தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

5/01/2011

மே தின கவிதை

வெட்ட வெளியில் சுட்டு எரிக்கும்
உச்சி வெயிலில் கட்டி சேரடிக்க
தன்னோடு உழைத்த காளைகளை
தீவனம் தண்ணீர் காட்டாமல்
உணவு கொள்வதில்லை உழவன்


தான் வாழ்ந்த பெரிய வனத்தை அண்டி
அழித்து வாழும் உயிரினங்களை சமைத்து வாழ்ந்தாலும்
பழிகொண்டு தாக்குவதில்லை விலங்குகள்
ஒடுங்கி ஒளிந்து அவன் வாழ இடமளிக்க
மனிதனும் வாழ்கிறான் அவைகளும் வாழ்கின்றன


ஆனால் தொன்று தொட்டு வந்த நம் மானுட
வரலாற்றில் காணும் சில கூத்தையெல்லாம்
விழிபிதுங்க யோசித்தாலும் புரியவில்லை
ஏன் உழைத்தவனைச் சுரண்டிய மனிதரெல்லாம்
அவனை மதிக்காமல் பிழிந்து வதைத்தனரென்று


உழைத்தவன் வியர்வை உலர்வதற்குள்
அவன் ஊதியத்தை அளித்துவிடு என்றுரைத்த
ஏசு பிரானின் வழி வந்தோரெல்லாம் கும்பிட்டுவிட்டு
அவர் சொல்லை ஏன் மறந்தாரென்பதை
சிந்தித்துப் பார்த்தும் கிஞ்சித்தும் புரியவில்லை


தோண்டித் தோண்டி உழைத்துக் கொடுத்தாலும்
வேண்டினால் கிடைக்காது உரிமையும் ஓய்வும்
ஒன்று சேர்ந்து ஓர் குரலில் போராடினால்தான்
உரிமையும் கிடைக்கும் விடுமுறையும் உண்டென்பதை
ஓங்கி ஒலிக்கப் பிறந்ததே மே தினம்


மாணவர் படிக்கும் வரலாறு எல்லாம்
சோற்றுக்கும் சுகத்திற்கும் நடந்த சண்டைகள்தானே
மண்ணிற்கும் பெண்ணிற்கும் மாண்ட கதைகள்தானே
மனிதனுக்கு மனிதனை அடையாளம் காட்டியது
உன்னத தியாகத்தில் மலர்ந்த மே தினம்


அனைவருக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துகள்.


எண்ணம் & எழுத்து : கோவைராமநாதன்

கருத்துகள் இல்லை: