தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

2/18/2013

"500" - நன்றிகள் கோடி!!!


வேடிக்கையாகத்தான் எழுத ஆரம்பித்திருந்தேன்..பின்னர் அதுவே ஒரு வாடிக்கை ஆகிவிடும் என்பதறியாமல்!
சிறுவயதில் தம் மகற்கு ,சேமிப்பு பழக்கத்தை கற்று தருவதற்காக ,பெற்றோர்கள் வாங்கித்தரும் உண்டியலைப் போல்தான், என் தமையன் உருவாக்கி தந்தது இந்த வலைத்தளமும்..நீதான் கிறுக்குவியே..அதை இங்கே கிறுக்குடா ..உனக்குன்னு ஒரு பக்கம் இருக்கட்டும்,அதில் உமது எழுத்துகள் சேமிப்பாகட்டும் என்று சொல்லி…
உண்டியலில் ஒவ்வொரு நாளும் பத்து பைசா,ஐம்பது பைசா,ஒரு ரூபாய் என கையில் கிடைத்ததை கொண்டு ரொப்பி,பார்த்து பார்த்து சேமித்து,குலுக்கி பார்த்து மனமகிழ்ந்து,அதன் கனத்தினை கையில் நிறுத்திப் பார்த்து..ஆஹா..நிரம்பிக்கொண்டிருக்கிறது..என பெருமகிழ்வு கொண்டு,பின்னொருநாளில் ,உண்டியல் நிரம்பி இருக்கிறது ..உடைத்துப் பார்ப்போமென,உடைத்து எண்ணிலடங்கா சில்லறைகளை எண்ணிடும் வேளையில் ..நாமா சேர்த்தோம் இவ்வளவு பணத்தை.. என்று மனதில் வருமே ஓர் மட்டற்ற மகிழ்ச்சி.. அதே மகிழ்ச்சிதான் இன்று எம்மை ஆட்க்கொண்டிருக்கிறது..
ஒவ்வொருநாளும் ஒவ்வொன்றாய் கிறுக்கி..நாமா எழுதிவிட்டோம் 500 பதிவுகள் எனுமளுவுக்கு என்னை பிரமிக்க செய்கிறது ..பேரானந்தம் சூழ்கிறது.
நானும்,எழுதுகிறேன் என்பதில் தொடங்கி ,நல்லாத்தான் எழுதுறீங்க..தொடருங்க..என சொல்லிடும் பின்னூடங்களில் மனதை பறிகொடுத்து,வாழ்த்துக்கள் நண்பரே..வளர்க என அன்பர்கள் சொல்லிட கேட்டு,இன்னும் கொஞ்சம் இப்படி இருந்தா நல்லா இருக்கும் என எமை செதுக்கும் சிற்பிகளின் ஆலோசனை பெற்று,இது ரொம்ப மொக்கை என நிராகரிப்போரின் கருத்துகள் ஏற்று,கிறுக்கும் ஆர்வம் என்னில் ஓர் கிறக்கத்தை ஏற்ப்படுத்தி விட்டது.
கிறுக்கிகொண்டிருக்கிறேன்,கிறுக்கினேன்,கிறுக்கி கொண்டே இருப்பேன் எனுமளவுக்கு அன்பர்களின் ஆதரவு என்னை ஆழமாக்கி விட்டது.எழுதும் ஆர்வத்தை அதிகமாக்கி விட்டது.
அன்பர்கள் ஒவ்வொருவரின் பெயராக குறிப்பட்டு எழுதவேண்டுமென்று ஆசை கொண்டேன்…நேரமின்மையால்  எழுத இயலவில்லை..இருந்தாலும்..என்னை பதிவுலக வாழ்விற்கு அறிமுகம் தந்து  தொடர்ந்து பதிவிட எனக்குள் ஒருவித சிந்தனையை வளர்த்த என் அண்ணன் திரு வ.மு.முரளி அவர்களுக்கு என் இதயம்கனிந்த  நன்றி சொல்ல கடமைப் பட்டுள்ளேன்..இந்நன்நாளில்!
500 பதிவுகள் எழுதும் அளவிற்கு என் எழுத்திற்கு உரமிட்ட பதிவுலக நண்பர்களுக்கும்,என் குடும்பத்துக்கும் ,என் இறைவனுக்கும் மிக மிக கோடான கோடி நன்றிகள் ...........இத்துடன் இவர்களுக்கு இதை சமர்ப்பணம் செய்ய உள்ளேன் 

சமர்ப்பணம் என்ன‌ வேண்டி கிடக்கிறது.. இதை தட்டச்சு செய்யும் பொழுது உதிரும் இந்த ரெண்டு சொட்டு கண்ணீர் தான் அதை செய்து விட்டதே!

கருத்துகள் இல்லை: