தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

10/08/2010

உள்ளத்தின் ஆதிக்கம்



       நம் மன ஓட்டத்தை சிலநேரம் நம்மாலேயே புரிந்துக்கொள்ள முடியாது. மனதை ஒருமுக படுத்துவதால் பல அற்புதங்களை நிகழ்த்த முடியும் என்று நிருபித்தவர்கள் பலர். ஒரு தவறான செயலை நாம் செய்ய முயலும் போது உள்ளிருந்து ஒரு குரல் 'வேண்டாம் இதை செய்யாதே ' என்று கட்டளை இடும். இதைதான் நாம் மனசாட்சி என்று சொல்கிறோம். உண்மையில் மனம் நம்மை பெரும்பாலும் தவறிழைக்க விடுவதில்லை. அப்படியே தவறு செய்தாலும் சில நேரங்களில் அடிக்கடி நம் செய்த தவறை சுட்டி காட்டி உணர்த்தி கொண்டே இருக்கும். அந்த உறுத்தல் அதிகமாக இருந்துவிட்டால் நம்மால் சாப்பிடமுடியாது...தூங்க முடியாது...நிலை கொள்ளாமல் தவித்து போய் விடுவோம் . கடைசியில் கடவுளிடம் முறையிட்டு மன்னிப்பு கேட்டு நம் மனதை சாந்தப்படுத்தி கொள்வோம்.

இப்படி நம் உடலின் மீது உள்ளத்தின் ஆதிக்கம் பல நேரம் வழி நடத்தும். இப்படிப்பட்ட மனதின் உணர்வுகளை தட்டி எழுப்புவதின் மூலம் நம் உடலின் நோய்களை கூட குணபடுத்த முடியும் என்று நிரூபித்தவர்தான் மருத்துவர் 'சிக்மன்ட் பிராய்ட்' .

நோய்களை குணமாக்க முடியுமா?

படுக்கையில் கிடந்த ஒருவரின் உள்ளத்தை தட்டி எழுப்பி, அடி மனதில் இருக்கும் விவகாரங்களை வெளியே இழுத்து பேச்சின் மூலம் அவரது நரம்புகளை சரிபடுத்தி அவரை நோயில் இருந்து குணபடுத்த முடியும் என்பது ஆச்சரியமான உண்மை. உள்ளத்தை நன்கு புரிந்துக்கொண்டு அதற்கேற்ப செயல்பட்டால் உடலுக்கு ஏற்படும் வியாதிகளையும் குணப்படுத்த முடியும். இந்த கருத்துக்கு 'பிராய்டிசம்' என்று பெயர். உளவியல் படித்தவர்களுக்கு அறிமுகமானவர், படிப்பவர்களுக்கு தவிர்க்க முடியாத முக்கியமானவர் பிராய்ட். இவரால் தான் 'மனநல மருத்துவம்' என்று ஒரு தனி துறையே உருவாகப்பட்டது.

கனவுகள் ஆழ்மனத்தின் வெளிப்பாடே...!

கனவுகள் காணாத மனிதர்கள் என்று யாருமே இல்லை. தனது ஆசைகள் நிறைவேற வேண்டும் என்று கற்பனை செய்து கனவு காணுவது என்பது வேறு. ஆனால் நாம் தூங்கும் போது வரும் கனவுகள், நம் மனதின் எண்ணங்களை பிரதி பலிப்பவை. மனிதனின் மனதிற்கும், தூக்க நேரத்தில் உருவாகும் கனவுகளுக்கும் பிரிக்க முடியாத தொடர்பு உண்டு. ஒரு நாளில் எட்டு மணி நேரம் நாம் தூங்குகிறோம் என்றால் அதில் கிட்டதட்ட 90 நிமிசங்கள் வரை கனவு காண்கிறோம் என்று அறிவியல் ஆய்வுகள் உறுதிபடுத்துகின்றன. சிலருக்கு ஒரு கனவு முடிந்து...வேறொரு கனவு....என்று பல கனவுகள் விடியும் வரை கூட தொடருவது உண்டு.

இப்படி இயற்கையாக ஏற்படும் கனவு நிலையை மனிதனுக்கு செயற்கையாக ஏற்படுத்தினால் அவன் மனதில் மறைத்து வைத்திருக்கும் பல விசயங்களை வெளிக்கொணர முடியும் என்பதுதான் மனோதத்துவம்.

ஆழ்மனம்

ஒவ்வொரு மனிதனின் ஆழ்மனதிலும் ஆசைகள், ஏக்கங்கள் போன்றவை புதைந்து கிடக்கின்றன. அந்த ஆழ்மனதில் இருந்து வெளிவருபவைதான் கனவுகள், இந்த கனவுகள் மனிதன் விழித்திருக்கும் போது வருவதில்லை. தூங்கும் போதுதான் மனக்கதவுகள் திறந்துக்கொள்கின்றன . ஆழ்மனம் செயல் பட தொடங்குகிறது. அது மூடிய கண்ணுக்குள் காட்சிகளாக உருவெடுக்கிறது.

பொதுவாக நாம் விழித்திருக்கும் போது நமது மனம் பலவற்றை சிந்தித்திக்கொண்டுதான் இருக்கும் அந்த நேரம் நம் வாயில் இருந்து வெளி வரும் சொற்களில் உண்மைத்தன்மையை தேடுவது சிரமம். சரியான உள்ள உணர்வை வெளிப்படுத்தாது ...ஆனால் ஆழ்மனதை கனவு காணும் படி செயற்கையாக தட்டி எழுப்பி பேச வைக்கும் போது உண்மையைத் தவிர வேறு எதுவும் வெளி வராது.....

இந்த செயற்கை தூக்கம் ஒரு விதமான மயக்கம் ஆகும். உடலில் அடி பட்டு ரத்தம் வெளியேறுவதால் ஏற்படும் மயக்கத்திற்கும், தூக்க நிலைபோல் காணப்படும் மயக்கத்திற்கும் வித்தியாசம் உண்டு. இந்த மயக்கத்தால் அந்த மனிதனுக்கோ அல்லது அவனது உடலுக்கோ எந்த விதமான இழப்பும் ஏற்படுவதில்லை.

உடலில் ஏற்படும் நோய்களை பெரும்பாலும் கண்டு பிடித்து மருத்துவம் பார்த்துவிடாம். ஆனால் உள்ளத்திற்குள் நடக்கும் போராட்டங்கள் தான் பெரிய அளவில் மனநோயை ஏற்படுத்துகிறது. இதனை வெளியில் இருந்து பார்க்கும் பிறருக்கு புரிந்துகொள்வது சிரமம். இன்றைய காலகட்டத்தில் மனதால் ஏற்பட கூடிய நோய்கள்தான் உலகின் பல பாகங்களிலும் வேகமாக பரவி வருகிறது.

கொலை பாதகம் , பாலியல் வன்முறை, வன்மம், பழிவாங்குதல், பிறரின் துன்பத்தை கண்டு ரசித்தல், மிருக உணர்ச்சி இவை அனைத்தும் ஆழ்மனதில் மறைந்திருக்கும், வெளியில் தெரியாது. பிரச்சனைக்குரிய மனிதனை பற்றிய உண்மையின் முழு வடிவத்தையும் பெற வேண்டும் என்றால் அவனது மனதை தான் முதலில் ஆராயவேண்டும். இதை கண்டுபிடித்து சரி பண்ணகூடியதுதான் 'ஆழ்நிலை கனவு மயக்கம்'.

மாறாக இந்த மயக்கம் சாதாரண மனிதனுக்கு நன்மையை தான் செய்கிறது. மனிதனுக்கு இருக்கும் பயம், கவலை போன்ற உணர்வுகளில் இருந்து அவனை விடுவிக்கிறது, மேலும் மன அழுத்தம் காரணமான ஏற்படும் உடல் சோர்வுகள், மன குழப்பங்கள் போன்றவற்றில் இருந்து மனிதனை வெளி கொண்டுவர இந்த மயக்க மாகிய கனவு நிலை மிகவும் உதவுகிறது.

கனவு நிலையின் மூன்று கட்டங்கள்.

முதல் நிலை அறிவைச் சார்ந்தது, இரண்டாவது அறிவு சாராத நிலை, மூன்றாவது குழப்பம் நிறைந்த நிலையாகும். இந்த மூன்று நிலைகளின் அடிப்படையின் வித்தியாசத்தை உணராமல் செயல்பட்டால் உண்மையை கண்டுபிடிக்க முடியாத நிலைக்கு மருத்துவர் தள்ளபடுவார்.

* முதல் நிலையில் சம்பந்த பட்ட மனிதனின் மனதில் இருக்கும் பயத்தையும், கவலைகளையும், குழப்பங்களையும் அங்கிருந்து விடுவிக்கவேண்டும். இது முதல் நிலை.

* இரண்டாவது நிலையில் அம்மனிதனின் பேச்சில் ஒரு தெளிவு இருக்காது, வார்த்தைகளும் தொடர்பின்றி இருக்கும். எனவே அந்த கட்டத்தில் இருந்து அந்த மனிதனை வெளியே கொண்டு வர வேண்டும்.

* முக்கியமான இறுதி நிலையும் உச்ச கட்ட நிலையும் இது தான். இந்த கட்டத்திற்கு அந்த மனிதனை கொண்டு சென்று விட்டால் அவனது ஆழ்மனதில் புதையுண்டு கிடைக்கும் அத்தனை விசயங்களும் மருத்துவருக்கு எளிதில் கிடைத்து விடும். அவனை பாதித்து இருக்கும் விசயங்கள் அனைத்தையும் அவனே தெளிவாக சொல்லி விடுவான்.

இந்த மூன்று நிலைகளையும் ஒரு மருத்துவர் சரியாக பொறுமையாக கையாண்டுவிட்டார் என்றால் அவரது மருத்துவம் வெற்றி தான்.

சிக்மண்ட் பிராய்ட் இந்த மருத்துவத்தை பற்றி விரிவாக எழுதிய ஒரு நூலின் பெயர்தான் INTERPRETATION OF DREAMS
 கண்டிப்பா வாங்கி படிங்க ...........

கருத்துகள் இல்லை: