தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

8/03/2011

ஆடி மாதம்

ஆடி மாதம் தான் தக்ஷிணாயணத்தின் தொடக்கம். இது ஒரு புண்யகாலமாகக் கருதப்படுகிறது. பண்டிகைகள் பல நம்மைப் பரவசப்படுத்தும் மாதம் இந்த ஆடிமாதம்.

ஆடி மாதம் என்றாலே மல்லிகை மணமும் கூடவே வரும். அம்மன் கோயில்களில் பூக்களால் அலங்கார பூஷிணியாக அமர்ந்திருப்பாள்.

இந்த மாதத்தில் தான் சதுர்மாஸ்ய விரதம் தொடங்குகிறது. அதாவது சன்யாசி போன்ற பெரியவர்கள் ஒரு இடத்தில் அமர்ந்து பூஜை புனஸ்காரங்களைத் தொடருவர். இந்தக் காலத்தில்தான் பல ஊர்வன வகையைச் சேர்ந்த ஜீவராசிகள் மழை வெள்ளத்தைத் தாங்க முடியாமல் தங்கள் இருப்பிடத்திலிருந்து வெளிவரும். அப்போது நடந்தால் அவைகள் மிதிபட்டு, துன்பப்பட்டு இறக்க நேரிடும் என்பதால் சன்யாசிகள், சாதுக்கள் ஒரு இடத்தில் போய் அமர்ந்து நாலு மாதங்கள் அங்கேயே தங்கி இருப்பர். வியாசபூஜையும் நடக்கும். இது ஆடி பெளர்ணமியில் குரு பூர்ணிமா என்ற பெயரில் நடக்கும்.

மஹாராஷ்ட்ராவில் தத்தாத்ரேயருக்கும் சிறப்பு பூஜை உண்டு. தவிர ஸ்ரீமஹாவிஷ்ணு சயனக்கோலத்தில் இருந்துகொண்டு நம்மைக் காக்கிறார். இந்த மாதம் வரும் ஏகாதசி மிக விசேஷமானது, சயன ஏகாதசி என்றும் ஷாட ஏகாதசி என்றும் கூறுவார்கள்.

ஆடி மாதம் வரும் ஏகாதசியை மஹராஷ்ட்ரத்தில் ஆஷாட ஏகாதசி என்று மிகச் சிறப்பாகக் கொண்டாடுவார்கள். காவடி போல் தோளில் இருபக்கமும் பால் அல்லது தயிர் எடுத்துக்கொண்டு பண்டரிபுரம் சென்று பகவான் விட்டலைத் தரிசனம் செய்து விட்டு வருவார்கள். பண்டரிபுரம் வரை பொடி நடைதான். நடு நடுவே செல்வந்தர்கள் அவர்களுக்கு உணவுப் பந்தல் ஏற்பாடு செய்திருப்பார்கள்.

சிறுவர்களும் இதில் கூட்டம் கூட்டமாகப் போவார்கள். அவர்கள் வாயில் 'பாண்டுரங்க விட்டலா பண்டரிநாத விட்டலா' என்றும் 'விட்டல் விட்டல் ஜய ஜய விட்டல்' என்றும் விடாமல் நாமஜபம் வந்து கொண்டிருக்கும்.

விஷ்ணு கோயிலில் இந்த நேரம் தக்ஷிணாயண வாயிலைத் திறப்பார்கள். இது தெற்குப் பக்கம் இருக்கும். இது போல் உத்தராயண வாசலும் உண்டு, அதாவது அது வடக்குப் பக்க வாசல்.

இந்த மாதத்திலேதான் ஜீவ நதிகளுக்கு பூஜை செய்யப்படுகிறது. இதை ஜலப்பிரவாஹப்பூஜை என்று சொல்கிறார்கள். காவேரி அம்மனுக்கு மசக்கை என்று ஆடி பதினெட்டாம் பெருக்கைக் கொண்டாடுகிறார்கள்.

காலையில் காவிரி நதி தீரம் சென்று குளித்து, அம்மன் பூஜை செய்து பின் எல்லா சித்திரான்னங்களையும் படைப்பார்கள். எலுமிச்சைசாதம், புளியஞ்சாதம், தயிர் சாதம், வற்றல் வடகங்கள் என்று கொண்டு போய் அங்கு ஆற்று மணலின் அருகே அமர்ந்து குடும்பத்தினர் அனைவரும் உண்டு மகிழ்வார்கள்.

பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வதற்கு ஆடி அமாவாசை மிகச் சிறந்த நாள்.

ஆடி பதினெட்டாம் பெருக்கு அன்று உழவர்கள் நிலத்தில் விதைகள் விதைப்பார்கள்.

ஆடி மாதம் மாரியம்மனுக்கு மிகவும்விசேஷம் பொருந்திய நாள். ஆடி செவ்வாய் அன்றும் ஆடி வெள்ளி அன்றும் சிலர் ஞாயிறன்றும் அம்மனுக்குக் கூழ் ஊற்றுவார்கள். கிராமங்களில் எல்லை தேவதைகளுக்கும் இந்த உபசாரங்கள் நடக்கும். மஞ்சள், வேப்பிலை, குங்குமம் முக்கியப் பங்கு வகிக்கும்.

வைணவர்களுக்கு ஆடிப்பூரம் மிகவும் முக்கியமான நாள். அன்றுதான் ஆண்டாள் பிறந்த தினம். வரலட்சுமிவிரதமும் சில சமயம் ஆடியில் வந்து விடும்.

அன்னை காமாட்சியும் சிவனை நோக்கித் தவம் இருந்து பின் ஈசனை அடைந்த மாதம் இந்த ஆடி மாதம் தான். ஆடி மாதம் சிலர் தேவியை வாராஹியாக வழிபடுவர். இவள் நமக்கு தைரியத்தை வழங்கி சத்ருவை அடக்குகிறாள்.

பொன்னி அம்மன், பச்சை அம்மன், திரெளபதி அம்மன், பொம்மி, காத்தாயி, மதுரைவீரன், முனீஸ்வரன் என்ற தெய்வங்களையும் இந்த மாதம் கரகம், காவடி, தெருக்கூத்து போன்றவைகளுடன் வழிபடுகிறார்கள்.

திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவிலில் ஆடி தபசு விழா நடக்கிறது. அதாவது கோமதி அம்மன் தவம் இருக்க, புன்னைவனத்தில் சிவன் சங்கரநாராயணராக அவருக்கு் பெளர்ணமி அன்று காட்சி அளித்தார்.

தவிர சுதந்திரதினமும் இந்த மாதத்தில் தான் அநேகமாக வருகிறது. அத்துடன் அன்னையைப் பராசக்தியாகக் கண்ட, கண்ணனையும் தரிசனம் செய்த ஸ்ரீஅரவிந்தர் அவர்களின் பிறந்த தினமும், கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை அவர்களின் பிறந்த தினமும் ஆகஸ்ட் 15ல் வருகிறது. , ஷீரடியில் ஷீரடி பாபா உத்சவமும் பிரமாதமாக நடக்கும்.

இத்தனை உயர்வுகளைக் கொண்ட ஆடி மாதத்தைக் கண்டாலே உள்ளம் குளிர்ந்து போகிறது.

கருத்துகள் இல்லை: