தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

10/16/2010

ஆனந்தம்


”எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா?” என்று பாடினார்  பாரதி. இப்படிப் பாடிய பாரதி செல்வச் செழிப்பில் வாழ்ந்தவரல்ல. வாழ்க்கையில் சிக்கல்களையும், பிரச்னைகளையும் பாராதவர்  அல்ல. சொல்லப் போனால் அவர்  வாழ்க்கையே பிரச்னைகளின் தொகுப்பு என்று சொல்லும்படி இருந்தது. ஆனாலும் பாரதி அழுது புலம்பி ஒரு வரி பாடியதில்லை. மாறாக எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா என்று வியந்து மகிழ்கிறானே எப்படி? அவன் கண்ட ஆனந்தம், அவன் கண்ட இன்பம் எங்கிருந்தது? எப்படி வந்தது?

          வீதியில் நின்று சற்று நேரம் வருவோர் போவோரைக் கவனியுங்கள். எத்தனை முகங்களில் ஆனந்தம் தெரிகிறது? விரையும் மனிதர்கள் முகத்தில் கரைக்க முடியாத கவலைகளும், சிந்தனைகளும் அல்லவா தெரிகிறது? இதில் பணக்காரன், ஏழை என்ற வித்தியாசம் ஏதும் தெரிவதில்லையே. இருப்பவன், இல்லாதவன் என்ற இரண்டு வகை மனிதர்களும் ஆனந்தத்தைத் தேடி அலைவது போலல்லவா இருக்கிறது? எங்கே அந்த ஆனந்தம் கிடைக்கும்?
        பதிலைத் தேடும் முன் முல்லா நஸ்ருதீன் கதை ஒன்றைப் பார்ப்போம். முல்லா நஸ்ருதீன் வெளிச்சமான இடத்தில் ஏதோ தேடிக் கொண்டு இருந்தார். அதைக் கண்ட அவர் நண்பர் ஒருவர் “என்ன தேடுகிறீர்கள்?” என்று கேட்டு உதவ முன் வந்தார்.
        ”ஒரு தங்க நாணயம் கை தவறி விழுந்து விட்டது” என்றார் முல்லா.
நண்பரும் சிறிது நேரம் முல்லாவுடன் சேர்ந்து தேடினார். தங்க நாணயம் கிடைக்கவில்லை. நண்பர் முல்லாவைக் கேட்டார். “சரியாக நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். இங்கே தான் நாணயத்தை நழுவ விட்டீர்களா?”
         முல்லா சற்று தொலைவில் உள்ள இருட்டான இடத்தைக் காண்பித்து விட்டு “அங்கு தான் விழுந்தது?” என்று சொன்னார்.
            நண்பருக்குக் கோபம் வந்து விட்டது. “அட முட்டாளே. அங்கே தொலைத்து விட்டு இங்கே வந்து தேடினால் அது எப்படிக் கிடைக்கும்?” என்று முல்லாவைத் திட்டினார்.
         பதிலுக்கு முல்லாவும் நன்பரைக் கோபித்துக் கொண்டார். “நீ தான் முட்டாள். இருட்டான இடத்தில் தேடினால் எதாவது கிடைக்குமா? எதையும் வெளிச்சத்தில் தேடினால் தானே கிடைக்கும்? அதனால் தான் வெளிச்சத்தில் தேடுகிறேன்”
         சிறிது நேரம் முல்லாவுடன் சேர்ந்து நாணயத்தைத் தேடியதை நினைத்து அந்த நண்பர் தலையில் அடித்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.
         முல்லாவின் முட்டாள்தனம் நமக்கு சிரிப்பை வரவழைக்கலாம். ஆனால் ஆனந்தத்தைத் தேடும் நம் கதையும் அப்படித்தானல்லவா இருக்கிறது. மனதில் தொலைத்த ஆனந்தத்தை அதைத் தவிர மற்ற இடங்களில் தேடி என்ன பயன்? உலகத்தையே சுற்றி வந்து தேடினாலும் அந்த ஆனந்தம் நமக்கு கிடைக்குமா?
       எது கிடைத்தால் நீ ஆனந்தமாய் இருப்பாய் என்று உங்கள் மனதைக் கேளுங்கள். இது கிடைத்தால் ஆனந்தமாய் இருப்பேன் என்று மனம் சொல்லும். அதை எப்பாடுபட்டாவது கொடுத்துப் பாருங்கள். மனம் இனியெல்லாம் சுகமே என்று ஆனந்தமாய் இருக்கிறதா என்று சோதித்துப் பாருங்கள். மனம் ஓரிரு நாட்கள் மகிழ்ச்சியாய் இருக்கலாம். மூன்றாவது நாள் மனம் தானாக ஆனந்தத்தை இழக்கும். காரணம் மனதிற்கு புதுத் தேவை ஒன்று பிறந்திருக்கும். அது மட்டும் கிடைத்து விட்டால் ஆனந்தமாய் இருக்க முடியும் என்று மனம் சொல்லும்.
         அது வேண்டும் இது வேண்டும் என்று இந்த மனக்குரங்கு பாடாய் படுத்த ஒவ்வொரு தேவையாகப் பூர்த்தி செய்யக் கிளம்பும் மனிதன் தொடுவானத்தைத் தொட்டு விட முடியும் என்கிற நினைப்பில் ஓடும் வேலையைத் தான் செய்கிறான். எத்தனை வேகத்தில் ஓடினாலும் தொடுவானம் தொலைவிலேயே நிற்பது போல ஆனந்தம் அடைய முடியாத இலக்காகவே இருக்கிறது.
             மில்டன் என்ற ஆங்கில மகாகவி பாடுவான். “மனம் இருந்த இடத்தில் இருந்து கொண்டே சொர்க்கத்தை நரகமாகவும், நரகத்தை சொர்க்கமாகவும் மாற்றும் வல்லமை பெற்றது”. மனதிற்கு அந்த ரசாயன வித்தை தெரியும். ஆனந்தம் அடையவும் தெரியும். அழுது புலம்பவும் தெரியும். ஒரே விதமான சூழ்நிலையிலும் இந்த இரண்டில் எதையும் தேர்ந்தெடுக்கும் ரசாயன வித்தை தெரியும்.
             அந்த ரசாயன வித்தை அறிந்ததால் தானே பாரதியால் வறுமையிலும், ஆங்கிலேயரின் அடக்குமுறைத் தாக்குதலிலும், சிறையிலும், பல பக்கங்களில் இருந்தும் வந்த பிரச்னைகளிலும் கூட எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா என்று பாட முடிந்தது.
       பின் ஏன் இந்த மனம் ஆனந்தமாய் இருக்க மறுக்கிறது? காரணம் அந்த மனதை சரியான படி வழிநடத்த நாம் மறந்து விடுவது தான். தவறான செய்திகளை மனதிற்குத் தந்து, தவறான நம்பிக்கைகளை மனதில் ஏற்படுத்தி மனம் சோகப்படும் போது அது நியாயம் தான் என்று நாம் நியாயப்படுத்தி மனதை தவறாகவே பழக்கப்படுத்தியிருக்கிறோம்.
        ஊரைச் சுற்றினால் தான் ஆனந்தம், மதுவில் மூழ்கினால் தான் ஆனந்தம், பொருள்களை வாங்கிக் குவித்தால் தான் ஆனந்தம், அடுத்தவன் பொறாமைப்படும் படி வாழ்ந்தால் தான் ஆனந்தம், உன்னை மிஞ்ச ஆளில்லை என்று பலர் புகழ்ந்தால் தான் ஆனந்தம் என்றெல்லாம் தவறான கருத்துகளை மனதில் பதிய வைத்து விட்டால் பின் மனிதன் ஆனந்தமடைவது சாத்தியம் இல்லை.
           பொய்யை அஸ்திவாரமாகக் கொண்டு எதை அடைந்தாலும் அது நிலைத்து நிற்காது. மேலே சொன்ன தவறான, பொய்யான அனுமானங்களைக் கொண்டு அடையும் மகிழ்ச்சிகளும் அதனாலேயே வந்த வேகத்தில் காணாமல் போகிறது.
          பிரச்னையே இல்லாத வாழ்க்கை ஆனந்தமல்ல. பிரச்னையைத் தீர்க்க முடிவது தான் ஆனந்தம். தடங்கலே இல்லாத வாழ்க்கை ஆனந்தமல்ல. தடங்கலைத் தாண்டி முன்னேறுவது தான் ஆனந்தம். எதிலும் ஒரு நன்மையைப் பார்ப்பதும், எதிலும் ஒரு பாடத்தைப் படிப்பதும் ஆனந்தம் தரும்.
            ஒரு விஷயத்தை எப்படியும் பார்க்கலாம். ரோஜாவில் முள் என்றும் பார்க்கலாம். முள்ளில் ரோஜா என்றும் பார்க்கலாம். பாதி தம்ளர் காலியாக இருக்கிறது என்றும் சொல்லலாம். பாதி தம்ளர் நிறைந்திருக்கிறது என்றும் சொல்லலாம். இந்த இரண்டு விதங்களில் எப்படிப் பார்த்தாலும், எப்படிச் சொன்னாலும் அது உண்மையே என்றாலும் நல்ல தன்மையை கோடிட்டுக் காணும் கலையை உங்கள் மனதிற்குக் கற்றுத் தந்தால் என்றும் எதிலும் ஆனந்தமே.

கருத்துகள் இல்லை: