தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

7/17/2010

கண்டிப்பாக படியுங்கள் மனிதம் இருந்தால்-31984-ல் நடந்த இந்த கொடூரக் கொலைகள் குறித்த வழக்குகள் எவ்வாறு கையாளப் பட்டிருக்கின்றன எனப் பார்த்தால் அது ஆளும் வர்க்கத்திற்கு ஆதரவாக தான் சென்று முடிந்திருக்கிறது.


இந்த வாரன் ஆண்டர்சன் எனும் பண முதலையை நம் அரசியல் வியாதிகள் தப்பிக்க வைத்து வழியனுப்பி வைக்கும் போது அவ்ர் மீது பதியப் பட்டிருந்த வழக்குகள் ஆயுள் தண்டனை வரை அளிக்கக் கூடிய சதி, கொலைக் குற்றமாகாத மரணம் விளைவிக்கும் குற்றம் (Culpable homicide) உள்ளிட்ட 7 வழக்குகள். இவற்றுள் பிணையில் வெளி வர முடியாத வழக்குகளும் இருந்தன
ஆனால் மத்யபிரதேசப் போலீசார் ஆண்டர்சனுக்கு சட்ட விரோதமாக பிணை வழங்கி அரசியல் வியாதிகளின் உத்தரவில் அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்தனர். அந்த செயலை எதிர்த்து அப்போதே பாதிக்கப் பட்ட மக்கள் சார்பாக வழக்குகள் தொடுக்கப் பட்டன.


 இதன் பின் 1985ம் ஆண்டு மார்ச் 29ம் தேதி அப்போது ஆட்சியிலிருந்த காங்கிரசு அரசு இந்திய நாடாளு மன்றத்தில் "போபால் வாயுக் கசிவு பேரழிவு" சட்டத்தை நிறைவேற்றியது. இச்சட்டம் பாதிக்கப் படவர்கள் தனிப் பட்ட முறையில் வழக்குத் தொடுக்கவும், தங்களுக்கென ஒரு வழக்குரைஞரை வைத்துக் கொள்ளவும், நீதி பெறவும் இந்திய சாசனச் சட்டத்தில் உறுதி செய்யப் பட்டிருந்த உரிமைகளைத் தட்டிப் பறித்தது. மேலும் தங்கள் தரப்பு நியாயங்களை எடுத்துச் சொல்லும் வாய்ப்பு வழங்கப் பட வேண்டும் என்பதையும் மறுத்தது.


 இச் சட்டத்தை எதிர்த்து பாதிக்கப் பட்டவர்கள் நடத்திய வழக்கில் உச்ச நீதி மன்றம் "ஒரு பெரிய நல்ல காரியம் செய்யும் போது அதில் சிறிய தவறுகள் செய்வது அனுமதிக்கத் தக்கதுதான். சூழ்நிலைகளின் தேவையையொட்டி இயற்கை நீதிய மறுதலிக்கலாம். இந்திய அரசு பாதிக்கப் பட்டவர்களுக்கு தந்தையாக இருந்து இந்த சட்டத்தை நிறைவேற்றியிருக்கிறது" என தத்துவம் பேசி இந்த வழக்கைத் தள்ளுபடி செய்திருக்கிறது.


 பாதிக்கப் பட்ட மக்களால் அமெரிக்க நீதி மன்றங்களில் தொடுக்கப் பட்டிருந்த நட்ட ஈடு கோரும் வழக்குகள் இந்தியாவிற்கு மாற்றப் பட்டன. இதையடுத்து போபால் மாவட்ட நீதி மன்றம் யூனியன் கார்பைடு நிறுவனம் இடைக்கால நட்ட ஈடாக 350 கோடி வழங்க உத்தரவிட்டிருக்கிறது. ஆனால் இந்த விபத்துக்கு யார் பொறுப்பு எனத் தெரியாத நிலையில் நட்ட ஈடு தர முடியாது என்ற வாதத்தை முன்வைத்தது யூனியன் கார்பைடு.


இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதி மன்றம் பாதிக்கப் பட்டவர்களின் நலன் கருதி நிவாரணமாக 250 கோடி வழங்குங்கள் என கேட்டுக் கொண்டது. இதை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தது யூனியன் கார்பைடு.இதன் பின் பேசப் பட்ட பேரத்தில் 47 கோடி நட்ட ஈடாகக் கொடுக்க சம்மதித்தது அந்நிறுவனம். ஆனால் அது இடைக்கால நட்ட ஈடு அல்ல, ஆயுட்கால நட்ட ஈடாகப் பெற முடிவு செய்யப் பட்டது.


பாதிக்கப்பட்ட மக்களுக்காகப் போராடும் அமைப்புகள் இப் பேரத்தை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தன. இதை விசாரித்த நீதிமன்றம்


"இந்திய அரசு பாதிக்கப்பட்ட மக்களைக் கலந்து ஆலோசிக்காமல் நட்ட ஈடுத் தொகையை முடிவு செய்தது சரிதான். போபால் வாயுக்கசிவு பேரிடர் சட்டம் அரசுக்கு அந்த உரிமையை வழங்கியுள்ளது" எனத் தீர்ப்புக் கூறியது. மேலும் வருங்காலத்தில் நட்ட ஈடுத் தொகை போதவில்லை எனக் கோரிக்கைகள் எழுந்தால் இந்திய அரசே பரிசீலித்துக் கொடுக்கும் எனக் கூறி யூனியன் கார்பைடு சிவில் வழக்குகளிலிருந்து கழட்டி விடப் பட்டது.


பாதிக்கப் பட்ட மக்களின் கோபத்தைத் தணிப்பதற்காக, யூனியன் கார்பைடு மீது தொடுக்கப் பட்டிருந்த கிரிமினல் வழக்குகளை மீண்டும் நடத்த உச்ச நீதி மன்றம் அனுமதி அளித்தது.


இது போன்ற பல்வேறு நீதி மன்ற இழுத்தடிப்புகளுக்குப் பின் 1992 பிப்ரவர் 1ம் தேதி போபால் தலைமைப் பெருநகர நீதி மன்றம் வாரன் ஆண்டர்சனைத் தேடப் படும் குற்றவாளியாக அறிவித்தது.

பதிவின் நீளம் கருதி இதன் பின் இவ்வழக்குகளின் நிலையையும் இறுதித் தீர்ப்பையும் அடுத்தப் பதிவில் சொல்கிறேன்.
நன்றி: புதிய ஜனநாயகம்                              இடுக்கை :அ.ராமநாதன்

கருத்துகள் இல்லை: