"வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன்! வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன்! தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன்! கோவை அ.ராமநாதன்
7/16/2011
எனக்கு மட்டும் ஏன் இப்படி?
எனக்கு மட்டும் ஏன் இப்படி? உங்களுக்கு என்றேனும் இப்படித் தோன்றியதுண்டா? இன்றைய பேச்சில் இந்த சுய பச்சாதாபத்தின் விளைவைப் பற்றி பேசப்போகிறோம்.
இந்த சுய பச்சாதாபம் ஒருவனை நிச்சயமாய் நொறுக்கிப் போடும். பொதுவாகவே இந்த சுய பச்சாதாபம் என்பது அண்டிக் கெடுக்கும் நட்பைப் போல.
அதுவும் கருணை பொழியும் பாசத்துடன் மிக அக்கறை கொண்ட நட்பைப் போல் நமக்குள் இருந்து நெஞ்சை வருடிவிட்டு நம்மை அழித்துவிடும்
செயலை இது சத்தமின்றி செய்துவிடும்.
நம்மை இது சிந்திக்கவே விடாது. நமது சூழலையும் ஆராய விடாது. ஆக நமது சூழலில் இருக்கும் சாதகமான காரணிகள் எவையும் கண்ணில் படாது மாறாக
பாதகமான காரணிகளாக நாம் கருதுபவைகள் மட்டுமே நம்மை அச்சுறுத்திக்கொண்டு பூதாகர வடிவெடுப்பதோடு மட்டுமல்லாது நாம் கொண்டுள்ள தன்னம்பிக்கையை
சுத்தமாய் உறிஞ்சி இழுத்து நம்மை செயலிழக்கவும் செய்துவிடும்.மேலும் நமக்குள் தாழ்வு மனப்பான்மையைத் தூண்டிவிடுவதோடு மட்டுமல்லாது உலகமே நமக்கு
எதிராக இருக்கிறது என்னும் நினைப்பையும் நம்முள் வளர்த்துவிடும்.
இந்த சுய பச்சதாபம் - self pity - என்பது நம்மை ஏறக்குறைய ஒரு பக்கவாதம் தாக்கியவரைப்போல நம்மை கிடத்தி நாம் எப்போதும் மற்றவரது
உதவியையே நாடி இருக்கும் படி செய்வதோடல்லாமல் மன ரீதியாக நாம் இப்படி இருப்பதும் மற்றவர்கள் நமக்கு உதவி புரிவதும்சரி என்று காரணம் கற்பிப்பதோடல்லாது
நமது இந்த நிலைக்கு காரணம் நம்மைச் சுற்றியுள்ளவர்கள்தானே தவிர நாம் அல்ல என்னும் மாயையினை உருவாக்கி மற்றவர்களை விரொதிகளைப்போல
நம்மை பார்க்கத் தூண்டி சமுதாயத்திற்கும் நமக்கும் இடையே பெரும் இடைவெளியை உருவாக்கிவிடும்.
இப்படி ஒருவரை தனிமைப்படுத்தும் இந்த சுய பச்சாதாபம் உள்ளிருந்து பெருகி வெறுப்புக் குவியலாய் சமயம் கிடைக்கும்போது வெடித்து வெளிப்படும். இந்த வெறுப்பு
தனக்கெதிராகவோ அல்லது தன்னைச் சுற்றி இருப்பவர்க்கு எதிராகவோ கிளம்பும்போது அது மிகப் பெரிய பின்விளைவுகளை விளைவிக்கும் .
எனவேதான் இதைக்குறித்து நாம் கவனம் செலுத்தவேண்டியது அவசியமாகிறது.
இத்தகைய சுயபச்சாத்தாபம் நிறைந்தவர்களை சாதரணமாக இருக்கும் மனிதர்களிடமிருந்து பிரித்துக் காட்ட நான் ஊடகங்களில் படித்தறிந்த ஒரு கதையை கீழே
சொல்லியிருக்கிறேன்.
ஒரு தனவந்தன் தனக்குப் பிறந்த இரு பிள்ளைகளிடமும் மிகுந்த வேறுபாட்டைக் கண்டான். அது, மூத்த பிள்ளை எப்போதும் மிகுந்த மகிழ்வுடனும், வாழ்வை
அனுபவிக்கும் தாகத்துடனும் இருக்க இளையவனோ எப்போதும் ஒருவித சோகத்துடனும், தன்னைக் குறித்து ஒரு சுய பச்சாத்தாபத்துடனும் இருந்ததோடு
மட்டுமல்லாது எல்லாச் சூழலிலும் தான் இரக்கமின்றி கொடுமைக்கு உள்ளாக்குவதைப்போல் மிகுந்த துயரத்துடனே வாழ்வைப் பார்த்தான்.
இதைக் கண்ட தனவந்தன் இவர்களது குணங்களை மாற்றும் எண்ணத்துடன் ஒருநாள் பிள்ளைகள் அறியாதவாறு மூத்த மகனது அறையை
குதிரைச்சாணக் குவியலாலும் இளைய மகனது அறையை விளையாட்டு பொம்மைகளாலும் நிரப்பிவிட்டு அடுத்த நாள் அவர்களது
நடவடிக்கைகளை கவனிக்க ஆரம்பித்தான்.
தனவந்தன், தனது இளைய பிள்ளை மகிழ்வுடன் பொம்மைகளுடன் விளையாடிக் கொண்டிருப்பான் எனவும் மூத்த பிள்ளை குதிரைச்சாணக் குவியலைக்
கண்டு மனம் வெறுத்து அதை சுத்தப் படுத்தும் வேலையில் இருப்பான் எனவும் நினைத்தான். ஆனால் நடந்ததோ இவனது எதிர்பார்ப்புகளுக்கு மாறாக இருந்தது.
இளைய பிள்ளை மிகுந்த வருத்தத்துடன் இருந்தான். இவனைக் கண்டதும், “ பாருங்கள் யாரோ எனது அறையில் பொம்மைகளை நிரப்பி வைத்திருக்கின்றனர்.
யார் இத்தனை பொம்மைகளுக்கும் சாவி கொடுத்து இயக்குவது? இவைகளுக்கு சாவி கொடுத்து இயக்கி மாளாது போலிருக்கிறதே.. யாருக்கும் என் மேல் இரக்கமே இல்லை..”
என்று சொல்லி அழுதானாம்.
மூத்த பிள்ளையோ இவனைக் கண்டதும் மிக்க மகிழ்வுடன், “ எத்துனை அதிசயம் பாருங்கள். என் அறை நிறைய குதிரைச்சாணம் இருக்கிறது. இதைப் பார்க்கும் போது
இங்கேதான் எங்கேயோ ஒரு குதிரைக் குட்டி இருப்பதாகத் தெரிகிறது. நான் எப்படியும் இன்று மாலைக்குள் அந்தக் குதிரைக் குட்டியைத் தேடிப்பிடித்து அதன் மீது சவாரி
செய்து விளையாடப் போகிறேன் ..” என்றானாம்.
இப்படித்தான் நமது பார்வைகள் நமது வாழ்வை மாற்றக்கூடிய சக்தி படைத்தவைகள். அப்படிப்பட்ட வல்லமை கொண்ட பார்வைகளையே திருகலாக்கி நமது வாழ்வைக்
கெடுக்க வல்லன நாம் கொள்ளும் சுய பச்சாத்தாபம். எனவே இத்தகைய வாழ்வைக் கெடுக்கும் மன நிலையை விட்டு வெளிவந்து நமது வாழ்வை வளம் பெறச்செய்ய
வல்ல ஒளியைக் காண்போம், சிறக்க வாழ்வோம்.
6/19/2011
வாழ்வின் கடுமையான காலங்கள் நமக்கு வாழக் கற்றுக் கொடுக்கின்றனவா?

வாழ்வின் கடுமையான காலங்கள் ஒருவரது மேம்படலுக்கு மிக மிகத் தேவையானதொன்றாகும். இந்தக் கடுமையான
காலங்கள் நமது அனுபவங்களை வளப்படுத்துவதோடு மட்டுமல்லாது நம் வாழ்வை மேம்படுத்தவும் நமக்கு வாய்ப்பளிக்கிறது.
ஆனால் நம்மில் பெரும்பாலோர் இந்த கடுமையான காலங்கள் சொல்லும் செய்திகளை புரிந்து கொள்ள முடியாமல்
இருப்பதாலேயே நம்மால் இந்த கடுமையான காலங்களை கடக்க முடிவதில்லை.
இந்த கடுமையான காலங்கள் நம்மில் இருக்கும் எதைக் குறித்தும் குறிவைக்கலாம். நமது ஆரோக்கியம், நமது செல்வம்,
நமது உறவுகள் இப்படி நம்மில் இருக்கும் எதைக் குறித்தும் சிக்கல்கள் எழலாம்.
சில நேரங்களில், மேற்சொன்ன வாழ்வின் அடிப்படைக்கான தேவைகளை / காரணிகளை பலமாகக் கொண்டவர்களது
வாழ்வில் இது குறித்து சிக்கல்கள் வர வழியில்லையென்றாலும் அவர்களது தன் முனைப்பு (ego) காரணமாக எழும் பேராசை,
பதவிப் பற்று மேலும் அவர்களது சமுதாய நிலையைப் பெருக்கிக் கொள்ளும் முயற்சி ஆகியவைகள் உருவாக்கும் சிக்கல்களும்
அவர்களுக்கு கடுமையான காலங்களை உண்டு பண்ணலாம்.
ஆனால் இரண்டாவதாக குறிப்பிட்ட இந்தக் கடுமையான காலங்கள் நமக்குள் நடக்கும் முரண்களைக் குறித்து மட்டுமே இருக்கும்.
இது நாம் நம்மை ஏற்றுக் கொள்ள அல்லது நம்மை மாற்றிக் கொள்ள வேண்டி நமது உள்ளத்தில் எழும் சிக்கல்களை மையமாகக்
கொண்டிருக்கும். இதுவும் கடுமையான காலங்கள் தான்.
மேற் சொன்னதுபோல அமையும் தன் முனைப்பு முரண்கள் - ego conflicts - விளைவாக எழும் கடுமையான காலங்கள்
நாம் நம்மை மிகவும் புரிந்து கொள்ள உதவும். இந்த கடுமையான காலங்கள் தீர்க்கமான சிந்தனைகளால் மட்டுமே தீர்க்கப் படக்கூடியது.
நமது சிந்தனைத் தெளிவும், உள் நோக்குப் பார்வையும், நமது முரண்களையும், நம்மையும் குறித்த சிந்தனைகளும் அவைகளை
அறிந்து கொள்ள போதுமான நேரமும் உண்டானால் நமக்கு இந்த கடுமையான காலங்களை கடத்தல் எளிது. அது மட்டுமல்ல
இத்தகைய கடுமையான காலங்கள் நமக்கு நல்ல பக்குவத்தையும் உயிரின் மேம்படுதலையும் அளிக்க வல்லன.
இப்போது நான் முன்னதாக சொன்ன அடிப்படைக் காரணிகள் / தேவைகள் குறித்து விளையும் கடுமையான காலங்களைப் பற்றி பேசுவோம்.
பொருளாதாரச் சிக்கல்கள், தொழில் முறையில் மாற்றங்கள், தோல்விகள், ஆரோக்கியக் குறைபாடுகள் மற்றும் உறவுச் சிக்கல்கள் போன்றன
குறித்து எழும் கடுமையான காலங்கள் தானாகவே விலகிவிடக் கூடியன. ஆனாலும் இத்தகைய காலங்கள் நமக்கு சில
அறிவுறுத்தல்களைச் சொல்லிவிட்டுத்தான் செல்லும்.
இத்தகைய காலங்கள் நமக்கு பொருளாதாரத்தின் முக்கியத்துவத்தையோ, உறவுகளின் முக்கியத்துவத்தையோ அல்லது உறவுகளை
நாம் நிலை நிறுத்திக்கொள்ள விட்டுக் கொடுத்தலின் முக்கியத்துவத்தையோமற்றும் நமது நல்லொழுக்கத்திற்கும் சமுதாய நலனுக்கும்
இருக்கும் தொடர்பையோ அல்லது இவ்வுலகின் நிலையாமை குறித்த உணர்வையோ நமக்குள் அழுத்தமாக பதித்துவிட்டுத்தான் செல்லும்.
இதனாலேயே சிறுவயதுக் காலத்தில் கடுமையான காலங்களை சந்தித்தவர்களது வாழ்க்கை பிற்காலத்தில் பலரும் சிறக்க இருக்கிறது.
அப்படியல்லாது தமது வாழ்வின் பிற்காலத்தில் இத்தகைய கடுமையான காலங்களைச் சந்திக்கும் பக்குவப்படாதவர்களின் நிலை
பரிதாபத்திற்குறியதாகும். மிகச் சிலரே பிறருக்கு வரும் சோதனைக் காலங்களிலிருந்து படிப்பினைகளைப் பெற்றுக் கொள்கின்றனர்.
சிலருக்கு தம்முடன் இருக்கும் தீய நட்பும் மற்றும் போதை போன்ற தீய பழக்கங்களும் தங்களது தெளிவான சிந்தனையை தடுப்பதால்
இவைகளே கடுமையான காலங்களை உருவாக்கி அதிலிருந்து அவர்களை மீள வொட்டாது ஆழ்த்திவிடும். இவர்களது நிலை மிகப் பரிதாபமானதாகும்.
சில நேரங்களில் இந்தக் கடுமையான காலங்கள் தன்னைச் சுற்றியுள்ள சமுதாயத்திற்கே பொதுவானதாக அமைந்து விடுவதும் உண்டு.
எடுத்துக் காட்டாக போர்ச்சூழலில் சிக்கிவிடும் நாடும் அதன் மக்களும் ( உலகப்போர் மற்றும் இலங்கைப் போர்ச் சூழல்) மற்றும் மிகுந்த
வறுமையை ஒரு பொதுவான சூழலாகக் கொண்டுள்ள நாடும் அதன் மக்களும் ( மிக வறுமையில் உள்ள ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் இதர நாடுகள்).
இங்கு இந்தக் கடுமையான காலங்கள் ஒரு சமுதாயத்திற்கே செய்தி சொல்லுவதைப் பார்க்கலாம். இது அந்த சமுதாயத்திற்கு ஒரு சரியான
தலைவனைத் தேடியோ அல்லது ஒரு சரியான கூட்டு முயற்சியைத் தேடியோ இருக்கலாம்.
சரி. இத்தகைய கடுமையான காலங்களை கடப்பது எப்படி?
நம்பிக்கை. நம்பிக்கை ஒன்றேதான் வழி. There is always light at the end of the tunnel. வாழ்க்கைச் சக்கரம் சுழல பொறுமையுடனும்
நிதானத்துடனும் அறிவுக் கூர்மையுடனும் உள்நோக்குப் பார்வையுடனும் காத்திருப்பதுதான் மிகச் சிறந்த வழி. இத்தகைய சிந்தனையை பக்தி
மார்க்கம் தருவதால் சிலர் பக்தி மார்க்கத்தையும் இந்த கடுமையான காலங்களை கடக்க எளிதாய் பயன்படுத்துவர்.
தீய நண்பர்கள் மற்றும் போதை போன்ற தீய பழக்கங்களைக் கொண்டுள்ளவர்கள் இவைகளை விட்டாலன்றி தெளிவான சிந்தனையை
அடைய முடியாது. இவர்களுக்கு இவைகளின் பிடியிலிருந்து மீள்வது மட்டுமே இவர்களை மனிதர்களாக்கும்.
எனவே சரியான பார்வையில் கடுமையான காலங்களைக் கண்டு நிதானத்துடனும் அறிவுக் கூர்மையுடனும் அவைகளைக் கடந்து
அவைகளால் பெறும் படிப்பினைகளைக் கொண்டு வாழ்வை மேம்பட வாழ்வோம்.
5/28/2011
தயக்கம்
மறைவோம் எனத் தெரிந்தும்
உதயமாக மறுப்பதில்லை சூரியன்
உதிர்வோம் எனத் தெரிந்தும்
மலர மறுப்பதில்லை மலர்
தேய்வோம் எனத் தெரிந்தும்
ஒளிர மறுப்பதில்லை நிலா
இன்பமும் துன்பமும்
சேர்ந்தது தான் வாழ்க்கை
எனத் தெரிந்தும்
வாழத் தயங்கலாமோ.
5/27/2011
சமச்சீர் கல்வி
முந்தைய அரசு உருவாக்கிய பாடப் புத்தகங்களில் உள்ள சில தவறுகளுக்காக சமச்சீர் கல்வித் திட்டத்தையே முடக்குவது நியாயமல்ல என்று கல்வியாளர்கள் தமிழக அரசின் முடிவைக் கண்டித்துள்ளனர்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பேராசிரியர் அ.மார்க்ஸ், மனித உரிமைப் போராளி கல்யாணி, கே.இராஜூ, பொதுப் பள்ளிக்காண மாநில மேடையின் பொதுச்செயலர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, வழக்குரைஞர் ரஜினி ஆகியோர் சமச்சீர் கல்வித் திட்டத்தை ஜெயலலிதா அரசு முடக்கியுள்ளதை கண்டித்தனர்.
“பொதுப் பாடத் திட்டம் என்கிற அளவிலேயே கடந்த ஆட்சியில் சமச்சீர் கல்வித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை பொதுப் பாடத் திட்டம், பாட நூல்கள் உருவாக்க பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டன.
அந்தக் குழுக்கள் அளித்த அறிக்கைகள் அடிப்படையில் பொது விவாதத்திற்குப் பிறகே பாடத் திட்டங்களை உருவாக்கி, அதன் அடிப்படையில் பாட நூல்கள் அச்சடிக்கப்பட்டன. இந்த நிலையில், பாடத்திட்டம் தரமாக இல்லை என்று ஒரு தரப்பு கருத்து ஏற்று சமச்சீர் க்லவித் திட்டத்தை அரசு நிறுத்தி வைத்துள்ளது. இது பெரும் பொருள் இழப்பையும், மாணவர்கள் மத்தியில் குழப்பத்தையும் ஏற்படுத்தும்.
பொதுக் கல்வி வாரியத்தில் 7 கல்வித் துறை அதிகாரிகள், 3 கல்வியாளர்கள், மெட்ரிக் ஆங்கிலோ, ஓரியண்டல் ஆசிரியப் பிரதிநிதிகள் ஆகியோர் உள்ளனர். பொதுக் கல்வி வாரியத்தின் ஏற்புடன் பாடத் திட்டமும், பாட நூலும் அச்சிடப்பட்டன. அப்படியிருக்கும்போது, சமச்சீர் கல்வி பாடத் திட்டம் தரமற்றதாக உள்ளது என்று எந்த அடிப்படையில் அமைச்சரவை முடிவிற்கு வந்தது?
முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதிய கவிதை மற்றும் அவரது சில எழுத்துக்கள் பாட நூல்களில் இடம் பெற்றுள்ளதாலேயே புதிய அரசு இந்த முடிவை மேற்கொண்டுள்ளதாக நாளிதழ்களில் செய்திகள் வந்துள்ளன.
அதற்காக ஏன் பாடத் திட்டத்தை முடக்க வேண்டும். தேவையானால் அத்தகைய பகுதிகளை நீக்கிவிட்டு நூல்களை விநியோகிக்கலாமே?
இப்போது அரசு அறிவிப்பின்படி, பழைய பாடத்திட்டத்தை ஏற்பது எப்படி சரியாகும்? பழைய பாடத்திட்டத்தின்படி, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையுள்ள பாட நூல்கள் 10 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டவை. அதே பாட நூல்களை மீண்டும் பயன்படுத்துவது நெசர்ட் நெறிமுறைகளுக்கு எதிரானது என்பதை அரசுக்கு சுட்டிக்காட்டுகிறோம்.
கல்வித்தரத்தை நிர்ணயிப்பதில் பாடத்திட்டம் மற்றும் பாட நூல்களின் பங்கு குறைவானதே. இருபது ஆசிரியர்களுக்கு ஒரு ஆசிரியரை நியமிப்பது, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தரமான ஆசிரியர்களை தேர்வு செய்வது, உள்கட்டுமான அமைப்பை உயர்த்துவது போன்ற கல்வித் தரத்தை நிர்ணயம் செய்யும் விடயங்களில் அரசு கவனம் செலுத்த வேண்டும். கல்வி உரிமைச் சட்டத்தில் உள்ள விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதிலும் அரசு கவனம் செலுத்த வேண்டும்.
முந்தைய அரசு அறிவித்திருந்த சமச்சீர் கல்வித் திட்டத்தில் குறைபாடுகள் இருந்தது என்பது உண்மையே. அக்குறைகளை நீக்கித் தரத்தை உயர்த்த வல்லுநர் குழு அமைக்க உள்ளதும் வரவேற்கத்தக்கதே. ஆனால், எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடித்துள்ள நிலையில், சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைப்பது ஏற்க முடியாது. இது உண்மையான சமச்சீர் கல்வியை நோக்கிய பயணத்தை முடக்கும் செயல்.
நீண்ட விவாதங்களுக்குப் பிறகு, பலரும் இணைந்து ரூ.216 கோடி செலவில் உருவாக்கிய பாட நூல்களை ஒரு சில தவறுகள்ளுக்காகவும், அரசியல் நோக்கங்களுக்காகவும் புறக்கணிப்பது எந்த வகையில் நியாயம்? அவசியமானால் தேவையற்றப் பகுதிகளை நீக்குவதே கல்வி நலனிற்கு உகந்தது. சமச்சீர் கல்வி முறையை நிறுத்தி வைத்துள்ளதை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக அரசை வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்” என்று அவர்கள் கூறியுள்ளனர்.
அ.ராமநாதன்
5/19/2011
5/08/2011
காதல் அழியாது.....
காதலியும் அழிந்து விடுவாளாம்
காதலனும் அழிந்து விடுவானாம்
காதல் மட்டும் அழியாதாம்
காலமுள்ளவரை வாழ்ந்துவிடுமாம்
என்னவளே நான் எழுதும் கவிதையும் அப்படிதான்
என்றோ ஒருநாள் நான் அழிந்து போனாலும்
இல்லை நீ அழிந்து போனாலும்
ஏதோ நம் காதல் கவிதை வாழ்ந்து விடட்டுமே
இதற்க்காகத்தான் நான் எழுதும் கவிதைகள்
காதலனும் அழிந்து விடுவானாம்
காதல் மட்டும் அழியாதாம்
காலமுள்ளவரை வாழ்ந்துவிடுமாம்
என்னவளே நான் எழுதும் கவிதையும் அப்படிதான்
என்றோ ஒருநாள் நான் அழிந்து போனாலும்
இல்லை நீ அழிந்து போனாலும்
ஏதோ நம் காதல் கவிதை வாழ்ந்து விடட்டுமே
இதற்க்காகத்தான் நான் எழுதும் கவிதைகள்
5/01/2011
மே தின கவிதை
வெட்ட வெளியில் சுட்டு எரிக்கும்
உச்சி வெயிலில் கட்டி சேரடிக்க
தன்னோடு உழைத்த காளைகளை
தீவனம் தண்ணீர் காட்டாமல்
உணவு கொள்வதில்லை உழவன்
தான் வாழ்ந்த பெரிய வனத்தை அண்டி
அழித்து வாழும் உயிரினங்களை சமைத்து வாழ்ந்தாலும்
பழிகொண்டு தாக்குவதில்லை விலங்குகள்
ஒடுங்கி ஒளிந்து அவன் வாழ இடமளிக்க
மனிதனும் வாழ்கிறான் அவைகளும் வாழ்கின்றன
ஆனால் தொன்று தொட்டு வந்த நம் மானுட
வரலாற்றில் காணும் சில கூத்தையெல்லாம்
விழிபிதுங்க யோசித்தாலும் புரியவில்லை
ஏன் உழைத்தவனைச் சுரண்டிய மனிதரெல்லாம்
அவனை மதிக்காமல் பிழிந்து வதைத்தனரென்று
உழைத்தவன் வியர்வை உலர்வதற்குள்
அவன் ஊதியத்தை அளித்துவிடு என்றுரைத்த
ஏசு பிரானின் வழி வந்தோரெல்லாம் கும்பிட்டுவிட்டு
அவர் சொல்லை ஏன் மறந்தாரென்பதை
சிந்தித்துப் பார்த்தும் கிஞ்சித்தும் புரியவில்லை
தோண்டித் தோண்டி உழைத்துக் கொடுத்தாலும்
வேண்டினால் கிடைக்காது உரிமையும் ஓய்வும்
ஒன்று சேர்ந்து ஓர் குரலில் போராடினால்தான்
உரிமையும் கிடைக்கும் விடுமுறையும் உண்டென்பதை
ஓங்கி ஒலிக்கப் பிறந்ததே மே தினம்
மாணவர் படிக்கும் வரலாறு எல்லாம்
சோற்றுக்கும் சுகத்திற்கும் நடந்த சண்டைகள்தானே
மண்ணிற்கும் பெண்ணிற்கும் மாண்ட கதைகள்தானே
மனிதனுக்கு மனிதனை அடையாளம் காட்டியது
உன்னத தியாகத்தில் மலர்ந்த மே தினம்
அனைவருக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துகள்.
எண்ணம் & எழுத்து : கோவைராமநாதன்
உச்சி வெயிலில் கட்டி சேரடிக்க
தன்னோடு உழைத்த காளைகளை
தீவனம் தண்ணீர் காட்டாமல்
உணவு கொள்வதில்லை உழவன்
தான் வாழ்ந்த பெரிய வனத்தை அண்டி
அழித்து வாழும் உயிரினங்களை சமைத்து வாழ்ந்தாலும்
பழிகொண்டு தாக்குவதில்லை விலங்குகள்
ஒடுங்கி ஒளிந்து அவன் வாழ இடமளிக்க
மனிதனும் வாழ்கிறான் அவைகளும் வாழ்கின்றன
ஆனால் தொன்று தொட்டு வந்த நம் மானுட
வரலாற்றில் காணும் சில கூத்தையெல்லாம்
விழிபிதுங்க யோசித்தாலும் புரியவில்லை
ஏன் உழைத்தவனைச் சுரண்டிய மனிதரெல்லாம்
அவனை மதிக்காமல் பிழிந்து வதைத்தனரென்று
உழைத்தவன் வியர்வை உலர்வதற்குள்
அவன் ஊதியத்தை அளித்துவிடு என்றுரைத்த
ஏசு பிரானின் வழி வந்தோரெல்லாம் கும்பிட்டுவிட்டு
அவர் சொல்லை ஏன் மறந்தாரென்பதை
சிந்தித்துப் பார்த்தும் கிஞ்சித்தும் புரியவில்லை
தோண்டித் தோண்டி உழைத்துக் கொடுத்தாலும்
வேண்டினால் கிடைக்காது உரிமையும் ஓய்வும்
ஒன்று சேர்ந்து ஓர் குரலில் போராடினால்தான்
உரிமையும் கிடைக்கும் விடுமுறையும் உண்டென்பதை
ஓங்கி ஒலிக்கப் பிறந்ததே மே தினம்
மாணவர் படிக்கும் வரலாறு எல்லாம்
சோற்றுக்கும் சுகத்திற்கும் நடந்த சண்டைகள்தானே
மண்ணிற்கும் பெண்ணிற்கும் மாண்ட கதைகள்தானே
மனிதனுக்கு மனிதனை அடையாளம் காட்டியது
உன்னத தியாகத்தில் மலர்ந்த மே தினம்
அனைவருக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துகள்.
எண்ணம் & எழுத்து : கோவைராமநாதன்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

