தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

5/10/2010

இது எப்படி சாத்தியம்? இது முரண்பாடல்லவா?


உலகத்தில் பெரும்பாலானோர் தங்களை மிக நியாயமானவர்களாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய பெரிய வருத்தமே அடுத்தவர்கள் அவர்களிடம் நியாயமாக நடந்து கொள்வதில்லை என்பது தான். அவர்கள் நியாயமாக நடந்து கொள்ளாதவர்கள் என்று யாரை நினைக்கிறார்களோa அவர்களும் தங்களை மிக நியாயமானவர்களாகவே நினைத்து மற்றவர்கள் தங்களிடம் அப்படி இல்லை என்று வருந்துவது தான் ஆச்சரியம். “நல்லதிற்குக் காலம் இல்லை”, “எல்லோரும் நம்மைப் போலவே நல்லவர்களாகவே இருப்பார்கள் என்று நினைப்பது நம் தவறு தான்” என்ற வசனங்கள் பலர் வாயிலிருந்தும் வருகின்றன. அவை வெறும் வாய் வார்த்தைகள் அல்ல. மனப்பூர்வமாக அப்படி பெரும்பாலானோர் நினைக்கிறார்கள்.


இது எப்படி சாத்தியம்? இது முரண்பாடல்லவா? இதில் யார் சரி, யார் தவறு? என்பது போன்ற கேள்விகள் சமூக அக்கறை உள்ளவர்கள் மனதில் எழாமல் இருக்க முடியாது. பிரச்னை எங்கே இருக்கிறது என்று ஆராய்ந்தால் ஒவ்வொருவரும் வைத்திருக்கும் மாறுபட்ட அளவுகோலில் தான் என்பது புரியும்.


குடும்பத்தில் மகள் சொற்படி மருமகன் கேட்பாரானால் மாப்பிள்ளை சொக்கத் தங்கம். மகன் மருமகள் சொற்படி நடந்தால் அவன் பெண்டாட்டி தாசன்.


நம் மொழி, இனம், மதம், நாடு ஆகியவற்றின் மீது நமக்கு இருக்கும் அபரிமிதமான பற்றிற்குப் பெயர் பக்தி. அதுவே மற்றவர் அவர் மொழி, இனம், மதம், நாடு ஆகியவற்றில் வைக்கும் அபரிமிதமான பற்றிற்கு நாம் வைக்கும் பெயர் வெறி.


நம் வீட்டில் பேப்பர் போடும் பயன் வேலையில் சிறிது அலட்சியம் செய்தாலும், வராமல்  இருந்தாலும் , விடுப்பு எடுத்துக் கொண்டாலும் குமுறுகிறோம். நாம் அலுவலகத்தில் வேலை செய்யும் போது நம் அளவுகோல் முழுவதுமாக மாறிவிடுகிறது. அதையே நாம் நம் அலுவலகத்தில் செய்யும் போது சிறிதும் உறுத்தல் இல்லாமல் இருக்கிறோம்.


நம்முடைய வெற்றிகள், நல்ல குணங்கள், புத்திசாலித்தனம் எல்லாவற்றையும் அடுத்தவர்களுக்கு பறைசாற்றத் துடிக்கிறோம். அடுத்தவர்கள் புரிந்து கொண்டு பாராட்ட வேண்டுமென்று எதிர்பார்க்கிறோம். ஆனால் அடுத்தவர்கள் நம்மிடம் அதையே செய்தால் அது தற்புகழ்ச்சியாகத் தெரிகிறது. மற்றவர்கள் நம் அருமை பெருமைகளை அறிய மறுத்தால் அது சின்ன புத்தியாகவோ, பொறாமையாகவோ தெரிகிறது. ஆனால் அடுத்தவர்களுடைய அருமை பெருமைகளை அறிய நமக்கு சுத்தமாக ஆர்வமிருப்பதில்லை.


நம் வெற்றிகளுக்குக் காரணம் நம் புத்திசாலித்தனமும், உழைப்பும் தான். மற்றவர்களுடைய வெற்றிகளுக்குக் காரணமாக நாம் காண்பது அவர்களது அதிர்ஷ்டத்தையும், அவர்களுக்குக் கிடைத்த ஆதரவையும் தான். அதுவே தோல்வியானால் அந்த அளவுகோல்கள் உடனடியாக பரிமாற்றம் செய்யப்படுகின்றன. நம் தோல்விக்குக் காரணம் துரதிர்ஷ்டமும் சூழ்நிலையும். மற்றவர் தோல்விக்குக் காரணம் முட்டாள்தனமும், முயற்சிகளில் உள்ள குறைபாடுகளும் என்று எடுத்துக் கொள்ளப்படுகிறது.


நம் வீட்டு ரகசியங்களை மூடி வைக்க நாம் படாத பாடு படுகிறோம். மற்றவர்கள் அறிந்து விடக்கூடாதென்று மிகவும் கவனமாக இருக்கிறோம். ஆனால் அடுத்த வீட்டு ரகசியங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வர நாம் நாம் தயங்குவதேயில்லை. அடுத்தவர்கள் அதை மறைக்கச் செய்யும் முயற்சிகளைப் பெரிய குற்றமாக நாம் விமரிசிப்பதும் உண்டு.


மற்றவர்கள் உதவ முடிந்த நிலையில் இருந்தாலும் நமக்கு உதவுவதில்லை என்று மனம் குமுறும் நாம் அடுத்தவர்களுக்கு உதவ முடியும் நிலையில் இருக்கும் போது கண்டும் காணாமல் போய் விடுகிறோம். அந்த நேரத்தில் நாம் அதைப் பற்றி சிந்திப்பதேயில்லை.(நேற்று முன்தினம் கோவையில் நடந்த சம்பவம் சிறந்த உதாரணம் )


தங்கள் பெற்றோரை அலட்சியம் செய்தும், புறக்கணித்தும் சிறிதும் மன உறுத்தல் இல்லாமல் இருக்கும் மனிதர்கள் தங்கள் குழந்தைகள் அதையே தங்களுக்குச் செய்தால் தாங்க முடியாத துக்கத்தில் ஆழ்ந்து விடுகிறதை நாம் பல இடங்களில் காண்கிறோம். எனக்குத் தெரிந்த மூதாட்டி ஒருவர் தன் மூத்த மகனால் பல விதங்களில் புறக்கணிக்கப்பட்டவர். சிறு உதவிகள் கூட அவனிடம் இருந்து அவருக்கு கிடைத்ததில்லை. ஒரு முறை அவர் அவன் வீட்டுக்குச் சென்றிருந்த போது டிவியில் மன்னன் திரைப்படத்தின் பாடல் “அம்மா என்றழைக்காத உயிரில்லையே....” என்ற பாடல் ஒளிபரப்பாகியதாம். அதைப் பார்த்து அவர் மகன் தன் மகனிடம் சொன்னானாம். “பாருடா தாய்ப் பாசம் என்பது இது தான். நீயும் உன் அம்மாவிடம் இந்த பாசத்தை வயதான காலத்தில் காட்ட வேண்டும்”


அந்த மூதாட்டி என்னிடம் பின்னொரு நாள் அதைச் சொல்லி விட்டு வேடிக்கையாகச் சொன்னார். “எனக்கு ஆச்சரியம் என்னவென்றால் அவனுக்கு என்னை அருகில் உட்கார வைத்துக் கொண்டே அதைச் சொல்லும் போது சிறிது கூட உறுத்தலோ, வெட்கமோ இல்லாமல் இருந்தது தான்.”


அவர் சொன்னது வியக்கத்தக்க சம்பவம் இல்லை. இது போன்ற நிகழ்வுகள் தான் இன்றைய யதார்த்தம். நமக்குத் தகுந்தாற்போல் எல்லாவற்றையும் அளப்பதும் எடைபோடுவதும் நம்மிடம் ஆழமாக வேரூன்றி இருக்கிறது.


உலகில் உள்ள பல பிரச்னைகளுக்குக் காரணம் இந்த அளவுகோல் வித்தியாசங்களே. சுயநலம் மிக்க உலகாய் நாம் இந்த உலகத்தைக் காண்கிறோம். ஆனால் சின்னச் சின்ன விஷயங்களில் கூட நாமும் அதே போல் இருக்க முற்படுகிறோம் என்பதை உணரத் தவறுகிறோம். அதனால் தான் தவறுகள் செய்தாலும் அந்த உணர்வே இல்லாமல், அந்த உண்மையே நமக்கு உறைக்காமல் இருக்கக் காரணம் இந்த இரண்டு விதமான அளப்பீடுகளை நாம் நமக்குள் வைத்திருப்பது தான்.


உலகம் பெரும்பாலான சமயங்களில் நமது பிரதிபிம்பமாகவே இருக்கிறது. குற்றம் சாட்டி சுட்டிக் காட்டும் சமயங்களில் மற்ற மூன்று விரல்கள் நம்மையே காட்டிக் கொண்டிருக்கின்றன என்பதை நாம் உணர வேண்டும். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒருவரைப் பற்றி குறை கூறும் முன் அவர் இடத்தில் நாம் இருந்திருந்தால் என்ன செய்திருப்போம் என்று நேர்மையாக யோசிக்க முடிந்தால், ஆளுக்கொரு அளவுகோல் வைத்து அளக்காமல் நாம் நமக்கும் அடுத்தவருக்கும் ஒரே அளவுகோல் வைத்திருந்தால் மட்டுமே நாம் நியாயமாய் நடந்து கொள்பவர்களாவோம். அப்போது மட்டுமே சகோதரத்துவம் உண்மையாக நம்மிடையே மலரும். விமரிசனங்கள் குறைந்து ஒருவரை ஒருவர் புரிந்து கொள்தல் வளரும்.

குறிப்பு : இதுவரை நானும் அளவுகோலுடன் வாழ்ந்து வந்தேன் இனி என்னுளும் மாற்றங்கள் தெரியவரும் எனமுடிவுடன் தான் இதை எழுதி முடித்தேன் ............

எழுத்து & சிந்தனை : அ.ராமநாதன்  

கருத்துகள் இல்லை: