தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

2/12/2010

காதல் விதைகள்

ஒரு நாளில் எத்தனை முறை உன்னை நினைக்கிறேன் என்பதை ஒரு நாளில் எத்தனைமுறை சுவாசிக்கிறேன் என்பதைக்கொண்டே கண்டுபிடிக்கிறேன்.

இலையுதிர்காலத்தில்தான் உன் வருகை நிகழ்ந்தது. மழைகண்டவுடன் தலைதூக்கும் சிறுபுல்லாய் சிலிர்த்து எழுந்தது என் தேசம். என் நிரந்தர இளவரசி நீ.

ஜலதோஷம் பிடித்திருக்கிறது என்றாய் ஓர் இரவில். என்னைத்தவிர அதென்ன ஜலதோஷம் உனக்கு பிடித்திருக்கிறதென்று இரவெல்லாம் திட்டித்தீர்த்தேன். உன்னையே சிந்தித்தேன். நீ தேன்.

என் கவிதைகளை சுவாசிக்கும் உன்னிடம் எதையும் எதிர்பார்க்கவில்லை.இதழோர புன்னகையையும் எனக்கான நேசத்தையும் தவிர.

உன் கனவுகளை ஆட்கொள்கிறேன் என்றாய். உன் உறக்கம் கெடுத்த கனவை திட்டுவதா இல்லை கனவில் வருகின்ற என்னை திட்டுவதா என்கிற குழப்பத்தில் உறங்கிப்போகிறேன். சத்தமின்றி என் கனவில் கண்சிமிட்டி சிரிக்கிறாய் நீ.

சைக்கிளில் நீ பயணிக்கும்போதெல்லாம் துயரங்களால் நிரம்பித்திரிவேன். என் இளவரசி பயணிக்க வேண்டியது பல்லக்கில் அல்லவா?

யாருமற்ற கடற்கரை,அழகான அந்தி,ஒற்றை நிலா,பாதம்தொடும் அலை,அருகில் நீ. சொர்க்கத்தை விவரிக்க சொன்னால் இப்படித்தான் விவரிப்பேன்.

கோடையொன்றில் கொடைநாட்டில் கன்னம்தொடும் பனிக்காற்றின் நடுவில் செம்பருத்திப்பூ உன்னுடன் விரல்கோர்த்து நடக்கவேண்டும். கவிதைகளால் உன் இதயம் நிறைப்பேன் அக்கணம்.

காற்றை மொழி பெயர்த்தால் இசை. நேற்றை மொழிபெயர்த்தால் சரித்திரம். நம் காதலை மொழிபெயர்த்தால் நீ,நான்,நாம் மற்றும் வெண்ணிலா.

இத்தனை அழகான நேசத்தை சுமந்து திரிகிறேன். இத்தனை அழகான உன் நினைவுகளை சுமந்து திரிகிறேன்.நாடோடி என்கிறது உலகம். காதலோடி என்கிறது உள்மனம்.

தங்கமீன் இரண்டு ஒன்றாக நீந்துகிறது.ஊரெல்லாம் சொல்கிறது இதுபோல் அழகு வேறில்லையென்று. முட்டாள்கள் கறுப்புமீன்விழியாள் உன்னை பார்த்ததில்லை போலும்.

நாம் சந்திக்கும் முதல்பொழுதில் மழைக்குபின் மரங்களடியில் உன் விரல்கோர்த்து நடக்கும் தருணத்தை உனக்கு பரிசளிப்பேன்.

க’விதை’க்குள் விழுந்து விருட்சமென வளர்ந்து வனமாக அடர்ந்து கிளைத்து பூத்து நிற்கும் நந்தவனம் நீ.

[காதலர்களுக்கு Advance காதலர்தின நல்வாழ்த்துகள்]

கருத்துகள் இல்லை: