தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

12/25/2012

உன்னை காதலிக்கிறேன் என்று!


நேற்றைய கனவும்


உன்னால்தான் நிரம்பி வழிந்தது,

வழக்கம் போல நெருக்கமாய்

தூரத்தில்தான் அமர்ந்திருந்தாய்,

வழக்கம் போல காதலை

மெளனத்திற்கு இரையாக

இருவருமே போட்டுக் கொண்டிருந்தோம்!


ஏதேனும் செய்திகளை

உன் விழிகள் எனக்குப் பகிருமா?

என்று உற்று நோக்கினேன்

அது காதலைத் தவிர

வேறொன்றும் பகிரேன் என்று

பிடிவாதம் பிடித்தது...!


என் மெளனத்துக்கு காரணத்தை

நீயும் மெளனத்தால் தேடியது

போலவே நானும் தேடியதில்

குடி கொண்டிருந்த நிசப்தத்தில்

பரவிக் கிடந்த அதிர்வுகளோடு

சப்தங்களை அதிகமாக்கிக்

கொண்டிருந்த நமது இதய துடிப்பும்

அன்னிய தேசத்து எல்லையை

கடந்து செல்லும் அவஸ்தையோடு

தொண்டையை கடக்கும்

அவ்வப்போது நாம் விழுங்கும் உமிழ்நீரும்

சேர்ந்தேதான் காதலை கனப்படுத்தின...!


நான் உன்னை காதலிக்கிறேன்

என்று சொல்லப்போவதில்லை

என்பதைப் போல...

நீயும் சொல்லப்போவது இல்லை

என்பதை உரக்க கட்டியம்

கூறிக் கொண்டிருந்த

மெளனத்தை உடைக்கும் முயற்சியில்

முதலில் எட்டிப் பார்த்த

உனது உதட்டோரப் புன்னகையில்

நான் உடைந்தேதான் போனேன்..!

ஏதாவது சொல் என்றேன்...

போகவா என்றாய்....!

கலைந்து போன கனவில்

நிஜத்தை தொலைத்த வெறுமையோடு

விடியப்போகும் பொய்மையில்

உன்னை சந்திக்கையில்....

இப்போதாவது உன் காதலைச் சொல்லேன்

என்று என் மெளனத்தால்

உன் மெளனம் மோதி

ஒரு கேள்வி கேட்கிறேன்...

நிஜத்தில் நீ மெளனித்தாலும்

பரவாயில்லை,

அடுத்த கனவிலாவது சொல்

நான் உன்னை காதலிக்கிறேன் என்று!

கருத்துகள் இல்லை: