திருப்பூர் புத்தக கண்காட்சி வளாகத்திலிருந்து ....
பட்டியல் தயாரித்து வந்து புத்தகங்களை தேடி வாங்கும் பழக்கத்தை, புத்தக சந்தையில் காண முடிகிறது. வெளியூரில் வசிப்போர் குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி, முகாமிட்டு புத்தகங்களை வாங்கி செல்கின்றனர்.
புத்தக கண்காட்சி அரங்கில், லட்சத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில், சுமார் ஒரு லட்சம் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன. கண்காட்சிக்கு, தினமும், பல ஆயிரம் பேர் வருகின்றனர். இதில், 50 சதவீதத்துக்கும் குறைவானவர்களே புத்தகங்களை தேடுவதாக, புத்தக விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.
அதிலும், திட்டமிட்டு புத்தகங்களை தேடுவோர் எண்ணிக்கை மிகவும் குறைவு. தேடுவோரில், புத்தகங்களுக்கான பட்டியலை தயாரித்து எடுத்து வந்து, குறிப்பிட்ட புத்தகங்களை வாங்கிச் சென்றவர்களை காண முடிந்தது.
இப்படி பட்டியல் தயாரித்து வந்தவர்களில் ஒருவர், இளங்கோவன். அவரிடம் கேட்ட போது, "நான் வேடிக்கை பார்க்க இங்கு வரவில்லை. பொழுது போக்கவும் வரவில்லை. எனக்கு, சில புத்தகங்கள் தேவைப்படுகின்றன. அவற்றைப் பற்றி முன்பே தெரிந்து பட்டியல் வைத்துள்ளேன். கடந்த ஆண்டு முழுவதும் இந்த பட்டியலை தயாரித்தேன்" என்றார்.
மேலும், "இதை வைத்துக்கொண்டு புத்தகத்தை தேடுகிறேன். அதில் கிடைத்தவற்றை வாங்கிக் கொள்கிறேன். இந்த தேடலுடன் புதிய புத்தகங்கள் ஏதாவது வந்துள்ளதா என்பதையும் கவனிக்கிறேன். இந்த ஆண்டு முதல், இந்த நடைமுறையை பின்பற்றி வருகிறேன். இது சுலபமாக இருக்கிறது" என்றார்.
இவர் போல் இல்லாமல், திட்டமிடாமல் வந்து, விரும்பிய புத்தகத்தை வாங்க முடியாமல் செல்பவர்களும் உண்டு. புத்தகங்களைத் தேடி வந்து, வெறுங்கையுடன் திரும்பி சென்றவர் ஜான்சன். இவர் கூறுகையில், "மிகுந்த ஆர்வத்துடன் புத்தகங்களை தேடி வந்தேன்.
நவீன அறிவியல் சார்ந்த புத்தகங்களை படிப்பதில், எனக்கு விருப்பம் உண்டு. ஆனால், இந்த தலைப்பில் எந்த வகையான புத்தகங்கள் வந்துள்ளன என்பது குறித்து, எனக்கு பெரிய அளவில் தெரியாது. அவற்றை தேடி கண்டு பிடிப்பதிலும் சிரமம் உள்ளது" என்றார்.
மேலும், "புத்தக அட்டையில் உள்ள கருத்து அடிப்படையில், புத்தகங்களை தேர்வு செய்வதால் ஏமாற்றம்தான் மிஞ்சும் என்ற அனுபவம் எனக்கு உள்ளது. இந்த அடிப்படையில், நான் தேடி வந்தவற்றை கண்டுபிடிப்பதில் உள்ள சிரமங்களால், ஏமாற்றமாக உள்ளது" என்றார்.
நவீன விவசாயம், ஜோதிடம், சமையல் போன்ற புத்தகங்களை வாங்கியவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்ததை காண முடிந்தது. விவசாயம் சார்ந்த புத்தகங்களை வாங்கி கொண்டிருந்த அய்யப்பனிடம் கேட்ட போது, "பொதுவாக, எல்லா புத்தகங்களையும் வாசிக்கும் பழக்கம் எனக்கு உண்டு. இப்போது ஆரோக்கிய உணவு சார்ந்த சிந்தனை அதிகரித்து வருகிறது. நஞ்சு கலந்த உணவை சாப்பிடுவதால் தான் நோய்கள் அதிகரித்து வருவதாக கூறுகின்றனர்" என்றார். மேலும், "இது ஒரு வித பயத்தை ஏற்படுத்துகிறது. இதனால், உயிர் வேளாண்மை பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என்ற நோக்கில் இது போன்ற புத்தகங்களைத் தேடுகிறேன்.
நான் எந்த செயலையும் நடைமுறைப்படுத்த முடியாது என்பது எனக்கு தெரிகிறது. ஆனால், நஞ்சில்லா வேளாண்மை பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள ஆர்வப்பட்டு இவற்றை வாங்குகிறேன்" என்றார்.
வெளிமாநிலங்களில் வசிக்கும் பலர், புத்தகங்களைத் தேடி சந்தைக்கு வந்திருந்தனர். பாபு கூறுகையில், "புத்தகங்கள் வாங்குவதற்கு என, குறிப்பிட்ட தொகையை நான் மாதம் தோறும் சேமிக்கிறேன். அந்த தொகையை மூலம், நான் விரும்பும் புத்தகங்களை வாங்கிக் கொள்கிறேன்.
நான் சமூகவியல் தொடர்பான கல்லூரி ஆசிரியராக பணியாற்றுவதால், அது சார்ந்த அறிவை வளர்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது. கல்லூரி நூலகத்தில் இது தொடர்பான புத்தகங்கள் வந்தாலும், வளர்ச்சி சார்ந்து உலகின் பல்வேறு மூலைகளிலும் நடக்கும் மாற்றங்களை தெரிந்து கொள்ளும் வகையிலான புத்தகங்களைத் தேடி இங்கு வருகிறேன்" என்றார்.
1 கருத்து:
மிக எதிர்பார்ப்பு எந்த விசயத்திர்க்கும் தவறு என்பது நிறைய நல்ல விசயங்கலுக்கு பொருந்தும்.ஒரு திட்டமிடல் தொலைந்து போன கண்காட்சி இது .வேதனை .
கருத்துரையிடுக