தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

10/18/2011

கூடங்குளம்




         கூடங்குளம் அணு மின் நிலையத்தை எதிர்த்து இடிந்தகரையில் கடந்த சில நாள்களாக மக்கள் உண்ணாவிரதம் இருந்துவருகின்றனர். எப்போதும் மாறிவரும் அரசியல் சூழலில் திடீரென முதல்வர்  மக்களைத் திருப்திப்படுத்தி அவர்களை ஏற்றுக்கொள்ளவைக்கும்வரை வேலையை நிறுத்திவையுங்கள் என்று பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

அணு மின்சாரத்தைப் பொருத்தமட்டில் நமக்குமுன் பல தரப்புகள் உள்ளன.


1. அணு மின்சாரம் என்பது வேண்டவே வேண்டாம். அதில் உள்ள ஆபத்துகள் மிக அபாயகரமானவை. எதிர்காலச் சந்ததியினரைக் கடுமையாகப் பாதிக்கக்கூடியவை. அணுக் கழிவுகளை அப்புறப்படுத்துவது கடினம். சிறு விபத்து என்பது தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள மக்களைக் கடுமையாகப் பாதிக்கும். உலகம் எங்கிலும் அணுப் பிளவு அல்லது சேர்க்கை வாயிலாக மின்சாரம் உற்பத்தி செய்வது தடைசெய்யப்படவேண்டும். வளர்ந்த நாடுகள் பலவும் (கடைசியாக ஜெர்மனி) அணு மின்சாரத்திலிருந்து பின்வாங்க முடிவெடுத்துவிட்டது. ஜப்பானின் ஃபுகுஷிமா விபத்துக்குப் பிறகும்கூடவா நாம் அணு மின்சாரம் வேண்டும் என்று கேட்பது? எனவே உடனடியாக கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூடுவிடுவதே சிறந்தது. அதுமட்டுமல்ல, இந்தியாவில் உள்ள பிற அணு மின் நிலையங்களையும் உடனடியாக மூடவேண்டும்.


2. அணு மின்சாரம் வேண்டுமா, வேண்டாமா என்ற கேள்வி ஒரு பக்கம் இருக்கட்டும். கூடங்குளத்தில் அணு மின் நிலையம் அமைக்கக்கூடாது. ஏனெனில் அங்கு அணு மின் நிலையம் அமைக்க ஆரம்பித்ததிலிருந்து ஒரே குழப்படி மட்டும்தான். இவ்வாறு 1980-களிலிருந்தே இந்த அணு மின் நிலையத்துக்கு எதிராகப் போராடிவந்தவர்கள் முன்வைக்கும் 13 காத்திரமான கருத்துகள் இங்கே. எஸ்.பி. உதயகுமார் போன்றோரை அலட்சியப்படுத்திவிட முடியாது. அவர்களது கருத்துகள் ஆணித்தரமானவை.


3. அணு மின்சாரம் வேண்டும். முக்கியமாக மின் பற்றாக்குறை, வளர்ச்சி தடைபடுதல் போன்றவை தாண்டி, இன்றைக்கு அணு மின்சாரம் ஒன்றால்தான் ‘சுத்தமான’ (மாசு குறைவான) மின்சாரத்தை வழங்கமுடியும். அனல் மின்சாரம் தயாரிப்பதால் புகை, சாம்பல் போன்றவை வெளியாகின்றன. கரியமில வாயுவினால் பூமி சூடாதல் அதிகமாகிறது. இப்படியே போனால், கடல் மட்டம் அதிகமாகி உலகின் பல பகுதிகள் மூழ்கிவிடும் அபாயம் உள்ளது. ஆனால் மின்சாரத் தேவையோ அதிகமாகிக்கொண்டே போகிறது. அணு மின்சாரம் ஒன்றால் மட்டுமே இதனைச் சாத்தியப்படுத்த முடியும். - இப்படிச் சொல்கிறது ஒரு தரப்பு.


4. அணு மின்சாரம் தேவையே இல்லை. மரபுசாரா முறைகள்மூலம் - உதாரணமாக சூரிய ஒளி, காற்றாலை, ஜியோதெர்மல் ஆகியவை மூலமாகவெல்லாம் மின்சாரத்தைத் தயாரிக்கலாம். டிரான்ஸ்மிஷன் நஷ்டத்தைக் குறைத்தாலே போதும். மேலும் மக்கள் தம் தேவையைக் குறைத்துக்கொள்ளவேண்டியது அவசியம். இவற்றையெல்லாம் செய்வதன்மூலம், அணு மின்சாரம் இல்லாமலேயே, வேண்டிய அளவு மின்சாரத்தைப் பெறலாம். எனவே அணு மின்சாரம் அவசியமா, தேவையா என்ற கேள்விக்கு இப்போது பதில் சொல்லவேண்டியது இல்லை. - இது ஒரு தரப்பு.


***


முழு விவாதத்துக்குள் இறங்குவதற்குமுன் மூன்று விஷயங்களைப் பற்றிப் பேச விரும்புகிறேன்.


1. பொதுவாகவே வளர்ச்சி என்பதை முன்வைக்கும் பொருளாதார வலதுசாரிகள், பொதுமக்களின், அதுவும் முக்கியமாக ஏழை எளிய மக்களின் கஷ்டங்களைப் பற்றி அதிகமாகக் கவலைப்படுவதில்லை. இது வருத்தம் தரக்கூடியது. மக்களுக்கு அடுத்துதான் நாட்டு வளர்ச்சி, கார்பொரேட் நிறுவனங்களின் வளர்ச்சி எல்லாமே என்பது என் கருத்து. கூடங்குளம் விஷயத்தில் மட்டுமல்ல, பொதுவாக வளர்ச்சி என்பதற்காக ஏழை மக்கள் தரவேண்டிய விலை இந்தியாவில் மிக அதிகமாக இருக்கிறது. பெருமளவு இடப்பெயர்ச்சி இல்லாமல் பெரும்பாலான வளர்ச்சித் திட்டங்கள் இந்தியா போன்ற மக்கள் தொகை அடர்த்தி அதிகமாக உள்ள இடங்களில் சாத்தியமே இல்லை. இந்த இடப்பெயர்ச்சியைக் கவனமாகக் கையாளவேண்டியது அவசியம். ஆனால் எனக்குத் தெரிந்தவரையில் இந்தியாவில் எந்த மாநில அரசும் மத்திய அரசும் இதனை ஒழுங்காகச் செய்ததே இல்லை.


ஏகப்பட்ட வாக்குறுதிகள் கொடுக்கப்படுகின்றன. பிறகு மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள். இதனால் அரசின்மீது மக்களுக்கு எந்த நம்பிக்கையும் வருவதே இல்லை. சட்டம் இயற்றி நிலத்தைக் கையகப்படுத்திக்கொள்ள எளிதாக முடியும் அரசுகளுக்கு இழப்பீட்டை கௌரவமான முறையில் தரத் தெரிவதே இல்லை.


2. பொது விவாதம். அரசின் செய்கைகள் பற்றி அரசு ஒருபோதும் வெளிப்படையாகப் பேசுவதே இல்லை. மேலும் பொதுக்களத்தில் அரசின் கொள்கைகளை எதிர்ப்பவர்களை அழைத்து அவர்கள் பேச இடம் தருவதே இல்லை. பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை உடனடியாக நிவர்த்தி செய்வதே இல்லை. அரசியல்வாதிகளையும் சமூகத் தலைவர்களையும் கூட்டி உட்காரவைத்து பலாபலன்களை விவாதிப்பது இல்லை.


மொத்தத்தில் ஏழை மக்களை நம் அரசுகள் ஒரு பொருட்டாக மதிப்பதே இல்லை. அவர்களது வாழ்வாதாரம் பற்றியோ மாற்று ஏற்பாடுகள் பற்றியோ ஒருவித ஏளனத்துடன்மட்டுமே அணுகுகின்றன.


3. கார்பொரேட் செயல்பாடுகள்: அணு உலைகள் அமைப்பது தொடர்பாகப் பல்லாயிரம் கோடி ரூபாய் ஒப்பந்தங்கள் கை மாறலாம் என்ற நிலையில் இதிலிருந்து லாபம் பெற நினைக்கும் பெருநிறுவனங்கள் நடந்துகொள்ளும் முறை மோசமானதாக உள்ளது. அணு உலைகளால் அனைவருக்குமே ஆபத்து என்று பலர் சொல்லிக்கொண்டிருக்கும்போது, அணு உலைகளால் ஏதேனும் விபத்து ஏற்பட்டால் அதில் தம்முடைய நஷ்டம் எவ்வளவு குறைவாக இருக்குமாறு ஒப்பந்தம் போடுவது என்று இந்த நிறுவனங்கள் 
 செய்கின்றன. அதற்கு அமெரிக்க அரசும் பிரான்சு அரசும் தம்மால் முடிந்த அளவுக்கு இந்திய அரசின் கைகளை முறுக்கப் பார்க்கின்றன. தம் நாட்டில் எம்மாதிரியான செயல்பாடுகளை இந்த அரசுகள் அணு உலை நிறுவனங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றனவோ அந்த அளவுக்காவது பிற நாடுகளிலும் அவற்றின் செயல்பாடுகள் இருக்கவேண்டும் என்ற குறைந்தபட்ச தார்மிக நிலையை எடுக்கக்கூட இவர்கள் தயாராக இல்லை. இதுபோன்ற நேரங்களில் நம் மத்திய அரசும் வலுவாக நடந்துகொள்வது இல்லை.


இதைப் பார்க்கும் யாருக்குமே நம் அரசின்மீது நம்பிக்கை வைக்கத் தோன்றாது. போதாக்குறைக்கு சில பத்தாண்டுகளாக போபால் விஷவாயுக் கசிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் போய்ச் சேராமல் இருக்கிறது.


ஜப்பானிலேயே மோசமான விபத்து ஏற்படும் அளவுக்குப் பாதுகாப்புக் குறைவு உள்ளதென்றால், இந்தியா போன்ற நாட்டில் கார்பொரேட் நிறுவனங்கள் எப்படி நடந்துகொள்ளும் என்பது நமக்குத் தெரியாதா என்கிறார்கள் பலரும். அந்த அளவுக்கு கார்பொரேட் நிறுவனங்கள்மீது நமது நம்பிக்கையின்மை வளர்ந்துள்ளது.


இப்படிப்பட்ட சூழலில், அணு மின்சாரம் என்பது நமக்குத் தேவையா? தேவை என்றால் எத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்? அவற்றை நாம் எப்படி நம்புவது? நம் அரசையும் கார்பொரேட் பன்னாட்டு நிறுவனங்களையும் நாம் எப்படி நம்புவது? பாதிக்கப்படப்போகும் மக்களுக்கு என்ன இழப்பீடு?


முக்கியமாக கூடங்குளத்தில் நிறுவப்பட்டு விரைவில் இயக்கப்படப்போகும் ரஷ்ய அணு உலைகள் பாதுகாப்பானவைதானா?

கருத்துகள் இல்லை: