தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

2/25/2010

எஸ் எம் எஸ் ஆபத்துக்கள்.
என்னுடைய இரண்டு அலைபேசி எண்களுக்கு, ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் ஐந்து எஸ் எம் எஸ், அதிகபட்சம் இருபது எஸ் எம் எஸ் என்கிற எண்ணிக்கையில் குறுஞ்செய்திகள் வந்து குவிகின்றன. இந்தக் குறுஞ்செய்திகளில் அரும் செய்திகள் என்று பார்த்தால், ஒரு வாரத்தில் மூன்றோ நான்கோ தேறலாம். மற்றவை உபயோகமில்லாத செய்திகள். சில குறுஞ்செய்திகள் நாம் எப்பொழுதோ வெப் சைட்டில் பதிந்துகொண்டதால் வருபவை. அவைகளுக்கு எஸ் எஸ் எஸ் என்று பெயர் இடலாம் (சொந்த செலவில் சூனியம்)
என் உறவினர் ஒருவர் தவறாமல் (அவர்) விழித்திருக்கும் நேரங்களில் இரண்டு மணிக்கு ஒரு எஸ் எம் எஸ் என்று அனுப்புவார். எஸ் எம் எஸ் செய்திகளை, பொதுவாக கீழ்க்கண்ட வகைகளில் பிரிக்கலாம்.

# காதல் நட்பு - இவற்றின் மேன்மை உயர்வு குறித்து.
# புதிர்க் கேள்விகள்.
# புதிர்க் கணக்குகள்.
# பொது அறிவுத் துகள்கள்.
# ஜோக்குகள். (A + B + C)
# அறிஞர்கள் அன்று கூறியவை.
# நடப்பு செய்திகள்.
சில எஸ் எம் எஸ் மிகவும் பயனுள்ளவை - என் தம்பியிடமிருந்து முன்பு ஒருநாள் வாட்ச் என் டி டி வி என்று எஸ் எம் எஸ் வந்தது. அப்பொழுதுதான் நான் உடனே டீ வி பார்த்து, மும்பை தாக்குதல் தொடர்பான நேரடி கவரஜே பார்த்தேன். சில சமயங்களில் முக்கியமான இசை நிகழ்ச்சி டி வி இல் ஒளிபரப்பாகும்போது கூட, சகோதரர் எஸ் எம் எஸ் அனுப்பியது உண்டு.

நான் எஸ் எம் எஸ் அனுப்பியது என்று பார்த்தால் ஒரு மாதத்தில் இருபது
இருந்தால் அதிகம். ஆனால் ஜிமெயில் அல்லது யாஹூ மெசெஞ்சரில் உள்ள எஸ் எம் எஸ் அனுப்பும் வசதியை அடிக்கடிப் பயன்படுத்திக்கொள்வேன்.

ஒருமுறை எனக்கு எஸ் எம் எஸ் செய்த உறவினரை, தொலைபேசியில் தொடர்புகொண்டு, அவர் அனுப்பிய குறுஞ்செய்தி குறித்து பேச ஆரம்பித்தேன். அவர் அப்படியா, அப்படியா எனத் தொடர்ந்து ஆச்சரியமாக விசாரித்துவிட்டு, இறுதியில் ஓர் உண்மையைக் கூறினார். அவருக்கு வேறு யாரோ அனுப்பிய செய்தியாம். அதைப் படித்துவிட்டு ஒன்றும் புரியாததால் (அந்த உறவினருக்கு ஆங்கிலம் கொஞ்சம் அரைகுறை) அதை வழக்கம்போல் எல்லோருக்கும் பார்வார்ட் பண்ணினாராம்.

உபயோகமில்லாத செய்திகளை அனுப்புபவர்களை நான் வேண்டிக்கொள்வதெல்லாம் காசு செலவழித்து எனக்கு எஸ் எம் எஸ் அனுப்பாதீர்கள். அதற்கு பதில் எல்லோரும், அதற்காகும் செலவை, ஓர் உண்டியலில் போட்டு வைத்திருங்கள். என்னை எப்பொழுதாவது நேரில் பார்க்கும்பொழுது, சேர்த்துவைத்திருக்கும் பைசாவை என்னிடம் காட்டுங்கள். நான் மேற்கொண்டு அதே அளவுக்கு பைசா உங்களுக்குக் கொடுக்கிறேன். இவ்வாறு செய்வதால், அனாவசியமாக ஏதோ ஒரு செல் கம்பெனி சம்பாதிக்கின்ற பைசா, உங்க நேரம், என்னுடைய நேரம் எல்லாமே நிறைய மிச்சமாகும். மேலும் எஸ் எம் எஸ் அனுப்பியே ஆகவேண்டும் என்னும் உந்துதல் உள்ளவர்கள் இரண்டு மொபைல் போன் வாங்கி வைத்துக்கொண்டு - இதிலிருந்து அதற்கும், அதிலிருந்து இதற்கும் மாற்றி மாற்றி எஸ் எம் எஸ் அனுப்பி - அதைப் படித்து ஆனந்தம் அடையலாம் என்றும் எனக்குத் தோன்றுகிறது.

நம் வாசகர்கள் எல்லோருக்கும் ஒரு செய்தி சொல்கின்றேன். ஒருவர் நேற்று எனக்கு அனுப்பியிருந்த செய்தி ஒன்றில், தெருவில் பிச்சை எடுக்கும் சிறுவர்கள் யாரையாவது பார்த்தால், உடனே ------- என்ற செல்லுக்கு சொல்லுங்கள். அவர்கள் அந்த சிறுவரின் படிப்புக்கு ஏற்பாடு செய்வார்கள். என்று இருந்தது. சும்மா இதைப் பற்றி கொஞ்சம் கூகிளிட்டுப் பார்ப்போமே என்று பார்க்கும் பொழுது, இந்த செல் எண்ணை தொடர்பு கொள்ளச் சொல்லி - ஒரு பிரபல இரண்டாம் கட்ட நடிகரின் இரசிகர் என்று கூறிக்கொண்டு, ஒருவர் இரண்டாயிரத்து ஏழாம் வருடம் - அந்த நடிகரின் இரசிகர் மன்ற பெயர் கொண்ட டாட் காம் வலைப் பதிவில் தன பெயரைக் குறிப்பிட்டு எழுதியிருந்தார். அந்த எண்ணைத் தொடர்புகொண்டு எதுவும் விசாரிக்க முடியவில்லை. வேறு எங்கோ ரி-டைரக்ட் ஆகிறது. இதில் மேற்கொண்டு மர்மங்கள் ஏதாவது இருக்குமா அல்லது இருக்காதா என்று தெரியவில்லை. பெயர் குறிப்பிடாமல், ஏதாவது செல் எண் மட்டும் குறிப்பிடப்பட்டு வருகின்ற எண்களை யாரும் தொடர்புகொள்ளாமல் இருப்பது (குறிப்பாக பெண்கள்) மிகவும் நல்லது.

சென்ற வருடம் எனக்கு வந்த போலீஸ் கமிசனர் ஆபீஸ் எஸ் எம் எஸ் ஒன்று, சென்னை நகர போலீஸ் மொபைல் எண் 9500099100 என்பதைத் தொடர்புகொண்டு புகார் எதுவும் கொடுக்கலாம் என்று கூறியிருந்தது. நமக்குத் தெரிந்த யாராவது இந்த எண்ணைப் பயன்படுத்தி இருப்பார்களா என்று அறிய ஆவலாக உள்ளது.

இறுதியாக நான் கூறுவது இவைகள்தாம்:
$ அனாவசிய எஸ் எம் எஸ் யாருக்கும் அனுப்பாதீர்கள். நேரமும், செலவும் மிச்சமாகும்.
$ பெயர் இல்லாத செல் எண் மட்டும் எங்கேயாவது பார்த்தால் அதைத் தொடர்பு கொள்ளாதீர்கள்.
$ உள்ளூர் போலீஸ் மொபைல் எண் எப்பொழுதும் கை(பேசி) வசம் வைத்திருங்கள்.
$ பெண்கள் உங்கள் கைபேசி எண்ணை, யாருக்கும் எந்த சந்தர்ப்பத்திலும் கொடுக்காதீர்கள்.

முடிக்கும் முன்பு வாசகர்களுக்கு ஒரு பொது அறிவு கேள்வியோடு முடிக்கிறேன். பெரும்பாலான அலை பேசிகளில், குறுஞ்செய்தி வரும்பொழுது, கீழ்க்கண்டவகையில் சத்தம் (டிஃபால்ட்) செட்டிங் இருக்கும்.
மூன்று குறுகிய சத்தம் (பிப் பிப் பிப்)
இரண்டு நீண்ட சத்தம் (பீப் பீப்)
திரும்பவும் மூன்று குறுகிய சத்தம் (பிப் பிப் பிப்)
இப்படி கேட்கும் : " பிப் பிப் பிப் --- பீப் பீப் --- பிப் பிப் பிப்."
இதன் விளக்கம் என்ன? யாருக்காவது தெரியுமா?

கருத்துகள் இல்லை: