தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

8/06/2010

மானிட உலகில் கவலை இல்லையா ?

             உலகில் கவலை இல்லாத மனிதர்கள் என்று யாரேனும் இருக்கிறார்கள்.
அவரவர்களின் வயதுக்கு தகுந்து, அவரவர்களின் வசதி, வாய்ப்புக்கு தகுந்து சிறியதாகவோ அல்லது பெரியதாகவோ கவலைகள் உள்ளன. கவலைகளின் இன்னொரு பக்கத்தை பிரச்சனைகள் என்று சொல்லலாமா... அல்லது எல்லா கவலைகளும், பிரச்சனை என்கிற விதையில் இருந்து தான் முளைக்கிறது என்று சொல்லலாம்மா...


எது எப்படி என்றாலும்- கவலைகள் இன்றி மனிதர்கள் இல்லை. கவலைகள் அல்லது பிரச்சனைகள் இரண்டு வகை படுகின்றன. ஒன்று அவரவர்களுக்கு இயற்கையாக ஏற்படுவது. இதை நாம் ஏற்று கொண்டு தான், சகித்து கொண்டு தான் ஆக வேண்டும். மற்றொன்று பிறரால் நமக்கு ஏற்படுவது அல்லது ஏற்படுத்தப்படுவது. "பிறரின் வம்பு தும்புக்கு போகாதவனுக்கும்" பிரச்சனைகள் ஏற்படுகின்றன. முற்றும் துறந்தவனுக்கும் கவலைகள் இருக்கவே செய்கின்றன.

மனித நாகரீகம் வளர வளர கவலைகளுக்கான அளவுகளும் அதிகரித்து கொண்டு இருப்பதாகவே தோன்றுகிறது. பயம், சில நேரம் கவலையாக வடிவம் எடுக்கிறது. தாயின் வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையும், பூமியின் வயிற்றுக்குள் இருக்கும் பிணமும் தான் கவலையற்றவர்கள் என்று சொல்லலாம் என்று நினைத்தேன். ஆனால் அதுவும் தவறாகபடுகிறது. வயிற்றுக்குள் இருக்கும் குழந்தைக்காக தாய் கவலைப்படுகிறாள். குழந்தைக்கும் சேர்த்து தாய் கவலைப்படுகிறாள். இறந்து போனவர், இறந்து போய் தன் கவலைகளை மறந்தாலும், பிரச்சனை இல்லாமல் அவர் போய் இருந்தால் தான், இருப்பவர்களுக்கு கவலை இல்லை... இல்லையேல் இல்லாதவர்க்கும் சேர்த்து இருப்பவர்கள் கவலைப்பட வேண்டியது தான்.


பள்ளிக்கு செல்ல துவங்கும் நாட்களிலேயே, கவலை பட துவங்கும் காலமும் துவங்குகிறது. மிக மிக இயல்பாக, சிக்கலின்றி இருக்க வேண்டிய வாழ்க்கையை, நமது ஆசைகள் தான் கவலைக்குரியதாக்கி விடுகிறதோ... எது தேவை... எது தேவையில்லை என்பதை முடிவு செய்யாமலே ஒன்றின் மீது ஆசைப்படுகிறோம். அதுவே கவலைக்குகாரணமாகிறது.

கூட்ட வேண்டிய இடத்தில் கழிப்பதாலும், பெருக்க வேண்டிய இடத்தில் வகுப்பதாலும் பிரச்சனையாகிறது. அதுவே கவலைக்கு காரணமாகிறது.
அறிவாளியாக இல்லையே என்பது முட்டாளின் கவலை. அறிவாளிகள் எல்லாம் கவலையற்றவர்களாக இருக்கிறார்களா... ஏழைக்கு பணக்காரனாக நாம் இல்லையே என்று கவலை. பணம் படைத்தவர்கள் எல்லாம் கவலையற்றவர்களாக இருக்கிறார்களா... சொந்த வீடு வேண்டும் என்பதே வாடகை வீட்டுகாரனின் கவலையாக உள்ளது. சொந்த வீடு வைத்துள்ளவர்கள் எல்லாம் கவலையற்றவர்களா.ஒன்று கிடைத்தால் நம் கவலை தீரும் என்று நினைக்கிறோம். அந்த ஒன்று கிடைத்த பின்னால், வேறொன்றுக்காக கவலைப் படுகிறோம். அதிகமாய் சிந்திப்பவர்கள் தான் அதிகமாய் கவலைப்படுபவர்கள்.


நம் சிந்தனைகள்- நம் கவலைகள் தீருவதற்கு தான் இருக்க வேண்டுமே ஒழிய - நம் கவலைகளை அதிகப் படுத்த இருக்கக் கூடாது. கவலைகள் தீர வழி உள்ளதா... உள்ளது. தலைவரு படம் தீபாவளிக்கு வரலையே என்பது சிலர் கவலை... அவள் என்ன விரும்பலயே என்பது சிலர் கவலை,.. இந்தியா கிரிக்கெட்ல தோத்துட்டே இருக்கே என்பது சிலர் கவலை... யோசிக்கையில் நாம் கவலைகளாக நினைக்கிற பல விஷயங்கள் கவலைகளே கிடையாது.

பலவீனமான மனம் படைத்தவர்க்கு காற்றுல மரம் அசைந்தா கூட பயம்
தான். ஆனால் சிலருக்கோ மரமே சாயஞ்சு விழுந்தாலும் பயம் ஏற்படுறதில்லை. ஏன் இந்த வித்தியாசம். எல்லா கவலைகளுக்குமே முடிவு என்பது ஒன்று உண்டு. அந்த முடிவை யார் வேணுமானாலும் ஊகிக்கலாம். நல்லா யோசிங்க. எந்த கவலைக்கும், எந்த பிரச்சனைக்கும் மூணே மூணு முடிவு தான். ஒரு விளையாட்டு போட்டிய எடுங்க. அதற்கும் மூணு முடிவு தான். வெற்றி, தோல்வி அல்லது ஆட்டம் கைவிடப்பட்டது(டிரா ன்னு கூட வைச்சுக்கலாம்).

இதே போல் தான் ஒரு கவலைக்கும் மூன்று முடிவு. கவலை தீரும் அல்லது கவலை தீராது அல்லது அந்த கவலை பற்றின ப்ரக்ஜை நம்மை விட்டு போய் விடும். ஒரு அடிதடில இறங்க வேண்டிய சூழல் வருது. அதற்கும் மூணு முடிவு இருக்கு. ஒண்ணு அடிப்போம் இல்ல அடி வாங்குவோம் இல்ல யாராவது சண்டைய விலக்கி விடுவாங்க. அவ்வளவு தான்.


ஒரு மனிதரிடம் உதவி கேட்டு போறோம். செய்வாரா, மாட்டாரா என்பது நம் கவலை. மூணாவதா அங்கயும் ஒரு விஷயம் இருக்கு."பார்ப்போம்" என்றோ"யோசிச்சு சொல்றேன் " என்றோ சொல்லலாம் இல்லையா. இவ்வளவு தான் எல்லாமே. ஆக கவலைகளின் கடைசி பக்கத்தை உங்களால் யூகிக்க முடிந்தால், உங்களால் எந்த விஷயத்திற்குமே கவலைப்பட தோன்றாது. கவலை என்கிற வார்த்தை உங்கள் அகராதியில் இருக்காது. இருந்தால் கூட நீக்கி விடலாம்

குறிப்பு : இதைப்பற்றி நான் எழுதி கொண்டு இருக்கும் போது, என் நண்பர் மனித உலகில் இதுதான்  கவலை என நினைக்காமல் நாம் சரியாக இருந்தால்  
கவலை இல்லை என்கிறார். உங்கள் எண்ணம் பதிவு செய்யவும் ....


கருத்துகள் இல்லை: