தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

2/04/2012

ஆங்கில வார்த்தைக்குப் பொருத்தமான தமிழ் வார்த்தை கிடைக்காது

சில சமயங்களில் நல்ல ஆங்கில வார்த்தைக்குப் பொருத்தமான தமிழ் வார்த்தை கிடைக்காது. மென்டரிங் எனும் வார்த்தையை தமிழ்ப்படுத்த முடியாமல் வழிகாட்டுநர், குரு-சீடர் முறை போன்ற தோராயமாய் அதே பொருளைத்தரும் வார்த்தைகளை பயன்படுத்தவேண்டியுள்ளது. மிகப்பொருத்தமான மாற்று வார்த்தை கிடைக்காதவரை அதே ஆங்கில வார்த்தைகளை தமிழுக்கு தத்தெடுத்துக்கொள்வது தவறில்லை. மென்டரிங் மிகச்சிறந்த வார்த்தை மட்டுமல்ல, அது ஒரு தத்துவம்; தொடர்செயல். சமீபகாலமாக, நமது நிறுவனத்தில் மென்டரிங் விரிவாக பயன்படுத்தப்படுகிறது. நமது செயல்முறைகளிலும் அது பிரதிபளிக்கவேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு தாய், தனது குழந்தைக்கு சாப்பிட, நடக்க, பேச, எழுத சொல்லிக்கொடுத்து வாழ்க்கையை இயல்பாய் எதிர்கொள்ளத் தேவையான திறனை விதைக்கும் செயல்முறையை, நமது பணிச்சூழலில் மூத்தப்பணியாளர் இளம் பணியாளருக்கு ஏற்படுத்தித் தருவதே மென்டரிங் எனலாம். ஒரு குருவின் கடமை சீடருக்கு சொல்லித்தருவது இல்லை, சீடர் கற்றலுக்கான சூழலை ஏற்படுத்துவது என்ற தத்துவம் மென்டரிங்குக்கும் மிகப்பொருத்தம். அன்பே சிவம் படத்தில் கமல், மாதவன் மீது தனது கருத்தை திணிக்காமல், அவர் போக்கில் தன்வயப்படுத்தி, சகமனிதர்கள் மீதான பெருங்கருணையை மாதவனிடம் உண்டாக்குவது மென்டரிங் பற்றிய நல்ல பதிவு. “நான் ஒரு எறும்பைக் கொன்றேன், எனது மூன்று குழந்தைகள் அதை அமைதியாக கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்” என்ற ஜென் கவிதையை படித்தபோது, எனக்குள் சிலிர்த்தது. சூழலின் எல்லாப் பக்கத்திலும் நம்மால் காணமுடியாத கண்கள் இருக்கின்றன. அறியாமல் நான் செய்யும் வன்முறையை, தவறை சுற்றிலும் பல கண்கள் பார்த்துக்கொண்டு தானே இருக்கின்றன. நான் என்னை ஒழுக்கப்படுத்திக்கொள்ளாமல் மென்டரிங் முறையில் நேர்மையாக பங்கெடுக்கமுடியாது என்றே தோன்றியது.
நாம் புழங்கும் சமூகம், நமக்கு மிகமுக்கிய மென்டராக இருந்து வருகிறது. ஒருமுறை வறட்சியின் பிரச்னைகள் குறித்து சிவகங்கை பகுதியில் ஒரு விவசாயியிடம் பேசிக்கொண்டிருந்த போது, “மழை பெஞ்சா நெல்லை விப்போம்; பெய்யலனா நெலத்த விப்போம்” என்று பேச்சுவாக்கில் அவர் கூறியது கேட்டு அசந்துபோனேன். வறட்சி; அதன் விளைவு; அதனை அவர்களின் வாழ்க்கை முறையோடு இயல்பாய் பொருத்திக் கொண்ட பக்குவம் இதையெல்லாம் யோசித்தபோது, அவர்களுக்குச் சொல்ல எந்த செய்தியுமில்லாமல் நான் நின்றிருந்தேன். சமீபத்தில் பார்த்த ஒரு திரைப்படத்தில், “தெருக்களில் இறங்கித் தேடும்போது, எல்லாம் கிடைக்கும். நமது கேள்விகள் அனைத்துக்கும் தெருக்களில் பதிலுள்ளது” என்ற வசனம் வரும். அது சத்தியமான உண்மை. கிராமத்துக்கு சென்று திரும்பும் ஒவ்வொறு முறையும் கிராமம் எனக்கு ஏதாவதொரு செய்தியை சொல்லித்தந்து அனுப்பும் மென்டாரிங் முறை எப்போதும் உற்சாகமான அனுபவம்.

கருத்துகள் இல்லை: