தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

12/01/2010

நலமாய் இருப்போம்


             யாரை நாம் பார்த்தாலும், முதலில் கேட்பது, "எப்படி இருக்கீங்க" என்கிற
நலம் விசாரித்தலே. பிறகு குடும்பம் குறித்த விசாரித்தல்... அதற்கடுத்து
படிப்பு. கடைசியாய் தொழில் குறித்து, "எப்படி பிஸ்னஸ்" என்றோ அல்லது
பார்க்கின்ற வேலை குறித்தோ விசாரிப்போம். நலம் விசாரித்தல் என்பது,
நம்மையும், நம்மை சுற்றி உள்ளவர்களையும் மன மகிழ்ச்சிகளில் ஆழ்த்துகிறது.

ஆனால், சில நேரம் தர்மசங்கடமான நிலையை கூட தரும் வாய்ப்புள்ளது.
மனிதர்களின் மனநிலையை புரிந்து கொள்ள கூடிய வாய்ப்பையும் தருகிறது.


எனது நண்பர் ஒருவரிடம், யாரேனும் "பிஸ்னஸ் எப்படி" என்று கேட்டால் போதும்... உடனே "தொழிலே சரியில்ல" என்று ஆரம்பிப்பார். ஆனால் அவருக்கு உண்மையில் நன்றாகவே பிஸ்னஸ் நடந்து கொண்டு இருக்கும். ஆனால் அவருக்கென்ன எண்ணம் எனில், "தான் நன்றாக இருப்பதாக தெரிந்தால், உதவி என்று பிறர் வந்து கேட்டு விடக் கூடுமே" என்று... "இது உங்களோட தவறான கருத்து சார். நாளை உங்களுக்கு உண்மையிலேயே கஷ்டம் வந்து, நீங்க யார்கிட்டயாவது உதவின்னு போய் நின்னா, நீங்க பொய் சொல்வதாகவே எல்லோரும் நினைப்பாங்க." என்று சொன்னேன்.


இதற்கு, இவருக்கு நேர்மாறான குணம் மற்றும் கருத்து படைத்தோரும்
இருக்கிறார்கள். எவ்வளவு கஷ்டமான குடும்ப சூழல், பண மற்றும் மனச் சிக்கல் இருந்தாலும் கூட, "நா நல்லா இருக்கேன்" என்பதே அவர்களின் பதிலாக இருக்கும். காரணம்... தாம் கஷ்டப்படுகிறோம் என்பது தெரிந்தால், பிறர் தம்மை கேவலமாகவும், இளக்காரமாகவும் நினைக்கக்கூடும் என்பதே அவர்களின் சிந்தனை. இதுவும் தவிர்க்கப்பட வேண்டிய ஒரு தவறான சிந்தனையே.


கஷ்டம் வராதவர்கள் கூட, கஷ்டம் வந்தவர்கள் போன்று வேஷம் தரிக்கலாம். அதனால் அவருக்கு எந்த பாதகமும் இல்லை. ஆனால் கஷ்டம் வந்தவர்கள், கஷ்டம் வராதவர் போல் வேஷம் தரித்தால், அதனால் அவருக்கு தான் பாதகம். அவருக்கு தான் கஷ்டம். சிலர் நலம் விசாரிக்கையில், நம் முக வாட்டத்தை பார்த்தே, நாம் உதவி பெற கூடிய சூழலில் இருப்பதை அறிவார்கள். அவர்களாகவே, "ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க. என்ன வேணும் உங்களுக்கு. நா ஏதாவது உதவி பண்ணனுமா" என்று தாமாக உதவி பண்ண முன் வருவார்கள். அம்மாதிரியான வாய்ப்புகளை, கௌரவம் என்கிற பேரில், நாம் இழந்து விடக் கூடாது.


நான் பிறரை நலம் விசாரிக்கிற மாதிரி, என்னை பிறர் நலம் விசாரிப்பார்கள் தானே. அப்போது எனது பதில்... பெரும்பாலும் உண்மையான தாகவே இருக்கும். தொழில் குறித்து கேட்டாலும் சரி அல்லது வேறு எது குறித்து கேட்டாலும் சரி. நன்றாக இருந்தால் "நன்றாக இருக்கிறது"... கஷ்டமாக இருந்தால் "கஷ்டமாக இருக்கிறது"... கஷ்டம் என்று சொல்லி, அதனால் உதவியும் பெற்று இருக்கிறேன். உதவியும் செய்து இருக்கிறேன். இதில் ஒளிவு மறைவு தேவையில்லையே.


மருத்துவரிடமும், வழக்கறிஞரிடமும் பொய் சொல்ல கூடாது என்பார்கள்... நண்பர்களிடமும் கூட, நெருங்கிய உறவினர்களிடமும் கூட. சிலர்
தங்களுக்குள்ள கஷ்டத்தை மனைவியிடம் கூட சொல்ல மாட்டார்கள்... சொல்ல தயங்குவார்கள்... மனைவி தன்னை பற்றி சாதாரணமாக கருதி விட்டால் என்ன செய்வது என்று. கடன் வாங்கியாவது, நன்றாக இருப்பதாக காட்டி கொள்வது... இப்போதாவது சாதாரணமாக கருதும் மனைவி, நாளை மறைத்ததன் காரணமாக ஏதேனும் பிரச்சனை பெரிதாகி, அவள் முன் நிற்க நேர்ந்தால், அப்போது நம்மை மிக மிக சாதாரணமாக கருதிவிடக் கூடும்.

பிரச்சனைகளை, கஷ்டங்களை சொல்வதன் மூலம், அவர்கள் மூலம் நமக்கு சில பரிகாரங்கள் கிடைக்கலாம். நலம் விசாரித்தல், சடங்குகளான வார்த்தைகள் அல்ல. நல்ல மனம் படைத்தவர்கள், அதை ரட்சிக்கக்கூடிய வார்த்தைகளாக கருதுவார்கள். நாமும் நலமாய் இருந்து, பிறரும் நலமாய் இருக்க வேண்டப்படும் வார்த்தைகள். நிச்சயம் அங்கே உள்நோக்கம் இராது.
நலமாய் இருப்போம். பிறரையும் நலமுடன் இருக்க செய்வோம்.

கருத்துகள் இல்லை: