தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

10/24/2010

புரட்சி எங்கே ? புரட்சியாளன் எங்கே ??

           புரட்சி என்ற சொல் இப்போதெல்லாம் நகைச்சுவை ஆகிவிட்டது.
பொருளாதார சிக்கல்கள் மேலோங்கி நிற்க புரட்சி பற்றியெல்லாம் மக்களுக்கு யோசிக்கவே நேரம் இல்லை. ஆனால் வட மாநிலங்களில் ஆந்திராவின் தொடர்ச்சியாக இப்போது ஏழு மாநிலங்களின் பெரும்பான்மை மாவட்டங்கள் நக்சல்களின் கட்டுபாட்டில் இருப்பதாக நம் உள்துறை அமைச்சர் சிதம்பரம் சொல்கிறார்..


           ஒருபுறம் பணக்காரன் மென்மேலும் பணக்காரன் ஆக ஏழை மென்மேலும் ஏழை ஆகிறான்.. ஒரு ரூபாய்க்கு அரிசி கொடுத்து கலைஞர் செய்த புரட்சியால் பட்டினியால் யாரும் வாடவில்லை.. ஆனால் டாஸ்மாக் நிரம்பி வழிகிறது குடிச்சு குடல் கெட்டுப்போனால் காப்பீட்டு திட்டத்தில் இலவசமாக சிகிச்சை உண்டு.. புரட்சியின் நீட்சி யாரும் கேள்வியே கேட்காது மாற்றுவதுதான்..


         ஒருகாலத்தில் சோறு விற்பவன் நம் இந்திய சமூகத்தில் கேவலமானவன். இன்று தண்ணீர் விற்று பிழைக்கிறார்கள்.. நல்ல கல்வி, நல்ல மருத்துவம்,சீரான சாலைகள், முறையான தண்ணீர் வசதி எங்கேயும் இல்லை.. வல்லான் வகுத்ததே வாய்க்கால். அது தேர்தலில் காசு வாங்கிவிட்டு ஓட்டு போட எப்போது பழகிக் கொண்டோமோ அப்போதே நம் உரிமைகளை மொத்தமாக அடகு வைத்துவிடுகிறோம்..


            புரட்சிதான் மாற்றத்தின் விதை. வடிவங்கள் வேறாக இருப்பினும் புரட்சிகளே மாற்றங்களை கொண்டுவரும்.. ஈழத்தில் முள்ளிவாய்க்காலோடு முடிந்துவிட்டதாக சொல்லப்பட்ட ஒரு எழுச்சி இனி வேறு வடிவில் மீண்டும் எழலாம்.. அம்மக்களுக்கு சரியான தீர்வு முன்வைக்காதவரை அது நிச்சயம் மீண்டும் வெடிக்கவே செய்யும்.


           நாளையே மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சிகள் மாறினால் இன்றைக்கு ஈழப் பிரச்சினையில் கடிதம் எழுதும் கலைஞர் வீதியில் போராடுவார். மிகுந்த நகைப்பை அது நடுநிலையாளர்கள் மத்தியில் ஏற்படுத்தினாலும் அது நடக்கவே செய்யும்.


அன்றாட  பிரச்சினையில், எல்லா மக்களுக்கு இலவச தொலைகாட்சி கொடுங்கள், அம்மக்கள் சுயநலமாக மாறிப்போவார்கள் என ஒருவர் அறிக்கை சமர்பிக்கிறார்.. சுயநலம் இல்லாதவரைக்கும்தான் புரட்சி..


        தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆரை புரட்சித்தலைவர் என்று அழைக்க ஆரம்பித்தபோதே மக்களின் ரசனை மாறிவிட்டது.. இப்போது புரட்சி பட்டம் யார் யாருக்கெல்லாமோ போய் புரட்சி எனும் சொல்லே தமிழ் கூறும் நல்லுலகிற்கு அது ஒரு அடைமொழியாக மாறிவிட்டது.


            உலகெங்கும் புரட்சிக்கு மிகப்பெரிய வரலாறு இருக்கிறது. தலைகீழ் மாற்றத்திற்கான ஆரம்பமே புரட்சிதான்.. இன்றைய ஆட்சியாளர்களைப்பற்றி ஒரு பெரியவரிடம் வருத்தப்பட்டேன்.. அவர் சிரித்துக் கொண்டே சொன்னார்.. இங்கு மாற்றமே மாறாதது.. எல்லாமே மாறும் என நீண்ட விளக்கம் தந்தார்.. பதிவின் நீளம் கருதி அதனை இங்கே வெளியிட இயலவில்லை..


          ஆன்மீகத்தை எடுத்துக்கொண்டால் புத்தனும், ஏசுவும்,நபியும் செய்த புரட்சி எல்லைகளற்றது.. இன்றுவரை இவர்களின்பால் மிகுந்த ஈர்ப்பு ஏற்பட்டு பின்பற்றுபவர்கள் பெருகிக்கொண்டே இருக்கிறார்கள்.. ஆனால் பிரச்சினையே ஒரு புரட்சியால் சாதித்த இவர்களின் கருத்துகளை விமர்சனம் செய்ய முடிவதில்லை.. இவர்களை பற்றிய முழுமையான அறிவு பெற்றோரை தவிர மற்றவர்கள் சண்டைக்கு வந்துவிடுகிறார்கள்.. உண்மையில் நாத்திகர்கள்தான் இவர்களை அதிகம் நேசிப்பவர்கள்..


         புரட்சி பற்றிய வரலாற்றை நான் தொடவே இல்லை.. இன்றைய தேதியில் தமிழ் கூறும் நல்லுலகிற்கு அது தேவைப்படவில்லை...

கருத்துகள் இல்லை: