தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

8/22/2011

நாம் சும்மா இருப்போமா..???


சில அரசியல் கட்சிகள் இப்பொழுது போராட்டத்தில் இறங்கியுள்ளது.. என்னவென்று பார்த்தால், தூக்குத் தண்டனையை ரத்து செய்யவேண்டுமென்ற கோரிக்கையை, வைக்கிறார்கள். நல்ல விஷயம் தான் ஏன் எதற்காக, யாருக்காக இந்த கோரிக்கையை வைக்கிறார்கள் என்றும் பார்க்க வேண்டும்.

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொல்லப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் நிராகரித்தார், முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி 1991-ம் ஆண்டு மே மாதம் 21-ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் மனிதவெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்த படுகொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் மற்றும் நளினி ஆகியோருக்கு 1999-ல் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த மரண தண்டனையை உச்சநீதிமன்றமும் 2000-ம் ஆண்டில் உறுதிசெய்தது. எனினும் நளினியின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

இவைகள் அனைவரும் அறிந்த ஒன்றே, முருகன், சாந்தன், பேரறிவாளன் இவர்களுக்கெல்லாம் இப்பொழுது தூக்கு தண்டனை உறுதியாகிவிட்டது, இவர்களை எல்லாம் தூக்கில் போட கூடாதென்று , போராட்டங்கள் கிளம்பியுள்ளன ஏன் இவர்களையெல்லாம் தூக்கில் போட கூடாது..?? என்பது என் கேள்வியாகும், ஒரு நாட்டின் முக்கிய மனிதரை, பிரதம மந்திரி வேட்பாளாராக இருக்கும் போது கொலை செய்திருக்கிறார்கள், கொலை செய்ய உதவி செய்து இருக்கிறார்கள், இவர்களுக்கு கருணை காட்டினால் நாளை யார் வேண்டுமானாலும் வந்து நாட்டின் முக்கிய தலைவர்களை கொன்று விட்டு செல்வார்கள் அல்லவா..??

குறிப்பாக பேரறிவாளனை தூக்கில் இடக் கூடாது என்று போராட்டம்,செய்திருக்கிறார்கள், யார் இந்த பேரறிவாளன்..?? என்ன குற்றம் செய்தார் என்றால், பேட்டரி , மோட்டார் சைக்கிள், ஆகியவற்றைக் கொடுத்து படு கொலைக்கு உதவி செய்தது தான், இதெல்லாம் ஒரு குற்றமா என கேட்கலாம் இதுவும் ஒரு குற்றம் தான் அந்த படுகொலைக்கு குண்டு தயாரிக்க எந்த பொருள் வாங்கி கொடுத்தாலும் அவர்களும் அந்த கொலைக்கு உடந்தை தான்.

என் நண்பன் பிரதமரையோ, அல்லது நாட்டின் மிகப்பெரிய தலைவரையோ, கொலை செய்யப் போவது எனக்குத் தெரிகிறது என்றால், அதை நான் தடுக்க வேண்டும், அதை செய்யாமல் நான் மறைத்தால், நானும் அந்த கொலைக்கு உடந்தை தான். இது தான் நடந்து இருக்கிறது இந்த பேரறிவாளன் விஷயத்தில். பேரறிவாளனின் தாயாரே சொல்கிறார் நாங்கள் புலிகளின் ஆதரவாளர்கள் தான் என்று, அப்படி இருக்கும் பொழுது இவர்கள் ஏன் உதவி செய்து இருக்க கூடாது..??

விடுதலை புலிகள் செய்த மிகபெரிய தவறே ராஜிவ்காந்தியை கொலை செய்தது தான். இதுவே அவர்களின் தோல்விக்கு காரணம். நம்முடைய தந்தையை ஒருவன் கொலை செய்து விட்டாலே, நமக்கு கோவம் வந்து அவனை என்ன செய்கிறேன் என்று சபதம் எடுப்போம், ஒரு நாட்டையே ஆளும் அவர்களுக்கு எவ்வளவு கோபம் வரும் என நினைத்து பார்க்க வேண்டும்.

இப்பொழுது வந்து தூக்கில் போடக் கூடாதென்றால் எப்படி???

ஒரு கொலைக்கு இன்னொரு கொலை எப்படி பதிலாகும் என்னும் வாதங்களும், தூக்கு தண்டனை கொடுத்தால் எப்படி அவர் திருந்த வாய்ப்பு கிடைக்கும் மனிதாபிமானம்வேண்டும் என்பது எல்லாம் சரிதான்....! இதை ஒட்டு மொத்த இந்தியாவில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள அத்தனை கைதிகளுக்கும் கொண்டு வர நாம் போராடினால் அதில் ஒரு நியாயம் இருக்கிறது.

இந்திய இராணுவம் அங்கே போய் குற்றம் செய்தது, கற்பழித்தது, கொலைசெய்தது என்று வாதிடுபவர்கள் எல்லாம் விடுதலைப் புலிகள் இயக்கம் இப்படி கொலை செய்யாமல், குண்டு வைக்காமல் இருந்ததா என்று யோசித்து விட்டுப் பேசவும். நோக்கம் சரியானது என்றாலும் அவர்கள் சென்ற பாதையும் செய்த கொலைகளும் சரியானதுதான? எத்தனை பேரின் உயிர் போய் இருக்கிறது...? அவை எல்லாம் மனித உயிர்கள் இல்லையா?

இதே ஒரு பாகிஸ்தான்காரன் நம் நாட்டின் மிகப் பெரிய தலைவரையோ அல்லது பிரதமர் வேட்பாளரையோ கொன்று இருந்தால் நாம் சும்மா இருப்போமா..??? உடனே தூக்கில் போடவேண்டுமென்று போராடி இருப்போம் தமிழர் என்று சொல்லி ஒரு தவறை நியாப்படுத்த முடியுமா..? இப்படி மன்னித்து கொண்டே சென்றால் அடுத்து யார் வேண்டுமென்றாலும் வந்து பிரதமரையே கொலை செய்து விட்டு 20 ஆண்டு சிறையில் இருந்து விட்டு சென்று விடுவான்.. போராட்டம் நடத்துபவர்களே உங்கள் தமிழ் ஆர்வத்தை வேறு வழியில் காட்டுங்கள்...!

தூக்கு தண்டனை வேண்டுமா வேண்டாமா? என்ற விவாதம் வேறு....அதை இந்தச் சந்தர்ப்பத்தில் ஒரு ஆயுதமாக உபயோகம் செய்து ராஜிவ் கொலையினை நியாயப்படுத்த நினைக்கும் அறிவுக்கூர்மைகள் எல்லாம் கண்டிப்பாய் மழுங்கடிக்கப்படவேண்டியவையே.


இந்த இரண்டினையும் ஒன்றுபடுத்தி போராட்டங்களுக்கு தமிழுணர்வு சாயம் கொடுப்பது இந்தியா என்ற தேசத்தின் ஒற்றுமைக்கு பெரும் குந்தகமாக எதிர்காலத்தில் அமையக்கூடும் என்ற அச்சத்தையும் இந்தக் கட்டுரை பொதுவில் வைக்கிறது.


தூக்கில் போடுவதும் போடாததும் அரசு எடுக்க வேண்டிய முடிவு....! இங்கே மனிதாபிமானம் பார்க்க வேண்டும் என்பதும் சரி ஆனால் இந்திய அரசால் யார் யாருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறதோ அப்போது எல்லாம் இது மாதிரி போராட்டங்கள் இருந்தால் நன்றாகத்தான் இருக்கும். தமிழன் என்ற ஒரு உணர்வு இயந்திரத்தை இயக்கி விட்டு அதன் மூலம் தீர்வுகளைச் சொல்வது ஒரு குறுகிய பார்வை என்பதை தண்டனை வேண்டாம் என்று கூறுபவர்கள் அறிவார்களா? என்ற கேள்வியோடு கட்டுரையை நிறைவு செய்கிறோம்

குறிப்பு : படித்ததில் பிடித்தது

கருத்துகள் இல்லை: