தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

2/16/2012

பொருத்தமான பணி




உங்களுக்கு பொருத்தமான பணி எது?-



நல்ல சம்பளத்தில், நல்ல வேலை வேண்டும் என்று ஆசைப்படும் அதேநேரத்தில், நாம் எந்த வேலைக்குப் பொருத்தமானவர்கள் என்பதையும் ஆராய வேண்டும். நம்முடைய திறமைகள், தகுதிகள் மற்றும் பின்னணிகள் குறித்து சுய பகுப்பாய்வை மேற்கொண்டாலொழிய, பொருத்தமான பணியை நாம் பெறுவதென்பது இயலாத காரியமே. எனவே சுய பகுப்பாய்வு தொடர்பான சில ஆலோசனைகள் இங்கே வழங்கப்பட்டுள்ளன.


தொழில்ரீதியிலான பகுப்பாய்வு


வேலை தேடுதலில் உள்ள மிகப் பிரதானமான அம்சம் என்னவெனில், உங்களுக்குள் இருக்கும் ஆர்வத்தையும், தொழில்முறை குறிக்கோள்களையும் பகுப்பாய்வு செய்வதாகும். ஏனெனில், நம்மில் பெரும்பாலானோர், உள்ளார்ந்த திறன்கள் மற்றும் விருப்பங்களைக் கண்டு கொள்வதில்லை. இதனால்தான், பல்வேறான சிக்கல்களை சந்திக்கிறோம். நேர்முகத்தேர்வின்போது, சம்பிரதாயமாக கேட்கப்படும் "உங்களைப் பற்றி சொல்லுங்களேன்" என்ற கேள்விக்கு சாதாரணமாகவும், தெளிவாகவும் பதில்சொல்ல பலரும் திணறுவர். எனவேதான், உங்களின் உள்ளக்கிடக்கையைப் பகுப்பாய்வு செய்வது முக்கியமான செயல்பாடு என்கிறோம். கீழ்வரும் கேள்விகளுக்கு பதில் சொல்லிப் பாருங்கள்,


1. வாழ்க்கையில் நான் என்ன செய்ய விரும்புகிறேன்?


2. என்னுடைய பணி நோக்கங்கள் என்னென்ன?


3. என்னுடைய நீண்டகால லட்சியங்கள் என்னென்ன?


4. அடுத்த 5 அல்லது 10 வருடங்களில் எனது நிலை என்னவாக இருக்கும்?


5. எனது குறுகியகால பணி குறிக்கோள் என்ன?


6. எனது பணி விருப்பங்கள் என்னென்ன?


7. எனது பணி முன்னுரிமைகள் என்னென்ன?


மேற்கூறிய கேள்விகளுக்கு தெளிவான பதிலளித்து பழகிவிட்டாலே போதும், உங்களின் வேலை விஷயத்தில் ஒரு தெளிவான முடிவை உங்களால் எடுக்க முடியும்.


பின்புல பகுப்பாய்வு


ஒரு வேலையைத் தேடும் முன்பாக உங்களது கல்வி மற்றும் தொழில்முறை பின்னணிப் பற்றி யோசித்துக் கொள்ள வேண்டும். மேலும், எந்த வகையான பணி நிலைகள் உங்களுக்கு ஒத்துவரும்? நீங்கள் விரும்பும் பணி நிலைகளுக்கு ஏற்றவாறு உங்களின் கல்வித் தகுதி இருக்கிறதா? போன்ற அம்சங்களையும் விரிவாக யோசிக்க வேண்டும். ஏனெனில், உங்களிடம் சிறந்த கல்வித் தகுதிகள் இருக்கலாம் மற்றும் பிரமாதமான அனுபவங்கள் இருக்கலாம். ஆனால் ஒரு குறிப்பிட்ட பணிக்கான நேர்முகத் தேர்வின்போது, அப்பணிக்கு நீங்கள் எவ்வாறு பொருந்துகிறீர்கள் என்பதை மட்டுமே அவர்கள் பார்ப்பார்கள். எனவே, நேர்முகத்தேர்வின்போது, உங்களது கல்வி மற்றும் அனுபவப் பின்னணி குறித்து குறைந்தபட்சம் 2 நிமிடங்கள் வரை நேர்மறையாக பேசுவதற்கு பயிற்சி எடுக்கவும்.


திறன் மதிப்பீடு


ஒவ்வொரு விதமான பணியை செய்வதற்கும், ஒரு குறிப்பிட்ட விதமான திறன்களும், தகுதிகளும் தேவைப்படும். எனவே, உங்களிடம் இருக்கும் திறன்கள் மற்றும் தகுதிகள் பற்றி மதிப்பாய்வு செய்ய வேண்டும். இத்தகைய மதிப்பாய்வானது, உங்களின் உள்ளார்ந்த மற்றும் கற்றல் மூலமான திறன்கள் ஆகிய இரண்டையும் சார்ந்தது. உள்ளார்ந்த திறன் என்பது உங்களது ஆளுமையோடு தொடர்புடையது. கற்றதன் மூலமான திறன்கள் மற்றும் உள்ளார்ந்த திறன்களுக்கு சில உதாரணங்கள்


கற்றல் மூலமான திறன்கள்


கம்ப்யூட்டர் ப்ரோகிராமிங், டேட்டா ப்ராசஸிங், மார்க்கெடிங், வாகனம் ஓட்டுதல், நிர்வாகம், கலந்துரையாடுதல், வெளிநாட்டு மொழி, பிசினஸ் ரைட்டிங், இன்டர்பெர்சனல் ஸ்கில்ஸ், பேரம்பேசும் திறன், பொதுமக்கள் தொடர்பு, தொழில்முறையாக பேசுதல், கவனித்தல், மேலாண்மை, திட்டமிடுதல், ஒருங்கிணைதல், பொதுக்கூட்ட உரை, விற்பனை, மேற்பார்வை, நேர மேலாண்மை, கற்பித்தல் மற்றும் பயிற்சி.


உள்ளார்ந்த திறன்கள்


சூழலுக்கேற்ப மாறிக்கொள்ளுதல், பகுப்பாய்வு செய்தல், அழுத்தம் திருத்தமாக பேசும் திறன், உறுதித்தன்மை, பரந்த மனப்பான்மை, தைரியம், படைப்புத்திறன், முடிவெடுத்தல், ராஜதந்திரம், விவேகம், சுயதிறம், தொலைநோக்குப் பார்வை, கற்பனைத்திறன், முன்முயற்சி, தலைமைத்துவம், உற்சாகப்படுத்தல், சீரிய நோக்கம், பொறுமை, விடாமுயற்சி, வளமை, அக்கறை, உடல்திறன் மற்றும் குழு ஒருங்கிணைப்பு


முதலில், உங்களிடம் இருக்கும் திறன்களை பட்டியலிட்டுக் கொள்ளுங்கள். அடுத்ததாக, நீங்கள் சேரக்கூடிய பணிக்குத் தேவையான திறன்கள் எவை என்று அடையாளம் கண்டு, அவற்றை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.


பொருத்தமான பணியைத் தேடுதல்


உங்களுக்குப் பொருத்தமான பணியைத் தேடுவதில் பலவிதமான நுட்பங்களை கையாள வேண்டும். தொழில்முறை சார்ந்த நபர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளுதல், ஆசிரியர்கள், பள்ளி மற்றும் கல்லூரித் தோழர்கள் மற்றும் பழைய மாணவர்கள் ஆகியோருடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளுதல், பலவிதமான இணையதளங்களில் தேடுதல் உள்ளிட்ட பலவிதமான வழிமுறைகளைப் பயன்படுத்தி, உங்களுக்கான பொருத்தமான பணியைத் தேடலாம்.






இன்டர்வியூவில் கேட்கப்படும் கேள்விகளின் வகைகள்-


ஒரு நேர்முகத் தேர்வு செயல்பாட்டைப் பொறுத்தவரை, கேள்வி-பதில் பகுதிதான், அனைத்திற்கும் தலையாய அம்சமாக விளங்கி, அந்த செயல்பாட்டிற்கே அர்த்தத்தைக் கொடுக்கிறது. பொதுவாக, எந்தமாதிரியான கேள்விகள், நேர்முகத்தேர்வில் கேட்கப்படும் என்பதை நீங்கள் தெரிந்துகொண்டால், நேர்முகத் தேர்வின்போது, அவற்றை எளிதாகப் புரிந்து, தெளிவாக பதிலளித்து வெற்றிபெற ஏதுவாக இருக்கும். பொதுவாக, 7 வகையான கேள்விகள் உங்களிடம் கேட்கப்படும். அவற்றின் விபரங்கள்;


வெளிப்படையான கேள்விகள்


உங்களை இலகுவாக உணரவைத்து, ஊக்கப்படுத்தி பேச வைப்பதற்கே இத்தகைய கேள்விகள் கேட்கப்படுகின்றன. மேலும், உங்களை தீவிர சிந்தனைக்குள் தள்ளும் வாய்ப்பை அதிகப்படுத்தவும் இந்தவகை கேள்விகள் கேட்கப்படுகின்றன. உதாரணமாக,


1. உங்களைப் பற்றி சொல்லுங்கள்


2. உங்களின் விருப்ப விஷயங்கள் மற்றும் செயல்பாடுகள் என்ன?


3. உங்களுக்கு சமீபத்தில் ஏற்பட்ட நெருக்கடி சூழல் என்ன?


4. கலப்பு பொருளாதாரத்தின் நன்மைகள் என்ன?


5. இந்திய பொருளாதாரத்தில் பன்னாட்டு கம்பெனிகளின் தாக்கம் எப்படி?


Closed கேள்விகள்


இந்தப் பகுதியில் கேட்கப்படும் கேள்விகள், முந்தையப் பகுதி கேள்விகளிலிருந்து மாறுபட்டது. உதாரணமாக,


1. உங்கள் படிப்பை எப்போது முடித்தீர்கள்?


2. பட்டப்படிப்பில் உங்களது பாடப்பிரிவு என்ன?


3. உங்களின் முதல் தொழில்முறைப் பயிற்சியை எங்கே பெற்றீர்கள்?


4. உங்களுக்கு டேட்டா ப்ராசஸிங் தெரியுமா?


விசாரணைக் கேள்விகள்


இந்தவகை கேள்விகள், ஒரு தலைப்பு அல்லது விஷயம் பற்றி விரிவாகப் பேசும் பொருட்டு, உங்களை உற்சாகப்படுத்த கேட்கப்படுகின்றன.


Reflective கேள்விகள்


ஒரு இன்டர்வியூவில், நீங்கள் சொன்ன விஷயங்களை, நேர்முகத் தேர்வுகளை நடத்துபவர் புரிந்துகொண்டதை உறுதிசெய்ய இத்தகைய கேள்விகள் கேட்கப்படுகின்றன. உதாரணமாக,


1. நீங்கள் சொல்வதைப் பார்த்தால், இந்தியாவிலுள்ள பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தையும், தனியார்மயமாக்கிவிட வேண்டும் என்று நினைக்கிறீர்களா?


2. இந்தியாவின் பொருளாதார சுதந்திரத்தை நீங்கள் எதிர்க்கிறீர்கள் என்று நான் நினைக்கிறேன், சரியா?


3. திரைப்படங்களில் வரும் வன்முறை காட்சிகளை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என்றுதானே நீங்கள் கூறுகிறீர்கள்?


Loaded கேள்விகள்


ஒரு கடினமான அல்லது சிக்கலான சூழலை சமாளிக்கும் திறன் உங்களுக்கு இருக்கிறதா? என்று சோதித்து அறியும் பொருட்டு, இவ்வகை கேள்விகள் உங்களிடம் கேட்கப்படுகின்றன. உதாரணமாக,


1. நீங்கள் மிகவும் குள்ளமாக இருக்கிறீர்கள், இதை ஒரு ஊனமாக நீங்கள் கருதவில்லையா?


2. பாபர் மசூதி இருந்த சர்ச்சைக்குரிய இடத்திலேயே ராமர் கோயில் கட்டப்பட வேண்டுமா?


Hypothetical கேள்விகள்


இத்தகைய கேள்விகளும் Loaded கேள்விகளைப் போலத்தான். ஒரு செயற்கையான சூழ்நிலை உங்களுக்குத் தரப்பட்டு, அதற்கேற்ப நீங்கள் எவ்வாறு முடிவெடுக்கிறீர்கள் என்ற வகையில் உங்களது திறனை சோதிக்க இதுபோன்ற கேள்விகள் கேட்கப்படுகின்றன. உதாரணமாக,


1. நிறுவனத்தின் லாரி மோதியதால் ஒரு தொழிலாளி காயமடைந்துள்ளார். இதனால் கொதிப்படைந்த இதர தொழிலாளர்கள், நிறுவனத்தின் இதர வாகனங்களை அடித்து நொறுக்க எத்தனிக்கிறார்கள். அத்தகைய சூழ்நிலையை ஒரு மேலதிகாரி என்ற முறையில் எவ்வாறு கையாள்வீர்கள்?


2. உங்கள் சக ஊழியர்களில் ஒருவர், நிறுவனத்திற்கு ஒவ்வாத ஒரு காரியத்தைப் பணத்திற்காக செய்வதை நீங்கள் கண்டுபிடிக்கிறீர்கள். சிகிச்சைப் பெறும் தனது நோயாளி தாயாருக்காக அவர் இந்தத் தவறை செய்கிறார் என்பதும் உங்களுக்குத் தெரியவருகிறது. அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்?


Leading கேள்விகள்


உங்களிடமிருந்து சாதகமான பதில் வருகிறதா? என்பதை சோதிக்க இத்தகைய கேள்விகள் கேட்கப்படுகின்றன. உதாரணமாக,


1. எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் நமது நிறுவனம் சந்தையில் முன்னனியில் இருக்கிறது என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?


2. பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்துகின்றன என்ற கருத்தில் உங்களுக்கு உடன்பாடு உண்டா?


3. நமது நாட்டின் பொருளாதார அமைப்பில் அந்நிய முதலீட்டை அதிகரிக்க வேண்டும் என்று கருதுகிறீர்களா?


மேற்கூறிய கேள்வி வகைகளை கையாளும் முறைகள்


ஒரு கேள்விக்கு நீங்கள் எவ்வாறு பதிலளிக்கிறீர்கள் என்ற முறை, நீங்கள் அளிக்கும் பதிலைவிட முக்கியமானது. இதன்மூலம் உங்களது தகவல்தொடர்பு திறன் வெளிப்படுகிறது. கேள்விகளை கையாளும் முறை குறித்து சில விரிவான ஆலோசனைகள் கீழே வழங்கப்பட்டுள்ளன.


கவனித்தல்


ஒரு நேர்முகத் தேர்வில் கேட்கப்படும் கேள்விகளை சரியாக கவனிக்காத பட்சத்தில், சரியான பதில்களை வழங்க முடியாது. எனவே, கவனம் என்பது மிக முக்கியம். இன்டர்வியூ எடுப்பவர், பேசும்போதே நீங்கள் குறுக்கே பேசக்கூடாது. எதிலும் அவசரப்படக்கூடாது. அவர் முழுவதுமாக பேசி முடிக்கும்வரை பொறுமையாக இருக்க வேண்டும். இல்லையெனில், நீங்கள் ஆரம்ப கட்டத்திலேயே வெளியேற்றப்படுவீர்கள்.


நுட்பம் முக்கியம்


நீங்கள் அளிக்கும் பதிலானது, நுட்பமாகவும், தெளிவாகவும் இருக்க வேண்டும். தேதி, நேரம், நபர், இடம் போன்ற விஷயங்களை தெளிவாக தெரிந்துகொண்டு, தவறின்றி பதிலளிக்க வேண்டும். உங்களுக்கு தேதி, நபர் போன்ற நுட்பமான விஷயங்கள் சரியாக தெரியவில்லை எனில், அவற்றை குறிப்பிட வேண்டாம். ஏனெனில், முழுமையற்ற மற்றும் தவறான பதில்கள் உங்களது வாய்ப்பினை குறைக்கலாம். இன்டர்வியூ நடத்துபவரை ஏமாற்ற நினைக்க வேண்டாம். அது உங்களுக்கே ஆபத்தாக முடியலாம். தவறான பதிலை தருவதைவிட, பதில் தெரியாது என்று ஒப்புக்கொள்வது நல்லது. அது உங்கள் மேல் ஒரு மரியாதையை ஏற்படுத்தும். ஏனெனில், அனைவருக்கும், அனைத்தும் தெரிந்திருக்காது. உங்கள் குறையை ஒப்புக்கொள்வதில் தவறில்லை.


சுருக்கமாக பதிலளித்தல்


என்ன கேள்வி கேட்கப்படுகிறதோ, அதற்கு ஏற்றவாறு சுருக்கமான, தெளிவான பதிலை கூறுங்கள். கேள்வியை நன்கு கவனித்தல் முக்கியம். நீளமான பதில் சிறப்பான பதில் என்று அர்த்தமல்ல. ஒரு கேள்விக்கு பதிலளிக்க 1 நிமிடத்திற்கு மேல் எடுக்க வேண்டாம், அது மிகவும் சிக்கலான கேள்வியாக இருந்தால் தவிர.


குறிப்பான பதில்


பலர், நேர்முகத் தேர்வில் பதிலளிக்கும்போது, கேள்விக்கு தொடர்பில்லாது விஷயங்களையும் சேர்த்துப் பேசுகின்றனர். இதன்மூலம் கேள்வி கேட்பவரை கவர முயல்கின்றனர். ஆனால் இது தவறு. கேள்விக்கான சரியான பதிலை அளிப்பதே, குறிப்பிட்ட வேலைக்கு நீங்கள் பொருத்தமானவர் என்ற எண்ணத்தை கேள்வி கேட்பவரிடம் விதைக்கும். சரியான, முறையான மற்றும் சிறப்பான வார்த்தைகளை பயன்படுத்துவது நல்லது. கேள்விக் கேட்பவரை குழப்பும் விதத்தில் பதிலளிக்க வேண்டாம்.


தெளிவான பதில்


நேர்முகத்தேர்வில் நீங்கள் கூறும் பதிலானது, தெளிவானதாகவும், நேரடியானதாகவும் இருக்க வேண்டும். "நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? இன்னொருமுறை சொல்ல முடியுமா? போன்ற கேள்விகளை இன்டர்வியூ நடத்துபவர்கள் கேட்காத வண்ணம் உங்களின் பதில் இருக்க வேண்டும். உங்களுடைய மொழித்திறன், உங்களின் தொழில்திறனை பிரதிபலிக்கிறது. எனவே, தெளிவாக பேசத் தெரிந்தவரே, இன்டர்வியூ நடத்துபவர்களை கவர முடியும்.


நேர்மறையாக பதிலளித்தல்


உங்களுக்குள் இருக்கும் எதிர்மறை எண்ணங்களை வெளிக்கொணர, வேண்டுமென்றே உங்களிடம் எதிர்மறை கேள்விகள் கேட்கப்படலாம். எனவே, நீங்கள் எதிர்மறை கேள்விகள் கேட்கப்பட்டாலும்கூட, நேர்மறையாகவே பதிலளிக்க வேண்டும். அப்போது, உங்களின் வாய்ப்புகளை நீங்கள் அதிகப்படுத்திக்கொள்ள முடியும்.


தர்க்கரீதியான பதில்கள்


உங்களின் தர்க்கரீதியிலான சிந்திக்கும் திறனை அளவிட, அதுதொடர்பான கேள்விகள் கேட்கப்படும். தர்க்கம் மற்றும் பகுத்தறிவற்ற பதில்கள், உங்களின் ஒருங்கிணைக்கப்படாத மற்றும் அமைப்பற்ற ஆளுமைத்திறனை வெளிப்படுத்தும். எனவே, பதிலளிக்கையில் இதுபோன்ற அம்சங்களில் மிகவும் கவனமாக இருக்கவும்.


வழக்கமான கேள்விகள்


ஏறக்குறைய, அனைத்து இன்டர்வியூக்களிலும், சில வழக்கமான கேள்விகள் எப்போதுமே கேட்கப்படும். எனவே, அதுபோன்ற கேள்விகளை அடையாளம் கண்டு, அதற்கேற்ப உங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், உங்களின் நண்பர்களை வைத்து, ஒரு மாதிரி இன்டர்வியூ நிகழ்ச்சியையும் நடத்திப் பார்க்கலாம். இதன்மூலம் ஒரு நடைமுறைப் பயிற்சியை நீங்கள் பெறலாம்.


பொதுவாக அனைத்து இன்டர்வியூக்களிலும் கேட்கப்படும் சில கேள்விகள்


1. உங்களைப் பற்றி சொல்லுங்கள்,


2. உங்களின் விருப்பங்கள் மற்றும் அதுசார்ந்த நடவடிக்கைகள் என்னென்ன?


3. பணி தொடர்பாக உங்களின் திட்டங்கள் என்னென்ன?


4. நாங்கள் ஏன் உங்களை இந்தப் பணிக்கு அமர்த்துகிறோம்? அல்லது இந்தப் பணிக்கு நீங்கள் எவ்வாறு பொருத்தமானவர்?


5. எங்கள் நிறுவனத்தில் சேர நீங்கள் ஏன் விரும்புகிறீர்கள்?


6. உங்கள் பணி அனுபவம் குறித்து சொல்லுங்கள்.


7. உங்களைப் பொறுத்தவரை, ஒரு சிறந்த நிறுவனத்தில் பணிக்கு சேர்வது என்றால் என்ன?


8. படிப்பில் நீங்கள் செய்த சில சாதனைகளைப் பற்றி கூறுங்கள்


9. இந்தப் பணியை நீங்கள் விரும்புவதற்கான காரணங்கள் என்ன?


10. தற்போது நீங்கள் செய்துவரும் வேலையில் உங்களின் பொறுப்புகள் என்னென்ன?


11. உங்களின் சாதக அம்சங்கள் என்னென்ன?


12. நீங்கள் பணியில் சந்தித்த ஒரு சவாலான பிரச்சினை மற்றும் அதைத் தீர்க்க நீங்கள் கையாண்ட வழிமுறை ஆகியவற்றைப் பற்றி கூறுங்கள்.


13. உங்கள் பலவீனம் என்று நீங்கள் எதைக் கருதுகிறீர்கள்?


14. உங்களை நீங்கள் எவ்வாறு மதிப்பிட்டுக் கொள்கிறீர்கள்?


15. நீங்கள் ஒரு வழிகாட்டியா? அல்லது வழிநடப்பவரா?


16. எங்கள் நிறுவனத்தில் நீங்கள் எவ்வளவு நாட்கள் பணிபுரிய உத்தேசித்துள்ளீர்கள்?


17. நீங்கள் விரும்புவது முழுநேரப் பணியா? அல்லது பகுதிநேரப் பணியா?


18. சற்று கீழ்நிலைப் பணியாக இருந்தாலும், சிறிதுகாலத்திற்கு அதை ஒப்புக்கொள்வீர்களா?


19. எங்களின் நிறுவனத்தில் எப்போது சேர விரும்புகிறீர்கள்?


இதுபோன்ற கேள்விகளுக்கு, நேர்மறையான, நம்பிக்கையான, சாதுர்யமான, தெளிவான, சுருக்கமான, எளிமையான முறையில் பதிலளிக்க பயிற்சி எடுக்க வேண்டும். பின்னர், வெற்றி தானாக உங்களைத் தேடிவரும்.



கருத்துகள் இல்லை: