சென்ற வார சபரிமலை கோவிலுக்கு சென்றிருந்த போது அங்கு குமுளி அருகில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த முதியவரிடம் முல்லை பெரியாறு அணை பற்றி காரசாரமாக பேசி கொண்டிருந்தோம்....அவர்களின் பிரதிப்பலிப்புடன் எனது எண்ணங்களை பதிவு செய்துள்ளேன்
ரத்தமும், சதையும், வியர்வையும் கலந்த நிஜக் கதை. அது, முல்லைப் பெரியாறு அணையின் கதை. லண்டனில் இருந்து வந்த வெள்ளைக்காரத் துரை, நமக்காக எவ்வளவு கஷ்டப்பட்டு, ரத்தம் சிந்தி அந்த அணையை கட்டி முடித்தார். அணையை கட்டி முடிப்பதற்காக எத்தனை, எத்தனை பேர் உயிரை தியாகம் செய்திருக்கிறார்கள்; என்னென்ன சிரமங்களை சந்தித்திருக்கிறார்கள் என்ற அந்தக்கதை எனது வாழ்நாள் உள்ளவரை மறக்காது. அந்த அணையை உடைப்பதற்கு அல்ல... அதில் இருந்து ஒரே ஒரு செங்கல்லை உருவக் கூட, எங்கள் உயிர் இருக்கும் வரை அனுமதிக்கமாட்டேன்...!"
உண்மையில், அது மிகவும் குளிர்ந்த நிலப்பரப்பு. ஆனால், சமீபகாலமாக அங்கு நிலைமை உச்சக்கட்ட கொதிநிலையில் இருக்கிறது. அனைவருக்கும் தெரிந்த அதே காரணம். நாற்காலியைப் பிடிக்கவும், தக்கவைத்துக் கொள்ளவும் அரசியல்வாதிகளால் கையாளப்படும் கடைநிலை உத்தி... இன, மத, மொழி பேதங்களை உயர்த்திப் பிடித்து உசுப்பேத்துவது. அங்கும் அதுதான் நடக்கிறது. "தமிழர்கள் ஒழிக; தமிழகம் ஒழிக" என்றுதான் தேசியக்கட்சிகளும், சர்வதேசக் கட்சிகளும் அங்கு கோஷங்கள் எழுப்பி கூட்டம் சேர்க்கின்றன.
இந்திய வரலாற்றில் இது புதிய உத்தி அல்ல. இதற்கு முன்பும் கூட ஒருமுறை இதேபோல மத, இனவாத உணர்வுகள் தூண்டப்பட்டு, மக்கள் பிரிக்கப்பட்டிருக்கிறார்கள். அது நடந்தது 1940ம் ஆண்டுகளில். அதற்குப் பிறகு, இத்தனை உணர்வுப்பூர்வமாக ஒரு தேசத்தின் மக்களுக்குள் விரோதத்தீயை மூட்டுகிற சம்பவம், அநேகமாக இப்போதுதான் முழு அளவில் அரங்கேறியிருக்கிறது. தீயைப் பற்ற வைக்கிறவர்கள் போதிய விபரமோ, பொது அறிவோ தெரியாத ஆட்கள் அல்ல. அரசியலில் ஐம்பது, அறுபது ஆண்டுகாலம் அனுபவம் பெற்றவர்கள்.
வர்க்கப் போராட்டங்களுக்காகவும், ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் உயர்ந்த கைகள், இல்லாத ஒரு நச்சுப் பொய்யை மக்கள் மனதில் அழுந்த விதைப்பதற்காக இப்போது உயர்ந்திருக்கின்றன. முல்லைப்பெரியாறு அணை ஒரு புவி ஈர்ப்பு விசை அணை (GRAVITY DAM). தேக்கப்படும் தண்ணீரின் அழுத்தம், அலைகள் மற்றும் அவர்களின் தொடர் குற்றச்சாட்டான நில அதிர்வுகளால் ஏற்படும் அழுத்தங்களையும், தனது எடையின் மூலமாக தாங்கக்கூடிய திறன் புவி ஈர்ப்பு விசை அணைகளுக்கு உண்டு. இது அறிவியல்.
ஆனால், நிலநடுக்கம் வந்தால், 30 லட்சம், 35 லட்சம், 40 லட்சம் (உண்மையில் எத்தனை லட்சம்?) மக்கள் மாண்டு போவார்கள் என திரும்பத் திரும்ப (பொய்) சொல்கிறார்கள் கேரளத்து அரசியல்வாதிகள். சொல்லட்டும் தப்பில்லை. ஆனால், எதையும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கவேண்டும். இது அறிவியலின் காலம். அறிவியல்பூர்வமாக நிரூபித்தால் மட்டுமே கடவுளைக் கூட ஏற்றுக்கொள்வேன் என்று கூறுகிறவர்கள் இருக்கிற காலம். அணை பலவீனமாக இருக்கிறது என்று கேரள அரசியல்வாதிகளால் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கமுடியுமா? இன்றல்ல... இன்னும் நூறு ஆண்டுகளுக்குப் பிறகு கூட நிரூபிக்கமுடியாது!
கேரளப் பொதுப்பணித்துறையில் அறிவும், ஞானமும் நிறைந்த பொறியாளர்கள் இருப்பார்கள் என்றே நாம் நம்புகிறோம். அதில் யாராவது ஒருவராவது இதுவரை அணை பலவீனமாக இருப்பதாக அறிவித்திருக்கிறார்களா? அச்சுதானந்தன், பிரேமச்சந்திரன், உம்மன்சாண்டி, ஜோசப் என ஒரு நான்கைந்து பேர்தான் மாற்றி, மாற்றி பேட்டி கொடுக்கிறார்கள். இவர்கள் யார்? ஒரு அணையின் பலம், பலவீனம், தொழில்நுட்ப நுணுக்கங்கள் பற்றி அறிந்து கொள்ளக்கூடிய அளவுக்கு இவர்களுக்கு அறிவு இருக்கிறதா? அன்றாட நடவடிக்கைகளைப் பார்க்கும்போது, இவர்களது அரசியல் அறிவு குறித்தே அடுக்கடுக்காய் சந்தேகங்கள் கிளம்புகிறது.
பேசி வைத்துக் கொண்டது போல இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அச்சுதானந்தனில் துவங்கி கேரள அரசியல்வாதிகள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் முல்லைப்பெரியாறு அணைக்கு கிளம்பி வந்து விடுகிறார்கள். அணைப்பகுதியில் இருக்கிற அரசு சுற்றுலா விடுதி மிகவும் அழகானது; நேர்த்தியானது. அங்கு உணவு வகைகள் மிகவும் ருசியாகவும், தரமாகவும் இருக்கும். சுற்றுலா விடுதியில் ஓய்வெடுத்து விட்டு, உணவையும் ஒரு கை பார்த்து விட்டு, கிளம்பிப் போகிறபோது, மீடியாக்களை பார்த்து, "அணை ரொம்பப் பலவீனமாக இருக்கிறது. எந்த நேரமும் இடிந்து விடலாம். நாங்கள் குமுளி எல்லையைத் தாண்டுகிற அளவுக்குக் கூட தாங்குமா என்பது சந்தேகம்!" என்று ஒரு பேட்டியும் கொடுத்து விட்டுப் போகிறார்கள்.
தமிழகத்தின் கட்டுப்பாட்டுக்கள் இருக்கிற ஒரு அணைக்குள் எந்த அனுமதியும் பெறாமல், அத்துமீறி நுழைய எப்படி இவர்களால் முடிகிறது? நீதியையும், நேர்மையையும், சட்டத்தையும் கட்டிக் காப்பாற்றவேண்டிய இவர்களே, அவற்றை காலில் போட்டு மிதிக்கிறபோது, இவர்களால் ஆளப்படுகிற மலையாள மக்களிடம், அந்தக் குணங்களை எப்படி நம்மால் எதிர்பார்க்க முடியும்? உண்மையில், ஒவ்வொரு முறையும் ஆய்வு, ஆய்வு என்ற பெயரில் அணைக்குள் வந்து போகும் இவர்களும், இவர்களைச் சார்ந்த கும்பல்களும் ஏன் அணையை பலவீனப்படுத்தும் செயலில் ஈடுபடக்கூடாது? அணையின் பலம், பலவீனம் குறித்து இவர்களால் அப்படி என்னதான் ஆய்வு செய்து விடமுடிகிறது?
அணையால் ஒரு ஆபத்தும் இல்லை என கேரள அரசின் அட்வகேட் ஜெனரல் தண்டபாணி, மத்திய நீர்வள கமிஷனின் முன்னாள் தலைவர் தாமஸ் இருவரும் தெள்ளத்தெளிவாக உயர்நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்கள். இருவருமே மலையாளிகள். ஆனால், விஷயம் தெரிந்தவர்கள். அதனால்தான், உண்மையைச் சொல்லியிருக்கிறார்கள். விஷயம் தெரியாதவர்கள், நிலநடுக்கப்பகுதி, மூன்றாம் அடுக்கில் அணை இருக்கிறது என்று கொளுத்திப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். முல்லைப்பெரியாறு அணை இருக்கிற இடம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த கேரள மாநிலமும் நிலநடுக்கப்பகுதி மூன்றாம் அடுக்கில்தான் (SEISMIC ZONE - 3) இருக்கிறது. மக்கள் பாதுகாப்புத்தான் முக்கியம் என்றால் சிறிதும், பெரிதுமாய் அங்கிருக்கிற 31 அணைகளையுமே இடிக்கவேண்டும்.
இந்தத் தருணத்தில், மலையாள மக்கள் புரிந்து கொள்ளவேண்டிய மிக முக்கியமான விஷயம் ஒன்று இருக்கிறது. உங்களது அரசியல்வாதிகள் வேட்டு வைக்க நினைப்பது முல்லைப்பெரியாறு அணைக்கு அல்ல. அது அவர்களால் மட்டுமல்ல.... அவர்களது தலைமுறைகளாலும் முடியாது. தமிழகத்தில் இருந்து வரும் அரிசி, பருப்பு, பால், மருந்து என அத்தனை அத்தியாவசியப் பொருட்களையும் வாங்கிப் பயன்படுத்திக் கொண்டு நிறைவாக இருக்கிற உங்களது நிம்மதியையும், தமிழகத்தின் ஒவ்வொரு மூலை, முடுக்குகளிலும் தொழில் செய்து பிழைக்கிற பல லட்சம் மலையாளிகளின் வாழ்க்கைக்கும் வேட்டு வைக்கிற முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள் உங்கள் அரசியல்வாதிகள்.
முல்லைப் பெரியாறு அணையை, வெறும் அரசியல் காரணங்களுக்காக கையில் எடுத்து அடாவடி செய்யும் கேரள அநாகரிகவாதிகளின் செயல்பாடுகளால், தமிழக மக்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கொதித்துப் போயிருக்கிறார்கள். சட்டசபையைக் கூட்டி, புதிய அணை கட்டியே தீருவோம் என கேரள அரசு தீர்மானம் நிறைவேற்றியதற்கு அடுத்த நாள், கம்பத்தைச் சுற்றியுள்ள கிராம மக்கள் தங்கள் தினசரி வாழ்க்கையை ஒதுக்கி வைத்து விட்டு 'பெரியாறு காப்போம்' கோஷங்களுடன் அணைக்கே கிளம்பி விட்டனர். முதல் நாள் 50 ஆயிரம் பேரும், அதற்கடுத்த நாள் ஒரு லட்சம் மக்களும் (சரிக்குச் சரியாக பெண்களும்) துப்பாக்கிகளுடன் நின்றிருந்த போலீஸ் பட்டாளங்களையும் மீறி குமுளியில் கேரள எல்லைக்கே சென்று முற்றுகையிட்டபோது... புலி வாலைப் பிடித்து விட்டோம் என நினைத்திருப்பார் சாண்டி.
தேனி மாவட்டம் மட்டுமல்ல... அதையும் கடந்து முல்லைப்பெரியாறு பிரச்னை திருப்பூர், கோவை, சென்னை, விழுப்புரம் என மாநிலம் முழுக்க சகல பகுதிகளிலும் சூட்டைக் கிளப்பியிருக்கிறது. "அணையைத் தொட்ட... நீ கெட்ட!" என்று போஸ்டர் அடித்து ஒட்டியபடி, சில சினிமா ரசிகர்களும் களத்தில் குதித்திருப்பது, போராட்டத்துக்கு சற்று மசாலா சேர்த்திருக்கிறது. எந்த அரசியல் தூண்டுதலும் இல்லாமல், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் கிளம்பியிருக்கிற உணர்வுப்பூர்வமான எதிர்ப்பலை, சேட்டன்மார்களை நிறையவே திகிலடைய வைத்திருக்கும்.
நிஜத்தில், இங்கிருக்கும் மலையாளிகளைத் தாக்கவேண்டும் என்பதோ, அவர்களது தொழிலை முடக்கவேண்டும் என்பதோ யாருக்கும் நோக்கமில்லை. அப்படி பேதம் பிரித்துப் பார்க்கிற எண்ணம் தமிழர்களுக்கு ஒருநாளும் இருந்ததில்லை. நம்மவர் கடையை விட நாயர் கடை குப்பைத்தொட்டியில் தேங்கும் டீ டம்ளர்களின் எண்ணிக்கை, எளிய உதாரணம். நகை வாங்குவதற்கு அவர்களது கடைகளுக்குப் போவார்கள். வாங்கிய நகையை வைக்கவேண்டுமென்றாலும், அவர்கள் நடத்துகிற அடகு கடைக்குத்தான் போகிறார்கள். ‘கையில இருக்கு தங்கம்... கவலை எதுக்குடா சிங்கம்?’ போன்ற விளம்பரங்களே அதற்குச் சாட்சி.
தேனி மாவட்டம் மட்டுமல்ல... திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை என விரிந்து பரந்திருக்கிற தென் தமிழக நிலப்பரப்பு, பென்னிகுக் கட்டிய அணையால்தான் இன்னமும் பிழைத்துக் கிடக்கிறது. மின்சாரம் தயாரித்து காசு பார்க்கிற ஆசையில், தமிழக மக்கள் பிழைப்பில் மண்ணைப் போடுகிற செயலில் கேரளத்தவர்கள் இறங்குவார்களேயானால், என்னென்ன விபரீதங்கள் நடக்கும் என்பதற்கான முன்னோட்டங்கள் கடந்த சில நாட்களாக எல்லையிலும், இன்னும் பிற நகரங்களிலும் நடந்து கொண்டிருக்கின்றன. கேரளாவில் நடப்பது அரசியல்வாதிகளால் தூண்டிவிடப்பட்ட வன்முறைகள். ஆனால், இங்கு அப்படி அல்ல. எந்த அரசியல் பின்புலமும் இல்லாமல், மாநிலம் முழுவதும் பொதுமக்களே கொந்தளித்துக் கிளம்பியிருக்கிறார்கள்.
கேரள மக்கள் நடத்தும் வர்த்தக நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டன. ஒரு சில இடங்களில் லேசாக தாக்கவும் பட்டிருக்கின்றனவே தவிர, ஒரு இடத்தில் கூட கேரள மக்கள் தாக்கப்பட்டதில்லை. அவர்கள் மீது ஒரு துரும்பு கூட பட்டதாக தகவல் இல்லை. இது தமிழகத்தின் குணம். ஆனால், எல்லைக்கு அப்பால் நடந்திருப்பவை மிகப்பெரிய சோகம். மாலையணிந்து, விரதம் இருந்து, இருமுடி ஏந்திச் சென்ற தமிழக ஐயப்ப பக்தர்கள், ரத்தக்களறியாகத் திரும்பியிருக்கிறார்கள். கம்பம், கூடலூர் பகுதிகளில் இருந்து கேரள ஏலத்தோட்டங்களுக்குச் சென்ற ஆண், பெண் தொழிலாளர்கள், அங்குள்ள வெறியர்களால் சிறைபிடிக்கப்பட்டு, அனுபவித்த சித்ரவதைகள்.... வேண்டாம், கேரளத்தவர்கள் செய்வது போல, இங்கிருப்பவர்களின் உணர்வுகளை உசுப்பேற்றி வன்முறையை தூண்டுவது இந்தக்கட்டுரையின்நோக்கமல்ல.
முடிப்பதற்கு முன் ஒரு விஷயம்...!
முடிப்பதற்கு முன் ஒரு விஷயம்...!
தேனியில் இருந்து குச்சனூர் வழியாக கம்பம் நோக்கிச் செல்கிற பாதையில் இருக்கிற சின்னஞ்சிறிய, பச்சைப்பசேல் கிராமம் பாலாறுபட்டி. அந்தப் பச்சைப்பசேலுக்குக் காரணம், முல்லைப்பெரியாறு அணை. பென்னிகுக் என்ற பிரிட்டீஷ் பொறியாளரின் வடிவில் கடவுள் அவர்களுக்குக் கொடுத்த கொடை முல்லைப் பெரியாறு அணை. அந்த அணையை தந்த பென்னிகுக்கை அவர்கள் என்றென்றும் நினைவில் வைத்திருக்கிறார்கள்.
தை முதல் தேதியன்று பென்னிகுக் நினைவாக பொங்கல் வைத்து, அவரது உருவப்படத்துக்கு மரியாதை செலுத்துவதில் துவங்கி அறுவடை முடிந்ததும், பென்னிகுக் உருவப்படத்துக்கு முன் வைத்து வணங்குவது வரை, எந்தவிதத்திலும் இந்த மண்ணுடன் தொடர்பில்லாத அந்த பிரிட்டீஷ் பெரியவருக்கு நன்றிக்கடன் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்தக் கிராமங்களில் பிறக்கும் பெரும்பாலான குழந்தைகளுக்கு வைக்கிற முதல் பெயர், பென்னிக்குக் என்ற தகவல், அவர்களது ஈர மனதை யாருக்கும் எளிதில் புரிய வைக்கும்.
அணையை உடைக்கப் போவதாக கேரள அரசியல்வாதிகள் நாடகத்தைத் துவக்கிய அன்று, பாலாறுபட்டி மட்டுமல்ல... அதைச் சுற்றியிருக்கும் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் கொதித்து எழுந்தன. அன்றாட வேலைகளை ஓரங்கட்டி, ஒதுக்கி வைத்து விட்டு ஊர்கூடிப் பேசினார்கள். கடந்த வாரத்தில் பாலாறுபட்டி கிராமத்தில் மிகப்பெரிய ஒரு உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. போராட்ட அரங்கில் எந்தக்கட்சியின் சின்னமும் இல்லை. எந்தத்தலைவரின் படமும் இல்லை. ஒரே ஒரு ஆளுயரப்படம்... கர்னல் ஜான் பென்னிகுக் படம், மிகப்பெரிய மாலை அணிவிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. வயது வித்தியாசமின்றி, ஒட்டுமொத்த கிராம மக்களும் அமைதியான முறையில் நடந்த அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
வயிற்றுப்பிழைப்புக்கு வழி செய்கிற கூலிவேலையையும் ஒதுக்கி வைத்து விட்டு, உண்ணாவிரதப் பந்தலில் உட்கார்ந்திருந்த ஒரு எண்பது வயது பெண்மணியின், நெஞ்சுக்கூட்டுக்குள் இருந்து, உணர்வுப்பெருக்கில் வெளிவந்த வார்த்தைக் குவியல்களை இந்தக் கட்டுரையின் துவக்கத்தில் படித்திருப்பீர்கள். மீண்டும் ஒருமுறை அதை படித்துப் பாருங்கள்.... அந்த அணைக்கு ஒரு நாளும் ஆபத்தில்லை என உங்கள் உள்ளம் தெளிவு பெற்றிருக்கும்!
{இது மலையாளிகளை குறை சொல்லப்பட்ட பதிவல்ல சில ஈனச் செயலில் இறங்கியுள்ள நபர்களுக்கு மட்டுமே இக்கண்டனம்}
நன்றி : வலைத்தள நண்பர்கள்
1 கருத்து:
தென்தமிழகத்தின் வாழ்வும் வளமும் , இந்த "முல்லை பெரியாறு அணை" இன் நீரை நம்பி உள்ளது , அணையும் அதன் நீரும் நமது உரிமை.
கருத்துரையிடுக