தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

4/27/2012

ஆதீனங்களின் தலைமைப் பொறுப்பு

தங்களையும், கடவுள்களின் மீதான மக்களின் நம்பிக்கைகளையும் பயன்படுத்தி உலகின் அத்தனை அயோக்கியத்தனங்களையும் செய்கிறார்கள் போலிச் சாமியார்கள். இந்த மதம், அந்த மதம் என்றில்லாமல், அனைத்து மதங்களிலும் அசிங்கங்கள் அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன.
ஆண்டுகள் செல்லச் செல்ல மோசடிகளும் அசிங்க செயல்களும் அரசியல், ஆன்மீக உலகில் அதிகரித்து வருகின்றனவே தவிர, கிஞ்சித்தும் குறையவில்லை.
இந்த அசிங்கங்களை துணிந்து செய்யவும், குறிப்பாக ஆன்மீகத்தை பெரும் வர்த்தகமாக்கவும் மக்களின் கண்மூடித்தனமான நம்பிக்கையையே லைசென்ஸாக உபயோகிக்கிறார்கள் அயோக்கிய ஆன்மீகவாதிகள்.
பெண் தெய்வங்களை முன்னிற்க வைத்து, அவற்றின் எதிரிலேயே நாளும் ஒரு பெண்ணுடன் காமக் களியாட்டங்கள் நிகழ்த்தும் போலிச் சாமியார்களின் சாயத்தை முற்றாக வெளுத்தாலும், மீண்டும் மீண்டும் காவிச் சாயத்தை அந்த காம வெறியர்கள் மேல் பூசி, பூஜிக்கும் ஈனத்தனம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
‘எதுவுமே தப்பில்ல…’ என்ற மனநிலைக்கு மக்கள் மாறி வெகு ஆண்டுகளாகிவிட்டதென்றே தோன்றுகிறது.
இந்தியாவின் மெகா ஊழல் செய்த பெண்மணியை முதலில் தோற்கடித்து, அடுத்த தேர்தலில் ஜெயிக்க வைக்கிறார்கள். மக்களைப் பொறுத்தவரை அந்தப் பெண்மணி பதவியில் இல்லாத இந்த 5 ஆண்டுகள்தான் தண்டனையாம். அடுத்த முறையே ஆட்சியைத் தூக்கிக் கொடுத்து அரியணையேற்றி விட்டார்கள். அந்த ஊழல் வழக்கு இன்னமும் இழுத்துக் கொண்டிருக்கிறது. அதைக் குறைந்தபட்சம் கண்டித்துப் பேசக்கூட ஒருவருக்கும் துப்பில்லை! (மனசார கண்டித்தவர்களுக்கு இந்த கடுமொழி பொருந்தாது!)
இன்னொரு பெரும் ஊழலில் பெரியவர் குடும்பம் சிக்கியது. அதற்கு தண்டனையாக திகார் சிறையில் இன்னும் கூட கம்பி எண்ணுகிறார்கள். வழக்கு, விசாரணை… குடும்ப ஆட்சி அகன்றது. இன்னும் நான்காண்டுகள் கழித்து அவர்களின் ஊழலுக்கும் கூட மன்னிப்பு கிடைக்கலாம் மக்கள் மன்றத்தில். மாற்றைப் பற்றி யார் சிந்திக்கிறார்கள்… எது சிறந்த அயோக்கியத்தனம் என்பதில்தான் போட்டியும் தெரிவும்!
ஆக மக்களே சட்டத்துக்கு விரோதமாகத்தான் இருக்கிறார்கள். ஒரு ஊழல்வாதிக்கு 5 ஆண்டுகள், அடுத்த ஊழல்வாதிக்கு 5 ஆண்டுகள் பதவி நீக்கம் மட்டுமே தண்டனை!
மக்களின் வாக்குகளை மூலதனமாக வைத்து வரும் அரசியல் அயோக்கியர்கள் இப்படி என்றால்…
மக்களின் மூட நம்பிக்கையை மூலதனமாக வைத்து ஆன்மீக வியாபாரம் செய்யும் ஃபிராடுகள் நிலை… இதைவிட ஒரு படி மேல்.
என்ன கொண்டு வந்தோம்… எதை இழக்கிறோம்… என்று அவர்கள் தத்துவம் பேசுவது ஆன்மீகத்தை மனதில் கொண்டல்ல. அவர்களை மனதில் கொண்டே. பரதேசியாய், ஓட்டாண்டியாய் காவி கட்டி அறிமுகமாகும் இந்த அயோக்கிய சிகாமணிகள் கொஞ்ச நாளில் கோடி கோடியாக காணிக்கை பெற்று தங்க சிம்மாசனத்தில் அமர்ந்து செங்கோல் பிடிக்கிறார்கள். கேட்க நாதியில்லை. பிச்சைக்காரனாய் திரிந்த பரதேசிக்கு ஒரு பவிசைக் கொடுத்து, கடைசியில் அவன் காலடியிலேயே விழுந்து கிடக்கின்றனர், அறிவைத் தொலைத்த மக்கள்!
மருந்தே வேண்டாம் யாக்கைக்கு, இதோ நான் தருகிறேன் நீறு என்பார்கள். வாயிலிருந்து எச்சிலைத் துப்பி இந்தாடா மருந்து என்பார்கள். தனக்கு மாரடைத்தால் மட்டும் ஆங்கில மருத்துவமனை தேடி ஓடுவார்கள். எடுத்துச் சொன்னால் எவன் கேட்கிறான்!
காலையில் பிரம்மச்சரியத்தை போதிப்பார்கள்… மாலையிலோ யாரோ ஒரு நடிகையுடன் நிர்வாண கோலத்தில் கட்டித் தழுவி சுகமாய் இருப்பார்கள். அசிங்கம் அம்பலத்துக்கு வந்து, மக்கள் காறித் துப்பினாலும் துடைத்துக் கொண்டே, அரசியல் ஆதரவு தேடிக் கொள்கிறார்கள். அத்தனை சாட்சிகள் இருந்தும், மனசார ‘நான் தவத்திலிருந்தேன்.. என்னை சல்லாபத்துக்கு பயன்படுத்திக் கொண்டார்கள்,” என்று சாதிப்பார்கள். உளவியல், களவியல், மனித உரிமையியல் என்று ஏதோ இயலைச் சொல்லிக் கொண்டு ஒரு கூட்டம் இவர்களுக்கு வக்காலத்து வாங்கும். உண்மையைச் சொன்னவனை உள்ளே தள்ளிவிட்டு, செக்ஸ் பார்ட்னருடன் பகிரங்கமாக குண்டலினி எழுப்பலில் மும்முரமாகிவிடுவார்கள்.
இந்தக் குறளி வித்தையைக் கைத்தட்டி ரசிக்க மீண்டும் ஒரு மூடக் கூட்டம் உருவாகும். ஆன்மீக உலகின் கயமைத்தனங்களை ஒட்டுமொத்தமாக குத்தகைக்கு எடுத்த திறமையை அங்கீகரித்து ஆதீனங்களின் தலைமைப் பொறுப்பும் வாரிசுப் பட்டமும் கிடைக்கும். அதற்கு ஆட்சி மேலிடத்தின் பகிரங்க ஆதரவும் கிடைக்கும்.
யார் கண்டது… அடுத்த சட்டமன்றக் கூட்டத்தில் புதிய ஆதீனத்தின் அருள்வாக்கிலிருந்து ஒரு பகுதியை Quotation ஆகக் கூட ஆட்சி மேலிடம் எடுத்துக்காட்டும் கேவலமும் நடக்கும்.
ஆன்மீகவாதி, ஆதீனகர்த்தா, மடாதிபதிகள் கொலை செய்கிறார்கள், கற்பழிக்கிறார்கள், கோயில் கருவறையில் காமம் புரிகிறார்கள், நாளும் ஒரு நடிகையுடன் சல்லாபித்தபடி பிரம்மச்சரியம் உபதேசிக்கிறார்கள்.
திருடர்கள், அயோக்கியர்கள், மக்கள் விரோதிகள் எந்த நியாயத்துக்கும் அடங்குவதே இல்லை. கொள்ளை, களவானித்தனத்தை மட்டுமே தகுதியாய்க் கொண்டு ஆட்சிப் பீடத்தை அலங்கரிக்கிறார்கள்.
ஆக, யோக்கியர்களுக்கு இங்கு வாழத் தகுதியில்லையப்பா… ஆட்சியிலும் ஆன்மீகத்திலும் கயவர்கள்… கயவர்கள் தயவில் கயவர்கள் ஆளும் கயவர்கள் தேசமடா!

எண்ணங்களுடன் : கோவை அ.ராமநாதன் 

கருத்துகள் இல்லை: