தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

2/09/2013

விஸ்வரூபம்



நல்ல சினிமாவை உடனே பார்க்க வேண்டும், அது கொடுக்கும் அனுபவத்தில் மூழ்கி திளைக்க வேண்டும் என என்னும் ரசிகர் கூட்டம் தமிழ்நாட்டில் ரொம்பவே அதிகம்.

அவரின் இந்த புதிய படைப்பு  நிறைய சாதனைகள், கொஞ்சம் சர்ச்சைகள், சந்தேகங்கள் என கலந்து கட்டிய ஒரு பொட்டலமாய் நமக்கு  வழங்கபட்டிருக்கிறது. வெறும் வாயிற்கு அவல் கிடைத்தாலே சந்தோஷப்படுவான் ரசிகன்...  இது உலக தரத்தில் தயாரிக்கப்பட்ட செமத்தியான தீனி. முதல் காட்சியில் இருந்தே அதன் சுவையில் மூழ்க ஆரம்பித்து இறுதி வரைக்கும்  அதே ருசியுடன்  விருந்தை பரிமாறியிருக்கிறார் இயக்குனர் கமல். 

கொஞ்சம் ஹை லெவல் திருடன் போலீஸ் விளையாட்டு.   வில்லன்கள்  கூட்டத்தில் ஒரு உளவாளி கலந்து அவர்களின் சதி திட்டங்களை முறியடிக்கும் கதைதான். ஆனால் அல் கொய்தா, தாலிபான் தீவிரவாதிகள் , நியூயார்க்   என  அதற்க்கு ஹை டெக்  வடிவம் கொடுத்து... அந்த வடிவத்திற்கு உண்டான நியாயமான களங்களை காட்சிகளில்... கூர்மையான வசனங்களில் விவரித்திருப்பதுதான் கமலின் திறமை. 

கதக் நடன கலைஞனாக கமலின் நடிப்பு நிச்சயம் பிரமிப்பான விஷயம்தான்.. முக பாவங்கள்... வார்த்தை பிரயோகங்கள்.... உடல் மொழி.. நடை என எல்லாவற்றிலும் அந்த பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.  ஆனால்.... ஆப்கான் மற்றும் ரா அதிகாரி போர்ஷன்களில் பெரிய தனித்துவம்   என்பதையும் குறிப்பிட  வேண்டும்.    

மிக தரமான ஒளிப்பதிவு மற்றும்  ஒலிப்பதிவு ... சிறப்பான லொக்கேஷன்கள்...நேர்த்தியான  காட்சியமைப்புகள்...  மிக மெச்சூர்டான.. ரசிக்க வைக்கும் வசனங்கள்..  படம் பார்க்கும் போது  ஏன் எதற்கு எப்படி என பல  கேள்விகள் முளைத்துக்கொண்டே  இருக்கின்றன.  இருந்தாலும்   அதை எல்லாம் மறக்க செய்யும் ஒரு மெஸ்மரிஸம்....ஒரு மேஜிக்... படத்தில்   எங்கேயோ ஒளிந்து கொண்டு படம் முழுதும் வியாபித்திருக்கிறது.
என் சிறு மூளைக்கு  எட்டிய வரை.. கமல் இந்த படத்தை நேரடியாக ஆங்கிலத்தில் எடுத்திருக்கலாம். சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட சமரசம் செய்து கொள்ளாமல் இன்னமும் படத்தில் பர்பெக்ஷன் கொண்டு வந்திருக்கலாம். (உதாரணம்.. ஆப்கான் தீவரவாதிகள் தமிழ் பேசுவது...  நம்மூரில் அவர்கள் தமிழ் பேசினாலும்.... "இன்னாபா ஆப்கான்காரன் தமிழ் பேசுறான் என கிண்டலடிப்பார்கள்.. அவர்கள் உருது பேசினாலும்... "என்னப்பா, தமிழ் படத்திலே இப்படி இந்தி பேசுறாங்க" எனவும் நம் மக்கள் வாருவார்கள் ) அதே போல... இரண்டாம் பாகம் இருக்கிறது என்பதற்காய்... நிறைய விஷயங்களுக்கு பதிலே சொல்லாமல் படத்தை முடித்திருப்பதும் ஒரு ஏமாற்றம்      

உண்மையான இஸ்லாமியனும் , இஸ்லாம் மதமும் வன்முறையே ஆதரிப்பது இல்லை. அவர்கள் தாலிபான்கள், அல் கொய்தா அமைப்பினரின் ரத்தம் சிந்தும் போராட்டங்களை வெறுக்கவே செய்கின்றனர். இந்த படமும்   அல் கொய்தாவிற்க்கும் தாலிபான்களுக்கும் எதிரான படம்தான் . இஸ்லாத்திற்கு எதிரானது அல்ல. இஸ்லாம் மதம் பற்றியும்...இந்திய  இஸ்லாமியர் பற்றியும் எந்த கருத்துக்களோ... விமர்சனங்களோ இல்லை.   இதில் வில்லன்களாய் சித்திரிக்கபட்டிருப்பவர்கள் அல்  கொய்தா  அமைப்பினரே தவிர இஸ்லாமிய மதம் அல்ல. இந்த படம் சட்டபூர்வமாய்  பார்ப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டு, படம் பார்த்த பின்னர்,   வெகுஜனம், "இதற்காகவா இத்தனை ஆர்ப்பாட்டம்" என நிச்சயம்  நினைக்கும் .... போராட்டத்தை பற்றி மட்டுமல்ல.... படத்தை பற்றியும் கூட...   

எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும், டெக்னிக்கல் விஷயங்கள், தரமான மேகிங் போன்றவற்றுக்காய் விஸ்வரூபம் தமிழில் தவிர்க்க முடியாத ஒரு முக்கியமான படம் 

கருத்துகள் இல்லை: