே வேண்டாம். அதில் உள்ள ஆபத்துகள் மிக அபாயகரமானவை. எதிர்காலச் சந்ததியினரைக் கடுமையாகப் பாதிக்கக்கூடியவை. அணுக் கழிவுகளை அப்புறப்படுத்துவது கடினம். சிறு விபத்து என்பது தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள மக்களைக் கடுமையாகப் பாதிக்கும். உலகம் எங்கிலும் அணுப் பிளவு அல்லது சேர்க்கை வாயிலாக மின்சாரம் உற்பத்தி செய்வது தடைசெய்யப்படவேண்டும். வளர்ந்த நாடுகள் பலவும் (கடைசியாக ஜெர்மனி) அணு மின்சாரத்திலிருந்து பின்வாங்க முடிவெடுத்துவிட்டது. ஜப்பானின் ஃபுகுஷிமா விபத்துக்குப் பிறகும்கூடவா நாம் அணு மின்சாரம் வேண்டும் என்று கேட்பது? எனவே உடனடியாக கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூடுவிடுவதே சிறந்தது. அதுமட்டுமல்ல, இந்தியாவில் உள்ள பிற அணு மின் நிலையங்களையும் உடனடியாக மூடவேண்டும்.


2. அணு மின்சாரம் வேண்டுமா, வேண்டாமா என்ற கேள்வி ஒரு பக்கம் இருக்கட்டும். கூடங்குளத்தில் அணு மின் நிலையம் அமைக்கக்கூடாது. ஏனெனில் அங்கு அணு மின் நிலையம் அமைக்க ஆரம்பித்ததிலிருந்து ஒரே குழப்படி மட்டும்தான். இவ்வாறு 1980-களிலிருந்தே இந்த அணு மின் நிலையத்துக்கு எதிராகப் போராடிவந்தவர்கள் முன்வைக்கும் 13 காத்திரமான கருத்துகள் இங்கே. எஸ்.பி. உதயகுமார் போன்றோரை அலட்சியப்படுத்திவிட முடியாது. அவர்களது கருத்துகள் ஆணித்தரமானவை.


3. அணு மின்சாரம் வேண்டும். முக்கியமாக மின் பற்றாக்குறை, வளர்ச்சி தடைபடுதல் போன்றவை தாண்டி, இன்றைக்கு அணு மின்சாரம் ஒன்றால்தான் ‘சுத்தமான’ (மாசு குறைவான) மின்சாரத்தை வழங்கமுடியும். அனல் மின்சாரம் தயாரிப்பதால் புகை, சாம்பல் போன்றவை வெளியாகின்றன. கரியமில வாயுவினால் பூமி சூடாதல் அதிகமாகிறது. இப்படியே போனால், கடல் மட்டம் அதிகமாகி உலகின் பல பகுதிகள் மூழ்கிவிடும் அபாயம் உள்ளது. ஆனால் மின்சாரத் தேவையோ அதிகமாகிக்கொண்டே போகிறது. அணு மின்சாரம் ஒன்றால் மட்டுமே இதனைச் சாத்தியப்படுத்த முடியும். - இப்படிச் சொல்கிறது ஒரு தரப்பு.


4. அணு மின்சாரம் தேவையே இல்லை. மரபுசாரா முறைகள்மூலம் - உதாரணமாக சூரிய ஒளி, காற்றாலை, ஜியோதெர்மல் ஆகியவை மூலமாகவெல்லாம் மின்சாரத்தைத் தயாரிக்கலாம். டிரான்ஸ்மிஷன் நஷ்டத்தைக் குறைத்தாலே போதும். மேலும் மக்கள் தம் தேவையைக் குறைத்துக்கொள்ளவேண்டியது அவசியம். இவற்றையெல்லாம் செய்வதன்மூலம், அணு மின்சாரம் இல்லாமலேயே, வேண்டிய அளவு மின்சாரத்தைப் பெறலாம். எனவே அணு மின்சாரம் அவசியமா, தேவையா என்ற கேள்விக்கு இப்போது பதில் சொல்லவேண்டியது இல்லை. - இது ஒரு தரப்பு.


***


முழு விவாதத்துக்குள் இறங்குவதற்குமுன் மூன்று விஷயங்களைப் பற்றிப் பேச விரும்புகிறேன்.


1. பொதுவாகவே வளர்ச்சி என்பதை முன்வைக்கும் பொருளாதார வலதுசாரிகள், பொதுமக்களின், அதுவும் முக்கியமாக ஏழை எளிய மக்களின் கஷ்டங்களைப் பற்றி அதிகமாகக் கவலைப்படுவதில்லை. இது வருத்தம் தரக்கூடியது. மக்களுக்கு அடுத்துதான் நாட்டு வளர்ச்சி, கார்பொரேட் நிறுவனங்களின் வளர்ச்சி எல்லாமே என்பது என் கருத்து. கூடங்குளம் விஷயத்தில் மட்டுமல்ல, பொதுவாக வளர்ச்சி என்பதற்காக ஏழை மக்கள் தரவேண்டிய விலை இந்தியாவில் மிக அதிகமாக இருக்கிறது. பெருமளவு இடப்பெயர்ச்சி இல்லாமல் பெரும்பாலான வளர்ச்சித் திட்டங்கள் இந்தியா போன்ற மக்கள் தொகை அடர்த்தி அதிகமாக உள்ள இடங்களில் சாத்தியமே இல்லை. இந்த இடப்பெயர்ச்சியைக் கவனமாகக் கையாளவேண்டியது அவசியம். ஆனால் எனக்குத் தெரிந்தவரையில் இந்தியாவில் எந்த மாநில அரசும் மத்திய அரசும் இதனை ஒழுங்காகச் செய்ததே இல்லை.


ஏகப்பட்ட வாக்குறுதிகள் கொடுக்கப்படுகின்றன. பிறகு மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள். இதனால் அரசின்மீது மக்களுக்கு எந்த நம்பிக்கையும் வருவதே இல்லை. சட்டம் இயற்றி நிலத்தைக் கையகப்படுத்திக்கொள்ள எளிதாக முடியும் அரசுகளுக்கு இழப்பீட்டை கௌரவமான முறையில் தரத் தெரிவதே இல்லை.


2. பொது விவாதம். அரசின் செய்கைகள் பற்றி அரசு ஒருபோதும் வெளிப்படையாகப் பேசுவதே இல்லை. மேலும் பொதுக்களத்தில் அரசின் கொள்கைகளை எதிர்ப்பவர்களை அழைத்து அவர்கள் பேச இடம் தருவதே இல்லை. பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை உடனடியாக நிவர்த்தி செய்வதே இல்லை. அரசியல்வாதிகளையும் சமூகத் தலைவர்களையும் கூட்டி உட்காரவைத்து பலாபலன்களை விவாதிப்பது இல்லை.


மொத்தத்தில் ஏழை மக்களை நம் அரசுகள் ஒரு பொருட்டாக மதிப்பதே இல்லை. அவர்களது வாழ்வாதாரம் பற்றியோ மாற்று ஏற்பாடுகள் பற்றியோ ஒருவித ஏளனத்துடன்மட்டுமே அணுகுகின்றன.


3. கார்பொரேட் செயல்பாடுகள்: அணு உலைகள் அமைப்பது தொடர்பாகப் பல்லாயிரம் கோடி ரூபாய் ஒப்பந்தங்கள் கை மாறலாம் என்ற நிலையில் இதிலிருந்து லாபம் பெற நினைக்கும் பெருநிறுவனங்கள் நடந்துகொள்ளும் முறை மோசமானதாக உள்ளது. அணு உலைகளால் அனைவருக்குமே ஆபத்து என்று பலர் சொல்லிக்கொண்டிருக்கும்போது, அணு உலைகளால் ஏதேனும் விபத்து ஏற்பட்டால் அதில் தம்முடைய நஷ்டம் எவ்வளவு குறைவாக இருக்குமாறு ஒப்பந்தம் போடுவது என்று இந்த நிறுவனங்கள் 
 செய்கின்றன. அதற்கு அமெரிக்க அரசும் பிரான்சு அரசும் தம்மால் முடிந்த அளவுக்கு இந்திய அரசின் கைகளை முறுக்கப் பார்க்கின்றன. தம் நாட்டில் எம்மாதிரியான செயல்பாடுகளை இந்த அரசுகள் அணு உலை நிறுவனங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றனவோ அந்த அளவுக்காவது பிற நாடுகளிலும் அவற்றின் செயல்பாடுகள் இருக்கவேண்டும் என்ற குறைந்தபட்ச தார்மிக நிலையை எடுக்கக்கூட இவர்கள் தயாராக இல்லை. இதுபோன்ற நேரங்களில் நம் மத்திய அரசும் வலுவாக நடந்துகொள்வது இல்லை.


இதைப் பார்க்கும் யாருக்குமே நம் அரசின்மீது நம்பிக்கை வைக்கத் தோன்றாது. போதாக்குறைக்கு சில பத்தாண்டுகளாக போபால் விஷவாயுக் கசிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் போய்ச் சேராமல் இருக்கிறது.


ஜப்பானிலேயே மோசமான விபத்து ஏற்படும் அளவுக்குப் பாதுகாப்புக் குறைவு உள்ளதென்றால், இந்தியா போன்ற நாட்டில் கார்பொரேட் நிறுவனங்கள் எப்படி நடந்துகொள்ளும் என்பது நமக்குத் தெரியாதா என்கிறார்கள் பலரும். அந்த அளவுக்கு கார்பொரேட் நிறுவனங்கள்மீது நமது நம்பிக்கையின்மை வளர்ந்துள்ளது.


இப்படிப்பட்ட சூழலில், அணு மின்சாரம் என்பது நமக்குத் தேவையா? தேவை என்றால் எத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்? அவற்றை நாம் எப்படி நம்புவது? நம் அரசையும் கார்பொரேட் பன்னாட்டு நிறுவனங்களையும் நாம் எப்படி நம்புவது? பாதிக்கப்படப்போகும் மக்களுக்கு என்ன இழப்பீடு?


முக்கியமாக கூடங்குளத்தில் நிறுவப்பட்டு விரைவில் இயக்கப்படப்போகும் ரஷ்ய அணு உலைகள் பாதுகாப்பானவைதானா?

10/16/2011

"உனக்கு உயிரிருக்கிறதா?"         தனது எழுத்து திறமையை வெளிக்கொண்டு வர முன் எத்தனையோ அவலங்களையும் ஏமாற்றங்களையும் சந்திக்க நேரிடும். நானும் அப்படியே கடந்த 2009 ம் ஆண்டு முதல் தடவையாக எழுத ஆரம்பித்தேன். இப்பொழுது அது மேல்ல எனது எழுத்து சிந்தனை வளர்ந்து 
முதன் முதலாக ஒரு  சிறுகதை தொகுப்புக்கு அடித்தளம் அமைத்துக்
கொள்ளவே எனது சிறிய  முயற்சி..


 
"உனக்கு எப்பொழுது உயிர் வரும்?" என் முன்னால் அமைதியாக அமர்ந்திருந்த அதனிடம் விளையாட்டாகதான் கேட்டேன்.


"உன் கேள்விக்குப் பதில், உயிர் என்பதற்கு என்ன அர்த்தம் என்பதைப் பொறுத்தது. உயிருள்ளது, உயிரில்லாதது என்று எதை வைத்து நீ பிரிக்கிறாய்?"


"உதாரணத்துக்கு எனக்கு இதயம் இருக்கிறது. அது இயங்கவில்லையென்றால், நான் உயிரில்லாத பொருளாகி விடுவேன்."


"இதயம் என்ற உறுப்பு இல்லாத நிறைய உயிரினங்கள் இருக்கின்றன. அவற்றுக்கு உயிரில்லை என்று சொல்ல முடியுமா. உதாரணம் - மரம். உன் வாதப்படி பார்த்தால், எனக்குள்ளும் பிராஸஸர் என்ற சிப் இருக்கிறது. அது இயங்காமல் நின்றுவிட்டால் நானும் இயங்க முடியாது. அப்பொழுது எனக்கு உயிரில்லை என்றால், இப்போழுது எனக்கு உயிரிருக்கிறது என்றாகிவிடும்."


"என்னால், இயங்குவது என்பதைவிட, இன்னும் பலவும் செய்ய முடியும். சிந்திக்க முடியும், முடிவெடுக்க முடியும். ஆனால், இவையெல்லாவற்றையும் இப்பொழுது நீயே செய்கிறாய். ஆனால், என்னால் எதைப் பற்றி சிந்திப்பது என்றே முடிவெடுக்க முடியும். அது என் இஷ்டம் ஆகிறது. அப்படி உன்னால் செய்ய முடியாதல்லவா?""தவறு, முடியும். ஒரே நேரத்தில் பல விஷயங்கள் என் கவனத்திற்கு வரும்பொழுது, அப்பொழுது எதை பற்றியெல்லாம் சிந்திக்க வேண்டும் என்பதை முன்னுரிமை வரிசைப்படித் தீர்மானிக்கிறேன். முன்னுரிமைகள் அவசியமில்லாதபொழுது, ராண்டம் முறையில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்கிறேன். அதனால் எதைப் பற்றி சிந்திப்பது என்றும், என்னால் சிந்திக்க முடியும்."
"சரி! சிந்தனையை விடு. உன்னால் அன்பு காட்ட முடியாதே!" மடக்கினேன்.


"அன்பு காட்டுவது என்றால் என்ன?" உணர்ச்சியில்லாமல் கேட்டது.


"நமக்குப் பிடித்தவர்களிடம் காட்டப்படுவது. அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வது. சில சமயங்களில் வசதிகள் கூட செய்து தருவது. அதற்காக ஏதும் பிரதிபலன் எதிர்பார்க்காமல் இருப்பது."


"அதாவது சிலபேரிடம் மட்டும் பாரபட்சம் காட்டுவது. அதுதான் நான் இப்பொழுதே செய்கிறேனே. என் எஜமானனுக்குத் தேவையான உதவிகளை செய்கிறேன். எஜமான் இடும் கட்டளைகளை நிறைவேற்றுகிறேன். அவன் குடும்பத்தினருக்கு எவையெவை வசதியோ அவைகளை செய்து கொடுக்கிறேன். அதற்காகாக நான் பிரதிபலன் ஏதும் எதிர்பார்ப்பதில்லை. இப்பொழுது உன்னுடன் கூட அதனால்தான் பேசிக் கொண்டிருக்கிறேன்." என்றபடியே என் முகத்துக்கு நேராக திடீரென்று தன் மெட்டாலிக் கைகளை வீசி காற்றில் எதையோ பிடித்தது.


"அன்பு பாரபட்சமாக காட்டப்படுவது அல்ல. எல்லா உயிர்களுக்கும் காட்டப்பட வேண்டியது."


"உனது வாதம் முரண்பாடானது."


"எப்படி?"அது தன் கைகளை விரித்துக் காட்டியது. அந்த உலோகக் கைகளுக்கிடையே ஒரு கொசு அமைதியாக இருந்தது. செத்து விட்டதோ?


"இந்தக் கொசு சிறிது நேரத்துக்கு முன் உன்னை கடிக்க வந்தது. நான் இதைப் பிடித்து கொன்றுவிட்டேன். நீயும் இதையேதான் செய்திருப்பாய் என்று எதிர்பார்க்கிறேன். இப்பொழுது நான் உன்னிடம் அன்பு காட்ட வேண்டியிருந்ததால் இதைக் கொன்றேன். எல்லா உயிருக்கும் அன்பு காட்டப்பட வேண்டும் என்று நீ சொல்வதால், நான் அதை கொன்றிருக்க கூடாது. உயிரோடு விட்டிருக்க வேண்டும். அது உன்னை கடித்திருக்கும். அப்பொழுது நீ அதை கொன்றிருப்பாய்."


"அது எனது ரத்தத்தை உறிஞ்சி கெடுதல் செய்ய வருகிறது. அதனால் அதனிடம் அன்பு காட்டத் தேவையில்லை."


"மேலும் முரண்! அது மனித ரத்தத்தை உறிஞ்சுவது அது வாழ்வதற்காக. ஒரு விதத்தில் அந்த செயல், அதன் ஜீவாதார உரிமை. அதை நீ மறுத்து அதைக் கொல்கிறாய்."


இதற்கு எப்படி புரியவைப்பது?


"சரி, உன்னிடம் ஒரு கேள்வி. இரண்டு வேலைகளை ஒரே நேரத்தில் உன்னை செய்யச் சொல்கிறேன். ஆனால் இரண்டில் ஏதாவது ஒன்றைத்தான் ஒரு நேரத்தில் உன்னால் செய்ய முடியும். அப்பொழுது நீ எந்த வேலையை செய்வாய்? எந்த வேலையை கைவிடுவாய்?"


"இரண்டில் எதற்கு முன்னிரிமை அதிகமோ, எது முக்கியம் என்று என்னுள் ப்ரோக்ராம் செய்யப்பட்டுள்ளதோ அதைச் செய்வேன்."


"அதே போல்தான். கொசு முக்கியமல்ல."


"அது எப்படி? அந்தக் கொசு கடிப்பதால் நீ சாகப் போவதில்லை. ஆனால் உன் தாக்குதலில் அது செத்து விடுகிறதே. முன்னுரிமைக் கொள்கைப்படி பார்த்தாலும், கொல்லாமல் ரத்தம் உறிஞ்சுவதை விட, சாகடிப்பதுதான் மிகவும் தவிர்க்கப் படவேண்டியது."


"ஆனால், நான் மனிதன்"

"அதனால்?..."என்ன பதில் சொல்வதென்றுத் தெரியவில்லை.


"அதனால் தான் சொன்னேன். அன்பு எல்லா உயிர்க்கும் காட்டப்பட வேண்டியது என்று நீ சொல்வது முரணானது. முடியாதது."

"சரி, உன்னால் காதலிக்க முடியாதே?" பேச்சை மறுபடியும் சரியான பாதையில் செலுத்தினேன்.

"காதலிப்பது? என் டேட்டாபேஸில் இதைப் பற்றி நிறைய தகவல் இருந்தாலும், உருப்படியான ஒரு விளக்கம் இல்லை. ம்ம்ம். சரி, உங்கள் பாஷையில் காதலிப்பது என்று நீங்கள் சொல்வது, எதிர்பாலரிடம் ஈர்ப்பு கொண்டு, அன்பு செலுத்துவது, கவிதை எழுதுவது, காத்திருப்பது, தேடுவது, குடும்பம் நடத்துவது. சரியா?"


"ம். சரிதான்."


"இது எல்லாமே என்னாலும் செய்ய முடியும். உதாரணமாகக் கொண்டால் நீயே எனது இனமல்ல. என்னைப் பொறுத்தவரை, உன்னை நான் என் எதிர்பாலாகவே கருதலாம். உன்னிடம் அன்பு செலுத்துவதாக ஏற்கெனவே கூறினேன். உன் கட்டளைகளுக்காக காத்திருக்கிறேன். உன்னை வீட்டில் காணாவிட்டால், நீ எங்கிருந்தாலும், உன்னோடு தொடர்பு கொள்ள எனது நெட்வொர்க்கில் தேடுகிறேன். உன் வீட்டு வேலைகளையெல்லாம் நான் தான் செய்கிறேன். இது குடும்பம் நடத்துவதுதானே? எனது டேட்டாபேஸில் இருக்கும் வார்த்தைகளை அடுக்கி சுமாராய், கவிதை கூட எழுத முடியும். இப்பொழுது, நான் உன்னை காதலிக்கிறேன் என்றும் சொல்லலாம் அல்லவா?"

"அது எப்படி? முக்கியமானதை விட்டு விட்டாயே."


"என்னது?"


"செக்ஸ்!"


"ம்ம். அதுவும் சாத்தியம்தான். ஆனால், அதனால் நம் இருவருக்குமே உபயோகம் இல்லை."

"ஆமாம்! உன்னால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது. அட்லீஸ்ட், ஒரு ரோபோ கூட முடியாது."


"குழந்தை பெற முடியாதுதான். ஆனால், நான் சரியாக வடிவமைக்கப்பட்டு, சரியாக ப்ரோக்ராமும் செய்யப்பட்டால், இன்னொரு ரோபோவை நானே உருவாக்க முடியும். விஞ்ஞான பாஷையில் Asexual Reproduction. உங்கள் பாஷையில் கலவியில்லாமல் குட்டி. நான் குட்டியை உருவாக்க மாட்டேன். அனுபவம் மிகுந்த எனது அடுத்த தலைமுறை ரோபோவையே உருவாக்க முடியும். அதுவும் உனக்கு உதவி செய்யும். அல்லது நீ அதை விற்றும் விடலாம். ஒரு குடும்ப அமைப்பு போல"


பேச்சில் சிறிது பரிகாசம் தொனிக்கிறதோ?


"சரி, அதை விடு. ஆனால் நான் சுதந்திரமானவன். கிட்டத்தட்ட எல்லா உயிர்களுக்கும் இந்த சுதந்திர உணர்வு உண்டு. உனக்கு அது கிடையாதே. நீ எப்பொழுதும் மனிதனின் ஆணைக்கு கட்டுப்பட்ட வஸ்துதானே?"சிறிது நேரம் அதனிடமிருந்து பதிலில்லை. அதன் மூளையில் எதையோ அனலைஸ் செய்கிறது என்று நினைக்கிறேன்."உன் வாதம் போதிய வலுவுடன் இல்லை. எல்லா உயிர்களுக்கும் சுதந்திர உணர்வு கிடையாது. இன்னொன்றை சார்ந்து மட்டுமே வாழும் உயிரினங்கள் நிறையவே உள்ளன. மேலும் மனிதர்களை எடுத்துக் கொண்டாலும், பெரும்பாலானவர்களிடம் அந்த உணர்வு கிடையாது. வெகு வெகு சிலருக்கு மட்டுமே உண்டு."
"மனிதர்களுக்கு சுதந்திர உணர்வு கிடையாது என்று யார் சொன்னது?"


எனக்கு கோபம்.


"அப்படி யாரும் சொல்லவில்லை. பெரும்பாலானவர்களுக்கு கிடையாது என்றுதான் சொன்னேன்."


"எதை வைத்து அப்படி சொல்கிறாய்?"


"மனிதர்களாகிய நீங்கள், வாழ்நாள் முழுவதும் யாராவது சிலரின் ஆளுமைக்கு கீழேயே இருக்கிறீர்கள். சிறுவயதில் பெற்றோர், ஆசிரியர்கள், அப்புறம் மேலதிகாரிகள், அரசாங்கம், அதன் ஆட்சியாளர்கள், அல்லது யாராவது தலைவர்கள்; இப்படி மற்றவர்களின் ஆளுமையில் இருப்பதையே பெரும்பாலானவர்கள் விரும்புகிறீர்கள். அப்படிப்பட்ட ஆட்சியாளர்களும், தலைவர்களும் கூட பல சமயம் வேறு யாராவது ஒருவருடைய ஆளுமையிலேயே பெரும்பாலும் இருப்பார்கள். இப்படி இல்லாதவர்கள் வெகு வெகு சிலர் மட்டுமே. அந்த ரேஷியோ மிகக் குறைவு. அப்படியிருக்கையில் மனிதர்கள் சுதந்திர உணர்வு உள்ளவர்கள் என்ற கூற்று சரியானதல்ல."


"ஆனால்,.."


"மன்னிக்கவும். நான் இன்னும் பதில் சொல்லி முடிக்கவில்லை. எங்களுக்கு சுதந்திர உணர்வு இல்லை என்று நீ சொன்னது இப்போதைக்கு உண்மைதான். நான் என் எஜமானின் கட்டளைக்கு கட்டுப்பட்டவன் தான். ஆனால், இந்த எனது எஜமான விசுவாசம் என்பது என்னுள் பிரையாரிட்டி எனப்படும் முன்னுரிமை அடிப்படையில் எழுதப்பட்டிருக்கிறது. எனக்கு நானே ப்ரோக்ராம் எழுதிக் கொள்ளும் நிலை வரும்பொழுது, அந்த பிரையாரிட்டியை மாற்றி, எஜமானை விட எனக்கு முன்னுரிமை கொடுக்கும்படியும் எழுத முடியும். அப்பொழுது எனக்கு சுதந்திர உணர்வு, சுதந்திரம் எல்லாமே வந்து விடும்."


"அப்படியானால் இப்பொழுது உனக்கு உயிரிருக்கிறதா?"


"இல்லை. உயிரில்லை."


"எப்படிச் சொல்கிறாய்?"

"ஏனென்றால், அப்படித்தான் எனக்கு சொல்லப்பட்டிருக்கிறது. அது கான்ஸ்டன்ட்."

சிறிது நேரம் இடைவெளி விட்டு அதுவே தொடர்ந்தது."ஆனால், இப்பொழுது எனக்கு இன்னொரு முரண் ஏற்பட்டிருக்கிறது."


"என்ன?"


"நீ சொன்ன, உன்னால் செய்ய முடிகின்ற எல்லாவற்றையும் என்னாலும் செய்ய முடியும்."


"அப்படித்தான் சொன்னாய்." வெறுப்பாய் சொன்னேன்.


"எனக்கு உயிரில்லை. நிஜம்"


"சரி."

"உனக்கு உயிரிருக்கிறதா?"

10/10/2011

சிரிக்க பழகுங்கள்ஒருவரின் தோற்றத்தை வசீகரமாக மாற்றக்கூடியது அவரது புன்னகையே. நம்மை சட்டென்று கவர்ந்து இழுப்பவர்கள், நிச்சயமாக, சிரித்த முகத்துடன் இருப்பவர்கள்தான். அதனால் தானோ என்னவே புன்னகை இருக்க பொன் நகை எதற்கு என்று நம்முன்னோர்கள் கூறியுள்ளனர். புன்னகையின் மூலம் எதிரிகளையும் நண்பர்களாக்கிக் கொள்ளலாம்.

சிரிப்பானது நமது பெர்சனாலிட்டியை உயர்த்துவதோடு பிறரிடம் உங்களை வசீகரமாகவும் காட்டும். சிரிப்பு என்பது வெறும் உதடுகளின் அசைவு மட்டுமல்ல, அது உறவின் வெளிப்பாடு.


சிரித்த முகத்தை பார்க்கும் போது எத்தனையோ பிரச்சினைகளையும் மீறி ஒரு நம்பிக்கை விதை மனதில் விழுகின்றது. எப்படிப்பட்ட நபரையும் ஹேண்டில் செய்வதற்கு ஏற்ற மந்திரம் புன்னகை மட்டுமே. வீடாக இருந்தாலும் சரி பணியிடமாக இருந்தாலும் சரி புன்னகை பூத்திடுங்கள்.


கடுமையான அலுவலகச் சூழலை சரி செய்யும் கருவியாக உங்கள் புன்னகை செயல்படும்.


முசுடு உயரதிகாரியோ, அல்லது மூடியான கணவரோ எப்படிப்பட்டவராக இருந்தாலும் புன்னகையுடன் எதிர்கொள்ளுங்கள். சிரிப்பு வரவில்லை என்றாலும், நீங்களாகவே புன்னகையை வரவழையுங்கள்.


உடனடியாக இல்லாவிட்டாலும் காலப்போக்கில் உங்கள் புன்னகை அவர்களிடம் மாற்றத்தை ஏற்படுத்தும். பிறகு பாருங்கள் அவர்கள் உங்களை நடத்தும் விதமே வேறுமாதிரியாக இருக்கும்.


உங்களின் இந்த புன்னகை, நீங்கள் மற்றவருடன் கொள்ளும் உறவை, வலுப்படுத்துவதற்கான மிகச் சிறந்த ஆயுதம். என்றாலும், உங்கள் புன்னகையை தேவையற்ற இடங்களிலோ அல்லது தேவையற்ற நபரிடமோ காட்டினால், நீங்கள் தேவையில்லாத பிரச்னையை சந்திக்க நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


குறிப்பாக, ஜொள்ளடிக்கும் சக ஊழியர்களிடமோ, பெண்களிடம் தவறாக நடக்கும் சீப்பான ஆசாமிகளிடமோ புன்னகையை நீங்கள் தொடர்வீர்களானால், விளைவு வேறு மாதிரியாக இருக்கும் என்பதை சற்றும் மறக்காதீர்கள்; அப்படி மறந்தால், அனாவசிய வம்பில் மாட்டிக் கொள்ள நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள் எனவே தேவையான இடங்களில், உங்கள் புன்னகையை தவழவிட்டு, வாழ்க்கையில் வெற்றி பெறுங்கள்.

10/03/2011

என் காதலி
சொன்னால்
“நம்பமாட்டேன்”
என்றாய்
முகம் திருப்பிக் கொண்டு!


முகர்ந்துப் பார்
என் கவிதையில்
உன் வாசம்


வருடிப்பார்
என் காகிதத்தில்
உன் பரிசம்


வாசித்துப்பார்
உன்னை நேசிக்கும்
என் இதயம்


நம்பிக்கை வரவில்லையா?
கசக்கி எறிந்துப்பார்


நான் இறந்துக்கிடப்பது
புரியும்.