தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

12/29/2010

அறிஞர் வாழ்வில் நடந்த அற்புதம் ...

              தேசபக்தி சி.ஆர்.தாஸ் ஒரு தடவை ஒரு வழக்கில் வாதிடுவதிற்காக
வழக்குரைஞர் என்னும் பொறுப்பில் வெளியூர் சென்றிருந்தார். அவர் வாதிட்ட வழக்கு, வெற்றி பெற்றுவிட்டது. வெற்றி பெற்ற கட்சிக்காரர்கள் சி.ஆர்.தாஸுக்குப் பெருந்தொகையை அன்பளிப்பாகக் கொடுத்தார்கள்.
       சி.ஆர்.தாஸ், புகைவண்டியில் முதல் வகுப்பில் பயணம் செய்தவாரு ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அவர் பயணம் செய்த அதே முதல் வகுப்புப் பெட்டியில் ஓர் அழகான இளம்பெண்ணும் பயணம் செய்து கொண்டிருந்தாள்.
     அந்த இளம்பெண் சி.ஆர்.தாஸிடம் ஏராளமாகப் பணம் இருப்பதை
அறிந்து கொண்டாள். அவள் பணத்தை எப்படியாவது அபகரித்துவிட
வேண்டுமென்று திட்டமிட்டாள். அவள் எழுந்து, சி.ஆர்.தாஸ் அருகில் சென்று
அமர்ந்துகொண்டு, காதல் பேச்சுகள் பேசி நடிக்க  ஆரம்பித்தாள்.
         ”நான் உங்களைக் காதலிக்கிறேன். நாம் இருவரும் திருமணம்
செய்துகொள்வோம்”என்று அந்த இளம்பெண் குழைந்து குழைந்து பேசினாள்.
அது, சி.ஆர்.தாஸுக்கு அருவருப்பாக இருந்தது. அதனால் அவர் ஏதும் பேசாமல்மௌனமாக இருந்தார்.
         தன் எண்ணம்  பலிக்காததால், அவள் மிரட்டலில் இறங்கினாள்.
“என் விருப்பத்திற்கு நீங்கள் இணங்காவிட்டால் அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்து வண்டியை நிறுத்தி விடுவேன்; பலாத்காரம் செய்ததாகப் போலீசாரிடம் புகார் சொல்லுவேன்” என்று மிரட்டினாள்.
          அந்தப் பெண், கூறியது போல் செய்தால், போலீசாரும் மற்றவர்களும்,ஒரு பெண்
என்பதால், அவள் சொல்வதைத் தான் நம்புவார்கள். அதனால், தன் நிலைமை கேலிக்கிடமாக ஆகிவிடும் என எண்ணினார், சி.ஆர்.தாஸ். அவர் தமக்குள் ஒரு திட்டம் வகுத்துக் கொண்டார்.
            பிறகு அவர், அந்த இளம்பெண்ணை நோக்கி,”அம்மா! நான் ஒரு முழுச்செவிடு.
நீ என்ன சொல்கிறாய் என்பதே விளங்கவில்லை. நீ
சொல்வதை ஒரு தாளில் எழுதிக் காட்டு. நான் படித்து தெரிந்து கொள்கிறேன்”
என்று கூறினார்.
             அந்தப் பெண் அவ்வாறே ஒரு தாளில், அவ்வளவு நேரமாகத் தான்
பேசிய விஷயங்களையெல்லாம் எழுதிக் காண்பித்தாள். அதைப் படித்துப்பார்த்த சி.ஆர்.தாஸ்,”அம்மா! நீ எழுதியுள்ள விஷயங்களைப் படித்துத் தெரிந்து கொண்டேன். ஆனால், உன் பெயரை என்னால் தெரிந்துகொள்ள முடியவில்லை. அதையும் எழுதிக் காட்டினால் தெரிந்துகொள்ள எனக்கு உதவியாக இருக்கும்” என்றார்.
அந்த இளம்பெண் தன் பெயரை அந்தத் தாளின் அடியில் எழுதினாள்.
        அந்தத் தாளைப் பத்திரமாக எடுத்து வைத்துக்கொண்ட சி.ஆர்.தாஸ்
சிரித்துக்கொண்டு எழுந்தார்,”அம்மா! அபாய அறிவிப்புச் சங்கிலியை இழுக்கும் சங்கடம் இனி உனக்கு வேண்டாம். அதை நானே பார்த்துக்கொள்கிறேன்” என்று கூறிவிட்டு அபாய அறிவிப்புச் சங்கிலியை பிடித்து இழுத்தார். வண்டி நின்றது. தம்மைச் சந்திக்க வந்த இரயில்வே போலீஸ் அதிகாரியிடம், அந்தபெண்ணையும் அவள் எழுதிய கடிதத்தையும் ஒப்படைத்தார். பிறகு, சி.ஆர்.தாஸ் தொடர்ந்து நிம்மதியாக பயணம் செய்தார்.

கருத்துகள் இல்லை: