தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

5/27/2011

சமச்சீர் கல்வி


முந்தைய அரசு உருவாக்கிய பாடப் புத்தகங்களில் உள்ள சில தவறுகளுக்காக சமச்சீர் கல்வித் திட்டத்தையே முடக்குவது நியாயமல்ல என்று கல்வியாளர்கள் தமிழக அரசின் முடிவைக் கண்டித்துள்ளனர்.


சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பேராசிரியர் அ.மார்க்ஸ், மனித உரிமைப் போராளி கல்யாணி, கே.இராஜூ, பொதுப் பள்ளிக்காண மாநில மேடையின் பொதுச்செயலர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, வழக்குரைஞர் ரஜினி ஆகியோர் சமச்சீர் கல்வித் திட்டத்தை ஜெயலலிதா அரசு முடக்கியுள்ளதை கண்டித்தனர்.


“பொதுப் பாடத் திட்டம் என்கிற அளவிலேயே கடந்த ஆட்சியில் சமச்சீர் கல்வித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை பொதுப் பாடத் திட்டம், பாட நூல்கள் உருவாக்க பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டன.


அந்தக் குழுக்கள் அளித்த அறிக்கைகள் அடிப்படையில் பொது விவாதத்திற்குப் பிறகே பாடத் திட்டங்களை உருவாக்கி, அதன் அடிப்படையில் பாட நூல்கள் அச்சடிக்கப்பட்டன. இந்த நிலையில், பாடத்திட்டம் தரமாக இல்லை என்று ஒரு தரப்பு கருத்து ஏற்று சமச்சீர் க்லவித் திட்டத்தை அரசு நிறுத்தி வைத்துள்ளது. இது பெரும் பொருள் இழப்பையும், மாணவர்கள் மத்தியில் குழப்பத்தையும் ஏற்படுத்தும்.


பொதுக் கல்வி வாரியத்தில் 7 கல்வித் துறை அதிகாரிகள், 3 கல்வியாளர்கள், மெட்ரிக் ஆங்கிலோ, ஓரியண்டல் ஆசிரியப் பிரதிநிதிகள் ஆகியோர் உள்ளனர். பொதுக் கல்வி வாரியத்தின் ஏற்புடன் பாடத் திட்டமும், பாட நூலும் அச்சிடப்பட்டன. அப்படியிருக்கும்போது, சமச்சீர் கல்வி பாடத் திட்டம் தரமற்றதாக உள்ளது என்று எந்த அடிப்படையில் அமைச்சரவை முடிவிற்கு வந்தது?


முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதிய கவிதை மற்றும் அவரது சில எழுத்துக்கள் பாட நூல்களில் இடம் பெற்றுள்ளதாலேயே புதிய அரசு இந்த முடிவை மேற்கொண்டுள்ளதாக நாளிதழ்களில் செய்திகள் வந்துள்ளன.
அதற்காக ஏன் பாடத் திட்டத்தை முடக்க வேண்டும். தேவையானால் அத்தகைய பகுதிகளை நீக்கிவிட்டு நூல்களை விநியோகிக்கலாமே?


இப்போது அரசு அறிவிப்பின்படி, பழைய பாடத்திட்டத்தை ஏற்பது எப்படி சரியாகும்? பழைய பாடத்திட்டத்தின்படி, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையுள்ள பாட நூல்கள் 10 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டவை. அதே பாட நூல்களை மீண்டும் பயன்படுத்துவது நெசர்ட் நெறிமுறைகளுக்கு எதிரானது என்பதை அரசுக்கு சுட்டிக்காட்டுகிறோம்.


கல்வித்தரத்தை நிர்ணயிப்பதில் பாடத்திட்டம் மற்றும் பாட நூல்களின் பங்கு குறைவானதே. இருபது ஆசிரியர்களுக்கு ஒரு ஆசிரியரை நியமிப்பது, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தரமான ஆசிரியர்களை தேர்வு செய்வது, உள்கட்டுமான அமைப்பை உயர்த்துவது போன்ற கல்வித் தரத்தை நிர்ணயம் செய்யும் விடயங்களில் அரசு கவனம் செலுத்த வேண்டும். கல்வி உரிமைச் சட்டத்தில் உள்ள விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதிலும் அரசு கவனம் செலுத்த வேண்டும்.


முந்தைய அரசு அறிவித்திருந்த சமச்சீர் கல்வித் திட்டத்தில் குறைபாடுகள் இருந்தது என்பது உண்மையே. அக்குறைகளை நீக்கித் தரத்தை உயர்த்த வல்லுநர் குழு அமைக்க உள்ளதும் வரவேற்கத்தக்கதே. ஆனால், எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடித்துள்ள நிலையில், சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைப்பது ஏற்க முடியாது. இது உண்மையான சமச்சீர் கல்வியை நோக்கிய பயணத்தை முடக்கும் செயல்.


நீண்ட விவாதங்களுக்குப் பிறகு, பலரும் இணைந்து ரூ.216 கோடி செலவில் உருவாக்கிய பாட நூல்களை ஒரு சில தவறுகள்ளுக்காகவும், அரசியல் நோக்கங்களுக்காகவும் புறக்கணிப்பது எந்த வகையில் நியாயம்? அவசியமானால் தேவையற்றப் பகுதிகளை நீக்குவதே கல்வி நலனிற்கு உகந்தது. சமச்சீர் கல்வி முறையை நிறுத்தி வைத்துள்ளதை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக அரசை வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்” என்று அவர்கள் கூறியுள்ளனர்.

அ.ராமநாதன்

கருத்துகள் இல்லை: