தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

7/12/2012

வாழ்க்கையை இயக்குவோம்
ஒரு இயக்குனராக..

எதிரியா! எதிரி என்று நமக்கு யாருமே வேண்டாம், யாரையும் பகையாளியாகவே நினைக்க வேண்டாம், யார் மீதும் கோபம் கொள்ள வேண்டாம், யார் என்ன சொன்னாலும் கேட்டு விட்டு அமைதியாக இருப்போம், ஆனால் எப்போதும் நம்மை யாருக்கும் விட்டுகொடுக்க வேண்டாம். அடிக்கடி ஒருவன் நம் வழியில் குறுக்கிடுகிறானென்றால் அவனிடம் பணிந்து போக கூடாது, அவனிடம் சீற வேண்டும், ஆனால் அந்த சீற்றத்தில் விஷமத்தனம் இருக்ககூடாது, அது சுய பாதுகாப்பிற்காக மட்டும் இருக்க வேண்டும்.


இவன் குட்ட குட்ட குனிவான் என்று தெரிந்தால், குட்டிக்கொண்டு தான் இருப்பார்கள். இவன் விழித்துக்கொண்டான் என்ற எண்ணம் அவர்களுக்கு வர வேண்டும். அதற்காக சற்று சீறி பார்ப்பதில் தவறில்லை, மனதில் எதையும் வைத்துக்கொள்ளாமல் சுய பாதுகாப்பிற்காக வெளியில் காட்டும் கோபம் நம்மை எதுவும் செய்து விடாது. நம்மை மட்டம் தட்டுகிறவர்களுக்கு நம்மை பற்றிய மட்டமான எண்ணங்கள் அகல வேண்டும், அதற்காக சிறிது சீறுவோம்.


பணிந்து போகின்ற அருமையான குணத்தை அதற்கு தகுதியுள்ளவர்களிடமே காண்பிக்க வேண்டும். வழியில் குறுக்கிடுகின்ற நரிகளிடமெல்லாம் காண்பிக்க வேண்டிய அவசியமில்லை, நாம் சுய மரியாதை உள்ளவர்கள், கடவுளின் மீதும் உண்மையின் மீதும் நம்பிக்கை கொண்டவர்கள் எந்த மனிதனுக்கும் பயப்பட தேவையில்லாதவர்கள். எனவே யாருக்கும் அஞ்சாமல் கயவர்களிடம் கர்ஜித்து நமது மரியாதையை மீட்டெடுத்துக் கொள்வோம்


ஒருவன் நம்மை சீண்டிப் பார்க்கிறான் என்றால், நரிகள் சலசலக்கிறது என்று அவற்றை விட்டுவிடலாம், பதிலுக்கு நாம் அவனை சீண்ட வேண்டாம் ஆனால் அதுவே ஒரு தலைவலியாகி போனால் என்ன செய்வது, இந்த தருணத்தில் நம் எதிர்ப்பை வேறெப்போதும் இல்லாத அளவிற்கு சற்று அதிகமாக காண்பிக்கலாம். நரிகள் இடும் சின்ன சின்ன ஊளை சத்தத்திற்கெல்லாம், காவல் நிலையம், பாதுகாப்பு அமைப்புகள் என்று போவதை விட நாமே சீறி பார்ப்பதுதான் நமக்கு மரியாதை


வன்முறையோ, அடிதடியோ நமக்கு தோழ் கொடுக்காது, அவையெல்லாம் நமக்கு எதிரானவைகளே, நமது வெளிப்பாடுகள் நியாயத்தின் வெளிப்பாடுகளாக இருக்கவேண்டும், அதில் வன்முறையின் சாயல்கள் கலந்திருக்க கூடாது, அவை சுய மரியாதையின், தற்பாதுகாப்பின் சாயல்களாகவே இருக்க வேண்டும். கொசு கடித்தால் அடிக்ககூடாது, எறும்புகளை கூட மிதிக்க கூடாது, தலையில் வளரும் பேன்களையும் கொல்ல கூடாது என்ற நியதியெல்லாம் நம்மிடம் வேண்டாம்.

எனவே எதிர்த்து வருகிறவனை சீறி அடக்கி வைப்போம். துணைக்கு தைரியத்தை பக்கத்தில் வைத்திருப்போம், சினிமா ஹீரோ எதிர்த்து வருகிறவனை பந்தாடுவதை போன்ற வெறித்தனமில்லாமல், வன்முறையற்ற சீற்றத்தை வெளிக்காட்டுவோம், எதிராளி பின்தள்ளப்படுவது நிச்சயம்.

கருத்துகள் இல்லை: