தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

12/22/2010

'மெய்'ஞானம்


          
               மருத்துவ உலகின் புதிய பரிமாணங்களில் ஒன்றாக உறுப்பு தானங்கள் 1965 முதலே உலகில் நடைமுறையில் இருக்கிறது. உறுப்பு தானங்கள் பெற காத்திருக்கும் நோயாளிக்களில் உலக அளவில் 5 விழுக்காட்டினருக்கே அண்மைய காலம் வரையில் உறுப்புகள் கிடைத்து வந்தன. அண்மையில் இந்த விழுக்காடு மிகுந்திருப்பதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன. இதற்குக் காரணம் உறுப்பு தானங்கள் பற்றிய விழிப்புணர்வும் தனிமனிதர்களின் பெருந்தன்மையுமே காரணம். அண்மையில் 'பசங்க' படத்தில் காட்டப்படும் இரு சிறுவர்களின் வீடுகளிலும் ஒருவர் வீட்டில் 'இரத்தானம் செய்துள்ள குடும்பம்' என்ற பலகையும், மற்றொரு வீட்டில் 'உடல் தானம் செய்துள்ள குடும்பம்' என்று பலகையும் இருக்கும், அப்படி ஒரு காட்சியை வைத்த இயக்குனர் பாண்டியராஜை வெகுவாகப் பாராட்டலாம்.
            'உடல் மண்ணுக்கு' என்கிற பழமொழிகள் பழமையாகும். அண்மைய காலங்களில் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் விபத்தில் இறந்தவர்களின் உடல் தானம் செய்யும் பெற்றொர்களின் எண்ணிக்கை மிகுந்திருப்பது மனித நேயம் வளர்ந்திருப்பதைக் காட்டுகிறது.
          உறுப்பு தானங்களுக்கு எதிராக சில கருத்துகள் இருக்கின்றன, உதாரணத்திற்கு உறுப்பு தானம் கிடைப்பது எவ்வளவு எளிதன்று ஆகையால் பணக்காரர்கள் அல்லது பணக்கார நாட்டினர் ஏழைகளைக் குறிவைத்து செயல்படுகிறார்கள், உறுப்புகளின் தேவை வாழ்வியல் ஆதாரம் என்பதால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உறுப்புகள் விற்பனை மறைமுகமாக பெரிய தொழிலாகவே நடந்து வந்திருக்கிறது. உறுப்புகளைப் பெற சீனாவை பல நாடுகள் முற்றுகை இட்டதாகவும், மரண தண்டனைப் பெற்ற கைதிகளின் உறுப்புகள் விற்கப்பட்டதாகவும் Organ Donation (Opposing Viewpoints) என்ற ஆங்கில நூலில் படித்தேன். இந்தியாவிலும் ஏழைகளின் சிறுநீரகங்கள் மலிவு விலைக்கு சட்டவிரோதமாகப் பெற்றததைத் தொடர்ந்து, உலக நாடுகள் உறுப்பு தானங்கள் குறித்த சட்டதிட்டங்களையும், நடைமுறைகளையும், கவுன்சிலிங்க் எனப்படும் ஒப்புதல் குறித்த அனுகுமுறைகளும் ஏற்பட்டு, உறுப்பு தானங்களை முறைப்படுத்தி இருக்கிறார்கள்.
              இறந்த உடல்களில் இருந்து பெறப்படும் உறுப்புகள் அழிவதற்குப் பதிலாக மற்றொருவரைக் காப்பாற்றுகிறது என்கிற புரிதல் இருந்தும், இதற்குத் தடையாக இருப்பது ஒன்றே ஒன்று தான். மதம் !!! ஆப்ரகாமிய மத நம்பிக்கையாளர்கள் அவர்களின் உறுப்புகளை அவர்கள் தானம் செய்யத் தடையாக நினைப்பதற்கு காரணம், 'முழுக்க முழுக்க எனது வாழ்க்கைக்காக கடவுளால் கொடுக்கப் பெற்ற உறுப்புக்களை பிறருக்குக் கொடுக்கும் படி கடவுள் வேத நூல்களில் அறிவுறுத்தவில்லை, எனினும் இஸ்லாமியர்களிடையே உறுப்பு தானங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அதை மீறி என்னால் உறுப்பு தானம் செய்ய முடியாது' என்ற கருத்து நிலவுவதால் மேற்கத்திய நாடுகளில் உறுப்புதானம் பற்றிய விழிப்புணர்வு இருந்தாலும் மதநம்பிக்கையாளர்களிடையே அவற்றிற்கு பரவலான வரவேற்பு இல்லை, இந்த காரணங்களினால் உறுப்புகளுக்கு காத்திருக்கும் நோயாளிகளில் ஆண்டுக்கு 20 விழுக்காட்டினர்வரை இறப்பை தழுவுவதாக அந்நூலில் குறிப்பிட்டு இருந்தது.
               இந்திய சமய நம்பிக்கைகளில் மறுபிறவி பற்றிய நம்பிக்கை இருப்பதால் 'உடல் அழியக் கூடியது, உறுப்புகளை தானம் செய்வதால் தவறு இல்லை என்றும், பல்வேறு தானங்கள் இந்திய சமயங்கள் அனைத்திலுமே வழியுறுத்தப்பட்டு இருப்பதாலும் உடல் வேறு தலைவேறாக உறுப்பு அமைந்திருக்கும் கடவுள் உருவங்கள் இருப்பதாலும்' மன அளவில் உடல் தானம் செய்ய விரும்பும் இந்திய சமய நம்பிக்கையாளர்களை இந்திய சமயங்கள் தடைசெய்ய வில்லை என்றும், ஆனாலும் உறுப்புதானங்கள் பற்றிய விழிப்புணர்வு இந்தியாவிலும் குறைவாகவே இருக்கிறது என்று அந்த நூலில் சொல்லப்பட்டு இருந்தது. மத நம்பிக்கையாளர்கள் பிறமதத்தினருக்கு உறுப்பு தானம் செய்ய முன்வராவிட்டாலும் கூட, தன் மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு பொறுத்த வேண்டும் என்ற வேண்டுகோள்களுடன் தானம் செய்ய முன்வரலாம்.
              உறுப்பு தானங்கள் பற்றிய பல்வேறு மத நம்பிக்கைகளும், வரவேற்பும் பற்றிய தகவல் இங்கே (http://www.donatelifeny.org/)
          சிங்கையில் ஐந்து ஆண்டுகளுக்கு முன் தொலைகாட்சியில் பணி புரிந்த காதலர்களில் காதலர் ஒருவருக்கு கல்லீரல் கெட்டுப் போனபோது, காதலி தானம் செய்து காதலரைக் காப்பாற்றினார் என்ற தகவல் பலரால் பேசப்பட்டு பாராட்டப்பட்டது. உறுப்பு தானங்களின் பயன் கருதி சிங்கப்பூர் அரசு, விபத்தில் இறக்கும் ஒருவரின் உடலில் இருக்கும் உறுப்புகள் தானம் செய்ய முன்வரவேண்டும் என்ற அறிவுறுத்தலுடன் அதனை நடைமுறைப்படுத்தி இருக்கிறார்கள். சிங்கப்பூரில் இருக்கும் பல்வேறு மத அமைப்புகளும் அதற்கு இணங்கவே சிங்கப்பூரில் விபத்தில் மூளை சாவாக இறப்பவர்களின் உறுப்புகள் செயல்படக் கூடியது என்றால் அதை காத்திருக்கும் நோயாளிகளுக்கு பொருத்துகிறார்கள்.
          தமிழகத்தில் சென்ற பல மாதங்களில்  திருச்சியைச் சேர்ந்த ஒரு வாலிபரின் உறுப்பு பெற்றோர்களால் தானம் செய்யப்பட்டது, சேலத்தில் ஒருவாலிபரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டிருக்கிறது. விஐபிகளில் நடிகர் கமலஹாசன் ஏற்கனவே உடல் தானம் செய்தவர் என்கிற தகவல் பலருக்கும் தெரிந்திருக்கும்.
          உயிர் ஒருமுறை போனால் வரவே வராது ஆனால் உடலின் உறுப்புகளை நாம் விரும்பினால் தொடர்ந்து வாழவைக்க முடியும், அதன் மூலம் ஒரு உயிரைக் காப்பாற்ற முடியும். இன்றைய உலகில் உடல் தானம் பற்றி பெறப்படும் அறிவே 'மெய்'ஞானம் என்று சொன்னால் அது மிகப் பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன். செத்த பிறகும் கொடுத்தார் சீதக்காதி என்பார்கள், அது பற்றிய முழுக்கதை எனக்குத் தெரியாது, இறந்த பிறகும் என்ன இருக்கிறது ? என்றே நினைப்போம், இறந்தபிறகும் தானம் செய்ய முடியும், இறந்த பிறகும் கொடையாளி, வள்ளல் என பெயர் அடையமுடியும்.

வாழ்க பாரதம்

கருத்துகள் இல்லை: