தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

7/01/2010

என் தமிழே..என் தாயே.....!


               யாம் பிறந்து விழுந்த பொழுதினில் எம்மில் இருந்து தெரித்து விழுந்த ஒலியாய் வெளிப்பட்ட தாயே.....என் தமிழே...! மானிடரின் சப்தங்கள் மட்டுமே மொழியாய் போன ஒரு உலகத்தில் எம்மின் உணர்வுகளை எல்லாம் வெளிக் கொணர சப்தமாய் வெளிப்பட்டு உன்னை மொழியென்றும் எம் தாயென்றும் தமிழென்றும் கொண்டோம்.


             உலகம் மொழியறியா காலத்தில் கவிசெய்தோம் நாம். இயல், இசை, நாடகம் என்று உன்னில் எத்தனை எத்தனை வித்தைகள் செய்தோம். உணர்வுகளை சரியாக வெளிப்படுத்த எம்மிடம் சப்தம் இருந்ததால், சப்தமென்ற தமிழிருந்தால் வலியையும், சந்தோசத்தையும், துக்கத்தையும், சரியான பாகத்தில் எம்மால் வெளிக்கொணர இயன்றதால் மானிடரின் உணர்வு விளங்கும் தெளிந்த நிலையை எய்தினோம். ஒப்பற்ற ஒரு இனமாய் உலகுக்கு அறிமுகமானோம்!


           காலங்கள் தோறும் மனிதர்கள் வந்தனர். உம்மை கற்றுத் தெளிந்து தம்மை புலவர் என்று தாமெ தம்மையே விளித்துக் கொண்டனர். உன்னைக் கொண்டு கவிசெய்தனர், புதினம் செய்தனர், பாடல் செய்தனர் இசை செய்தனர். உன்னைக்கொண்டு ஒரு வாழ்வு உம்மால் ஒரு வாழ்வு...என்று காலங்கள் தோறும் நீ வளர்த்திருக்கிறாய் மனிதர்களை. எத்துனை சுவை கொண்டவள் நீ....அடுக்குத் தொடராய், இரட்டைக் கிளவியாய், உணர்வுகளை பிரதிபலிக்கும் அணி இலக்கணமாய், வார்த்தைகளை அளவிடும் மாத்திரைகளாய்....எம்மவரின் வாழ்வில் எத்தனை எத்தனை பங்கு கொண்டாய்....


              காலங்கள் தோறும் உன்னைக் கொண்டு இம்மனிதரின் வயிற்றுப்பசி அடங்கியது தாயே....! உன்னை சிறப்பாக்க, உம்மை வாழவைக்க உனக்கு விழா எடுக்க, செம்மொழியாய் நீ சிறந்தவள் என்று உலகிற்கு கட்டியம் கூறி அறிவிக்க மறந்து அரசியலாய், சுய நோக்காய்..பகட்டாய் உன்னை பகடி விளையாடி இருக்கிறார்கள் அம்மா...!


           தச்சு வேலை செய்யும் கோவிந்தனுக்கும், கட்டிட வேலை செய்யும் மாரியம்மாவிற்கும், அதோ அடுத்த தெருவில் மாம்பழம் வியாபாரம் செய்கிறாளே...பொன்னம்மா பாட்டி இவர்கள் என்ன வேற்று கிரகவாசிகளா? இவர்களுக்கு தமிழின் செம்மையை யார் விளக்குவார்கள்...?


         கம்பனின் சொல்லாடலை அவர்களின் தன்மைக்கேற்ப எப்படி விளங்குவார்கள்? அப்படியே விளக்கினாலும்...வெற்று வயிறும், வெறுமையான எதிர்காலமும் தமிழின் செம்மையை இவர்களின் செவிகளுக்குள் செல்ல அனுமதிக்குமா? தெருக்குத்தெரு தமிழ்ச்சுவையூட்டும் நிகழ்ச்சிகள் நடை பெற்றிருக்க வேண்டாமா? பாமரனுக்குப் புகட்டாமால் அறிஞர்களே பேசி சிரித்து, மகிழ்ந்து கொள்ள தமிழ் என்ன தனிப்பட்ட சொத்தா? உங்களின் ஆய்வுகளை எல்லாம் எதோ ஒரு பல்கலைகழகத்தில் நிகழ்த்தி அதன் மூலம் நம் மொழியின் வளத்தை நிறுவ முடிவுகள் எடுத்து அரசு நடைமுறை படுத்தியிருக்கலாமே.....? இதற்கு எதுக்கு கோடிகளில் செலவு....? மாறாக தமிழனின் வாழ்க்கை மிளிர அதை செலவு செய்திருக்கலாமோ.....?


              அந்தோ பரிதாபம் எம்மொழிக்கான விழா...அதற்கு ஒரு பாடல்....இதிலேயே தெரிந்து விட்டது தமிழனின் தமிழ்ப்பற்று. எம்மண்ணின் மணத்தை பாடலிலும் பாடல் வரிகளிலும் கொணரவுமில்லை, பட்டி தொட்டி எங்கும் பாடல்கள் ஒலிக்கவுமில்லை. தமிழ் என்பது ஒலி வடிவம் கொண்ட, எழுத்து வடிவம் கொண்ட..இலக்கணத்தில் சிறந்த...தொன்மையான மொழி மட்டுமல்ல..அது நமது கலாச்சாரத்தில் ஊறிய, வாழ்வில் அங்கமான உயிரோடு கலந்த ஒரு விசயம்.

             செம்மொழியின் பாடலும், தமிழனுக்கு சம்பந்தம் இல்லாதது அதில் பயன்படுத்திய வரிகள் வேண்டுமானால் தமிழோடு தொடர்புகொண்டிருக்கலாம் ஆனால் இசையும், இசைத்த கருவிகளும் தமிழோடு தொடர்பற்றது. ஒரு தாய் தன் குழந்தையை தாலட்டும் இசையில் நாம் எந்த சிரத்தையும் எடுக்காமல் தமிழ்த்தாய் வெளிப்பட்டு ஒரு வித உற்சாக அமுது படைப்பாள். ஏற்றம் இறைக்கும் உழவனும், நாற்று நடும் பெண்களும், ஆண்களும் இசைக்கும் பண்ணில் ஒளிந்து நின்று எட்டி எட்டிப் பார்த்து நம்மை மகிழ்விப்பாள் எம் தமிழ்த்தாய். அவளுக்கென்று ஒரு கலச்சாரம் உண்டு அந்த கலாச்சாரத்தை மேற்கித்திய இசையின் மூலம் அழிக்க நினைத்திருப்பது ஒரு கொடூரமான செயல் (இதன் இசையமைப்பாளர் எனது அபிமானமானவர்தான் அவரின் மீது குற்றம் சொல்கிறேன் என்று விசயத்தை திசை திருப்பி எங்கோ சென்றுவிட வேண்டாம். செம்மொழிப் பாடல் தமிழின் கலாச்சார வெளிப்பாடு அல்ல என்பதே என் எண்ணம்!)


யூனிகோட் என்னும் அச்செழுத்தினை இனி அனைவரும் பயன்படுத்தவேண்டும்....சரி....


வலைப்பூக்களில் தமிழ் மிளிர்கிறது .....சரி


உலகெமெங்கும் இருந்து தமிழறிகள்......கட்டுரைகளை சமர்ப்பித்தனர்......சரி..


மக்கள் கூட்டம் கரை புரண்டது........சரி


தமிழில் கையெழுத்திட அனைவரும் முன் வரவேண்டும்...சரி...


இனி தொடர்ந்து செம்மொழி மாநாடு நடக்கும்.....சரி....


          தனியார் தொலைக்காட்சி நிகழ்சிகளில் இயன்ற வரை தமிழ் புகுத்தப் பட வேண்டும் என்றும்  ராசிக்கல் விற்கும் வியாபாரிகளுக்கும், தொடர் நாடகம் என்னும் ஒரு மனோதத்துவ தாக்குதல் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கும் நேரம் ஒதுக்கும் இவர்கள்....அதிகபட்ச மக்கள் பார்க்கு நேரங்களில் செம்மொழியான எம் தாய்மொழியின் பெருமை சொல்ல நேரம் ஒதுக்க ஏதேனும் சட்டம் உள்ளதா?


எல்லா தமிழ் ஊடங்களும் தமிழின் சிறப்பினை கூற தனியே பக்கங்கள் ஒதுக்க வேண்டும் என்று கட்டளைகள் எதேனும் பிறப்பிக்கப்பட்டுள்ளதா? மக்கள் கூடும் இடங்களில் எல்லாம் மொழியின் வளமறியும் நிகழ்வுகள் ஏதேனும் உண்டா?


தமிழ் மொழி இல்லாத விண்ணப்ப படிவங்கள் எல்லாம் செல்லாது என்று அறிவிக்க முடியுமா?


சென்னையை வலம் வந்து பாருங்கள்....பேருந்தில் ஏறினாலும் சரி, மீன் வாங்க கடைத்தெருக்களுக்குச் சென்றாலும் சரி, இல்லை திரை அரங்குகளுக்குச் சென்றாலும் சரி...தமிழின் ஊடே எத்தனை எத்தனை ஆங்கில வார்த்தைகள். அலுவல் மொழி ஆங்கிலமாய் இருக்கும் பட்சத்தில் தமிழில் உரையாடுவதும், எழுதுவதும் பழக்கத்தின் அடிப்படையில் சிறிது கடினம் என்றாலும் இயன்றவரை மக்களை முயலச் செய்ய...


தமிழரிடம் தமிழில் பேசுங்கள் என்று கண்டித்து சொல்லா ஏதேனும் வழிவகை உண்டா.....?


ஒரு அலுவல் விசயமாக வேறு அலுவலகத்திற்கு சென்ற நான் ...அங்கு நான் சந்திக்க வேண்டிய மனிதரும் தமிழர்தான் என்று அறிந்து ...தமிழா நீங்கள் என்று கேட்க (இது நடந்தது chennai ) யெஸ் என்று இறுக்கமாய் பதில் சொல்லி தொடர்ந்து ஆங்கிலத்தில் உரையாடிய போது உடையில்லாமல் நின்று பேசியது போல உணர்ந்தேன்.....


இன்னும் சில தமிழர்கள் நாம் தமிழில் பேசினால் மதிப்பதே இல்லை....ஆங்கிலத்தில் பேசினால் மரியாதை சரளமாக வரும்.....எதாவது வேலை ஆகவேண்டும் அல்லது புகார் கொடுக்க வேண்டும் என்றால் உரக்க ஆங்கிலத்தில் பேசினால் ...பயப்படுகிறார்களா இல்லையா....? மனோதத்துவ ரீதியாக மனதிலே ஒரு எண்ணம் எடுத்துக் கொண்டு ஆங்கிலத்தில் பேசினால் பயப்படும் நிலை மாற...ஏதாவது விளக்க வகுப்புகள் எடுக்கப் போகிறீர்களா....செம்மொழி விழா நடத்தியவர்கள்.....?


மொழிக்கான விழா எடுத்ததற்கு வாழ்த்துச் சொல்லும் அதே நேரத்தில் தமிழை மேம்படுத்தும் வேளையில்..........தமிழனை மேம்படுத்தவும் ஏதாவது செய்யுங்கள் பெரியவர்களே.....!


தமிழ்....பேச.....தமிழன் இருக்க வேண்டும்...முதலில் இல்லையெனில் ஆராய்ச்சி முடிவுகளையும் சிறப்புகளையும்....அருங்காட்சியகத்தில் வைக்க வேண்டிய நிலை வரும்...


போற்றுவார் போற்றட்டும்...
புழுதி வாரி தூற்றுவார் தூற்றட்டும்...!
தொடர்ந்து செல்வேன்....
ஏற்றதொரு கருத்தை...
எனதுள்ளம் ஏற்றதால்..
எடுத்துரைப்பேன்....எவர்வரினும்....
நில்லேன்....! அஞ்சேன்...!

பின் குறிப்பு :இன்று உலகின் ஒவ்வொரு மூலைமுடுக்கிலும் தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.ஆனால் உலகளாவிய ரீதியில் தமிழ் மொழியின் ஆதிக்கம் குறைந்து வருவது கண்கூடு.எனவே எம் உயிரினும் மேலான எம் தாய் மொழியை கட்டிக்காப்பது எமக்கு தலையாய பொறுப்பு. எனவே தழிழர்களாகிய நாம் அனைவரும் தமிழ்ர்களிடம் தமிழில் கதைப்போம், எமது இளம் சந்ததியினருக்கும் தமிழ் பற்றை ஊட்டுவோம். கோவை அ.ராமநாதன்








எழுத்து &சிந்தனை : சுர்யாதேவா                    இடுக்கை :அ.ராமநாதன்      

கருத்துகள் இல்லை: